மீண்டும் வாசிக்கிறேன் 1

நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்

1. நட்பு

நானுன்னை வெறுக்கவில்லை
நானுன்னோடு சண்டை போட
விரும்புகிறேன் – நன்றாக கவனி நண்பா,
விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.
எனினும் இதிலிருந்து இன்னொன்றும்
நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் –
நான் சண்டை போடாத எல்லோரையும்
நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.

2. நிலை

மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்
தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ
இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்….
திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.
கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது…
கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்
மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்
வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது –
இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் –
விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்
கறுப்பு நிறங்களின் தாறுமாறில்
பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.
அங்கே நிற்கின்ற நிலையில்
எனக் கொன்றும் புரிகிறது –
நடுத் தெருவில் அப்போது தான்
புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்
கண்ணில் கசியும் சோகம்.

3. விடுதலை

மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்
மத்தியான வெளியில்
படபடத்துப் போகும்
வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.
திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே
திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் –
வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து ‘விட’லாம்.
ஆனால் ஏனோ நல்ல வேளை
காற்று போய் எங்கோ மீண்டும்
பழையபடி பதுங்குவதற்குள்
வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்
காற்றில் விட்டு விட்டேன்…………………….

(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன