நான்கு கவிதைகள்

அழைக்கும் பிம்பம்

தண்ணீரில்
தன் பிம்பம்

தழுவுதல்

தற்கொலையா

(ஆத்மாநாம் நினைவாக)

இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

விட்டுச்சென்றபின்

தத்தித் தத்தி
வல இட உள்ளங்கால்களால்
அழைத்து வந்த
கூழாங்கல்லை தாட்சண்யமின்றி
விட்டுச்சென்றதும்
திருப்பத்தில் மறையும் வரை
பார்த்திருந்தது
ரயில் மறையும் வரை
கையசைக்கும்
வழியனுப்ப வந்தவளைப்போல.

தலைப்பூ சூடாத கவிதா

புத்தரின் போதனைகள்
வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
எறும்பு.

வாசலில்
சொற்களின் யாசகம்
கவிதையில் இடம் கேட்டு
பார்க்காதது மாதிரி

கடந்துவிடுகிறேன்.

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல
உயர்த்த
முயல
எவ்வளவு குரூரம்
நாயாயிருக்கவே சும்மா விட்டது.

மாமரக்கிளையில்
அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி
கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க
எப்போது பார்க்கலாம் என்றதற்கு
தெரியாதென தலையசைத்து பறந்தது.

விழி எழு
கழி போ வா

வாழ்வெனும் புனைவு பழகு
புணர் வளர்
பொருளற்ற பொருளீட்டு
மாண்டுபோ