குழந்தைகள் உலகம் தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து குதூகலத்துடன் என்னை வரவேற்றது அங்கே ஆனந்தமும், ஆச்சர்யங்களும் ஒவ்வொரு மணற்துகள்களிலும் பரவிக்கிடந்தன காற்றலைகளில் மழலைச் சிரிப்பொலி தேவகானமாய் தவழ்ந்து கொண்டிருந்தது மோட்ச சாம்ராஜ்யம், தனக்குத் தேவதைகளாக குட்டி குட்டி அரும்புகளை தேர்ந்தெடுத்திருக்கின்றது அங்கு ஆலயம் காணப்படவில்லை அன்பு நிறைந்திருக்கின்றது காலம் கூட கால்பதிக்கவில்லை அவ்விடத்தில் சுயம் இழந்து நானும் ஒரு குழந்தையாகி மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன் அந்தக் கணத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுகையில் அதைக் கொண்டு இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது எங்கு நோக்கினும் முடமாக்கப்பட்ட பொம்மைகள் உடைந்த பந்துகள் கிழிந்த காகிதக் குப்பைகள் சேற்றுக் கறை படிந்த சுவர்கள் களங்கமில்லா அரும்புகள் எனக்கு கற்றுத் தந்தது இவைகள் வீட்டிற்குத் திரும்பியதும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அலமாரி பொருட்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன், தரையில் விசிறி எறிந்தேன் ஏக்கத்தோடு ஊஞசலின் மீது அமர்ந்தேன் எனது வீட்டை அங்கீகரிக்குமா குழந்தைகள் உலகம் – என்று யோசனை செய்தபடி…
