பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…30

சாபம்

வைதீஸ்வரன்

என்
காலடியில் ஒரு பூனை
கடவுளை வேண்டித்
தவம் இருக்கிறது
என் கை தவறி விழும்
இட்டிலிக்காக.

அதன்
தவத்தை உண்மை யாக்க
நான் குட்டிக் கடவுளாகி
இட்டிலியைத்
தவற விடுவேன்.
பல தடவை நான்
கோணங்கிக் கடவுளாகி
இட்டிலியை கைவிடாமல்
கட்டை விரல் காட்டுவேன்

பொறுமை வறண்ட பூனையின்
அரை வெள்ளைக் கண்களில்
ஒரு நரகம் தெரியும்
விரல் முனையால் சிறிது
பல் முளைக்கும்.

நள்ளிரவில்
இருள் அறுக்கும் ஓலம்
பூனைக் குரவளைக்குள்
ஓரெலியின் இரத்தம்
பீச்சி யடிக்கும்.

கனவுக்குள் நான்
எலியாகி இறந்த பின்பும்,
விழித்துப்
பதறிக் கொண்டிருப்பேன்.
ஏனென்று தெரியாமல்

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…….1

(பட்டியல்கள் தொடர்ச்சி……)

க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார்.

பட்டியல்கள் – இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து – பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது எந்தப் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்க அதிகாரம் படைத்த அமைப்பு எதிலும் அங்கத்தினர் இல்லை. சுத்த சாதாரணர். ஆனால் அவர் பட்டியல்களில் இடம் பெறுவதும் இடம் பெறாமல் போவதும் எழுதாளர்களுக்குள் மிகவும் பெருமை தருவதாகவும் மிகவும் அவமதிக்கப் படுவதாகவுமான விஷயமாகி விடுகிறது.

நகுலன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதன் வரிகள் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் கவிதை இந்த முறையில் இருந்தது.

யார் இந்த
க.நா.சு –
இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல
இலக்கணம் இவரை மீறியது
கவிதை இவருக்குக் கைவராத
கலை
சிறுகதை நாவலோ சுத்தமாகப்
பிரயோசனம் இல்லை
விமரிசனமோ – ஒழுங்காக
நான்கு வார்த்தை எழுதத் தெரியாது
மனுஷனுக்கு.
அது போகட்டும்
இவர் என் கதை பற்றி என்ன சொன்னார்?

இது ஏதோ ஒருவரைப் பாராட்டி, கெட்டிகாரத்தனமாக எழுதிய கவிதையாகத் தோன்றவில்லை. நிதர்சனமாகக் காணக் கிடைக்கும் உண்மைதான். இல்லாது போனால் க.நா.சு என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பது ஏன் இவ்வளவு தீவிரமான உணர்ச்சிகளைத் தமிழ் படைப்பிலக்கியத்தில் நேரடியாக, ஆத்மார்த்மாக ஈடுபடும் தொடர்பும் உள்ளவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்?

தமிழில் க.நா.சு பட்டியல்களை உபயோகப்படுத்தியதுபோல, தமிழுக்குப் பட்டியல்கள் தேவைப்படுவதுபோல, எல்லா மொழிகளுக்கும் பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தீர்மானமாகக் கூற முடியவில்லை. இலக்கிய வரலாறு என்று சிறிது விரிவாக எழுதப்படும்போதுதான் பட்டியல்களைக் காண முடிகிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியம் சிறிது காலம் தாழ்த்திய துவக்கம் கண்டதாலும், தமிழில் விமரிசனப் பூர்வமான கணிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஸ்திரமாக இன்னும் உருவாகாத காரணத்தாலும் பட்டியல்கள் அத்யாவசியமாக இருக்கின்றன. பொதுப்படையான இலக்கிய விமரிசகன் சூத்திரங்கள், அல்லது கூற்றுகள், தற்கால படைப்பிலக்கியத்தைப் பொறுத்த வரையில், வாசகர்களுக்கு ஏதோ வாயுப்படலமாகப் போய்விடுகின்றன. விமரிசனக் கூற்றுகள், சூத்திரங்களுக்குத் திட்டவட்டமாக, ஸ்தூலமாக உதாரணங்களைக் கூறியே விளக்கக் கொண்டிருக்கிறது. அப்போது பட்டியல்கள் தவிர்க்க முடியாததாகப் போய்விடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் க.நா.சு தரும் பட்டியல், அப்படியே நூற்றுக்கு நூறு பூர்ணமானது என்று கொள்ள முடியாது. அவர் பார்வைக்குக் கிடைத்தவரை அந்தப் பட்டியல் முழுமையானது என்றுதான் கொள்ள முடியும். இதிலும் கூட, மனித இயல்பில் கூடிய ஞாபக மறதி, கவனக்குறைவு செயல்பட்டுச் சில பெயர்கள், சில படைப்புகள் ஒரு குறிப்பிட்ட க.நா.சு விமரிசத்திலோ கட்டுரையிலோ விட்டுப் போய்விட இடமிருக்கிறது. இருந்தும் க.நா.சு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல கண்டுபிடிப்புகளைச் சாதித்திருக்கிறார். அவர் பார்வைக்குட்படுவது மற்ற தமிழ் விமரிசகர்கள், இலக்கிய அன்பர்களுக்குக் குறையாத வண்ணம் இருந்துவருகிறது. நாற்பதாண்டு காலமாக எழுதி மணிவிழா பெற்ற எழுத்தாளரின் சமீபத்திய படைப்பு பற்றியும் க.நா.சுவால் அபிப்பிராயம் கூற முடியும். ஓராண்டு காலமாக நடக்கும் ஒரு சிறு பத்திரிகையில் ஒரு கதை எழுதி அடி எடுத்து வைக்கும் இளைஞனின் சாத்தியக் கூறுகள் பற்றியும் க.நா.சுவால் கூற முடியும். இன்று தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான பெயர்களாக இரக்கும் ஜெயகாந்தன், மெளனி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன், ஷண்முகசுந்தரம், நகுலன், வே.மாலி, ஷண்முகசுப்பையா, சா கந்தசாமி இவர்கள் எல்லோரும் ஒருவிதத்தில் க.நா.சுவின் கண்டுபிடிப்புகளே.

(இன்னும் வரும்)

– அசோகமித்திரன்

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…..1




பட்டியல்கள்

இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘கைராலி ஸ்டடி சர்க்கிள்’ என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ”எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது?

இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்திலிருந்து திறனாய்வு மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சாகித்திய அகாடமி, தமிழ் வளர்ச்சிக் வரலாற்றுக் கழகம், இலக்கியச் சிந்தனை வநடி இவ்வமைப்புகளின் இலக்கியக் கோட்பாடுகள் மிகவும் உன்னதமானவையே. அதேபோல் விமரிசர்கள் ரகுநாதன், சி சு செல்லப்பா, எழில் முதல்வன்,. வெ.சாமிநாதன், டாக்டர் ந. சஞ்சீவி, தி.க.சி, டாக்டர் கைலாசபதி இவர்களின் அடிப்படை இலக்கியக் கொள்கைகளும் உன்னதமானவையே, எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் – இதிலெல்லாம் ஒரு குறையும் காண முடியாது.

அநேகமாக எல்லாருமே இந்த அடிப்படைக் கொள்கைகளைத்தான் அளவுகோலாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படிப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஏகோபித்ததாகத்தான் ஒரு குறிப்பிட்ட படைப்பைச் சிறந்ததென்றும் இன்னொன்றைச் சிறந்தது அல்ல என்றும் கூற வேண்டும்.

ஆனால் நடைமுறை அவ்வாறில்லை. ஒருவர் நல்ல படைப்பு என்று கூறியது மற்றொருவரால் மிகவும் இழிவானது என்று தள்ளிவிடப் படுகிறது. ஒருவர் ஒரு எழுத்தாளரைச் சிறந்த எழுத்தாளர் என்று தேர்ந்தெடுத்தால் அது .இன்னொருவருடைய தேர்வுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. ஆதலால் அரசியல் அல்லது சமூக அமைப்புகளின் பிரகடனங்கள் போல இலக்கிய விமரிகர்களின் அடிப்படைக் கொள்கைகளும், அளவுகோல்களும் உன்னதமாக இருந்தபோதிலும் அவை செயல்படுத்தப்படும் முறையில் அந்த அமைப்பு அல்லது அந்த விமரிகரின் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

இன்னும் பொதுப்படையான இலக்கிய நோக்குகளை, வெவ்வேறு காலங்களில் அறிஞர்கள் கூறிவிட்டுப்போன இலக்கணங்களை மட்டும் எடுத்துச் சொல்லி சர்ச்சை – கண்டனங்களுக்கு உட்படாமல் நல்ல பெயர் வாங்கிப் போகும் கட்டுரைகளையும், கூட்டங்களிலும் எதிர்காண முடிகிறது. ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த நோக்கங்கள், கொள்கைகளின் பொருத்தம், குறிப்பிட்ட படைப்புகள் – படைப்பாளிகளைப் பொறுக்கி எடுத்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இத் திசையில், தமிழ் இலக்கியத் துறையில், சுமார் முப்பதாண்டு காலமாக ஒருவர் பெயர் தனித்து நிற்கிறது. அது க.நா.சு.
தமிழிலக்கியம் நசித்துக் கொண்டிருக்கிறது,
சிறுகதை இலக்கியம் தேங்கிவிட்டது என்று பல பெரியோர்கள் அடித்துக் கூறும் இந்த ஆண்டிலும் பெயர் சொல்லிக் குறிப்பிடக்கூடிய முப்பது நாற்பது எழுத்தாளர்கள் போல, க நா சுவும் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அவர் தமிழில் எழுத முன் வந்தபோது தன் வரையில் சுய விமரிசனம் செய்து கொண்டு, தன் படைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற ஒற்றைத் தட நோக்கத்துடன் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

க.நா.சு நன்றாகவே எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய படைப்பிலக்கிய எழுத்து ஒரு சீரான தகுதி படைத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் தனக்குக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்து வருவது மிக உயர்ந்த இலக்கியமாகவே இருந்து வருகிறது. அவர் பல மொழி பெரய்ப்புகளும் செய்திருக்கிறார். அவர் மொழிப்பெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அவருடைய ஆராய்ந்துணரும் ஆற்றலுக்குச் சான்றாக இருக்கின்றன.

அவர் படைப்பிலக்கியம் படைப்பதில் மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை கவனம் செலுத்தியிருந்தால் பொது ஜனப் பார்வையில் அவருடைய உருவம் இன்றுள்ளது போலப் பலவிதப் பிரதிவாத கோப, தாப, விரோத உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பதாக இருந்திருக்காது. வாதப் பிரதிவாத சர்ச்சைகளில் உட்படுத்தப்படாமல் இருப்பதில் நன்மை உண்டா இல்லையோ, செளகரியங்கள் பல உண்டு. ஆனால் க.நா.சு செளகரியங்களை நாடிச் சென்றதாகத் தெரியவில்லை. சர்ச்சைகளை, சர்ச்சைகள் மூலமாகப் பலரின் ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளைத்தான் நாடிச் சென்றிருக்கிறார். நாடிச் சென்றிருக்கிறார் என்று கூறுவதுகூடத் தவறாக இருக்கலாம். அவருடைய இயல்பு, அவருடைய இலக்கிய உணர்வு, அவருடைய விமரிசனங்கள் காரணமாக அவரைச் சர்ச்சைகளிடத்தில்தான் அழைத்துச் சென்றது.

க.நா.சு தன் தேர்வுகளுக்கு, அவர் பொறுக்கி எடுத்த படைப்புகளுக்கு, அவை சிறந்தது, சிறந்ததல்ல என்று தான் நிர்ணயித்ததற்குக் காரணம் கூறாமல் இருந்ததில்லை. காரணங்கள் கூறுவதைப் பல வகைகளில் செய்யலாம். வெகு எளிதாக, படிப்போரும் உணராவண்ணம் அவர்களுடைய உணர்ச்சிகளை லேசாகத் தூண்டித் தான் கூறுவதே சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் செய்யலாம். இது பிரசாரகர்களின் வழி. ஆனால் க.நா.சு விஞ்ஞான விளக்கங்களுக்குரிய மொழியில்தான் அவருடைய விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.

ஓரிலக்கியப் படைப்பு பல அம்சங்கள் கொண்டதாயிருப்பினும் அது வெற்றிகரமானதாக, அதை முழுமையாகப் பார்க்கும்போது அந்த உணர்வைத் தர வேண்டும். ஒரு கைகலப்பில் வெற்றி அடைந்து விட்டு, யுத்தத்தில் தோற்றுப் போவதற்குச் சமமாகும் ஒரு படைப்பு அதன் முழுமையில் வெற்றிகரமாக அமையாதது.
(இன்னும் வரும்)
-அசோகமித்திரன்

பூனைகள்…….பூனைகள்………பூனைகள்……29


தந்தைமை

என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்

-என்.விநாயக முருகன்

குட்டிக்கதைகள்

ஏழு பேர்
ஆர். ராஜகோபாலன்
அங்கே மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டு஧மை அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது.
இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது. கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான்.
அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது. ஒரு அயலானின் பார்வையுடனேயும் கலைக் கண்களுடனேயும் தான் அதை கண்டு களிப்பதாக நினைத்துக் கொண்டான்.
அவர்கள் இப்போது இவனுக்கு எதிரில் சாலையோரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த கை வண்டியிடம் நெருங்கி வந்தார்கள். அதே சிறுவனுக்கு மறுபடியும் மாலை போட்டுக் குதித்துக் குதித்துக் கூச்சல் போட்டார்கள். சட்டை போடாமல் பரட்டைத் தலையுடனிருந்த அந்தச் சிறுவன் கைகளைக் கூப்பி மிகுந்த கம்பீரத்துடன் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைத்துக் கொண்டிருந்தான். கைவண்டியை இவனுக்கு மிக அருகில் கொண்டு வந்து ”வாழ்க வாழ்க” என்று அவர்கள் கோஷம் செய்தார்கள்.
இவனுக்கு திடீரென்று தானும் அவர்களில் ஒருவனாகிவிட்டதைப் போலவும் தானும் ஒருவனாகிவிட்டதைப் போலவும் தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும் ஒருவித பயம் ஏற்பட்டது. உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு தான் ஒரு பி எஸ் ஸி என்பதையும் அன்று தான் லாண்டரிலிருந்து வாங்கிவந்த வேஷ்டியையும் பனியனையும் போட்டுக்கொண்டிருப்பதையும் நினைத்துக் கொண்டான். எழுந்து நின்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ”போங்கடா போங்க” என்று கைகளை ஆட்டி சத்தம் செய்தான்.
இப்போது மாலையுடனிருந்த பையன் மாலையை எடுத்து இவன் மேல் படும்படியாக வீசிப் போட்டான். இவன் நகர்ந்து நின்று கொண்டு மிகுந்த கோபத்துடனும் அருவருப்புடனும் மாலையைக் கையில் எடுத்தபோது அவர்களில் பெரியவனாக இருந்த பையன், ”சாவு மாலை”, ”சாவு மாலை” என்று கத்தினான். எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு ”வாழ்க” என்பதற்குப் பதில் இப்போது ”ஒழிக ஒழிக” என்று பெருங் கூச்சல் எழுப்பினார்கள். வாயில் விரலைப் போட்டுக்கொண்டிருந்த குழந்தை தலையைத் தூக்கி ஒரு நிமிடம் இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொண்டது.
”சாவு மாலையென்றால் நீங்களேனடா கொடுத்தீர்கள்?” என்று அவர்களுக்கு மேல் கத்தவேண்டும் போல் இவனுக்குத் தோன்றியது..திடீரென்று தன்னுடைய நிலையிலிருந்து கீழே விழுந்து விட்டதைப் போன்று உணர்ந்தான்.. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று மிகுந்த வெட்கத்துடன் தலையை லேசாகித் தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் இல்லை.
சிறுவர்கள் கைவண்டியை விட்டு விட்டு சிறிது தூரத்தில் நின்றுகொண்டு இன்னும் பெரியதாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுபோல் இவனும் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்ததும் அவர்கள் தொடர்ந்து சநத்தம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று முகமெல்லாம் வேர்ப்பதைப் போலவும் உணர்ந்தான். ஏதோ ஒரு முக்கியமான வேலையை மறந்து விட்டிருந்தது இப்போதுதான் ஞாபகம் வந்ததைப் போல் வீட்டிற்குள் ஓடினான். அன்றுதான் இவன் நீண்ட நேரம் இடைவிடாது ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். சமீப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகள் மிகுந்த முன்னேற்றத்தை அடைந்திருப்பதாயும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதாயும் கூட இவனுக்கு அன்று தோன்றியது. (கசடதபற / நவம்பர் 1971)

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…28


பூனையின் பிடிவாதம்

எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.

குமரி எஸ். நீலகண்டன்

குட்டிக்கதைகள்

புதிய ஒளி
புதுமைப்பித்தன்

அன்று இரவெல்லாம் நல்ல மழை.
காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன.
இரவு பூராவும் “ஹோ ஹோ” என்று ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்திவீச்சு மின்னல்கள். சட சடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின.
மழை நின்றது.
காற்று ஓய்ந்தது.
சொட்டு சொட்டென்று நீர்த்துளிகள்.
வீட்டு வெளிச்சத்தில் ஒளிபெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் துண்டமாக மறைந்தன.
வீட்டிலே நிசப்தம்….
இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழப்பு வந்தது.
அந்த நிசப்தம்; அந்த மௌனம். என் மனத்திலே என்னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தளர்ந்து மறையும் எண்ணக் குவியல்கள்.
திடீரென்று…
தூளியிலிருந்து குழந்தை…என் குழந்தை..
“அம்பி அம்பி குச்சியை எடுத்துண்டு வா…சீமா எடுத்துண்டு வா..” வீறிட்டு அழுகை.
“என்னடா கண்ணே…அழாதே…” என்று என் மனைவி எழுந்தாள்.
“அம்பி இந்தக் குச்சிதான் ராஜாவாம்…..சாமிடா…நீ கொட்டு அடி. நான் கும்படறேன்..நான்தான் கும்பிடுவேன்..” ஒரே அழுகை.
நான் படுக்கையைவிட்டு எழுந்திருந்தேன்..ஜன்னலருகில் சென்று நின்றேன்…
சிதறிய கருமேகங்களிடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.
உள்ளே நிசப்தம்.
தாயின் மந்திரம்தான்
குழந்தை எந்தக் கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழந்து தூங்கினான்.
தாய்….அவளுக்கு என்ன கனவோ
என்ன கனவு..என்ன ஆதரவு…அந்தத் தூக்கத்தின் புன்சிரிப்பு.
குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு.
தாயின் ஆதரங்களிலே கனிவு, ஆதரவிலே அவற்றின் கனியான சிரிப்பு…
என் மனதில் சாந்தி.
அன்று விடியற்காலம். கீழ்த்திசையில் தாயின் ஆதரவு. குழந்தையின் கனவு – இரண்டும் கலந்த வான் ஒளி.
என் மனதில் ஒரு குதூகலம்.
எனக்கு முன் என் குழந்தையின் மழலை…..
பூவரச மரத்தடியிலே….”இந்தக் குச்சுதாண்டாசாமி….நான்தான் கும்பிடுவேன்….”

குட்டிக்கதைகள்

இரகசிய வேதனை
அசோகமித்திரன்
இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் அவன் சங்கடம் தீரவில்லை. முதன்முறை அவன் போகும் இடத்திற்கு 1.75 என்று நிர்ணயத்திருந்தது. கால் ரூபாய் நாணயம் அவனிடம் இருக்காது. இரண்டு ரூபாயாகக் கொடுத்தால் பல நேரங்களில் பாக்கிச் சில்லறை வராது. சில நேரங்களில் வருவது பொதுப் பழக்கத்திலிருந்து மறைந்திட்டட இருபது காசு நாணயமாக இருக்கும். நாட்டில் உள்ள இருபது காசு நாணயங்களெல்லாம் பஸ் கண்டக்டர்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
இரண்டாம் முறை மாற்றப்பட்ட கட்டணம் 1.25. கால் ரூபாய் சில்லறை இல்லையென்றால் பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். எவ்வளவு கால் நாணயங்களைச் சேர்த்து வைக்க முடியும்? இன்று ஒரு கால் ரூபாய் நாணயமும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தடவைகளில் கால் ரூபாய்க்காக கண்டக்டர்கள் கொடுத்த இருபது காசு நாணயங்கள் இருந்தன. ஒரு முறை, ஒரே ஒரு முறை, அவர் கொடுக்கும் இருபது காசை அவர்கள் கால் ரூபாயாக ஏற்றுக்கொள்ளக் கூடாதா?
பஸ்ஸில் பயணம் செய்வதே ஏதோ பிச்சைக்குப் போய் நிற்பது போலச் செய்து விட்டார்கள் கண்டக்டர்களும் டிரைவர்களும். பெரிய பஸ் நிலையங்களில் அந்தக் கேவலத்தைச் சொல்லி முடியாது. எல்லாரும் ஒரு பஸ்ஸில் ஏறி வியர்த்து விருவிருக்கக் காத்திருந்தால் வேறொரு பஸ் காலியாகக் கிளம்பிப் போகும். அப்படியே நிறுத்தி ஏற்றிக்கொண்டால் கால் வைக்க முடியாத குப்பை அல்லது சேறருகே பஸ் நிற்கும். குண்டுப் பெண்மணிகள் பையுடனும் குழந்தைகளுடனும் ஓடி வரும் காட்சி நரகத்தை நம்பாதவர்களையும் நம்ப வைக்கும். கையிலிருக்கும் ஒரு பெட்டியை அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சண்யமாக இறக்கி விடுவார்கள். அல்லது ஏற்றவே மாட்டார்கள். இதெல்லாம் அவனை வாட்டி வதைக்க அவன் இம்முறை ஒரு ரூபாயையும் ஒரு இருபது காசு நாணயத்தையும் கண்டக்டரிடம் நீட்டினான். கண்டக்டர் அதை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சீட்டு கிழித்துக் கொடுத்தான்

குட்டிக்கதைகள்

நவீன விருட்சம் 40வது இதழில் (ஜூலை 1998) இப்படி எழுதியிருந்தேன் : குட்டிக் கதைகள் மற்ற எல்லா அம்சங்களுடன் சேர்ந்து பிரசுரமாகும்போது, உரிய கவனத்தை கவர்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. சமீப காலமாக ஒரு வணிக இதழ் குட்டிக் கதைகள் என்ற பெயரில் பலவற்றைப் பிரசுரம் செய்தும் அவற்றுக்குச் சன்மானமும் அளித்துள்ளது. வணிக இதழ் சந்தையில் வெளியாகும் எதுவும் நாசமாகிவிடும் என்பதற்கு ‘குட்டிக் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தவை உதாரணம். மாறாக சிற்றேடுகள் உரிய கவனத்துடன் கதைகளைப் பிரசுரம் செய்துள்ளன.
‘குட்டிக்கதைகள்’ எப்படி இருக்க வேண்டுமென்று யோசிக்கும்போது, நீதியைச் சொல்லும் ஒன்றாக முடிந்து விடக்கூடாது என்ற காரணத்தால், பாரதியாரின் நீதிக் கதைகளை இதில் சேர்க்கவில்லை. அதேபோல் நடைச்சித்திரமான வார்ப்பில் குட்டிக் கதைகளை அடைத்துவிடக்கூடாது. சம்பவத்தின் ஆழம் மாத்திரம் போதும், சம்பவத்தின் விஸ்தீரணம் தேவையில்லை. கதை ஆரம்பிக்கும் அவசரத்துடன் முடிந்துவிட வேண்டும். திரும்பவும் படிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட வேண்டும். அரைப் பக்கத்திலிருந்து இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் வரை குட்டிக்கதைகளை எழுதி விடலாம்.
முழுவதும் குட்டிக்கதைகளால் 40வது இதழ் நிரம்பி உள்ளது. ஒரு சில படைப்பாளிகள் இதழுக்காக தந்த கதைகளுடன், சிற்றேடுகள்/புத்தகங்களிலிருந்தும் இன்னும் சில கதைகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
கண்ணாடிஅசோகமித்திரன்
ஈர்க்கில் பஞ்சைச் சுற்றி கிராம்புத் தைலத்தில் தோய்த்துப் பல் மீது தடவப் போனபோதுதான் தெரிந்தது, அது வெறும் தைலத்தில் போகக்கூடிய பல்வலியல்ல என்று. பல்லின் அடிப்பாகத்தில் கறுப்பாக ஒருவட்டம். அதேபோலப் பல்லின் பக்கவாட்டிலும் பெரிய கறுப்பு வட்டம். பல் சொத்தையாகத் தொடங்கி அடியிலிருந்து புரையோடி இப்போது பக்கங்களுக்கும் பரவியிருக்கிறது. பல் வைத்தியரிடம் போனால் பல் ஒரு சிறு இழப்புக்குத் தாங்காது. இந்த அளவு சொத்தை விழுவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டிருக்கும். மாதக் கணக்கில் கூட. ஆனால் இப்போதுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. தினம் ஒருமுறை தலைவாரிக்கொள்ள கண்ணாடி முன் நிற்கிறேனே, அப்போது முகத்தைப் பார்ப்பது கிடையாதோ? இல்லை என்று இப்போது தெரிகிறது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் பழக்கமே போய்விட்டது. எவ்வளவு பேர் சமயம் கிடைத்த போதெல்லாம் கண்ணாடி முன் நிற்கிறார்கள்? அவர்களுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். அதனால்தான் திரும்பத் திரும்பத் தலையை வாரிக்கொள்கிறார்கள். முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். பவுடர் போட்டுக் கொள்கிறார்கள். அவனுக்கு அவன் முகம் ஒரு பொருட்டாக இல்லாமல் போய்விட்டது. கூச்சம் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. அப்படியும் கூறுவதற்கில்லை. பல்லைக் காப்பாற்றியிருக்கும்.