கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்….

விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன். அது முதல் புத்தகமும் கூட. 500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன். அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள். இன்னும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப் புத்தகத்தை 10 ஆண்டுகளாக முயற்சி செய்து ஒருவாறு விற்றேன். பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன். விற்கிற இடத்தில் கொடுத்தப் புத்தகப் பிரதிகளை அவர்கள் விற்று பணம் கொடுப்பதில்லை. நானும் கண்டுகொள்வதில்லை.

அதன்பிறகு நான் கொண்டு வந்த பல கவிதைத் தொகுதிகளின் நிலை இன்னும் மோசம். எல்லோரும் கவிதைப் புத்தகங்களை வாங்காமல் சாட்டையால் அடிப்பதுபோல் அடித்தார்கள். நானும் திருந்த வேண்டுமே திருந்தவில்லை. இன்னும் இன்னும் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இப்போது ஒரு உண்மை தெரிந்து விட்டது. கவிதைப் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு கையளவு புத்தகங்களையே காட்டுங்கள் என்பதுதான் அந்த உண்மை.

நான் திரும்பவும் உமாபதி புத்தகத்தையும் நகுலனின் புத்தகத்தையும் அப்படித்தான் கொண்டு வந்துள்ளேன். விரல்களை சொடுக்கிற அளவு எட்டிவிட்டேன். தொகுப்பு கவிதை நூல்களையும் கொண்டு சேர்ப்பது சிரமமாக இருக்கிறது. ஆனால் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதியும், பெருந்தேவியின் கவிதைத் தொகுப்புகளும் என்னுடைய விருட்சம் ஸ்டாலில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையளவு கவிதைத் திட்டம் என்னளவில் உண்மை என்றுதான் நினைக்கிறேன்.

விளையாட்டு

தம்ளர் காப்பியில் ஓர் எறும்பு நீந்திச் செல்கிறது
கடவுளைப் போல் நான் சக்தியோடிருக்கிற
அபூர்வத் தருணம்
எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன்
உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத்
தூக்கித்தான் கும்பிடேன்

(பெருந்தேவியின் ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’)

ஆனந்தின் பவளமல்லிகை

ஆனந்த் என் நெடுநாளைய நண்பர். நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன். ‘ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,’ என்று கேட்பேன். உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும். பிரசுரிக்கும்படியாக சிறப்பாகவும் இருக்கும். ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் எல்லா விஷயங்களிலும் சுறுசுறுப்பானவர். அவருடைய நீண்ட கதைதான் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ என்ற நீண்ட கதை. அதை கையெழுத்துப் பிரதியாகவே எல்லோரிடமும் படிக்கக் கொடுத்திருக்கிறார். அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும். பிரசுரிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்துக்கொள்ள மாட்டார். ஒவ்வொருவரும் அந்த நீண்ட கதையைப் படிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும் கதைதான் அந்தக் கதை. விருட்சம் வெளியீடாக அவருடைய கதைகளை முழுவதும் தொகுத்துள்ளேன். முதலில் வேர் நுனிகள் என்ற பெயரில் இத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது பெயரை மாற்றி üபவளமல்லிகைý என்ற பெயரில் கொண்டு வந்துள்ளேன்.

110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.100தான். சிறுகதைகளும், குறுநாவல்களும் கொண்ட 6 கதைகள் அடங்கிய நூல் இது.

பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன். மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. விலை ரூ.50. தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் பல கவிதைத் தொகுப்புகள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. பெரிதாக விற்கவில்லை என்று கவலைப் பட மாட்டேன்.

பினா கவிதைத்தொகுப்பில் ஒன்றை கண்டுபிடித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளை சத்தமாக வாசித்தல். அப்படி வாசிக்கும்போது மனதில் பதியும்படி கவிதை வரிகள் நம்மை வசப்படுத்துகின்றன. மௌனமாக வாசிக்கும்போது கவிதை வரிகள் நம்மை விட்டு நழுவி விடுகின்றன. கவிதைகளை வாசிக்கும்போது அதிக இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும். வேசமாக ஒரு நாவலைப் படிப்பதுபோலவோ சிறுகதை வாசிப்பதுபோலவோ படிக்கக் கூடாது என்பது அடியேனின் கருத்து

அப்பாவைத் தேடி

1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள். கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன.

ஒரு கதை பத்திரிகையில் வர என்ன செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் ஒரு டைப்ரைட்டர் முன் அமர்ந்துகொண்டு தட்டச்சு செய்து கொண்டிருப்பார். ஒரு கதையை எழுதிவிட்டு பலமுறை படித்துத் திருத்திக்கொண்டிருப்பார். அது செய்வது அவசியம் என்று சொல்வார். 1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதியிருக்கிறார். அவருடைய கதைத் தொகுதியான அப்பாவைத் தேடி புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன். 25 கதைகள். 278 பக்கங்கள். விலை ரூ.250.
இத் தொகுப்பு நூலை வ சா நாகராஜன் வீட்டிற்குச் சென்று முதல் பிரதியை அவருடைய மனைவியிடம் கொடுத்தேன்.

இடம் பொருள் மனிதர்கள்

என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் üஇடம் பொருள் மனிதர்கள்.ý இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை. அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின் இந்தப் புத்தகம் தெரிகிறது. அவர் ஒரு நடிகர், நாடக இயக்குநர், நாடகம் எழுதுபவர். சிறுகதை எழுதுபவர். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு இவருடையது வந்துள்ளன. இதெல்லாம் மீறி நல்ல மனம் கொண்ட மனிதர். இந்தப் புத்தகத்தைக் கொண்டு வர எனக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்று. அவருடைய ஒவ்வொரு கட்டுரையும் ரசித்துப் படிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவும் செய்யலாம்.
இன்று காலையில்தான் மூர்த்தி தன்னுடைய புத்தகப் பிரதியை அவருடைய நண்பர் ஆர் கேயிடமும், அவர் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
156 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.

வழங்க வளரும் நேயங்கள்…

என் ஒன்றுவிட்ட சகோதரர் எழுதிய புத்தகம்தான் üவழங்க வளரும் நேயங்கள்,ý என்ற சிறுகதைத் தொகுதி. ஒரு நீண்ட கதையும் பத்து சிறுகதைகளும் கொண்ட புத்தகம் இது. கதையை வர்ணனை வார்த்தை ஜாலம் இல்லாமல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த மாதம் ஐந்தாம் தேதி என் மாமா கோபாலன் அவர்கள் (80 வயது) பெற்றுக் கொள்ள அதை வழங்குபவர் ஸ்ரீதர்-சாமா என்கிற புனைபெயரில் எழுதும் சுவாமிநாதன் அவர்கள். 162 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.120 மட்டுமே. இந்த ஆண்டு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரப்பட்ட நூல் இது.

விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்கள்

அசடு – நாவல் – காசியபன் – பக்கம் : 108 – விலை ரூ.60 – தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று காசியபனின் அசடு. அபூர்வமான மனிதர் என்ற வெங்கட் சாமிநாதன் காசியபனைப் பற்றி குறிப்பிடுகிறார்.

விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்

கடல் கடந்தும் – கட்டுரைத் தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் வெளியான ஆண்டு : 2006 – மொத்தப் பக்கங்கள் : 160 – வாழ்நாள் சாதனையாளராக இயல் விருது 2003ஆம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்குக் கிடைத்துள்ளது. – விலை : ரூ.100<

புத்தக அறிமுகம் 2

தமிழ்ப்பெரியார்கள் என்ற பெயரில் வ.ரா எழுதிய புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளேன். கிட்டத்தட்ட 12 பெரியார்களைப் பற்றி இப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி என்ற பெரியாரைப் பற்றி வ.ரா இப்படி எழுதுகிறார் :
“எல்லா ஜீவராசிகளும் ஒன்றுபோல இல்லாததுதான் சிருஷ்டியின் விசித்திரம். தோற்றத்திலும் குண அமைப்பியலும் மாறுபட்ட விசித்திரங்களினூடே, ஒருவகை ஒற்றுமைச் சரடு ஓடுவது சிருஷ்டியின் விசித்திரத்திலும் விசித்திரம். தர்க்க சாஸ்திரத்தைக் கொண்டு சிருஷ்டியின் விசித்திரத்தின் தன்மையை அளவு எடுக்க முடியாது; ஆழங் காண முடியாது. சத்தியமூர்த்தி ஒரு விசித்திர சிருஷ்டி.”
115 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60தான்.

புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை. ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தொகுதிதான் 2013ல் வெளிவந்த வினோதமான பறவை என்ற தொகுப்பு. 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது. 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ. 80.

மாடுகள்

வழியை மறித்துக்கொண்டு
நின்ற மாடுகளிடம்
கேட்டேன் :
போகட்டுமா என்று…
நீ நகரப் போகிறாயா
நாங்கள் நகர வேண்டுமா
என்றன அவைகள்
வால்களை ஆட்டியபடி