கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

காந்தி



ட்டி ஆர் நடராஜன்

இந்நாளில்
இந்தியர்க்குச்
சிக்கியதோர்
சீதக்காதி.

தொழுமரங்கள்

ந. மகாகணபதி

வேற்றூர்ப் புழுதியை
வீசிப் போகும்
வண்டிகளுக்குப் பூவிட்டு
வணங்கும் மரங்கள்

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்


                                              


அழகியசிங்கர்
செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன்.  ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது.  அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை.  கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை.  பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது.  
குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப்  பட்டிருந்தன.  அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை.  ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை.  
இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார்.  அதேபோல் கணையாழி செப்டம்பர் மாத இதழில் கிருஷ்ண வதம் என்ற கதையை எழுதி உள்ளார்.  கிருஷ்ண வதம் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  யோகேஸ்வரன் இரண்டு குழந்தைகளை அவர் வீட்டுக்கு லீவுக்காக அழைத்துக்கொண்டு போகிறார்.  இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை அழைத்துப் போக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.  கீதா என்கிற அக் குழந்தைக்கு தண்ணியிலே கண்டம் பயம்தான் அதற்குக் காரணம்.  ஏற்கனவே ஒரு முறை அக்குழந்தைக்குதண்ணீரில் பிரச்சினை ஆகிவிட்டது.  யோகேஸ்வரன் சமாதானம் செய்து அண்ணன் தங்கை இரண்டு பேர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.  
யோகேஸ்வரன் வீட்டில் பல குழந்தைகளும் சேர்ந்து கொட்டம் அடிக்கும் இடம்.  ஆசையுடன் அவர்களை வரவழைத்து அன்பு பாராட்டுவரர்கள்.  இந்தக் கதையில் தண்ணியால கண்டம் உள்ள கீதாவிற்கு குளத்தில் குளிக்கும்போது பாம்பு கடித்து விடுகிறது.  அது ஒரு தண்ணீப் பாம்பு.  என்றாலும் அது ரொம்பும் அக் குழந்தையின் அம்மாவைப் பாதிக்கிறது.  திரும்பவும் விடுமுறை முடிவதற்குள் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதோடு அல்லாமல்  அவர்களைத் திட்டியும் தீர்த்து விடுகிறாள்.  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வருத்தமாகப் போய் விடுகிறது.  இ வில்சன் இக் கதையைச் சிறப்பாக எழுதி உள்ளார்.  அதே போல் கல்கியில் அவர் எழுதிய பாக்கியம் என்ற கதையில் பாக்கியம் ஒரு விசேஷவேலையின் போது எல்லா வேலைகளையும் அவளே எடுத்துச் செய்கிறாள்.  அங்கு மிச்சமான சாப்பாடுகளை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.  காலையில் செய்த பொங்கலை அவள் வீட்டு மாடிற்கு கொடுத்து, மாடு எழுந்திருக்க முடியாமல் படுத்து விடுகிறது.  அந்தப் பதைப்பை கதையில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.
அதேபோல் தீராநதியில் எஸ் ராமகிருஷ்ணன் கதையான வானோர் என்ற கதையும், அதேபோல் உயிர்மையில் எழுதிய தனலட்சுமியின் துப்பாக்கி என்ற கதையும் சிறப்பாக எழுதப்பட்டட கதைகள்.  
உயிர்மையில் வெளிவந்த சாங்கியம் என்ற கதை.  இதை சிவபிரசாத் என்பவர் எழுதி உள்ளார்.  இறந்த உடல்களின் முடிகளை அப்புறப் படுத்தும் கதை.  இதை சாங்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.  இறந்தவர் ஒருவர் முடியை எடுக்கும்போது இறந்தவர் மனைவி பக்கத்தில் இருந்து அதை கவனித்து வருகிறார்என்பதை உணர்கிறார் தண்டபாணி.  அவர் பின்னால் அவள் நின்றிருந்தாள்.  இறந்தவரின் துணியை இடுப்புக்குக் கீழே நீக்கும்போது அந்தப் பகுதி வாழைப்பழத்தை துண்டாக வெட்டியதைப் போலிருந்தது.  அதையாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, இறந்தவர் மனைவி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.  இதை சிறப்பாகவே எழுதி உள்ளார் சிவபிரசாத்.  
அசோகமித்திரன் எழுதிய கதை உறுப்பு அறுவடை என்ற கதை.  இதுவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  அசோகமித்திரன் அவருடையநடையில் சிறப்பாக எழுதப்பட்ட கதை. 
நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைகளில் இந்த முறை தளம் பத்திரிகையும் சேர்த்துக் கொண்டேன்.  தளம் இதழ் எனக்கு செப்டம்பர் மாதம் கிடைத்தது.  அதை செப்டம்பர் மாத இதழாக எடுத்துக் கொண்டேன். 
அதில் வெளிவந்த எஸ் எம் ஏ ராம் எழுதிய தாத்தா காலத்து பீரோ என்ற கதை.   தாத்தா காலத்தில் தாத்தாவால் ஆசையாக தயாரித்த மரப்பீரோவை பாதுகாப்பது எத்தனைப் பிரச்சினையை உண்டாக்குகிறது என்பதே இக் கதை.  கடைசியல் பாட்டி தாத்தாவின் பீரோவைப் பார்க்காமலே இறந்து விடுகிறாள்.   அவளுடைய பேரன் தான் அந்தப் பீரோவைப் பார்க்கப் போகிறான்.
இந்த மாத சிறப்புக் கதையாக நான் தேர்ந்ததெடுத்த கதை ப.முகமது ஜமிலுதீன் எழுதிய புதுச் சட்டை என்ற கதை.  இக் கதை உயர் எழுத்து செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த கதை.  கதை சரளமான நடையில் எழுதப்பட்ட கதை.  கதையைப் படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.  ரஹ்மான் என்கிற பையன் பக்ரீத் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.  ஏனெனில் பக்ரீத் அன்றுதான் அவனுக்கு புதிய துணி கட்டிக்க கிடைக்கும்.  உண்மையில் இதுமாதிரி பண்டிகைத் தினங்கள் ஏழைகள் பாடு திண்டாட்டமாக இருக்கும்.  அவர்களால் புதுத் துணிகள் கூட வாங்க வழி இல்லாமல் இருக்கும்.  எப்படி ரஹ்மான் புதிய துணி வாங்க துடியாய் துடிக்கிறான் என்பதுதான் கதை.  அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ரயில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கிறான்.  
அதன் மூலம் கிடைக்கும் புகழைக் கூட அவன் அறியாமல் இருக்கிறான். அவனுக்கு ரெடிமேட் கடையில் ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக பக்ரீத் அன்று கிடைக்கிறது.  

கசடதபற 3 வது இதழ் – டிசம்பர் 1970

என்னுடைய மேட்டு நிலம்

கலாப்ரியா

என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை,
இன்றைய வெயில்
நெருப்பால் வருத்திக் கொண்டிருக்கிறது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய ‘வெறுமையில்’
தவம் புரிந்து கொண்டிருக்கும்)

என்னால் – அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது

ஏனென்றால்,
இறந்துவிட்ட – என்னை
அதில்தான் புதைத்திருக்கிறார்கள்

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

2

                                                                                                 

அழகியசிங்கர்

லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் என்கிற ராபர்ட்டோ பெனினி இயக்கிய இத்தாலி படம் ஒன்றை பார்த்தேன்.  1997ல் வெளியான இந்த இத்தாலி படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டுப் படம் என்று பல விருதுகள் கிடைத்துள்ளன.  இதை இயக்கிய ராபர்ட்டோ பெனினி அவர்களே இப்படத்தில் கிய்டோவாக முக்கிய வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார்.  படத்தின் முதல் பாதி கிய்டோ அவளது காதலியான தோராவுடன் ஏற்படுகிற உணர்ச்சிகரமான தன்மையை வெளிப்படுத்துகிறது.  கிய்டோ ஒரு புத்தகக் கடையை நிறுவ முயற்சி செய்கிறான். தோராவை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கு ஜோஸ்வான் என்ற பையன்.  கிய்டோ  யூத இனத்தைச் சேர்ந்தவன்.  ஹிட்டலரின் படைகள் அவர்கள் இருக்கும் நகரத்தில் ரோந்து வருகிறார்கள்.  கிய்டோ ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அவனை சந்தேகம் கொண்டு அழைத்துப் போகிறார்கள்.  இந்த இடத்தில் தன்னுடைய உணர்ச்சிகளை வெகுவாக மறைத்துக் கொண்டு அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றுகிறாரன் கிய்டோ.  ஐந்து வயது தன் பையனான ஜோஸ்வான் இதன் தீவிரத் தன்மையை உணரக்கூடாது என்று அவ்வாறு செய்கிறான்.
ஜோஸ்வானுடன் கிய்டோ கைது செய்யப்படுகிறான்.  அவர்களை ஹிட்டலரின் வதைக் கூடத்தில் அழைத்துக்கொண்டு போகிறார்கள்.  கிய்டோவின் மனைவி தோரா யூத வகுப்பை சாராதவள் என்றாலும், கணவனும் மகனும் செல்லுமிடத்திற்கு அவர்களுடன் ரயிலில் செல்கிறாள்.  ஜோஸ்வான் தன் அம்மாவும் தங்களுடன் பிரயாணம் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறான்.  ஹிட்டலரின் வதைக் கூடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.  இவர்களைப் போல் பலரும் பயணம் செய்கிறார்கள்.  எந்த வசதியும் இல்லாத ரயிலில் மிருகங்களைப் போல் அவர்களை அடைத்தப்படி அழைத்துச் செல்கிறார்கள்.  
கிய்டோ இது மாதிரியான இக்கட்டில் பயணம் செய்தாலும் தன் மகன் ஜோஸ்வான் இது குறித்து எதுவும் அறிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.  ஒரு பெரிய ஆபத்தை, சோகத்தின் உச்சத்தை கிய்டோ உணர்ந்து தன் பையனுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறான்.  லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்கும் சித்ரவதை முகாமிற்கு செல்கிறார்கள்.  முகாமில் தனியாக பெண்கள் இருக்கிறார்கள்.  கிய்டோவும், ஜோஸ்வாவும் ஆண்கள் முகாமில் இருக்கிறார்கள்.  ஒரு பெரிய அறையில் எல்லோரையும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.  இந்தக் கொடூரமான தன்மை ஒரே அறையில் எல்லோரையும் அடைத்து வைத்திருக்கிற அறைகளில் தெரிகின்றன. எல்லோரும் மூளை குழம்பிப் போனவர்களாக, உடல் வலு இல்லாதவர்களாக, போராட்டத்தை வாய்விட்டுக் கூட தெரிவிக்க விரும்பாதவர்களாகத் தென் படுகிறார்கள்.  அந்த அறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர்  பேசுவது கிடையாது.  ஹிட்டலரின் சிப்பாய்கள் முகத்தில் கருணையே இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்.    அவர்களுடைய நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களை கொல்வதுதான்.  அதனால் யாவரும் மன வருத்தத்துடன் இருக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை குறைகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் எல்லோரும் பைத்திய நிலையில் இருப்பதுபோல காணப்படுகிறார்கள்.  அவர்களுடைய பாத்திர அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களை ஒவ்வொரையும் அழிப்பதுகூட அவர்கள் முன் நடக்கவில்லை.  அவர்களை தனியாக அழைத்துப்போய்த்தான் அழிக்கிறார்கள்.
கிய்டோ தன் மகனிடன் எல்லாம் விளையாட்டு என்கிறான்.  இந்த விளையாட்டில் ஜோஸ்வா 1000 புள்ளிகள் எடுத்தால் அவனுக்கு பீரங்கி வண்டி கிடைக்கும் என்று கிய்டோ கூறி அவனை கற்பனையான விளையாட்டில் ஈடுபடுத்துகிறான்.  சோகத்தை மறைத்து எல்லாவற்றையும் பையனுக்காக நகைச்சுவை உணர்வாக மாற்றுகிறான்.  
இந்தப் படத்தின் மூலம் தெரியவருவது.
துக்கத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுவது என்பது.  அதை நகைச்சுவை உணர்வுடன் எற்றுக்கொள்ளும் தன்மையை கிய்டோ தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிறான்.  மகன் அதன் கொடூரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறான்.  
படம் முடிவில் ஜோஸ்வா அவன் அம்மாவிடம் போய் சேர்ந்து விடுகிறான்.  கிய்டோ தன் மனைவியைத் தேடப் போகும்போது தன்னை இழந்து விடுகிறான்.  எந்தக் காட்சியையும் மிகைப் படுத்தாமல் பிரமாதமான முறையில் படம் எடுத்துள்ளார்கள்.  
 

உஷா ஐயர்

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

ஐராவதம்

கரகரத்த உன் குரல்
      கதிரியக்கத் தாது எனக்
      காதில் பாயும்;
ஊர்ந்து உதறும் உன் உடல்
உயிரியக்க வேகமென
மனசில் படும்.

ஆத்மாவின் அழுகுரலாய்
அனாசாரத் தீங் கொலியாய்
வறண்ட சில வயோதிகர்
வர்ணிப்பர் உன் பாட்டை.

சாத்திரம் கெட்ட நாம்
உன் நாதக் குலைவினை
சாதனையாய் ஏற்றிடுவோம்.

நாதம் பிரம்மம் எனில்
நாதக்குலைவுதான் என்ன?

வலை

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

எஸ் வைதீஸ்வரன்

ஓட்டில்,
ஒரு மாத ஒட்டடை,
அரசியல் வேடிக்கையாய்,
ஆயிரம் சிக்கல் இடைஇடையில்
அதில்,
என்றோ, அரசமிடுக்குடன்
வலைகட்டி நடந்த சிலந்தி – பின்
பிணமாகத் தொங்கிய முடிவை
நான் பார்த்ததுண்டு
இன்று,
üüசிலந்திப் பிணமும்ýý மாறி
ஒட்டடையாய்,
சிறுபூச்சி வலைகளுக் கொரு
கைப்பிடிப்பாய்,
பிணசாட்சியாய் நிற்கிறது.
வலைபின்னும் வாழ்வு மட்டும்
நின்ற பாடில்லை.

கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்


முத்தச் செய்திகள்

 
வே மாலி

கென்னடி விமான நிலையம்
இன்னுமோர் சிறப்பு பெற்றது;
மூன்றழ கியபெண் களுக்கு
நன்றிசொல் லவேண்டும், மாலி
பெற்றோர் வரும்வரைக் காத்து
நிற்கும் பொழுதை இலவசத்
தோற்றம் தருவதில் போக்கச்
சற்றும் சகியா அழகியர்
வெற்றிகொ டுக்கும்
அற்புத மான
விற்பனைத் திட்டம்
கற்பனை செய்தார்.
தங்கள்  விளம்பர மாக
இங்கே முத்தம் கிடைக்கும்
ஒன்றின் விலை ஒரு டாலர்
என்னும் செய்திப் பலகை
காட்டி யவுடன், டாலரை
நீட்டி யபடி, நாக்கைத்
தீட்டி யபடி, ஆண்கள்
கூட்டம் வளைத்துக் கொண்டது.
ஐந்து மணித்து ளிகளில்
நான்கு டாலர் திரட்டி
நின்ற நேரம்; விரைந்து
வந்த அதிகா ரிகள்தலை
யிட்டுத் தடைவி தித்து
விட்டுத் திரும்பிச் சென்றார்
என்கி றதொரு செய்தி
என்றான் பெரிய சாமி.
மற்றொ ருத்தச் செய்தி
தர்ம நிதிகு விப்ப
தற்கா கஒரு மெத்த
உற்சா கமான போட்டி.
நின்ற நிலையில்
ஒன்றி யஇதழ்
ஒன்றி யபடி
என்ப துவிதி.
பத்தொன் பதாண்களும்  பெண்களும்
முத்தத் தொடங்கினர்.  யாவரும்
முத்தத் தொடங்கிய கொஞ்ச நே
ரத்தில் சலித்தனர்.  ஆனால்
ஜென்னியும் டேவிடும் தொண்ணூற்
றைந்தும ணித்துளி நாற்பத்
தைந்துவி நாடிகள் முத்தி
வென்றனர், எப்படி என்றேன்.
உல்விச் போட்டி தானே?
நல்ல போட்டி, புதிய
கல்விச் சூழலுக் கேற்ற
நல்ல போட்டி என்றான்
நல்ல வேளை, இந்த மாதிரி

வல்லு நர்கள் அந்த நேரம்
ஒன்று சேரவில்லை கைக்கு
நான்கு டாலர் வந்த தென்றேன்.
நல்ல வேளை  இதைவிட
நல்ல போட்டி இருக்கிற
தல்ல வா, அதை வைக்கா
மல்விட் டார்களே என்றான்.
 
 * பார்க்க : தினமணி

20.02.70  : முத்த வியாபாரம் (நியூயார்க்)
04.03.70   : முத்தப் போட்டி (லண்டனில் உள்ள பாலிடெக்னிக்

        

           எ       ஏ   ஐ        ஒ              
ஓ    ஒள

ள       ஃ

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம், மூத்தக் கவிஞர் எஸ் வைதீஸ்வரனை வைத்து இந்த மாதம் 20ஆம் தேதி சிறப்பாக நடந்தது.
எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வருபவர் எஸ் வைதீஸ்வரன்.  தொடர்ந்து இன்னும் கவிதை எழுதி வருகிறார்.  அவர் கொஞ்சம் கவிதை…கொஞ்சம் வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார்.  
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் தன் அனுபவங்களை  அவை எப்படி கவிதைகளாக மலர்ந்தன என்பதைக் குறித்து கவிதைகளுடன் உரை நிகழ்த்தினார்.
எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதினாலும், எழுத்து என்ற பத்திரிகைப் பற்றி தெரியாமலும் கவிதையில் ஏற்பட்ட புதிய மாற்றம் பற்றியும் தெரியாமலும் கவிதை எழுதியதாக குறிப்பிட்டார்.  அவர் முதன் முதலாக எழுதிய கவிதையை அவருடைய உறவினரும், குருநாதருமான ராம நரசுவிடம் காட்ட, இதுமாதிரியான கவிதைகள் எல்லாம் திருவல்லிக்கேணியிலிருந்து எழுத்து என்ற பத்திரிகையை சி சு செல்லப்பா என்பவர் கொண்டு வருகிறார்.  அவர்தான் இதையெல்லாம் பிரசுரம் செய்வார் என்றாராம்.  அதேபோல் எழுத்து பத்திரிகையில் அனுப்பிய அந்தக் கவிதை அப்படியே பிரசுரம் ஆனதாம்.  எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதத் துவங்கிய வைதீஸ்வரன் சில ஆண்டுகள் உடல்நிலை காரணமாக எதிலும் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி விட்டார்.
வைதீஸ்வரன் கவிதைகள், கதைகள், ஓவியங்கள் என்று பல்துறைகளில் சிறப்பானவர்.  அவரைக் குறித்து லதா ராமகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார்.  கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேல் நடந்து முடிந்தது.  தன்னுடைய புத்தககத்திலிருந்து பல கவிதைகளைப் பகிர்ந்து கொண்டதோடல்லாமல், எந்தச் சந்தர்ப்பத்தில் கவிதைகள் வெளிவந்தன என்பதையும் அழகான முறையில் வெளிப்படுத்தினார்.   வைதீஸ்வரனுக்கு வயது 80க்குமேல் இருக்கும்.  செப்டம்பர் 22 ஆம் தேதிதான் அவருடைய பிறந்த நாள்.  அதே நாளில் அசோகமித்திரனின் பிறந்தநாளும்.

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

அழகியசிங்கர்


ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன்.  அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது.  கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.
1. தினமணி கதிர் 2. தினமலரின் வாரமலர் 3. கல்கி 4. அமுதசுரபி 5. ஆனந்தவிகடன் 6. கணையாழி 7. தீராநதி 8. உயர்மை 9. காலச்சுவடு 10. உயிர் எழுத்து 11. அந்தி மழை 12. அமிருதா
என் கண்ணில் பட்ட சிறுகதைகளை வெளியிடும் பத்திரிகைகள்தாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகைகள்.  முதலில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.   ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கதை விதம் ஒரு மாதத்தில் வரும் ஐந்து வாரங்களில் ஐந்து கதைகளைப் படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை வரிசை என்ற பெயரில் சில இதழ்களில் ஒரு சிறுகதை வெளியிடுகிறார்கள்.  ஆனால் ஒரு இதழில் ஒரு கதைக்கு மேல் வெளியிடுவதில்லை.  முதலில் இக்கதைகளைப் படிக்க அலாதியான பொறுமை அவசியம்.  திறந்த மனத்துடன் கதைகளைப் படிக்க உட்கார வேண்டும். 
இன்றைய காலக்கட்டம் சிறுகதைகளை வரவேற்காத காலகட்டமாகத் தோன்றுகிறது.  இன்னும் சில பத்திரிகைகள் ஆன குமுதம், குங்குமம் சிறுகதைகளையே வெளியிடுவதில்லை.  அதனால் சிறுகதைகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு என் வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  
நானே இதுமாதிரி அமர்ந்து கொண்டு இத்தனைக் கதைகளைப் படித்திருக்க மாட்டேன்.  எல்லாம் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்ற நண்பரால் ஏற்பட்டதுதான் இது.  இவர் சிறுகதைகளையே படித்துக் கொண்டிருப்பார்.  சதா சர்வக்காலமும் பல சிறுகதைகளைப் படித்துவிட்டு அது குறித்துப் பேசிக் கொண்டிருப்பார்.  அவர்தான் ஒரு நாள் திடீரென்று போன் செய்தார்.  “சார், நாம எதாவது செய்ய வேண்டும்?” என்றார்.
“அதான் கூட்டம் போடறோமே…அது எவ்வளவு மாதம் ஓடறதுன்னு பார்ப்போம்,”என்றேன்.
“இல்ல சார்..எதாவது பரிசு கொடுக்க வேண்டும்,” என்றார்
“அப்படின்னா சிறுகதைக்குக் கொடுப்போம்.  அதைத்தான் யாரும் சரியா கவனிக்க மாட்டேங்கிறார்கள்,”என்றேன்.
ஒவ்வொரு மாதமும் எங்களுக்குத் தெரிந்த சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து எங்களால் முடிந்த ஒரு பரிசுத் தொகையைக் கொடுப்பதாக முடிவு எடுத்தோம்.  ஆடிட்டர்தான் இந்தப் பொறுப்பைஏற்றுக் கொண்டார்.  இலக்கியச் சிந்தனை ஏற்கனவே செய்யறதுதான்.  அந்தக் காலத்தில் இலக்கியச் சிந்தனை சிறு பத்திரிகைகளில் வருகிற கதைகளைத் தேர்ந்தெடுக்காது.  நான் சிறுபத்திரிகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைக்கிறவன்.
கொஞ்சம் யோசித்துப் பாரத்தால், பெரும் பத்திரிகையும் இல்லாமல் சிறுபத்திரிகையும் இல்லாமல் இயங்கிகக் கொண்டு வருகிற நடுத்தரப் பத்திரிகைகள் சிறுகதைகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரம் செய்து வருகின்றன.  அதேபோல் தினமணி கதிர், தினமலர் போன்ற பத்திரிகைகளும் சிறுகதைகளைப் பிரசுரம் செய்கின்றன.  
இந்த முறையில் ஜøலை மாதம் 16.07.2014ல் வெளிவந்த ஆனந்தவிகடன் கதைக்குப் பரிசு கொடுத்தோம்.  எஸ் செந்தில்குமார் என்பவர் காணும் முகம் தோறும் என்ற கதையை எழுதி இருந்தார்.  அது சிறப்பான கதையாகத் தோன்றியது.  அதற்கு எங்களால் முடிந்த கதைக்கான பரிசை அவர் கணக்கிற்கு போய்ச் சேரும்படி அனுப்பி விட்டோம்.  அவர் மதுரையில் இருப்பவர்.  சென்னையில் இருக்கும் எழுத்தாளராக இருந்தால் இந்த மேடையில் அவரை அழைத்துக் கொடுக்க உத்தேசமாக இருந்திருக்கும்.  
இந்த ஆகஸ்ட் மாதத்தில் எனக்குப் பல கதைகளைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.  பலர் திறமையாக பல கதைகளை எழுதிஇருந்தார்கள்.  அதை முடிந்தவரை வரிசைப் படுத்த விரும்புகிறேன்.
24.08.2014 தினமணிகதிர் இதழில் செல்வ கதிரவன் எழுதிய ச(த)ன்மானம் 
06.08.2014 ல் ஆனந்தவிகடனில் எழுதிய போப்பு அவர்களின் நான்காமமுறைப் பயணம் என்ற கதை
அம்ருதா ஆகஸ்ட் மாதம்இதழில் வெளிவந்த றெமிலா ஜெயன் எழுதிய சுதர்சினி என்ற கதை.  அதே இதழில் வெளிவந்த பாவண்ணனின் இரு வழிகள் என்ற கதை.
உயிர் எழுத்து ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த அபிமானியின் இடைச்செருகல் என்ற கதை.
காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த அ முத்துலிங்கம் எழுதிய நான்தான் அடுத்த கணவன் என்ற கதை.
உயிர்மை ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த எம்பாவாய் என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை. 
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2014 பரிசுப் பெற்ற கதை.  தினமணியில் எதிர்பார்த்தபடி கதையும் இருக்கிறது. நகைச்சுவை  உரை நிகழ்த்த பணம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்த நன்மாறன்.  அதற்கான ஒத்திகையை பார்க்கிறான். தனியார் நிறுவன மனமகிழ் மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள செல்கிறான்.  அங்கு கூடிஉள்ளவர்கள்  இவன் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பொருட்படுத்தாமல் அங்குள்ளவர்கள் குடிக்கச் சென்று விடுகிறார்கள்.  அவர்கள் சன்மானமாய்க் கொடுக்கும் தொகை அதிகமாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் வந்து விடுகிறான்.  அவனுக்கு பணத் தேவை இருந்தாலும், யாரும் அவனுடைய நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கப் போவதில்லை என்ற எண்ணம் அவனை அந்த இடத்திலிருந்து வரவழைத்து விடுகிறது.   
06.08.2014 ஆனந்தவிகடனில் வெளிவந்த போப்பின் நான்காம்முறைப் பயணம் என்ற கதை.  இதன் அர்த்தம் என்ன என்பது புரியவில்லை.  மீராவுடன் உள்ள உறவு முறிந்துவிடுகிறது.  விவாகரத்து நடந்தபின்னும் அவள் பெயரில் உள்ள கடைப் பெயரை மாற்ற மனம் வரவில்லை.  அனிதா என்கிற காதலி நண்பனாக மாறியபின் அவளுடன் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை.  அவளைத் திருமணம் செய்துகொள்ள இரண்டு வீட்டாரும் சம்மதிக்கவில்லை.  கதையை நுணுக்கமாக நகர்த்திக்கொண்டு போகிறார் போப்பு. படிக்க சற்று வித்தியாசமாக எனக்குப் பிடித்த கதை இது.
அம்ருதா ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த சுதர்சினி என்ற றொமிலா ஜெயன் எழுதிய கதை.  இது மொழிபெயர்ப்பு கதையா அல்லது இந்தப் பெயரில் யாராவது தமிழில் கதை எழுதி உள்ளார்களா என்பது தெரியவில்லை.  சுதர்சின் என்ற பெண் ஜெயிலில் தண்டனை அனுபவத்திக் கொண்டிருக்கிறாள்.  பெண் கைதிகளின் தாதாக்களுக்கு  உதவி செய்பவளாக இருக்கிறாள்.  தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள்.  ஜெயிலை விட்டு விடுதலை  ஆகி வெளியே போனாலும் திரும்பவும் ஜெயிலுக்குள் வருவதையே இந்த சுதர்சினி.  சிறைச்சாலைப் பற்றியும், பெண்கள் சிறையில் படும் அவதிகளையும் விவரிக்கும் இந்தக் கதை வித்தியாசமான கதைதான். கதை முடிவில் எழுத்தாளர் ‘அவளின் ஆத்மாவின் ஓலம் ஒரு பிரளயம் போல’ என்று முடிக்கிறார்.
அதே இதழில் வெளியான பாவண்ணனின் இரு வழிகள் என்ற கதை.  பெண்ணிற்கும் அம்மாவிற்கும் இடையே ஆன போராட்டம்.  அம்மா பெண்ணை தன் வழியில் திருப்ப முயற்சி செய்கிறாள்.  பெண் படித்திருப்பதால் ஒரு கௌரவமான வேலையைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள்.  இதனால் பண வரவு குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள்.   பெண் பிடிவாதமாக இருக்கிறாள்.  அம்மாவிற்கு அவள் மீது உள்ள கோபம் தீரவில்லை.  சரளமான நடையில் பாவண்ணன் இக் கதையை எழுதிக்கொண்டு போகிறார்.  
உயிர் எழுத்து ஆகஸ்ட் மாத இதழில் அபிமானியின் இடைச்செருகல் என்ற கதை.  சனங்கள் நிரம்பிய ஒரு பேரூந்தில் பயணச் செய்யும் ஒரு பெண்ணின் கதை இது.  வெறும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு அவள் ஊருக்குச் செல்லும் வெள்ளையம்மாள், கால் வலியுடன் அவதிப்படுகிறாள்.  உட்கார இடம் கிடைக்காத பஸ்ஸில் நின்றுகொண்டு வருகிறாள்.  பஸ்ஸிற்குள் நடக்கும் போராட்டம்தான் இந்தக் கதை.  ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தையை மடியில் வைத்துக்கொள்ளாமல், ஒரு சீட்டில் படுக்க வைத்து விடுகிறாள்.  வெள்ளையம்மாள் ஒரு வயதான கிழவி உட்கார சீட்டு கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டிருந்தவள், குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு இன்னொருவருக்கு இடம் கொடு என்று குழந்தையை வைத்துக்கொண்டிருந்தவளுடன் சண்டை போடுகிறாள்.  சண்டையில் வெற்றி அடைந்தாலும், அந்த இடத்தில் தடுமாறி விழுந்த கிழவியை உட்கார வைக்க முடியவில்லை.  பஸ் பயணத்தில் ஏற்படுகிற போராட்டத்தை கதை விவரித்துக்கொண்டு போகிறது.  திறமையாக எழுதப்பட்ட கதை.
காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த அ முத்துலிங்கம் அவர்களின் நான்தான் அடுத்த கணவன் என்ற கதை.  பத்மப்ரியா என்ற பெண்ணிற்காக ஏங்கும் இளைஞன்.  அவள் யாருக்காகவும் ஏங்கவில்லை.  கூடா நட்புதான் இந்தக் கதை.  இக் கதையிலும் தீகார் ஜெயிலைப் பற்றிய விபரசம் வருகிறது.  பாஸ்போர்ட்டில் தப்பு செய்யற கதை.  
அந்திமழை ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த சீனிக் கொய்யா என்கிற மேலாண்மை பொன்னுசாமி எழுதிய கதை. சீமை கொய்யாவை முன்னிட்டு நல்ல குருசாமிக்கும் ஏவார குருசாமிக்கும் மனப் போராட்டமே கதை. சமீபத்தில எழுதப்படுகிற பெரும்பாலான கதைகளில் மேலாண்மை பொன்னுசாமி ஏமாற்றுபவர் ஏமாந்து போகிறவர் என்ற தொனியில் எழுதிக்கொண்டு போவதாக தோன்றுகிறது.
மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் என் மனதிற்கு பிடித்தக் கதைகள்தான். உள்ளுக்குள் நுழைந்த கதைகள்.  ஆனால் இன்னும் சில பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை  என்னால் முழுவதுமாக உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை.  இன்னும் சில கதைகளோ மேலோட்டமாக தெரிந்தன. 
இக் கதைகளையெல்லாம் தாண்டி உயிர்மை ஆகஸ்ட் மாதம் வெளிவந்த üஎம்பாவாய்ý என்ற எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய கதை என் மனதை வெகுவாக பிடித்தது.  ரொம்பவும் வித்தியாசமாய் எழுதப்பட்ட கதை.  ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கதைகளில் இக் கதைதான் சிறப்பான கதையாக நான் கருதுகிறேன்.   
மேலே குறிப்பிடப்பட்ட அத்தனைக் கதைகளையும் சிறப்பாக எழுதப் பட்டவை.  இக் கதைகளில் ரொம்பவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை ராமகிருஷ்ணனின் எம்பாவாய் என்ற கதை. 
ராமகிருஷ்ணன் கதைகள் எழுதுவதில் ரொம்பவும் நிபுணத்துவம் உள்ளவர்.   எளிதான முறையில் எல்லோரும் வாசிக்கும்படி அற்புதமாக கதைகளை எழுதி விடுகிறார்.    
ஆகஸ்ட் மாத சிறந்த கதையாக ராமகிருஷ்ணனின் எம்பாவாய் என்கிற கதையை விருட்சம் சார்பில் தேர்ந்தெடுத்துள்ளோம். நன்றி.