எதையாவது சொல்லட்டுமா / 27

ஒரு வழியாக நவீன விருட்சம் 87/88வது இதழை அனுப்பி வைத்தேன். கடந்த 15 நாட்களாக அவஸ்தை. ஆனாலும் முழுத் திருப்தியாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்னும் சிலபேருக்கு அனுப்புவது நின்று போயிருக்கும். எப்போதோ சந்தா கட்டியவர்க்கு அனுப்பியிருப்பேன். சமீபத்தில் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். அது போகட்டும். நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது கவிதை இதழாகவே ஆரம்பம் ஆனது. 16பக்கங்கள்தான் முதல் இதழ். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். கவிதையைக் குறித்து சில சந்தேகங்களை போன எ.சொ.21ல் எழுப்பியிருந்தேன். பலருக்கு நான் அதிருப்தியுடன் எழுதியிருப்பதாகத் தோன்றியது. உண்மை அப்படி அல்ல. கவிதை ஒரு அற்புதமான விஷயம். மிக எளிதில் கவிதை படிப்பவர் மனதைப் பிடித்துவிடும். ஆனால் கவிதையை ரசிக்க தனிப்பட்ட மனோ நிலை தேவை. எதைக் கவிதை என்று தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. கவிதை என்று எதாவது எழுதிவிட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு கவிதை எளிதில் வசமாகாது. கவிதை பலரை ஏமாற்றி விடும். 70களில் வானம்பாடி என்ற கூட்டம் கவிதைகளைக் குறித்து உரக்கச் சிந்தித்து எழுதினார்கள். ஆனால் அவர்களுடைய கவிதைகள் பலவும் வெறும் சத்தம்தான். அவர்கள் எழுதும் பாணியிலே அவர்களுக்குத் திருப்தி இல்லை. அப்படியே ஓய்ந்து போய்விட்டார்கள். இனிமேல் அந்த முயற்சி தொடர்ந்தால் கேலிக்கு இடமாகிவிடும். அதேபோல் இடதுசாரிகள். அவர்களுடைய கவிதைகள் எல்லாம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுபோல் இருக்கும். உண்மையில் அவர்கள் என்றுமே பிரச்சினையைத் தீர்க்க விட மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டால் அவர்கள் கட்சி இருக்க முடியாது. இடது சாரிகளுக்குக் கூட்டம் அதிகம். மாதம் ஒருமுறை சந்திப்பார்கள். அவர்களுடைய பத்திரிகைகள், புத்தகங்களை வாங்குவார்கள். தப்பான கருத்துகளை பேசிக்கொண்டிருப்பார்கள். இதை எதையும் எதிர்பார்க்காத கூட்டம் ஒன்று உள்ளது. அவர்களுடைய கவிதைப் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக அச்சுக்கு வராது. வந்தாலும் யார் கவனத்திற்கும் போகாது. ஆனால் அவர்கள்தான் உண்மையான கவிதைகளை மெளனமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கவிதை பலரால் எழுதப்படுகிறது. கவிதை எழுதுபவர்கள் முதல்வராகவோ பிரதமராகவோ கூட இருக்கலாம். கும்பகோணத்தில் ஒரு பள்ளி தீ பற்றி எரிந்த சம்பவத்தின்போது அதை எப்படி கவிதையாகக் கொண்டு வருவது என்ற யோசனை பலமாக எனக்கு இருந்தது. அந்தத் தருணத்தில் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அற்புதமாக அந்தக் கவிதை இருந்தது. தினமணியில் வெளிவந்த அந்தக் கவிதையை திரும்பவும் நவீன விருட்சத்தில் நான் வெளியிட்டிருந்தேன். துயரத்தை அந்த அளவிற்கு யாராலும் வரிகள் மூலம் வெளியிட்டிருக்க முடியாது. ஆனால் அதன் பின் அவர் எழுதிய எந்தக் கவிதையும் என் மனதை கவரவில்லை. அதேபோல் ஆன்மிக குருமார்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அவருடைய கவிதை முயற்சியை ரசிக்க முடியாது. ஆனால் நாரானோ ஜெயராமன் என்ற கவிஞர். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு எழுதுவதையே நிறுத்திவிட்டார். அதேபோல் ஜக்கி வாசுதேவ் காட்டுப்பூ என்ற அவருடைய பத்திரிகையில் எழுதும் கவிதைகளை நம்மால் பெரிதும் ரசிக்க முடியாது. கவிதைகளை புரியாதபடி எழுதுவார்கள். நம்மால் கிட்ட நெருங்க முடியாது. தேவை இல்லை என்றும் தோன்றும். பெரும்பாலான மொழிபெயர்ப்பு கவிதைகளை ரசிக்க முடியாது. சிலர் ரொம்பவும் புரியும்படியும் கவிதை எழுதிவிடுவார்கள். சிலசமயம் ரசிக்க முடியும் சிலசமயம் முடியாது. இதன் மூலம் கவிதை என்றால் என்ன என்பதை நிச்சயம் சொல்ல முடியாது. பெரும்பாலான கவிதைத் தொகுதிகளை ரசிக்க முடியாது. எழுதுபவர்கள் அவர்கள் அறியாமலே திரும்ப திரும்ப சலிக்கும்படி எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பார்கள். சில தினங்களுக்கு முன் என் அலுவலகத்தில் இரவு எட்டுமணிக்கு லோன் கட்டாத மகளிர் குழுவுடன் கடுமையாக அதிகாரி போனில் பேசினார். வந்தது வம்பு. அந்த மகளிர் குழுவைச் சேர்ந்த ஆண்கள் கடுமையாக போனில் வங்கியில் உள்ள அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்கள். வழக்கமாக நான், வங்கி மேலாளர், இன்னொரு அதிகாரி மூவரும் சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்குக் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன், வங்கி மேலாளரும், இன்னொரு அதிகாரியும் தூங்கி விடுவார்கள். போனின் எதிரொலியால் வங்கி மேலாளர் வழக்கம்போல் தூங்காமல் விழித்துக்கொண்டே வந்தார். அடுத்தநாள் காலையில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, டிரைவர் சீட் பின்பக்கத்தில் ஒரு திருக்குறள் தென்பட்டது. மேலாளர் என்னிடம் அதைச் சுட்டிக் காட்டினார். கவிதைக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். ஆனால் அந்தக் குறள் படிக்க நன்றாகவே இருந்தது. ஏன் இதைச் சொல்ல வருகிறேனென்றால் எளிதாக மனதைப் பிடித்துக்கொள்ளும்படி கவிதை இருக்கிறது என்பதற்காக. இந்த இடத்தில் நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்காகத்தான் வருகிறோம்இல்லாமல் போகிறோம்.

எதையாவது சொல்லட்டுமா / 26

ப்போதெல்லாம் யோசிக்கும்போது இந்தக் கவிதைகளை ஏன் எழுதுகிறோம் என்று தோன்றுகிறது. கவிதைகளை வாசிப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். யாருக்ககாக நாம் கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு கேள்வியைக்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் யோசிக்கும்போது எனக்காகத்தான் நான் கவிதையை எழுதுகிறேன் என்றாலும், நானே எழுதி நானே வாசிக்கத்தான் கவிதை எழுதுகிறேனா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. நகுலன் அவர் கவிதைத் தொகுதியைப் புத்தகமாகப் போடுபவர்களைப் பார்த்து 50 பிரதிகளுக்குமேல் போடாதீர்கள் என்பார். தலையை எண்ணி கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து விடலாம் என்றும் சொல்வார்.
ஆரம்பத்தில் எனக்கு வள்ளலார் கவிதைகள் மீது ரொம்ப ஆசை. என்னடா வரிகளை இப்படி கொட்டு கொட்டென்று கொட்டுகிறாரே என்று தோன்றும். பின் என் மனநிலை மாறிவிட்டது. இன்று ஆயிரக்கணக்கான பேர்கள் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கவிதையைப் புரிந்துகொண்டு அதில் ஆழ்ந்து சிந்தித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அலுவலகம் செல்லும்போது மின்சார வண்டியில் எதாவது கவிதையை வாசித்துக் கொண்டே போவேன். இப்படி கவிதை வாசிப்பு கவிதை எழுதுபவனாகக் கூட மாற்றி விட்டது. நானும் 200 கவிதைகளுக்குமேல் எழுதிவிட்டேன்.
மின்சாரவண்டியில் மாம்பலத்தில் ஏறியவுடன், நான் வாசித்த கவிதை என் மனதில் இருந்தால், அது குறித்து யோசித்துக்கொண்டே போவேன். இப்படிப் பல கவிதைகளை நான் ரசித்திருக்கிறேன். ஆனால் கவிதை ரசனை என்பது என் மனதில் திட்டமிட்டுத்தான் நடக்கும். இதற்கும் என் அலுவலகப் பணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படி நான் செயல்படுவதை கவிதை ரசனை இல்லாதவர்களுக்குக் கிண்டலாகப் படும். ”என்ன கவிஞரே, கவிதை யோசிக்கிறீங்களா?” என்று கிண்டலடிப்பார் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி. சுட்டுப்போட்டாலும் அவருக்குக் கவிதையே வராது. யோசிப்பது என்பது 24 மணிநேரமும் கவிதையைப் பற்றியே யோசிப்பது என்பதும் கிடையாது. பிறகு இயற்கை வளமான பகுதிகளைச் சுற்றிப் பார்த்தால் போதும், இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், உங்களை மாதிரி கவிஞர்களுக்கு கவிதை எழுத மூட் வந்து விடுமே என்பார்கள். என்ன இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசுகிறார்களே என்று தோன்றும். ‘கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதியிருக்கிறார், ஏன் சார், உங்களுக்கு அப்படியெல்லாம் எழுத வரவில்லை,’என்பார் ஒருவர். அவர்களுக்கு எப்படி விளக்குவது என்பது நமக்குப் புரியாது. கவிதை ரசனை இல்லாதவர்கள்தான் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தமக்கும் கவிதையைப் பற்றி தெரியும் என்பதுபோல் பேசுவார்கள்.
ரொம்ப அறிவாளியான என் நண்பர் ஒருவர், தினமலர் இதழில் வெளிவரும் துணுக்குக் கவிதைகளைக் கொண்டாடு கொண்டாடு என்று கொண்டாடுவார். அவருக்கு விருட்சம் இதழில் வரும் கவிதையைப் பற்றி புரியாது. இப்படியெல்லாம் உள்ள அவதியான சூழ்நிலையில்தான் கவிதை எழுத முயற்சிக்கிறோம். கவிதையைப் பற்றி சிந்திக்கும் என் நண்பர்கள் பலர், தங்களை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். பட்டி மன்றத்தில் வாசிப்பதுபோல், கவிதையை இரைந்து சத்தம் போட்டு வாசிக்கக் கூட விருப்பப் பட மாட்டார்கள்.
இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு ஞாயிற்றுக்கிழமை சமயவேல் என்ற கவி நண்பர், ஜெயமோகன் எழுதியதைப் பற்றி குறிப்பிட்டார். சமயவேல், ஆனந்த், காளி-தாஸ், கனகதாரா போன்றவர்கள் போலி ஜென் கவிஞர்களாம். (இன்னும் ஜெயமோகன் எழுதியதை நான் படிக்கவில்லை) எனக்கு கேட்க வேடிக்கையாக இருந்தது. பிரமிள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். விருட்சம் இதழில் அவர் பெயரைக் குறிப்பிடும்போது, பக்கத்தில் ஞானக்கூத்தன், பசுவய்யா பெயர்கள் எல்லாம் வரக்கூடாதாம். இது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அலுவல் விதிப்படி எங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி வேறு ஒரு கிளைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்படி ஒரு பிரிவு ஏற்படும்போது, கூட்டம் நடக்கும். கூட்டத்தில் பலர் பேசுவார்கள். நான் அந்தச் சந்தர்ப்பத்தில் எதாவது கவிதை வாசிப்பேன். நான் அப்படி ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அலுவலகத்தில் உள்ள நண்பர் ஒருவர், ‘நான் இப்போதே எழுந்து வெளியே போய்விடுகிறேன்,’ என்று மிரட்டினார். கடைசியில் நான் பேசும்போது, வெளிக் கதவைச் சாத்தி விடுகிறேன்…யாரும் வெளியே போகக்கூடாது…என்று மிரட்டி என் கவிதையை வாசித்தேன்.
வாசித்து முடித்தவுடன், கவிதையை கேட்பதற்கும், ரசிப்பதற்கும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது.

எதையாவது சொல்லட்டுமா / 25

சில தினங்களுக்கு முன் ஒரு கனவு வந்தது. அதில் ஸ்டெல்லா புரூஸ் வந்திருந்தார். ஆகஸட் 8ஆம் தேதி அவர் பிறந்தநாள். நான் அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கனவில் அவர் வேறு ஒரு இடத்திற்குப் போகப்போவதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியையும் பார்த்தேன். பொதுவாக சமீணபத்தில் எனக்கு கனவுகள் வருவதில்லை. கனவு காண்பதும் பிடிக்காது. (அப்துல்கலாம் சொல்லும் கனவு இல்லை இது). பின் கனவும் நிஜமாக நடந்ததுபோல் ஒருவிதத் தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய நினைப்புதான் கனவாக மாறிவிடுகிறதா என்றும் தோன்றும். அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் பற்றி இன்னும் எதாவது சொல்லாமல் இருந்து விட்டேனா என்றும் தோன்றியது. எழுந்தவுடன் அவருடைய கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தது. காளி-தாஸ் என்ற பெயரில் அவர் ழ, விருட்சத்தில் கவிதைகள் பல எழுதி உள்ளார். நானும் நானும் என்ற பெயரில் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளோம். அவர் கவிதைகள் சிலவற்றை எடுத்து இந்த blogல் அளிக்கலாம் என்று தோன்றியது. ஒரு கவிதையைக் கொண்டும் வந்துவிட்டேன். இன்னும் சில கவிதைகளை அப்படி கொண்டுவர உத்தேசம்.
ஒருமுறை கனவுகள் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கனவுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். அந்த நண்பர் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர். ஒவ்வொரு கனவிற்கும் எதாவது அர்த்தம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருநாளும் நிஜமான நிகழ்ச்சிகளே கனவுபோல் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை சென்னையை விட்டு இங்கு வந்தவுடன், சென்னையில் இருந்ததே கனவுபோல் தோன்றும். நடந்த நிகழ்ச்சிகளை திரும்பவும் அசை போடும்போது அவை கனவுகளாக மாறிவிடுவதுபோல் தோன்றும். ஸ்டெல்லா புரூஸை நான் நிஜமாக பார்த்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது கனவாக மாறி விட்டன. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அவருக்கு அலுவலகம் வந்தபிறகு இரவு நேரத்தில் போன் செய்தேன். அப்போது தனியாக நான் மயிலாடுதுறையில் இருந்தேன். போனில் அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உருக்கமாகச் சொன்னவர். ஏதோ சத்தம் கேட்டதுபோல் தோன்றியது. போனை கட் செய்யாமல் வைத்துவிட்டுப் போய்விட்டார். அந்த நிகழ்ச்சி எனக்கு திகைப்பாக இருந்தது. அன்று எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. இது நிஜமா கனவா? நிஜத்தில் கனவு?
நிஜம் கனவை விட மோசமான நிகழ்ச்சியாக மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை தி நகரில் உள்ள பாலம் வழியாக வண்டியில் என் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு காகம்என் வண்டி மீது மோதி தரையில் பலமாக வீழ்ந்து இறந்து விட்டது. இது மாதிரி சம்பவம் குறித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இது ஏதோ மோசமான சம்பவத்தைக் குறிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் மறுநாள் திருநாவுக்கரசு என்ற அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு, உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்குச் சென்றவர், மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நானும் அவரும் பக்கத்தது பக்கத்து சீட்டில் அமர்ந்து பணி புரிபவர்கள். ஒரு சம்பவத்திற்கும் இன்னொரு சம்பவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மனம் முடிச்சுப் போட்டுக்கொண்டே இருக்கும்.ஒரு விஷயத்தைத் தீவிரமாக யோசித்தால் அது கனவாக மாறி நமக்கு எதாவது அர்த்தம் சொல்வதாக தோன்றுகிறது. வெறும் நினைவின் நீட்சிதான் கனவு. அப்படி சொல்வது சரியாக இருக்குமா? சமீபத்தில் நான் ஒரு தேர்வு எழுதி உள்ளேன். அந்தத் தேர்வின் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதற்குள் என் கனவில் லிஸ்ட் வருவதுபோலவும் அந்த லிஸ்டில் என் பெயர் இல்லாததுபோல் கனவு கண்டேன். (இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போது, லிஸ்ட் வரவில்லை. ஆனால் இன்று (03.09.2010) லிஸ்ட் வந்து விட்டது. உண்மையில் என் பெயர் இல்லை.) என் பெரியப்பா ஒருவர் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் படுத்துக் கிடந்தார். ஒருநாள் காலையில் நான் ஒரு கனவு கண்டேன். அவர் வாயில் அரிசி போடுவதுபோல். எனக்கு திகைப்பாக இருந்தது. காலையில் பெரியப்பா வீட்டிலிருந்து போன். அவர் இறந்து விட்டதாக.
இன்னொரு கனவு. ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி. அவர் எங்கோ சென்று விட்டு, காரிலிருந்து இறங்குகிறார். அப்போது யாரோ அவரைப் பார்த்து சுடுகிறான். இந்தக் கனவின் அர்த்தம் எனக்கு சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் கான்சர் நோயால் பாதிப்படைந்து மரணம் அடைவதைத்தான் அந்தக் கனவு சுட்டிக் காட்டியதாக நினைத்தேன்.
ஸ்டெல்லாபுரூஸ் பற்றி இன்னொரு கனவு. ரொம்ப வருடங்கள் முன்பு நான் கண்ட கனவு. இதை அவரிடம் சொன்னதுகூட கிடையாது. அவருக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டேன் என்றுதான் அவர் மனைவியை எங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்தினார். ஆனால் என் கனவில் அவர் மனைவி ஒரு பட்டுப்புடவை அவரிடமிருந்து வாங்கிப் பிரிப்பதுபோலவும் அப் புடவையில் ஒரு பகுதி கிழிந்திருப்பதுபோலவும் தெரிகிறது. சொன்னால் வருத்தப்படுவார் என்பதால் சொல்லவில்லை.
என் நெருங்கிய உறவினரின் பையன் ஒருவன் நிச்சல் கற்றுக்கொள்ளும் இடத்தில் மரணம் அடைந்துவிட்டான். இது பெரிய துக்கமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக அந்தப் பையனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கனவில் அந்தப் பையன் வந்தான். அவன் ஓர் இடத்தில் தினசரி தியானம் செய்து கொண்டிருக்கிறான். நெற்றியில் விபூதிப் போட்டிருந்தான். அவனைக் கூப்பிடுகிறேன். ஆனால் அவன் எழுந்து வராமல் இருக்கிறான்.
என் பிறந்த தினம் போது யாரும் என்னைக் கூப்பிட்டு வாழ்த்துவதில்லையே என்று ஒவ்வொரு முறையும் பிறந்த நாள் போது நினைப்பதுண்டு. ஒருமுறை கனவில் என் பாட்டி என்னை வாழ்த்தினாள். அதை நினைத்து அன்று முழுவதும் எனக்கு திகைப்பாக இருந்தது.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயப்படும்படியான கனவுகள் பலவற்றை கண்டிருக்கிறேன். ஒரு கனவில் டிரெயின் கிளம்பி வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் அதைப் பிடிக்க எத்தனிப்பேன். முடியாது. என்னைச் சுற்றிலும் கோவில் கோவிலாக இருக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கோவில் கோபுரம். பயமுறுத்துவதுபோல். தி.நகரில் முப்பத்தம்மாள் கோயில் உள்ள தெரு முனையில் ஒரு பப்ளிக் டாய்லட் இருக்கும் அந்த டாய்லட்டில் நானும், நடிகர் அமிதாப்பச்சனும் யூரின் போவதுபோல் ஒருமுறை கனவு. அந்தக் காலத்தில் இந்தி சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்.
நான் ஒரு Flat வாங்கினேன். 406 சதுர அடிகள்தான். குளிக்க பாத்ரூம் போக சமையல் அறை வழியாகத்தான் போக வேண்டும். சமையல் அறை அவ்வளவு குறுகல். ஏமாந்து வாங்கிவிட்டேன். பல நாட்கள் தூக்கம் வரவில்லை. அப்போது ஒரு கனவு. சமையல் அறை ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் இருப்பதுபோல்.இன்னும் பல கனவுகள். சில மட்டும் ஞாபகத்தில். என் எழுத்தாள நண்பர்களும் அவரவர் கனவுகளை என்னிடம் கூறி உள்ளார்கள். பிரமிள் சொன்ன கனவு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் காந்தி கடற்கரையில் (சென்னை) சிமெண்ட் பெஞ்சில் படுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரை யாரோ தாக்க முயற்சி செய்கிறார்கள். தலையில் முண்டாசுடன் கையில் நீண்ட வாளுடன் ஒருவர் காப்பாற்ற வருகிறார். தாக்க வந்தவர்கள் ஓடிப் போய் விடுகிறார்கள். அவரைக் காப்பாற்றியவர் வேறு யாருமில்லை. சிரூடி சாய்பாபாதான். பிரமிள் இந்தக் கனவு காணும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையே ஒரு கனவுபோல்தான். நம் முன்னால் சில காட்சிகள் தென்படுகின்றன. அந்தக் காட்சிகள் பின் கனவுகளாக மாறி விடுகின்றன.

நான் பிரமிள் விசிறி சாமியார்…..14

நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அடிக்கடி ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் அவரைச் சந்திக்காமல் இருந்தால் இதுமாதிரி தோன்றும். இப்போதுள்ள செல்போன் வசதி அப்போது இல்லை. பிரமிளை பெரும்பாலும் என் அலுவலகக் கட்டிடத்தில் மதியம் உணவு உண்ணும் வேளையில் சந்திப்பேன். அவருக்கு எதாவது சாப்பிட வாங்கிக்கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இப்படி அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வேறு எழுத்தாள நண்பர்களையும் நான் சந்திப்பேன். பிரமிளுடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ரா ஸ்ரீனிவாஸனை சந்தித்து விட்டேன். இந்தத் தகவலை நான் எழுதியிருக்கிறேன் மேற்படி ஆத்மாநாம் இரங்கல் கட்டுரை எழுதியபோது. இதில் என்ன சிக்கல் என்றால், பிரமிள் தமக்குப் பிடித்தமானவர்களை மட்டும்தான் பார்ப்பார் .இயல்பாகப் பேசுவார். இது அவருடைய சுபாவம். ரா ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்திக்கொண்டு விட்டார். இது பிரச்சினை ஆகிவிட்டது. நான், ஸ்ரீனிவாஸன், பிரமிள் மூவரும் கான்டினில் டிபன் சாப்பிடச் சென்றபோது, பிரமிள் உரத்தக் குரலில், ‘நான் அப்படித்தான் மூச்சு விடுவேன்…பிறர் மேல் மூச்சு விடுவேன்..’ என்ற சத்தமாகக் கூறினார். இது நான் எதிர்பாராதது. ஏன்எனில் என்னுடன் தனிமையில் இருக்கும்போது இதுமாதிரியெல்லாம் வெளிப்படுத்த மாட்டார். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் அதுமாதிரி பேச ஆரம்பித்து விட்டார். ஞானக்கூத்தன் கவிதை ஒன்றில் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விட மாட்டேன் என்று எழுதியிருப்பார். பிரமிளுக்கு ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தன் கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிவிட்டார். உண்மையில் அப்படியெல்லாம் கட்சி கிடையாது. எல்லோரும் கவிதைகள் எழுதத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான். மேலும் ஸ்ரீனிவாஸன் பிரமாதமாக பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இந்த இடத்தில் நான் தவறாக முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். பிரமிளைப் பார்த்தவுடன் ஸ்ரீனிவாஸனுக்கு சங்கடம் ஏற்பட்டு விட்டது என்று. உண்மையில் அந்தச் சங்கடம் எனக்குத்தான் என்று எழுதியிருக்க வேண்டும். இந்தத் தவறை ஸ்ரீனிவாஸன் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் சாப்பிட உட்கார்ந்தபோது பிரமிள், ஞானக்கூத்தனை ‘ஞானக்கூத்தன்…கேனைக்கூத்தன்’ என்று குறிப்பிட்டதாக ஸ்ரீனிவாஸன் என்னிடம் கூறி உள்ளார். இது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஸ்ரீனிவாஸன் இது குறிப்பிட்டு உங்கள் கட்டுரையில் இதைக் குறிப்பிட வேண்டும் என்று கூறி உள்ளார். அவரே இந்தத் தவறை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நான் பழகிய நண்பர்களில் பிரமிள் ஒருவிதம் என்றால் ஸ்ரீனிவாஸன் இன்னொரு விதம். பிரமிள், ஸ்ரீனிவாஸனை ஒருசேர பார்த்தபோது நான் சங்கடப் பட்டது உண்மைதான். ஆனால் அதுமாதிரி நிகழ்ச்சி இப்போது ஏற்பட்டால் சங்கடப் பட்டிருக்க மாட்டேன்.
அதன்பின் பிரமிள் ஸ்ரீனிவாஸனை என் அலுவலகத்தில் பார்க்கும்போது, ‘உங்கள் நண்பர் வந்துவிட்டார்..நான் போகிறேன்…’ என்று ஓட்டமாய் ஓடிவிடுவார். அன்று ஸ்ரீனிவாஸன் பிரமிள் சொன்னதைக் கேட்டு வெறுமனே புன்னகைத்துக் கொண்டாரே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

எதையாவது சொல்லட்டுமா / 24

தினமும் காலை 9 மணி சுமாருக்கு, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் கிளம்பி சீர்காழிக்குச் சென்று வருவேன். சீர்காழியிலிருந்து திரும்பவும் வீடு வந்து சேர மணி 9 மணிமேல் ஆகிவிடுகிறது. சில சமயம் பத்தைத் தொட்டு விடுகிறது. இதுமாதிரியான வேலை கடுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. சுருக்கெழுத்தாளராக நான் சென்னையில் இருந்த காலம் பொற்காலம்.
எந்தத் தப்பை யார் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்போடு இருக்க வேண்டி உள்ளது.
பெரும்பாலும் என் அலுவலக நண்பர் அறிவானந்தமும் நானும் சேர்ந்துதான் வருவோம். அவரைப் பார்க்கும்போது பெரும்பாலும் சோர்வாக இருப்பார். நானும் அவரும் energy எல்லாம் தீர்ந்துபோய் வற்றிப் போய் வருவோம். வங்கியில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு தொடர்ந்து அதில் பணிபுரிய விருப்பமில்லை. இதில் தப்பிப்பவர்கள் க்ளார்க்காகப் பணிபுரிபவர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொஞ்ச வேலை பளு அதிகமாக இருந்தால் முணுமுணுப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் 5 மணிக்குமேல் அவர்களை இருக்கச் சொல்லமுடியாது.
முன் யோசனை எதுவுமின்றி 2004ல் நான் இப்படி மாட்டிக்கொண்டேன். இதனால் எந்தப் பயனுமில்லை என்பதோடல்லாமல் எல்லாவித அவமரியாதையும் பெற்றுக்கொண்டேன். இதைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தபோது இதைப் பற்றியே நான் எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி சில கவிதைகளையும் கதைகளையும் எழுதிப் பார்த்துக்கொண்டேன். என் எழுத்தைப் படித்த சிலருக்கு என் மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது. சிலருக்கு அலுப்பாகவும் இருந்திருக்கும்.
சரி இது இப்படியே எத்தனை நாட்கள் போகுமோ போகட்டுமே என்று நினைக்கத் தொடங்கி விட்டேன். என்ன எந்த விஷயம் நடக்க வேண்டுமென்றாலும் யாரையாவது நம்ப வேண்டி உள்ளது. தனியாக இருப்பதால் வீட்டிற்கு தினமும் போன் பண்ண வேண்டியுள்ளது. நான் நடத்தும் விருட்சம் தடுமாற்றம் அடைகிறது. இலக்கிய நண்பர்களைப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடிவதில்லை. ஜெயமோகன் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டதாக இந்துவில் படித்தேன். அவருக்கு சினிமா இருக்கிறது. என்னால் வேலையை விட முடியாதுதான் என்று தோன்றுகிறது.
பஸ்ஸில் சென்று கொண்டிருப்பதால் எத்தனையோ விதமான மனிதர்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அன்று அப்படித்தான். அலுவலக வேலையை முடித்துவிட்டு நானும் அறிவானந்தனும் கொள்ளீட முக்கில் நின்றிருந்தோம். ஒரு பஸ் வந்தது. இந்த பஸ்ஸில் ஏறவேண்டாம் என்றார் அறிவானந்தன். ‘சீட்டெல்லாம் காலியாக இருக்கிறது,’ என்றேன். ஏனோ தடுத்துவிட்டார். அடுத்த பஸ்ஸில் ஏறினோம். சீர்காழி புது பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், ஒரு பெரியவர் பஸ்ஸில் ஏறினார். ஒரு கம்பு வைத்திருந்தார்.. நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். என் பக்கத்து சீட் இளைஞர் எழுந்து அந்தப் பெரியவருக்கு இடம் கொடுத்தான். பெரியவர் என் பக்கத்தில் அமர்ந்தார். தலையில் முண்டாசு கட்டியிருந்தார். சட்டைப் பொத்தான்களைப் போடாமல் இருந்தார். கண் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை.
”என்ன வயது?” ”84” ”ஏன் இந்தத் தள்ளாத வயதில் பஸ்ஸில் வருகிறீர்கள்?” ”என்ன பண்றது? பையன் யாரையோ இழுத்துக்கொண்டு வந்துட்டான். வச்சுக்க மாட்டேங்கறான்..” ”வேற பையன்கள் இல்லையா?””யாருமில்லை.””பொண்டாட்டி இல்லையா?” ”அது எப்பவோ போயிடுத்து.” ”அப்ப எங்க வசிக்கிறீங்க?””மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட்.””ஏன் சீர்காழி வந்தீங்க?” ”தப்புதான் தெரியாம வந்துட்டேன்.””ஏன்?” ”எதாவது கிடைக்கும்னு பார்த்தேன்.” ”மாயவரம் நல்ல ஊர். சீகாழி ஒண்ணும் கிடைக்காது..” ”ஆமாம். ஆமாம். ஒருத்தன் கேட்டத்துக்கு தாடையில அடிச்சுட்டான்.” எனக்கு பாவமாக இருந்தது அந்தப் பெரியவரைப் பார்க்கும்போது. 84 வயதில் கண் சரியாத் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை. ”டிக்கட் வாங்க பணம் இருக்கா?” ”இருக்கு.,” என்றார்.பஸ் கண்டக்டர் டிக்கட் கேட்டபோது, சரியாக 6 ஒரு ரூபாய் காசுக்களைக் கொடுத்தார். நானும், அறிவானந்தனும் அவர் மேல் இரக்கம் கொண்டோம். இருவரும் கொஞ்சம் பணம் சேர்த்து அவரிடம் கொடுத்தோம். அறிவானந்தன் குறிப்பிட்டார். ‘இந்தப் பெரியவரைப் பார்க்கத்தான் நாம இந்த பஸ்ஸில் ஏறினோம்,’ என்றார். நான் திரும்பவும் அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன். ”நீங்க எங்க வேலை பாத்தீங்க?” ”சிங்கப்பூரில..வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்..” கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பெரியவரே பேச ஆரம்பித்தார்.”எதுக்கு நான் இருக்கணும்……போனாத் தேவலை….கடவுள் கூப்பிட மாட்டேங்கறான்..”
அவருடைய பேச்சு சாதாரணமாகத்தான் இருந்தது. விரக்தி எதுவும் தெரியவில்லை. நான் இருக்கும் தெருவில் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் குளித்துவிட்டு சுத்தமாக காவி உடையை உடுத்திக்கொண்டு வியாழக்கிழமை மட்டும் வருவார்கள். அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஒருமுறை அவர்களை என் காமிராவில் படம் பிடிக்க வேண்டுமென்று நினைப்பேன். அன்று இரவு வீட்டில் அந்தப் பெரியவரைப் பற்றியே நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது.
எனக்குத் திடீரென்று ஆத்மாநாம் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.
பிச்சை
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போபிச்சை பிச்சை என்று கத்து உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்ணும்உன் பசிக்காக உணவு சில அரிசி மணிகளில் இல்லைஉன்னிடம் ஒன்றுமே இல்லை சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர
இதனைச் சொல்வது நான் இல்லை நீதான்

எதையாவது சொல்லட்டுமா / 23

ஆகஸ்ட் 8ஆம்தேதி ராம் மோகனின் பிறந்த தினம். யார் இந்த ராம் மோகன். அவர்தான் ஸ்டெல்லா புரூஸ். அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால், 70 வயது ஆகியிருக்கும். அவர் தானகவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்புவரை சாதாரணமாகத்தான் இருந்தார். எந்தக் கொடிய நோய் எதுவுமில்லை. கண் பார்வை சற்று தடுமாற்றம்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் நம்ப முடியவில்லை. அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அவர் குடும்ப வியாபாரத்தைத் தொடர்ந்து பார்த்தார். அதில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும், அவருக்கு உரிய தொகையை வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டு வங்கியில் சேமிப்பில் வைத்திருந்தார். வங்கித் தரும் வட்டித் தொகையை எடுத்து குடும்பம் நடத்தினார். தனியாக இருந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து, சென்னையில் அறைவாசியாக பல ஆண்டுகளாக இருந்தார். புத்தகம் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, நினைத்தபோது ஊருக்குச் செல்வது என்று பொழுதைக் கழித்தார். ஆடம்பரமாக பணம் செலவு செய்யமாட்டார. ஆனந்தவிகடன் மூலம் தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் புகழ் பரவத் தொடங்கியது. ஹேமா என்ற பெண் கிடைத்தாள்.
பல ஆண்டுகளாக அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டாமென்று நினைத்தார். பின் திருமணம் செய்து கொண்டார். ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா, அவர் என்று மூவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். பிரேமா ஒரு இதய நோயாளி. மயிலாப்பூர், ஆதம்பாக்கம் என்று முதலில் பல இடங்களில் வசித்து வந்தார்கள். பின் கோடம்பாக்கத்திலுள்ள யூனைடட் இந்தியா என்ற இடத்தில் உள்ள ஹேமாவின் சகோதரர் இல்லத்தில் வசித்து வந்தார்கள். இங்குதான் தொடர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வந்தார் ஸ்டெல்லா புரூஸ். அந்த இடத்திற்கு அடிக்கடி நான் சென்றிருக்கிறேன். நண்பர்கள் பலரும் சென்றிருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்தால் மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். புத்தகம் படிப்பது, பேசிக்கொண்டிருப்பது, எங்காவது செல்வது இப்படித்தான் பொழுதைப் போக்குவார்கள்.
ஹேமாவும், பிரேமாவும் எழதுவார்கள். பிரேமாவின் ஒரு கதை தொடர்கதையாக ஆனந்தவிகடனில் வெளி வந்திருந்தது. ஹேமா கவிதைகள் எழுதுவார். நான், வைத்தியநாதன், ராஜகோபாலன் மூவரும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்குச் செல்வோம். பிரேமா ரொம்ப நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை ஸ்டெல்லா புரூஸ் எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
ஒருநாள் அப்படித்தான் நடந்தது. பிரேமா இறந்துவிட்டார். பிரேமாவின் இழப்பு பெரிய அளவில் பாதிப்பை ஹேமாவிற்கு ஏற்பட்டு விட்டதாக ஸ்டெல்லா புரூஸ் சொல்லியிருக்கிறார். வெகுநாட்கள் இந்தத் துக்கத்தை வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருந்திருக்கிறார் ஹேமா. மிகச்சாதாரண உணர்வுகளுடன் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையில் புயல். ஹேமாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்பு அடைந்து விட்டன. பெரிய அளவில் மருத்துவத்திற்காக செலவு செய்யாத சாதாரண குடும்பத்தில் ஹேமாவின் உடல் பாதிப்பு மனோ ரீதியான பாதிப்பையும் ஸ்டெல்லா புரூஸிற்கு ஏற்பட்டு விட்டது.
மனைவியை வாரம் இருமுறை டயலிஸிஸ் அழைத்துப் போகும்படியாக நேரிட்டது. கண் கலங்காமல் அவருடைய தேவைகளை உடனுக்குடன் கவனித்துக்கொண்டிருந்த ஹேமாவை அவர் கவனிக்கும்படி நேரிட்டு விட்டது. கடைக்குச் செல்வது, சமையல் செய்வது என்று எல்லாம் ஹேமாவாக இருந்த நிலை முழுவதும் மாறிவிட்டது. இது பெரிய அதிர்ச்சி. மேலும் மருத்துவ மனைக்குச் செல்வது. அங்கு சென்ற பிறகுதான் அவர் நிம்மதி இன்னும் போய்விட்டது. வாரத்திற்கு இரண்டு முறை செல்லும்படி நேரிட்டுவிட்டது. பணத்திற்கு என்ன செய்வது? எத்தனை நாட்கள் இப்படியே தள்ளுவது? அதைவிட நோயின் கொடுமை. இந்த இடத்தில் ஆன்மிகத்தை அவர் பெரிதும் நம்பினார். Healing Touch மூலம் ஹேமாவின் உடலை குணப்படுத்தலாம் என்றெல்லாம் நம்பினார். நான் அவரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம், இது குறித்து அவர் பேச ஆரம்பித்து விட்டார். மனைவியைக் குணப்படுத்துவதோடல்லாமல் இன்னும் பலரை குணப்படுத்தி விடலாமென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் என் நண்பர் தாஸ் அவர்களின் மாமனார் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக டயலிஸிஸ் செய்துகொண்டு வருபவர் 91 ஆம் ஆண்டில் இறந்து விட்டார் என்று குறிப்பிட்டார். இது மெடிக்கல் சரித்திரத்தில் ஆச்சரியமான விஷயமாகக் கருதப் படுகிறது. மனைவியை இழப்பது உறுதி என்று அறியும்போது ஸ்டெல்லாபுரூஸ் அழக்கூட அழுது இருக்றார். இதெல்லாம் அவருடைய இயல்பு இல்லை.
மனைவியின் இழப்பு பெரிதும் அவரைப் பாதித்து விட்டது. படித்தப் புத்தகங்களும், எழுதிய எழுத்துக்களும் அவருக்கு உதவி புரியவில்லை. அவர் ஆன்மிகம் என்று பெரிதாக நினைத்ததெல்லாம் போய்விட்டது. இச் சமயத்தில் அவர் ஓரளவு ஆழமான depressionல் தவித்துக் கொண்டிருந்தார். நான் ருத்ரன் என்ற மனோ தத்துவ மருத்துவரைப் பார்த்தார். அவருக்கு யாராவது பக்கத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று சொன்னார்.
எல்லா உறவினர்களும் அவருக்கு இருந்தாலும், அவரால் அவர்களுடன் போய் இருக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் தேவராஜ் என்ற நண்பர் அவருடன் இருக்க முயற்சித்திருக்கிறார். அவர் திரும்ப திரும்ப ஹேமாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததால், தேவராஜூற்கே அங்கு தொடர்ந்து இருக்க முடியவில்லை. அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போக நினைத்தார் தேவராஜ். ஆனால் அதுவும் முடியவில்லை. நான் ருத்திரனிடம் ஸ்டெல்லா புரூஸை அழைத்துக்கொண்டு போகலாமா என்று நினைத்தேன். என்ன பிரச்சினை என்றால் ஸ்டெல்லா புரூஸ் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்தத் தருணத்தில்தான் அவருடைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஹேமாவின் நகைகளை திருப்பதி கோயில் உண்டியில் ஒரு நண்பர் மூலம் போட வைத்துவிட்டார். அவர் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்யும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டால். 69வயதில் இப்படி ஒரு காரியத்தை அவர் செய்திருப்பது வருத்தமாக இருந்தது.
எழுத்தாளர் சுஜாதா மரணம் அடைந்த மறுதினம் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார். மயானத்தில் அவரைப் பார்க்க மிகக் குறைவான பேர்களே வந்திருந்தார்கள். உயிரோடு இருக்கும்போது வராத உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாக சொல்வதைத் தவிர வேற சொல்ல ஒன்றுமில்லை.

எதையாவது சொல்லட்டுமா / 22

திரும்பவும் ஆத்மாநாம் வந்து விட்டார்.திரும்பவும் ஆத்மாநாம் உயிர்தெழுந்து விட்டாரா என்று தோன்றுகிறது. சமீபத்தில் பெருந்தேவி கவிதையைப் படிக்கும்போது அப்படித்தான் தோன்றியது. முத்தம் என்று ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து பெருந்தேவி அக்கவிதையுடன் தன்னுடைய கூற்றையும் சேர்த்து எழுதியிருந்தார். 30 ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாம் இப்படி அவர் கவிதையைத் தொடர்ந்து எழுதியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஒரு பெண்ணுடன் அன்புடன் இருந்தார். உடவே பெண் வீட்டில் அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டார்கள். ஆத்மாநாமிற்கு நிறைவேறாத காதல். அவருடைய வியாபாரம் படுத்துவிட்டது. அவர் லாகீரி வஸ்துகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மனப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது.
அவரை முப்பது ஆண்டுகளுக்கு முன் 3 முறைகளுக்குமேல் சந்தித்திருப்பேன். முதல் முறை இலக்கு என்ற இலக்கியக் கூட்டத்தில். ஞாநி தங்கியிருந்த பீட்டர்ஸ் ரோடு அடுக்ககத்தில் சந்தித்தேன். நானும் போயிருந்தேன். ‘இவர்தான் ஆத்மாநாம்’ என்று யாரோ சொன்னார்கள். ஆத்மாநாமை விட ஞானக்கூத்தன் பெயர்தான் பிரபலம். ழ என்ற பத்திரிகை பிரதிகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். எனக்கு ஏனோ அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அடர்த்தியான தலைமுடியுடன் பார்க்க பர்சனாலடியாக இருந்தார். அவர் உருவம் முரட்டுத்தனமதாக இருந்தாலும், மென்மையான உணர்வு கொண்டவர். ழ பத்திரிகையை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் விருட்சம் பத்திரிகை வைத்திருந்தால் அப்படித்தான் கொடுத்திருப்பேன். அன்று ஆத்மாநாமைப் பார்த்தேனே தவிர பேசவில்லை. ஆனால் அவரைப் பார்க்கும்போது ஏதேவிதமான சோகம் கப்பிக்கொண்டிருந்தது.
இரண்டாவது முறை ஞாநி திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். ஞாநி மியூசியம் தியேட்டரில் எல்லோருக்கும் முன்னால் பத்மாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பு செய்தார். எல்லோருக்கும் டீ வழங்கினார். பின் நாடகம் அரங்கேறியது. எனக்கு அப்படிச் சொல்லி திருமணம் செய்து கொண்டதே ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் ஆத்மாநாம் இருந்த இடத்திற்கு நான் வந்து உட்கார்ந்தேன். நகுலனைப் பற்றி நான் ஏதோ கேட்டேன். ஆத்மாநாம் ஏதோ பதில் சொன்னார். அதன் பின் விமலாதித்த மாமல்லனைப் பார்த்தவுடன் எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் அவர் கொடுத்தப் புத்தகத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மூன்றாவது முறை ஆத்மாநாமை நண்பர் வைத்தியநாதனுடன் பார்த்தேன். அப்போது நான், வைத்தி, ஆத்மாநாம் மூவரும் ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். ஆத்மாநாமிடம் அவருடைய நிஜமே நிஜமா கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். ஆத்மாநாம் ஆனந்த்தை வீட்டிற்குக் கூப்பிட்டார். மனைவியை அழைத்துக்கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அப்போதுதான் ஆத்மாநாமின் காகித்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரயனுக்குப் பின்பக்கம், நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். ஆத்மாநாம் புத்தகத்தில் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனந்த்தும் எழுதிக் கொடுத்தார். நான் கேட்டேன் ஆனந்தை ”இந்த வீட்டிற்கு என்ன வாடகை என்று.” வைத்தியநாதன் உடனே, ”இதுமாதிரி லெளகீக விஷயங்களைப் பேசாதீர்கள்,”என்று சொல்ல எப்படிப் பேசுவது என்று திகைத்தேன். ஆனந்தின் கவிதை ஒன்றில் சற்றே பறந்து கொண்டிருந்த பறவையைப் பற்றி கேட்டேன். பின் அங்கிருந்து நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் மூவரும் அண்ணாசாலையில் உள்ள உடைகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம். ஒன்றும் வாங்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து வைத்தியநாதன் பேசும்போது ஆத்மாநாம் அன்று சரியாய் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆத்மாநாமின் பிரச்சினை. உடனடி புகழ். கவிதை எழுதி புகழ் எங்கு கிடைக்கும். அதுவும் உடனடியாக. இகழ் வேண்டுமானால் உடனடியாகக் கிடைக்கலாம். வாழ்க்கையின் நிராசையுடன் வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவர் ஆத்மாநாம். எதற்கு இதெல்லாம் சொல்கிறேனென்றால் பெருந்தேவியின் முத்தம் கவிதைக்கான தொடர்ச்சியைப் பார்த்திருந்தால் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.ஆனால் அவர் ஆதரவு அற்று, அன்பு காட்ட யாருமில்லாமலும் தற்கொலை செய்து கொண்டார். பெருந்தேவி திரும்பவும் ஆத்மாநாமை நம்மிடம் கொண்டு வந்து விட்டார். இன்றெல்லாம் ஆத்மாநாம் இருந்திருந்தால் 60 வயது இளைஞராக இருந்திருப்பார்.
இதோ பெருந்தேவியின் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.
முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்(ஆத்மாநாம் பெருந்தேவி)
பரபரத்து இலக்கை நோக்கி
நீங்கள் மற்றவர்கள்
முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்
உங்கள் நண்பி வந்தால்
உங்கள் அன்பனைக் கண்டால்
எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர
இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி
இதமாக பின்னர் ஞாபகமும்
தொடர்ந்து
முக்குளிக்க
நீண்டதாக பால்வீதியினும் நீள
முத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்உங்களைப் பார்த்து பொறாது
மற்றவர்களும் பார்த்தும்
பாராது
அவரவர்
வழிசெல்பவரும்
நண்பிகளுக்கு முத்தம்
அன்பர்களுக்கு அமுதம்
கொடுக்கட்டும்
கொடுப்பர் அதேபோல்
விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்
மறந்துவிட்டு
பிறவாநிலையின்
சங்கமமாகிவிடுவீர்கள்
ஒரே புள்ளியில்
பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக
ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க
நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்
நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்
விற்பனை அங்காடிகளில் கோயில்களில்
வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்
நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்
சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்
கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்
உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர
ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண
இருக்கும் சில நொடிகளில் தனதற்ற
உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான
முத்தத்தைவிட முத்தம்போலும்
சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு
கிடைப்பதரிது அரிது அரிது
ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே
முத்த அலுவலை உதட்டின் கடமையை
இன்றே நந்நாள்
இப்பொழுதே நற்பொழுது
இக்கணமே பொற்கணம்
உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்
உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து
காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்
முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு
கிறிஸ்து பிறந்து ம்
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்
இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்
நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து
சுத்தமாக வரமாக
முத்தம் பரமாக
முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்
என்று இப்போதே
முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்
துவங்குங்கள் துவங்கியாயிற்று.

எதையாவது சொல்லட்டுமா / 21

சீர்காழி வந்து 6 மாதம் ஓடிவிட்டது. நேற்று நாகூர் விரைவு ரயில் வண்டியில் படுத்துக்கொண்டிருந்தபோது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படித்தான். பஸ்ஸில் பயணம் செய்வது மோசமாக உள்ளது. கால் வீங்கி விடுகிறது. அப்புறம் சரியாகி விடுகிறது. ரயிலில் பயணிப்பது அப்படி அல்ல. எப்போது ரயில் விடப்போகிறார்கள் என்று காத்திருந்து மே மாதத்திலிருந்து விட ஆரம்பித்து விட்டார்கள். பெரிய அனுகூலம் இது. என்னைப்போல் எத்தனைப் பேர்கள். எத்தனைக் குடும்பங்கள்.
ஆனால் ரயிலில் எப்போதும் வெயிட்டிங் லிஸ்டில்தான் இடம் கிடைக்கிறது. பின் படுப்பதற்கான இடமாக மாறி விடுகிறது. கலகலவென்று இருக்கிறது ரயில். விதவிதமான பயணங்கள். விதவிதமான மனிதர்கள். நான் ஒவ்வொரு வாரமும் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வரத் தவறுவதே இல்லை.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஜீ எஸ் டி ரோடில் ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் முதியோரை யாரோ போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அவர் மயக்க நிலையில் ரோடில் இருந்தாராம். பின் அவருக்கு உரிய கவனம் கொடுத்தபிறகு யார் அவருடைய உறவினர்கள் என்பதை அவர் சொல்ல விரும்பவில்லையாம். அவர்களைப் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படவில்லையாம்.
சரி நான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேனே எதைச் சொல்கிறேன் என்று தெரியவில்லையா? வேற எதைச் சொல்வேன். முதியோர் இல்லத் தலைவி என் மனைவிதான். என் வீட்டைத்தான் முதியோர் இல்லம் என்று சொல்கிறேன். என் தந்தைக்கு 89 வயதாகிறது. மாமியாருக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு வந்து உதவி செய்கிற பணியாளருக்கு 75 வயதாகிறது. இவர்கள் மூவரையும் என் மனைவிதான் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள். நான் வாரம் ஒருமுறை முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிட்டு சீர்காழி வந்து விடுகிறேன்.
89 வயதாகிறது என்று அப்பா சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டிற்கு வரும் எல்லோரிடமும் ஹோமியோபதி மருந்தைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறார். எல்லாருக்கும் என்ன வியாதி என்று கேட்டு அதற்கு ஏற்ற மாதிரி மருந்தை வாங்கியே கொடுத்து விடுகிறார். முன்புபோல் வெளியே நடக்க முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்குமுன் அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு போவார். அவர் பயன்படுத்தியது made in england சைக்கிள். சைக்கிள் இவரை ஓட்டுகிறதா? அல்லது இவர்தான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போகிறாரா என்று தோன்றும். ஒருமுறை ஏற்பட்ட விபத்தால் சைக்கிள் பக்கம் போவதில்லை. ஒருமுறை உறவினர்கள் என்ற பெயரில் என் அப்பாவை மையமாக வைத்து ஒரு குறுநாவல் எழுதியிருந்தேன். கணையாழியில் வந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் எழுதும் எதையும் அவர் படிப்பதில்லை.
84 வயதாகிற என் மாமியார் வீட்டிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார். சமையலறைச் சென்று எதுவும் செய்ய முடியவில்லை. யார் உதவியுமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியாது. பாதங்கள் கோணல் மாணலாக வீங்கி விட்டன. சாப்பிடுவது மிகக் குறைவு.
டிவியில் சீரியல் பார்ப்பதுதான் ஒரே பொழுது போக்கு.

எதையாவது சொல்லட்டுமா / 20

குற்றமும் தண்டனையும்

சமீபத்தில் தி நகரில் உள்ள போதீஸ் கடையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடித்தச் செய்தியை பேப்பரில் படித்தேன். போதீஸ் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள். இந்தத் திருடர்களைப் பிடிக்க நல்ல அனுபவமுள்ள பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செயல்பட வேண்டும். கிட்டத்தட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலவிதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஒரு விதத்தில் யார் குற்றவாளிகள் என்று யோசித்தால் எல்லோரும் குற்றவாளிகவே இருக்க நேரிடுமோ என்று தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்தான். லஞ்சம் வாங்குவதும் மற்றும் குற்றமல்ல. லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி. அதுமாதிரி நிலைக்கு ஆளாகிற அரசாங்கமும் குற்றவாளிதான். பணத்தின் மீது பலருக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. இப்படிப் பித்துப் பிடிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. பித்து என்கிற விஷயமே ஆபத்தானதுதான்.30 ஆண்டுகளுக்குமேலாக நான் வங்கியில் பணிபுரிகிறேன். அங்கு நடக்கும் பல குற்றங்களைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் கள்ள நோட்டுக்களை அதிசயமாகத்தான் பார்ப்பேன். இப்போது எல்லா நோட்டுக்களையும் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ATM, Internet மூலம் நடக்கும் குற்றங்களை என்ன சொல்வது. இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது. முன்பெல்லாம் வங்கிக் கிளை மிக எளிதாக லட்ஜர்களை வைத்துக்கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு பணத்தைக் கொடுப்பார்கள். அல்லது போடும் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். அதன்பின் ராஜீவ் காந்தி காலத்தில் கணினிகள் உள்ளே நுழைந்தன. வேலைப் பளு குறையாவிட்டாலும், கணினிகள் சில பணிகளை எளிதாக்கி விட்டன. ஆனால் கணினிகள் பயன்கள் ஒரே கிளையில் மட்டும் சுற்றி சுற்றி வந்தன. பிரச்சினை என்று எதுவந்தாலும் அந்தக் கிளையுடன் நின்று விடும். அதாவது குற்றம் நடந்தால் அந்தக் கிளையை மட்டும் சார்ந்துவிடும்.வங்கியில் அதற்கு அடுத்த முன்னேற்றமாக சிபிஎஸ் வந்தது. யார் வேண்டுமானாலும் வங்கியில் உள்ள எந்தக் கிளையிலும் பணம் எடுக்கலாம், பணம் போடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரொம்ப அற்புதமான மாற்றம். கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்த என் பையனுக்கு தி நகரில் உள்ள ஒரு வங்கியில் பணம் கட்டுவேன், அவன் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு. ஆனால் சிபிஎஸ்ஸில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மிடம் இருந்துகொண்டிருக்கிறதா என்ற பயம். யாராவது நினைத்தால் எந்த வங்கிக் கிளையிலிருந்தும் நம் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். இப்போது குற்றத்தைப் பற்றி சொல்கிறேன். பணத்தின் மீது அதீதப் பித்துக் கொண்ட என் வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, வேறு வேறு கிளைகளில் பணத்தைச் சுருட்டும் வழக்கம். அவர் எப்போது இந்தக் குற்றத்தைச் செய்ய ஆரம்பித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திரும்ப திரும்ப அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது வகையாக மாட்டிக்கொண்டு விட்டார். நான் சொல்ல விரும்புவது அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றத்தை எளிதில் செய்யும்படி இந்த சிபிஎஸ் சிஸ்டத்தில் இது இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.குற்றம் என்பது ஒரே கிளையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பல வழிகிளிலிருந்தும் இன்னும் எளிதாக பல கிளைகளிலும் தொடருகிறதா என்றெல்லாம் அச்சம் ஏற்படுகிறது. சக ஊழியரே சக ஊழியரை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோமா? ஒருவர் குற்றத்தை வேண்டுமென்று செய்கிறார். இன்னொருவரோ அந்தக் குற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அங்கீகாரம் கொடுத்து விடுகிறார். சக ஊழியர் என்ற நம்பிக்கைப் பேரில். இந்தக் குற்றத்தைச் செய்த பெண்மணி தெய்வ நம்பிக்கை உள்ளவர். சந்தனம், குங்குமம் பொட்டெல்லாம் இட்டுக் கொண்டு வருபவர். ஒரு குடும்பம் இரு குழந்தைகள் உள்ளவர். ஏன் அவருக்கு பண ஆசை அதிகமாகப் போனது. இதில் அந்தப் பெண்மணி மட்டும் குற்றவாளி இல்லை. அந்தப் பெண்ணை நம்பி தெரியாமல் செய்த செய்கையால் மற்ற அதிகாரிகளும் குற்றவாளிகளாக மாறி விடுகிறார்கள். நான் என்ன சொல்ல விரும்பிகிறேன் என்றால் இது மாதிரி குற்றத்தைத் தூண்டும்படியான வசதியை அளிக்கும் வங்கியும் குற்றவாளியாக இருக்குமோ? திருடர்கள் எப்படி குற்றவாளிகளோ? அவர்களைப் பிடிக்கிற காவல் துறையைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகளா?

ஆறு கவிதைகள்

1.வானத்தில்நீண்ட தொலை தூரத்தில்எல்லாம்கணக்கில்லாமல்பறக்கும் புள்ளினங்கள்
2.விதிர்விதிர்த்துப் போனேன்எங்கும் ஓய்ச்சலில்லாமல்சத்தம் போட்டபடிபறக்கும் வாகனங்கள்
3.அந்தக் கோயிலில்வீற்றிருக்கும்வியாக்கிழமைஓடணிந்து அமர்ந்திருக்கும்பிச்சைக்காரர்கள்காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்சிவனடியார்களாய்
4.பெட்டிபோல்வீட்டில் குடியிருக்கிறேன்பெட்டியிலிருந்து வெளியில் வந்துபெட்டிக்குள் நுழைந்து விடுகிறேன்.
5.அந்தப் பெண்ணின் மார்பகங்கள் படபடத்துக் கொண்டிருந்தனதடவிக்கொடுக்ககையை நீட்டினேன்கை நீண்டுகொண்டே போயிற்று…
6.வெகுநேரம் வெகுநேரம்கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்கண்ணைத் திறந்தும் பார்த்தேன்உலகம் ஒன்றும் மாறவில்லை