நிதானமாக மாலை 5 மணிக்குமேல் அழகியசிங்கரை ஜெகனும். மோகினியும் சந்திக்கிறார்கள்.
ஜெகன் : வெயில் கடுமையாக இருக்கிறது.மோகினி : அக்னி நட்சத்திரம் போனபிறகும் வெயில் கொடுமை தணியவில்லை.அழகியசிங்கர் : அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டால் தொப்பென்று விழுந்துவிடத் தோன்றுகிறது. எங்கும் போக முடியவில்லை.ஜெகன் : இலங்கைப் பிரச்சினை…மோகினி : எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள், பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் இரண்டே இரண்டு மொழி பேசுபவரிடம் ஏன் சுமுகமான நிலை ஏற்படவில்லை?அழகியசிங்கர் : சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு கனவு வந்தது. எல்லோரும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலே விமானங்கள் சீறிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து குண்டுகள் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. குண்டுகளுக்கு இரையாகி மக்கள் சரிந்து சரிந்து விழுகிறார்கள்… போர் நடக்கும்போது தமிழர்கள் பட்டப்பாட்டை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஜெகன் : நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். மோகினி : ஏன் பலவீனமானவர்கள் என்று கூட சொல்லலாம்.அழகியசிங்கர் : எழுத்தாளர்கள் என்றால் இன்னும் பலவீனமானவர்கள்.ஜெகன் : நாமெல்லாம் மெளனமாக வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.மோகினி : எந்த விஷயத்திலும் நாம் சாதாரணமானவர்கள்.ஜெகன் : இப்படி சாதாரணமானவர்கள் ஏன் கவிதை எழுத வேண்டும். கதை எழுதவேண்டும்.மோகினி : ஏன் வாசிக்க வேண்டும்?அழகியசிங்கர் : நாம் எழுதுவதால் ஒன்றும் செய்ய முடியாது. உலகத்தில் நடக்கும் மாற்றங்களை சாதாரண மனிதர்கள் போல் பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.மோகினி : ஒன்றும் செய்ய முடியாது. ஏன் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட ஒன்றும் செய்வதற்கில்லை. அழகியசிங்கர் : டூ வீலர் மோதி ராஜ மார்த்தாண்டன் இறந்த செய்தியை அறிந்தபோது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.மோகினி : ஏன்?அழகியசிங்கர் : டூ வீலர் மோதி இறப்பதா? பலத்த காயம் ஏற்படலாம். மரணம் ஏற்படுகிறது என்றால் ரொம்ப மோசமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.ஜெகன் : விபத்தில் மரணம் அடைவதுபோல் கொடுமை வேறு எதுவுமில்லை.அழகியசிங்கர் : பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர் ஒருவருக்கு முதுகு தண்டுவடத்தில் நடந்த விபத்தை இன்னும்கூட என்னால் மறக்க முடியவில்லை. அவரைப்போல் சிலரால்தான் இந்த விபத்தை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். எனக்கு எப்போதும் அவர் ஹீரோதான்.ஜெகன் : எழுத்தை யாராவது படிக்கிறார்களா?அழகியசிங்கர் : படிக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் எழுதுபவர்கள் ஹீரோவாக தங்களை நினைத்துக்கொண்டால் ஆபத்து.மோகினி : எத்தனையோ தொகுப்புநூல்கள் வெளிவருகின்றன. ஆனால் ஏன் உங்கள் கவிதைகளையோ கதைகளையோ யாரும் தொகுப்புநூலில் சேர்ப்பதில்லை.அழகியசிங்கர் : எனக்கும் அது புரிவதில்லை. கிட்டத்தட்ட 200 கவிதைகளுக்கு மேலும், 60 கதைகளுக்கு மேலும் எழுதியிருக்கிறேன். கடந்த 22 ஆண்டுகளாக நவீன விருட்சம் பத்திரிகை நடத்தி வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் கவிதைத் தொகுதியாக இருந்தாலும், கதைத் தொகுதி இருந்தாலும் சரி என் படைப்புகள் யார் நினைவுக்கும் வருவதில்லை. என்னைப் போல் சில எழுத்தாள நண்பர்கள் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை.ஜெகன் : இது குறித்து நீங்கள் ரொம்ப பேசினால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படுவதாக சொல்வார்கள். மோகினி : இதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா?அழகியசிங்கர் : இல்லை. ஆனால் என் பெயர் அத் தொகுப்பில் இல்லாவிட்டாலும், விடுப்பட்ட பெயர்களில் ஒவ்வொரு தொகுப்பிலும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். ஜெகன் : நீங்கள் நாவல் மட்டும் எழுதியிருந்தால் இந் நேரம் புகழ் அடைந்திருப்பீர்கள்.அழகியசிங்கர் : நாவல் எழுதுவதற்கு கடுமையான முயற்சியும், பொறுமையும் தேவைப்படுகிறது. மேலும் எல்லா நாவல்களும் எல்லோருடைய கண்களுக்கும் தெரிவதில்லை.மோகினி : சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் எது?அழகியசிங்கர் : பாரதிமணி எழுதிய புத்தகம். படித்துக்கொண்டிருக்கும்போது என் கையிலிருந்து எங்கோ நழுவிப் போய்விட்டது. அவர் புத்தகம் மூலம் இன்னொரு சுப்புடுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சரளமான நடையில் எல்லாவற்றையும் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகிறார்.மோகினி : இந்த இதழ் நவீன விருட்சம்?அழகியசிங்கர் : 160 பக்கம் வருகிறது. புதுக்கவிதை மலர்ந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறோம். ஏகப்பட்ட கவிதைகள், கதைகள் படிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.ஜெகன், மோகினி : உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சிஅழகியசிங்கர் : நானும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.