“என்னடா?”அப்பா இவனைப்பார்க்க புன்னகையுடன் திரும்பினார்.
“என்னப்பா….”
“பொண்ணு லெட்சணமா இருக்கா.”
“அம்மாவைப் போல…”
“குணம்தான் எப்படி…அதுவும் அம்மா மாதிரியா, தெரியல…”என்றார் குறும்பாக.
“என் கதை இப்ப எதுக்கு, கெடக்கறதெல்லாங் கெடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணைல வையின்னாப்போல…”என்று அம்மா இடைவெட்டினாள். என்றாலும் அப்பா அம்மாவின் பேச்சுபாவனையில் இருந்தே அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் திருப்தி என்று சுதாகரனுக்குப் புரிந்தது.
“ஏண்டா? உனக்குப் பிடிக்கலியா?”என்று அம்மா அவனிடம் கேட்டாள்.
“அம்மாமாதிரின்னு நான் சொன்னேன்…”என்றான் சுதாகரன். “எனக்கு எங்கம்மாவை ரொம்பப் பிடிக்குமே.”
“நல்லவேளை, நீ அப்பாமாதிரி இல்லை…”என்றாள் அம்மா.
“எனக்கும் எங்கம்மாவைப் பிடிக்கும்!”
“எங்க வந்தாலும் இவர் பஞ்சாயத்தை ஆரம்பிச்சிர்றார்றா…”
என்று அம்மா முகம் திருப்பிக் கொண்டாள்.
ஓடும் நதியில் மழைத்துளி விழுந்தாப்போல அவ்வப்போது இப்படி அவர்களுக்குள் ஊடல் நிகழும். ஊடுதல் காமத்துக்கு கூடுதல், üகூடுதல் இன்பம்’. செக்சில் பத்தியம் இல்லாத தாம்பத்தியம் அவர்களுடையது. காதுப்பக்கங்களில் அப்பாவின் கிருதா முடிகள் நரைத்திருக்கு. கேசப்பிரிகள் அடர்த்தி குறைந்து கம்பிகம்பியாய் புதராட்டம் காணும். அதுவே தனி எடுப்பாய் இருக்கும். அப்பாவோ அம்மாவோ இன்றுவரை தலைச்சாயம் என்றோ, புற அழகு சாதனங்களின் துணையையோ தஞ்சம் நாடவில்லை.
“என்னடா? இந்தப் பெண்ணுக்கு என்ன குறைச்சல்? அழகா இருக்கா…”என்றாள் அம்மா.
“இல்ல, அதான் பிரச்சனை. ரொம்ப அழகா இருக்கறதா அவளுக்கே பாவனை… அந்தப் புன்னகையில் ஒரு அதிகாரம் தெரியறாப்ல இருக்கேம்மா…”
“அட அது அந்தவயசின் அடையாளம் தானே? இப்பதான் பறிச்ச பூவின் மலர்ச்சி, அல்லது கொண்டை விரைத்த ஒரு மயிலின் கழுத்து நிமிர்த்திய ஒயில்னு சொல்லிக்கலாம்…ஒரு குழந்தைன்னு ஆயிட்டா அதும் முகத்தைப் பார்க்கற கிறுகிறுப்புல இதெல்லாம் அலையடங்கிரும்..”என்றபடியே அப்பா பக்கம் பார்த்தாள். “உடனே என்னைப் பத்தி இவருக்கு ஏதோ சொல்ல வாய் துறுதுறுத்தாச்சு. கேன் யூ ஜஸ்ட் ஸ்டாப் இட்?”
“ஃபுல் ஸ்டாப்”என்றார் அப்பா. “நாங்க ரெண்டுபேரும் ஸ்டேஷன் மாஸ்டரும், கார்டும் மாதிரி….பச்சைக்கொடி காட்டிட்டம். நீதான் இன்ஜின் டிரைவர். வண்டியைக் கிளப்பறது உன் முடிவுதான்.
தூரத்தில் இருந்து சந்திரிக்காவின் பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும், எங்க பெண்ணைக்கூட பிடிக்காமல் ஆகுமா, என அவர்களுக்கு முகத்தில் பெருமிதம். நிஜமாகவே சந்திரிகா அன்றைக்கு அத்தனை லெட்சணமாய் இருந்தாள். டிசைனர் புடவையும், பின்னலைச் சேர்த்த வெண்முத்து நட்சத்திர அலங்காரமுமாய் இருந்தாள். இதெல்லாம் எங்கே கற்றுக்கொண்டாள் தெரியவில்லை. அழகான பெண்கள் தங்கள் அழகுபாவனையை மெருகேற்றிக் கொள்ளும் வித்தகம் தெரிந்துகொண்டு விடுகிறார்கள். அட கண்ணுக்கு மைதீட்டினாலே ஒரு பெண்ணின் அழகு எங்கேயோ உச்சாணிக்கிளையில் போய் உட்கார்ந்து கொள்கிறது…
எத்தனையோ இடங்கள் வந்தன. புகைப்படங்கள் பார்த்துவிட்டு நிறைய இடங்களை அவள் மறுத்துவிட்டாள்.பெண்பார்த்தல் என்று சம்பிரதாய அளவில் முன்னேறினாலே, அதுவே கல்யாணத்தை நோக்கி வழிநடத்துவதாக இருக்க வேண்டும் என அவள் அபிப்ராயப் பட்டாள். கல்யாணம் என்பது சந்தை வியாபாரம் அல்ல. அது ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கான தேர்வு அல்லவா?…
பெரிய அரசுவங்கியின் ஏ.ஜி.எம்.மின் பிள்ளை. பேர். சுதாகரன். நல்ல தன்மையான மனிதர்கள் அவர்கள். பையன் தங்கக் கம்பி. 24 காரட். குழந்தைநல மருத்துவன். காலை மாலை அவன் கிளினிக்கில் பெரும் பட்டாளம் காத்திருக்கிறது. நல்ல கைராசி, முகராசி, அவர்களுக்கு ஒரே பிள்ளை…என்றெல்லாம் விவரங்கள் தாங்கி, புகைப்படமும் கிடைத்தது.
மிகுந்த எளிமையுடன் வெண்முத்துப் பற்கள் திறந்து, வஞ்சகமில்லாத புன்னகையைச் சிந்தியபடி, அம்மா அப்பாவைத் தோளணைத்தபடி நிற்கிறாள் இந்திர சந்திர சுதாகரன்.
“என்னடி?”என்று கேட்டாள் அம்மா.
“நம்ம படத்தையும் அவங்களுக்கு அனுப்பி வைக்கலாம்மா…”என்றாள் சந்திரிகா.
“அதை கொஞ்சம் சிரிச்சிட்டே சொல்லப்படாதா?”
“ஈ”என்று காட்டினாள். “பல் எல்லாம் சரியா இருக்கா, எண்ணிக்கோ அம்மா…”
“உன்னை அடக்க ஜல்லிக்கட்டுலதான் ஆள் பிடிக்கணும்,”என்றாள் அம்மா.
தன் அறைக்குள் போய் முகம் கழுவிக்கொண்டதும், திரும்ப அந்தப் புகைப்பட முகம் அவள் நினைவில் வந்தது. இன்னுங் கொஞ்சம் தீர்க்கமாகப் பார்த்திருக்கலாமாய் இருந்தது இப்போது. மீசை இருந்ததா இல்லையா? ம்ஹீம், இல்லை. மழுமழு தினசரி ஷேவ் முகம்…அப்படி முகங்களை பிளேடு விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள். அவன் நடந்துவரும்போது எதிரில்வரும் பெண் அவனைநிறுத்தி கன்னத்தில் கன்னத்தில் மழுமழுவை வருடிப் பார்ப்பாள். திடுதிப்பென்று அந்நிய ஆம்பளை கன்னத்தை வருட அவளுக்கு எப்படி மனசு வந்தது? என்னவேலையாய்ப் போய்க்கொண்டிருந்தாள்? போன காரியத்தை முடித்தாளா?…விளம்பரங்களில் பல் தேய்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தலையை உதறி நிகழ்காலத்துக்கு வந்தாள். சுதாகரன் எம்.டி. குழந்தை நலம். ஏய்.எம்.டி. என் குழந்தையை, அல்லது குழந்தைகளை, சமத்தா பாத்துக்குவியா? என்ன எளிமையான முகம். வாழ்க்கையின் கரடு முரடுகளை சந்தித்திராதவன் போலிருந்ததது. தினசரி ஷேவ் என்றால் கன்னத்தின் கரடு முரடே தெரியாதவன்1
அடியே, நீ மாத்திரம் எல்லா இடர் இக்கட்டுகளிலும் உருண்டு புரண்டு எழுந்து வந்திருக்கிறாயாக்கும், என் மனசு கேள்விபோட்டது என்றாலும் நாங்கள் பெண்கள். இயற்கைதந்த சூட்சமங்கள் எங்களுக்கு ஒரு சிட்டிகை அதிகம். எல்லாவற்றிலிருந்தும் ஒரடி தள்ளிநின்று ஒரு நோட்டம் பார்க்கிறது பெண்மை. கவனப்படுகிறது. உன்னிக்கிறது. அதற்கு பழக்கப்படுத்தப்பட்டு, அப்படியே வளர்க்கப் பட்டிருக்கிறது பெண்மை.
டாக்டர் படிப்புக்கு என்று ஆசைப்பட்டு நாலு வருடம் எம்.பி.பி.எஸ்., பிறகு ஹவுஸ் சர்ஜன் ஒரு வருஷம், அப்படியே எம்.டி. படிக்கவுமாய் காலம் அவனை உருட்டிப் போயிருந்தது. படித்து வெளியேவந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் ரெண்டுவருஷம் பயிற்சிக்காக வேலைபார்த்து தனியே üகுழந்தை மருத்துவர்’ என்று கிளினிக் வைத்து, பெயர்ப்பலகை மாட்டியபோது, சுதாகரனுக்கு வயது 28.
சாக்லேட்டுடன் குழந்தைகளை வரவேற்று பரிசோதிக்கும் சுதாகரனை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பிடித்திருந்தது.
“கன்சல்டிங் ஃபீஸ் போக மீதி சில்லரை இல்லேன்னா, சாக்லேட் குடுப்பீங்களோன்னு நினைச்சேன்….”என்றபடியே ஒரு பையன் சாக்லேட்டை வாங்கிக் கொண்டான்.
குழந்தைகளுடன் கலகலப்பாகப் பேசுவான் அவன். கைவசம் அதற்காகவே நிறைய நகைச்சுவைத் துணுக்குகள் வைத்திருந்தான்.
-ஏ பி சி டி ஈ எஃப்னு சொல்லிட்டே மாடிப்படிலேர்ந்து இறங்கிவந்த குழந்தை கீழ விழுந்திட்டது….
-அப்புறம் என்னாச்சி?
-ஜி ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.
பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான். கண்ணைக் கட்டிப்போடுவதான, மூச்சுத் திணறுவதான அழகு அது. அலங்காரத்திலும், உடையுடுத்துதலிலும் ஒரு சிறப்பு கவனம் தெரிந்தது. காமெராவைப் பார்த்த பாவனையில் ஒரு திட்டமிடல் கூட தெரிந்தாப் போலிருந்தது. மனசின் தெறிப்பை அடக்கினான். எனக்கு எத்தனை பெண்களைத் தெரியும்…ஒருவேளை எல்லா பெண்களுமே இப்படி உள்கவனமானவர்கள்தானோ என்னமோ? கூடத்து ஆளுயரக் கண்ணாடி அம்மாவை எப்படி பரவசப் படுத்துகிறது. கண்ணாடி கண்டுபிடிக்கு முன் ஸ்திரீகள் எப்படி புழுங்கி வந்தார்களோ தெரியவில்லை.
மனைவிகளுக்கு ஓர் அதங்கம் உண்டு. அப்பல்லாம் என்னை அத்தனை அழகாக் காட்டும்…
“கண்ணாடி வயசாறதில்லையா இவளே…”என்று அப்பா கிண்டலடிக்கிறார்.
முதுகுப்பக்கம் இருந்து அம்மா “என்னடா படத்தை பாத்திட்டிருக்கே…நேர்ல போய்ப் பார்த்திறலாமா?”என்று கேட்கிறாள் புன்னகையுடன்.
“கொஞ்சம் பிரமைகளோட இருக்காளோன்று இருக்கேம்மா…”என்றான் யோசனையுடன்.
“அழகுன்ற நினைப்பு இல்லாத பெண்ணோ லோகத்தில் இல்லை. அவர்கள் படைப்பு உடல்சார்ந்த அளவில் கட்டமைப்பு கொண்டது தானே சுதா? அதன்படியான கனவுகள், ஆசைகள்….நீ சொல்றாப்போல, பிரமைகள்…இல்லாமல் எப்பிடி இருக்கும்?”
சுதாகரன் தலையாட்டினான்.
“எந்த உணர்விலும் அவர்கள் ஒருபடி தீவிரம் அதிகம்தான் காட்டுகிறார்கள்…பாசத்தில், கோபத்தில், தியாகத்தில்…இது சரியா தவறா, என்பது இல்லை. சரியாக அதை அவளும் கையாளணும். அவளைக் கைப்பிடித்தவனும் அதைப் புரிஞ்சிக்கிட்டு கையாளணும்னு தோணுது…”
“எனக்கு என்ன தோணுதுன்னா…”
“என்ன?”
“பேசாமல் பிரம்மச்சாரியாவே இருந்திர்லாமான்னு தோணுது…”
“இவதான் மேனகையா வந்து உன் தவத்தைக் கலைச்சிட்டாளே. நல்ல நாள் பார்க்கிறேன்…போயிப் பொண்ணைப் பார்த்திட்டு வருவம்”என்றாள் அம்மா.
ஆனால் நண்பர்கள் மத்தியில், நீ அதர்ஷ்டக்காரன்டா, இப்பிடி அப்சரஸô ஒரு பெண்டாட்டி அமைய குடுத்து வெச்சிருக்கணும், என்று கிறுகிறுப்பான வசனங்கள் வந்தன.
சுதாகரனுக்கு கூடப்பிறந்த அக்காவோ தங்கையோ கிடையாது. அவன் அக்காஸ்தானத்தில் பெரியம்மா பெண் தீபிகா. அவள் கணவனும் டாக்டர்தான். திருவான்மியூரில் இருக்கிறாள். எல்லாரையும் விட தீபிகா சொன்னதுதான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கிறாப் போலாச்சு.
“சுதா, எனக்கு உன்னைத் தெரியும். ரொம்ப அலட்டிக்கற ஆள் இல்லை நீ. எல்லாமே நல்லதுதான் நடக்கிறதாக உனக்கு ஒரு எளிமையான அப்ரோச் வெச்சிருக்கே இல்லியா?”என்றாள் தீபிகா.
“ஆமாங்க்கா…”என்றான் சுதாகரன்.
“பின்ன என்ன ? இவ விஷயத்தில் மாத்திரம் ஏன் இவ்வளவு யோசிக்கறே சொல்லு…”
அவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“கீப் ஸ்மைலிங். நோ இஃப்ஸ் அன்ட் பட்ஸ், ஆல் தி பெஸ்ட் சுதா”.
“இவன்தான் உன்னாண்ட மாட்டிக்கப்போற அப்பாவியா?”என்று பாவனா சந்திரிகாவிடமிருந்து அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள்.
“ம். வந்து குவிஞ்ச படங்கள்ல கிளி ஜோசியம் மாதிரி இதை உருவினால்….நாட் பேட்னு பட்டதுடி”என்றாள் சந்திரிகா.
“இவனா நாட் பேட். நீ வேணான்னா சொல்லு. நான் தூக்கி இடுப்புல வெச்சிக்கிறேன் இவனை…”
“அலையாதடி…”சந்திரிகா சிரிக்கிறாள்.
“மனசுலயே ஃபஸ்ட் நைட் முடிஞ்சாச்சா? எதுவரை வந்திருக்கே?”
“ஐய அதெல்லாம் ஒண்ணில்ல…”என்றபோது அவள் முகம் சிவந்துவிட்டது.
“இப்ப உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்…”என்று செல்ஃபோனை அவளைப்பார்க்க நீட்டினாள்.
“சும்மா இருடி, இனி பொண்ணு பார்க்க வந்து, அவனுக்கு என்னைப் பிடிச்சி…”
“அப்புறந்தான் ஃபஸ்ட் நைட்ன்றியா…அடாடாடா, இந்த அல்ட்டல்லாம் எங்ககிட்ட வேணாம் மகாராணி. உன்னைக்கூட ஒருத்தன் வேணான்னுருவானாக்கும்…”
அவள் பேச்சை மாற்ற விரும்பினாள். “வர்ற வெள்ளிக்கிழமை வர்றாங்கடி, நீயும் வரியா, மேக் அப் போட்டுவிட…”
“ஐயோ வேணாம். வர்றவன் என்னைப் பார்த்துட்டு உனக்குப் பதிலா என்னைப் பிடிச்சிருக்குன்னுறப் போறான்…”என்றுவிட்டு எழுந்துபோனாள் பாவனா.அவள் போனபின்பும் லேசாய் ஒரு அதிர்வு சந்திரிகாவிடம் இருந்தது. ஃபஸ்ட் நைட் வரை போயிட்டியா?…என்ன இப்பிடிக் கேட்டுவிட்டாள்.
சொன்ன நேரம் பிசகாமல் அவர்கள் காரில்வந்து இறங்கினார்கள். மாப்பிள்ளை தங்கக் கம்பியோ என்னவோ, மாமனார் தலையில் வெள்ளிக் கம்பியாய் இருந்தார்.
மலையாள பாணியில் நெற்றியில் கீற்றாய் சந்தனம் பூசியிருந்தான். ஜீன்ஸ் பேன்ட் இன் பண்ணி முழுக்கை சட்டை போட்டிருந்தான். காலை ஷேவ் செய்தது போதாதென்று கிளம்புமுன் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு வந்தாப் போலிருந்தது. விளம்பரங்களில் …ஷ் அதைப்பத்தி இப்ப என்ன…
இயல்பாகவே சந்தோஷமான ஆள் போலத் தெரிந்தது. புகைப்பழக்கம் இல்லாத உதட்டுச் சிவப்பு சாயம்பூசிய பிரமையைத் தந்தது. ச். அப்பா அம்மாவுடன் இல்லாமல், கூட அப்போது பாவனாச் சனியன் இருந்தாலும் தேவலாம், எதும் கேட்கலாம்…அந்நிய ஆடவனைப் பற்றி அப்பா அம்மாவிடமே பேசுவது என்னவோ போலிருந்தது அவளுக்கு. அடிகள்ளி, உனக்கு அவனிடம் இஷ்டந்தான். அதனால்தான் அந்த யோசனைகளே அலையடிப்புகளாக உன்னை மூச்சுமுட்ட அடிக்கின்றன…சட்டென தன் முகத்தில் செம்மை பரவுவதை உணர்ந்தாள். இதுதான் பெண்மை என்பதா, என்று அவளைப்பற்றி அவளுக்கே புதுசாய் இருந்தது. இரு ஃபோட்டோ எடுத்துக்கறேன், என செல்ஃபோனை நீட்டும் பாவனா. இருக்கட்டும், அவ கல்யாணத்தில் அவளை யார் விட்டா?
சற்று அலட்சியமாய் வளைய வந்தாலும், எல்லாப் பெண்ணுக்குமே ஆண்கள் சார்ந்து ஒரு கவனம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு ஆணின் அங்கிகாரம் என அதைச் சொல்லலாமா….
சற்று தள்ளிப்போய்ப் பேசிவிட்டு வந்தவர்கள், ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். “எங்களுக்கு சம்மதம், பெண்ணுக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டுருங்க…”என்றான் சுதாகரன். சட்டென்று ஒரு கூடை பூவை கவிழ்த்தாப்போல அவளுக்கு உடல் சிலிர்த்தது. குப்பென்று மல்லிகைக்காட்டின் மணம். வாழ்க்கையில் இப்படியெல்லாம் தருணங்கள், அதுவும் ஒரு ஆண்சார்ந்து வாய்க்கும் என்பதே தெரியாமல் இருந்ததே. உலக அழகி என்று கிரீடம் சூட்டியபோது, அந்தப் பெண்கள், சனியன் என்று பெரிதாய் அழுகிறார்கள் இதென்ன பைத்தியக்காரன். இதற்கு அழுவார்களா, என்றிருந்தது அவளுக்குஇப்போது அவளுக்கே கண் பனித்தது.
சந்திரிக்காவின் அம்மா கிட்டவந்து அவள்தோளைத் தொட்டாள். தலைநிமிர்த்தி புதுவெள்ளமாய் வளையவந்த பெண் இப்போது வழியடங்கி சலசலத்து ஓடுகிறாப் போலிருந்தது அவளுக்கு. மதுரை மீனாட்சி கொட்டமடித்துத் திரிந்தபோது, சுந்தரேஸ்வரரைப் பார்த்த கணம், மூணாவது தனம் கரைய பெண்மை உருக் கொண்டாளாமே. “சொல்லுடி…”என்றாள் காதருகே.
கனவில்போல சந்திரிகா தலையை நிமிர்த்தினாள்.
“என்னடி?”
“என்னம்மா?”
“சரின்னு சொல்லிறலாமா?”
“ம்”என தலையசைக்கிறபோது கழுத்தில் தலை நிற்கிறாப் போலவே தெரியவில்லை.
காதல் என்பது தன்னைக் கரைக்கிற விஷயம், என்பதே புதுசாய் இருந்தது. குதிரைப் பாய்ச்சலாய் ரத்தவோட்டம். தாயக்கட்ட சோழிகள் உள்ளே உருள்கின்றன. காலம் கணக்கு போடுகிறாப் போல. அடியே இதில் நீ செய்ய என்ன இருக்கிறது? காதல் ஓர் உணர்ச்சி நிலை. அதில் வெறுதே போக்குநீச்சல் அடிப்பது தவிர மனுசாளால் கூடுவதுதான் என்ன?
கல்யாண நாளுக்குக் காத்திருக்கிறாப் போலாச்சு. குழந்தையாய் இருந்தபோது எதைப்பார்த்தாலும் கேட்டாலும், புதுசாய் எதைக் கண்டாலும், ஆ அம்மா…என்று ஓடோடிப்போய்ச் சொன்ன காலங்கள் திரும்ப வந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். இது ரகசியங்கள் பூக்கிற வேளை. இவற்றைப் பகிர்ந்துகொள்ள பெண்ணுக்கு ஆணும் ஆணுக்குப் பெண்ணும் வேண்டியிருக்கிறது. மற்றவர்முன் இவை, ரகசியங்கள் கூட ஆகா. இதெல்லாம் ஒரு விஷயம் என்று கூட சபை ஏறாம்ல போகக் கூடும்.
மனக்கதவைத் திறந்து அறைகூசும் வெளிச்சத்துடன் வளைய வருகிறது காதல். ஒரு விடியலின் சாயம் பூசிக்கொண்ட கணங்கள்.
“அடேய் சுதாகரா, இந்தப் புடவை எனக்கு நல்லாருக்காடா?”என்று கேட்கத் துடித்த கணங்கள். என் அழகு உனக்காக. என் அலங்காரம் உனக்காக. என் சர்வமும் உனக்காக. என கர்வம் காலடிநிழலாய்ப் பதுங்கிய கணங்கள்.
ஆணைப் பெண்ணிடமும், பெண்ணை ஆணிடமும் காதல ஒப்படைத்து விடுகிறது.
மிஸ்டர் சுதாகரன் குழந்தை நலத்தில் எம்.டி என்றால் நான் அவனால் காதலில் பிஹெச்.டி. ஆயிருவேன் போலருக்கேடி.
அந்த சுதாகர் கடங்காரன் ஒருநாள் திடுதிப்பென்று அலுவலகத்தில் வந்து அவள் எதிரில் அமர்ந்தான். தலையை நிமிர்…
குப்பென்றாகி விட்டது. இவளது தடுமாற்றத்தைப் பார்த்தே பாவனா விஷயத்தை யூகித்துவிட்டாள். அவள் ஆள் சரியான லண்டி.
எழுந்து ஒப்பனை அறைக்குப் போனாள், கூடவே வீட்டு நாயாட்டம் இவள்…பாவனா.
“யார்றி, இவன்தான் உன்னைக் கட்டிக்கப்போற அந்த துரதிர்ஷ்டசாலியா?”என்று காதில் பாவனா.
“அந்தப் பாவி இவர்தான்.”
“பாவின்றே, ன் இல்ல ர் வருதே…ம் ஸ்மார்ட்டா இருக்கார். நான் முன்னாடி பார்த்திருந்தால், நானே வளைச்சிருப்பேன்.”
“உன் வளவளப்பை அப்பறம் வெச்சிக்கலாம். எப்பிடியும் வந்து உன்னாண்ட தனியா ராமாயணம் இருக்கு, எனக்குத் தெரியும், இப்ப நான் கிளம்பறேன்…”
“என்ன, இன்னிக்கு ரிகர்சல் இருக்கா?”
“ரிகர்சலா?…ச்சீ…”என்று உடல் சிலிர்த்தாள் சந்திரிகா. நடக்கவிட்டு காலில் குச்சியைக் கொடுத்து விழுத்தாட்டினாப் போலிருந்தது அவளுக்கு.
“ச்சீயாவது ஜாயாவது…என்னென்ன பிளான் வச்சிட்டு வந்திருக்கானோ? பசிச்சி வந்திருப்பான். கனவுலயே தலைகாணியைத் திங்கிற பருவம்டி இது….”
மேலே அவள்பேசக் காத்திருக்க நேரமில்லாதபடி வெளியே பரபரவென்று வந்தாள் சந்திரிகா.
மேனேஜரிடம் “என் வுட்பி வந்திருக்கார் சார். கொஞ்சம் வெளிய கிளம்பறேன்…”என்று அனுமதி கேட்கும் முன் உள்ளே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. நானே நானா யாரோ தானா, என உள்ளே வாணி ஜெயராம் பாடுகிறாள்.
வெளியே ஏற்கனவே உங்கவீட்ல தகவல் சொல்லிட்டுதான் உன்னைப் பார்க்க வந்தேன்…”என்றான் பரந்த புன்னகையுடன்.
பெரியவர்களை மதிக்கிற பிள்ளை. நான் இந்தத் தலைமுறை, என்கிற தலைவீக்கம் இல்லை அவனிடம் என்று கவனித்தாள். பெற்றவர்களும் நல்ல சுதந்திரத்துடனேதான் அவளை வளர்த்திருக்கிறார்கள், அதையும் சொல்ல வேண்டும்.
இங்க நிக்காதே, அங்க தங்காதே, காலாகாலத்ல, இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு வா…என்றெல்லாம் பொத்திப் பொதிந்து வளர்க்கப்படும் பெண்மை. அது பெரியவர்கள் காட்டும் அக்கறையின் கரிசனத்தின் வெளிப்பாடுதான். அதெல்லாம் இந்த சந்திப்பில், இந்த திகட்டல் கிட்டுமா என்ன?
“எதும் சாப்பிடறியா”?
“இல்ல, இப்பதான் ஆபிஸ்ல காஃபி சாப்பிட்டேன், உங்களுக்கு எதும் வேணுமா?”என்று இதமாய்க் கேட்டாள்.
“இல்ல, உனக்காகத்தான் கேட்டேன்…”என அவன் சொன்னது கிறுகிறுப்பாய் இருந்தது.
சட்டென ஒரு அந்நிய ஆடவனுடன் இத்தனை சகஜமாய்ப் பழகிவிட முடியுமா, என்று அவளுக்குத் திகைப்பு. நம்ப முடியாத கணங்களாய் அது இருந்தது. காதுக்குள் கோழிஇறகுக் குடைச்சல். ஒரு புதையல் காலில் தட்டினாப் போல என்ன இது, மணமும் உடலும் ஒருசேர அவனைச் சார்ந்து சரிகிறதாக கசிகிறதாக குவிகிறதாக ஒரு மயக்கம்.
ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே கடல்காற்று ஜிலுஜிலுவென்று வந்து தழுவியது. முந்தானைக் கொடியேற்றினாள். கடல் தண்ணீரை அலையாட்டல் போல காற்று அவளைச் சற்றே தாலாட்டியபோது, இயல்பாய் அவன் அவளை, அவள் கைகளைப் பற்றினான். விளம்பரங்களிலும், சினிமாவிலும் அந்தக் கட்டத்தில் உடனே இசைக் கூச்சல் கேட்கும். அல்லது யாராவது ஹம்மிங் தருவார்கள். அல்லது சுற்றிலும் பன்னிக்குட்டிகள் போல வதவதவென்று தேவதைச் சனியன்கள் சூழ்ந்துகொண்டு ஆடிப்பாடி கும்மாளமிடுவார்கள். வாஸ்தவத்தில் இது தனிமையின் நேரம் அல்லவா? அமைதியின் நேரம் அல்லவா? சப்தங்களுக்கு, கொண்டாட்டங்களுக்கு அங்கே என்ன வேலை?
இதமான அந்த ஸ்பரிச மொழி புது அனுபவமாய் இருந்தது.
“சந்திரிகா…”
“ம்”
“என்னைப் பிடிச்சிருக்கா?”என்று கேட்டான் தாபமாய்.
க்ளுக் என்று சிரித்தாள்.
“என்ன சந்திரிகா?”
“நீங்க உளர மாட்டீங்கன்னு நினைச்சேன்…”
“ஹா நானே அப்படித்தான் நினைச்சேன். இங்கே அறிவுக்கு வேலைதான் இல்லை. உளரல்கள் கொண்டாடப்படும் வேளை இது…”
“சார் கவிதை எழுதுவீங்களோ?’
‘”இனிமேல் எழுதக் கூடும்.”
“அல்லது குறையும்…”
“ஆ குறையவும் கூடும்”என்றான். “நான் என் கவிதையைக் கண்டடைந்தேன்.”
“இத்தனைநாளா எங்க இருந்தீரய்யா நீர்?”என்றாள் அதே தாப வியூகத்துடன்.
“மனசின் ஒத்திசைவு திருமண வாழ்க்கையின் அற்புதம்…”என்றான் சுதாகரன். “சரி. நாம் சற்று நிதானப்படலாம்…”
“வேண்டாம்”என்றாள் சந்திரிகா. “இந்தக் கணங்கள் பொய்யானவை அல்ல. அதிதமானவை என ஒத்துக்கொள்ளலாம் தான். அதனால் என்ன? அதிகம் என்பது கூட என்ன…வாழ்வின் வெண்ணெய்த் திரட்டு அல்லவா?”
“மேலே பார் நிலா, பகலின் வெண்ணெய் திரளல்….”என்றான் சுதாகரன். “எனக்குள் எதோ நிகழ்கிறது சந்திரிகா. நான் கவிஞனாகி வருகிறேன்…”
“சொற்கள் உம்மிடம் வலைபின்ன ஆரம்பித்து விட்டன.”
கடகடவென்று சிரிக்கிறான் சுதாகரன். “நாம சராசரியாப் பேசிக்கலாம்…காதல் பிரசாதம் வேணுமா?”
“என்ன அது?”
“சுண்டல்”என்கிறான் அவன்.
வழியில் ஆட்டோவை நிறுத்தி ரெண்டுமுழம் மல்லிகை வாங்கித் தந்திருந்தான். காற்று அவள் கூந்தலை அளைந்து ஒரு அடர்த்தியான வாசனையை அவன் முகத்தில் கொண்டுவந்து வீசி மோதியது. பேப்பர் போடும் பையன் தாளை வீசிச் சொல்கிறான் -.தலைப் பூ செய்திகள்….
“நாம் அதிதமானவர்கள் அல்ல. இது ஒரு இறுக்கந் தளர்ந்த நிலை, அவ்வளவுதான் சந்திரிகா…”என்கிறான் சுதாகரன். “நெரிசலான பேருந்துக்குள் புகுந்துகொண்ட பின் சற்று இறுக்கந் தளர்த்தி ஆசுவாசப் படுவது போல. காலத்தின், நியதிகளின் நெருக்கடிகளில் இருந்து மானுடத்துக்கு இத் தளர்வு தேவையே போலும்.”
“அறிவைத் தாண்டி இதயம் விழித்த கணங்களாக இவற்றைச் சொல்லலாமா?”என்கிறாள் அவள் கனவுச்சாயை விலகாமல்.
“அறிவு இதயத்துக்கு வழியொதுக்கி ஒதுங்கிக் கொண்ட கனங்கள்…”
“இவை நமக்கேயான கணங்கள், அல்லவா?”
“சரி, அந்த முகூர்த்த பவித்ரத்தில் நாம் நம்மைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளலாம் அல்லவா?”என்று கேட்டான் புன்னகை மாறாமல்.
“அதற்கென்ன..”
“உன்னைப் பற்றிச் சொல் சந்திரிகா.”
“அவை உண்மையல்லாமல் போகலாம்…நான் என்பது நான் அல்ல. பிறர் என்னைப்பற்றி என்ன கணிக்கிறார்களோ அது சரியாக இருக்கலாம்…அல்லவா?”என்றாள் குறும்புடன்.
“நீ நீயாக எப்படி உணர்கிறாயோ, அப்படி நான் உன்னை வைத்துக்கொள்ள முயல்வேன்…”
“என் தங்கமே”என்றாள் கண் விரிய. “ஐ லவ் யூ சுதா”
“மனதை விரித்துக் குடைபோலாக்கி என்னை அதனடியில் அழைக்கிறாய். நாம் இப்படியே நினைவுகளை இதமாய் அளைந்துகொள்ள ஆரம்பித்தால் எத்தனையோ முரண்களைக் களைந்து கொள்ளலாம் என நம்புகிறேன் சந்திரிகா. இப்போது ஒரு கேள்வி…”
“ம்”
“என்னை நேரில் பார்க்கும்முன், என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு…என்ன நினைத்தாயோ?”
“ஏன்?”
“ஏன் என்றால், என்னைப் பற்றி நான் நினைப்பதை விட மற்றவர் நினைப்பது சரியாக இருக்கும், என ஒரு மேதை சொல்லியிருக்கிறாள்….அவள் பேர் சந்திரிகா..”
“சரி. ரொம்ப வெகுளி. அப்பாவி..”
“ம். அவ்வகையில் ஏமாளியும் கூட…”
அவள் சிரித்தாள். “நீங்கள் சொல்லுங்கள்…என் படத்தைப் பார்த்தபோது…”
“சொல்லட்டுமா?”
“நீ அழகி. சரி. அழகு பிரமைகள் கொண்டவள்..”
“அழகி என்று ஒத்துக்கொள்ளும் பட்சம், அவை பிரமைகளாக ஏன் நினைக்க வேண்டும் நீங்கள்?”
“ஹா, என் பெண்ணே…உலகில் அழகற்றவர் இல்லை. அழகு பிரமைகள் நம்மை நாமே தனித்துப்போக தரித்துக்கொள்ளத் தூண்டுகின்றன.”
அவள் முகம் சற்று வாடியதை கவனித்து பதறிப்போனான்.
“சக மனிதரிடம் முதல் புன்னகை என் பழக்கம்..அவர் எனக்கு, என் குணநலன்களுக்கு ஒவ்வாதவர் என்று நானே பிரித்துக்கொள்வது கிடையாது. ஒருவரை எதிர்கொள்கையில் அவரது நல்ல குணங்களை முன்னிறுத்தி அவரை அணுகினால் என்ன, என்பது என் வழி.”
“சரி”என்றாள் அவள்.
“முன் கை நீண்டால் முழங்கை நீளும், என்பது பழமொழி.”
அவள் அவனைப் பார்த்தாள்.
“ஒருவனை அவனது நல்ல குணங்களோடு மரியாதையுடன் அணுகும்போது, அவன் என் நல்லம்சங்களை கணக்கில் கொள்ள முடிகிறது அல்லவா?”
“எல்லா சந்தர்ப்பங்களும் அப்படி அமையாது சுதாகரன்…”
“நீ பேச முன்வந்தது பிடித்திருக்கிறது சந்திரிகா…அமைய வேண்டிய தேவை இல்லை. எனக்கு உடனடி தீர்வு. வலி நிவாரணிகளில் நம்பிக்கை இல்லை. காத்திருப்பது அழகான விஷயம்தான்…”
“ம்”என்று தலையாட்டினாள் சந்திரிகா.
“எல்லா கணங்களையும் அடுத்த கணத்தோடு முடிச்சிட்டு சிக்கலாக்கிக் கொள்வது வேண்டாம் என நினைக்கிறேன்..”
“வேண்டாம்”என்றபடி அவனை அருகே அழைத்தாள். “இந்தக் கணங்கள் இதோ பத்திரமாக என்னுள் அழியாவரம் பெற்று அமர்ந்துவிடும்”என்றாள். சற்றுப் புன்னகையுடன் அவனது மழுமழு கன்னங்களை வருடித் தந்தாள்.