விட்டுப் போன கவிதைகள்…..
அழகியசிங்கர்
நான் முதலில் யாருடனும் இல்லை என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன். அப்போது அந்தத் தொகுதியை யாரும் திட்டவில்லை. தமிழவன், வெங்கட்சாமிநாதன், நகுலன், ஞானக்கூத்தன், ரிஷி பாராட்டி எழுதியிருந்தார்கள். அதன்பிறகு இன்னொரு கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன். தொலையாத தூரம் கவிதை நூலின் தலைப்பு. பெரும்பாலோருக்கு அப்படி ஒரு தொகுப்பு வந்ததே தெரியவில்லை.
இந்த இரண்டு கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளைச் சேர்த்து இன்னும் கவிதைகளைச் சேர்த்து ஒரு முழுத்தொகுதியாக அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்தேன். ஓவியர் வரதராஜன் பிரமாதமாக அட்டைப் படம் அளித்திருந்தார். இந்தக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும் போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது. மொத்தம் 180 கவிதைகள். ஒரு கவிதைத் தொகுதி 18ல் முடிவதில் எனக்கு விருப்பமில்லை. அப்போது பிரமிளுடன் பேசிக் கொண்டிருந்ததால் 18ல் முடியும் எண் ஓமனின் எண். அது கவிதைத் தொகுதிக்கு நல்லதிலலை என்ற முடிவுடன், இன்னும் சில கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன. அத் தொகுப்பில் உள்ள கடைசிக் கவிதை எங்கள் கிராமத்து வீரனைப் பற்றி எழுதிய கவிதை.
காலையில் தற்செயலாக ஒரு பைலைத் தேடும்போது எப்போதோ நான் எழுதிய இரண்டு கவிதைகள் என் கண்ணில் தட்டுப்பட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இரண்டு கவிதைகளையும் எழுதிய பிறகு மறந்தே போய்விட்டேன்.
முன்பு போல் ஒரு பக்கம் அளவிற்கு என்னால் இப்போதெல்லாம் கவிதை எழுத முடிவதில்லை. ஆனால் நான் இன்னும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறேன். இப்போது எழுதுகிற கவிதைகள் எல்லாம் ஐந்து வரி அல்லது ஆறு வரிகளில் முடிந்து விடுகின்றன.
பைலில் கண்டுபிடித்த அந்தக் கவிதையின் ஒன்றின் பெயர் சிரிப்புக்குப் பின்னால்..
முதலில் குடிக்கும்போது
வேண்டாம் என்றேன்
குடிக்க ஆரம்பித்த பிறகு
வேண்டும் வேண்டும் என்றது மனசு
கழுத்துக்கு மேல் தலையில்
பாயும் வெள்ளமாய்
ஏதோ ஒன்று சுழல
பின் எழுந்து நின்று
நடந்து பார்த்தேன்
தள்ளாட்டம் மூளையிலா
என் அசைவிலா
இல்லை தள்ளாட்டம்
என்று நினைத்தபோது
நிதானமான ஒரு பார்வையை
எல்லோர்முன் வீசினேன்
ஆனால்
பார்வை நிதானமாக
அவர்களுக்கும் தெரியவில்லை
குடித்ததைப் பற்றி
உபதேசம் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை
பிறகு
எதாவது சொல்லலாமென்றும் தோன்றியது
ஒன்றும் சொல்ல ஒன்றுமில்லை
என்றும்
சொல்லலாம் சொல்லலாம்
என்றால்
சொல்வதற்கு வார்த்தைகளைத்
தேட வேண்டுமென்று தோன்றியது
நடந்து சென்று
படிக்கட்டில் தடுமாறி
விழப் பாரத்தபோதுதான்
நிதானம் நிதானமன்று
மனம் அரற்றியது
விழுந்தால் செம்மையாய்
அடிப்பட்டிருக்கும்
குறிப்பாக கண்ணாடியில்
பாரத்த என் முகம்
சிதைந்து ஓலமிட்டிருக்கும்
திரும்பவும்
உட்கார்ந்தபோது
எதிரில்
இன்னொரு
அரை கப்
பீர்
எல்லோருடைய சிரிப்புக்குப் பின்னால்..