சில குறிப்புகள் 12

மேடைப் பேச்சும் நானும் / 1
எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள். மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார். நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது. நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், ‘எல்லோருக்கும் வணக்கம்….இப்போது காசியபன் பேசுவார்,’ என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன். (இன்னும் வளரும்)

“சில குறிப்புகள் 12” இல் ஒரு கருத்து உள்ளது

  1. படு சுவாரஸ்யம். எனக்கும் கிட்டத் தட்ட அதே மனநிலை. மேடைப் பேச்சு பேசுதல் ஒரு தனித் திறமை. இப்போதெல்லாம் அலுவலகத்தில் ஓரளவு ஒப்பெற்றினாலும், ஒரு பொது இடத்தில் பேசும் தைரியம் இல்லை என்பது உண்மை.

    //மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். // ஹா ஹா.

    //’எல்லோருக்கும் வணக்கம்….இப்போது காசியபன் பேசுவார்,’ என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன்// பிரமாதமான அறிமுகம்தான். பரவாயில்லை எனக்கும் கம்பெனி இருக்கு. :))

    அனுஜன்யா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன