அழகியசிங்கர்
போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர் என்ற தலைப்பில் தினமலர் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. இதுதான் தினமலர். படிப்பவரை வசீகரப்படுத்தும் நடை. இதுமாதிரி ஒன்றை தமிழ் இந்துவோ தினமணியோ செய்தியைப் போட மாட்டார்கள். ஆனால் தமிழ் இந்துவின் துணிச்சல் அதன் நடுப்பக்கத்தில். அந்தத் துணிச்சல் வேற தமிழ் இதழ்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் செய்திகளை வெளியிடுவதில் தினமலரையோ தினத்தந்தியையோ பீட் செய்ய முடியாது. தினமணியோ எப்போதும் போல் ஒரு நிதானமான ஓட்டத்தில் வந்து கொண்டிருக்கிறது. அறிவுபூர்வமான கட்டுரைகள், தலையங்கம் என்று அதன் நடுப்பக்கம் அலங்கரிக்கப்படுகிறது. தமிழ் இந்துவில் இரண்டாவது பக்கத்தில் ஜோஸ்யம், சிந்துபாத் மாதிரி ஒரு படக்கதை, பின் முக்கியமானவர்களைப் பற்றி சில குறிப்புகள் என்று அசத்துகிறார்கள். வாரப்பத்திரிகைகளில் வரும் தொடர் கட்டுரைகளையும் கொண்டு வருகிறார்கள். முக்கியமாக சனிக்கிழமைகளில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். ஓரளவு எழுத்தாளர்களை மதிக்கும் பத்தரிகைகளாக தமிழ் இந்துவையும, தினமணியையும் கருதுகிறேன்.
*******
போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டியில் இடித்த நடிகரைப் பற்றி என்ன சொல்வது? அவருடைய போதாத காலம் என்பதைத் தவிர. போதை தலைக்கேறிய பிறகு ஒரு டிரைவரை வைத்துக்கொண்டு அவர் வந்திருக்கலாம். சினிமாவில் நடிப்பதால் நிஜ வாழ்க்கையும் சினிமா மாதிரி நினைத்து விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இப்படி தப்பித்து ஓடியிருக்க வேண்டாம். குற்றத்தை ஒத்துக்கொண்டால் குறைவான தண்டனையோடு விட்டுவிடுவார்கள்.
ஒரு முறை நான் சிறுவனாக இருந்தபோது சென்னை 1ல் பவளக்காரத் தெருவில் குடியிருந்தேன். காலை நேரத்தில் தெருவில் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருந்தேன். மப்டியில் வந்திருந்த ஒருவர்,
üüதம்பி, எழுந்திரு..ýý என்றார். பார்த்தால் மப்டியில் வந்திருக்கும் போலீஸ்காரர். என்னைப் போல் பலர் அந்தப் போலீஸ்காரருடன் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் காலை தூக்கம் கலையாத நடை. என் வீட்டிற்கு தகவலை எப்படியோ தெரிவித்து விட்டேன். என் அப்பா ஓடிவந்து, போலீஸ்காரரிடம் சொல்லி என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, அவர் கோர்ட்டில் தான் ஒன்றுக்குப் போனதாக சொல்லி பைன் கட்டினார்.
**********
கடந்த நாலைந்து மாதங்களாய் அப்பா கட்டிலில் படுத்தப் படுக்கையாக இருக்கிறார். அவருக்கு 94 வயது. இரவு நேரத்தில் அவர் பக்கத்தில் உள்ள அறையில் படுத்துக்கொள்கிறேன். இரவு இரண்டு மணிக்கு என் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறார். என் தூக்கம் அதன் பிறகு இல்லை. 6 மணி வரை விழித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் பகல் நேரத்தில் கண்டபடி தூங்குகிறேன். யாருடனோ பேசிக்கொண்டிருந்தால், நான் தூங்கிக் கொண்டே பேசுகிறேன். அல்லது தவிர்க்க முடியாமல் தரையில் படுத்துத் தூங்கி விடுகிறேன்.
***********
வயதான பிறகு இரவு நேரங்களில் தூங்குவது குறைந்துதான் போகிறது. தூக்கமில்லாத சமயத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் அந்த நேரத்தில் அசையாமல் படுக்கையிலேயே படுத்துக் கிடப்பேன். சிலசமயம் கண்ணை விழித்துக்கொண்டு இருப்பேன். தப்பித் தவறி புத்தகம் படிக்க மாட்டேன், கம்ப்யூட்டரைத் தொட மாட்டேன், லைட் போட்டுக்கொண்டு இருக்க மாட்டேன். கை கால்களை அசைக்காமல் அப்படியே இருப்பேன். எல்லாம் சரி. சரமாரியாக வரும் யோஜனைகளைப் பற்றி என்ன செய்வது.
***********