சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்
Tag: நீல பத்மநாபன்
Two poems
தலைமுறைகள் தாண்டிய பாட்டு பூவுடன் இணைந்த மணம் போல் அழகுடன் கமழ்ந்த திறனால் களபலியான தங்கம்மையே தாயம்மையே அந்தப்புரம் அழைத்து அறநெறி தவறிய கொற்றவனின் கொடும் நீதியில் குமுறிக் கொந்தளித்து பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை உயிருடன் கரைத்துவிட்டு மலையும் மடுவும் தாண்டி நதியும் கரையும் கடந்து தெற்குத் தெற்கொரு தேசமாம் பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை இரணியல் வந்து எங்களுடன் பயணித்த சிங்க விநாயகரையும் அவர் பார்வையிலேயே ஒடுப்பறையில் நாகரம்மனையும் நாகரம்மன் சன்னிதியில் தங்கம்மை தாயம்மை உம்மிருவரையும் குடிவைத்தோம் கும்பிட்டோம தலைமுறை தலைமுறைதாண்டிவந்து பகைமறந்து மன்னித்து பாரிடமெங்கணும் மாதர்குல நீதிகள் செழித்தோங்கிட பொங்கலிட்டோம் குரவையிட்டோம் வாழ்த்துறோம் வணங்குறோம
காமிரா கண்
முதுமையிலும் இனிமை காண உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும் வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல் இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு வாழ முயன்றுகொண்டிருக்கையில் குறிப்பிட்ட கோணங்களில் அடிக்கடி படமெடுத்து பத்திரிகைகளில் போட்டு படுகிழமென்று பகிரங்கப்படுத்தும் காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது நன்றியா எதிர்ச்சொல்லா
மூன்று கவிதைகள்
விஜய தசமி சென்ற விஜயதசமி
கடல் கடந்த
சீதள பூமியில்
இன்று இங்கே
சொந்த வீட்டில்
பூஜையறையில்
யாருமில்லாத
தந்நதனிமை
முன்னால்
வாக்தேவதை
நீ
சுற்றி ஏனைய
தேவதைகள் தேவர்கள்
வெளியில் வீதியில்
வாகனங்களின் சந்தடியில்
உள்ளே மனப்பாதையில்
வாழ்வின் கசப்புக்களில்
வழுதிச்செல்லும் மனதை
பிடித்திழுத்து
உன் பாதசரணத்தில்
உன் வீணைநாதத்தில்
கரைத்திடும்
விடாமுயற்சி
வெற்றிபெற
பெயரினை நீக்கிய பிறகும்
செத்தபின் சிவலோகம் வைகுண்டம்
இல்லை நரகமோ போவது இருக்கட்டும்
விட்டுவந்த வெறுங்கூண்டை
கண்ணாடிப்பேழைக்குள்
காட்சிப்பொருளாக்கி
ஊரூராய் இழுத்துவந்து
விழாவெடுப்பதும்
கட்டையில் வெந்தபின்னர்
கலையங்களிலாக்கி
இங்குமங்கும் இறைப்பதும்
பத்திரப்படுத்துவதும்
அங்கிங்கில்லானபடி
எங்குமே நிறைந்திடும்
ஆத்மாவின்
சாந்திக்கா இல்லை
ஹரி ஸ்ரீ கணபதாயே நமஹ
இன்னுமொரு விஜயதசமி
வாக் தேவதையே
உன் முன,
வாக்குகள் வந்தழுத்தி
திக்குமுக்காடித்திணறிப்
பரிதவித்த நாட்கள
பழங்கனவாய்
இன்று
வாக்குகள் வழுதிச்செல்லும்
சூன்யமான
வற்றிவரண்ட நெஞ்சமுடன்
வீற்றிருக்கிறேன்
எழுத்தாணி கையிலெடுத்து
உனை முன்நிறுத்தி
எண்ணும் எழுத்தும்
கற்பித்த
ஆதிநாளில்
ஆசான் மடியிலிருந்து
அவர் கைபிடித்து
புத்தரிசி பரப்பிய
தாம்பாளத்தில்
தங்கமோதிரத்தால்
கிறுக்கிய
அதே வரியை
கிறுக்குகிறேன்
ஓம் கணபதாயே நமஹ
2 கவிதைகள்
தாய்ப் பாசம்
புத்திர வாஞ்சை
அமிதமாகிவிட்டால்
கூனியின் சொல்தானா
தாரகை மந்திரம்
மூத்தவன்
அவதாரமாயினும்
வெறும்
சக்களத்தி மகன்
கொண்ட கணவன்
பார் புகழும்
நல்லரசனின்
மரணம் கூட
திரணமாய்
தோன்றிடுமோ
சீதாயணம்
மாயமான்களின்
கவர்ச்சி லீலைகளின்
பின்னால் செல்லும்
லௌகிக நெஞ்சங்கள்
கொண்டவன்
அவதாரபுருஷனாகலாம்
நாலும் தெரிந்த புருஷோத்தமனாகலாம்
இருந்தும்
‘மான் அன்று அது மாயமே’
என சோதரர்கள் வாக்குக்கு
‘இவ்வாறு இருத்தல் இயலாதோ’
என தன் சித்தத்தை
குளிர்விக்க
மாய மான்களின் வேட்டைக்கு
விரைந்து செல்ல
பதியைத் தூண்டிடும்
பத்தினிக் கோலங்கள்தான்
இன்றும்
மாய மான்களின்
கபட ஓலங்களின்
சூழ்ச்சிக்குறி அறியாது
வீண்பழிக்கு ஆளாக்கி
நலம்நாடிகளை விரட்டியடித்து
இலக்குவக் கோடுகளையும்
தாண்டி வந்து
யுத்தகாண்டத்திற்கு
வழிவகுக்கும்
கோமளாங்கிகள்