ஒரு தேதி
அவன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிரண்டு கோடுகளாய் கோலமாவில் போடப்பட்டிருந்தது. எறும்புகள் அவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் வேறு யாரோவாகச் செயல்பட்டு சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பக்கத்தில் இருந்த தென்னை மரம் கேட்டுக் கொண்டிருக்குமோ என்று தோன்றிற்று. அப்பொழுது மின்னல் ஒன்று கிழக்குப்புற வானில் பளிச்சிட்டது. திடீரென்று நான்கு சிறு பறவைகள் இரண்டு காகங்களுடன் அணிவகுத்துச் சென்றன. அவன் குறித்து வைத்திருந்த நாளில் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லையோ என்று தோன்றிற்று. ஒரு கணம், நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று மனக்கணக்கு போட ஆரம்பித்தான். உறக்கத்திலிருந்து அவன் விடுபடுகிறான். நிச்சயம் சில மாறுதல்கள் நிகழக்கூடும். மதிப்புடன் போற்றிப் பாதுகாத்தவை எல்லாம் ஒரு கணத்தில் அர்த்தம் இழந்து புதியதோர் தளத்தில் இயங்கத் தொடங்கும். அவன் அனுபவத்தில் உலகம் புதியதோர் பொருள் கொள்ளும். அவன் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அவற்றின் மாறுபடும் பொருள்கள் மட்டுமே நிகழ் காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு கடந்து செல்லும். மேலும் சில காகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இரண்டு பச்சைக் கிளிகள் கூவிக் கொண்டே பறந்தன. எல்லாமே பார்ப்பதுபோல் மட்டுமே இருக்கிறது. கைகளை நீட்டித் தொட்டுப் பார்த்தான். எல்லாமே செங்கல் கட்டிடங்கள். நிச்சயம் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தலை நிமிர்ந்து மேலே பார்த்தான். ஆகாயம் முழுக்க அவன் பெயர். நான் இல்லை அது என்றான். உரக்கக் கூவினான். எந்தப் புறத்திலிருந்தும் எவ்வித எதிரொலியும் கேட்கவில்லை. அவன் விழித்துப் பார்த்தபோது வேலைக்காரியின் முகம் பூதாகாரமாய் தெரிந்தது. தேதியைப் பார்த்தான். அவன் குறிப்பிட்டு வைத்திருந்த தேதி கடந்து விட்டிருந்தது.
– ஆத்மாநாம்