இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..

 
இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

எட்டாவது நிறம்


ஏழு வர்ணப் பென்சில் கொண்டு
வரைந்து காட்டிய வானவில்லோடு
எட்டாவது நிறமாக
ஒட்டிக் கொள்கிறது
பாப்பாவின்
வளைந்த குட்டிப் புன்னகையொன்று

******

வெயில் மங்கும் எழுத்துக்கள்..


*
கண் மூடித் திறந்த ஒரு நொடியில்
இருள் வந்துவிட்டது
அடுத்த நொடியில் மீண்டது
பகலின் நிழலென பரவும் இரவின்
நிழலென பரவும் பகல்

வாசிக்க முடியாமல் மங்கும்
எழுத்துக்கள் மொத்தமும்
புத்தகத்திலிருந்து கொட்டுகிறது
நிழலை இரவை இழுத்துக் கொண்டு

பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில்
ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை
செடியின் காம்பில் ஊர்கிறது
எழுத்துக்களை சுமந்தபடி
எறும்புகள்

வெயில் பட்டுப் பட்டு
ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது
ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும்
வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

பிளாஸ்டிக் நதி



எந்தவொரு நதியின் மீதும்
புகார் சொல்வது
முடியாது என்றபடி அதன்
கழுத்தைத் திருகுகிறேன்
பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது
என்
தாகம்

*****
   

துண்டு நிழல்


*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****
  

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..



மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்

காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்

விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்

அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..

******
    

அவர்கள்..

*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை

ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு

ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு

ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு

கனவின் கூச்சல்களை
மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு

ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்

அதன் பிறகு
வரவேயில்லை..

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!