புத்தக விமர்சனம் 15

அழகியசிங்கர்


சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் அனுபவங்கள்.  இந்த நாவலை எழுதியவர் திவ்யேந்து பாலித்.  தமிழில் மொழி பெயர்த்தவர் புவனா நடராஜன்.  
திருமதி புவனா நடராஜன், 2009ம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்.  நல்லி திசை எட்டும் விருதையும் 2007ம் ஆண்டு பெற்றுள்ளார்.  22 மொழி பெயர்ப்பு நூல்களுக்கு ஆசிரியர் அவர்.  
திவ்யேநது பாலித்தின் நாவலான அனுபவ் என்ற நாவல்தான் அனுபவங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். பொதுவாக மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு படைப்பைப் படிக்கும்போது, அதன் மூல மொழியின் உணர்வை நிச்சயமாகப் பெற முடியாது.  ஆனாலும் மூல மொழியில் உள்ள ஒரு படைப்பை ஓரளவாவது நம்மால் உணர முடியும்.  இந்த நாவலைப் படிக்கும்போது இது ஒரு வங்க நாவல் என்ற ஒன்றை  தமிழில்தான்  படிக்கிறோம் என்று தோன்றியது.  
வங்க மொழியில் ஒரு நாவல் எப்படி எழுதப் படுகிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.  வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்.  220 பக்கங்கள் கொண்ட  நாவல் மிக எளிதாக எழுதப்பட்டுள்ளது. ஆத்ரேயி என்ற பெண்ணின் ஒத்தக் குரலாக  நாவல் எழுதப்பட்டுள்ளது.  முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஆத்ரேயிதான் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு போகிறாள்.   திறமையாக ஆசிரியர் விவரித்துக் கொண்டு போகிறார்.  கொஞ்சங்கூட அலுப்பில்லாமல்.   
லண்டனில் வசிக்கும் ராகுல் பானர்ஜி என்பவனை ஆத்ரேயி திருமணம் செய்து கொள்கிறாள்.  14 ஆண்டுகளாக லண்டனில் இன்னொரு பெண்ணுடன் மனைவி போன்ற ஒரு தொடர்பு அவனுக்கு உண்டு.  அத்துடன் இந்தியா வந்து ஆத்ரேயியைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.   இரண்டு ஆண்டுகளில் அவனுடைய தொடர்பு தெரிந்து அவனிடமிருநது விவாகரத்துப் பெற்று திரும்பவும் கல்கத்தாவிற்கு தன் பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள்.  
பிறந்த வீட்டில் அவளை எல்லோரும் அனுதாபத்துடன் அணுகுகிறார்கள்.  ஆனால் முன்புபோல் அவளால் அவர்களுடன் பழக முடியவில்லை.   தன்னால் அங்கு சுதந்திரமாக காலத்தை கழிக்க முடியாது என்று நினைக்கிறாள்.  
கதை இப்படி ஆரம்பமாகிறது.  ஆத்ரேயி ஒழுக்கக் கேடான கணவனை விட்டு விவாகரத்துப் பெற்று வந்துவிடுகிறாள்.  பிறந்த வீட்டிற்கு வந்தாலும் தன்மானததோடு தனித்து வாழ நினைக்கிறாள்.  அதனால் எதாவது ஒரு வேலையில் சேர நினைக்கிறாள்.  ஸிமார்ஸியில் அவள் மார்க்கெட்டிங் சர்வே வேலையில் அவளை பணியில் அமர்த்துகிறார்கள்.  இந்தியாவில் உள்ள வேசிகளைப் பற்றி சர்வே எடுத்து அவர்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி கணக்கிடுவதுதான் அவளுடைய பணி.  ஆரம்பத்தில் இதைப் பற்றி ஆத்ரேயி கேள்விபடும்போது அதிர்ச்சி அடைகிறாள்.  எந்தப் பணியில் இருக்கிறோம் என்று யாராவது கேட்டால் அவளுக்குப் பதில் சொல்வது சங்கடமாக இருக்கும்.
உத்பல் என்பவனோடு அவளுக்கு மனம் ஒன்றி போகிறது.  ஆனால் வெளிப்படையாக தன் எண்ணத்தை உத்பலிடம் அவள் சொல்வதில்லை.  உத்பல் கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும்  தறுவாயில் இருக்கும் தேவிகா என்ற பெண்ணின் மீது நாட்டம் கொள்கிறான். அவளுடைய பெண்ணான தேவியை வளர்க்க முடிவெடுக்கிறான்.
அவள் அலுவலகத்தில் டாலி ùஸன்னுக்கும் ஆத்ரேயிக்கும் போட்டி ஏற்படுகிறது.  இவர்களுடைய மேலதிகாரியான கல்பதரு டாலி ஸன்னுடன் நெருங்கி பழகுவதிலிருந்து விலகி ஆத்ரேயிடம் நெருங்கி பழகும் சூழ்நிலை உண்டாகிறது. இதைப் புரிந்து கொண்ட டாலி ஸன் அவளுடன் பழகும்போது கடுமையாக நடந்து கொள்கிறாள். இந்த இக் கட்டான சூழ்நிலையிலிருந்து ஆத்ரேயி அதிலிருந்து விலகி விடுவது என்று தீர்மானிக்கிறாள்.  
இந்த வேலை அவளுக்கு சுதந்திரத்தைக் கொடுத்தாலும், விலகுவதுதான் சரியான தீர்ப்பு என்று நினைக்கிறாள்.  கல்பதரு தாஸ்குப்தாவின் காரியதரிசியினிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் யாரையும் சந்திக்காமல் வெளியே வந்து விடுகிறாள்.  
ஒரு வித மௌனம் ஆத்ரேயைப் பிடித்துக் கொள்கிறது.  இனி எங்கே போவாள்? யாரிடம் போவாள்? அடுத்த கணம் அவள் கால்கள் முன்னேறி நடந்தன.  அவள் மட்டும் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்று அவள் நினைத்தாள்?
ஒரு பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.  அவள் நினைத்தால் அவள் எப்படி வேணடுமானாலும் வாழலாம்.  ஆனால் அதில் அவளுக்கு விருப்பமில்லை.  எதையும் தொந்தரவு செய்து பெற அவள் முயற்சி செய்யவில்லை.
இந்த நாவலில் இந்தியாவில் வேசி தொழில் செய்பவர்களின் பல அனுபவங்கள் செக்ஸ் ஒர்க்கர்ஸின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் பேட்டிகள் பலவும் வெளிப்படுகின்றன.  பம்பாய் மாநகரத்தின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்த பதினான்கே வயதான ஒரு அழகான பெண்ணைப் பற்றிய குறிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.  தொண்டு நிறுவனம் எப்படி அந்தப் பெண்ணை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுகிறது என்றெல்லாம் சொல்லப் படுகிறது.  
படிக்க சுவாரசியமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.  சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் இது.
அனுபவங்கள் – மூலம் தீவ்யேந்து பாலித் – தமிழாக்கம் : புவனா நடராஜன் – நாவல் – வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 விலை : ரூ.100 – பக்கங்கள் : 220  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *