சிறுகதை
பத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.
பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோ ம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.
பத்மநாபனை நான் மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.
”என்ன பத்மநாபன்?…எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?”
”வந்துவிட்டேன். டெம்பரரி டிரான்ஸ்வர்…வந்து ஒரு மாசம்தான் ஆகிறது…”
”எங்கே இருக்கிறீர்கள்?”
”ஹஸ்தினாபுரம்….”
”சொல்லவே இல்லையே?”
”என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம்… உங்க பெண் பெயர் என்ன?
”ஏன்?
”சுருதிதானே?”
”ஆமாம்..”
”என்ன பண்றா?”
”பி டெக்…எம்ஐடியிலே பண்றா..”
”நினைச்சது சரியாப்போச்சு..”
”என்ன நினைச்சீங்க..”
”சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாக இருக்குமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு…..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”
”நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது..”
”நான் சொல்ல வந்தது வேற விஷயம்…நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம்…எனக்கு ஆபிஸ் 8.30 மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே 7.30க்கெல்லாம் ஓடணும்…டெய்லி ஓடறேன்..நான் போற சமயம் எம்ஐடியில் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்….அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டே போவாங்க…தினமும் உங்கப் பொண்ணு சுருதியைப் பாக்கறேன்….நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை..அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க..எல்லாம் படிக்கிற பசங்க.. அந்த கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்கமாட்டாங்க..சுருதிகிட்ட வந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல கூட கையைப் போடுவான். ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான்…சுருதிகிட்ட சொல்றான்…உதட்டுலதான் பண்ணக்கூடாதாம்….கேட்க சகிக்கலை..”
பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு சொரேர் என்றிருந்தது. ”என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு….” சத்தம் போட்டு கேட்டேன்.
”தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது. இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு….இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுக்கிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணனும்..”
”பத்மநாபன் ரொம்ப நன்றி…இத எப்படியாவது சரி செய்யணும்…சுருதி நல்லப் பொண்ணு…கொஞ்சம் வெகுளி…இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”
பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல் கவலைப்படுவாள்….அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாக கவனித்தேன்… ”என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…” என்று கேட்டேன்..”நல்லாதானே இருக்கு..”என்றாள் சுருதி.
”உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?”
”அதெல்லாம் கிடையாது…தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து 4 மாசம் மேலே ஆயிடுத்தே..”
அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை… மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாக கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..
”உன்காகத்தான் இடம் போட்டிருக்கேன்..,” என்றான் ஒருவன் இளித்தபடியே.
இந்த சமயத்தில், ”சுருதி…” என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா?” என்றாள்.
”இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு,” என்றேன். சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
”அவர்கள் எல்லோரும் யாரு?” என்று கேட்டேன்.
”ஃபிரண்ட்ஸ்,” என்றாள்.
சுருதி பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.
”தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கிறாயா..?”
”ஆமாம்..”
”அவர்கள் தினமும் உன்னை கிண்டல் செய்கிறார்களாமே?”
”இல்லையே..”
”பத்மநாபன் சொல்றார்…இல்லைங்கறீயே..”
”என் வகுப்பில படிக்கிறவங்க..நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”
”ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?”
”மல்லிகாவும் என் கூடத்தான் வருவாள்..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்..”
”சுருதி…என்னைப் பொருத்தவரை இதெல்லாம் தப்பு..கன்னத்தில இடிக்கிறது. தோள்ல கையைப் போடறது.. நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம்..அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்…”
கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள். ”நீங்க காலஜ்ஜூக்கெல்லாம் வராதிங்கப்பா,” என்றாள்.
குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். ”எப்ப காலேஜ் முடியும்?”
”தெரியாது..சிலசமயம் 4க்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால், 5கூட ஆகும்..”
”சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன். ”இன்று உங்களைப் பார்க்கவில்லையே?”என்றார்.
”நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.
”எத்தனை நாள்தான் உங்களால் சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்?”
”அதுதான் எனக்கும் புரியவில்லை..”
”இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..”
அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள்.. அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், ”சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸை சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள்.
”சுருதிக்குத் திருமணம் ஆகப் போறது.. நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.
”சரி அங்கிள்… நாங்கள் இனிமேல் அப்படி வரமாட்டோம்,”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.
நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம். ”ஏன்பா..இப்படிப் பொய் சொல்றீங்க..அவங்க நல்லவங்கப்பா…சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்..”
”எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, சுருதி.”
அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில்படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். ”அவர்கள் நல்லவர்கள்,”என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன். ”நானும் உங்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்..சுருதிக்கு என்னைத் தெரியாமல் இருப்பது நல்லது,”என்றார்.
ஒருவாரம் கழித்து சுருதி தனியாக காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்று எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.
நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.. ”நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார். எனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகப் போன் செய்தார். ”அந்த நாலைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்துவிட்டாள். இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,”என்றார்.
எனக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை.
சிறுகதை அருமையாக இருக்கின்றது.
ஒரு தலைமுறை இடைவெளி அருமையாக வெளிப்படுகின்றது.
good one.