மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 60

அழகியசிங்கர்

 

வாழ்க்கைப் பிரச்சினை

 

தாமரை

 

அந்த மழைநாள் இரவை

எங்களால் மறக்கவே முடியவில்லை

கோடை மழையல்ல அது

கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்

கடைசித் தங்கையும்…

எனக்குதான் வயது அதகிம்

எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்

தெருவெல்லாம் ஆறாக நீர்…

மின்னலும் இடியுமாய்

வானத்திலே வன்ம யுத்தம்!

எதிர்சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்

மூழ்கிக் கொண்டிருந்தன

கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்…

உயிர்ப் பிரச்சினையும் வாழ்க்கைப்

பிரச்சினையுமாக

ஊரே ரெண்டுபட்டது

வேடிக்கை பார்த்த என்னை

எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை

üஉள்ளே வா அண்ணாý…

அந்த மழைநாள் இரவை

எங்களால் மறக்கவே முடியவில்லை

அன்றுதான் அப்பா

எங்களுடன் இருந்தார்

அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

நன்றி : ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் – தாமரை – கவிதைகள் – காந்தளகம், 834 அண்ணாசாலை, சென்னை 600 002 – தொலைபேசி : 8354505 – விலை : ரூ.25 – வெளியான இரண்டாம் பதிப்பு : 30.6.2000

ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்..

அழகியசிங்கர்
 
தி ஜானகிராமன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் கங்காஸ்நானம் என்ற கதை. 1956ஆம் ஆண்டு எழுதியது. இந்தக் கதையைப் படித்தபோது ஜானகிராமன் உயிரோடு இருந்தால் சில கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்தேன். துரோகம் செய்வதைப் பற்றி தி ஜானகிராமன் அதிகமாகக் கதைகள் எழுதியிருக்கிறார். இந்தக் கதையும் ஒரு துரோகத்தைப் பற்றிய கதைதான். ஆனால் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால், ஜானகிராமன் வேற மாதிரி எழுதியிருப்பார்.
 
பொதுவாக கடன் கொடுத்தவர்தான் பணத்தைத் திரும்ப வாங்க அல்லல்பட வேண்டும். பணத்தை வாங்கிக்கொண்டு போன பலருக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணம் வராது. அப்படியே திருப்பி தந்தாலும் கடன் வாங்கியதற்கான பணத்தைத் தருகிறோம் என்று எண்ண மாட்டார்கள். என்னமோ அவர்களோட பணத்தை விருப்பமில்லாமல் கொடுப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இப்போது வங்கியில் உள்ள பிரச்சினை இந்த வாரா கடன்தான்.
ஆனால் இந்தக் கதை 1956ஆம் ஆண்டு எழுதியிருப்பதால், சின்னசாமி என்பவரின் சகோதரி மரணம் அடையும் தறுவாயில் துரையப்பா என்பவரிடம் அவள் வாங்கிய கடனைத் திருப்பித் தர நினைக்கிறாள். அதற்காக அவளிடம் உள்ள நிலத்தை விற்கிறாள். அதன் மூலம் கிடைத்த வருவாயில் ரூ3000 வரை உள்ள கடனை அடைக்க உத்தரவிடுகிறாள்.
 
3000 ருபாய் போக மீதி உள்ள பணத்தில் சின்னசாமியையும், அவள் மனைவியையும் காசிக்குப் போகச் சொல்கிறாள். இது அவருடைய சகோதரியின் வேண்டுகோள். அவள் வாழ்க்கையில் அவள் காசியே போகவில்லை. தன் சார்பாக தம்பியும் அவர் மனைவியும் போகட்டும் என்று நினைக்கிறாள். இதெல்லாம் கட்டளையிட்டு அவள் இறந்து விடுகிறாள். ஜானகிராமன் இதை ஒரு வரியில் இப்படி கூறுகிறார் :
‘மறுநாள் வீட்டடில் ஒரு நபர் குறைந்துவிட்டது,’ என்று.
 
அக்காவின் கடனை திருப்பி அளிக்க சின்னசாமி துரையப்பா வீட்டிற்கு வருகிறார். இரவு நேரம். எதற்காக வந்தீர் என்று சின்னசாமியைக் கேட்கிறார் துரையப்பா. அக்காவுடைய கடனை அடைக்க என்கிறார் சின்னசாமி.
 
இரவு நேரத்தில் கணக்குப் பார்க்க முடியாது என்கிறார் துரையப்பா. நான் இங்கயே படுத்துக்கொள்கிறேன். காலையில் பார்க்கலாம் என்கிறார் சின்னசாமி. ஆனால் அவர் கொண்டு வந்த பணத்தை துரையப்பாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வைக்கிறார் துரையப்பா.
கதையில் துரையப்பாவைப் பற்றி ஒரு அறிமுகம் நடக்கிறது. துரையப்பா பெரிய மனுஷன். அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி ஊரே பேசிக்கொள்கிறது.
 
காலையில் கணக்குப் பார்க்கும்போது, துரையப்பா சின்னசாமியிடம் பணம் கேட்கிறார். அதுதான் நேற்று இரவே உங்களிடம் கொடுத்தேனே என்கிறார் சின்னசாமி. எங்கே கொடுத்தே என்கிறார் துரையப்பா. சின்னசாமிக்கு தூக்கி வாரிப்போடுகிறது. துரையப்பா இப்படி ஏமாற்றுவார் என்பதை சின்னசாமி நினைத்தே பார்க்கவில்லை. ஊரே துரையப்பா பக்கம். தான் ஏமாந்துவிட்டோம் என்று மனம் வெதும்பி அந்த இடத்தை விட்டுப் போகிறார்.
 
இங்கேதான் ஜானகிராமனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் :
 
ஏன் துரையப்பாவை பெரிய மனிதன் என்றும், அன்னாதாதா என்று வர்ணித்தும், சின்னசாமிக்கு ஏன் துரோகம் செய்கிறார். இந்த அவருடைய குணம் முரண்பாடாக இருக்கிறது.
 
அப்படி பெரிய மனிதனாக இருப்பவர், அன்ன தாதாவாக இருக்பவர், ஏன் சின்னசாமியை ஏமாற்ற வேண்டும்?
 
துரையப்பாவை இப்படி வர்ணித்துவிட்டு, அவர் துரோகம் செய்பவராக ஏன் கொண்டு போகிறார். கதை இங்கு சரியாக இல்லையா என்று எனக்குப் படுகிறது.
 
ஊருக்கு நல்லது செய்பவனாக இருக்கும் துரையப்பா ஏன் இப்படி ஏமாற்ற வேண்டும்.
துரையப்பாவும், சின்னசாமியும் திரும்பவும் கங்கா ஸ்நானம் செய்யப் போகிற சந்திக்கிற நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் ஜானகிராமன். ஆனால் அங்கு சின்னசாமி துரையப்பாவைப் பார்க்க விரும்பவில்லை. இதுதான் கதை.
ஆனால் துரையப்பாவின் காரெக்டரை அப்படி வர்ணித்தவிட்டு, ஏமாற்றுகிறவராக ஒரு வில்லனாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக் கதையை ஜானகிராமன் வேறுவிதமாக எழுதியிருக்க வேண்டும்.

ஜோல்னாப் பையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டேன்…

 

அழகியசிங்கர்

 

 

நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன்.  கிட்டத்தட்ட 40  ஆண்டுகளுக்கு மேலாக ஜோல்னாப் பையை சுமந்துகொண்டு இருப்பேன்.  ஏன்? என் வங்கியில் நான் சேரும்போது (1978ஆம்ஆண்டு) நான்தான் ஜோல்னாப் பையை அறிமுகப்படுத்தினேன்.  என்னைப் பார்த்துதான் பெவ்வி என்ற யூனியன் அமைப்பில் உள்ள சிலர் ஜோல்னாப் பைகளை சுமந்து செல்வார்.  மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு ஜோல்னாப் பை வைத்திருப்பார்.  அதில் பெரும்பாலும் ஸமார்ட்போன், பர்ஸ் போன்றவற்றை வைத்திருப்பார்.  மறதி காரணமாக பலசமயம் பையோடு எல்லாவற்றையும் தொலைத்தும் விடுவார்.

என் நண்பர் ஒருவருக்கு நான் ஜோல்னாப் பையை  சுமந்துகொண்டு வருவது பிடிக்காது.  ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும்போதும் என்னை எச்சரிக்கை செய்வார்.  ஜோல்னாப் பையுடன் உங்களைப் பார்த்தால், பையை கிழித்து எறிந்து விடுவேன் என்று மிரட்டுவார்.  அவர் மிரட்டலுக்குப் பயந்து ஜோல்னாப் பையை அவர் கண்ணிற்குக் காட்டமாட்டேன்.  ஒரு ஜோல்னாப் பையைத் தயாரிக்க ரூ100 வரை செலவாகும்.  நான் துணி வாங்கிக்கூட ஜோல்னாப் பையை தயாரித்திருக்கிறேன்.  ஆனால் அந்த நண்பரைப் பார்க்க வரும்போது மட்டும்  ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன்.  இன்னும் ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.   ஜோல்னாப் பையில் நான் வைத்துக்கொள்ளும் பொருள்களும் முக்கியமானதாக கருதுகிறேன்.  பெரும்பாலும் புத்தகங்கள் இருக்கும். தின்பண்டங்கள் இருக்கும்.  காய்கறிகள் இருக்கும்.  காப்பிப் பொடி இருக்கும். தினசரிகள் இருக்கும்.  சிலசமயம் பர்ûஸக்கூட ஜோல்னாப் பையில் வைத்துவிடுவேன்.

நண்பரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் நான் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போக மாட்டேன்.  ஏன் எனக்குக் கூட சிலசமயம் யாராவது ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு எதிர்பட்டால் எனக்கே  பிடிக்காது.  28ஆம் தேதி மார்ச்சுமாதம் செவ்வாய்க் கிழமை காலையில் நண்பரைப் பார்க்கும்போது கூட ஜோல்னாப் பையைத் தவிர்த்துவிட்டேன்.  அதற்கு தண்டனையும் கிடைத்துவிட்டது.

என் டூ வீலரை சர்வீஸ் செய்யும் நாள் நெருங்கி விட்டதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் அங்கு ஒரே கூட்டமாக இருக்கும்.  காலை 6 மணிக்கே போகவேண்டும்.  ஆனால் 28ஆம்தேதி  நண்பருடன் நடை பயிற்சிக்குச் சென்றுவிட்டு டூவீலர் சர்வீஸ் செய்யும் இடத்திற்கு 8மணிக்கு மேல் சென்றேன்.  ஆச்சரியம்.  டூவீலரை சர்வீஸிற்கு எடுத்துக்கொண்டார்கள்.  என் டூவீலருடன் வால்போல் எப்போதும் ஹெல்மெட் ஒட்டிக்கொண்டிருக்கும்.  அந்த ஹெல்மேட்டை கையில் கொடுத்துவிட்டார்கள்.  அத்துடன் அதை லாக் பண்ணுகிற சங்கிலிப் பூட்டையும் சுமக்க வேண்டி வந்தது.  கையில் புளூ நிற டைரி வைத்திருந்தேன்.  எல்லாவற்றையும் சுமந்துகொண்டு லொங்கு லொஙகென்று நடந்து வந்துகொண்டிருந்தேன்.

என் மனைவி இட்டிலி அல்லது தோசை செய்தால் சட்னி செய்து தர மாட்டார்.  மிளகாய்ப்பொடி அல்லது எப்போதும் பயன்படுத்தும் சாம்பார்தான் தட்டில் வைப்பார்கள். அதனால் இட்லியோ தோசையோ தட்டில் போட்டால் வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். அன்று சட்னி தயாரிப்பதற்காக தேங்காய் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார்கள்.  நான் வாங்கிக்கொண்டு கையில் எப்படி எல்லாவற்றையும் வைத்துக்கொண்வது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். இரண்டு கைகளும் கொள்ளவில்லை.  இத்தனையும் சுமந்துகொண்டு ஆர்யாகவுடர் தெருவில் உள்ள ஒரு பஸ்ûஸப் பிடித்தேன்.  படிக்கட்டுகளில் ஏறி நின்றபின் பஸ் திடீரென்று கிளம்ப நான் விழுந்தேன் படிக்கட்டில். பஸ்ஸிற்குள்ளே விழுந்து விட்டேன்.  காலில் நல்ல சிராய்ப்பு. பஸ்ஸில் தென்பட்ட சில இளம் பெண்கள் என் மீது பச்சாதப்பட்டார்கள்.  ஒருவர் என்னை கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்  நண்பருக்காகப் பயந்து ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு வராத தவறை. முடிவு பண்ணினேன்.  நண்பருக்குப் பிடிக்காவிட்டாலும் ஜோல்னாப் பையை எடுத்துக்கொண்டு போவது என்று.  உண்மையில் அன்று ஜோல்னாப் பை மாத்திரம் இருந்திருந்தால் அடிப்பட்டிருக்காது.

ஜோல்னாப் பையை வைத்து நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். ஞானக்கூத்தனுக்கு இந்தக் கவிதை பிடிக்கும். அவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.  கொஞ்சம் பெரிய கவிதையாக இருந்தாலும் இங்கு அளிக்கிறேன்.

   ஜோல்னாப் பைகள்

விதம்விதமாய் ஜோல்னாப் பைகளை

சுமந்து வருவேன்

பார்க் ரயில்வே ஸ்டேஷன் வாசலில்

கூவி விற்பார்கள் ரூபாய் பத்திற்கு

வகைவகையாய்ப் பைகளை வாங்குவேன்

வீட்டில் உள்ளவர்களுக்கு

ஏனோ பிடிப்பதில்லை

நான் வாங்கும் ஜோல்னாப் பைகளை

பைகளில் ஸ்திரமற்ற தன்மையால்

கொஞ்சம் அதிக கனமுள்ள

புத்தகங்களை சுமக்காது

ஓரம் கிழிந்து தொங்கும்

இன்னொருமுறை தையல் போடலாமென்றால்

மூன்று பைகளை வாங்கும்

விலையை வாய்க்கூசாமல் கேட்பார்கள்

ஜோல்னாப் பைகள்

மெது மெதுவாய் நிறம் மாறி

வேறு வேறு விதமான

பைகளாய் மாறின

ஆனால் என்னால் பைகளை விடமுடியவில்லை

உறவினர் வீட்டிலிருந்து

அளவுக்கதிமாய் தேங்காய்களை

உருட்டி வர

சாக்குப் பைகள் தயாராயின

மைதிலிக்கு மனசே வராது

என்னிடம் பைகளைத் திருப்பித் தர

வீட்டில் புத்தகக் குவியலைப்

பார்க்கும் கடுப்பை

பைகளில் காட்டுவாள்

ஆனால் என்னாலும் பைகளை விடமுடியவில்லை

பைகளில் இன்னது என்றல்லாமல்

எல்லாம் நுழைந்தன சுதந்திரமாய்

வீரன் கோயில் பிரசாதம்

மதியம் சாப்பிடப்போகும் பிடிசாதம்

வழுக்கையை மறைக்க

பலவித நிறங்களில் சீப்புகள்

உலக விசாரங்களை அளக்க

ஆங்கில தமிழ் பத்திரிகைகள்

சில க.நா.சு கவிதைகள். புத்தகங்கள்

எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கும்

போன ஆண்டு டைரி.

பின்

பின்

உடைந்த சில

கண்ணாடி வளையல் துண்டுகள்

பேப்பர் வெயிட்டுகள்

எல்லாம் எப்படி வந்தன பைக்குள்….

(08.03.11)

 

விருட்சம் 102வது இதழ் அசோகமித்திரன் இதழ்….

அழகியசிங்கர்

 

102வது இதழ் இதோ வர உள்ளது. ஆறாம்தேதி மார்ச்சு மாதம் அசோகமித்திரன் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எனக்கு அனுப்பி உள்ளார். அதுதான் அவர் கடைசியாக எழுதிய கட்டுரை. இக் கட்டுரையுடன் இந்த இதழ் தொடங்க உள்ளது. அவரைப் பற்றி பல கட்டுரைகளை வெளியிட உத்தேசித்துள்ளேன். ஆதலால் சகலமானவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நீங்கள் அசோகமித்திரனைக் குறித்து உங்களுக்குத் தோன்றுவதை அரைப்பக்கம், முக்கால் பக்கம், முழுப்பக்ககம், இரண்டு பக்கங்கள் என்று கட்டுரை எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அசோகமித்திரன் மிகக்குறைவான பக்கங்களில் பலவற்றை ஏழுதி விடுவார். நீங்களும் அப்படி எழுதி navina.virutcham@gmail.com என்ற மின் முகவரிக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்தை வெற்றிகரமாக 8.45க்கு முடித்துவிட்டேன்….

அழகியசிங்கர்

எப்போதும் ஒரு இலக்கியக் கூட்டம் என்றால் சிலர் பேசுவார்கள். சிலர் பேசாமல் விலகி விடுவார்கள். அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திலும் அதுமாதிரியான நிகழ்ச்சி நடக்காமல் இல்லை. இக் கூட்டத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீகுமார் அவர்கள்தான் காரணம். பத்மா அவர்களும் கூட்டத்தை சரியான முறையில் நெறிப்படுத்தி எடுத்துச் சென்றார். முதலில் அம்ஷன்குமாரின் ஆவணப்படம் 5.15 ஆரம்பமாகியது. அது முடிந்தவுடன் நாசர் நடித்த ஜெர்மன் இயக்குநர் எடுத்த புலிக் கலைஞன் என்ற அசோகமித்திரன் கதையை அடிப்படையகாக் கொண்ட குறும்படம் சரியாக 15 நிமிடங்களில் முடிந்து விட, ஒவ்வொருவராக 6 மணிக்கு எல்லோரையும் பேச அழைத்தோம்.
கூட்டம் முடியும்போது மணி இரவு 8.45. அவ்வளவு நேரம் பொறுமையாக பலர் இக் கூட்டம் முடியும் வரை தங்கியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நானும் ஒரு கட்டுரை வாசிக்க எழுதி வைத்திருந்தேன். அம்ஷன்குமார் பேசி முடித்தவுடன், 8.45 மணியைத் தொட்டுவிட்டது. நான் என் கட்டுரையை வாசிக்கவில்லை. ஏன்எனில் வாசிப்பது என்பது அந்த நேரத்தில் காது கொடுத்து கேட்க எல்லோருக்கும் அலுப்பாக இருக்கும். அதனால் நான் எழுதி வாசிக்க நினைத்தக் கட்டுரையை இங்கு அளிக்கிறேன்.

 

அசோகமித்திரனும் நானும்…

 

ஆரம்பத்திலிருந்து அசோகமித்திரன் கதைகளைப் படித்துக்கொண்டு வருபவன். ஆனால் படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எல்லோருடைய கதைகளையும் படிப்பவன். அவருடைய கதைகளைப் படிக்கும்போது எனக்கு நெருக்கமாக அவை தோற்றம் அளிக்கும். அவர் எழுத்து போல அவரும் எளிமையான மனிதர். அவருடன் பேசிவிட்டு ஒருவர் வீட்டிற்கு வந்தால், அசோகமித்திரன் கதை ஒன்று உருவாகிவிடும்போல் தோன்றும்.
தள்ளாத வயதிலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டும், புத்தகங்களைப் படித்துக்கொண்டும் கூட்டங்களில் கலந்து கொண்டும் இருந்தார். அவரிடம் எந்தவித பந்தாவும் கிடையாது. யாரையும் அவர் மதிக்க தெரிந்தவர். எந்த மனிதருக்கும் எதாவது ஒன்று பிடிக்காமல் இருக்கும். அசோகமித்திரனுக்கும் பிடிக்காமல் எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆனால் அதை நேரிடையாக வெளிப்படுத்த மாட்டார். மறைமுகமாக சொல்வார். அல்லது சொல்லாமல் விடுவார்.
கடைசியாக கலந்து கொண்டு அவர் பேசிய கூட்டம் விருட்சம் 100வது இதழ் கூட்டம். பேசிக் கொண்டிருக்கும்போது என் காலம் முடிந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார். அவர் அது மாதிரி ஏன் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவருக்கே அவர் மரணம் தெரிந்திருக்கிறது. உண்மையில் அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு பலவிதங்களில் பாதிப்பை நிகழ்த்தாமல் இல்லை. ஆனால் உற்சாகமாகக் கலந்து கொள்வார், அவதிப்படுவார். பின் திரும்பவும் கலந்து கொள்வார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் படுகிற அவதியையும் என்னிடம் கூறாமல் இருக்க மாட்டார்.
ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் ரத்தினச் சுருக்கமாக அவர் பேச்சு இருக்கும். பேசியது போதும் என்று தோன்றும்போது, போதும் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிடுவார். ஒரு முறை ஒரு பேனாவைக் கொடுத்து பேனாவிற்கு ரீபிள் போடச் சொல்லிக் கொடுத்தார். அது ஒரு பழைய பேனா. நான் கடை கடையாக ஏறி இறங்கினேன். ஒரு கடையில் ரீபிள் கிடைத்தது. ஆனால் பேனாவில் ரீபிளைப் போட முடியவில்லை. காரணம் பேனாவில் ஸ்பிரிங் இல்லை. அசோகமித்திரனுக்கு வேற ஒரு பேனாவை வாங்கிக்கொடுத்துவிட்டு அந்தப் பேனாவையும் கொண்டு போய் கொடுத்தேன். ஸ்பிரிங் இல்லை என்றேன். பேனாவை வாங்கிக்கொண்ட அசோகமித்திரன் ஸ்பிரிங்கை தேடிப் பார்க்கிறேன் என்றார். அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, ஸ்பிரிங் கிடைத்துவிட்டது. சரி கொடுங்கள் என்றேன். ஆனால் பேனா எங்கோ போய்விட்டது. தேடிப் பார்க்க வேண்டும் என்றார். இதை அவர் சிரிக்காமல் சொல்வார். அவர் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொல்வார். நான் முகநூலில் எதையாவது எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு வீட்டுப் பக்கம் வர முடிந்தால் வாருங்கள் என்று முக நுலில் கமென்ட் எழுதவார். எனக்கோ நான் எழுதியதற்கு எதாவது எழுதப் போகிறாரென்று நினைத்துக் கொண்டிருப்பேன். இதுதான் அசோகமித்திரன்.
இன்னொன்று. அவருக்கு கவிதையே பிடிக்காது. உங்களுக்கு கவிதை என்றால் ரொம்பப் பிடிக்கும்போல் இருக்கிறது என்று என்னை கிண்டல் செய்வார். ஆமாம் என்று அவர் எதிரில் சொல்ல மாட்டேன். முகநூலில் ஒரு கதையை அடிப்பதற்குப் பதில் கவிதை எழுதி பதிவிடலாமென்பேன்.
ஒருமுறை நானும் அவரும் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தோம். அந்த இலக்கியக் கூட்டத்தில் நான் கவிதை வாசித்திருந்தேன். அசோகமித்திரன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. எனக்கோ என் கவிதையைக் குறித்து அவர் கருத்தை அறிய வேண்டும் என்று ஆவல். தாங்கமுடியாத ஆவல். இந்த இடத்தில்தான் நான் ஒரு தப்பு செய்துவிட்டேன். என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் என் கவிதை எப்படி இருந்தது என்று கேட்டுவிட்டேன். அசோகமித்திரன் நிதானமாக, நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என்றார் சிரிக்காமல். அவரைப் போல் ஒரு நகைச்சுவை உணர்வுகொண்ட எழுத்தாளரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
இக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது…

அழகியசிங்கர்

 

நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்.  “உங்களை தொந்தரவு செய்கிறேன்,” என்பார்.  “பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்,” என்பேன்.  ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார்.  அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.

 நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன்.  அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார்.  எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது.  ஆனால் அசோகமித்திரன் ரசித்து சாப்பிடுவார்.  அவர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த பஜ்ஜி விலை என்ன என்று கேட்பார்.  ஐந்து ரூபாய் என்பேன்.  அவரால் நம்ப முடியாது.  ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு சுவையான பஜ்ஜியா என்று வியப்பார்.
“இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்,”  என்பார்.  அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு வரும் எனக்கு.
ஒரு முறை அவருக்குப் போன் செய்து, ‘உங்களுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்கப் போகிறது,’ என்பேன்.  üஅதெல்லாம் எனக்குக் கிடைக்காது,ý என்று சாதாரணமாக சொல்வார்.  ஹிந்து பத்திரிகையில் அவர் கட்டுரை வந்தால், நான்தான் ஹிந்து பத்திரிகையைக் கொண்டு போய் கொடுப்பேன்.

“கதைகளை எழுதினால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்,” என்றார் ஒருநாள்.  “யாரும் போட மாட்டார்கள்,” என்பேன்.  “பத்திரிகைகளில் பிரசுரமாகிற மாதிரிதான் நீங்கள் எழுதுகிறீர்கள், நிச்சயம் வரும்,” என்பார்.

 அந்த சமயத்தில் பத்திரிகைகளில் அவர் கதைகளை அனுப்பி பட்ட அனுபவத்தை சொல்வார்.  சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் அவர் அனுப்பிய கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம்.  அவர் அனுப்பிய காலத்தில் ஒரே பிரதி மட்டும் எழுதி அப்படியே அனுப்பி விடுவார்.  திரும்பவும் அக் கதைகளைப் பெற சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் அக் கதைகளை தேடியிருக்கிறார்.  தியாகராஜன் என்ற பெயரில்.  அவருடைய பெயரைப் போல வேற ஒரு தியாகராஜன் கதைகள் கிடைக்குமாம்.இப்படி அவர் தொலைத்த கதைகள் பலவாம்.
அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த சமயத்தில் கணையாழியில் என் குறுநாவல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன.  என் கதைகள் மட்டுமல்ல. ஜெயமோகன்., பாவண்ணன், கோபிகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன் போன்ற பலருடைய குறுநாவல்கள் வந்திருக்கின்றன. கணையாழியல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்து என்ற என் கதையில் சில மாற்றம் செய்ய அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.  அப்போது அவருக்கு சுரம்.  அவர் அக் கதையை அப்படியே சொல்வார்.  ஒன்றும் மாற்ற வேண்டாம்.  அப்படியே இருக்கட்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார்.

பல எழுத்தாள நண்பர்களை அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன்.  பல இடங்களுக்கு துணையாக அவருடன் சென்றிருக்கிறேன்.  அவர் நடக்கும்போது கீழே மட்டும் விழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வருவது அவருக்குப் பிடிக்காது.

நேற்றுதான் நானும் நண்பரும் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டோம்.  எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அசோகமித்திரனை நினைத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன்.  அந்த நேரத்தில்தான் அசோகமித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி டிவி மூலம் பின்னால் தெரிய வந்தபோது ரொம்பவும் சோகமாகிவிட்டேன்.  என் அப்பா ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார்.  அசோகமித்திரன் நேற்று 23ஆம் தேதி இறந்து விட்டார்.  இனிமேல் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு தி நகர் பக்கம் போக முடியாது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்
 
 
ஒரு கவிதை படிப்பவருக்குப் புரிய வேண்டுமா? வேண்டாமா? இந்தக் கேள்விக்கு ஒரு கவிதை வாசிப்பவருக்குப் புரிய வேண்டும் என்று நான் அழுத்தமாகக் கூறுவேன். பிரம்மராஜன் கவிதைகள் அவ்வளவு எளிதாகப் புரியாது. இதை பிரம்மராஜன் காதுபட சொல்லாதீர்கள் என்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். காரணம். நான் சொல்வதைக் கேள்விப்பட்டு பிரம்மராஜன் பெருமிதம் அடையக் கூடும் என்றுதான். ஆனால் உண்மையில் பிரம்மராஜன் கவிதை அவ்வளவு சுலபமாகப் புரியாது. ஒவ்வொரு வரியாக புரியும். ஆனால் முழு கவிதைக்குள் போவதற்குள் பெரிய பாடாக இருக்கும். முபீன் சாதிகா கவிதைகளும் அப்படித்தான். கவிதை எப்படி எழுத வருகிறது என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். தானாகவே எழுதுகிறது என்பது போல் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. ஆட்டோமெடிக் ரைட்டிங் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுமாதிரி உண்டா என்பதும் தெரியாது. அன்பின் ஆறாமொழி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை எடுத்துக்கொண்டால், முதலில் தலைப்பு அவருக்குத் தோன்றியதா? அல்லது கவிதை வரிகள் முன்னதாக தோன்றியதா? எது தலைப்பை தீர்மானித்தது? இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இக் கவிதையை வாசிக்கும்போது இதன் ரிதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
 
59) அன்பின் ஆறாமொழி
 
முபீன் சாதிகா
 
மீன் படரும் நீரிலும்
கருமை புகா வானிலும்
தொட்டுணரா தீயிலும்
பிளவு காணா கல்லிலும்
வருந்தும் வருந்தா வளியிலும்
நகையோடு பகையும் துயரிலும்
மெலியதில் வலியாய் மலரிலும்
நேரில் எதிரா திசையிலும்
முகம் கலக்கும் ஆடியிலும்
முற்றோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு தூண்டா நஞ்சிலும்
ஒளிபுகா திரையின் இருளிலும்
அடரும் வெளியாய் கானிலும்
தளிரோடு துளிரும் முளையிலும்
முழுமையின் உருவாய் அண்டத்திலும்
விரைந்துழலும் ஒளியிலும்
ஒடுக்கும் துடியின் இடியிலும்
பொழிவில் வெருளா புயலிலும்
திரளும் தீரத்தின் பிணியிலும்
எம்மில் மாறா எச்சத்திலும்
நிச்சயமில்லா நிதர்சன நேசத்திலும்
தீரா வெகுளலலின் இறுதியிலும்
நிறையுமேûô நெறியின் நசை
 
நன்றி : அன்பின் ஆறாமொழி – கவிதைகள் – முபீன் சாதிகா – வெளியீடு : பாலம் பதிப்பகம் பி விட், 25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ், 3வது பிரதான சாலை, தண்டிஸ்வரர் நகர், வேளச்சேரி, சென்னை 42 முதல் பதிப்பு : நவம்பர் 2011 – விலை : ரூ.60.
 
 

நீங்களும் படிக்கலாம்…29          

 

அழகியசிங்கர்

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்……

ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?  ஏன் இவர் தொடர்ந்து நாடகங்கள் எழுதாமல் விட்டுவிட்டார்.  அதற்கு பல காரணங்களை அவர் சொல்லலாம்.  நாடகம் எழுதத் தயார்.  ஆனால் பத்திரிகை இல்லை பிரசுரம் செய்வதற்கு என்றும் சொல்லலாம்.

நகுலன் சென்னை வரும்போது கையில் ஒரு நோட்டு வைத்திருப்பார்.  அந்த நோட்டில் அவர் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக்கொண்டிருப்பார்.  அவர் எழுத்து பிரசுரமாவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்.  எந்தப் பத்திரிகைக்காவது அவர் படைப்புகளை அனுப்பினால் கூடவே தபால்தலைகளையும் இணைத்து அனுப்புவார்.

ராமிற்கு நாடகம் எழுதும் திறமை இருந்தும் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை.  இன்னொரு கேள்வி: நாடகம் எழுதுவது என்பது நிகழ்த்திக் காட்டுவதற்காகத்தானா? அப்படியென்றால், அதற்கான வாய்ப்பு என்பது இல்லை என்றே தோன்றுகிறது.  ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நினைத்தால், இன்றைய சூழ்நிலையில் அதன் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக இருக்கிறது. பிரபலமான சபா நாடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிற காலம் இது.  மேலும் ஒரு நாடகத்தை நடத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்களாவது தேவை என்று நாடகத்தில் அனுபவமிக்க என் நண்பர் ராஜாமணி குறிப்பிட்டுள்ளார். செலவு செய்வதோடல்லாமல், நடிப்பதற்கு சரியான நடிகர்கள் கிடைக்கவேண்டும்.  பின் பார்வையாளர்கள் வேண்டும். இந்தக் காலத்தில் யார் நாடகத்தைப் பார்க்க வருகிறார்கள்.  இலவசமாக நாடகத்தைப் போடுவதாக இருந்தாலும், யாரும் பார்க்க வருவார்களா என்பது சந்தேகம். காரணம் நாடகம் நடக்கும் இடம், வருகிற தூரம் இதெல்லாம் முக்கியமான காரணங்களாக மாறி விடுகின்றன.

ராமின் இந்த ஐந்து நாடகங்களையும் பலர் மேடை ஏற்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு அவர் எழுதிய நாடகங்களுக்கு ஒருவித கௌரவம் கிடைத்திருக்கிறது. இனி இதுமாதிரியான நாடகம் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று நினைத்து, நாடகத்தை எழுதத் தொடங்க வேண்டும் ராம். மேலும் நாடகத்தைப் பிரசுரம் செய்யப் பத்திரிகைகள் இல்லை என்பதையும் நினைத்து, தொடர்ந்து நாடகங்கள் எழுதிப் பார்க்க வேண்டும்.

இன்று பல்கலைக்கழகங்களில் நாடகத் துறை என்று ஒன்று இருந்தால், ராம் நாடகங்களை கொண்ட புத்தகத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு நாடகங்களை நடத்திப் பார்க்கலாம்.  அதற்கெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.

நாடகப் புத்தகங்களை நாம் அதிகமாக உருவாக்க வேண்டும்.  நாடகம் நடத்தப் படுகிறதோ இல்லையோ நாடகப் புத்தகத்தை ஒரு நாவல் படிப்பதுபோல ஒரு சிறுகதைத் தொகுதி படிப்பதுபோல படிக்க வேண்டும்.  1957ஆம் ஆண்டு க நா சுவின் நல்லவர் என்ற புத்தகம் வந்துள்ளது.  அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் க நா சு இப்படி எழுதி உள்ளார் :

‘நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது.  ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல.  நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை.  இலக்கியமாகப் படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம்.’இப்படி தெளிவாக தன் கருத்துக்களை முன் வைக்கிறார்

க நா சு.  அந்த விதத்தில் ராம் நாடகங்கள் படிப்பதற்கும் இலக்கிய அனுபவத்தைத் தர தவறவில்லை.

ந சிதம்பரசுப்பிரமணியன் என்ற மணிக்கொடி எழுத்தாளர், அவருடைய ஊர்வசி நாடகப் புத்தகத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார்.  ‘நாம் படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமில்லை,’ என்று தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.

இதெல்லாம் பார்க்கும்போது ராம் நாடகங்கள் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அவருடைய ஐந்து நாடகங்களை ஐந்து விதமாக எழுதி உள்ளார்.  üசுயதரமம்ý என்ற நாடகத்தில் மகாபாரத்தில் வரும் திரௌபதி, பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு முன் தன் எதிர்ப்பை பதிவு செய்கிறார்.  மகாபாரதத்தில் இந்தப் பகுதி மௌனமாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் ராம் நாடகத்தில் திரௌபதி இப்படி கூறுகிறாள் : தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல,ý என்று கூறியபடி யுதிஷ்டிரனின் கழுத்தில் மாலை அணிவிக்கிறாள்.

மூடிய அறை என்ற 2வது நாடகத்தைப் படிக்கும்போதே, மூடிய அறையில் நிச்சயம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது. 25 வருடமாக திறக்கப் படாத மச்சு ரூமை திறக்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.  அதை மையமாக வைத்து இந்த நாடகத்தை எழுதிக்கொண்டு போகிறார் ராம்.  வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நயம்பட வெளிப்படுத்துகிறார் ராம். அந்தக் குடும்பத்தின் மூத்தப் பையன் அறையைத் திறந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறான்.  ஆனால் மற்றக் குடும்பத்தினர்கள் அவன் சொல்வதை நம்பவில்லை.  அவனை பைத்தியக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள். இன்றைய உலகத்தை நையாண்டி செய்வதுபோல் இருக்கிறது.

 

மூன்றாவது நாடகமான மணிமேகலையின் கண்ணீர் என்ற நாடகம். இந் நாடகத்தைப் படிக்கும்போது ராமின் கற்பனை அசாதரணமாக உள்ளது.  திரௌபதியும் சீதையும் மணிமேகலையைச் சந்தித்துப் பேசுவதுபோல் வருகிறது.  நாடகமே காவிய நடையில் எழுதி உள்ளார்.  இந்த நாடகத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.  காரணம்: திரௌபதியும், கண்ணகியும் மணிமேகலையை எப்படி சந்திக்க முடியும்.  இந்தக் கற்பனை கொஞ்சம் பேராசையான கற்பனையாக இருக்கும்போல் படுகிறது.

இத் தொகுப்பில் இரண்டு பெரிய நாடகங்களில் ஒன்று எப்ப வருவாரோ இன்னொன்று ஆபுத்திரனின் கதை.  சாமுவேல் பெக்கெட் எழுதிய நாடகத்தின் மையக் கருவை வைத்துக்கொண்டு இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒருவர் வந்திருந்து சுபிட்சத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் இந் நாடகம் போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் அவர் வரவே இல்லை.  வரப்போகிறார் வரப்போகிறார் என்று காத்திருக்கிறார்.  இதுதான் இந் நாடகம்.  இதைப் படிக்கும்போது கொஞ்சங்கூட அலுப்பில்லாம் எழுதிக்கொண்டே போகிறார் ராம்.

பெரிய நாடகமான ஆபுத்திரனின் கதையில் அண்ணன் தம்பி இருவர் மூலம் நாடகத்தைத் துவக்குகிறார்.  ஆள் அரவமற்ற இடத்தில் அபுத்திரின் கோமுகி  ஆற்றில் அட்சயப் பாத்திரத்தை எறிகிறான்.  அதை இரண்டு அழகிய கரங்கள் வெளியே தோன்றி ஏற்றுக்கொள்கிறது.  அவன் சொல்கிறான் : ‘ஆபுத்திரனின் அடையாளம் அழிந்து விடவில்லை.  அது அட்சயப்பாத்திரமாக இன்னும் கோமுகியின் வயிற்றில் உயிர்த்திருக்கிறது.’ என்று.

இந் நாடகங்கள் எல்லாம் நிதானமாக வாசித்து ரசிக்க வேண்டிய இலக்கியத் தரமான நாடகங்கள்.  இந் நாடகங்கள் நடத்திக் காட்டப் பட வேண்டியவை.  ராம் மேலும் நாடகங்கள் எழுத வேண்டும்.  வேறு விதமாக யோசிக்க வேண்டும்.

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் – எஸ் எம். ஏ.ராம் – தொடர்புக்கு: எஸ் மோகன் அனந்தராமன், 7 எ மாருதி பிளாட்ஸ்இ சரோஜினி முதல் குறுக்குத் தெரு, ராஜாஜி நகர். பல்லாவரம், சென்னை 43 – விலை ரூ.150 – முதல் பதிப்பு : டிசம்பர் 2015

கதா மஞ்சரி கதை -3

அழகியசிங்கர்
 
 
 
வீடு நிறைந்த பொருள்
 
 
 
ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான். அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான். தன் இரு மக்களையும் அழைத்தான். ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன். üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான். அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான். இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான். தந்தை அவ்விரண்டையும் பார்த்தான். இளையவன் அறிவை வியந்து பாராட்டினான். அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான். ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான்.
 
கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்?
 
ஒரு பணக்காரர். மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார். தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார். புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்பினார். இருவரகளும் வந்தனர். ‘உங்கள் இருவருக்கும் ஒரு பரிட்சை வைக்கப் போகிறேன். அதில் யார் வெற்றிப் பெறுகிறாரோ அவருக்கு என் சொத்து முழுவதும் கொடுக்க விரும்புகிறேன்,’ என்றார். மகன்கள் இருவரும் சிறிது நேரம் யோசித்தார்கள். அப்பாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டது என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனாலும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் அப்பா ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் பணம் கொடுத்து, ‘இந்த வீட்டில் உள்ள அறை முழுவதும் ஒரு லட்சம் ரூபாயக்கு எதாவது வாங்கி நிரப்ப வேண்டும். யார் நிரப்புகிறார்களோ அவர்கள் அறிவை மெச்சி என் சொத்து முழுவதும் தரப்படும்’ என்றார். மூத்தப் பையன் யோசித்தான். இந்த அறை முழுவதும் நிரப்ப கவிதைப் புத்தகம்தான் லாயிக்கு என்று கவிதைப் புத்தகங்களாக வாங்கி வீடு முழுக்க நிரப்பி விட்டான். இளையவன் யோசித்தான். பெரிய குத்துவிளக்குப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது. பொரிய குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு, எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றினான். அவர்கள் அப்பா அவர்கள் இருவரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தார். பெரிய பையன் மீது கோபமான கோபம். யாராவது கவிதைப் புத்தகங்களை வாங்குவார்களா என்ற கோபம்தான். இரண்டாவது பையனின் செய்தது அவருக்குப் பிடித்திருந்தது. வீட்டிற்கே விளக்கு ஏற்றிவிட்டான் என்று எண்ணினார். தன் சொத்து முழுவதும் இரண்டாவது பையனுக்கு எழுதிக் கொடுக்க எண்ணி அவர் கருத்தைக் கூறினார். முதல் பையன் அவர் பேச்சைக் கேட்டு, ‘கிழவா.. உனக்கு புத்தி எதாவது பிசகிப் போச்சா…ஒழுங்கா பாதிப் பாதியாக சொத்தைப் பிரித்துக்கொடு.. இல்லாவிட்டால் கொலை விழும்,’ என்று மிரட்டினான்.
 
இரண்டாவது பையனோ, ‘சொன்னபடி முழு சொத்தையும் என் பெயருக்கு மாற்று….இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,’ என்று மிரட்டினான்.
 
செல்வந்தார் அவர்கள் இருவரும் பேச்சைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
 
 

100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்.

அழகியசிங்கர்

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.

58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனடியாக அக் கவிதைகளை வாங்கிக்கொண்டு விருட்சம் இதழ்களில் பிரசுரம் செய்வேன்.  அவர்களைப் பார்க்கும்போது உண்மையாக கவிதைக்காகவே வாழ்ந்தவர்கள் போல் தோன்றும்.

இத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ‘என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்’ என்ற கவிதையை நான் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு நிலவையும் பார்க்கும்போது ஏற்படுகிற அனுபவங்களை நேசன் விவரித்துக்கொண்டு போகிறார்.  ஏழாவது நிலவு ‘எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்,’ என்று முடிக்கிறார். படிப்பவரின் ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பும் விதமாய் இக் கவிதை உள்ளதாக தோன்றுகிறது.   எளிமையான நேசனின் இந்தக் கவிதையை எப்போதும் வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 58

 என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் 

ஸ்ரீநேசன்

முதல் நிலவை எப்போதும்

எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன

இரண்டாவது நிலவு

குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது

மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்

காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்

நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்

கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று

ஐந்தாவது நிலவு

மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது

ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக் கொண்டிருக்கிறாள்

ஏழாவது நிலவு

எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.

நன்றி : ஏரிக்கரையில் வசிப்பவன் – கவிதைகள் – ஸ்ரீ நேசன் – மொத்தப் பக்கங்கள் : 80 – வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024 – தொலைபேசி : 044-23722939 – விலை : ரூ.60