சில துளிகள்…….3

 
– இன்றைய தமிழ் ஹிந்துவில் நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து குறிப்பு வந்துள்ளது.   தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.
– நவீன விருட்சம் பத்திரிகையோடு  நான் இலக்கியக் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.  ஆனால் எவ்வளவு கூட்டம் என்று எண்ணவில்லை. 200 இருக்கும்.  100 கார்டு வாங்கி எல்லோருக்கும் கூட்டம் பற்றி விபரம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.  பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். வழக்கம்போல் கொஞ்சம் பேர்கள்தான் வருவார்கள்.  பெண்கள் வர மாட்டார்கள்.  வருபவர்கள் தலை வழுக்கையாக இருப்பார்கள்.
– கடந்த நாலைந்து மாதங்களாக அப்பா படுத்துப்படுக்கையாக இருக்கிறார்.  சில நாட்கள் நல்ல நினைவோடு இருக்கிறார்.  நான் அவரைப் பார்த்துக் கேட்டேன் : “நான் யார்?” என்று.  அவருக்கு இந்த 94 வயதிலும் கிண்டல் உண்டு.  “நீ என் அப்பா” என்றார் கையைக் காட்டியபடி.  அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பாக இருந்தது.  என் மனûவிதான் குறிப்பிட்ட வேளைக்கு சாப்பாடு தருகிறார்.   நான்தான் ஊட்டி விடுவேன்.  ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்  கேட்பார்: க்ரோம்பேட்டையிலிருந்து உன் மனைவி எப்போது வருவாள் என்று.
– அப்பா கொஞ்சம் தெம்பாக இருந்தபோது வாசலைப் பார்த்தபடி இருந்த அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போய் படுத்துக்கொள்ளப் போவார். நான் வாசலில் இருந்த அறையை இந்தியா என்பேன்.  தூங்கப் போகும் அறையை பாக்கிஸ்தான் என்பேன்.  அப்பாவைப் பார்த்து, “இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போயிட்டியா,” என்று கிண்டல் அடிப்பேன்.
– நான் விருட்சம் நூறாவது இதழ் கொண்டு வந்து விட்டேன் என்றேன் அப்பாவிடம்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
– நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்போது விருட்சம் பத்திரிகையை ஒரு சில நண்பர்கள்தான் பார்ப்பார்கள்.  ஒன்றிரண்டு பேர்கள்தான் படிப்பார்கள்.. போனபோகிறது என்று ஒருவராவது அது குறித்துப் பேசுவார்.  2000 பேர்கள் உள்ள அலுவலகத்தில் இந்தக் கதி.
– மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யாகவுடர் ரோடில் உள்ள  பிள்ளையார் கோயில் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் விருட்சம் பத்திரிகையை விற்கக் கொடுத்தேன்.  5 பிரதிகள். அங்கே ஏகப்பட்ட சிறுபத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  விருட்சம் பத்திரிகை விலை ரூ15.  அவருக்கு ரூ5 கொடுத்துவிடுவேன். பத்திரிகையும் புத்தகங்களையும் கொடுத்தேன்.  ஆனால் அவர் பத்திரிகை/புத்தகம் விற்றாலும் பணமே தர மாட்டார்.  பலமுறை அவரைப் பார்க்கப் போக வேண்டும்.  ஒருமுறை அவரைக் காணவே காணும்.  யாரோ இருந்தார்கள்.  போன் பண்ணினாலும் அவர் எடுக்க மாட்டார். அவரைப் பார்க்க முடியவில்லை.  எனக்கு கோபமாக இருந்தது.  அந்தக் கடை முன் சிறிது நேரம் நின்றேன்.  கண்ணை மூடிக்கொண்டேன்.  இனிமேல் இந்தக் கடைப்பக்கம் வரக்கூடாது என்று திரும்பி விட்டேன்.
– ஒரு சிறு பத்திரிகை வர வேண்டுமென்றால் அதற்கு முன்மாதிரியாக வேற ஒரு சிறு பத்திரிகை இருக்க வேண்டும்.  ஆரம்பத்தில் மலர்த்தும்பி என்ற பத்திரிகைதான் என்னைத் எழுதத் தூண்டியது.  அதை நடத்தியவர் என் பெரியப்பா பையன். அதன் பின் விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தத் தூண்டியது, ழ, கவனம் பத்திரிகைகளை நடத்திய நண்பர்களைப் பார்த்துதான்.
– விருட்சம் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் நண்பர்களிடம் சொல்வேன். இந்தப் பத்திரிகையில் எதாவது ஒரு கவிதை, ஒரு கதை, அல்லது கட்டுரை படிக்க சிறப்பாக இருக்கலாம்.  அதற்காக நீங்கள் பைசா கொடுத்து வாங்கியதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று.
– ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்வதாக சொன்னார்.  வேண்டாம் என்றேன்.  அவர் கேட்கவில்லை.  அவரிடம் ஒரு நோட்டைக் கொடுத்து விருட்சம் அனுப்ப வேண்டிய கவர்களைக் கொடுத்து முகவரிகளை எழுதச் சொன்னேன்.  ஒருவாரம் கழித்து நண்பரைப் பார்த்துக் கேட்டேன் : “என்ன ஆயிற்று?” அவர் சிரித்தபடியே  “இன்னும் பசங்க யாரும் கண்ணில் படவில்லை,” என்றார்.
– விருட்சம் 17வது இதழில் பாதகமான சில கடிதங்களைப் பிரசுரம் செய்து விட்டேன்.  அச்சடித்து வந்தும் விட்டது.  அதைத் தபாலிலும் அனுப்பி விட்டேன்.  ஆனால் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன்.  அந்தக் கடிதங்கள் மூலம் சிலர் மனதைப் புண்படுத்தி விட்டதாகத்  தோன்றியது.  அந்தச் சமயத்தில் பிரமிள் நட்பினால் நான் ஷ்ரிடி சாய்பாபா பக்தனாக இருந்தேன். சாய்பாபாவை வேண்டிக்கொண்டேன்.  இந்த இக் கட்டிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.  இரண்டு நாட்கள் கழித்து ஒரு தபால்காரர் என் வீட்டிற்கு வந்தார். நான் அனுப்பிய எல்லா தபால்களும் எக்மோரில் உள்ள சார்டிங் அலுவலகத்தில் இருப்பதாகவும், உரிய தபால்தலைகள் இணைக்கவில்லை என்றும் கூறினார். எடுத்துப் போகச் சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை. நான் சரியாகத்தான் ஸ்டாம்பு இணைத்திருந்தேன்.  ஆனால் அங்குப்போய் எல்லாவற்றையும் எடுத்து வந்து விட்டேன்.   பத்திரிகையில் இருந்த கடிதம் வந்தப் பக்கங்களைக் கிழித்து விட்டேன்.  திரும்பவும் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.   நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.  சாய் மிராக்கல்.
– எனக்கு கவிதை ரொம்பவும் பிடிக்கும்.  ஆனால் அது ஆபத்தானது. எழுதுபவர்களுக்குத் தெரியாமல் கவிதை எழுதுபவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் தலைவிதியைச் சொல்லி விடும்.   ‘நானை’ பிரதானப்படுத்தி  கவிதை எழுதினால் ஆபத்துதான்.  ஆனால் ஒருவர் அக் கவிதையைப் படிக்கிறார் என்றால் அது படிப்பவரையும் பிடித்துக்கொள்ளும். கவிதையைப் படியுங்கள்.  எழுதுங்கள். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு அதனுடன் ஐக்கியமாகி விடாதீர்கள்.
– நவீன விருட்சம் ஒன்றாவது இதழ் 16 பக்கங்கள்தான்.  எல்லாப் பிரதிகளும் தீர்ந்து விட்டன.  என் நண்பர் ஸ்ரீகுமார் திரும்பவும் ஒரு 100 பிரதிகள் அதேபோல் அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார்.  என்னால் நம்பவே முடியவில்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேற்குமாம்பலத்தில் மகாதேவன் தெருவில் உள்ள  காமாட்சி ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் இலவசமாகக் கொடுக்க உள்ளேன்.
                                                                                (இன்னும் வரும்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 31

ஏனென்றால்….

ஜெ. பிரான்சிஸ் கிருபா


நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்!

நன்றி : சம்மனசுக்காடு – கவிதைகள் – ஜெ பிரான்சிஸ் கிருபா – பக்கம் : 111 – விலை ரூ.95 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044 – 24896979 

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்

 
 
நவீன விருட்சம் 100வது இதழுக்கான கூட்டம் ஒன்றை மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி ஹாலில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று மாலை 6 மணிக்கு.  இது குறித்து விபரங்கள் இன்னும் சில தினங்களில் அளிக்கிறேன்.
நவீன விருட்சம் 100ல் பங்குகொண்ட படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் கூடிய விபரத்ததை இங்கு தருகிறேன்.
1. பெருந்தேவி கவிதைகள்
2. கா ந கல்யாணசுந்தரம் – என் கிராமத்து சுமைதாங்கி கல்
3. வேல் கண்ணன் கவிதைகள்
4. மறதியின் பயன்கள் – ஞானக்கூத்தன்
5. தூரம் – சிறுகதை – ஜெயந்தி சங்கர்
6. பொன் தனசேகரன் கவிதைகள்
7. நடப்பியல் – நீல பத்மநாபன்
8. அம்ஷன் குமார் கட்டுரை
9. அகலிகைப் படலம் – போயோன்
10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம்
11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
12. ரோஸ் ஆன்றா கவிதைகள்
13. தமிழவன் சிறுகதை – காந்தி லிபி
14. ராமலக்ஷ்மி கவிதைகள்
15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள்
16. தொடாத பூ – ந பெரியசாமி
17. சௌந்திரத்தின் ரோஜாப் பூ – ஸிந்துஜா
18. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
19. காந்தி வாழ்க்கை – கட்டுரை – பிரபு மயிலாடுதுறை
20. அழகியசிங்கர் கவிதைகள்
21. ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு – கவிதை
22. சாந்தி மாரியப்பன் கவிதை
23. வைதீஸ்வரனும் நானும் – அசோகமித்திரன்
24. வைக்கோல் கிராமம் – இலா முருகன்
25. தற்காலிகம் – கவிதை – சத்யானந்தன்
26. டபுள் டக்கர் – அழகியசிங்கர்
27. வரைதலும் பேசுதலும் – அ மலைச்சாமி
28. ரசிகன் – ந கிருஷ்ணமூர்த்தி
29. பிரதாப ருத்ரன் கவிதைகள்
29. பேயோன் கவிதைகள்
30. எஸ் வி வேணுகோபாலன் கட்டுரை
31. எனக்கு படம் வரைய வராது – புலியூர் அனந்து
32. வே நி சூர்யா – கடிகாரம் சொன்ன கதை
33. எங்கே அவன் ? – வைதீஸ்வரன் கவிதை
34. காத்திருக்கும் சூரியன் – தெலுங்கு கதை தமிழில்
35. கடற்கரைக் காற்று பலமாக வீசுகிறது – ஷாஅ
36. சிறகா கவிதைகள்
37. புதிய கானம் – ஆனந்த்
38. முதுவேனில் – எஸ் சங்கரநாராயணன்
39. ஒரு தவறு செய்தால் – சுந்தரராஜன்
40. இயங்கியல் – ச.விஷ்ணுதாசன்
41. ஐ சி யூ – அதுல் பிஸ்வாஸ்
42. ஸ்ரீதர் – சாமா கட்டுரை
43. நெருப்புப் பூச்சி – பானுமதி ந
44. நெனப்பு – கலைச்செல்வி
45. பிலிம் நியூஸ் ஆனந்தன் – அம்ஷன் குமார்
46. புகை – பானுமதி ந
47. அந்த போட்டோவில் – ஜெ ரகுநாதன்
48. ஜெமினி அருகில் இழந்த சொர்க்கம் – மாதவபூவராக
மூர்த்தி
49.நந்தாகுமாரன் கவிதைகள்
50. லாவண்யா சுந்தராஜன் கவிதைகள் குறித்து ஆனந்த் கட்டுரை
51. மரணத்தின் கண்ணாடி – 3 – க்ருஷாங்கினி
52. ஆர் ராஜகோபாலன் கவிதைகள்
53. அபராஜிதா கவிதைகள்
54. லாவண்யா கவிதைகள்
55. அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
56. புதுமைப்பித்தனின் காஞ்சனை – பெருந்தேவி
57.இலவசம்தானே – ஜெ பாஸ்கரன்
58. ஜான்னவி கவிதைகள்
இதில் கலந்து கொண்ட படைப்பாளிகள் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வர முயற்சி செய்யவும்.  படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை  navina.virutcham@gmail.com     அனுப்பவும். உடனே பத்திரிகையை அனுப்புகிறேன்.
ஒத்துழைப்பு அளித்த எழுத்தாளர்களுக்கு நன்றி.  என்னைப் பொறுத்தவரை ரொம்பவும் திருப்தியான இதழ் இது.  இதை விட பிரமாதமாக நான் ஒரு விருட்சத்தைக் கொண்டு வர முடியாது.  பல புதியவர்கள் இதில் எழுதி உள்ளார்கள்.  அவர்களுக்கு என் நன்றி. 260 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் விலை ரூ.100 தான்.
இந்த இதழில் நடேஷ் அவர்களின் ஓவியங்களையும், கசடதபற இதழ்களில் வெளிவந்த ஓவியங்களையும் பயன்படுத்தி உள்ளேன்.  ஓவியர்களுக்கு என் நன்றி.

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது.  நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும்.  28 ஆண்டுகள் ஓடி விட்டன.  99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது.  அதன்பின் 8 மாதங்கள் தட்டுத் தடுமாறி 100வது இதழை இதோ அக்டோபர் மாதம் கொண்டு வந்து விட்டேன்.100வது இதழ் 100வது இதழ் என்றதால் பக்கங்களும் அதிகமாய் விட்டன. 260 பக்கங்கள்.  இதுவரை நான் விருட்சம் இவ்வளவு பக்கங்கள் கொண்டு வரவில்லை. இந்த இதழ் தயாரிக்க செலவும் அதிகம். ஆனால் நண்பர்கள் உதவியதால் கொண்டு வர முடிந்தது.  ஒரு இதழிலிருந்து இன்னொரு இதழ் கொண்டு வருவதற்குள் என் நிலையில் பெரிய மாறுதல் இருந்துகொண்டே இருக்கும்.   இந்த இதழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  அத்தனை எழுத்தாள நண்பர்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தயாரித்து இங்கு தெரியப்படுத்துகிறேன்.  எழுதிய அத்தனைப் படைப்பாளிகளுகளுக்கும் என் நன்றி உரித்தாகுக.  அதேபோல் இதழ் நான் கொண்டு வரும் வரைக்கும் என்னுடன் போராடி வெற்றிபெறச் செய்த நண்பர்கள் : கிருபானந்தன், டாக்டர் பாஸ்கரன், சுந்தர்ராஜன் முதலிய நண்பர்களுக்கும் என் நன்றி.  தக்க சமயத்தில் விளம்பரம், நன்கொடை அளித்த நண்பர்களுக்கும் நன்றி.
இந்த இதழைக் கொண்டு வர ஒரு சிறிய கூட்டம் நடத்த உள்ளேன். 23ஆம்தேதி வைத்திருக்கிறேன்.  பலரைக் கூப்பிட உள்ளேன்.  கூட்டம் நடத்தும் இடத்தை இன்னும் தீர்மானம் செய்யவில்லை.  தெரியப்படுத்துகிறேன். அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

ஐராவதமும் புத்தக விமர்சனமும்…

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார்.  ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் கொடுப்பார்.  ஒரு முறை சிறுகதை எழுதித் தருவார்.  ஒருமுறை கவிதை எழுதித் தருவார்.  ஒருமுறை கட்டுரை எழுதித் தருவார்.  விருட்சத்திற்கு புத்தகங்கள் எல்லாம் விமர்சனத்திற்கு வரும். அந்தப் புத்தகங்களை உடனே படித்து விட்டு எழுத வேண்டும்.  என்னால் அப்படி படிக்க முடியாது.  ஒருமுறை ஐராவதத்தைப் பார்த்து, üüபுத்தகங்கள் வந்திருக்கின்றன.  விமர்சனம் செய்ய வேண்டும்,ýý என்றேன்.  üüஎன்னிடம் கொடுங்கள்.  விமர்சனம் செய்து தருகிறேன், என்றார்.   நாங்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வோம்.   மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.  விமர்சனத்திற்கு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஐராவதத்திடம் கொடுத்து விடுவேன்.
ஐராவதத்திடம் புத்தகங்கள் கொடுப்பதில் எனக்கு ஒரு நன்மை உண்டு. அவர் விமர்சனம் செய்து முடித்தப் பிறகு எல்லாப் புத்தகங்களையும் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.  நான் என்ன வேகத்தில் புத்தகங்களைக் கொடுக்கிறேனோ அதே வேகத்தில் படித்துவிட்டு எழுதிக் கொடுத்து விடுவார்.  மேலும் புத்தக மதிப்புரைக்காக ஒரே ஒரு புத்தக் பிரதியைத்தான் விருட்சத்திற்கு அனுப்புவார்கள்.  நான் சொல்வேன் :  “புத்தக மதிப்புரை விருட்சத்தில் ஒன்றரைப் பக்கம் அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் வரக்கூடாது,” என்று.  அதே பக்க அளவில் எழுதித் தருவார்.  அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் இரண்டு பக்கங்களுக்கு எழுதித் தருவார்.
படித்துவிட்டு  அவர் மனசில் என்னன்ன தோன்றுகிறதோ அது மாதிரி எழுதித் தருவார்.  விமர்சனம் எழுதும்போது வேண்டுமென்றே பல வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.  நான் கேள்வியே பட்டிருக்க மாட்டேன்.  எனக்கு அதெல்லாம் அவர் படித்திருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வரும்.  ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பதுதான் அவருடைய வேலை.  ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால் விடாமல் படிப்பார்.  வீட்டைவிட்டு எங்கும் போக மாட்டார். நடைபயிற்சி என்பதே கிடையாது.    ஒருமுறை இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு அவரை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போனேன்.  அவரைப் பார்த்த ந முத்துசாமி ஆச்சரியப்பட்டார்.  “என்னய்யா இங்கே வந்திருக்கே?” என்று  அவரைப் பார்த்துக் கேட்க, அதற்கு “இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்,” என்று ஐராவதம் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வரும்.
ஒரு முறை சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலர் குறித்து ஒரு விமர்சனத்தை ஐராவதம் எழுதினார்.   நான்தான் üஒரு புத்தக விமர்சனத்தை இருவர் பேசுவதுபோல் எழுதுங்கள்ý என்றேன்.  அவ்வாறே எழுதினார்.  ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.  சுந்தர ராமசாமியை üதமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக தன்னை அறிவிக்கும் முயற்சிý என்று அந்த இலக்கிய மலரைப் பற்றி எழுதி விட்டார். ஐராவதம் எதை எழுதிக் கொடுத்தாலும் நான் பிரசுரம் செய்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த முறை எழுதித் தர மாட்டார்.  ஏன் என்னை விரோதியாக பார்க்கக் கூட ஆரம்பித்து விடுவார்.  நான் அப்போது உணர்ந்த ஒன்று நான் ஒருவனே விருட்சம் பத்திரிகை முழுவதும் எழுத முடியாது என்பது.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரிடம் புத்தகங்கள் கொடுப்பதை குறைத்து விட்டேன்.  முக்கியமான எழுத்தாளர்கள் புத்தகங்களைக் கொடுப்பதைத் தவிர்த்தேன்.
நானே எதாவது எழுத முயற்சி செய்வேன்.  இல்லாவிட்டால் வரப்பெற்றோம் என்று பிரசுரம் செய்து முடித்து விடுவேன்.  ஐராவதம் பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதை விட்டுவிட்டார்.  நான் புத்தகம் கொடுக்காவிட்டாலும் அவர் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை எடுத்து எதாவது எழுதாமல் இருக்க மாட்டார். அவர் தெரு முனையில் இருக்கும் யுவராஜ் லென்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு அப் புத்தகம் பற்றி எழுதுவார்.  பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அம் மலர் எப்படி வந்திருக்கிறது என்று எழுதுவார்.
அவருக்கு யாரையாவது பிடித்து இருந்தால், புகழ்ந்து  தள்ளுவார்.   பிடிக்காவிட்டால் மோசமாக எழுதி விடுவார்.  ஒரு புத்தகத்தில் அவருக்குப் பிடித்தப் பக்கத்தை எடுத்துக்கொண்டு அதில் புத்தக ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அப்படியே எழுதுவார். சில பக்கங்களிலிருந்து பாரா பாராவாக எடுத்துப் போட்டு  ஆசிரியர் கருத்து பிரமாதம் என்று முடிப்பார்.    இதை புத்தக மதிப்புரையாக  எடுத்துக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  அவரிடம் கேட்டால் மழுப்பலாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விடுவார்.
ஆனால் எந்தப் புத்தகம் கொடுத்தாலும் எழுதக் கூடியவர்.  ஒருமுறை சதாரா மாலதி கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டார்.  சதாரா மாலதிக்கே தன் புத்தகத்திற்கான விமர்சனத்தைப் படித்து விட்டு நம்ப முடியாமல் இருந்தது.  அது ஒரு உயர்வு நவிற்சியாக இருந்தது.  புத்தகம் கொண்டு வருவது என்பது சிரமமானது. ஒரு புத்தகம் நமக்கு படிக்க சரியாக இல்லை என்றால் அப்புத்தகம் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.  அதைப் பற்றி எழுதி அடிப்பது அல்ல.
அப்படியென்றால் புத்தக விமர்சனம் என்றால் என்ன?  ஒரு நாவலை விமர்சனம் செய்வதென்றால் நாவலின் முன் கதை சுருக்கத்தைச் சொல்வதா? அல்லது நாவலின் சில பகுதிகளை பத்தி பத்தியாக எழுதுவதா? இதெல்லாம் கூட புத்தக விமர்சனத்தின் ஒரு கூறுதான் என்பார் ஐராவதம்.  இது தவறு என்று சொல்வதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஐராவதம் சொல்வார் : சுஜாதாவின்  சலவைக்குப்போடும் கணக்கைக் கூட விமர்சனம் செய்யலாம் என்று. கோட்பாடு ரீதியாக புத்தகத்தை விமர்சிப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.  அது உடலை கூறுபோடும் விஷயம் என்பார். அவர் விமர்சன முறை க நா சு வின் ரசனை முறைதான்.
ஆனால் தமிழ்நாட்டில் புத்தகம் வருமளவுக்கு புத்தக விமர்சனம் வருவதில்லை. மேலும் புத்தக விமர்சனத்தைப் பார்த்து யாரும் புத்தகம் வாங்குவதில்லை.  வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை யாரும் படிப்பதும் இல்லை.  பெரும்பாலான புத்கங்கள் கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 30

சிட்டுக்குருவிப் பாட்டு

பாரதிதாசன் 


சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செல்பவளே,
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் திண்பவளே,
எட்டிப் பறந்தாய் மண்முழுதும்
ஏறிப் பறந்தாய் வானமெல்லாம்
இஷ்டப் படிநீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் üசீý என்பாய்.

உன்னைக் கேட்பேன் ஒருசேதி.
உரிமைத் தெய்வத்தின் மகளே,
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே!
மன்னன் அடிமைப்பணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்.
மண்ணும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?

நன்றி : பாரதிதாசன் கவிதைகள் – மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 – இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன – விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)

தேடல் என்கிற கதை..

இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது.  இக் கதையைப் பிரசுரித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப்  பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது.  இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.  இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.
முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.  அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.  அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவருடைய கணவர்  திடீரென்று புத்தி பிசகிப் போய்விட்டார்.   வேலையைத் துறந்து பென்சன் வாங்கிக் கொண்டிருந்தார்.  வீட்டிலேயே அடைந்து கிடப்பார்.  ஒரு முறை பென்சன் அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட அவரை அந்தப் பெண்மணி அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.  அவரை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உள்ளே அலுவலரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.  அவர் திரும்பி வரும்போது உட்கார்ந்த இடத்தில் கணவரைக் காணோம்.  எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கணவரை கண்டு பிடிக்க முடியவில்லை.  அதன்பின் அவர் கணவரையே காணோம்.  கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் ஆனபிறகும் அவர் கணவரை காணவில்லை.   இதை இப்போதும் அந்தப் பெண்மனி உருக்கத்துடன் கூறிக்கொண்டிருப்பார்.
நான் அவரைப் பார்த்துச் சொல்வேன் : “அவர் போனவர் போனவர்தான்..இனிமேல் வர மாட்டார்..நீங்கள் உங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.”
இச் சம்பவத்தை என் மனம் பதிவு செய்து கொண்டது.  சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு, அவர் யார் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது.  அவர் உடனே அப்பாலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.  உண்மையில் அதன்பின் அவருக்கு சரியாகிவிட்டது.  ஆனால் அப்படி ஒன்று ஏன் நடந்தது என்று தெரியவில்லை.
என் மனதில் இதையெல்லாம் ஓட்டி ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் ‘தேடல்.’  நான் இதுவரை 80 கதைகள் எழுதி இருப்பேன் (குறுநாவல்களையும் சேர்த்து).  அவற்றையெல்லாம் மொத்தமாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வர எண்ணம்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 29

நேற்றையக் கனவு

 

திரிசடை

என் நேற்றையக் கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது.
வெகுநாள் வருந்தி,
வியர்வை சிந்தி,
கல்லுடைத்து,
வெயிலில் வெந்து,
பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
நேற்று என் கனவில் தகர்ந்தது

மீண்டும் அதைக்கட்ட
எனக்குக் காலம் இல்லை.
காலம் இல்லையென்றால் கனவேது?
கனவு இல்லையென்றால் ஆக்கமேது?
என் கனவை உணர்ந்த ஒரு இதயம்
எனக்காக அதைக் கட்டும்
தன் கனவில்.

PUBLISHED BY : 
THAMIZH SANGAM OF 
METROPOLITAN WASHINGTON AND bALTIMORE INC.
C/O DR N GOPALSAMY, 11205 GREENWATCH WAY, 
NORTH POTOMAC MD20878, U S A

 

 

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

 
 
முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம்.  ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்.  நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன்.  ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நணள்பர்கள் சந்தித்துக் கொள்வோம்.  இந்த முகநூல் அப்போது இல்லை.  இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம்.
எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.  தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும்.  இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.
ஆனால் இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது.  அவ்வளவுதூரம் இறுகி விட்டது பொழுது எல்லோருக்கும்.
ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். ‘இன்று எனக்குப் பிறந்தநாள்’ என்று.  நாங்கள் அவரை வாழ்த்தினோம்.
‘இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக நடந்தது.  ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.   இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்கிறேனே அதுவே பெரிய விஷயம், என்று சொன்னேன், கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினார்கள்,’  என்றார் ஞானக்கூத்தன்.
அன்று அவர் சொன்னதை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.
இன்று அவர் பிறந்தநாள்.   அவர் நினைவாக ‘உபதேசம்’ என்ற அவர் கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 28



 எதன் கைதி

 

சமயவேல் 

அடிக்கடி வெளியே
எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஜன்னல்
அல்லது நிலையோரம்
சமையலறை ஜன்னல்
பின்வாசல்
அல்லது ஓர ஜன்னல்
மாற்றி மாற்றி
எட்டி எட்டிப் பார்க்கிறேன்
அலுக்காமல் தெருவைப் பார்த்தபடியே
நிற்கிறேன் அல்லது
மொட்டை மாடி ஏறி
எல்லாத் திசைகளையும் பார்த்து
நிற்கிறேன்
எவ்வளவு பார்த்தாலும்
வீட்டுக்குள் நுழைந்ததும்
திரும்பவும்
எட்டி எட்டி

நன்றி : அகாலம் – கவிதைகள் – சமயவேல் – பக்கம் : 52 – வெளிவந்த ஆண்டு : மே 1995 – விலை ரூ.12 – சவுத் ஏசியன் புக்ஸ் 6/1 தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை 600 002