எதையாவது சொல்லட்டுமா / 14

தமிழில் விமர்சர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் க.நா.சுதான் தமிழில் விமர்சனத்தைத் தொடங்கி வைத்தார். படைப்பாளியாக இருந்த க.நா.சு விமர்சனத்தையும் ஆரம்பித்து வைத்தார். அவருடன் அதை வளப்படுத்திய பெருமை சி சு செல்லப்பாவிற்கும் உண்டு. க.நா.சு ஒரு முறை என்றால், சிசு செல்லப்பா வேறு முறையில் விமர்சனத்தை அணுகினார். சி சு செல்லப்பா மேலை நாட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு தமிழில் அது மாதிரி முயற்சியை மேற்கொண்டார். க நா சு எந்தத் தியரியையும் படிக்கவில்லை. அவர் படிக்கிற புத்தகங்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார். பத்து பேர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதை எதிர்த்தவர்களும் உண்டு. வேகமாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு வேகமாக அபிப்பிராயம் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தவரும் க.நா.சுதான். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். அலசல் முறை விமர்சனம் என்று மேலே போக முடியவில்லை. க.நா.சுவோ அப்படியில்லை. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைளையும் பற்றியும் எழுதி விடுவார்.
விமர்சனத்திற்கென்று தனி கவனம் செலுத்திய க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் வளர்த்த விமர்சன பண்பு இன்று பலரால் பின்பற்றப்படுகிறது. மார்க்ஸிய முறை, பின் நவீனத்துவ முறை என்றெல்லாம் பலர் விமர்சனத் துறையில் இறங்கி விட்டார்கள். எப்போதுமே படைப்பாளிகளை விட விமர்சர்கள் ஒரு படி தாழ்வுதான். விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்தவர்களுக்குப் பெரிதாக பரிசு எதுவும் கிடைத்துவிடாது. பொல்லாப்பு அதிகமாக சேரும். நடுநிலைமையோடு புத்தகம் விமர்சனம் செய்வது சாத்தியமா என்பதும் கேள்விக் குறியே?70 வாக்கில் விமர்சனம் தனி நபர் தாக்குதலாக மாறிவிட்டது. இதனால் வளர வேண்டிய பத்திரிகைகள் ஒழிந்து போனதுதான் சாத்தியமாயிற்று. அன்றைய விமர்சர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், படைப்பிலக்கியத்துக்குத் தர வேண்டிய மரியாதைப் போய்விட்டது. நான் ஒரு முறை பிரஞ்ஞை என்ற பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன். எனக்கு தலையைச் சுற்றுவதுபோல் தோன்றியது. தனிநபர் தாக்குதலுக்காகப் பத்திரிகையின் பக்கம் முழுவதும் வீணடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் விமர்சனத்திற்காக அல்ல. விமர்சனம் என்ற பெயரில் முன்வைத்த சண்டைக்காக. விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படிக்க தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர, படைப்பை ஒழிக்கக் கூடாது.
க.நா.சு, சி சு செல்லப்பா காலத்தில் தனிநபர் தாக்குதல் நடைபெறவில்லை. புத்தகம் பற்றி விமர்சனம் மட்டும் இருக்கும். இன்றைய காலத்தில் புத்தக விமர்சனம் சாயங்களுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன. தலித் என்கிற சாயம், பெண்ணியம் என்கிற சாயம், ஜாதி என்கிற சாயம்..பின் நவீனத்துவம் போக்கை வளர்த்தவர்களில் தமிழவன், நாகார்ஜூனம் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். அவர்களால் வளர்ந்தவர்கள்தான் சண்முகம் போன்ற சிலர். சண்முகம் முதலில் கவிதை எழுத ஆரம்பித்தவர், பின் விமர்சனத்திற்கு தாவிவிட்டார்.
ஒரு புத்தகத்தைப் பற்றி எதிரான கருத்தைத் தெரிவித்தால் அது படைப்பாளிக்கு பாதகமான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாள நண்பர். அவர் ஒரு பாதரியார். பழக நல்ல மனிதர். தீவிரமாக சிந்திப்பவர். கவிதை எழுதுபவர். அவர் கவிதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார். அவர் புத்தகத்தை இன்னொரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். இன்னொரு இலக்கிய நண்பரும் கவிதைகள் எழுதுபவர். அவர் புத்தகம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் பாதரியார் நண்பருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
எனக்கும் புத்தக விமர்சனம் எழுதுகிற அனுபவம் உண்டு. அதனால் சில சங்கடங்களைச் சந்தித்ததுண்டு. விருட்சத்திற்கும் வரும் புத்தகங்கள் சிலவற்றை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். ஒரு சிறுகதை எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விமர்சனம் எழுதினேன். என் மனசில் அப்போது என்ன பட்டதோ அதை எழுதினேன். மொத்தமே விருட்சத்தில் 2 பக்கங்கள்தான் எழுதியிருப்பேன். அந்தச் சிறுகதை எழுத்தாளர் என்னைப்போல் வங்கி ஊழியர். மேலும் எங்கள் 2 பேர்கள் வங்கிகளும் பக்கத்திலேயே இருந்தன. ஒருநாள் மாலையில் அவரிடம் மாட்டிக்கொண்டேன். ”வாருங்கள் டீ சாப்பிடலாம்,” என்று பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு போனபிறகுதான் தெரிந்தது. என்னைத் திட்டுவதற்காக அழைத்துப் போகிறார் என்று. அவர் வைத்திருந்த பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து சில கடிதங்களை எடுத்துக் காட்டினார். ”இதப் பாருங்க..குமுதம் ஆனந்தவிகடனிலிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன..கதை அனுப்பச் சொல்லி…..உங்கப் பத்திரிகையை எத்தனைப் பேர் படிப்பாங்க….100 பேர்…200பேர்….புத்தகம் விமர்சனமா எழுதறீங்க…புத்தக விமர்சனம்…” என்று ஒரு பிடிபிடித்தாரே பார்க்கலாம், என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. உண்மையில் நான் எழுதினால் மேலே அவர் சொன்ன பத்திரிகைகளில் வராது…மேலும் எனக்கு அவருக்குக் கிடைத்த பெயர் இல்லை…அன்று பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த எழுத்தாளருடன் ஏற்பட்ட அனுபவத்தோடு நிற்கவில்லை, அந்தப் புத்தகத்தை அச்சட்டவரிடமும் மாட்டிக்கொண்டேன். அவர் ஒரு கேள்வி கேட்டார்: ”அப்படி என்ன சார் எழுதிட்டீங்க..அது என்ன பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடுமா…ஏன் சார், புத்தகம் படிக்காமலே பார்த்தால்போதும் அலுப்பு வந்துவிடுமா..?”என்றாரே பார்க்கலாம்.. அப்புறம்தான் தெரிந்தது. நான் எழுதும்போது என்னை அறியாமலே பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று எழுதியிருக்கிறேன் என்று. வீட்டிற்கு வந்து விமர்சனம் வந்திருந்த விருட்சம் இதழைப் புரட்டிப் பார்த்தேன். ஆமாம். அப்படித்தான் எழுதியிருந்தேன். பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

எதையாவது சொல்லட்டுமா….13

July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை. நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்படி ஞாயிற்றுக்கிழமை அங்கிருக்கும்போது பரபரப்பாக இருப்பேன். எப்படி பரபரப்பைக் குறைப்பது என்பதே என் ஞாயிற்றுக்கிழமைப் பயணமாக இருந்தது. பின் அந்தப் பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டு விடுகிறது. திங்கள் கிழமை (28.12.2009) விடுமுறை வந்ததால் அதை நன்றாகப் பயன்படுத்தினேன். திங்கள் மதியம் கூட்டம். எஸ். சண்முகம் பேசினார். வழக்கம்போல் முதல்நாள் எல்லோரையும் போனில் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் தமிழச்சி பாண்டியனின் புத்தக விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். போனில் தொடர்பு கொண்டபோது, ‘இதோ போய்க் கொண்டிருக்கிறேன் வண்டியில்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் பலரை போனில் கூப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன். நானும் 7 மணிக்கு அங்குக் கிளம்பிச் சென்றேன். தாங்க முடியாத கூட்டம். ஸ்டாலின் தலைமையில் நடப்பதால் கட்சிக்காரர்களின் கூட்டமும் சேர்ந்து கொண்டு விட்டது. நான் உள்ளே நுழைந்தபோது ஹால் முழுக்க ஒரே கூட்டம். பலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரைப் பார்த்தேன். பேசவில்லை. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் பயம். கூட்டம் நடத்தும் நாளன்று காலையில் திரும்பவும் இலக்கியம் பேசும் நண்பர்களைக் கூப்பிட்டேன். கூப்பிட்டாலும் யாரும் வரப்போவதில்லை என்றுதான் மனதில் தோன்றி கொண்டிருந்தது. அதேபோல்தான் ஆயிற்று. 5 பேர்கள்தான் வந்திருந்தார்கள். என்னையும் சண்முகத்தையும் சேர்த்தால் 7 பேர்கள். 10 ஆண்டுகளுக்கு முன் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்றால் படப்படப்பாக இருப்பேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. கூல் என்று சொல்லிக்கொண்டேன். வழக்கம்போல் கூட்டம் விறுவிறுப்பாக 3 மணிநேரம் வரை ஓடியது. பேச்செல்லாம் ஆடியோ காசெட்டில் ரிக்கார்ட் செய்தேன். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது டீக் கடையில் டீயைக் குடித்தபடி பிரிந்தோம்.அடுத்தக் கூட்டத்தை வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது பூங்காவிலோ நடத்துவது என்று தீர்மானித்தேன். அது இன்னும் எளிமையானது. லைப்ரரி கட்டடத்தில் வைத்தால் இனி 300 ஆகும். பூங்காவில் அதுகூட ஆகாது. கூட்டத்தில் என்ன பேசினார் என்பதைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

எதையாவது சொல்லட்டுமா….12

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார்.

இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பாலகுமாரன் ஆரம்ப எழுத்தாளர். சுஜாதா தடுமாறி தடுமாறிப் பேசியதாக ஞாபகம். ஏன் இதெல்லாம் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் இப்போதெல்லாம் தொடர் கதைகள், சிறுகதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. இன்று இது பெரிய ஆபத்து என்று தோன்றுகிறது. வெறும் செய்திகளை மட்டும் தீனியாக இப் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பிரபல பத்திரிகைகள் மூலம்தான் தீவிர இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்க வாசகர்கள் தயாராவார்கள். தமிழில் படிப்பது என்பதை முதலில் இப் பத்திரிகைகள் மூலம்தான் உருவாக்க முடியும். அதனால் அன்றைய வாசகர்களுக்கு கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றில் அறிமுகம் கிட்டின. ஆனால் இன்றைய வாசகர்கள் இப்பத்திரிகைகளில் வெளிவரும் மேம்போக்கான செய்திகளை மட்டும் அறிகின்றனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும். கதை என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பத்திரிகை மூலம் படிப்பது வேறு, நேரிடையாக ஒரு நாவலைப் படிப்பது என்பது வேறு. இந்தப் பெரிய பத்திரிகைகள் தப்பான அறிமுகமாக ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. அக் கதைகள் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.

மேலும் இப் பத்திரிகைகள் செய்திகளை, குறிப்பாக சினிமா செய்திகளை வாரி வழங்குகின்றன. நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுப்புகள் அதிகம். அரசியல் எல்லாம்.

தினசரிகளான தினமணி, தினமலர் எல்லாம் செய்திகளை வாரிவழங்குகின்றன. இச் செய்திகள் மூலம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அறிவுபூர்வமாக தினமணி தலையங்கங்களை எழுதுகின்றன. உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை எப்படி கிளுகிளுப்பாக மாற்றுவது என்ற கலையை தினமலர் செய்து காட்டுகிறது. இன்னும் பல செய்தித் தாள்கள் இப் பணியை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் கதைகளேளா, கவிதைகளோ, தொடர் கதைகளோ நடைபெறவில்லை. வாசகர்கள் இச் செய்திகளைப் படித்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. கதை எழுதுபவர்கள் செய்தி மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம் என்றாலும், கதை என்பது வேறு, செய்தி என்பது வேறு. செய்தி நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கொடுக்கும். ஆனால் கதைகள் வாழ்க்கையின் கூறுகளை யதார்த்தங்களை மனதை உலுக்கும்படி வெளிப்படுத்தும்.

செய்திகள் ஒரு கட்டத்தில் நின்று விடும். ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி விட்டு அடுத்த அதிர்ச்சியான செய்திக்குத் தாவிவிடும். கதையோ அப்படி அல்ல. எழுதப்பட்டவுடன் பலமுறை படிக்க படிக்க வாழ்க்கையை வேறுவிதமாகப் புரிய உதவி செய்யும்.

இப்பத்திரிகைகள் செய்திகளை கதைமாதிரி சுவாரசியமாக எழுதினால், கதையில் நிற்கக் கூடிய உணர்வை, புத்திக்கூர்மையை அவை வெளிப்படுத்த முடியாது. செய்தி அப்படியே நின்று விடும். கதை நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தக் கதைத் தன்மையே முழுவதும் அழிந்துவிடும் நிலையில் செய்திகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளன. வாசகர்களும் செய்திகளுடன் நின்று விடுகின்றனர்.

இன்று சிறுபத்திரிகைகள் மட்டும் கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் அதிகம் வாசகர் இல்லாத சிறுபத்திரிகைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது.
சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங்கள் என்னை விட்டு நகரவே இல்லை.
இன்னும்கூட புத்தகம் கொண்டுவருவதில் ஒருவித சந்தோஷம் என்னை விட்டு அகலவில்லை. ஆனால் புத்தகம் எப்படி விற்பது? அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப் படுகிறார்கள். என் தந்தை என்னிடம் புத்தகம் கொண்டு வருகிறாயே, எவ்வளவு செலவு செய்கிறாய் என்று கேட்காமல் இருப்பதில்லை. ரொம்பவும் குறைவான எண்ணிக்கையில் புத்தகம் கொண்டு வந்தாலும் என்னைவிட கவலை அவருக்கு அதிகமாகவே உள்ளது. ஏன்? அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார்..நீ செலவு செய்கிறாயே? எவ்வளவு பணம் உனக்குத் திரும்பவும் கிடைக்கிறது? இதற்கு பதிலே சொல்ல வரவில்லை. நான் ஒரு இடத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். என் மனைவி அந்த இடத்திற்கு வருவதற்கே பயப்படுகிறாள். நியாயம்தான் அவள் பயப்படுவது. கொஞ்சம் யோசித்தால் நானும் பயப்படத்தான் செய்வேன்.
முன்பெல்லாம் நான் புத்தகங்களை சில இடங்களுக்கெல்லாம் அனுப்புவேன். கொஞ்சமாவது பணம் வரும். இப்போதெல்லாம் பணமும் வருவதில்லை..புத்தகமும் கேட்பதில்லை..
வெங்கடேஷ் சொல்வதுபோல் யாராவது புத்தகம் விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். 50% கொடுத்து விடுகிறேன். இதை யாரும் செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புத்தகம் போடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி இறங்குவதில் எனக்கு முழுக்க நம்பிக்கை இல்லை. உண்மையில் என்னுடைய வேலைதான் புத்தகம் போடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். நான் போடும் புத்தகங்கள் எல்லாம் Non Performing Asset என்று.
குறைந்த எண்ணிக்கையில் போடும் புத்தகமே ஆயிரக்கணக்கில் என்னிடம் குவிந்து கிடக்கிறது. வைக்க இடம் இல்லாமல் காலடியில் கவிதைப் புத்தகங்கள் இடறிக் கிடக்கின்றன. இதோ கடலின் மீது ஒரு கையெழுத்து என்ற பெயரில் லாவண்யாவின் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். காலடியில் இன்னொரு கவிதைத் தொகுதி.

எதையாவது சொல்லட்டுமா 10

ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார்.
அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல் தனியாரிடம் வாங்கிவிட்டார். பையன் தலை தூக்கினால் எல்லாம் பொடி பொடியாகிவிடும். அதுதான் தாமதம் ஆகிறது. மகாலிங்கம் என்னுடன் பேசிக்கொண்டே வரும்போது சோகமான பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வந்தார்.
”என்னயாயிற்று?” என்று கேட்டேன். அப்போதுதான் கடன்காரர்களின் நச்சரிப்பைப் பற்றி குறிப்பிட்டார். ”முதலில் இந்தச் சோகமான பாட்டுக்களையெல்லாம் பாடாதீர்கள்,” என்றேன்.
இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேனென்றால், சினிமா பாட்டுகள் மனிதன் மனதுள் புகுந்துகொண்டு பிறாண்டும் ரகளையைப் பற்றிதான். நான் அலுவலகம் கிளம்பும்போது பஸ் பாடாமல் இருக்காது.. எரிச்சலாக இருக்கும். சத்தமாகக் கேட்டுக்கொண்டே போக வேண்டும். எனக்கும் சினிமாப் பாடல்கள் பல நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும். பொதுவாக சோகமான நிகழ்ச்சிகளை அதிகமாக ஞாபகப்படுத்தும். குர்பானி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்களைக் கேட்டால் அது என் திருமணத்தை ஞாபகப்படுத்தும். பாக்கியராஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பாரதிராஜா படத்தின் பாடல்களைக் கேட்கும்போது என் நண்பன் இறந்த ஞாபகம் வரும். ஒரு சினிமா பாடல் ஒளிமயமான எதிர்காலம் பற்றி குரலெழுப்பிக் கொண்டிருக்கும். உண்மையில் சினிமாப் பாடல்களுடன் நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்வதைப் போல் ஒரு முட்டாள்தனத்தை குறித்து என்ன சொல்வது?
நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் நடந்தே தீரும். அதற்கும் இந்தச் சினிமாப் பாடல்களுடன் முடிச்சுப் போடக்கூடாது. சினிமாப் பாடல்களைக் கேட்டு அதன் மூலம் தீர்வு காணக்கூடாது. சினிமாப் பாடல்களுடன் நம் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டத்துடன் முடிச்சுப் போடக் கூடாது.
நான் ஒவ்வொரு நாளும் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சினிமாப் பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியாது.

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும்.இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள். உள்ளே சாப்பிட ஓட்டை ஒடிசலான நாற்காலிகள். டைனிங் டேபிள் கிடையாது. இதைத் தவிர சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாம்பு எதாவது வந்துவிடுமா என்ற பயமும் எனக்குண்டு. அங்கும் கழிவறை மோசம். தாழ்பாள் கிடையாது. ஒரு பக்கம் கையால் கதவைப் பிடித்துக்கொண்டுதான் யூரின் போகமுடியும். நான் சென்னையில் 18 மாதங்கள் பணிபுரிந்த ஹஸ்தினாபுரம் கிளையில் கழிவறை அடைத்துக்கொள்ளும். பீக் சம்மரில் தண்ணீர் வராது. அவஸ்தைதான்.
நான் சென்னையைக் கடந்தபிறகு என் நினைவெல்லாம் கழிவறைகளைப் பற்றிதான். கும்பகோணம் வட்டார அலுவலகத்திலும் கழிவறைப் பார்க்க சகிக்காது. ஏண்டா உள்ளே நுழைகிறோம் என்று இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். 406 சதுர அடிகள் என்று பெயர். அந்தப் பெயரில் ஒரு புத்தகமும் போட்டிருக்கிறேன். எலிகண்ட் ப்ளாட் பிரமோட்டர்கள் 406 சதுர அடியில் ஒரு சின்ன அடுக்ககம் கட்டித்தந்தார்கள். உண்மையில் நான் ஏமாந்துவிட்டேன். அந்த இடம் கட்டித் தரும்போது இப்படித்தான் அமையப்போகிறது என்று சற்றும் எண்ணவில்லை. மாம்பலத்தில் ஏற்கன஧அவர்கள் கட்டித் தந்த இடத்தைப் பார்த்த பிறகுதான் இந்த இடத்தைப் புக் செய்தேன். படுபாவி கட்டி முடித்தப் பிறகுதான் தெரிந்தது. கழிவறை மோசமாக இருக்கிறதென்பது. அதைப் பார்த்த என் அலுவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணி, ‘டாய் டாயலட்’ மாதிரி இருக்கிறது என்றாள். எனக்கு அவமானமாக இருந்தது.
எதாவது ஒன்று சரியில்லை என்றால், அதைப் பற்றியே நான் நினைத்துக்கொண்டிருந்தால் எனக்குக் கனவு வரும். ஒரு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் அந்த இடத்தில் உள்ள சமையலறை சன்னலைப் பிடித்துக்கொண்டிருப்பது போல் ஒரு கனவு. வாடகைக்கு அந்த இடத்தை விடும்போது யாரும் குண்டாக வாடகைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். ஏன்என்றால் டாயலட்டைப் பயன்படுத்தப் படாதபாடு படுவார்கள்.
அந்த அடுக்ககம் கட்டி முடித்துத் தரும்போது, நடிகர் திலகம் சிவாஜி ஞாபகம்தான் வரும். ரொம்ப குண்டாக மாறி விட்டிருந்தார் அந்தச் சமயத்தில். அவர் என் அடுக்ககத்தில் வந்திருந்து வீட்டு டாயலட்டைப் பயன்படுத்தினால், உட்கார்ந்தால் அவரால் எழுந்திருக்கவே முடியாது. தண்ணீரையும் பயன்படுத்த முடியாது.
நான் அந்த அடுக்ககத்தை யார் பேச்சையும் கேட்காமல் வாங்கியிருந்ததால், என் மனைவி என்னுடன் 1 மாதம் மேல் பேசக்கூட இல்லை. அவ்வளவு கோபம். பிரமிள் சாந்தோமில் மீனவர்கள் குப்பத்தில் பொது கழிவறை பக்கத்தில் ஒரு அறையில் குடியிருந்தார். மழை காலங்களில் கழிவறையிலிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். மனிதர் பட்டப்பாடை நான் அறிவேன்.

எதையாவது சொல்லட்டுமா / 8

சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பார்த்து கண் சிமிட்டும்.
உத்யோகமின்றி பல நண்பர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். புத்தகம் போடுவதையும், பத்திரிகை நடத்துவதையும் நிறுத்தும்படி ஆகிவிடும். ஏதோ உத்தியோகத்தில் இருப்பதால் இந்த மட்டும் ஆண்டொன்றில் வாங்கும் Festival Advance ம், Medical Bill ம் விற்காதப் புத்தகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி சு செல்லப்பாவின் ராமையாவின் சிறுகதைப்பாணி புத்தகம் கடையில் போட்டால் கிலோ என்ன விலைக்கு எடுத்துக்கொள்வான் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நல்லவேளை அலுவலகம் என்னை தற்காலிகமாக காப்பாற்றி விட்டது. நானே எதிர்பார்க்காத சீர்காழி என்ற ஊருக்கு என்னை அனுப்பி விட்டது. முன்பு பந்தநல்லூர் மாதிரி இப்போது மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வந்தும் போயும் கொண்டிருக்கிறேன். சனிக்க்஢ழமைகளில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.
2 வாரங்களாக டூவீலரைக் கொண்டுவர படாதபாடு பட்டேன். விடுமுறை அதிகமாக எடுத்துவிட்டதால், லீவு என்றால் மூச்…மடி கணனி வந்துவிட்டதால் எல்லோருடனும் தினமும் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை விட படு மோசமான நிலையிலும் உத்தியோகத்தைப் பிடித்துக்கொண்டு தலை விதியே என்று இருக்கும் பல நண்பர்களின் சோகக் கதை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். அவர்களும் என்னுடன் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். என்ன சரியா?
(இன்னும் வரும்)

நான், பிரமிள், விசிறிசாமியார்……11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்து வந்தார். பொது கழிவறை பக்கத்தில் அவர் அறை இருந்தது. தமிழில் முக்கியமான படைப்பாளியான பிரமிள், யார் கவனமும் இன்றி தனிமைவாசியாக இருந்தார். எனக்கு அவர் நிலையைப் பார்த்து வருத்தமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் இருந்தார். பொதுவாக எழுதுபவர்களெல்லோரும் ஒரு மாதிரியான நிலையில்தான் இருப்பார்கள். ஏன் எழுதுபவர்கள் இல்லாமலே சாதாரண மனிதர்களே அப்படித்தான் இருப்பார்கள். எதாவது ஒன்றில் தீவிரமாக இருப்பவர்கள் அமைதியில்லாமல்தான் இருப்பார்கள். எதாவது ஆசை மனதில் பிடித்துக்கொண்டால் அந்த ஆசையை விட்டு வர முடியாது. இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது. ‘என்னிடம் அதிகமாக பணம் தங்கக் கூடாது. நான் எப்போதும் பிச்சை எடுப்பவனாகத்ததான் இருக்க முடியும்,’ என்பார் பிரமிள். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும். அலுவலகத்தில் என்னைப் பார்க்க வரும்போது, அலுவலகப் பெண்மணி ஒருவரைப் பார்த்து சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார் ஒருநாள். எனக்குத் திகைப்பாக இருந்தது. அந்தப் பெண்மணியின் பெயர் சித்திரா. எப்படி அவருக்கு அப்படி செல்லவந்தது என்று யோசிப்பேன். ‘ஒரே விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்,’ என்பார் பிரமிள். என் இயல்பு நான் எதாவது ஒன்றை ரசித்தால் அதில் நுழைந்து விடவேண்டும் என்று நினைப்பவன். சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போது நானும் கிரிக்கெட் வீரனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு மருத்துவனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். ஞாநி நடத்திய பரீக்ஷா நாடகத்தில் நான் நடித்தபோது ஒரு மெச்சத்தகுந்த நடிகனாக மாற வேண்டுமென்று கற்பனை செய்வேன். நான் எழுத ஆரம்பித்தபோது நான் எழுதுவதையெல்லாம் எல்லோரும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் ஒன்றுமே நடக்காது. பல ஆண்டுகளாக நான் விருட்சம் பத்திரிகையை நடத்துவதைப் பார்த்து, பிரமிள் ‘நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்றார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருமுறை பிரமிள் அவர் அறை வாசலில் விட்டிருந்த செருப்பை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மோசமான நிலை இது. அவர் செருப்பே ரொம்ப சாதாரணமாக இருக்கும். அதை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அலுவலகம் போகும்போது அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று அவர் அறைக்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன், என்னிடமிருந்த செருப்பைக் கழட்டிவிட்டுப் போகச் சொன்னார். அலுவலகம் போகும் சமயத்தில் செருப்பில்லாமல் போக முடியாது என்றேன். ஆனால் அன்று அலுவலகம் விட்டு வரும்போது, அவருக்கு செருப்பு வாங்கிக்கொடுத்தேன். அப்போதுதான் அவர் சோ ராமசாமியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை ஒரு கார்டில் எழுதியிருந்தார். ராமசாமி என்ற பெயரில் இருப்பவர்கள் எப்படி புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பது மாதிரி இருந்தது அந்தக் கவிதை. சோ ராமசாமி, ஈ வே ராமசாமி என்றெல்லாம் தொடர்புப் படுத்தி எழுதியிருந்தார். அந்தக் கார்டை என்னிடம்தான் கொடுத்தார். நான் எங்கோ தொலைத்துவிட்டேன். (இன்னும் வரும்..)

எதையாவது சொல்லட்டுமா….7

கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது.

சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது.

கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை. பல இடங்களுக்கு நடந்தே செல்கிறேன். இதனால் டூவீலர் இல்லாத குறையும் மனதில் உறுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மயிலாடுதுறையைவிட கும்பகோணம் இன்னும் வசீகரமாக இருக்கிறது. கூட்டம். கோயில்கள். என்று அமர்களமாக நல்ல களையாக கும்பகோணம் தெரிகிறது. பலதரப்பு மக்கள் வந்தவண்ணம் போய்வண்ணம் இருந்து கொண்டிருந்தார்கள்.

இன்டர்நெட் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் தமிழில் அடிக்க சென்னைக்குத்தான் கொஞ்ச நாட்களாக வர வேண்டியிருக்கும். முடிந்தால் ஆங்கிலத்தில் அடிக்க முயற்சிக்கலாம். ஆனால் விருட்சத்திற்கு வரும் கவிதைகளை வளைதளத்தில் போட்டுவிடலாம்.

இந்த காலச்சுவடு இதழ் கவிதை இதழாக வந்துள்ளது. அதில் முக்கியமாக சுகுமாரன் கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத்து பத்திரிகைதான் புதுக்கவிதையைத் தூக்கிவிட்டதாக எழுதி உள்ளார். உண்மையில் பாரதியின் வசனக் கவிதைகளுக்குப் பிறகு, புதுக் கவிதை முயற்சி ந பிச்சமூர்த்தி, க.நா.சு என்றெல்லாம் தொடங்கி விட்டது. புதுக்கவிதை என்ற பெயரை க.நாசுதான் கண்டுபிடித்தார். சுகுமார் அவருக்குப்பிடித்த சில கவிஞர்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

1978 வாக்கில் ஆத்மாநாம் தொடங்கிய ழ வைப்பற்றி குறிப்பிடவே இல்லை. அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் கடந்த 22 ஆண்டுகளாக வருவது அவர் ஞாபகத்தில் இல்லவே இல்லை. கவிதையைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

எல்லார் கண்களுக்கும் எல்லோரும் தென்படுவதில்லை. நான் அது மாதிரி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் சுகுமாரன் கவிதையைத் தொட்டிருக்க மாட்டேன். சிலருக்கு எதாவது ஒரு ல்ர்ள்ண்ற்ண்ர்ய் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதி விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் இன்னும் அதிகம் பேர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர் கவிதை எழுதுவதே தெரியாமல் போய் விடுகிறது.

இன்டர்நெட் வந்தபிறகு பலருடைய கவிதைகள் தெரிய வருகின்றன. அவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது. இன்னும்கூட கவிதைப் புத்தகங்கள் புத்தகமாகப் போட்டால் விற்பதில்லை. இதை என்னவென்று சொல்வது.

திரும்பவும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைப் பார்ப்போம்.

எதையாவது சொல்லட்டுமா….6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள்.

எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது.

பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்).
எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன்.

எல்லோரும் தீவிர எழுத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கவிதைகளைத் திறமையாக எழுதுகிறார்கள். கதைகளை விதம் விதமாக தருகிறார்கள். இந்தப் புதியவர்களின் வேகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தப் படைப்பையும் எப்படி எழுத வேண்டுமென்ற கோட்பாடு என்றெல்லாம் கிடையாது. ஆனால் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகிற தன்மை புதியவர்களிடம் உள்ளது.

பாரதியாரின் வசனக் கவிதைதான் புதுக்கவிதை உருவாகக் காரணம். எந்தப் படைப்பும் ஒன்றைப் பார்த்துதான் இன்னொன்று உருவாகிறது. பாரதி வசனக் கவிதை மட்டும் எழுதவில்லை என்றால், இன்றைய புதுக்கவிதை உருவாகி இருக்குமா?

க.நா.சு ஒருபடி மேலே போய் புதுக்கவிதை எளிதில் வாசிக்கும்படி உரைநடை பாணியில் எழுதி அசத்தி விட்டார்.

இதை புதியவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது. தானாகவே தெரிந்து கொண்டார்களா? இவர்கள் படைப்புகளைப் பிரசுரிப்பது மிக முக்கியமான ஒன்று. நான் ஒவ்வொரு முறையும், வலைத்தளத்திலும், நவீன விருட்சம் இதழிலும் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறேன்.

நவீன விருட்சம் 85வது இதழை வரும் 3 நாட்களில் தயாரிக்க வேண்டும். முடியுமா என்று பார்க்கிறேன். யார் படைப்புகளாவது விட்டுப் போயிருந்தால் ஞாபகப்படுத்தவும்.