எதையாவது சொல்லட்டுமா….1

நான் எதையாவது எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். அப்படி எழுதும்போது யார் மனதையாவது புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சிலசமயம் என்னை அறியாமல் யார் மனதையாவது புண் படுத்தி விடுவேன். பேசும்போது கூட சிலசமயம் அப்படி நடந்து விடுவதுண்டு. ஒரு சமயம் என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. நான் அவரைப் பார்த்து,’எப்படி அப்பா இருக்கு உடம்பு’ என்று கேட்டேன். அவருக்கு செம்ம கோபம். உடம்பு எப்படியிருக்குன்னு கேட்கறானே, என்ன திமிர் இருக்குமென்று.

அது போகட்டும், நான் சொல்ல வேண்டிய விஷயம் வேறு. எஸ் சண்முகத்தை நான் நடத்தும் கூட்டத்திற்கு அழைத்தேன். வருகிறேன் என்று சொன்னாலும் கூட அவரால் வர முடியாது என்பதை ஊகித்துதான் அப்படி அழைத்தேன். அப்போதுதான் அவர் சொன்னார் நாகார்ஜுனன் எழுதிய ‘நளிர்’ என்ற புத்தகத்திற்கு நடத்தப்போகும் கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம்தேதி அவர் பேசப் போவதாக..நாகார்ஜுனன் இந்தியாவில்தான் இருக்கிறார் என்றும் கூறினார். ஆனால் சென்னையில் இல்லை. கேராளாவில் இருக்கிறார் என்றார்.

லண்டனில் இருக்கும் நாகார்ஜுனன் இந்தியாவிட்டு திரும்பவும் லண்டனுக்குப் போவதற்குமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னையில் நாகார்ஜுனன் இருக்கும்போது நானும் அவரும் இலக்கியக்கூட்டங்கள், சினிமா க்ளப்புகளில் சந்திப்பது வழக்கம். விருட்சம் இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். அவர் லண்டன் போனபிறகு தொடர்பு இல்லை. அவர் சென்னைக்கு வருகிறார் என்பது கூட தெரியாது. மேலும் நானும் சென்னையில் இல்லாமல 4 ஆண்டுகள் மயிலாடுதுறையில் இருந்தேன்.

அவருடைய வலைத்தளத்தில் நாகார்ஜுனன் 3 கூட்டங்களில் பேசுவதாக அறிவிப்பு விட்டிருந்தார். இதில் காந்தி ஜெயந்தி கூட்டத்தில்தான் கலந்துகொள்ள முடியுமென்று தோன்றியது.

அவருடைய புத்தக விமர்சனக் கூட்டம் நான் கூட்டம் நடத்தும் எல்எல்ஏ பில்டிங்கில்தான் நடந்தது. பேசவந்தவர்களில், எஸ்.சண்முகம், வீ அரசு (இவர் சிறுபத்திரிகைகள் குறித்து எதாவது கூட்டம் பல்கலைக் கழகத்தில் நடத்தினாலும் விருட்சத்தைச் சேர்க்க மாட்டார்.), தமிழவன் முதலியவர்கள் நளிர் புத்தகத்தைப் பற்றியும் நாகார்ஜுனன் பற்றியும் பேசுகிறார்கள்.

பொதுவாக ஒரு கூட்டத்திற்குப் போவதற்குள் என்னை தயார் படுத்திக்கொள்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அன்று அப்படித்தான் நடந்தது. 2011ல் நானோ கார் வாங்கப் போவதால், கார் ஓட்ட காலை நேரத்தில் கற்றுக்கொள்ள சென்று விட்டேன். பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எல்எல்ஏ பில்டிங் நோக்கி பயணித்தேன். பின்தான் தெரிந்தது தி நகர் வழியாகச் செல்வது கடினம் என்பது. பின் சுற்றி தேனாம்பேட்டை வழியாக அண்ணா சாலையைப் பிடித்து எல்எல்ஏ பில்டிங் வந்தேன்.

வண்டியை வைத்துவிட்டு மாடியை எட்டியபோது எனக்கு சந்தோஷம். பலரைச் சந்தித்தேன். அஜயன் பாலா, முத்துக்குமார், டி கண்ணன், வளர்மதி, குட்டி ரேவதி என்றெல்லாம். உள்ளே நுழைந்தபோது கோணங்கி பேசிக்கொண்டிருந்தார். இவர் எழுத்துக்கும் இவர் பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எளிதில் புரியாது என்பதுதான். நாகார்ஜுனுனைப் பார்த்தேன், சண்முகத்தைப் பார்த்தேன், வீ அரசைப் பார்த்தேன், தமிழவனைப் பார்த்தேன்…கோணங்கி பேசிக்கொண்டே இருந்தார். என்னால் அவர் பேச்சைப் புரிந்துகொண்டு நிதானத்திற்கு வரவே முடியவில்லை.

பின் அவர் பேசி முடித்துவிட்டு என் சீட்டிற்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். வலது பக்கத்தில் கோணங்கியும், இடது பக்கத்தில் குட்டி ரேவதியும் உட்கார்ந்து இருந்தார்கள். இலக்கியக் கூட்டங்களில் ஒரு பொதுவான விதி உண்டு. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஹலோ சொல்லும் வழக்கம் உடனடியாக வராது. ‘உங்களைக் கூட்டத்தில் பார்த்தால் கண்டுகொள்ளவே மாட்டேங்கறீங்க..’ என்று வைதீஸ்வரன் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். இப்போதுதான் தோன்றுகிறது அது இலக்கியக்கூட்டத்தின் விதி என்று.

கூட்டம் முடியும் நேரத்தை நெருங்கியதால், சண்முகம் 15 நிமிடத்தில் பேசும்படி ஆகிவிட்டது. புத்தகத்தைப் பற்றியும், நாகார்ஜுனன் பற்றியும் மாறி மாறி பேசிக்கொண்டே போனார் சண்முகம்.

அடுத்தது தமிழவன் பேச ஆரம்பித்தார். எனக்குத் தெரியும் தமிழவன் எப்படிப் பேசுவார் என்று. நிதானமாக நாகார்ஜுனன் பற்றியும், பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் பற்றியும், இலக்கியத்தில் ஈடுபட்டு வரும் பல இலக்கிய நண்பர்களைப் பற்றியும் சுவாரசியமாகப் பேசினார். தமிழில் தீவிர எழுத்தைப் பற்றி நன்றாகப் பேசக் கூடியவர்களில் அவரும் ஒருவர். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை கவர்ந்தது. நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக கோணங்கி எழுதிவிடுகிறார் என்று.

பல இலக்கிய நண்பர்கள் நாகார்ஜுனுனைப் பார்க்கவே வந்திருந்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசிக்கும் நாகார்ஜுனுனைப் பார்க்கும்போது அவர் பெரிதாக மாற்றம் அடையாமலே இருந்ததாகப் பட்டது. அவர் எழுந்து பேசும்போது அவர் வழக்கம்போல் எப்படிப் பேசுவோரோ அப்படியே பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்மொழியுடன் தொடர்பு இல்லாமல் போனதால், தொலைபேசி மூலம் தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுடன் பேசியதாகக் குறிப்பிட்டார். வலைத்தளத்தில் தீவிரமாக நாகார்ஜுனன் எழுதிய பல விஷயங்கள் புத்தக உருவத்தில் வெளிவந்தள்ளது. கிட்டத்தட்ட 527 பக்கங்கள் கொண்ட நளிர் புத்தகம். லண்டனிலிருந்து தொலைபேசியில் அவர் பேசும்போது வலைத்தளத்தைப் பற்றி பல விஷயங்களைக் குறிப்பிடுவார். வலைத்தளத்தில் தினமும் எதாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நியதியை அவர் கடைப்பிடித்து வந்தார். நளிர் புத்தகம் அவருடைய உழைப்புதான். அவர் தமிழ் சற்று வித்தியாசமாக இருக்கும். நளிர் புத்தகத்தில் 181ஆம் பக்கம் திருப்பியபோது கண்ணில் பட்ட ஒரு வரி ‘பிறகு ஜானுடன் பார்த்தது இன்னும் சில படங்கள்.’ இதை ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்ல வந்தேன்.

லண்டனிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் நாகார்ஜுனுனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அவர் கூட்டம் முடிந்து திரும்பும்போது சொல்லலாம் என்று நினைத்தேன். அவர் நான் வந்ததைக் கூட கண்டுகொள்ளவில்லைபோல் தோற்றம் தந்தார். பல இலக்கிய நண்பர்கள், பல விசிறிகள் அவருக்கு. கூட்டம் முடிந்து வெளியே வந்து அவருடைய நளிர் புத்தகத்தை விலைக்கொடுத்து வாங்கினேன். பின் அவரைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். பார்த்தல் அவரைச்சுற்றி வேறு சிலர் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நகர்ந்தபிறகு நான் ஹலோ சொல்வதற்குள், நாகார்ஜுனன் நகர்ந்து வேகமாக முன்னால் போய்விட்டார்.

மற்ற நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டே வந்தேன். எல்எல்ஏ பில்டிங் வாசலில் என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது வாசலில் பேசிக்கொண்டிருந்த நாகார்ஜுனனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அதற்குள் அவர் அங்கு இல்லை. ஆனால் மற்ற நண்பர்கள் இருந்தார்கள். கோணங்கியைப் பார்த்து, ‘என்ன உங்கள் எழுத்துடன் நெருங்கி வர முடியவில்லை,’ என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அவருடைய பேச்சு கூட சிலசமயம் கவித்துவமாக இருக்கும். அவருடைய நாவல் ஒன்றை வாங்கி நிதானமாக வாசிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

ஆழி பதிப்பகம் நிதானமாக நல்ல தரமான புத்தகங்களை குறுகிய காலத்தில் அதிகமாகக் கொண்டு வந்துள்ளது. நிதானமாக வாசிக்க வேண்டிய கோணங்கி நாவலையும், வாசிக்க வாசிக்க பக்கங்கள் குறையாத பா வெங்கடேசனின் நாவலையும் எப்போதுதான் தொடங்கப் போகிறேன் என்பது தெரியாது. நான் எதையாவது சொல்லட்டுமா என்று இப் பகுதியில் ஆரம்பித்திருக்கிறேன். சரி, நீங்கள் இதைப் படித்துவிட்டு எதையாவது சொல்லி விடாதீர்கள்.

“எதையாவது சொல்லட்டுமா….1” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. நீங்கள் கடைசி வரை நாகர்ஜுனன் அவர்களுக்கு ஹலோ சொல்லாமல் போனது எனக்கும் எப்படியோதான் உள்ளது . எனக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதால் என்னால் உங்கள் எழுத்தை அவதானிக்க முடிகிறது .

    நிறைய எழுதுங்கள் வாசிக்க காத்து கொண்டுள்ளோம்

    தேவராஜ் விட்டலன்

    அஸ்ஸாம்

  2. தொடருங்கள். இலக்கியம் தவிர அன்றாடம் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள், சாதாரண மனிதர்கள் பற்றியும் இங்கு எழுதவும். காத்திருக்கின்றோம் அடுத்த பதிவிற்கு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன