விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பத்தாவது கூட்டம்

அழகியசிங்கர்
விருட்சம் இலக்கியச் சந்திப்பு பத்தாவது கூட்டம் சிறப்பாக 28ஆம் தேதிந நடந்தது.  கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளர் ரவி ஷங்கர். முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது.  இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது.  அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.  எல்லோரும் ஒரு தளத்தில் அமர்ந்து கொண்டு பேச வேண்டும். கூட்டத்தில் ஒருவரை முக்கியமானவராகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
ரவி ஷங்கரை மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் அறிமுகம் செய்து வைத்தார்.  பிரக்ஞை முதல் இதழ் அக்டோபர் மாதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது.  
கசடதபற என்ற பத்திரிகை ஆரம்பித்த நா கிருஷ்ணமூர்த்திக்கும்ட, பிரக்ஞை ரவி ஷங்கருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  இருவரும் அவர்கள் கொண்டு வந்த பத்திரிகையின் ஒரு பிரதியைக் கூட வைத்திருக்கவில்லை.  இது ஒரு சோகம்.  
மாம்பலம் சாரதா ஸ்டோரில் (அப்பளம், வடாம் விற்கிற கடையில்) நான் பிரக்ஞையின் கடைசி இதழை வாங்கியதாக ஞாபகம். 1975ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  அப்போது அந்த இதழ் எனக்குப் புரியவில்லை.  ஆனால் ஒரு பத்திரிகை இப்படியெல்லாம் வரலாமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 
ஏன் இப்படி புரிபடாமல் எழுதுகிறார்கள் என்று அவர்கள் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.  பல ஆண்டுகளுக்கு முன் திலிப் குமார் வீட்டில் ரவிஷங்கரைப் பார்த்தபோது, üபிரக்ஞை இதழ்களைத் தொகுத்து வெளியிடலாமா?ý என்று கேட்டேன். üஎனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை,ý என்று அவர் குறிப்பிட்டார்.  லாவண்யா என்ற இலக்கிய நண்பரிடம் பிரக்ஞை முழு தொகுதி இருந்தது.  அதை அவரிடமிருந்து வாங்கி முழுத் தொகுப்பு கொண்டு வர நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று பட்டது.  கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்டு வர வேண்டும்.  அவ்வளவு பக்கங்கள் கொண்டு வர அதிக மூலதனம் போட வேண்டி வரும்.  அப்படி கொண்டு வந்தாலும் அதை விற்பது என்பது சாத்தியமே இல்லை. அதனால் அந்த முயற்சியைக் கை விட்டுவிட்டேன்.  
அந்தக் காலத்தில் பிரக்ஞை இதழ் எப்படி துவங்கப்பட்டது என்பது பற்றி ரவிஷங்கர் குறிப்பிட்டார்.  அப்பத்திரிகையின் ஆசரியர் ரவீந்திரன் என்று குறிப்பிட்டார் (இயக்குநர் ஜெயபாரதியின் தமையனார் இவர்).  ரவீந்திரன் இப்போது உயிரோடு இல்லை.  ஒருமுறை ரவீந்திரனை பைலட் தியேட்டரில் பார்த்தபோது, நான் நடத்திக்கொண்டு வரும் விருட்சம் பத்திரிகையை நிறுத்தி விடும்படி அறிவுரை கூறினார்.  
ஏன் எனில் ஒரு சிறு பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்கள், மன சஞ்சலங்களைப் பற்றி அறிந்தவர் போல் அவர் தென்பட்டார்.
பிரக்ஞை என்ற பத்திரிகை கசடதபற என்ற பத்திரிகை நிற்கும்போது தொடர்ந்த பத்திரிகை.  கசடதபற என்ற பத்திரிகை நிற்பதற்கு என்ன உண்மையான காரணம் என்பது புரியவில்லை.  பணம் ஒரு பிரச்சினையாக இருந்தால், அதைத்  தருவதற்கு தான் தயாராக இருப்பதாக ரவிஷங்கர் அந்தக் குழுவினரிடம் கொடுப்பதாக இருந்தார்.  ஆனால் அது உண்மையான காரணமல்ல.  சரி நாமும் இப்படி ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்த பத்திரிகைதான் பிரகஞை.  குறிப்பிடும்படியான எந்தக் கொள்கையும் பிரக்ஞைக்குக் கிடையாது.  முதல் இதழ் ஆரம்பிக்கும்போது, பிரக்ஞையில் எழுதப்பட்ட வாசகங்கள் இதுதான்:
நாங்களும்….
இலக்கியப் பத்திரிகை ஆரம்பிப்பதும் ஆரம்பித்த
பத்திரிகையை சில மாதங்களில் அல்லது
சில வருடங்களில் நிறுத்திவிடுவதம்
தமிழ் இலக்கிய உலகத்திற்கு புதியதல்ல.
இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில்
ஒரு திருப்பத்தையோ, அல்லது
ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும்
என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
இது என்ன பத்திரிகையா
அது என்ன படமா
இது என்ன எழுத்தா
அது என்ன நடிப்பா
என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ஒழிய
நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?
இது பலர் எங்கள் மேல் சுமத்திய குற்றச்சாட்டு.
எழுதத் தெரியாதவர்கள்
எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பத்திரிகை நடத்தத் தெரியாதவர்கள்.
நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்
படம் எடுக்கத் தெரியாதவர்கள்
எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடிக்கத் தெரியாதவர்கள்
நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாங்கள் இதுவரரை ஒன்றும் செய்துவிடவில்லைதான்.
செய்து விட்டோம்.
üüபிரக்ஞைýý யை ஆரம்பித்து விட்டோம்.
இனி எங்களை யாரும்ட குற்றம் சொல்ல முடியாது.
ஒரு 40 இதழ்களுக்கு மேல் வெளிவந்து பிரக்ஞையும் நின்று விட்டது என்று தோன்றுகிறது.  ஆரம்பித்த போது இருந்த பிரக்ஞை, நின்று போனபோது இல்லை.
ரவிஷங்கர் ஒரு சிறந்த படிப்பாளி.  வெளி நாட்டல் பல ஆண்டுகளாக வசிக்கிறார்.  பிரக்ஞையை விட்டு வந்த பிறகு வெவ்வேறு இடங்களில் வசிக்கும் பலருடன் சேர்ந்து சொல்வனம் என்ற பத்திரிகையை ஆன் லைனில் கொண்டு வருகிறார்.
திருப்தியாக நடந்த கூட்டங்களில் இதுவும் ஒன்று.
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *