ஏழு ஜென்ம வதைப்படுத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான்
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய்
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான்