பூனைகள் பூனைகள் பூனைகள் – 1

3.

கல்யாணராமன்

பூனையை முன் வைத்துக் காதலியுடன் ஒரு சம்பாஷணை

அன்புற்குரியவளே!
பூனையை விட்டு விடு

நீ விரித்த வலையில்
மனம் தப்பி தலைக்குப்புற
மீள முடியாமல் விழுந்துபோன
உன்னடிமை சொல்கிறேன்

தயவுசெய்து
பூனையை விட்டுவிடு

நீ வைத்து விளையாட
வாலிபப் பொம்மைகள் ஆயிரம் இருக்கின்றன
நீ வீசும் புன்னகைக் காற்றில்
வானுயரம் குளிர்ந்த பறக்க
வயசாளிப் பலூன்கள்
கோடிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன

வழக்கம்போல்
அவர்களோடு விளையாடிக்கொள் நீ
பாவம்
இந்தப் பூனையை விட்டுவிடு

பூனையோடு விளையாட உனக்குத் தெரியாது
சந்தோஷமானால்
ஆரத் தழுவிக் கொஞ்சுவாய்
கோபம் கொண்டாலோ
சோறே போடாமல் வதைப்பாய்

அன்பிற்குரியவளே!
பூனையோடு பழகும் திறனோ
சிரித்துச் சிரித்து விளையாடும் கலையோ
சுட்டுப் போட்டாலும் வராது உனக்கு

தயவுசெய்து
பூனையை விட்டு விடு

இருகரங்களாலும் அள்ளியெடுத்து
மூச்சுக் காற்று முட்ட முட்ட
மார்போடு அணைத்துக்கொள்ளத் துடிக்கும்
பயங்கரமான உனது அன்பை

ஒரு சிறு சீறலுமற்று
அப்படியே தாங்கிக்கொள்ள
உணர்ச்சி கெட்ட
வெறும் ஜடமல்ல அது

திறந்து கிடக்கும் சமையலறையில்
நீ உறை குத்தி வைத்த பாலை
குடித்துத் தீர்க்கும் பரபரப்பில்
தவறுதலாய்
உன் வீட்டுக் குவளையை
உருட்டி விட்ட குற்றத்திற்காக
நீ சினந்தால் அதற்கு வலிக்கும்

வலித்தால் அது கத்தும்
சிலவேளைகளில்
தன் கூரிய நகங்களால்
பட்டுப் போன்ற உன் மேனியைப்
பிராண்டியும் விடலாம் அது

ஆதலினால்
என் அன்பிற்குரியவளே!
பூனையை விட்டுவிடு

உன்பிடி நழுவித் தப்பியோடும் பூனையைப்
பாற்சோறு தின்ன வைப்பதற்காகக்கூட
இனித் துரத்தாதே

வேண்டாம்
நீ பின்னிய அன்பு வலையிலிருந்து
அதை விடுவித்து
கட்டுக்கடங்காத அதன் சுதந்திரத்தை
தயவுசெய்து
அதனிடமே விட்டுவிடு, நீ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன