நான், பிரமிள், விசிறிசாமியார்……13

எனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார்.
ஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ”ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,” என்பேன். ”நீர் கண்ணுப் போடாதீர்,” என்பார்.
இன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொலைந்தார்கள். எழுதி எழுதியே அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடுவார். அவரை யாரும் திட்ட முடியாது. ஆரம்பத்தில் அவர் தங்குவதற்கு இடம், சாப்பிட தேவையான சாப்பாடு என்று ஏற்பாடு செய்தால், அவர் தொடர்ந்து எதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இதை ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த டேவிட் சந்திரசேகரிடம் குறிப்பிட்டேன். ”நாலைந்து பேர்கள் சேர்ந்தால், அவர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம்,” என்று சொன்னேன். ”நான் உதவி செய்கிறேன். நாலைந்து பேர்களைச் சேர்க்க முடியாது,” என்று டேவிட் கூறிவிட்டார்.
நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன் என்பதை அறிந்து என் அப்பாவிடம், ”சும்மா இருக்கச் சொல்லுங்கள்,” என்றவர்தான் பிரமிள். அதே பிரமிள் பின்னால் ஒரு கட்டத்தில் விருட்சம் இதழை நிறுத்த வேண்டும் என்று நினைத்தபோது, என் எண்ணத்தை மாற்றியவர்.
ஆரம்பத்தில் விருட்சத்திற்கு பிரமிள் கொடுத்த படைப்புகள் எல்லாம் அரசியல். ஒருமுறை அவர் நீண்ட கவிதை ஒன்றை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். அது சுந்தர ராமசாமியின் கவிதையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட ஒன்று. நான் பிரசுரம் செய்யவில்லை. சங்கடமாக இருந்தது. அவர் கொடுத்த இன்னொரு கவிதை வன்முறை. கவிதை வாசிப்பவரை நோக்கி கவிதை நகரும். ”இதைப் படிப்பவர்கள் டிஸ்டர்பு ஆகிவிடுவார்கள்,” என்றேன். ”மேலும் எனக்கே இக்கவிதையைப் படித்தால் ராத்திரி தூக்கம் வராமல் போய்விடும்,” என்றேன். பிடித்துக்கொண்டார் பிரமிள். அவர் கவிதையை வாசித்துவிட்டு நான் தூங்காமல் போனதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்.

நான், பிரமிள், விசிறிசாமியார்……12

காலையில் ஸ்ரீனிவாஸன் போன் செய்தபோதுதான் இந்தத் தொடரை ஏன் நிறுத்தி விட்டோ ம் என்று தோன்றியது. ஒருவரைப் பற்றி சொல்லும்போது அவர்களுடைய சாதகமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூற வேண்டும். எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் பலவீனமான அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைப் பற்றி பல கதைகள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருக்கிறது என்றுதான் யோசிப்பேன். எனக்கு அவரைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதையெல்லாம் வெளிப்படுத்த மாட்டேன். உதாரணமாக அவரைப் பார்க்கும்போது அவர் குளிக்கவே மாட்டாரா என்று தோன்றும். இதையெல்லாம் அவரிடம் கேட்டதில்லை.
அவருடன் பழகிய ஒரு எழுத்தாளருடன் அவர் மயிலாப்பூரில் உள்ள சங்கீத சபா அருகில் சண்டைப் போட்டதாக சொல்வார்கள். நான் ஒருமுறைகூட இதைப் பற்றி அவரிடம் பேசியதே இல்லை. நானும், ஸ்ரீனிவாஸனும் என் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருநாள் வந்துவிட்டார்.அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பார்க்கும்போது எதாவது குழுவுடன் இணைப்பார்கள். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் பிரமிளுக்கு ஞானக்கூத்தன் கவிதை ஞாபகம் வந்து விட்டது. ”ஆமாம். பிறர் மேல மூச்சு விடத்தான் விடுவேன்….என்ன பண்ணுவே நீ..” என்று கத்த ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீனிவாஸனுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. நானும், ஸ்ரீனிவாஸனும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்தி ஏன் பேசினார்?
இன்னொரு சம்பவம். ஆத்மாநாம் இரங்கல் கூட்டம் நடந்தபோது, பிரமிளும் திடீரென்று பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஞானக்கூத்தன் கூட்டத்திற்கு பிரமிள் எப்படி வந்தார் என்று. பிரமிள் ஆத்மாநாம் பற்றி பேச ஆரம்பித்தார். அப்படிப் பேசும்போது அவர் தொண்டை கரகரத்தது. கிட்டத்தட்ட அழக்கூட அழுதுவிட்டார். அந்த சமயத்தில் ஆத்மாநாமின் தற்கொலை பலரைப் பாதித்தது. பிரமிளையும். வெளியேற்றம் என்ற கவிதையை பிரமிள் படித்தார். அந்தக் கவிதை இதோ
சிகரெட்டிலிருந்துவெளியேதப்பிச் செல்லும்புகையைப் போல்என் உடன்பிறப்புகள்நான் சிகரெட்டிலேயேபுகை தங்க வேண்டுமெனக்கூறவில்லைவெளிச் செல்கையில்என்னை நோக்கி ஒரு புன்னகைஒரு கை அசைப்புஒரு மகிழ்ச்சிஇவைகளையேஎதிர்பார்க்கிறேன்அவ்வளவுதானே
பிரமிள் இந்தக் கவிதையைப் படிக்கும்போது விம்மலுடன் படிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் பிரமிள் பேசியதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்பட்டேன். கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போகும்போது, விமலாதித்த மாமல்லன் என்னைப் பார்த்து, ‘பிரமிளை ஜாக்கிரதையாக அழைத்துக்கொண்டு போங்கள்,’ என்று குறிப்பிட்டார். நான் பிரமிளை அழைத்துக்கொண்டு ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். பிரமிள் டிபன் சாப்பிட்டுக்கொண்டே, ‘எல்லாம் ஆத்மாநாமைச் சுற்றி இருந்தவர்கள்தான், அவர் தற்கொலைக்குக் காரணம்,’என்றார். ஆத்மாநாம் சுற்றி இருந்த எழுத்தாள நண்பர்கள்தான் அவர் தற்கொலைக்குக் காரணம் என்ற ரீதியில் அவர் பேச ஆரம்பித்தார். நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஆத்மாநாமைவிட அவரைச் சுற்றி இருந்த நண்பர்கள் வட்டத்தை நன்றாகத் தெரியும். (இன்னும் வளரும்)

எதையாவது சொல்லட்டுமா.19

‘இன்ன பிறவும்’ என்ற செல்வராஜ் ஜெகதீசன் கவிதைத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.

அவருடைய முதல் கவிதைத் தொகுதி பற்றி சொல்லி முடிப்பதற்குள் அவரது இரண்டாவது தொகுதி வந்து விட்டது. நான் இந்தத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் அவர் இன்னொரு தொகுதிக்கான கவிதைகளை அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருப்பார். இதுதான் ஆபத்து. கவிதை எழுதுவது, எழுதுகிற கவிதைகளைப் புத்தகமாகப் போடுவது, பின் அது குறித்து அபிப்பிராயம் எதிர்பார்ப்பது. வேறு என்ன செய்யமுடியும்?

கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் கவிஞர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அது என்னவென்று சொல்கிறேன். எல்லோரும் போல் ஆத்மாநாமும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மனச்சிதைவுக்கு அவர் ஆட்பட்டபோது, அவருடைய பிரச்சினை என்னவென்றால் ‘உடனடி புகழ்’. ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த கருத்து இது. புகழ் என்பதே மாயை. இது எப்படி சாத்தியமாகும்? ஆத்மாநாம் காலத்தில் புத்தகம் போடுவது சிரமம், படிப்பவர்கள் யாரென்று கண்டு பிடிப்பது சிரமம், மேலும் படித்து கவிதைகளைப் புகழ்ந்து எழுதுவதென்பது இன்னும் சிரமம். இந்த நிலைக்கு ஆளான ஆத்மாநாம் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களான ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன் இவர்களிடமிருந்து அவர் இதைக் கற்றுக்கொள்ளவில்லை. அவருடைய இன்னொரு நண்பரான ஸ்டெல்லா புரூஸ் இன்னொரு ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.

ஆத்மாநாம் பற்றி நான் ஸ்ரீனிவாஸனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஸ்ரீனிவாஸன் சொன்ன ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஆத்மாநாம் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர். இன்றும் எத்தனையோ பேர்கள் அப்படி இருக்கிறார்கள். இப்போது இருந்திருந்தால் அவரும் மற்றவர்களைப் போல் கண்டுகொள்ளப்படாதவராக மாறி இருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதால்தான் எல்லார் கவனத்திற்கும் வந்துவிட்டார் என்றார் ஸ்ரீனிவாஸன். ஆத்மாநாம் குறைந்தது 1000 கவிதைகளுக்கு மேல் எழுதியிருப்பார். ஏன் சிறுகதைகள், நாவல்கள் என்றெல்லாம் எழுதி குவித்திருப்பார். பெரும்பாலும் கவிதைகளைக் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். புத்தகங்களாக வந்தால் யாரும் வாங்க மாட்டார்கள்.

இது தான் தமிழில் எப்போதும் நடப்பது. செல்வராஜ் ஜெகதீசன் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதேபோல் யாராவது புகழ்ந்தால் அது உண்மையென்று நம்பியும் விடக்கூடாது. இன்ன பிறவும் என்ற புத்தகத்தில் பெரும்பாலும் கவிதை முனைப்புகள் தென்படுகின்றன. கவிதைக்கான எத்தனம் கவிதையாக மாறிவிடாது.

யாருமற்ற பூங்காவில்

ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறான்

என் மகன்.

எவரையோ சேருமென்று

கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.

கவிதைக் குறித்தே கவிதை எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. இத் தொகுதி முழுவதும் கவிதைகள் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன்.

தமிழில் கவிதைக்கான எத்தனிப்பே அதிகமாக உள்ளது. இது குறித்து சிந்திப்பது அவசியம். கவிதை மாதிரி தோற்றம் தரும் ஆனால் கவிதை இல்லை என்று சொல்லலாமா என்றெல்லாம் எனக்குச் சொல்ல வரவில்லை. உதாரணமாக ஒன்று கவதையாக வரவேண்டியது எப்படி எத்தனமாக மாறி விடுகிறது என்று சொல்லலாம்.

என் வரையில்

உங்களைப் போல்தான்

நானும் போகும் பாதை வழியே

திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும்

செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை இங்கயே நிறுத்தி விடவேண்டும்.

அவர் மேலும் தொடர்ந்து,

சுமந்து திரும்பும் விஷயங்களில்தான்

சிறிது வித்தியாசம்

என் வரையில்

அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு.

இந்த வரிகளைச் சேர்த்தவுடன், கவிதை சுழல் மாறி எத்தனமாக மாறி விடுகிறது.

ஆத்மாநாமின் ‘தரிசனம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி

கவிதை வாசகர் ஊகத்திற்குப் போய்விடுகிறது. இன்னும் விவரித்தால் இதுவும் எத்தனமாக மாறிவிடும்.

அதேபோல் செல்வராஜ் ஜெகதீசனின் சில கவிதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கவிதைகளை வேறு விதமாக சொல்வதாகப் படுகிறது. உதாரணமாக, ‘இன்று’ என்ற கவிதை.

நாம் ஒவ்வொருவரும் நம் முன்னே நடக்கும் பல விஷயங்கள் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். கவிதை எழுதுவதுமூலமாகவும், எழுதாமலிருப்பது மூலமாகவும். கவிதை எழுதுவது மூலம் நாம் ஒரு அசாதாரண ஆளாக நினைக்கக்கூடாது. சாதாரண மனிதன் கவிதை எழுதுபவனைவிட சிறந்தவனாக இருப்பான். அதேபோல் ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது.

அப்படியென்றால் செல்வராஜ் கவிதைகளையே எழுதவில்லை என்று சொல்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை. அவர் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வரும்போது, இன்னும் பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்,

எதையாவது சொல்லட்டுமா….18

எதையாவது சொல்லட்டுமா….18
போன சனிக்கிழமை (13.03.2010) எழுதியிருக்க வேண்டும். இந்தச் சனிக்கிழமைதான் எழுதுகிறேன். சனிக்கிழமை எப்போதும் நான் சென்னையை நோக்கிக் கிளம்பி விடுவேன். பின் ஞாயிறு கிளம்பி இங்கு வந்துவிடுவேன். வழக்கம்போல் 13ஆம் தேதி மதியம் சீகாழி கிளையிலிருந்து வாசலில் வந்து நின்றேன். எனக்குப்பிடித்தமான வசீகரமான பெண் பெயரில் ஓடும் பஸ் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆன் லைனின் பதிவு செய்யவேண்டும். ஏசி வண்டி. விலை அதிகம். தேர் மாதிரி தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. கை காட்டினேன். நிற்காமல் போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். டிரைவர் நிறுத்தினான்.
‘சீட் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘இருக்கிறது,’ என்றான். நான் இன்று சென்னை போகப்போகிறோம் என்ற நினைப்பில் ஒரு பை நிறைய நவீன விருட்சம் 75 – 76 இதழ் பிரதிகளை அடுக்கிக் கொண்டேன். அதைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சீகாழியில் மேற்குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினேன். இப்படி அதிகமாக மீந்துபோகும் இதழ்களை ஒன்றாக்கி ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது என் வழக்கம். மேலும் விருட்சம் இதழிற்கும் இந்தப் பஸ்ஸில் ஏறி வருவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை இனிமேல்தான் சொல்லப் போகிறேன். பஸ்ஸில் எப்போதும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். வசீகரமான பெண்ணின் பெயரைக் கொண்ட இந்தப் பஸ்ஸில் சென்னை வர ரூ350 தரவேண்டும். ஏசி. பயணிகளுக்கு ஒரு சின்ன பாட்டிலில் தண்ணீர் கொடுப்பார்கள். ஆனால் இன்னொருமுறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள். எண்ணி வாங்கியிருப்பதாக சொல்வார்கள். சிதம்பரம் போனபிறகுதான் என்னிடம் டிக்கட் பணம் வாங்கினான். ஆனால் டிக்கட் கொடுக்கவில்லை. வேகம் என்றால் வேகம் அப்படி ஒரு வேகத்தில் வண்டி பறந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வண்டியில் வேகத்துடன் வண்டியில் போக முடிகிறதே என்ற சந்தோஷம் என்னிடமிருந்தது. சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது, கடைகள், வீடுகள் பறந்து கொண்டிருந்தன. ஒரு டிரைவர் போய் இன்னொரு டிரைவர் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டிருந்தான். வேகம். வண்டி ஒரு சிற்றுண்டி சாலையில் நின்றது. டீ பிஸ்கட் கொறித்தேன். பின் வண்டி கிளம்பிற்று. வண்டி திரும்பவும் வேளாங்கண்ணிக்கு சென்னையிலிருந்து வரவேண்டும். சீக்கிரம் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். நான் வைத்திருக்கும் விருட்சம் பை வண்டி திரும்பினால் இப்படி சாயும், அப்படித் திரும்பினால் அப்படி சாயும். அதைச் சரிசெய்தால் 75 – 76 இதழ் என்னைப் பார்த்து இளிக்கும். வண்டி மகாபலிபுரம் நோக்கி வந்துவிட்டது. அப்போதுதான் டிரைவர் பெரிய பிரேக் போட்டான். வண்டியில் உள்ள பெண்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய விருட்சம் அடங்கிய பை டிரைவர் இருக்குமிடத்திற்கு போய் விழுந்து, அதில் உள்ள விருட்சம் இதழ் பிரதிகள் சிதறி விழுந்தன. வண்டிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. டிரைவர் சமாளித்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தான். கிளீனர் ஐயோ என்றான். பின்னால் படுத்துக்கொண்டிருந்த இன்னொரு டிரைவர் எழுந்து வந்து விட்டான். என்ன ஆயிற்று என்று கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்ல வில்லை. வண்டி எதன் மீதோ மோதி விட்டது. கிளீனரிடம் கேட்டபோது அவன் சரியாய் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் பீதியில் வெளிறியிருந்தது. நான் விருட்சம் இதழ் பிரதிகளைப் பொறுக்கிக் கொண்டு என் இடத்திற்கு வந்தேன். ”வண்டி மாடுமேல் மோதி விட்டிருக்கும்,” என்றார் பக்கத்தில் இருந்தவர். பின் இருக்கை அருகில் வைத்திருநந்த விருட்சம் சாக்குப்பையை டிரைவர் பக்கத்தில் கொண்டு போயிற்று என்றால் என்ன ஆயிருக்கும். டிரைவர் அழுத்தமானவன். வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மகாபலிபுரம் அருகிலுள்ள செக்போஸ்டில் வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தினார்கள். டிரைவரை தனியாக இறங்கச்சொல்லி கழுத்தில் கையைப் போட்டு அழைத்துப்போனார்கள். வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். நாங்களும் கீழே இறங்கினோம். பின்தான் தெரிந்தது வண்டி யாரோ பெண் மீது இடித்து விட்டது. அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். சிவராத்திரி அன்று அந்தப் பெண்ணிற்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் நிகழ்ந்து விட்டது. அங்குள்ள ஊர்க்காரர்கள் சுமோ வண்டியில் எங்கள் வண்டியைப் பிடிக்க வந்தார்களாம். வண்டி மட்டும் அங்கு இருந்தால் வண்டியை உடைத்திருப்பார்கள். டிரைவரை அடித்துக் கொன்றிருப்பார்கள் என்று சொன்னார்கள். இந்த விபத்து குறித்து செய்தி எந்த செய்தித் தாளிலும் வரவில்லை.வழக்கம்போல் போகும் பெரியார் பஸ்ஸில் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.இந்த விபத்து குறித்து நான் இன்னும் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். – சில தினங்களுக்குமுன் வசீகரமான பெண்பெயர் கொண்ட அந்த நிறுவன பஸ் ஒன்று வைதீஸ்வரன் பாதை ஓரத்தில் உடைந்து ஓரமாகக்கிடந்தது. -அதிகமாக பிரதிகள் மீந்துபோன நவீன விருட்சம் இதழை மாயவரத்திலிருந்து சென்னைக்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனேன். அந்த இதழ் 75-76. ஜøலை மாதம் 2007ல் வெளிவந்த இதழ். அதில் இப்படி எழுதியிருக்கிறேன். சென்னையிலிருந்து கும்பகோணம் வரை ஒரு பாசஞ்சர் வண்டி வந்து கொண்டிருந்தது. பிராட்கேஜ் வருவதால் அது நின்று விட்டது. அதன் விளைவு பஸ்ûஸ நம்ப வேண்டி உள்ளது. பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ஏகப்பட்ட பஸ்கள் விடுவார்கள் பொங்கல் அன்று மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வரும் சொகுசு செமி டீலக்ஸ் பஸ் ஒன்றில் பயணம் செய்து வந்த என் பெண், அவள் கணவர், பேத்தி என்று எல்லோரும் பெரிய விபத்திலிருந்து தப்பினார்கள். அதை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாகத் தோன்றுகிறது. முதலைப் பண்ணை என்ற இடத்திற்குப் பஸ் வந்தபோது, டிரைவர் கண் அசந்ததால் பஸ் நிலை தடுமாறி அங்குள்ள மின்சாரக் கம்பத்தில் இடித்து (நல்லகாலம் மின்சாரம் கட் ஆகிவிட்டது) தலைக்குப்புற கவிழ்ந்தது. பாண்டிச்சேரியில் ஏறிய ஒரு இன்ஜினியர் இறந்து விட்டார். கிளீனருக்கு கால்கள் இரண்டும் துண்டித்துவிட்டன. இது குறித்து சில கேள்விகள் : – விபத்து ஒரு சுழற்சி மாதிரி. உலகம் முழுக்க அது நடந்துதான் தீரும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி சொல்வது சரியா? – பெரிய வண்டிகள் நம்முடைய சாலையில் ஓட்டிச் செல்லும்போது வேகமாக ஓட்டக் கூடாது. அதனுடைய ஸ்பீடை கட்டுப்படுத்த வேண்டுமா? – வண்டி ஓட்டும் டிரைவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவரா? – வண்டியில் பயணம் செய்யும் பயணிகளிடமும் இன்சுரன்ஸ் வசூல் செய்தால் (மிகக் குறைவான தொகை), இது மாதிரியான விபத்து சமயத்தில் பயணிகளுக்கு மருத்துவ செலவிற்குப் பயன்படும். – டிரைவர் சிலசமயம் க்ளீனரிடம் கொடுத்து வண்டியை ஓட்டிச் சொல்கிறாரா? – டிரைவருக்கு போதிய அளவு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறதா? – இதுமாதிரி விபத்துக்களை ஏன் பேப்பரில் விளம்பரப் படுத்தக்கூடாது? – நான் வந்த வண்டி தெருவில் வரும்போது தெருவை முழுவதும் எடுத்துக்கொண்டு விடுகிறது. பாதசாரிகளுக்கு நடக்கக்கூட இடமில்லை. – அவசரம் அவசரம் என்றதால்தான் என் வண்டி மோதியது. அவ்வளவு அவசரம் தேவையா?

பத்மநாபன் எதையோ தேடுகிறார்

பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை.
அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை எடுத்துக்கொண்டு வந்தார். பத்மநாபன் நெகிழ்ந்து விட்டார்.
தனியாக ஒருவர் இருக்கும்போது, இது மாதிரியான உதவிகள் நிச்சயமாக தேவையாக இருக்கும்.
“என்ன சார், என்னமோ மாதிரி ஆகிவிட்டீர்கள்,” என்றார் சிவா..
“நீங்கதான் எதாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டும்,”என்றார் பத்மநாபன்.
அந்த ஊரில் நெடுக பல மருத்துவமனைகள் உண்டு. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்ப ஆயுத்தமானார் பத்மநாபன்.
சிவா மகாதான தெருவில் உள்ள ஒரு இருதய நோய் சம்பந்தமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். சாதாரண சுரத்திற்கு ஏன் இங்கு அழைத்துப் போகிறார் என்று யோசித்தார் பத்மநாபன்.
அந்த மருத்துவ மனையில் ஒரே கூட்டம். டோக்கனை வாங்கி வைத்துக்கொண்டு பத்மநாபன் அமர்ந்திருந்தார் கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.
“சிவா போய்விடலாமா” என்று கேட்டார் பத்மநாபன்.
“வேண்டாம், சார்,” என்றார் சிவா.
இருவரும் இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டமோ வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இதய நோயாளிக்காரர்கள். சாதாரண சுரத்திற்கு இங்கு ஏன் வந்தோம்?
டாக்டரைப் பார்க்க அனுப்பினான் அங்குள்ள ஊழியர். உள்ளே நுழைந்து டாக்டர் எதிரில் அமர்ந்தாலும், டாக்டர் பத்மநாபனைப் பார்க்கவில்லை. போன் மேலே போன். பேசிக்கொண்டே இருந்தார். சுரம் வேகத்தோடு பத்மநாபன் டாக்டரை கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா மேலும் கோபம். ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வந்தார்?
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உள்ளே அவசரமாக டாக்டரைப் பார்க்க கணவன் மனைவி இருவர் வந்தார்கள். ரொம்ப அவசரம். கணவன் மார்பைப் பிடித்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தான். “டாக்டர் தாங்க முடியலை டாக்டர். வலி தாங்க முடியலை,” என்று மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் பதட்டமாகியிருந்தோம். டாக்டர் அவனைப் பார்த்து, “சட்டையைக் கழட்டுங்க..” என்றார். அவனால் சட்டையைக் கூட கழட்ட முடியவில்லை. “டாக்டர் வலி அதிகமாக இருக்கிறது,” என்று அவன் இன்னும் கத்தினான்.
பத்மநாபனுக்கும், சிவாவிற்கும் தர்மசங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் கத்தினவன் கீழே விழுந்துவிட்டான். உடனே பரபரப்பு கூடி விட்டது.
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பத்மநாபனும், சிவாவும் அந்த இடத்தைவிட்டு வாசலுக்கு ஓடி விட்டார்கள். சிவா அந்தக் காட்சியைப் பார்த்ததால் வாந்தி எடுத்தார். “என்ன சிவா, வாந்தி எடுக்கிறீங்க?” என்று பத்மநாபன் கேட்டார்.
“என்னால தாங்க முடியாது சார்,” என்றார் சிவா.
“வேற ஆஸ்பத்ரிக்குப் போகலாம்…ரொம்ப காலியா இருக்கிற ஆஸ்பத்ரியா பாருங்க…சாதாரண சுரத்திற்குப் பார்க்கிற டாக்டராகப் பாருங்க…”
“அந்த ஆளுக்கு என்ன ஆயிருக்குமோ…உயிரோடு இருப்பாரா…செத்துப் போயிருப்பாரா…”
“சிவா..அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதுக்கு…மேலும் அவர் இறந்தாலும் நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்..”என்றார் பத்மநாபன்.
பின் அங்கிருந்து ஒரு சாதாரண டாக்டரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு பத்மநாபனைக் கொண்டு வந்துவிட்டுப் போய்விட்டார் சிவா.
கொஞ்சம் நேரம் கழித்து சிவாவிடமிருந்து போன் வந்தது. “சார், அந்த ஆள் போயிட்டான்..” என்றார் சிவா.
கேட்டவுடன் சொரேரென்றிருந்தது பத்மநாபனுக்கு. அவர் கண் முன்னால ஒரு 40 அல்லது 42 வயதுக்குட்பட்ட ஒருவர் மார்பு துடித்து இறந்தும் விட்டார். அப்போது அந்த மனிதன் துடித்தத் துடிப்பு. கத்திய கத்தல் அவர் காதில் இப்போதும் ரிங்காரம் இட்டுக்கொண்டிருந்தது.
காலையில் நடந்த சம்பவமே பத்மநாபன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சினை. குடும்பத்தோடு இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவருக்குத் தோன்றியது. சுரம் வேகம் தணிந்து விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
பின் கடைக்குச் சென்று ஒரு தர்மாமீட்டரை வாங்கிக்கொண்டு வந்தார். தர்மாமீட்டரை எடுத்து வாயில் இடுக்கிக்கொண்டு சுரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுரம் சாதாரணமாகத்தன் இருந்தது. இந்தத் தர்மாமீட்டரெல்லாம் பயன்படுத்தி பல ஆண்டுகளாயிற்று. பத்மநாபன் தன்னையே கேட்டுக்கொண்டார். ‘நான் என்ன பயந்தாங்கொள்ளியா?’ என்று.
‘ஆமாம்.’ என்றும் தனக்குள் பதிலும் சொல்லிக்கொண்டார். எந்த மனிதன்தான் பயம் இல்லாமல் இருக்க முடியும்?
கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனியாக இங்கு இருக்கிறார். குடும்பம் சென்னையில். அப்பாவிற்கு 85 வயது. மனைவி இன்னொரு வங்கியில் பணிபுரிகிறாள். அவளால் அவருடன் அவர் இருக்குமிடத்திற்கு வந்திருக்க முடியாது.
முதலில் இந்தத் தனிமை வாசம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனியாக இருந்ததில்லை. தனிமை என்றால் என்ன என்பதைக் கூட அவர் யோசித்ததில்லை. இந்த ஊருக்கு வந்தபிறகு தனியாக ஒரு வாழ்க்கை நடத்த வேண்டியதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தது. அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக ஓடி திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பொழுது போய்விடும். அவர் தனியாக வீடு மாதிரி எடுத்துத் தங்கியிருந்தார்.
இரவு படுத்துக்கொள்ளும்போது முதன் முதலாக அவருக்குப் பயமாக இருந்தது. இதுவும் வேடிக்கையாக இருந்தது. 50 வயதில் தனக்குப் பயமா? அவர் இருக்குமிடம் கோயில் இருக்கும் தெருவில். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்தப் பயம் போய்விட்டது.
எப்போதும் சனிக்கிழமை சென்னைக்கு ஓடிவிடுவார். திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி இந்த ஊருக்கு வந்துவிடுவார். பெரும்பாலும் அவருக்குப் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. ஆனால் என்ன நேரம் இருப்பதில்லை. அவரைச் சுற்றிலும் யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. ஏன் அலுவலகத்தில் யாரும் பேப்பரைக் கூடப் படிப்பதில்லை. அவரால் ஒரு நிமிஷம்கூட புத்தகம் அல்லது பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு வியாதியா என்று கூட யோசிப்பார்.
இந்தத் தருணத்தில்தான் சிவாவின் நட்பு கிடைத்தது. சிவா ஒரு சிவில் இன்ஜினியர். தனியாக வீடு கட்டிக்கொடுக்கும் பணி. எப்போதும் அவர் சுலபமாக இருப்பதுபோல் பத்மநாபனுக்குப் படும். புத்தகம் படிப்பதுதான் சிவாவிற்கு வேலை. தடித்தடியாய் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். பின் அதைப் பற்றி பேச பத்மநாபனை நாடி வருவார்.
காலையில் மரணம் அடைந்தவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் பத்மநாபன். பொழுது இருட்டத்தொடங்கிவிட்டது. அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் அவரை தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டிருந்தது. இறந்து போனவரின் முகம் அவர் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. அவர் மனைவியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு அவர் போட்ட சத்தம் அவர் மனதில் அலறிக் கொண்டிருப்பதாகப் பட்டது.
பத்மநாபன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பலவிதமாக முடிச்சுப் போட்டுக்கொண்டிருப்பார். இப்படி முடிச்சுப் போடுவது ஆபத்து என்று உணர்ந்திருந்தார். என்ன படித்திருந்தால் என்ன? மரண பயம் எளிதில் போவதில்லை..50 வயது..தனிமை.
பத்மநாபன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார். சம்பத் என்ற எழுத்தாளர் எழுதிய இடைவெளி என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அவர் புத்தகம் அச்சாகி வருவதற்குமுன் இறந்துவிட்டார். அந்தப் புத்தகம் முழுவதும் மரணத்தைப் பற்றியே சம்பத் எழுதியிருப்பார். அவருடைய மரணம் கூட ஒரு நாடகம் மாதிரி எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. காலையில் கூட மரணம் ஒரு நாடகம் நடத்திவிட்டுச் சென்றதாக தோன்றியது. எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறதோ என்று கூட யோசிக்க ஆரம்பித்தார். காலையில் நடந்த நிகழ்ச்சி மரணத்தைப் பற்றிய ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாக தோன்றியது. ஜாக்கிரதை என்று மரணம் மிரட்டிவிட்டுச் சென்று விட்டதா? பத்மநாபனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.
பொதுவாக தூங்கும்போது விளக்கெல்லாம் அணைத்துவிட்டு தூங்குவார். ஆனால் அன்று அவர் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு தூங்க முயற்சி செய்தார். எப்படியோ தூங்கி விட்டார். அடுத்தநாள் அவருக்கு சுரம் அளவு குறைந்துவிட்டது. அலுவலகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார். அன்று சனிக்கிழமை.
எப்போதும் அவருக்கு சனிக்கிழமை என்றால் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் அவர் சென்னைக்கு ஓடும் நாள். ஓடிவிட்டார் சென்னைக்கு. திரும்பவும் திங்கள் வந்தபோது அவருக்கு மரணத்தைப் பற்றிய காட்சி மறந்துவிட்டது. சிவா அவரைப் பார்க்க வந்தபோது அப்போது நடந்த நிகழ்ச்சியை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிவா ஓடிவந்து வாந்தி எடுத்ததைக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அங்கிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
“உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படி ஆகிவிடுகிறது. அன்று என்னால் தாங்க முடியவில்லை,”என்றார் சிவா.
“மரணம் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது,”என்றார் பத்மநாபன்.
இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடிவிட்டன. பத்மநாபன் மறந்து விட்டார். அவர் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருவர் இருக்கிறார். பார்ப்பதற்கு நீலு என்ற நடிகர் மாதிரியான தோற்றத்தில் இருப்பார். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார். அவருடைய சில செய்கைகள் பத்மநாபனுக்கும் எரிச்சலாக இருக்கும்.
அலுவலகத்தில் அவருக்கு கெட்ட பெயர். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அவருக்கு 2 பெண். ஒரு பையன். ஒரு பெண் இன்ஜினியரிங் காலேஜ்ஜில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பாட்டும் பாடுவாள். கர்நாடக சங்கீதத்தில் ஒரு திறமை உண்டு. அந்தப் பெண்ணிற்கு கும்பகோணத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் விருப்பம். அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெண் கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியரைப் பேச ஏற்பாடு செய்தார். பெண்ணிற்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த ஆசிரியையைப் பேசக் கூப்பிட்டார். 90 வயதான ஒரு மிருதங்க வித்வானையும் பேசக் கூப்பிட்டார்.
பின் ஒரு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய்தார்.
“பத்மநாபன் வந்திடுங்க..சாப்பாடெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்றார் மகாதேவன் ஒருநாள் பத்மநாபனைப் பார்த்து.
அந்த நாள் வந்தது. பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் 30 கிலோமீட்டர் தூரம். பஸ்ஸில் 1 மணிநேரம் பயணம். அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. 7.30 மணியிருக்கும். பஸ்ûஸப் பிடித்துக்கொண்டு கும்பகோணம் போய்ச் சேருவதற்குள் நேரம் அதிகமாகிவிட்டது.
கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றார். மகாதேவன் பெண் பாடிக்கொண்டிருந்தாள். மகாதேவன் இவரைப் பார்த்வுடன், வேகமாக ஓடி வந்தார்.
“என்ன ரொம்ப நேரம் ஆகிவிட்டதே?” என்று விஜாரித்தார்.
“டிபனெல்லாம் தீர்ந்து விட்டது…காப்பி சாப்பிடுங்க…ராத்திரி சாப்பாடெல்லாம் ரெடியாய் இருக்கும்..சாப்பிட்டுவிட்டுப் போங்க,” என்றார் மகாதேவன்.
பாட்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் பெண் தம் கட்டிக்கொண்டு பாடுவதாக தோன்றியது. பின் ஒரு இடைவேளை. மேடையை எல்லோரும் பேசுவதற்காக திருத்தம் செய்தார்கள்.
ஒவ்வொருவராக மேடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் பாட்டுத் திறமையை மெச்சிப் பேசினார்கள். பேராசிரியர் பேசும்போது, ‘வித்யா பாட்டில் மட்டுமல்ல…படிப்பிலும் நெம்பர் ஒன்..’என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 90 வயது மிருதங்க வித்வான் தள்ளாடி தள்ளாடி மேடையில் வாழ்த்தினார்.
மேலும் மிருதங்க வித்வான் பென்சன் வாங்கிக்கொண்டு கும்பகோணத்தில் அந்த வயதிலும் தனிமையில் இருப்பதைப் பற்றியும் சொன்னார். ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்தப்பின், திரும்பவும் வித்யா பாட ஆரம்பித்தாள். மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே வந்து அமர்ந்தார்கள்.
வித்யா துக்கடாக்கள் பாட ஆரம்பித்தாள். சம்போ…சிவ சம்போ…என்ற பாட்டை உருக்கமாக பாட ஆரம்பித்தாள். அந்தப் பாட்டு எமனை அழைக்கும் பாட்டு என்று பத்மநாபனுக்குத் தோன்றியது.
திடீரென்று ஒரு சத்தம். வித்யாவின் கல்லூரி பேராசிரியர் நாற்காலியிலிருந்த கீழே சாய்ந்து விட்டார். வித்யா இதைப் பார்த்துவிட்டு பாடுவதை நிறுத்திவிட்டாள். மகாதேவன் அவசரம் அவசரமாக ஓடிவந்து பேராசிரியரைப் பிடித்துக் கொண்டார். பேராசியர் மயங்கியே விழுந்துவிட்டார். பாட்டு முழுவதும் நின்றுவிட்டது.
பின் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பேராசிரியரைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மகாதேவனுக்குத் துணையாக பத்மநாபனும் சென்றார். அவசரம் அவசரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் பேராசிரியரை அழைத்துக்கொண்டு போனார்கள்.
சிறிது நேரத்தில் பேராசிரியரைப் பரிசோதித்த டாக்டர், “அவர் எப்போதோ இறந்து விட்டார்,”என்று சொன்னார். எல்லோருக்கும் அதிர்ச்சி. பத்மநாபனுக்கு திகைப்பாக இருந்தது. இருப்பு கொள்ளவில்லை. மகாதேவனிடம் சொல்லிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றார். பின் அங்கிருந்து ஒரு பஸ்ûஸப் பிடித்து அவர் ஊருக்குப் பயணமானார். வீடு போய்ச் சேர இரவு 11 ஆகிவிட்டது.
வீட்டிற்கு வந்தவுடன் பத்மநாபனுக்கு படபடவென்றிருந்தது. ஒரு பாட்டுக் கச்சேரி நடக்கும்போது இது மாதிரி மரணம் அவர் எதிர்பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைப் புகழ்ந்து பேசிய பேராசிரியர் முகம் அவர் முன்னால் மிதந்துகொண்டிருப்பது போல் தோன்றியது. பத்மநாபனுக்கு ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதுவும் அவர் முன்னிலையில்.. மரணம் திரும்பவும் ஒரு நாடகத்தை நடத்துகிறதா? அல்லது அவரை எச்சிரிக்கை செய்கிறதா? பத்மநாபன் உறுதியாக இதெற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் தூக்கம் வரவில்லை.
பேராசியர் பற்றிய எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார். ஏன் நாம் இந்தக் கச்சேரிக்குப் போனோம் என்று யோசித்தார் பத்மநாபன். அன்று மானேஜர் அந்தக் கச்சேரிக்கு வரவில்லை. அன்று இரவும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சென்னைக்கு இப்போதே ஓடவேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குப் போக வேண்டாமென்றும் பட்டது.
மரணம்தான் முக்கியம். என்ன பெரிய வேலை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார். 50 வயதில் இதெல்லாம் எதற்கு? பதவி உயர்வுப் பெற்று எதற்கு இதுமாதிரி அவதிப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எல்லாம் தனக்குள். தனக்குள். அன்று இரவும் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தநாள் அவர் அலுவலகத்திற்குப் போகும்போது அவர் முகமே சரியில்லை. மகாதேவனும் வந்திருந்தார். அவர் சாதாரணமாக இருந்தார். “யாரும் சாப்பிடவில்லை. எல்லா சாப்பாடும் வீணாகப் போய்விட்டது..”என்றார்.
என்ன மனிதர் இவர். சாப்பாடு வீணாகிப் போனதைப் பற்றி பேசுகிறார். ஒரு மரணம் அவர் முன்னால் நடந்ததைப் பற்றி சந்றுக்கூட கவலைப் படாத மாதிரி இருக்கிறாரே.. அந்தப் பெண் வித்யாவிற்கு எப்படி இருந்திருக்கும்.. தன் முதல் கச்சேரி அரங்கேறும்போதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்றெல்லாம் யோசித்திருக்குமோ? அன்றும் சனிக்கிழமை. அந்த முறை சென்னை போனால், ஒரு வாரமாவது அங்கிருக்க வேண்டுமென்று தோன்றியது. மரணத்தின் நாடகத்தை தன்னால் மறக்க முடியாது போல் இருந்தது.
மகாதேவனைப் பார்த்து, இளங்கோ என்ற கடைநிலை ஊழியர் கேட்டான் : “என்ன மகாதேவன், சார்.. உங்கப் பெண் கச்சேரியில ஒரு பேராசிரியரை நிரந்தரமா ஊருக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு..”என்று இடிஇடியென்று சிரித்தபடி கேட்டான்.
மகாதேவன் அதைக் கேட்டு சிரித்தார். பத்மநாபனுக்கோ ஒருவாரம் லீவு எடுத்துக்கொண்டு போகவேண்டும்போல் தோன்றியது. சிறிது நேரத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மேலாளருக்குப் போன் வந்தது. “ஒருவாரம் பத்மநாபனுக்கு சென்னையில் டிரெயினிங்,”என்று. ஆச்சரியமாக இருந்தது பத்மநாபனுக்கு.

எதையாவது சொல்லட்டுமா….17




கொஞ்ச நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் நேரத்துடன் என்னுடைய போராட்டம் நின்று விடவில்லை.

பவித்திரா மெஸ்ஸில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தியைக் கேள்விபட்டேன். சன் செய்தியில் திரும்ப திரும்ப அந்த சிடி ஓடிக்கொண்டிருப்பதாக. நித்யானந்தா பற்றிய சிடிதான் அது. அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சி எதுவுமில்லை. விகடனில் நித்தியானந்தா எழுதுவதை நான் படிக்கவே மாட்டேன். விகடனே தொடர்ந்து வாங்க மாட்டேன். எதாவது விகடன் இதழில் இதைப் பார்க்கும்போது என்ன அப்படி எழுதுகிறார் என்று யோசித்துக் கொண்டும் இருப்பேன்.

என் அலுவலகத்தில் வெங்கட்ராமன் ஒருவருக்கு நித்தியானந்தர் குரு. அவர் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்கக் கூட நித்தியானந்தரிடம் அனுமதிப் பெற்றுதான் சேர்ந்தார். அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் சொல்வார். அப்ப கூட நித்தியானந்தரைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லை. அதேபோல் எனக்கு தப்பாகக் கூட எதுவும் தோன்றாது. அவரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியபோது எனக்கு நித்தியானந்தரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது தவிர, நித்தியானந்தரைப் பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் எழுதுகிற புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவில்லை. அவர் பிரசங்கங்களைப் போய்க் கேட்க வேண்டுமென்றும் எண்ணம் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்குமுன் ஈஷா யோகாவைப் பற்றி கேள்விபட்டேன். என் அலுவலக நண்பர் ஒருவருக்கு அலுவலகத்தில் அவரிடம் பணிபுரியும் பெண்ணிடம் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அந்தப் பெண் என்ன காரணத்தினாலோ அவரிடம் பேசுவதை விட்டுவிட்டது. அது என் அலுவலக நண்பருக்கு தாங்க முடியாத பிரச்சினை ஆகிவிட்டது. அவர் உடனே ஈஷா யோகாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின் எங்களிடமெல்லாம் ஈஷா யோகாவைப் பற்றி பிரமாதமாக சொல்வார். அப்போது என்ன இது போய்ப் பார்க்கலாமென்று போய்ப் பார்த்தேன். ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தபிறகு நான் பழையபடியேதான் இருந்தேன். என்னுடைய பிபி, சுகர் எதுவும் குறையவில்லை. அதுவும் நான் இருப்பதுபோல் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. ஈஷா யோகாவில் சொல்லிக் கொடுத்ததுபோல் மதியம் ஒரு தியானம் செய்ய அலுவலகத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். முழுவதும் மௌனம். யாருடைய எண்ணமும் என்னுள் நுழையக்கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் அலுவலகத்தில் உள்ள கடைநிலை சிம்பந்தி, “சார் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், பார்,” என்றவுடன், என் கவனமெல்லாம் சிதறி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று போய்விடும்.

சில நாட்களில் அதுவும் நின்றுவிட்டது. ஜக்கி வாசுதேவ் சொல்கிற விஷயமெல்லாம் ஜே.கே சொல்வதுபோல் எனக்குத் தோன்றும். அவருடைய நீண்ட வெண்ணிற தாடி எனக்கு ரஜீனிஷை ஞாபகப்படுத்தும். அவர் இளம் வயதில் பாம்பெல்லாம் பிடிப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். நானோ பாம்பைப் பார்த்து பயந்து ஓடுபவன். பந்தநல்லூரில் இருக்கும்போது நழுவி நழுவிப் போகும் பல பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். சிலசமயம் தெரியாமல் என் வண்டி பாம்பு மேல் ஏறி இறங்கும்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இவர்களுடன் சேரும் பணமும், புகழும்தான். அளவுக்கு மீறி சேரும் இந்த பணமும் புகழால் ஆபத்துதான்.

ஆன்மிக குருக்கள் இதிலிருந்தெல்லாம் தப்பித்ததே இல்லை. நித்தியானந்தரும் இதிலிருந்து தப்பித்ததில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி அவருடைய புத்தக உரிமைக்காக ராஜகோபால் என்பவருடன் கோர்ட்டில் வழக்குப் போட்டு சண்டைப் போட்டிருக்கிறார். ஜே கிருஷ்ணமூர்த்தி மரணமடைந்தபிறகு அவரைப் பற்றி ராஜகோபால் பெண் கிருஷ்ணமூர்த்தியின் செக்ஸ் அனுபவங்களைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதிவிட்டார். கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி அதனால் குறைந்துவிடவில்லை. யார் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டாலும் சில நிமிஷங்களில் கேட்பவர்கள் மெய்மறந்து போய்விடுவார்கள். அவரைச் சுற்றி பெண்கள் தானாகவே வசப்பட்டு விடுவார்கள். இதில் செக்ஸ் என்பது சாதாரண விஷயம். ஆனால் அவர் காவி உடை போடாத ஆன்மிகவாதி. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பம் என்று எதுவுமில்லை.

செக்ஸ் பற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது, பெண்ணுடைய ஸ்பரிசமே அந்த உணர்வைத் தூண்டிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஒரு பேச்சில். கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைவது உறுதியானபோது, சென்னையில் நடந்த கடைசிக் கூட்டத்தில் வயதான அழகான யூவதிகள் பலர் அவர் பிரிவை நினைத்து அழுததை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி வெளிப்படையானவர். பெண்களிடம் தொடர்பு கொண்டதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். திருமணமானவர். குடும்ப வாழ்க்கை வெறுத்துப் போய் தனியாகப் பிரிந்து விட்டார். பின் அவரைவிட் வயதான பெண்மணியுடன் சேர்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார். யோகி ராம்சுரத்குமார் கூட குடும்பஸ்தர். வடநாட்டில் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத்தான் துறவியாக வந்துவிட்டார். அவர் குடும்பம் இன்னும் கூட இருக்கிறது. குடும்பத்துடன் ஆன்மிகம் பயற்சியைக் கொடுக்கும் பலரைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். தியானதாரா என்ற புத்தகத்தில் பிரமிள் அப்பாதுரை என்பவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் குடும்பஸ்தர். இன்று பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஆன்மிகமும் ஒன்று என்று ஆகிவிட்டது.

எல்லாரிடமும் தீராதப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆன்மிக வாதிகளை எல்லோரும் நாடிப் போகிறார்கள். அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் இந்த ஆன்மிகவாதிகளைச் சுற்றி சில அதிசயங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றன. வள்ளலார் விளக்கை எரிக்க தண்ணீரைப் பயன்படுத்தினார் என்று அவருடைய வரலாறில் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் ஷ்ரீடி சாய்பாபா வரலாறிலும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லப்படுகிற சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் வள்ளலார் கோர்ட்டுக்கு இழுத்தவர் ஆறுமுகநாவலர். வள்ளலார் கோர்ட்டுக்கு வந்தபோது, எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஏன்? தீர்ப்பு சொல்ல வேண்டிய judgeம் எழுந்து நின்றுவிட்டார். வழக்கு வள்ளலார் பக்கம் திரும்பி விட்டது.

பொதுவாக Public Sphere ல் நடப்பதை நான் எழுதுவதில்லை.Private Sphere ல் நடப்பதைத்தான் எழுதிக்கொண்டு போவேன். அப்படி நடப்பதை Public Sphere ஆக மாற்றுவதைத்தான் விரும்புவேன். இந்த முறைதான் மாற்றி எழுதியிருக்கிறேன்.

அன்புடையீர்,

வணக்கம்.

இந்த முறை சற்று சிரமமாக இருந்தாலும், நவீன விருட்சம் இதழை கொண்டு வந்து விட்டேன். இப்போது வந்துள்ள இதழ் இரு இதழ்களான 85/86ன் தொகுப்பு. 80 பக்கம் கொண்டு வந்துள்ளேன். வழக்கம்போல் பலருடைய படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

யார் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற விபரம் இதோ

1. ஐராவதம் – இக்கணத்தின் அருமை
– பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தக
விமர்சனம்
கதைமொழி – எஸ் சண்முகம் புத்தகத்தின் விமர்சனம்

2. விட்டல்ராவ் – பழம் புத்தகக் கடை
3. கோசின்ரா – எனது புனைபெயர்கள் (கவிதை)
4. ஆ முத்துராமலிங்கம் – மழை இரவு (கவிதை)
5. ஏ ஏ ஹெச் கோரி – உறவு ஜீவிகள் (சிறு கதை)
6. அழகியசிங்கர் – சில குறிப்புகள்
7. யோசிப்பவர் – செருப்பு (சிறு கதை)
8. விட்டல்ராவ் – ரிச்சியும் நானும் (சிறு கதை)
9. நீல பத்மநாபன் – விஜய தசமி (கவிதை)
10. மஹேஷ் முணசிங்ஹா – ஜனாதிபதித் தேர்தல்
11. எஸ் வைத்தியநாதன் – சுமை (கவிதை)
12. அழகியசிங்கர் – பத்மநாபன் எதையோ தேடுகிறார் (சிறு கதை)
13. பானுமதி – தனிமை (கவிதை)
14. ஜெயஸ்ரீ – இதையுதிர் காலம் (கவிதை)
15. விஷ்வக்சேனன் கவிதை
16. எம் ரிஷான் ஷெரீப் – என்னை ஆளும் விலங்குகள் (கவிதை)
17. அனுஜன்யா – மகத்தான (கவிதை)
18. ம மோகன் – காட்டை மறத்தல் (சிறு கதை)
19. அழகியசிங்கர் – உறவு, வேண்டாத இடம் (கவிதைகள்)

படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை அனுப்ப வேண்டுகிறேன். இதழை உடனே அனுப்பி வைப்பேன்.

அன்புடன்

எதையாவது சொல்லட்டுமா….16

சமீபத்தில் என் நண்பரும் டாக்டருமான செல்வராஜ் ஒரு இ மெயில் அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு இரவெல்லாம் சரியாய் தூக்கமில்லாமல் போய்விட்டது. டாக்டர் செல்வராஜ் ஒரு சிறுகதை ஆசிரியர் கூட. வைத்தியம் பார்ப்பவர். 2 சிறுகதைத் தொகுப்பும், 2 மருத்துவ நூல்களும் எழுதி உள்ளார். உற்சாகமாக இருப்பவர். பார்ப்பவர்களையும் உற்சாகப் படுத்துவார். நோயாளிகளின் உடல் மட்டுமல்ல மனதையும் குணப்படுத்தவும் நினைப்பவர். அவர் அனுப்பிய இ மெயிலுக்கு வருகிறேன். தனிமையில் நீங்கள் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய இ மெயில் கட்டுரை. திகைத்து விட்டேன். ஹார்ட் அட்டாக் வரும்போது பக்கத்தில் டாக்டர் இல்லை. நீங்கள் எப்படி உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டுரையின் சாராம்சம். அவர் கட்டுரையில் எல்லாவிதமான நியாயமும் இருக்கிறது. அவருடைய உலகம் நோயாளிகளையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவருடன் சற்,று நேரம் கூட பேச முடியாது. அவர் தூங்கி எழுந்தால் அவர் முன்னால் நோயாளிகள்தான் தென்படுவார்கள் என்று தோன்றுகிறது. நானும் அவர் முன்னால் ஒரு நோயாளிதான். சரி, விஷயத்திற்கு வருகிறேன். என் 50வது வயதில் நான் ஒரு தப்பான முடிவை எடுத்தேன். அதாவது பதவி உயர்வுப் பெற்று சென்றதுதான் அது. அந்த முடிவின் அவலத்தை நான் பந்தநல்லூர் என்ற ஊரில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தபோது உணர்ந்து விட்டேன். அப்போது நான் என் கண்ணால் பார்த்த 2 மரணங்களைப் பற்றிதான் ”பத்மநாபன் எதையோ தேடுகிறார்,” என்ற பெயரில் ஒரு கதையே எழுதிவிட்டேன். அந்தக் கதை இந்த இதழ் விருட்சத்தில் பிரசுரமாகிறது. அந்த இரு மரணங்களும் ஹார்ட் அட்டாக்கால் ஏற்பட்டதுதான். எதிர்பாராத இடத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மரணங்கள் அவை. உயிருக்குப் போராடிய அந்தத் தருணம் முக்கியமானது. செல்வராஜ் என்ன செய்ய வேண்டுமென்று கட்டுரையில் எழுதியிருக்கிறார். அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டவர்கள், தொண்டையைச் செருமிக் கொண்டே இருக்க வேண்டுமாம். சரியான மருத்துவரைப் போய்ப் பிடிப்பதற்குள். ஆனால் எனக்குத் தெரிந்து மாட்டிக்கொண்டவர்கள் மயக்கம் ஆகி விழுந்து விடுகிறார்கள். ஒரு பேராசிரியர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குத். தலைமைத் தாங்கி பேசி முடித்தவுடன், சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். மருத்துவ மனைக்குச் செல்வதற்குள் அவர் உயிர் போய்விட்டது. சமீபத்தில் சினிமாத் துறையினரால் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில்கூட அரசு செய்தித்துறை புகைப்படக்காரர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். என்னை அறியாமலயே பந்தநல்லூரில் உள்ள எங்கள் கிளையில் பணிசெய்து கொண்டிருந்த ஒரு ஊழியரை எதிர்பாராதவிதமாகக் காப்பாற்றி விட்டேன். கும்பகோணத்திலிருந்து பந்தநல்லூர் 30 கிலோமீட்டர் தூரம் இருக்கும். என் அலுவலக ஊழியர் காலையில் அலுவலகம் வந்தவுடன் ஒரு மாதிரியாக இருந்தார். சாப்பிட்டதை வாந்தி எடுத்தார். தலையை லேசாகச் சுற்றுகிறது என்றார். உடனே அவரை காரில் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் உள்ள சுகம் என்கிற பெரிய மருத்துவமனையில் அவரைச் சேர்த்தேன். அவரைப் பரிசோதித்த டாக்டர். நீங்கள் அழைத்துக்கொண்டு வந்தவருக்கு பயங்கரமான மாரடைப்பு. அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு உடனே தகவல் சொல்லுங்கள் என்றார். எனக்கு ஒரே திகைப்பு. அந்தப் பெரிய கண்டத்திலிருந்து அவர் தப்பித்து விட்டார். என்னை அறியாமலே ஒரு மாரடைப்பு வந்தவரைக் காப்பாற்றி விட்டேன்.

எதையாவது சொல்லட்டுமா….16

மீபத்தில் யோசிப்பவர் எழுதிய செருப்பு கதையைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் செருப்பு என்ற பெயரில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அப்போது என் வயதும் யோசிப்பவர் வயது இப்போது என்ன இருக்கிறதோ அதுதான் இருந்திருக்கும். என் கதையை மலர்த்தும்பி என்ற சிறுபத்திரிகைதான் வெளியிட்டது. அக் கதையின் இறுதியில் செருப்பை நாய் கவ்விக்கொண்டு போய்விடும். வேலைத் தேடிப் போகும் ஒரு படித்த இளைஞனின் சோகக் கதை நான் எழுதியது.

யோசிப்பவர் ரொம்பவும் வித்தியாசமாக இன்னொரு செருப்பு கதையை எழுதி உள்ளார். வரும் விருட்சம் இதழில் அக் கதை பிரசுரமாக உள்ளது. செருப்பைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி கதை எழுதியிருக்கிறார்.கடைசியில் கூட யார் செருப்பைத் தூக்கி எறிந்தது என்பது தெரியவில்லை.செருப்பைத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை நையாண்டி செய்திருப்பதுதான் கதை.

இன்றைய சூழலில் கதை எழுதும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும். நம்மைச் சுற்றிலும் இயந்திரத்தனமான வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கதையும் கவிதையும்தான் இதிலிருந்து தப்பிக்க வழி செய்யும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நான் இதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்வதாகத் தோன்றுகிறது. உலக முழுக்கவும் புத்தகம் படிக்காமல் பலர் இருக்கிறார்கள். புத்தகம் படிப்பவர்களைக் கண்டால் எரிச்சல் அடைபவர்களும் இருக்கிறார்கள்.

நம் படைப்புகளைப் பற்றி பரஸ்பரம் பேசிக்கொள்ள முடியாத நிலை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னால் இப்படி யோசித்தேன். தினமும்ஒரு கவிதை அல்லது கதை படித்துவிட்டுச் செல்வது என்று. அப்படி முயற்சி செய்தும் பார்த்தேன். ஒரு கதையைப் படித்துவிட்டு கதையின் கீழ் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு என்று படிக்கிறேனோ அன்றைய தேதியும், படித்து முடித்த நேரத்தையும் குறிப்பிட்டேன். ஏன் என்றால் கதைக்கும் கவிதைக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் பலமாக விழுந்திருநந்தது.ஆனால் அது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றும் எனக்குத் தோன்றியது.

ஆனால் கதையைப் பற்றியோ கவிதைப் பற்றியோ யாருடன் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது. அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அப்படி பரிமாற்றம் செய்துகொள்ள முன் வரும்போது இருவருக்கும் பொதுவான நேரம், மூட் இருக்க வேண்டும்.

இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். கவிதைக் கணம் என்ற அமைப்பை நாங்கள் நடத்திக்கொண்டு வந்தோம். எங்களை வெளியூரில் பேசக் கூப்பிட்டார்கள். நாங்களும் சென்றோம். கவிதையைப் பற்றி தெரியாத மாணவர்கள் முன்னால் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் யார் பெரியவன் என்ற பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கியபோது இன்னொருவர் அதைக் கட் செய்து விடுவார். அப்படி கட் செய்துவிட்டு அவர்தான் அக்கூட்டத்தில் முக்கியமானவராக மாறி விடுவார். அக் கூட்டத்தின் முடிவில் எங்களுக்குள் சண்டையே வந்துவிட்டது.

ஒருவர் இப்படிப் பேச ஆரம்பித்தார். ”என் கவிதைகளைப் படிக்கிறவர் இங்கே நிறையா பேர்கள் இருக்கிறார்கள்,” என்று தற்பெருமை அடித்துக் கொண்டார். அவர் பொதுவாக காலச்சுவடில் என் கவிதை வந்தது. அதைப் படித்து விட்டு 100 பேர்கள் போன் செய்தார்கள் என்ற ரீதியில் பேசுபவர்.

இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். என்னை ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குமுன் கவிதை வாசிக்கக் கூப்பிட்டார்கள். எனக்குப் பெருமிதமாக இருந்தது. நான் எல்லோருடைய கவிதைகளையும் சேர்த்து வாசிக்க தீர்மானித்தேன். கவிதைக்காக ஒரு மூவ்மெண்ட் நடத்த வேண்டுமென்றும், கவிதையை எல்லோரிடமும் பரப்ப வேண்டுமென்ற முட்டாள்தனமான கொள்கைகளை வைத்திருந்தேன். வழக்கமாக கூட்டம் என்றால் நான் டென்சன் ஆகிவிடுவேன். அந்த முறையும் நான் அப்படித்தான் இருந்தேன். ஆனாலும் போய் கவிதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு முறை கவிதை வாசித்து முடித்தவுடன் மாணவர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். நான் பிரமித்துப்போய் விட்டேன். கவிதைக்கு இந்த வரவேற்பா..நல்ல எதிர்காலம் கவிதைக்கு இருக்கிறது என்று நினைத்தேன். வீட்டிற்குத் திரும்பும்போது நிறைவாக இருந்தது. அடுத்தநாள் காலையில் கூட்டம் ஏற்பாடு செய்தவர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம், ”மாணவர்கள் இந்த அளவிற்கு ரசனை உள்ளவர்களாக இருக்கிறார்களே.., நான் வாசித்த கவிதையை ரசித்துக் கேட்டு கைத் தட்டினார்களே,” என்றேன். அதற்கு அவர், ”நாங்கள் சிக்னல் செய்தோம்..அதைப் பார்த்து மாணவர்கள் கைத் தட்டினார்கள்…”என்றார்.

நான் என்ன சொல்வது?

எதையாவது சொல்லட்டுமா / 15

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொன்று நினைக்கிறேன். இதுவரை blogல் வந்த கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரலாமா? அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது அற்புதமான புத்தகமாக அமையலாம். தமிழில் என்ன சாதிக்கலாம் என்பதை தமிழர்களாகிய நாம் எழுதிய கவிதைகள். நான் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் குறித்து தெளிவான பார்வை எனக்குண்டு. அது எளிமை. இனி புத்தகங்கள் பற்றி எதாவது சொல்கிறேன்.

கவிதைக்காக – ஞானக்கூத்தன் – விலை ரூ.150 – 256 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் கவிதைகளைக் குறித்து 34 கட்டுரைகள் உள்ளன. அந்தக் காலத்தில் கணையாழி இதழில் தொடர்ந்து மாதம் மாதம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைகள் குறித்து புதிதாக சிந்திக்க விரும்புவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகம். ஞானக்கூத்தன் கவிதைகள் மட்டுமல்ல கவிதைகளைக் குறித்தும் சிந்திக்கவும் தெரிந்தவர். சிந்திப்பது, கவிதை எழுதுவது. இரண்டும் முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.
விடுதலையும் கலாச்சாரமும் – பிரமிள் – விலை ரூ.60 – 104 பக்கங்கள் – பிரமிள் என்னுடைய நண்பர். அவருடைய புத்தகம் பிரசுரம் செய்யவேண்டுமென்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்யும் உரிமையை லயம் சுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்துவிட்டார். பிரமிளின் வேகம் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எந்தவித லாபமும் அடையாமல் அவ்வளவு எழுதியிருக்கிறார். இப் புத்தகத்தில் எழுதப்பட்டவை மொழிபெயர்ப்பு கட்டுரை, கதை அப்படியெல்லாம். பிரமிளின் சில ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. பிரமிள் பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றும் வர உள்ளது.
இயல்பு நிலை – யூ ஜி கிருஷ்ணமூர்த்தி – விலை ரூ.70 – 104 பக்கங்கள் – ஆர்.எஸ் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸன் அவர்கள். யூ ஜியின் முக்கியமான புத்தகம் இது. மிகப் புதிரான தத்துவதரிசி. படிக்க படிக்க வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்.
சில கதைகள் – அழகியசிங்கர் – பக்கம் – 120 – விலை ரூ.60 – இந்தப் புத்தகம் அடியேனுடையது. கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் இடம் பெற்ற கதைகள் கொண்ட புத்தகம். குறுநாவல் போட்டியில் என் குறுநாவல்கள் வரும் சமயத்தில் தொடர்ந்து குறுநாவல்களை எழுதிக் குவஸத்தவர்களில் பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், கோபிகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதிக் கொண்டிருந்தார்கள். என் தொகுப்பு மறு பிரசுரம் கண்டுள்ளது. கிட்டத்தட்ட 65 கதைகளும், 200 கவிதைகளும் எழுதி உள்ளேன். இப்போது நாவல் எழுதும் முயற்சியில் தளராமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி எல்லாம் எழுதுவதால் ஒரு கவிஞனாகவும் சேர்க்க மாட்டார்கள், சிறுகதை ஆசிரியராகவும் சேர்க்க மாட்டார்கள். அவசியம் வாங்கினால் நிச்சயம் நீங்கள் ரசிக்கலாம்.
கடலின் மீது ஒரு கையெழுத்து – லாவண்யா – விலை ரூ.30 – கவிதைகள் – 53 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தவறுதலாக இவருடைய முதல் கவிதைத் தொகுதிக்கு இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில் என்று பெயர் வைத்துவிட்டார். நத்தை என்று பெயர் வைத்துவிட்டதால் புத்தகம் நகராமலர் ஒரே இடத்தில் நத்தை மாதிரி உட்கார்ந்து விட்டது. விருட்சம் வெளியீடாக வந்ததால் இவருக்குப் பெயர் கிடைத்துவிட்டது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.