மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 31

ஏனென்றால்….

ஜெ. பிரான்சிஸ் கிருபா


நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்!

நன்றி : சம்மனசுக்காடு – கவிதைகள் – ஜெ பிரான்சிஸ் கிருபா – பக்கம் : 111 – விலை ரூ.95 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044 – 24896979 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன