ஒரு கவிதை


நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி

தேம்பியழுகிறேன்
எனக்கு சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி

ஆடிக்களைத்த
மைதானத்தை நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவும் இல்லை

வெற்றியுமில்லை
தோல்வியுமில்லை

ஒரு கவிதை

ஒவ்வாத வேலையிலிருந்து

மாநகரப்பேருந்தில்

திரும்பிக்கொண்டிருக்கிறேன்

அளித்த வாக்குறுதிகளைப் போன்ற

நெரிசலில் சிக்கி,

அறையில் இன்னும்

கழுவப்படாமல் இருக்கும்
பாத்திரங்களைப் போன்ற

நெடியிலிருந்து தப்பி,

முட்டி முன்னேறி,

ஜன்னலருகே முகம் வைத்தேன்

கொஞ்சம் காற்றையும்,

நிறைய சந்தோசத்தையும்

அளித்துக் கடந்துகொண்டிருக்கிறது

எங்களூர் பேருந்து