முற்றுகை
விடுமுறைநாட்களில் கைப்பேசிகள்
குடும்பக்கதைகள் சொல்கின்றன.
அவைகளில் காதல்கதைகள்
மர்மக்கதைகள், சோக்கஃகதைகள்
பலவகையுண்டு. ஒவ்வொன்றும்
தனித்தனிக்கதையாகத் தெரிந்தாலும்
அவற்றின் சாராம்சமொன்றுதான்.
ஒருகூரையின்கீழ் பலதீவுகளாயான
உறவுகளின் உரிமைப்போர்களால்
அகந்தைக்கலகங்களால்
வீடுகள்குட்டிச்சுவர்களானதுதான்.
அப்பாவின் கடிதங்களை உன்னிப்பாக
படிக்கமுடிவதும் விடுமுறை நாட்களில்தான்.
என் கிராமத்து ந்தி மணல்கிணறானதும்
(ஏ) மாற்று விதைகளை விதைத்து
பொன்வயல் பொட்டல்காடானதும்
தாலாட்டும் தெம்மாங்கும் ஊமைகளானதும்
அப்பாவுக்கு இருமையின் அடையாள இழப்புகளாய் தெரிவது
காலம் பின்னுக்குத்தள்ளும் ஒரு கிழவனின்
ஆற்றாமை மட்டுமில்லையென உணர்கிறேன்.
கழனிகளைத் தின்று வளர்ந்த
கான்க்ரீட் வனங்களிலிருந்து பரவும்
பேராசைத்தீயின் நடுவில் ஒரு ரோபோவாய்
பட்டப்பகலில் வெறிநாய்கள்
பெண்மாமிசம் தின்னும் நகரில் பிழைக்கிறேன்.
கல்வெட்டாய் கண்முன் நிற்கிறது காலம்
இந்தக்கல்வெட்டின் தர்மகர்த்தாக்கள் யார்?
அவர்கள் மலைகளை விழுங்கும் மாயம் செய்பவர்கள்.
அவர்கள் அதிகாரத்துக்கு அருகிலிருப்பவர்கள்
அவர்கள் ஆயுதங்களுடனிருப்பவர்கள்
ஊதுவத்திச் சாம்பலாய் உதிர்கிறது நம் பொறுமை
நாம் அவர்களை முற்றுகையிடும் நாள் தொலைவிலில்லை.
மேலும் முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியுமென்று
நேற்றுவந்த கடித்தஃதில் அப்பா எழுதியிருக்கிறார்
லாவண்யா
நல்ல வரிகள்…
அருமையாக முடித்துள்ளது சிறப்பு… தொடர வாழ்த்துக்கள்… நன்றி…
தீர்க்கமான கவிதை !