விருட்சம் இலக்கியச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

உங்களுடன் நவீன விருட்சம் ஏற்பாடு செய்த கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தபோது, 2 வாரங்கள் கணினியின் மூளை மழுங்கிவிட்டது. கூட்டம் பற்றியும் அதில் கலந்துகொண்டவர்களைப் பற்றியும் கருத்தும், அவர்களுடைய புகைபடங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 16.08.2009 அன்று நடந்த கூட்டம் நவீன விருட்சம் நடத்தும் 51வது கூட்டம். நவீன விருட்சத்தின் கடைசிக் கூட்டம் 2003ல் நடந்தது.

ஒரு கூட்டத்தைப் பற்றி உடனே எழுதாவிட்டால், கூட்டத்தில் என்ன பேசினோம் என்பது மறந்தே போய்விடுகிறது. என் விஷயத்தில் இது இன்னும் மோசம். முக்கிய பேச்சாளர்களாக சிவக்குமாரும், ஞானக்கூத்தனும் கலந்து கொண்டார்கள். ஆள் சேகரிக்கும் கூட்டம் இல்லாததால் வருபவர்கள் வரட்டுமென்று விட்டுவிட்டேன். 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 25 பேர்களும் முக்கியமானவர்கள். எல்லோரும் படைப்பாளிகள். பார்வையாளர்கள் என்பது படைப்பாளிகளாகவும், பார்வையாளர்களாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார்கள்.

இக் கூட்டம் தேவநேய பாவணர் மைய நூலகத்தில் 16.08.2009ல் மாலை 6மணிக்குமேல் நடைபெற்றது. முன்பு இக் கருந்தரங்கு அறையின் வாடகை ரூ.50. இப்போது ரூ.250. ஆனால் முன்பை விட புதிய பொலிவுடன் அறை காட்சி தந்தது. முக்கியமாக இக் கூட்டம் நடைபெற வேண்டிய இடம் அண்ணாசாலை. இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர வசதியாக இருந்தது.

இக் கூட்டம் நடைபெறும் இடத்தைப் பதிவு செய்ய நான் பட்டப்பாடைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இந்த தேதியில் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். பின் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் இடம் கிடைத்தால் உடனே பணம் கட்ட வேண்டும். பின் ஒரு கடிதம் எழுதி அக் கடிதத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற வேண்டும். கொஞ்ச நாட்களாய் பிரச்சினையாக இருப்பதால் போலீஸ் அனுமதி இன்றி கூட்டம் நடத்த முடியாது.

நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் விளக்க வேண்டும். 31 ஆண்டுகளாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிகிறவன். அலுவலகத்திற்குக் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால், இரவு சுமார் 7.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். அலுவலகத்திற்கு வந்தால் துணியைப் பிழிவதுபோல் பிழிந்துவிடுவார்கள். எளிதில் தப்பித்து வரமுடியாது. கூட்டத்தை எப்படி நடத்துவது? தேவநேய பாவணர் மைய நூலகத்திற்கு 5.30 மணிக்குள் சென்று எப்படி பணம் கட்டுவது. நான் பணிபுரியும் இடம் அஸ்தினாபுரம். கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன். அங்கிருந்து வருவது என்பது அசாத்தியமான திறமை வேண்டும்.

யாராவது நமக்காக இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு வந்த 25 பேர்களும் வர மாட்டார்கள். லாவண்யா என்ற இலக்கிய நண்பர் எனக்காக போய் பணம் கட்டிவிட்டு வந்தார். பின் நான் ஏதோ காரணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று பல மணிநேரம் காத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது ஏன் இதுமாதிரி கூட்டம் நடத்த வேண்டுமென்று.

போலீஸ்காரரிடம் நான் நடத்துவது இலக்கியக் கூட்டமென்றும், 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புதுக்கவிதைக்காக இக்கூட்டம் என்று கூறினேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் முக்கிய புள்ளி கூட்டத்திற்கு வருகிறார்கள் என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் முக்கியப் புள்ளிகள் என்றேன் சிரித்துக்கொண்டே.

இப்படியெல்லாம் ஏற்பாடு செய்தபிறகு நான் கூட்டத்திற்கு யார் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விரும்புவர்கள் வரட்டுமென்று இருந்துவிட்டேன். அல்லது கூட்டத்தில் பேசுபவர்கள், பின் நான் நிச்சயமாக வருவோம் என்று எண்ணியிருந்தேன். பின் கூட்டத்திற்கு 25 பேர்கள் வரை வந்துவிட்டார்கள். ‘எழுத்து’ பத்திரிகை தொடங்கி இன்றைய சிறு பத்திரிகைகள் பற்றி சிவக்குமார் உரை நிகழ்த்தினார். புதுக்கவிதையின் தோற்றம் பற்றி ஞானக்கூத்தன் பேசினார். பின் பலர் கவிதைகள் வாசித்தார்கள். எல்லாவற்றையும் காசெட்டில் பதிவு செய்திருப்பதால், என்ன பேசினார் என்பதை முடிந்தவரை எழுத முயற்சி செய்கிறேன்.
(இன்னும் வளரும்)

புரியாத பிரச்சினை

சிறுகதை

பத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்புJustify Full கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோ ம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

பத்மநாபனை நான் மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

”என்ன பத்மநாபன்?…எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?”

”வந்துவிட்டேன். டெம்பரரி டிரான்ஸ்வர்…வந்து ஒரு மாசம்தான் ஆகிறது…”

”எங்கே இருக்கிறீர்கள்?”

”ஹஸ்தினாபுரம்….”

”சொல்லவே இல்லையே?”

”என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம்… உங்க பெண் பெயர் என்ன?

”ஏன்?

”சுருதிதானே?”

”ஆமாம்..”

”என்ன பண்றா?”

”பி டெக்…எம்ஐடியிலே பண்றா..”

”நினைச்சது சரியாப்போச்சு..”

”என்ன நினைச்சீங்க..”

”சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாக இருக்குமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு…..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”

”நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது..”

”நான் சொல்ல வந்தது வேற விஷயம்…நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம்…எனக்கு ஆபிஸ் 8.30 மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே 7.30க்கெல்லாம் ஓடணும்…டெய்லி ஓடறேன்..நான் போற சமயம் எம்ஐடியில் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்….அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டே போவாங்க…தினமும் உங்கப் பொண்ணு சுருதியைப் பாக்கறேன்….நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை..அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க..எல்லாம் படிக்கிற பசங்க.. அந்த கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்கமாட்டாங்க..சுருதிகிட்ட வந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல கூட கையைப் போடுவான். ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான்…சுருதிகிட்ட சொல்றான்…உதட்டுலதான் பண்ணக்கூடாதாம்….கேட்க சகிக்கலை..”

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு சொரேர் என்றிருந்தது. ”என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு….” சத்தம் போட்டு கேட்டேன்.

”தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது. இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு….இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுக்கிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணனும்..”

”பத்மநாபன் ரொம்ப நன்றி…இத எப்படியாவது சரி செய்யணும்…சுருதி நல்லப் பொண்ணு…கொஞ்சம் வெகுளி…இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல் கவலைப்படுவாள்….அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாக கவனித்தேன்… ”என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…” என்று கேட்டேன்..”நல்லாதானே இருக்கு..”என்றாள் சுருதி.

”உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?”

”அதெல்லாம் கிடையாது…தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து 4 மாசம் மேலே ஆயிடுத்தே..”

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை… மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாக கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..

”உன்காகத்தான் இடம் போட்டிருக்கேன்..,” என்றான் ஒருவன் இளித்தபடியே.

இந்த சமயத்தில், ”சுருதி…” என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா?” என்றாள்.

”இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு,” என்றேன். சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

”அவர்கள் எல்லோரும் யாரு?” என்று கேட்டேன்.

”ஃபிரண்ட்ஸ்,” என்றாள்.

சுருதி பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

”தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கிறாயா..?”

”ஆமாம்..”

”அவர்கள் தினமும் உன்னை கிண்டல் செய்கிறார்களாமே?”

”இல்லையே..”

”பத்மநாபன் சொல்றார்…இல்லைங்கறீயே..”

”என் வகுப்பில படிக்கிறவங்க..நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”

”ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?”

”மல்லிகாவும் என் கூடத்தான் வருவாள்..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்..”

”சுருதி…என்னைப் பொருத்தவரை இதெல்லாம் தப்பு..கன்னத்தில இடிக்கிறது. தோள்ல கையைப் போடறது.. நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம்..அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்…”

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள். ”நீங்க காலஜ்ஜூக்கெல்லாம் வராதிங்கப்பா,” என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். ”எப்ப காலேஜ் முடியும்?”

”தெரியாது..சிலசமயம் 4க்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால், 5கூட ஆகும்..”

”சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன். ”இன்று உங்களைப் பார்க்கவில்லையே?”என்றார்.

”நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.

”எத்தனை நாள்தான் உங்களால் சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்?”

”அதுதான் எனக்கும் புரியவில்லை..”

”இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..”

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள்.. அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், ”சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸை சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள்.

”சுருதிக்குத் திருமணம் ஆகப் போறது.. நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.

”சரி அங்கிள்… நாங்கள் இனிமேல் அப்படி வரமாட்டோம்,”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம். ”ஏன்பா..இப்படிப் பொய் சொல்றீங்க..அவங்க நல்லவங்கப்பா…சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்..”

”எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, சுருதி.”

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில்படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். ”அவர்கள் நல்லவர்கள்,”என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன். ”நானும் உங்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்..சுருதிக்கு என்னைத் தெரியாமல் இருப்பது நல்லது,”என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாக காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்று எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.

நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.. ”நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார். எனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகப் போன் செய்தார். ”அந்த நாலைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்துவிட்டாள். இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,”என்றார்.

எனக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை.

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்

கவிதை ஒன்று

கீழே
விழுந்துகிடந்த
ரூபாய்த் தாளை
எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
யார் யார்
கைகளிலிருந்து
தப்பி விழுந்ததோ
என்ன பாடுபட்டதோ
என்ன துரோகம் செய்ததோ

கவிதை இரண்டு

எண்ணற்ற வழிகளில்
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்
ஆனால்
சிலரை மட்டும் பார்க்கிறோம்
இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம்
இன்னும் இன்னும் சிலரிடம்தான்
உறவு வைத்துக்கொள்கிறோம்.

கவிதை மூன்று
நீண்ட
சோம்பல்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
நாற்காலியில்
உட்கார்ந்தால்போதும்
தூக்கம்
கண்ணைச் சுழற்றும்
ஒன்றும் தோன்றாமல்
ஒரு நிமிடம் என்னால்
இருக்க முடியவில்லை

கவிதை நான்கு

பிழிய பிழிய
மழைப்பெய்து
விழியை வைத்தது
கட்டுப்பாடற்ற முறையில்
ஒழுங்கு தப்பி
தெறித்தன வாகனங்கள்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….9

The Active side of infinity என்ற புத்தகம் Carlos Castenada எழுதியது. பல ஆண்டுகளுக்கு முன் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். இப் புத்தகத்தில் ஒரு விஷயம் என் மனதை விட்டு நீங்கவில்லை. நாம் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எத்தனையோ சம்பவங்கள் நம் முன்னால் நடக்கின்றன. நாமும் அதில் ஒரு பாத்திரமாக இருக்கிறோம். நம் முன்னால் நாமும் பாத்திரமாக மாறி நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சம்பவம் நடந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம். அப்போது நாம் கோபமாக இருக்கிறோமா துக்கமாக இருக்கிறோமா? ஒரு சம்பவம் நடந்து முடிந்தபின் அந்தச் சம்பவத்திலிருந்து விலகி நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம். Castenada சம்பவத்தை திரும்பவும் யோசிக்க சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஞாபக அடுக்கிலிருந்து எடுக்கச் சொல்கிறார். எடுத்து அதை படத்திற்கு ப்ரேம் போடுவதுபோல் ஞாபகத்திலிருந்து கொண்டு வரச் சொல்கிறார். அந்தச் சம்பவத்தை ஒரு சட்டம் மாதிரி உருவாக்கி அதை ஞாபகத்தில் பத்திரப்படுத்தச் சொல்கிறார். ஞாபகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் சம்பவம் என்கிற சட்டத்தை திரும்பவும் பார்க்கச் சொல்கிறார். அதில் நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம். பல ஆண்டுகள் கழித்து அந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, அதை Subject ஆகப் பார்க்காமல் Object ஆகப் பார்ப்போம்.

பிரமிளுடன் நான் விசிறி சாமியாரைப் பார்த்தது முதலில் விருப்பமாக இருந்தாலும், திரும்பி வரும்போது, கசப்பான அனுபவமாக எனக்குத் தோன்றியது. பல நாட்கள் பலரிடம் அந்தச் சம்பவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, ஏனோ விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. பிரமிளைப் பார்க்கும்போது விசிறி சாமியார் பற்றி அவர் குறிப்பிடுவதைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் விசிறி சாமியார் பற்றி என் மதிப்பு எந்த அளவிலும் குறையவில்லை. அவரைச் சந்தித்தவர்கள் அவரைப் பற்றி சொல்வதை என் ஞாபகத்தில் நான் பதிவு செய்திருக்கிறேன். பிரமிள் ஒரு முறை விசிறி சாமியார் ஒரு நாய் வைத்திருக்கிறார் என்றும், அந்த நாயிற்கு சாய்பாபா என்று பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். விசிறி சாமியார் யாரை விரும்புகிறாரோ அவர்தான் அவரைப் பார்க்க முடியும் என்றும் பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். யாரையாவது பார்க்க பிடிக்கவில்லை என்றால் விசிறி சாமியார் அவரைப் பார்க்க வந்தவர்களை போகும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுவார் என்று பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார். பிரமிள் பல சாமியார்களைப் பற்றி பல விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி பல சம்பவங்களை நாம் ஞாபகச் சட்டங்களாக மாற்றி, அந்த ஞாபகச் சட்டங்களைத் திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வருவது அற்புதமான ஒன்றாக அப்புத்தகம் குறிப்பிடுகிறது. நடந்து போன நிகழ்ச்சிகளை நாம் இப்படித்தான் அசை போட முடியும். ஆனால் நடந்து முடிந்த அச் சம்பவங்களுடன் இப்போது நமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதுமாதிரியான ஞாபகச் சட்டங்களை பிறருடன் பகிரவும் செய்யலாம்.

சி சு செல்லப்பா திருவல்லிக்கேணியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும்போது அவரைப் பார்க்கச் செல்வேன். தள்ளாத வயதில் தன் பிள்ளையுடன் இல்லாமல் தனியாக மனைவியை அழைத்து வந்துவிட்டார். மிகச் சின்ன ஒரு வீட்டில் குடியிருந்தார். ஃபேன் போடக்கூட மாட்டார். அந்த வயதில் சுதந்திர தாகம் என்ற அவர் நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் அவரை விட்டுப் போகவில்லை. அது எப்படி சாத்தியமாகுமென்ற திகைப்புத்தான் என்னிடமிருந்தது. ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போதும் ஞாபகச் சட்டங்களிலிருந்து பல விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒருமுறை அவர் க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது எனக்கு இன்னும் திகைப்பு ஏற்படாமலில்லை.

தமிழைப் பொறுத்தவரை எழுத்தால் அதிகப் பலன் அடையமுடியாது. எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்துவது என்பது ரொம்பவும் சிரமமான ஒன்று. திறமையானவராக இருந்தாலும் எழுத்து பசியைத் தீர்க்காது. தமிழ் எழுத்தாளர்களில் ஒருசிலரைத் தவிர வெற்றி கண்டவர்கள் மிகக் குறைவு. தமிழில் எழுதினால் அதிகப் பணம் கிடைக்காது என்பதால் ஆங்கிலத்தில் எழுதி சம்பாதித்தவர் க.நா.சு. எப்போதும் படிப்பதும் எழுதுவதும்தான் அவர் வாழ்க்கை. சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் மரணம் அடையும் முன்புகூட விக்கிரமாதித்யன் உள்பட பலரைப் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

சி சு செல்லப்பா க நா சுவைப் பற்றி சொன்ன விஷயம்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மயிலாப்பூரோ திருவல்லிக்கேணியோ க நா சுவிற்கென்று ஒரு இடத்தை தங்க ஏற்பாடு செய்தார் சி சு செ. க நா சுவிற்கு வாடகைக்கு விட்டவர், சி சு செ நம்பித்தான் வாடகைக்குக் கொடுத்துள்ளார். சில மாதங்களாக வாடகையை க நா சு கொடுக்காததால் அவரைப் பார்க்க வீட்டுக்காரர் வந்திருக்கிறார். வந்திருப்பவருக்கு ஒரே திகைப்பு. வீடு திறந்தே கிடந்தது. க நா சுவின் குடும்பமே இல்லை. “உங்கள் நண்பர் இப்படி செய்துவிட்டாரே?” என்று க நா சுவைப் பற்றி சி சு செல்லப்பாவிடம் முறையிட்டார் அந்த வீட்டின் சொந்தக்காரர். சி சு செல்லப்பாவிற்கு க நா சுவின் மீது பயங்கர கோபம். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், எப்பவோ நடந்த ஒரு சம்பவத்தை சி சு செல்லப்பா என்னிடம் சொல்லும்போது க நா சுவின் மீது அவருக்கு உள்ள கோபம் தீரவில்லை. எனக்கு இதைக் கேட்டபோது க நா சுவின் மீதுதான் அதிக இரக்க உணர்ச்சி ஏற்பட்டது. எந்த நிலைமையில் க நா சு யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். தமிழில் வெறுமனே எழுதி பணம் சம்பாதிக்க முடியாத நிலையில், யாரிடமும் சொல்லாமல் போவதென்றால்? எதுமாதிரியான பரிதாப நிலை? இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சி சு செ அவருடைய ஞாபக அடுக்கிலிருந்து வெளிப்படுத்திய விஷயத்தில் க நா சு மீது அவருடைய கோபத்தைத் தொடர்ந்ததாகவே எனக்குத் தோன்றியது.

(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….8

பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.

என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம்.

விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார்.

நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் தோன்றியவண்ணம் இருந்தன. சாமியாரெல்லாம் குழந்தை மாதிரி, அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை அறிய முடியாது என்று பிரமிள் குறிப்பிட்டார். நீங்கள் பெரிதாக இதைப் பற்றி நினைக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார். சாமியார் பிரமிள் கையை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஸ்பரிசம் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் கையைத் தொடும்போது அப்படித்தான் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் பிரமிள் குறிப்பிட்டார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் திருமணமே செய்து கொள்ளாதவர். அவருக்கு குடும்பமே கிடையாது. ஆரோக்கியமான பெண்ணின் கை எப்படி குளிர்ச்சியாக இருக்கும் என்பது அவருக்கு எப்படித் தெரியும். பிரமிளைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே இல்லை. மரியாதை நிமித்தமாக இதைக் கேட்கவில்லை.
(இன்னும் வரும்)

உங்களுடன் ஒரு வார்த்தை

நண்பர்களே,

இத்தனை நாட்களாக நான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணினி ஒத்துழைக்கவில்லை. எதிர்பாராதவிதமாய் ஏற்பட்ட விபத்தைச் சரிசெய்ய சரியாய் 2 வாரங்கள் ஓடிவிட்டன. நேற்றுவரை முரசு அஞ்சல் கிடைக்கவில்லை. இன்று ஒரு நண்பரின் புண்ணியத்தால் முரசு அஞ்சல் கிடைத்துவிட்டது. இந்த இரண்டுவாரங்களில் ஒரு கூட்டம் நடத்தினேன். அது குறித்து தகவல் தருவது அவசியம். சில புகைப்படங்களை இணைக்கவும் வேண்டும். அதேபோல் என் கட்டுரை நான், பிரமிள், விசிறி சாமியார்..தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும். எனக்குப்பிடித்த கவிதை, எனக்குப்பிடித்த கதை எல்லாவற்றையும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக நீங்கள் எழுதுவதையும் நான் பிரசுரிக்க வேண்டும். மெதுவாக நவீன விருட்சம் 84வது இதழை எல்லாருக்கும் அனுப்பிவிட்டேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும். அவர்கள் விபரங்கள் தெரிந்தால் அதையும் அனுப்பி விடலாம். இன்று புதியதாய் வருபவர்கள் பிரமாதமாய் எழுதித் தள்ளி விடுகிறார்கள். நான் நடத்திய கூட்டத்தில் blogல் எழுதும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது மகிழ்ச்சியான விஷயமாக எனக்குத் தோன்றியது.

திரும்பவும் தினம் தினம் சந்திக்க முயற்சி செய்யலாம்.

அன்புடன்

அழகியசிங்கர்

கூட்டம் பற்றிய அறிவிப்பு

விருட்சம் அழைக்கிறது
கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும்
ந.பிச்சமூர்த்தி எழுதிய ‘காதல்’ என்ற கவிதை மணிக்கொடியில் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.க.நா சுப்ரமணியம் ‘சரஸ்வதி’ யில் வெளியிட்ட புதுக்கவிதை என்ற கட்டுரைக்கு 50 வயது நிறைவடைந்துவிட்டது.சிறு இதழ்களின் முன்னோடியான ‘எழுத்து’ முதல் இதழ் வெளிவந்தும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் : ஞானக்கூத்தன் பேராசிரியர் சிவக்குமார்

நடைபெறும் நாள் : 16.08.2009 (ஞாயிற்றுக்கிழமை)நேரம் : மாலை 6 மணிக்கு
இடம் : கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம்
735 அண்ணா சாலை சென்னை 600 002 கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். கவிதைகள் குறித்து உரையாடவும் அழைக்கிறோம்.

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….7

பல ஆண்டுகள் கழித்து இச் சம்பவத்தைப் பற்றி எழுதுகிறேன். விசிறி சாமியாரும் இல்லை, பிரமிளும் இல்லை. விசிறி சாமியாரைப் பார்த்து, ”நீங்கள் ஏன் என்னிடமிருந்து சிகரெட்டிற்குப் பணம் வாங்கவில்லை,” என்று அப்போது கேட்க தைரியம் இல்லை. அப்படியே கேட்டாலும் விசிறி சாமியார் பதில் சொல்லியிருப்பாரா என்பது தெரியாது. ஆனால் விசிறி சாமியார் நான் ஆவலுடன் சிகரெட் வாங்க அவரிடம் பணம் நீட்டியபோது வாங்க மறுத்தது என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதுவரை உற்சாகமாக இருந்த நான் உற்சாகம்குன்றியவனாக மாறிவிட்டேன். ஏன் வருத்தமாகக் கூட மாறிவிட்டது? ஏன் இதுமாதிரி சாமியார்களெல்லாம் பார்க்கிறோம்? என்று கூடத் தோன்றியது. ஏன் என்னிடம் வாங்கவில்லை என்பதற்குக் காரணமெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுப் போய்விட வேண்டுமென்றுகூட தோன்றியது. எத்தனைப் பேர்கள் வழிபடுகிற சாமியார் உண்மையில் மிக முக்கியமானவர். அவர் இதுமாதிரி செய்ததற்கு எதாவது காரணம் இருக்குமென்று யோசித்தேன். மேலும் நான் சிகரெட் பிடிக்காதவன். அதனால் என்னிடமிருந்து அதை வாங்காமல் இருந்திருக்கலாமென்று நினைத்தேன்.

பிரமிளுக்கு நான்தான் பணம் செலவு செய்திருந்தேன். சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை. மேலும் சாப்பிட எல்லாவற்றிக்கும். இது எதாவது கர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியிருக்கும். சாமியாருக்கு இது தெரிந்திருக்கும். அதனால் சாமியார் என்னிடம் பணம் வாங்காமல் பிரமிள் மூலம் வாங்குகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும்போது வருத்தம் இன்னும் கூடி கூடிப் போயிற்று.

என் பக்கத்தில் இருந்த லயம் சுப்பிரமணியன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசாமல் இருந்தார். சிலசமயம் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் கூட வந்ததுண்டு. மனிதர் என்ன கல்லுப்போல அசையாமல் இருக்கிறாரே என்ற ஆச்சிரியம் கூட என்னிடம் சூழ்ந்து கொண்டது.

பிரமிளுக்கு லயம் சுப்பிரமணியன் மீது அவ்வளவு அன்பு. சத்தியமங்கலத்திலிருந்து சென்னைக்கு அவர் வருகிறார் என்பதை அறிந்தால் போதும் பிரமிள் அவ்வளவு உற்சாகப்படுவார். அவர் வருவதற்கு முன்பே என்னிடம் சொல்லி சொல்லி சந்தோஷப் படுவார். சுப்பிரமணியனும் சென்னை வந்தால் பிரமிள் இருக்குமிடத்தில்தான் இருப்பார். பிரமிள் அவரை சுப்பு சுப்பு என்று ப்ரியமாகக் கூப்பிடுவார். பிரமிளுடைய அத்தனை எழுத்துக்களையும் புத்தகங்களாகப் பிரசுரம் செய்ய சுப்புவிடம்தான் அதிகாரம் அளித்திருந்தார். சாமியாரிடம் பெட்டி பாம்பாக அடங்கி இருந்த பிரமிளிடம் நட்பு கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. என்னிடம் ஒரு சமயத்தில் நன்றாகப் பழகுவார். சிலசமயம் கிட்டவே நெருங்க விட மாட்டார்.

ஒரு முறை என்னிடம் கோபம். ஏன் கோபம் என்பதை வெளிப்படையாகவும் சொல்ல மாட்டார். ஜே கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்தால் ஞாயிற்றுக்கிழமையெல்லாம் காலை நேரத்தில் கேள்வி பதில் கூட்டம் நடத்துவார். பெரும்பாலும் கேள்வி கேட்பவர்கள் கிருஷ்ணமூர்த்தியை எதாவது கேட்டு காயப்படுத்தி விடுவார்கள். ஒருவர் கேட்கிறார் : ” நீங்கள் ஏன் இவ்வளவு ஆடம்பராகவும் ரொம்பவும் தூய்மையாகவும் டிரஸ் செய்து கொள்கிறீர்கள்?” இந்தக் கேள்வியைக் கேட்டவுடன்கிருஷ்ணமூர்த்தி எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று திகைப்பாக இருந்தது. ”மற்றவர்களுக்கு மரியாதைத் தர” என்ற கிருஷ்ணமூர்த்தியின் பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் உடனே பதில் சொல்லிவிட்டார். அந்தக் கூட்டம் நடக்கும்போதுதான் பிரமிள் எங்கே என்று துழாவிப் பார்த்தேன். அவர் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தது தெரிந்தவுடன், நானும் அங்கு போய் பக்கத்தில் அமர்ந்துவிடுவேன். பிரமிள் என்னைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு திசையிலிருக்கும் ஓரிடத்தில் போய்விடுவார். என் மீது ஏதோ கோபம். நானும் விடாமல் அவரைத் தொடர்வேன். இடம் மாறி மாறி முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொள்வார்.
(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….6

இந்தத் தொடரில் நான் பிரமிளைப் பற்றி எழுதுகிறேனா விசிறி சாமியார் பற்றி எழுதுகிறேனா அல்லது என்னைப் பற்றி எழுதுகிறேனா?
விசிறி சாமியாரைப்போல் அட்டகாசமான சாமியாரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு முதலில் திகைப்பாக இருந்தது சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து. பின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் மாலைகளைப் பார்த்து திகைப்பாக இருந்தது. மாலைகள் முழுவதும் தூசிகள் நிரம்பி வழிந்தன. அவர் கட்டளை யார் யார் எங்கே உட்கார வேண்டும். நான் போய் முன்னால் உட்கார முடியாது. சாமியார் கட்டளை இடுகிறார் பிரமிள்தான் முதலில் உட்கார வேண்டுமென்று. அடுத்தது லயம் சுப்பிரமணியன். மூன்றாவதுதான் நான். அந்தப் பகுதியிலிருந்து நான்தான் முதல். ஆனால் பிரமிள்தான் அவர் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தார். அடிக்கடி முதுகில் ஷொட்டுகளை வாங்கிக்கொண்டு.
ஏன் சாமியார் இதெல்லாம் செய்கிறார் என்று எனக்குத் தோன்றாமலில்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு மாதிரி தோன்றியது. சாமியார் ஒரே நிமிஷத்தில் என் மூடை மாற்றுகிற காரியத்தைச் செய்தார். அவர் கையில் வைத்திருந்த Passingshow சிகரெட் தீர்ந்து விட்டது. பிரமிள் சிகரெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார். சாமியார் சரி என்றார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து சிகரெட் வாங்க பைசா கொடுங்கள் என்றார். பிரமிளிடம் பைசா இல்லை. அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போகும் செலவை நான் ஏற்றக்கொண்டிருந்தேன்.
நானும் உற்சாகத்துடன் சிகரெட் வாங்க சாமியாரிடம் பணத்தை நீட்டினேன். ஆனால் சாமியாரோ என்னிடமிருந்து சிகரெட் வாங்க மறுத்துவிட்டார். இன்னொன்றும் சொன்னார். சிகரெட் வாங்கும் பணத்தை பிரமிளிடம் கொடுக்கச் சொன்னார். நானும் சாமியார் சொன்னபடி பிரமிளிடம் கொடுத்தேன். பிரமிள்தான் என்னிடம் வாங்கிய பணத்தை சிகரெட் வாங்க சாமியாரிடம் கொடுத்தார்.

அந்த நிகழ்ச்சி நடந்தபிறகு நான் சாதாரண நிலையில் இல்லை. ஏன் சாமியார் என்னிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தார் என்ற கேள்வி என்னை குடை குடையென்று குடைந்துகொண்டிருந்தது. என் முகம் வாடிவிட்டது. நான் எப்போதும் போல் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் நண்பர் எஸ் சண்முகத்திடம் இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவர் சாமியாரும் சிபிஐக்காரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம் மூளையை அவர்கள் முன்னதாக நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்கள். முளைக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்துவது அவர்கள் வழக்கம். உங்கள் இயல்புநிலையை சீர்குலைக்கும் உத்தியாகக் கூட இருக்கும் என்று கூறியதாக ஞாபகம்.
சாமியாருக்கு உதவி செய்யும் பையன் ஒருவன் அவருக்கு சிகரெட் வாங்கி வந்தான். பிரமிள் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இன்னொன்று சொல்லியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி ஒருவரைத் தொட்டால் ஒன்றுமில்லை. ஆனால் நாம் கிருஷ்ணமூர்த்தியைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால் நமக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு விசிறி சாமியார் மீதுள்ள என் மரியாதை கொஞ்சங்கூட குறையவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு சாமியார் எல்லோருக்கும் கொய்யாப்பழத்தைப் பிண்டு கொடுத்தார். முதலில் எனக்குத்தான் கொடுத்தார். எனக்கு கொய்யாப்பழம் என்றால் ரொம்பவும் உயிர். நான் விரும்பி சாப்பிடும் பழங்களில் இதுவும் ஒன்று. எப்படி சாமியாருக்கு எனக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன்.
(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….5

பிரமிள் எண் கணிதம் என்று சொல்வதை விசிறி சாமியார் வேறுவிதமாக சொல்கிறார் என்று தோன்றியது.ஆனால் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது விசிறி சாமியார் எங்கள் மூவருக்கும் பால் கொடுத்தார். ஒரு தம்ளரில்தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.. நடுவே நடுவே Passingshow சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். விசிறி சாமியார் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை பிரமளிடம் கொடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்கும்படி கூறினார். பிரமிள் பயப்பக்தியுடன் எடுத்துப் படித்தார். திடீரென்று பிரமிள் முதுகில் ஒரு ஷொட்டு. பிறகு அவருடைய கையை வெகுநேரம் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கோ இதெல்லாம் ஆச்சிரியமாக இருந்தது. நடுவில் அமர்ந்திருந்த லயம் சுப்பிரமணியம் எந்தவித சலனத்தையும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானோ அவர்கள் பேசுவதைக் கேட்டு பரவசம் அடைந்து விட்டேன். ”பேசுவது ரொம்ப interesting ஆக இருக்கிறது,” என்று வேறு சொன்னேன்.
இப்போது ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இருவரும் பேசினார்கள். அந்தக் காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டுப் போனார்கள். நாராணோ ஜெயராமன் (வேலி மீறிய கிளைகள்) கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார். யார் எது எழுதினாலும் ஜே கிருஷ்ணமூர்த்தியை மீறி எழுதிவிட முடியாது என்று என்னிடம் கூறுவார். பிரமிள் கூட ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டு விட்டார் என்று எனக்குத் தோன்றும்.
விசிறி சாமியாரும், பிரமிளும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். முதலில் விசிறி சாமியார், ”இந்தப் பிச்சைக்காரன் ஒரு முறை, அப்பாய்ண்ட்மென்ட் எதுவும் இல்லாமல் வசந்த் விஹாரில் தங்கியிருந்த ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன்…அங்குள்ளவர்களிடம் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். முன்னதாக அப்பாண்ட்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று பார்க்க விடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது ஜே கிருஷ்ணமூர்த்தி மாடிப்படியிலிருந்து இறங்கிநடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஒரு முறை பார்த்தார். பின் என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்,” என்று கூறினார் விசிறி சாமியார். உடனே பிரமிள், ”நானும் ஒருமுறை என் வாழ்க்கையில் தாங்க முடியாத பிரச்சினையாக இருந்தபோது, ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன். என்னிடம் வாழ்க்கையைப் பற்றி கேட்க ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருந்தேன். அவரை தனியாக சந்திக்க வேண்டுமென்று அனுமதி கேட்டேன்… அனுமதி தந்தார்கள். உள்ளே நுழைந்து கிருஷ்ணமூர்த்தி முன் அமர்ந்தேன். ஒருமுறை அவர் என்னை உற்றுப் பார்த்தார்…என்னமோ தெரியவில்லை…நான் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை…என் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிட்ட மாதிரி தோன்றியது. நான் அவரிடம் எதுவும் பேசவில்லை,” என்றார்.என் நண்பன் ஒருவன் கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்டுவிட்டு வரும்போது எக்ஸ்பிரஸ் காப்பி குடித்த மாதிரி இருக்கும் என்பான். பின் அதன் effect போய்விடும் என்பான். பிரமிள் வேடிக்கை. ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் மாலை மயிலாப்பூரிலுள்ள ஷீரிடி சாய்பாபா கோயிலுக்குப் போவார். அதேபோல் சனிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீடியோ பேச்சைக் கேட்க மாலை வந்துவிடுவார். இதை ஒரு கடமைபோல் செய்து கொண்டிருந்தார்.
(இன்னும் வரும்)