இன்னும் அவளுக்குத் தெரியாது

 
நீ கனவில் வந்து 
காலடி வைக்கும் 
நேரங்களிலெல்லாம் 
அதிகாலை வந்து 
என் கதவைத் தட்டி 
எழுப்பிவிடுகிறது…
உன்னைப் பார்க்கும் 
தருணங்களில் 
காமம் பீறிட்டு
ஊற்றெடுக்கும் 
ஆனால் 
உத்தமனாகக்
காட்டிக்கொள்கிறேன் என்னை…
நீ அருகில் இருக்கையில் 
கரம் பிடிக்கவிடாமல் 
கட்டுப்படுத்திவிடுகிறது 
உன் பார்வை 
பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன் 
என்ன செய்ய…
விக்கல் நிற்க முத்தம் கொடு 
சந்தர்ப்ப வசத்தால் 
உயிர் பரிகசிக்கும் 
விரலின் 
மெல் உரசலுக்காக 
காத்துக்கிடக்கிறேன்…
உன் கீழ் வானம் இறங்குமா?
இத்தனையும் 
நான் உன்னை 
காதலிக்க தொடங்கிய நாள் முதல் 
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது…
                                         

பறவை நண்பன்

 
நிறம் 
இரவை எழுதும் பொழுது 
அறையில் வந்து அமர்ந்த 
பறவை ஒன்று 
என்னோடு கதைக்கத் துவங்கியிருந்தது…
அது பேசும் பேச்சிற்கு 
என்னால் தலையாட்ட முடிந்ததே தவிர 
பதில் பேச முடியவில்லை 
கொஞ்ச நேரத்தில் 
அதனோடு சேர்ந்து 
இரையைக் கொத்த தொடங்கினேன்  
நீண்ட நேரத்திற்குப் பிறகு 
என் படுக்கையையும் அது ஆக்கிரமைத்துக்கொண்டது 
மென்மையான முனகலில்
தூக்கம் சுவர்க்கம் நுழைய 
நிறம் எழுதி முடித்திருந்தது 
ஒரு பகலாக மாறிப்போயிருந்தது
பறவை வந்து தங்கிவிட்டுச் 
சென்றதற்குச் சாட்சி 
படுக்கையில் கிறுக்கப்பட்ட 
வெள்ளைக் கோடுகள் மட்டுமே…
யாருக்கும் தெரியாமல் 
அதை மறைத்தாக வேண்டும்…
                                       

குட்டி குட்டி அழகு

குட்டி குட்டி பற்களை 
பிரசில் தேய்த்துவிட்டு 
சாக்கடையில் வந்து 
நுரை ததும்ப எச்சிலைத் துப்பும்பொழுது
சாக்கடையில் வழிந்தோடுகிறது 
அழகு…
குட்டித் தலையை 
அப்பாவின் கைக்குள் 
நுழைத்து தூங்கும்பொழுது 
காற்றில் பரவுகிறது 
அழகின் மணம்…
 குறு குறு பார்வையில் 
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 
குட்டிச் சிரிப்பொன்று வந்து 
வெட்கம் கொள்கிறது…
குட்டிக் கண்களில் 
மாட்டிய கறுப்புக் கண்ணாடி 
எதிர்வரும் வாகனங்களை 
மமதைக் கொள்ளச் செய்கிறது…
பாசை புரியா பாடலில் 
செல்பேசிக்கு ரெக்கை முளைத்து விடுகிறது…
அளப்பரிய அர்த்தத்தை 
குட்டிக் கணத்தில் 
கொட்டிச் செல்வது 
அழகு… ம்ம் அழகு…