ஊழிக் காலம்


காய்ந்துபோன ஏரிகளில்காலம் தன்முகம் பார்த்துக் கொண்டதுசுருக்கங்களின்றிபருவம் பூரித்துச் செழித்த தன்முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றிபார்த்திருந்த வானத்திடம்தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்ஒருசேரக் கொடுத்தது எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்வழமைபோலவேகாற்றைச்சுட்டெரித்ததுஇருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்எதுவுமே செய்யாதவன் போலமுகம்துடைத்துப் போகிறேன் நான்உங்களைப் போலவே வெகு இயல்பாக –

இடர்மழை

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்
காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை
உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை
இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்
திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை
ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

தூறல் மழைக்காலம்

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்
மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை
அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்
தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்
நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

என்னை ஆளும் விலங்குகள்



எல்லாமாயும் எனக்குள்ளேஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்பூசி மெழுகும் சொற்களெதுவும்அவையிடத்திலில்லைசில மீன்களைப் போல அமைதியாயும்இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்சில நேரங்களில் மட்டும்எறும்பு, தேனி, கரையான்களைப் போலசுறுசுறுப்பாகுபவையுமுண்டு காலத்தைப் பயனுள்ளதாக நகர்த்திப் போவதாகப் பெருமை பேசிதிரும்பிப் பார்க்கையில் தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்கோபமுறுகையில் சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும் நன்றி மறப்பதில் பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்புன்னகைப்பது மட்டும் மனிதத்தை ஒத்திருக்கிறது

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…

பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட
விட்டுவந்த துணையை
குமிழிகள் செல்லும்
பரப்பெங்கிலும் தேடியது
எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க
காணும் யாரும் உணராவண்ணம்
மூடா விழிகளில் நீர் உகுத்து
அழகுக் கூரை கொண்ட
கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்
-,

நீ விட்டுச் சென்ற மழை

நீ விட்டுச் சென்ற மழை
எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்
அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை
செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி
எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ

நினைவின் கணங்கள்

பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான்
ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ வருகிறாய்
மேய்ச்சல் நிலத்திலிருந்த கணங்களனைத்தையும் உன்னிரு உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி கீழே சிதறட்டுமென விடுகிறாய் எல்லாம் பள்ளமென ஓடி நினைவுகளுக்குள் புதைகிறது
மீளவும் நினைவின் கணங்கள் மலையிறங்கக் காத்திருக்கின்றன

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

” அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பாஸ் ” என்றான்.

“கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?”

” அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பாஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பாஸ் ? “


எச்சம்

“அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை, எளியதுகளுக்குக் கொடுத்துடலாம்”.
வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.
குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.
பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம்தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.
வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள், முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.
கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து “என்னாச்சுப்பா?” என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.
உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.
இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான். குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.
குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.
அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.
அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.
அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எறிந்துகொண்டேயிருந்தன.
கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.
மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.
தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.
‘வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை’ என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.
அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது. தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.
அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட… தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.
குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.
வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.
குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள்? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.
கண் திறந்து பார்த்த அப்பாவிடம் “உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா?” எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.
“அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம்”
இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் ‘தூ’ எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.
மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.
“அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும்”
அப்பா சொல்வதைக் கேட்டவாறே,
“இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே…இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க?” என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.

கூழாங்கற் சினேகங்கள்

நீர்ச்சலனத்திற்கு ஏதுவான
ஒரு கூழாங்கல்லைப் போல
உருண்டு திரண்டு
பொலிவாகிவிட்டது இதயம்

திரவப்பரப்பினைத் தொட்டகலும்
நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம்
அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும்
நோக்குடன் நீ வருகிறாயென

நீர் மாறி, நிறம் மாறி
சிற்பமாகலாம் இவ்விதயம் – அன்றி
சிதறியும் போய்விடலாம்

உனக்கென்ன
ஏராளமான கூழாங்கற்கள் உன் பார்வைக்கு
சில்லுச் சில்லாய்ச் சிதறிப்போவது
மென்னிதயங்கள் மட்டும் தான்