அழகியசிங்கர்
நான் பார்த்து ரசித்தப் படம் தி வே ஹோம் ( (THE WAY HOME).).
இந்தப் படத்தை டைரக்ட் செய்தது தென் கொரிய பெண். பெயர் லீ ஷியான் ஹியான். காது சரியாக கேட்காத வாய் பேச முடியாத 75 வயது வயதானவளுக்கும், ஏழு வயதுப் பேரனான சாங்க்வுக்கும் ஏற்படும் சமர்தான் இந்தப் படம். சாங்க்வின் அம்மா, அவள் அம்மாவிடம் தன் பையனை சிலகாலம் அவன் பள்ளி விடுமுறையில் விட்டுவிட்டு செல்கிறாள். ஒரு பொட்டல் கிராமம். அருமையான மலையைச் சுற்றி உள்ளது. அதிக வசதி இல்லாத மிகக் குறுகலான வீடு. சாங்க்விற்கு அங்கு தங்குவதற்கே பிடித்தம் இல்லை. அம்மாவிடம் சண்டை போடுகிறான். அம்மா அவனை அடித்து தரதரவென்று அழைத்துப் போகிறாள். அந்தக் கிராமத்தில் அதிகமாக மனிதர்கள் இல்லை. வேறு வழியில்லை சாங்க்வி பாட்டியைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.
பாட்டி அவனிடம் அன்பை பொழிந்து கொண்டிருக்கிறாள். அவனோ அவளைப் பார்த்து அலட்சியப் படுத்துகிறான். பொழுது போக்கிற்காக அவன் எடுத்துக்கொண்டு வந்த வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறான். வேறு வழியில்லை, பாட்டியுடன்தான் தங்க வேண்டும். பாட்டியை என்னதான் கிண்டல் செய்தாலும், பாட்டி அவனிடம் அன்பை காட்டிக்கொண்டிருக்கிறாள். போரடிக்கும்வரை வீடியோ கேமை விளையாடுகிறான். பேட்டிரி தீர்ந்து விடுகிறது. வீடியோ கேம் இனிமேல் விளையாட முடியாது. பேட்டிரி வாங்க பாட்டியிடம் பணம் கேட்கிறான். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் பாட்டி எங்கே பணத்தை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று தேடுகிறான். அவனுக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற நிலையில் வீட்டில் உள்ளவற்றை எடுத்து தூக்கிப் போட்டு கலாட்டா செய்கிறான். பணம் கிடைக்காத கோபத்தில் பாட்டியைத் தள்ளிவிடுகிறான். கலர் பென்சிலால் சுவர் முழுவதும் பாட்டியைக் கேலி செய்து வரைகிறான். பாட்டியின் செருப்பை ஒளித்து வைத்து விடுகிறான். பாட்டி அந்தத் தள்ளாத வயதிலும், செருப்பில்லாமல் தண்ணீர் எடுத்து வருகிறாள். பாட்டிக்கோ பேரன் மீது கோபமே வருவதில்லை. பெரும்பாலும் பேசா மடந்தையாக இருக்கிறாள். அவன் தேவைகளை மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறாள்.
பேட்டிரி வாங்குவதற்காக பாட்டியை விட்டுவிட்டு தனியாக நடந்து கடைக்கெல்லாம் செல்கிறான். விடியோ கேமிற்கான பேட்டரி எங்கும் கிடைக்கவில்லை. வரும் வழியில் வீட்டிற்கு வரும் வழியைத் தவற விடுகிறான்.அழுதுகொண்டே வருகிறான். யாரோ வழிபோக்கர் அவனைப் பத்திரமாகக் கொண்டு வருகிறார்.
பல சம்பவங்களின் கட்டுக்கோப்புதான் இந்தப் படம். பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாக..
கிராமத்தில் அவன் வயதுடைய ஒரு சிறுமியும், வயல் வேலை செய்யும் சியோல் என்னும் ஒரு பையனும் அவனுக்கு அறிமுகமாகிறார்கள். சிறுவர்களுக்குள்ளே நடக்கும் மனப் பேதத்தை அருமையாகக் காட்சிப் படுத்துகிறார் டைரக்டர். மாடு பின்னால் துரத்தி வருவதை ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக சாங்கவும், அவனது தோழியும் எதிர் கொள்கிறார்கள். சியோல் தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறான். அவனைப் பார்த்த சாங்க்வின் பின்னால் மாடு துரத்துகிறது என்று பொய் சொலலி அவனை துரத்துகிறான். பயத்தில் அவன் ஓடும்போது அவன் கீழே விழுந்து அடிப்பட்டு விடுகிறது. சாங்க்வை அடிக்க வருகிறான். சாங்கவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பாட்டி அவனிடம் செய்கையில் மார்பை சுற்றி கையால் ஆட்டுவாள். அதேபோல் செய்கிறான். சியோல் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறான்.
தோட்டத்தில் விளையும் பூசனிகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று சந்தையில் விற்கிறாள் பாட்டி . அவளிடம் யாருமே வாங்க வருவதில்லை. பாட்டி சத்தம் போட்டு விற்கிறாரள். சாங்கவி பாட்டியையே பார்த்துக் கொண்டிருக்கிறான். பூசனியை விற்றப் பணத்தில் பாட்டி சாங்க்விக்கு கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாள். பாட்டி மீது காரணம் இல்லாத கோபமாக இருக்கும் சாங்க்வி பாட்டி மீது அன்பைப் பொழிய ஆரம்பிக்கிறான்.
பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டியை முதலில் தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக பாட்டி ரொம்பவும் களைப்பாகி படுத்து விடுகிறாள். பாட்டிக்கு இறந்து விட்டாளோ என்று பயப்படுகிறான் சாங்க்வி. பாட்டியின் முகத்தில் கை வைத்துப் பார்க்கிறான். பயத்தால். இன்னொரு இடத்தில் சந்தைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது பாட்டி சாங்க்வியை அவனுடைய நண்பர்களுடன் பஸ்ஸில் அனுப்பி விடுகிறாள். பாட்டி ஏன் வரவில்லை என்பது சாங்க்விக்குப் புரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன், பாட்டியை எதிர்பார்த்த சாங்க்வி பஸ் வருமிடத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு பஸ்ஸக பாட்டி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். பாட்டி வரவில்லை என்றவுடன் அவனிடம் பதட்டம் கூடி விடுகிறது. பாட்டி நடந்து வருவதைப் பார்த்து வருத்தப் படுகிறான்.
பேரன் என்ன குறும்பு செய்தாலும், பாட்டி அவன் மீது அன்பை காட்டத் தவறுவதில்லை. நேர் மாறாக தன் அம்மாவிடம் கிடைக்கும் தண்டனையும், பாட்டியிடம் காணும் அன்பும் அவனை மாற்றுகிறது. பாட்டியை விட்டு, அந்தக் கிராமத்தை விட்டு பிரியும்போது அவன் மனம் பேதலிக்கிறது. பாட்டிக்காக வருத்தப் படுகிறான். பாட்டியைப் பிரியப் போகிற சமயத்தில் பாட்டிக்காக இரண்டு அட்டையில் இரண்டு வாசகங்களை எழுதி பாட்டியிடம் கொடுக்க விரும்புகிறான் ஒரு அட்டையின் வாசகம் I am sick. இன்னொரு அட்டையின் வாசகம் : I miss you. . பாட்டியைப் பிரிந்து அவன் அம்மாவுடன் செல்லும்போது பாட்டி நினைவாகவே இருக்கிறான். பஸ்ஸிலிருந்து திடீரென்று இறங்கி வேகமாக பாட்டியிடம் ஓடிப்போய் அந்த இரண்டு அட்டைகளைக் கொடுக்கிறான்.பஸ்ஸிலிருந்து பாட்டி செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். பாட்டியும் வருத்தத்துடன் செல்கிறாள். பேரன் கொடுத்த அட்டைகளைத் திரும்பி திரும்பிப் பார்க்கிறாள்.
கொஞ்சங்கூட போரடிக்காமல் ரொம்பவும் பிரமாதமாக எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும்கூட இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்.