பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து

சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும்.  அட்டைப் போயிருக்கும்.  விபரம் போயிருக்கும்.  எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது.  உடனே வாங்கிக்கொண்டேன்.  முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன.  இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது.  வாழ்க இவ்வையகம்.

1)   கழுதையின் குரல்

ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான்.  அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன்.  அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல்.  மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான்.  அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள்.  இவன் பாட்டை நிறுத்தினான்.  அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள்.  இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது.  அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: “நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்,” என்று வினவினான்.  அதற்கு அவள்,”ஐயா…தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள் செத்துப்போன என்னிடம் இருந்த ஒரேஒரு கழுதையினுடைய நினைப்பு வருகின்றது.  அதனால் அழுகின்றேன்,” என்று சொல்லி அழுதாள்.  இசைப்புலவன் வெட்கமுற்றான்.  அரசனைப் பார்க்காமலேயே தன் ஊருக்குப் போய்விட்டான்.

அதனால் தன் குற்றம் தெரியாமல் நடக்கிற அறிவற்றோன் எவனும், உலகில் நன்மதிப்பு இழப்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *