அம்ஷன்குமார் கூட்டமும் பத்மநாப ஐயரும்..

அழகியசிங்கர்
ஐந்தாம் தேதி அம்ஷன் குமார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார் பத்மநாப ஐயருக்கு. அக் கூட்டத்திற்கு 80 பேர்கள் வந்திருந்தார்கள். சென்னையில் 80 பேர்கள் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அது சிறப்பான கூட்டம். கூட்டம் நன்றாக ஆரம்பம் ஆனது. பன்னீர்செல்வம் பேசும்போதும், யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி குறித்து ஆவணப்படம் போதும், கூட்டம் அசையாமல் இருந்தது.
திடிரென்று ஒரு தொற்று நோய் பரவிவிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை விட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் பத்மநாப ஐயருக்குத் தெரிந்தவர்கள். அவரை நேரில் பார்த்தவர்கள். அவருடன் பேசியிருப்பவர்கள். உண்மையில் அவர்கள் முன்வந்து பத்மநாப ஐயரைப் பற்றிப் பேச வந்திருக்க வேண்டும். அம்ஷன்குமாருக்கு உறுதுணையாய் இருந்து நடத்தியிருக்க வேண்டும்.
அம்ஷன்குமார் கூட்டம் ஆரம்பிக்கும்போதே, ‘ஐயருக்குத் தெரிந்தவர்களும் அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பேச அழைக்கிறேன்’ என்று தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால், கூட்டத்தில் இன்னும் பத்மநாப ஐயரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு அதிகமாகக் கிடைத்திருக்கும்.
உண்மையில் எனக்கு பத்மநாப ஐயரைப் பற்றி தெரியாது. அம்ஷன்குமார் மூலமாகத்தான் அவரை எனக்குத் தெரியும். நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் – 75 என்ற புத்தகத்தைப் பார்த்தபோது அசந்து விட்டேன். இது ஒரு பவள விழா மலர். அற்புதமான புகைப்படங்கள் கொண்ட புத்தகம் இது. கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல் அச்சு நேர்த்தி. நான் பாதுகாக்க வேண்டிய புத்தகங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மேலும் இதை நான் ஒரு ஆவணப் புத்தகமாகக் கருதுகிறேன். ஆவணப் படம் போல் ஆவணப் புத்தகம். பத்மநாப ஐயரை வைத்து ஆவணப்படம் எடுத்தாலும், இப் புத்தகம் போல் பலர் பேசி சிறப்பாக இருந்திருக்கும். அம்ஷன்குமார் இதை செய்ய வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் பத்மநாப ஐயரைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். அவர் ஈழ தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல் பட்டு வந்திருக்கிறார். இன்னும் செயல்படுகிறார் என்று.
ஒருவர் எப்படி எழுத்தாளராக இல்லாமல் தமிழ் மீதும் எழுத்தாளர்கள் மீதும் ஆர்வம் உள்ளவராக செயல் பட்டிருக்கிறார் என்பதை நினைத்துதான் ஆச்சரியப்படுகிறேன்.
வெளி ரங்கராஜன், ரவிசுப்பிரமணியன், பாரவி, மூவரும் அவருடைய புத்தகத்தைப் படித்துவிட்டு கட்டுரை வாசித்தார்கள். பொதுவாக இதுமாதிரியான கூட்டத்தில் கட்டுரை வாசிப்பதைக் கேட்பதற்கு தனிப்பட்ட மனநிலை வேண்டும். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும் மனநிலை இல்லை.
நானும் இதில் கலந்துகொண்டேன். கையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேச நினைத்தேன். பேசவும் செய்தேன். நாலைந்து குறிப்புகளை வைத்துக்கொண்டு அசோகமித்திரன் சிறப்பாக கூட்டத்தில் பேசி விடுவார். அதேபோல் நினைத்துதான் பேசினேன்.
எனக்குப் பின்னால் இரா முருகன், பா ஜெயபிராகாசம், தமிழ்நதி, தாரா போன்றவர்கள் சிறப்பாகவே பேசினார்கள். பத்மநாபனுக்குத் தெரிந்த பலர் இருந்தார்கள். அவர்கள் பேசினால் இன்னும் சிறப்பாகவே இந்தக் கூட்டம் இருந்திருக்கும்.

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…

 
 
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள்.  அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எந்த இடத்திலும் நெரிசல்.  போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்.  அதையும் மீறி வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டுமென்றால் உங்கள் கூட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் பொதுவாக கோயம்புத்தூர் போன்ற இடத்தில் எளிதில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு 50 பேர்கள் கூடி விடுவார்கள் என்று என் நண்பர் ஒருவர் கூறுவார். அது உண்மையா என்பது தெரியாது.
ஆனால் சென்னையில் 50 பேர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம்.  அப்படியே 50 பேர்கள் வந்தால் அவர்கள் கூட்டம் முடியும்வரை தங்க வைப்பது இன்னும் சிரமம்.  நான் கிட்டத்தட்ட 200 கூட்டங்கள் நடத்தி அனுபவப்பட்டவன்.  இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர்களுக்கு நான் சில அறிவுரைகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
1. ஒரு கூட்டத்தை நடத்த உங்கள் இலக்கு 50 பேர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  50 பேர்கள் வருவதற்கு நீங்கள் பேசுபவர்களை 45 பேர்களாகவும், பார்வையாளர்களை 5 பேர்களாகவும் மாற்ற வேண்டும்.  வேற வழி இல்லாமல் 45 பேர்கள் பேச வந்து விடுவார்கள்.  அவர்கள் ஒவ்வொரும் பேசி முடிக்கும் வரை எல்லோரும் இருப்பார்கள்.  உங்களுக்கு வெற்றி.
2. நல்ல உணவகத்தில் இருந்து டிபன் அல்லது சாப்பாடு  தருவிப்பதாக இருந்தால், அதற்காகவாவது போனல்போகிறதென்று கூட்டத்திற்கு வந்து விடுவார்கள்.  அப்படி 50 பேர்கள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள். ஜாக்கிரதை.  நீங்கள் அந்த டிபனை கூட்டம் முடிந்தபிறகு தருவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
3.  ஆனால் பெரும்பாலோர் கூட்டத்திற்கு வருபவர்கள் கூட்டத்தில் பாதியிலேயே எழுந்து போய்விடுவார்கள்.  அவர்களை எழுந்து போகாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.  கூட்டம் நடக்கும் ஹால் கதவை சாரத்தி தாப்பாள் போட்டு விடுவது.  அப்படிச் செய்தால் கூட்டம் முடியும்வரை எல்லோரும் தப்பிக்க முடியாது.
4. பொதுவாக நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்காக கூட்டம் நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரே சமயத்தில் 10 பேர்களுக்கு மேல் படைப்பாளிகளின் புத்தகங்களைப் பற்றி பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு, ஒவ்வொரும் 5 பேர்களாவது கூப்பிட வேண்டும் என்று கட்டாயம் சொல்லி விடுங்கள்.  கூட்டம் ஹால் முழுவதும் நிரம்பி வழியும்.
5. கூட்டம் நடத்துபவர்கள் ஒருவரே இருந்தால் ஆபத்து.  ஒரு ஐந்தாறு பேர்கள் இருந்தால் நல்லது.  இந்த ஐந்தாறு பேர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருப்பார்கள்.  அவர்களை கட்டாயம் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுங்கள். அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் வந்து விடுவார்கள். ஆனால் வேற வழி இல்லாமல் அவர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்க்கலாம்.
6. கூட்டத்தில் அமைதியாய் பேசுபவர்களைக் கவனிக்க, பேசுபவர்களும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  பேசுபவர்கள் ஒரு கட்டுரை மாதிரி எழுதி வாசிக்கக் கூடாது.  அப்படியே வாசிப்பதாக இருந்தால், பார்வையாளர்களைப் பார்த்து பார்த்து மெதுவாக வாசிக்க வேண்டும்.  குறிப்பு எடுத்துக்கொண்டு பேசுவது அவசியம்.  பார்வையாளர்கள் நம்மை விட் அறிவாளிகள் என்று பேசுபவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்.  நாம் பேசுகிறோம் என்று மமதாய் இருக்கக் கூடாது.  பேசுவதில் கொஞ்சமாவது நகைச்சுவை உணர்வு வேண்டும்.  இலக்கியக் கூட்டம் என்பதால் தீவிரமாய் முகத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.
7.  கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு எல்லோரும் பேசுகிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும்.
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  உங்களுக்கு எதாவது ஐடியா இருந்தால் இத்துடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

சில துளிகள்…….4

– முந்தாநாள் காலை 3 மணி இருக்கும்.  ஒரே சத்தம்.  கீழே இரும்பு கேட்டை யாரோ வேகமாக டமால் டமால் என்று அடித்தார்கள்.  பின் ஓடற சத்தம்.  வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிக்கட்டுகளில் தடதடவென்று ஓடி வந்தார்கள்.  எனக்கு திகைப்பு.  கதவைத் திறக்க பயம்.  பின் கொஞ்ச நேரம் கழித்துக் கதவைத் திறந்தேன்.  மேல் வீட்டிலிருந்த குடி இருப்பவரும் திறந்துகொண்டு நின்றிருந்தார்.  “என்ன?” என்று கேட்டேன்.  üüதிருடன் ஒருவன் நம்ம வீட்டு வழியா தப்பிச்சுட்டுப் போறான்.  அவனைப் பிடிக்க போலீஸ்காரர்கள்தான் இப்படி சத்தம் போட்டு ஓடி வந்தார்கள்,ýý என்றார்.
திருடனா?  நம்ம தெருவிலா?  எங்கள் தெருவில் நுழை வாயிலில் மாடுகள் சுதந்திரமாய் நின்று கொண்டிருக்கும்.  பின் சைக்கிள்கள், டூவிலர்கள் என்று நிரம்பி வழிந்திருக்கும்.  பின் தெரு முழுவதும் நிறையா பேர்கள் இருப்பார்கள்.  சென்னை ஜனத்தொகையில் பாதிபேர்கள் இங்கேதான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம்.  ஆனால் எப்படி திருடன் வர முடியும்?  அதுவும் துணிச்சலாக.  நேற்று காலையில் என் வீட்டிற்கு எதிரில் உள்ள இரண்டு இளைஞர்களைப் பார்த்து சொன்னேன் :   “தெரியுமா?  திருடன் வந்திருந்தான்..3 மணிக்கு ஒரே ரகளை.”
“முன்பு போல் இல்லை.  கோடி வீட்டில கூட கேஸ் சிலிண்டர் திருட்டுப் போயிடுத்து,” என்றார்கள்.
“நம்பத் தெருவிலா? நம்ப முடியவில்லை.  சைக்கிள் எடுக்கலையா?” என்று கேட்டேன்.
“சைக்கிள் யாரும் எடுக்க மாட்டார்கள்.  சைக்கிளும் குறைச்சல்..ஆனா டூ வீலரை எடுப்பாங்க..அதுவும் ரெட் கலர் வண்டியை எடுப்பாங்க..” என்று சிரித்தபடியே சொன்னான் ஒருவன்.
நான் அவர்களைப் பார்த்தபடி என் வண்டியைப் பார்த்தேன்.  அது ரெட் கலர். அதனால்தான் அப்படி சொல்றான் என்று நினைத்து அவனைப் பார்த்துச்  சிரித்தேன்.
– 100வது இதழ் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெரிய கவரில் விருட்சம் இதழை நுழைத்து பின் கயிறால் கட்டி ஸ்டாம்பு ஒட்டிப் போட வேண்டும்.  ஆறு ருபாய் ஸ்டாம்பு.  சரியா 3 மணிக்குத்தான் ஆரம்பிக்க வேண்டி உள்ளது.  நான் முடித்து தபால் ஆபீஸிற்குப் போவதற்குள் மணி 5 ஆகிவிடும்.  அந்தச் சமயத்தில் யாராவது போனில் வந்தால் என்னால் எடுத்துப் பேச முடியாது.  நேற்று ஒரு நண்பர் போன் செய்தார்.  நான் எடுக்கவில்லை.  என் நிலைமையை எப்படி அவருக்கு விவரிக்கிறது. அவர் கோபப்பட்டால் ஒன்றும் செய்வதற்கு இல்லை.
– கவுதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்து போனதைப் பற்றி சமீபத்தில் செய்தி வந்தது.  ரொம்ப வருடங்களுக்கு முன் என் உறவினர் பெண் விவாகரத்து செய்து கொண்டார்.  அப்படி விவாகரத்துச் செய்வதற்கு நான் உதவி செய்தேன்.  விவாகரத்துப் பெற்ற அன்று அந்தப் பெண் ஒரே ஒரு வார்த்தைச் சொன்னார் : “வருத்தமாக இருக்கிறது,” என்று.  இங்கு நான் சொல்ல வருவது பிரிவு என்பதைப் பற்றி.  கணவனோ மனைவியோ பிரிந்து செல்வதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.  தெரு முனையில் உள்ள 18 கே பஸ் பிடித்துப் போகிற மாதிரி சுலபமான விஷயமாக நான் கருதவில்லை.  என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் மனைவி இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை  செய்து கொண்டு விட்டார்.  அதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் போய்விட்டது என்ற தோன்றுகிறது.
– தடம் இதழில் வெளிவந்த எஸ் ராமகிருஷ்ணன் பேட்டி எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பதில் சொன்ன விதமும் படிப்பவரை யோசிக்க வைக்கும்.  ஒரு கேள்வி : ஒரு கலைஞன் அவனது சொந்த வாழ்பனுபவத்தை எழுதவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்ற கேள்விக்கு ராமகிருஷ்ணன் சொன்ன பதில் யோசிக்க வைத்தது. அவர் இப்படி சொல்கிறார் : üüஎனது வாழ்க்கையை நான் ஏன் ஒரு கதைக்கான பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்?  எனது வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு பரிசு, சுதந்திரம்.  அதைப் பிய்த்து பிய்த்து நான் ஏன் ஒரு கதையிடம் கொடுக்க வேண்டும்?ýý இந்தக் கருத்து எனக்கு சற்று நெருடலாகத் தோன்றியது.  அனுபவம் என்பது பொதுவான விஷயம்  அதில் என் அனுபவம் உங்கள் அனுபவம் என்பதெல்லாம் ஒன்றுதான்.  கதையாக எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  எழுதுகிற திறமையும், நம்பத்தன்மையும் வேண்டும்.எனக்குத் தெரிந்து ஒரு பிரபல எழுத்தாளர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.  திடீரென்று எழுதுவதை நிறுத்தி விட்டார்.  ஏன் என்று கேட்டதற்கு, ‘என்னைப் பற்றி நான் எழுதுகிறேன்.  எல்லோருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன்,’ என்றார்.  அவர் சொன்ன பதிலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  100 வருடங்கள் கழித்து ஒரு படைப்பைப் படிக்கும் வாசகனுக்கு, யாருடைய அனுபவம் அதில் வந்திருக்கிறது என்பது எப்படித் தெரியும்.
                                                                                                                  (இன்னும் வரும்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 33

அழகியசிங்கர்  



 உலகம்



ஷண்முக சுப்பையா




அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி.
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்.
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு.
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்.
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.

நன்றி : எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : ஏப்ரல் 1975 – 19 – எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை ரூ.3 – 62 பக்கங்கள்

நீங்களும் படிக்கலாம்….23

  கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி?
 
எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள ‘நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்’ என்ற புத்தகத்தைப் படித்தேன்.  முன்னுரையில் ‘இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு’ என்று  குறிப்பிடுகிறார் எம் டி எம்.   இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப்  பெற்ற பார்வையாகும் என்கிறார்.  இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா?
இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம்.  இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார்.   அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகளை முற்றிலும் புதியதாக மாற்றுகிறார் ஜøலியோ கிறிஸ்தவா. மேலும், üபெண்ணிய எழுத்தைப் பற்றி குறிப்பிடும்போது உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாதுý என்கிறார் கிறிஸ்தவா.  மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிûதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைக்கிறார் கிறிஸ்தவா.  கிருஸ்தவாவைப் பற்றி விவரித்துக்கொண்டே போகிறார் எம்டிஎம்.  படிக்க படிக்க புதிய சிந்தனையை உருவாக்குகிறது. கிறிஸ்தவா புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது.
‘கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு,’ என்ற கட்டுரையில் பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.
புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குராணாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து பறவையைக் கவனிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.
இது அதிகம் பாவிக்கப்பட்ட பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்  என்று கவிதை போகிறது.
பொதுவாக புனைகதையாளர்களையும் தத்துவாதிகளையும் சரித்திர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக் குரல்களையும் நம்பலாம் என்கிறார் முத்துக்குமாரசுவாமி.  இந்தக் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.
காலவழுவமைதி, சினிமாச்சோழர், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், ஆகஸ்ட் 15 போன்ற ஞானக்கூத்தன் கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புக் கவிதையின் வடிவத்தைக் கட்டமைத்தவை என்கிறார்.  பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980 களில்தான் என்கிறார்.
எம்டிஎம் குறிப்பிட்ட சில கருத்துக்களை மேலும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
– நகுலனில் நான் – நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாக இருக்கிறது.
– ஆத்மநாம் கவிதை தன்னிருப்பை முழுமையாக நிராகரிக்கிற தன்மை கொண்டது.
– சி மணி கவிதையில் வெளியே செல்லமுடியாமல் மாட்டிக்கொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறது.
பசுவய்யாவின் கவிதையிலோ நீ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுததுகிறது என்கிறார் எம்டிஎம்.  உதாரணமாக சவால் என்ற பசுவய்யாவின் கவிதையைக் குறிப்பிடுகிறார்.
போர்ஹெசின் கவிதைகளை முன் வைத்து எம்டிஎம் கூறுபவை : ‘மனம் தன் போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின் கவிதைகள் நினைவுக்கு வந்தன .’
படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம் – அகம் – வரலாறு – பிரபஞ்சம் என்ற தொடர்பை வெளிப்டுத்தி மொழி போதாதிருப்பதைப் பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன.  இதற்கு உதாரணமாக பல கவிதைகளைக் குறிப்பிடுகிறார்
போர்ஹெசின் கவிதைகளை கடந்த 25 வருடங்களாக வாசிக்கிறவர் எம்டிஎம்.  மற்ற கவிஞர்களின் கவிதைளை விட அதிகமாக வாசித்திருப்பது போர்ஹெயின் கவிதைகள் என்கிறார்.  எம்டிஎம் போர்ஹெயின் கவிதைகளை பற்றி குறிப்பிடும்போது, அவருடைய தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கிறார்.  அவர் தந்தைக்கு ப்ரௌனிங்க் என்ற கவிஞரின் கவிதைகள் பிடிக்குமாம்.  போர்ஹெஸ÷க்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு. உற்சாகமாகக் கூறி அப்பாவின் ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறந்து வைக்கிறார் எம்டிஎம்.
மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம்.  தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸ÷டமும் காண்பதாக குறிப்பிடுகிறார்.  நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன்.  போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை.  ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.
அதேபோல் நவீன கவிதைகள் என்பது தான் – பிறன்மை என்பற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு பிரசித்தம் என்கிறார்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவக் குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார்.  பாரதியார் கவிதைகள் இன்னும் நவீன வடிவமாக இருக்கின்றன என்று பல உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.
‘இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்’ என்று சாடுகிறாரர் எம்டிஎம்.  இதைத்தான் என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும்.  பெரும்பாலோர் ரசனையின் அடிப்படையில்தான் விமர்சனம் செய்வார்கள். இன்றைய தமிழ் சூழலில் யாரும் ஒரு புத்தகத்தைப் படிக்கவே தயாராக இல்லை.  அப்படிப் படித்தாலும் அது குறித்து எதுவும் எழுதத் தயாராய் இல்லை.  அப்படியொரு சூழலில்  முதலில் விமர்சனம் செய்வதை தமிழில் ரசனை மூலமாக ஆரம்பித்து வைத்தவர் க நா சு.  எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்கிற முறையும் இதுதான்.  ஆனால் எம் டி எம் இப்படி சொல்கிறார் : அவர் சார்ந்து இருக்கிற விமர்சன முறை பின்னை காலனிய, பின் நவீனத்துவ முறை என்கிறார். இந்த மாற்று விமர்சன முறையை கையாளுபவர்கள் பலர் ஒரே மாதிரியாக இதை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.
காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
ஏனெனில் தந்ûதையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல.  அது  மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.
  கோபோ அபேயை ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர் என்கிறார்.
சூஃபி இசையைப் பற்றி குறிப்பிடும்போது ராஜஸ்தானின் புகழ் பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பதம்பூஷண் கோமல் கோத்தாரியைப் பற்றி விவரிக்கிறார்.  அவருடன் சூஃபி இசையைச் சேகரிக்க பலமுறை பாலைவன கிராமங்களில் அலைந்த அனுபவத்தை படிக்க படிக்க நாமும் அந்த அனுபவத்தை உணர்வதுபோல் உணரச் செய்கிறார.
ஒரு கதையைப்போல் சில கட்டுரைகளை எம்டிஎம் விவரித்துக் கொண்டு போகிறார்.  அதில் ஒன்று உஸ்தாத் பில்மிலலாஹ் கான் என்ற கட்டுரை.  பத்ரி என்ற நண்பர் மூலம் உஸ்தாத்தைப் பார்த்துப் பேசுகிற நிகழ்ச்சியை விவரிக்கும்போது அக் கட்டுரை படிப்பவரையும் பரவசப்படுத்தத் தவறவில்லை.
‘ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக் கலைஞன் அடையாளம் காண்கிறான்.  அந்த உணர்வின் எல்லைகளைப் பரிசோதிக்கிறான்.  அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்துக் கவனித்து மேலே போகிறான்.’ என்று எம்டிஎம் விவிரித்துக்கொண்டே போகும்போது, வேற ஒரு பார்வையில் இந்துஸ்தான் இசையை ரசிக்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.
அஞ்சலி  என்ற தலைப்பில் பாடகர் பரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பற்றி குறிப்பிடுகிறார்.  புதிய பார்வையில் எழுதிய எம்டிஎம்மின் கதையான பத்மநாபனின் கூடு குறித்து ஒன்றை குறிப்பிடுகிறார்.  அந்தக் கதை பிரசுரமான தினத்தில்தான் ஸ்ரீனிவாஸ்  டிரைவ் இன்னில் சந்திக்கிறார்.  மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை சொல்வது பற்றிய கதை அது.  எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீனிவாஸ் எம்டிஎம்மைப் பார்த்து.   ‘என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?’ என்ற வரியை வாசித்துக் காட்டுகிறார் எம்டிஎம்.  ஸ்ரீனிவாஸ் புன்னகைத்தபடி அந்த வரியை மெதுவாக வாசித்துக் காட்டினாராம்.  பத்மநாபனின் கூடு கதைப் பிரதி கிடைக்குமென்றால் அதை ஸ்ரீனிவாஸ÷ற்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டு  சொல்கிறார் எம்டிஎம்.  இத் தொகுதியில் இரண்டு தலயாத்திரைகள் பற்றியும், பாகேஸ்ரீராகம் பற்றியும், எம்டிஎம்மின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் சுவாரசியமாக சொல்லிக்கொண்டே போகிறார்.
இப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டு விதமாக நான் உணர்கிறேன்.  ஒன்று  எம்டிஎம்மின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.  இந்தப் பகுதியை அவர் பல சிறு கதைகளாகவோ நீண்ட நாவலாகவோ எழுதியிருக்கலாம்.  ஆனால் அவர் சுய சரிதமாக எழுதி உள்ளார். இன்னொரு பகுதியில் அவர் பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தையும், பல எழுத்தாளர்கள் பற்றிய கூற்றையும் விவரித்துக்கொண்டு போகிறார்.   கோட்பாட்டு முறையில் இப்புத்தகத்தை அணுக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம் இது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நிலவொளி எனும் இரகசிய துணை – கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கங்கள் : 263 – பதிப்பு : 2014 – விலை : ரூ.200 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310இ திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444
                                                                                                               (நன்றி :  மலைகள்.காம்)

தீபாவளியும் எங்கள் தெருவும்…

எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு.  முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது.  இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன.  சாரி..தேங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் இப்போது இல்லை.
தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள்.  நிறையா சின்ன சின்ன பசங்கள். வாலிபர்களும் உண்டு.  தீபாவளி அன்று எங்கள் தெருவிற்கு தயவுசெய்து வந்து விடாதீர்கள்.  நாங்கள் வேறு வழி இல்லாமல் இருக்கிறோம்.  காலையில் ஆரம்பிக்கும் பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துவிடும்.  எல்லோரும் சாதாரண வெடிகளை வெடிப்பதில்லை.  அணுகுண்டைதான் ஒவ்வொருவரும் வெடிக்கிறார்கள்.  அல்லது சரம் வெடிகளை சரம் சரமாக வெடிக்கிறார்கள்.  எங்கள் தெருவில் என்ன விசேஷம் என்றால் தீபாவளி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னே ஆரம்பித்துவிடும்.  பின் தீபாவளி முடிந்தபின்ன்னும் இன்னும் சில நாட்கள் ஓடும்.
சுற்றிச் சுற்றி இந்த பொடியன்கள் பாடாய் படுத்துவார்கள்.  நான் தீபாவளி அன்று காலையில் எழுந்து விட்டேன்.  என் வீட்டில் போன ஆண்டு நான் வாங்கிய கம்பி மத்தாப்பைத் தவிர  வேற எதுவும் இல்லை.  போன ஆண்டே நான் வாஙகியிருந்த கம்பி மத்தப்பை கொளுத்தவில்லை.  நேற்றோ தொடக் கூட இல்லை.  அதில் ஒரு பாக்கெட்டை தானம் செய்து விட்டேன்.
குளித்துவிட்டு சீக்கிரமாக ஒரு புத்தாடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன்.  என் மனைவி டிவி முன் அமர்ந்து விட்டாள்.  ம்ம்ம்  எப்படிப் பொழுதைப் போக்குவது.  யார் வீட்டிற்கும் போகப்பிடிக்கவில்லை.  எல்லோரும் போனில் விஜாரித்துக் கொண்டிருந்தோம். என் மனவி டிவியில் ஆழ்ந்து விட்டாள்.  பட்டிமன்றத்தை ரசித்துப் பார்க்கிறாள்.  நானும் பட்டிமன்றத்தைப் பார்த்தேன்.  எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதில் தோன்றும் சில முகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதை ரசிக்க என்று வருகிற கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  தலைப்பு : பட்டி மன்றம் அவசியமா அவசியமில்லையா?  அவசியமில்லை என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன்.
ம்ம்ம்.. என்ன செய்யலாம். நான் தீபாவளி நாட்களை நினைத்து என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.  கல்லுரி படிக்கும் காலங்களில் தீபாவளி அன்று முதல் காட்சி சினிமா பார்க்காமல் இருக்க மாட்டேன்.  பெரும்பாலும் சிவாஜி படம்தான் பார்ப்பேன்.  சொர்க்கம் என்ற படம்.  தீபாவளி அன்று வந்த அந்தச் சினிமாவை க்ரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தேன். அதே போல் இரு மலர்கள் என்ற படத்தை பிராட்வேயில் க்யூவில் நின்று மாலை காட்சியைப் பார்த்தேன்.
சின்ன வயதில் என்னடா இப்படி முட்டாள்தனமாய் இருந்துவிட்டோமென்று நினைத்துப் பார்க்கிறேன்.
ஆனால் இப்போது தமிழ் சினிமாவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை.  எந்தப் படமும் பார்க்கும்படி இல்லை. ம்ம்..எப்படிப் பொழுதைக் கழிப்பது..
வெளியில் வெடி சப்தம் தாங்க முடியவில்லை.  பழைய நானோ கார் இருந்தால், வெடிசத்த அலறலில், கார் கத்தியிருக்கும்.  இது புது நானோ கத்தவில்லை.  ஆனால் மாடியில் உள்ள வராந்தாவில் வெடி சப்த அதிர்வில் மேலே உள்ள விளக்கை மூடியிருக்கும் மூடி கழன்று விழுந்து விட்டது.
காலையில் தமிழ் ஹிந்து வந்திருந்தது.  அதைப் படித்தவுடன், எழுத்தாளர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஹிந்துவே வாழ்க என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.  முகநூலில் கொஞ்சம் மேய்ந்தேன். ம்ம்ம்….என்ன செய்யலாம்.. அப்போதுதான் தோன்றியது புத்தகத்தைப் படிக்கலாமென்று.  என்னிடம் ஏராளமாய் புத்தகங்கள் இருக்கின்றன.  எல்லாப் புத்தகங்களையும் நான் மதிக்கிறேன்.  எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் அதன் மூலம் நான் ஏதோ கற்றுக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.  அல்லது என் தோழன் மாதிரி புத்தகம் என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
யாருடனும் நாம் பேச வேண்டாம்.  புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கலாம்.  அப்போதுதான் என் பக்கத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் பெயர் : நூலை ஆராதித்தல் – பத்மநாப ஐயர் – 75.  அந்தப் புத்தகத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன்.  பத்மநாப ஐயர் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  452 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட புத்தகம் என் கண் முன்னால்.
179ஆம் பக்கத்தில் யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  புத்தகங்களின் புழுதி வாசம் என்ற தலைப்பில்.  அதில் இப்படி எழுதுகிறார் .
‘புத்தகங்களை விலக்கிவிட்டுச் சென்று ஐயரைப் பார்ப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்களினிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.  படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் ஓரத்தில், புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொண்டு நம்முடன் பேசுவார்.  புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.’
இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது எனக்கு தீபாவளி சத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.  பத்மநாப ஐயரை நான் பார்த்ததில்லை.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்த நண்பரைப் போல் எனக்கு அறிமுகம் ஆகிறார் பத்மநாப ஐயர்.
இன்னொரு புத்தகம் ‘இது போதும்.’  பாலகுமாரன் என்ற எழுத்தாளர் எழுதியது.  அவருடைய ஆன்மிக அனுபவத்தை எழுதி உள்ளார்.
‘இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கிவிட்டால் உண்பதின் மீது மிகத் தெளிவான கவனம் வந்து விடும்.  ஆஹா, உணவு எவ்வளவு நன்றாக இரக்கிறது என்று நொட்டை விட்டு சாப்பிட்டோம் என்றால் உணவினுடைய பலன் என்ன என்பது மறந்து போய் உண்பதே முக்கியமாகி விடும்.  ருசியே பிரதானமாகி விடும்.  ருசி அறுத்தல் என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.’
தெருவில் பட்டாசு சத்தம் காதைப் பிளக்கிறது.  என் கவனம் புத்தகங்கள் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 9

 
 
 
வழக்கம்போல  ஒன்பதாவது கூட்டம் இது.  வெளி ரங்கராஜன் அவர்களைப் பேட்டி கண்டுள்ளேன்.  முன்பெல்லாம் நானும் வெளி ரங்கராஜனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டோம்.  எதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.  இப்போது முன்பு போல் முடிவதில்லை.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் சார்பாக அவரைப் பேட்டி கண்டுள்ளோம். இதைப் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  என் முயற்சிக்கு முழு ஆதரவு தருபவர் கிருபானந்தன்.  இதில் எதாவது குறைகள் தென்பட்டால் தெரிவிக்கவும்.  திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்.  சோனி காமெராவின் டிஜிட்டல் பயன்பாடை இவ்வளவு தாமதமாகத்தான் கண்டு பிடித்தேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 32

கண்ணன் – என் காதலன்   

 

சி சுப்பிரமணிய பாரதி 

ஆசை முகமறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் – அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் – இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?

நன்றி : பாரதி பாடல்கள் – ஆய்வுப் பதிப்பு – தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் – விலை ரூ.80 – தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு – இரண்டாம் பதிப்பு : 1989 


          

கூட்டத்திற்கு வராதவர்கள் பார்த்து ரசிக்கவும்

100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.
 பார்க்கவும்.  பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

நவீன விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழா

100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.பார்க்கவும். பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

1

2

3.

4.