அங்கும் இங்கும்……..
மறந்து போன பக்கங்கள்….
அழகியசிங்கர்
தி சோ வேணுகோபாலன் கோடை வயல் என்கிற தன் கவிதைத் தொகுதியை ந பிச்சமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவர் எழுதிய வரிகள் :
‘என் கவிதையின்
புதுக்குரலுக்கு
பிரசவம் பார்த்த
மருத்துவர்
திரு ந. பிச்சமூர்த்தி
அவர்களின்
அடிக்கமலங்களுக்கு’
ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது கவிதை படிப்பவர் நோக்கி கவிதை மெதுவாக நகர்ந்து வரும். வெள்ளம் பற்றி எழுதிய தி சோ வேணுகோபாலன் üவெள்ளம் சிவமதமா?ý என்கிறார். வெள்ளத்தைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நினைத்தாலும், சிவமதமா என்று ஏன் சொல்கிறார். இதற்குக் காரணம் எதாவது யாருக்காவது தெரியுமா?
கடைசியில் கவிதையை முடிக்கும்போது வெள்ளம் சிவமதமா? இல்லை சிவன்மதமா? என்று முடிக்கிறார். இரண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? புரியவில்லை.
வெள்ளம்
வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறுந்துயரா?
தாளம் தவறியதா?
கோளின் கதிபிசகா?
தாளம் தவறியதால்
கோளில் கதிபிசகால்
மேலே பனிமுடியில்
காலும் நொடித்ததனால்
கட்டுச் சடைபிரிய
கங்கை விடுதலையாய்
கொட்டி முழக்கிடுமோர்
கோரச் சிரிப்பொலியா?
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறும்துயரா?
குடிசை பொடியாக்கிக்
குழைத்து நிறம்சிவந்த
வெள்ளம் சினன்நடமா?
இல்லை பயங்கரமா?
மீன் துள்ளுமேனி:
மாட்டுச் சுமையுண்டு
சுற்றிச் சடலங்கள்
சூழ்ந்து வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை சிவன்மதமா?
புத்தக விமர்சனம் 15
மறந்து போன பக்கங்கள்…2
அழகியசிங்கர்
தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது. இத் தொகுதியில் மொத்தம் 29 கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு கவிதையாகக் கொண்டு வர எண்ணத்தில் உள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
நான் கவியானேன்
முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்: கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!
கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:
பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
‘கவி-யானேனே!’
மறதி என்கிற பிசாசு….
துரத்தும் கட்அவுட்டுகள்…
மறந்து போன பக்கங்கள்….
தி சோ வேணுகோபாலன் என்ற கவிஞரின் கோடை வயல் என்ற கவிதைத்தொகுதி எழுத்து பிரசுரமாக 1965ஆம் ஆண்டு பிரசுரமானது. 7.11.1929ல் பிறந்த வேணுகோபாலன் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை. இப்படி காணாமல் போன படைப்பாளிகள் தமிழில் அதிகம். இவற்றை மறந்து போன பக்கங்கள் என்ற பெயரில் கொண்டு வர உத்தேசம். அவ்வப்போது கொஞ்சங் கொஞ்சமாக இவருடைய கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன். இதேபோல் இன்னும் பலரையும் கொண்டு வர உள்ளேன். 1959ல் எழுத்துவில் கவிதை எழுத ஆரம்பித்தார். கோடை வயல் என்ற தொகுப்பிற்கு வைதீஸ்வரன் என்ற கவிஞர் அட்டைப் படம் தந்துள்ளார்.
சின்னஞ் சிறிய திரி.
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு.
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது.
போகட்டும்.
சின்னஞ்சிறு விட்டில்.
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது.
போகட்டும்.
ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது.
வட்டம் குறுகியது
சொட்டாமல்த் திரிநுனியில்
நிற்கும் ஒளித்திவலை,
‘மெய்’ தீண்டும் காட்சி,
‘சொய்’ என்னும் விசும்பல்
ஒளியின் குரலா?
ஊனின் ஓலமா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.
என்னடா இதிலும்
தததுவ மயக்கா?
தெரியாது
போகட்டும்.
மீண்டும் ஒரு வீட்டில..
தூண்டாத் திரியின் மேல்
பாய்ந்து விழுந்தது.
‘சொய’ என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது.
‘மை’ யாச்சு சிறகு.
வெட்டவெளிவட்டம்
முட்டிச் சிதறிவிழும்
சுடர்த்தலை அழுத்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில்
‘மை’ச் சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள்கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப் பொருளா?
தெரியாது
போகட்டும்.
தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது
போகட்டும்.
எழுத்தாளன் எங்கே?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது.
பதில் ஒரு குமறல்.
இருட்குகை ஒன்றில்
இலககியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
……………………..
எனக்குத் தெரியவே
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.