(பட்டியல்கள் தொடர்ச்சி……)
– அசோகமித்திரன்
க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது – அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் – எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது, கோபமூட்டுகிறது.
க.நா.சுவுக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. அவர் இருப்பதும் இல்லாததுமாக ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று. க.நா.சு பல ஆங்கில வெளியீடுகளில் பல கட்டுரைகள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அந்த வெளியீடுகள் அவருக்கு மாறுபட்ட கருத்துகளை வெளியிடத் தடை விதித்ததில்லை.
தமிழ் இலக்கிய உலகைப் பற்றிக் க நா சு ஒருவரால்தான் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றில்லை. அவரைவிட அந்த மொழியில் திறமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதோ ஒரு முறை, அதுவும் க.நா.சு ஆரம்பித்த ஒரு சர்ச்சைக்கு பதிலடி போலத்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக, வருஷக் கணக்கில் அதுவும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அதே கோபத்துடன், அதே தீவிரத்துடன் எழுதவில்லை.
குறிப்பாக அவர்களே ஒரு இலக்கியப் பார்வை அமைத்துக்கொண்டு அப் பார்வையைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதில் க.நா.சு கொண்டிருக்கும் அயராத தீவிரத்துடன் செயல்படவில்லை. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றில் தீவிரத் தன்மை கொண்டிருப்பது அந்த ஒன்றில் அந்த நபர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்கறையையும்தான் காட்டும். க.நா.சுவின் கருத்துகள், கணிப்புகள் எப்படியாயினும் தமிழ் இலக்கியத் துறையில் அவருக்குள்ள நம்பிக்கையையும் அக்கறையையும் முப்பதாண்டுப் பணியின் நிரூபணம் ஆகியிருக்கின்றன. தமிழ் மொழி அல்லாதோர் மத்தியில் தமிழ் இலக்கியம் கவனத்தையும் கணிப்பையும் பெற்ற வருகிறதென்றால், அது க.நா.சுவும் அவர் போன்றோரும் தமிழ் இலக்கியம் பற்றி வேறு மொழிகளில் எழுதுவதால்தான். விஞ்ஞானப் பார்வை எல்லாத் துறையிலும் வளர்ந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் பற்றி மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன் முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும், கணிப்பும் முக்கியத்வமும், மதிப்பும் பெறத்தான் செய்கின்றன.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அவருக்கு விருந்து. ஆனால் ஸ்பெயின் பிரபுகளுக்கு கொலம்பஸ் மீது மிகுந்த அலட்சியம். அந்த விருந்திலேயே அவர் காது கேட்க ‘அப்படி என்ன பிரமாதமாக இவன் சாதித்துக் கிழித்து விட்டான்’ என்று பரிமாறிக் கொண்டார்கள். கொலம்பஸ் விருந்து முடியும் தறுவாயில் ஒரு முட்டையை உங்களால் செங்குத்தாக நிற்கச் செய்ய முடியுமா?” என்று கேட்டார். பிரபுக்கள், சீமாட்டிகள் அனைவரும் விருந்து மேஜை மீது முட்டைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். இறுதியாக ”நீ செய்து காட்டு, பார்ப்போம்,” என்றார்கள். கொலம்பஸ் தன் கையிலிருந்த முட்டையின் ஒரு நுனியைச் சிறிது தட்டி விட்டார். முட்டை இப்போது செங்குத்தாக நின்றது. ”இது என்ன பிரமாதம்?” என்றார்கள் பிரபுக்கள். ”முற்றிலும் உண்மை. ஒருவர் செய்து காட்டிவிட்டால் அப்புறம் எதுவும் பிரமாதம் இல்லைதான்,” என்று கொலம்பஸ் கூறினார்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தைத் தரம் பிரித்து இனம் கண்டுகொள்ள வாசகர்களுக்கு ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதில், அளவிலும் தரத்திலும் தொடர்ந்து ஊக்கம் குன்றாமலிருத்தலிலும் க.நா.சு ஆற்றிய பணிக்கு நிகராக இன்றுவரை யாரும் பணி புரியவில்லை. இந்த விதத்தில் அவர் துணையில்லாதவர். தனியர்.
(நன்றி : கசடதபற பிப்ரவரி 1972)
நன்றி.. க நா சு வைப்பற்றிய மதிப்பீடுகள் தொடரட்டும்…
குமரி எஸ். நீலகண்டன்