சூபியும் சுஜாதாவும் என்ற மலையாள திரைப்படம்

சூபியும் சுஜாதாவும் என்ற படத்தை ப்ரைம் வீடியோவில் பார்த்தேன். விட்டு விட்டுத்தான் பார்த்தேன். என்னால் மறக்க முடியாத மலையாளப்  படம்.  வாய் பேசமுடியாத ஒரு பெண்ணுடன் ஒரு சூஃபி சந்நியாசி காதலிப்பது போல் படம்.  உண்மையில் இருவரும் காதலிக்கிறார்கள்.  
கதை கேரளாவில் ஒரு கிராமத்தில் நடக்கிறது.  இந்தக் காதல்  ஈடேறாது என்று படம் ஆரம்பிக்கும்போதே தெரிந்தாலும், இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதை. 
சுஜாதா என்ற பாத்திரமேற்று நடித்த நடிகை அதித்ராவ்  மறக்க முடியாத கதை  பாத்திரமாக கதையுடன் ஒன்றி விடுகிறார்.  அவருடைய ரசிகர்கள் ரொம்ப நாட்களுக்கு இந்தப் படத்தை ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்.
அதித்ராவ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.   சூபியாக நடிக்கும் தேவ் மோஹனுக்கு இது முதல் படம். இந்தப் படத்தில் முக்கியமாக உரையாடல்களே இல்லை.  
இந்தப் படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் பார்த்தேன்.  இந்தப் படம் மெதுவாகப் போகிறது.  இந்தப் படத்தில் கதையே இல்லை என்றெல்லாம். இந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.

நான் ப்ரைம் வீடியோவில் பார்த்தாலும், விட்டு விட்டுத்தான் பார்த்தேன்.  அப்படிப் பார்த்தாலும் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் வரை இந்தப் படத்தைப் பற்றி நினைக்காமலில்லை . 

ஒரு கிராமத்துச் சூழலில் நடைபெறும் இந்தக் கதையில் எல்லாம் இயல்பாக இருப்பதுபோல் இருக்கிறது.  சூபிக்கும் சுஜாதாவிற்கும் ஏற்படும் காதல் பரவசத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.  அந்தக் காதல் நிறைவேறாது என்றாலும் வாய் பேச முடியாத நிகழும் இந்தக் காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.


சுஜாதா ஒரு வாய் பேச முடியாத ஒரு அழகான பெண்.  அவளுக்கு வாய்த்தான் பேசமுடியாதென்றாலும் காது நன்றாகக் கேட்கும்.  முஸ்லிம் குடும்பங்களிருக்கும் நடுவில் சுஜாதா குடும்பமும் வசிக்கிறது. 
இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியே அற்புதமாக அமைந்திருக்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஊரை விட்டுப் போன சூபி அந்த ஊருக்குத் திரும்பி வருகிறான்  உண்மையிலேயே அவன் சாவதற்குத்தான் அங்கு வருகிறான்.   பின் இந்தப் படம் பின்னோக்கிச் செல்கிறது. 

சுஜாதாவும் சூபியும் சந்திக்கும் காட்சிகளிலிருந்து  ஆரம்பமாகிறது.  ஒருவருக்கொருவர் பேசாமல் காட்டப்படும்

காதல் கதையைத் தத்ரூபமாகக் காட்சி படுத்திருக்கிறார்கள்.  
இசையும் நடனமும் இப்படத்தில் முக்கியமாகக் காட்டப் படுகின்றன.  ஆரம்பத்தில்  சூபி   காதல் அவள்  அப்பாவால் தடுக்கப்படுகிறது.  ஒரு கட்டத்தில் சூபியுடன் ஓடிப் போய்விடலாமென்று சுஜாதா நினைக்கிறாள்.  அதைத் தடுத்து விடுகிறார் அவள் அப்பா. 

ஏற்கனவே ராஜீவ் குடும்பத்தினருடன்  அவள்  திருமணம் நிச்சயமாகிறது. . 
சூபி அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறான்.  சுஜாதா அவள் அப்பா விருப்பப்படி ராஜீவ்வை திருமணம் கொள்கிறாள் துபாய்க்குச் சென்று விடுகிறாள். ராஜீவ்வை மணம் முடித்தாலும் அவள் சூபி நினைவாகவே இருக்கிறாள். 


பத்தாண்டுகளுக்கு முன் போன சூபி திரும்பவும் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருகிறான்.  வந்த இடத்தில் இறந்தும் விடுகிறான்.   துபாயில் இருக்கும் அவர்களுக்குச் செய்தித் தெரிகிறது.  அதைக் கேட்டவுடன் சுஜாதா கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.  இந்தச் சம்பவத்தை அற்புதமாகப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் நாரான புழா ஷான்வாஸ்.  
இதுதான் முதல் படம் ஒடிடி பிளாட்பார்ம் மூலம் காட்டப்படுகிறது.  மனைவியை அழைத்துக்கொண்டு சுஜாதாவின் கிராமத்திற்கு வருகிறான். 

சுஜாதா சூபி நினைவாகவே இருக்கிறாள்.  ஊரிலிருந்து வந்ததிலிருந்து  படபடப்பாக இருக்கிறாள்.  ராஜீவ்வும் பரபரப்பாக இருக்கிறான். 

அடுத்தாள்  அவன் ஊருக்குத் திரும்ப வேண்டும்.  ஒருநாள்தான் அவன் இங்கிருப்பதாகத் திட்டம்..  சவ அடக்கம் நடக்கும் இடத்திற்கு ஏர் போர்டிலிருந்து நேராக காரில் போகிறார்கள் அவனும் சுஜாதாவும்..

நிம்மதி இல்லாமல் இருக்கிறாள் சுஜாதா.  அவர்கள் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் செல்கிறார்கள்.  ஆனால் சுஜாதா காரிலேயே இருக்கிறாள்.  
அவர்கள் பெண்களை சவம் அடக்கம் செய்யுமிடத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.  அதனால் சுஜாதா காரிலேயே அமர்ந்து இருக்கிறாள்.  துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். அவள் கணவன் ராஜீவ் சவ அடக்கத்திற்குப் போகிறான்.  சவக்குழியில் ஒரு பிடி மண்ணத் தூவுகிறான்.

திரும்பவும் அவர்கள் சுஜாதா அப்பா அம்மா வசிக்கும் வீட்டிற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கோ இவர்களைப் பார்க்கும்போது திகைப்பு.  
அவர்கள் துபாயிலிருந்து புறப்படும் போது யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.  சுஜாதா துக்கம் தாங்காமலிருக்கிறாள்.  ராஜீவ் அடுத்த நாள் ஊர் திரும்ப வேண்டுமென்று இருக்கிறான்.  பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்ள நினைத்தபோது பாஸ்போர்ட் இல்லை என்று தெரியவருகிறது.  உடனே பதட்டமடைகிறான்.  எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.  தன் மனைவி சுஜாதாவைத் திட்டுகிறான்.  சுஜாதாவிற்கு வாய்த்தான் பேச முடியாது தவிர அவளுக்கு யார் பேசுவதும் கேட்கும்.

அவனுக்குச் சந்தேகம் வருகிறது.  பிணத்தை அடக்கம் செய்யும்போது சவக்குழியில் குனிந்து மண்ணைப் போடும்போது அவன் வைத்திருந்த பாஸ்போர்ட் கீழே விழுந்து விட்டிருக்குமா என்ற சந்தேகம் ராஜீவ் மனதில் எழுகிறது.  

புதைக்கும் இடத்திற்குப் போய் கல்லறையைத் தோண்டுகிறார்கள்.  அங்கே கிடைக்கவில்லை.  இரவு நேரத்தில் யாருக்கும்  தெரியாமல் பதட்டத்துடன் தோண்டுகிறார்கள்.  வீட்டிலேயே கீழே விழுந்து கிடந்த பாஸ்போர்டடை சுஜாதா கண்ணில் பட,  எடுத்துக்கொண்டு சவக்குழி இடத்திற்கு வருகிறாள்.

முதன் முதலாக  சுஜாதா சூபியைச் சந்திக்கும் பேருந்தில் சூபி ஒரு பச்சை நிற மாலையை பேருந்தில் விட்டுவிட்டுச் சென்று விடுவான்.  அவன் நினைவாக அதை எடுத்து வைத்துக்கொண்டிருப்பாள் சுஜாதா. இப்போது .அதை சவக்குழியில் போடுகிறாள். 

கூடவே அவன் நினைவையும் அழித்து விடுகிறாள். 

அவர்கள் துபாய் திரும்பும்போது ராஜீவ் அவளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.  அவர்களிடையே காதல் துளிர் விடுகிறது. 
கொஞ்சம்கூட அலுக்காமல் இந்தப் படத்தைப் பார்த்துரசித்தேன்   

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..


அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள்.  காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள்.
அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்?
ஜெகன் : நன்றாக உள்ளோம்.  ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம்.
மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் படித்து விட்டேன்.
ஜெகன் : நான் இன்னும் கொஞ்சம் பக்கங்கள் படிக்கப் பாக்கி இருக்கின்றன.
அழகியசிங்கர் : உங்களுக்கு என்ன தோன்றுகிறது அந்த நாவலைக் குறித்து 
மோகினி : பக்கங்கள் அதிகம்.  இன்னும் குறைந்த பக்கங்களில் அவர் எழுதியிருக்கலாம்.
ஜெகன் : ஒரு எழுத்தாளரை இத்தனைப் பக்கங்கள்தான் எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்தவோ சொல்லவோ முடியாது.
அழகியசிங்கர் : அவ்வளவு பக்கங்களை உடைய ஒரு நாவலை ஒரு வாசகர் வாசிக்க வேண்டும்.  இன்றைய வாசகர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களாக என்று தெரியாது.
மோகினி: அவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் இவர் நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாமஙூல்லை.
ஜெகன் : என் நண்பர் ஒருவர் தால்ஸ்தாயின் ‘வார் அன்ட் பீஸ்’  என்ற நாவலை ஒரு வாரத்தில் படித்து விட்டார். 
மோகினி : அதையே க.நா.சு இரண்டு மூன்று முறைகள் படித்ததாக சொல்லியிருக்கிறார்.
அழகியசிங்கர் : ராகவன் நாவலைப் படித்துக்கொண்டு வரும்போது இது தொடர்பாக எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாவல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று க.நா.சுவின் அவதூதர், இரண்டு : அசோகமித்திரனின் மானசரோவர், மூன்று ஹெர்மன் ஹெஸ் எழுதிய  ‘சித்தார்த்தா’.  இதைத் தவிர இன்னொரு புத்தகத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.  அது ‘த அக்டிவ் சைட் ஆப் இன்பினிடி’.  கார்லஸ் காஸ்டினடா எழுதிய புத்தகம். 
ஜெகன் : இந்த நாவலைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
அழகியசிங்கர் : இந்த நாவலின் கதையை இரண்டே வரிகளில் குறிப்பிடலாம்.  ஆனால் ராகவன்  எழுதிய 925 பக்கங்களையும் படிக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நால்வர் ஞான வழியைத் தேட ஒவ்வொருவரும் வீட்டிற்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறார்கள்.  நால்வரும் ஒவ்வொரு வழியைத் தேடி செல்கிறார்கள்..அம்மா மரணம்போது சந்திக்கிறார்கள்.  இதுதான் கதை.
மோகினி : இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
ஜெகன் : முதல் பையன் பெயர். விஜயகுமார்.  இரண்டாவது வினய் குமார்.  மூன்றாவது விமல் குமார்.  நான்காவது வினோத் குமார்.
அழகியசிங்கர் : கதை கடைசி வரை விமல் குமார் மூலமாகத்தான் நடைபெறுகிறது.  மடிகேரியில் தங்கியிருக்கும் விமல் குமார் ஒரு ஸ்தாபனமாகி விடுகிறான்.  அவனைச் சுற்றிலும் ஒருசில சீடர்கள்.  கேசவன் மாமா விமல் குமாரைப் பார்க்க வருகிறார்.  அவனுடைய அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஒரு முறை வந்து பார்க்க வேண்டுமென்று கூப்பிடுகிறார்.  
ஜெகன் : கேசவ மாமா அவன் அம்மா கேட்கச் சொன்னதைக்கேட்கிறார்.  “உண்மையைச் சொல்லு.  நீ கடவுளைப் பாத்தியா? அப்படி ஊர் உலகமெல்லாம் திரிஞ்சு என்னத்த கத்துண்டே? ஒன்ன பாத்ததும் இதத்தான் கேக்க சொன்ன உங்கம்மா.”
மோகினி : விமல் குமாருக்குச் சொகுசான வாழ்க்கை அமைந்து விடுகிறது. அந்த வாழ்க்கையை அவன் விரும்பவில்லை.  உதற விரும்புகிறான். ‘அகங்காரமே ஆடை.  அதைக் களைவதற்குப் பிக்ஷை எடுத்து உண்பதே சரி,’ என்கிறான்.  
அழகியசிங்கர் : இத்தனைப் பக்கங்களிலும் பளிச் பளிச்சென்று வரிகள்.  இந்த நாவலை அவ்வளவு சுலபமாக விவரிக்க முடியாது.  நான் பல நாட்களாக இதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மோகினி :  மூத்த அண்ணன் விஜயகுமார் முதல்முதலாக வீட்டைவிட்டுப் போவதை விமலிடம் தெரிவிக்கிறான்.   அவன் சொல்கிறான் : ‘ ‘வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா விமல்.  பாடம் மட்டும் படிச்சி மார்க் வாங்கி வீணாப் போயிடக்கூடாது.’
ஜெகன் :  வீட்டைவிட்டு முதல் அண்ணா போய்விடுவான் என்று விமலுக்குத் தெரிந்தாலும் யாரிடமும் அவன் சொல்லவில்லை.  அவன் சொல்லிக்கொள்ளாமல் போனது அந்தக் குடும்பத்தில் ஒரு அடி.  அவன் அப்பா கலங்கிப் போய்விட்டார்.  அம்மாவிற்கும் பெரிய அதிர்ச்சி. இந்த நாவல் சுழற்றி சுழற்றி நான்கு சகோதரர்களிடம் நடக்கிறது.  
மோகினி : இரண்டாவது அண்ணன் வினயும்  வீட்டை விட்டுப் போய்விடுகிறான்.  அவனை ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி வீட்டு வரவேற்பறையில் விமல் பார்க்கிறான். விமல் அவனைப் பார்க்கிறான்.    ‘காலம் அவன் முகத்தை ஒடுங்கவைத்திருந்தது.  கன்னங்கள் இரண்டு டொக்காகியிருந்தன.  பிதுங்கி விழுந்துவிடுவது போலக் கண்கள் திரண்டு வெளியே தெரிய, முகம் அடர்ந்த தாடியில் பாதி அதற்குள்ளாகவே வெளுத்திருந்தது.  அவன் தலை வாருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். வினய்யின் 45 வயதில் விமல் பார்க்கிறான் 
அழகியசிங்கர் :  இந்த நாவலைப் பற்றிய உரையாடலை அவ்வளவு சீக்கிரமாக முடித்து விட முடியாது.  இன்னும் பேசுவோம்.                                                                                                                                                                                   (தொடரும்)        

நீங்களும் படிக்கலாம் – 48

Colorless Tsukuru Tszaki and his years of Pilgrimage  – 

Haruki Murakami – Translated by Philip Gabriel 

அழகியசிங்கர்

நான் இங்கு வந்தபோது அமெரிக்கன் நூலகத்திற்குச் சென்று ஐந்து ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்.

இலக்கிய உலகில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஆரூகி முராகாமி.  அமெரிக்கன் நூலகத்தில் இவருடைய புத்தகங்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம்.  அவருடைய இரண்டு நாவல்களைப் படிக்க எடுத்து வந்தேன்.  அதில் ஒன்றைப் படித்தும் விட்டேன். முராகாமி புத்தகங்களுடன் இன்னொரு நோபல் பரிசுப் பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள் இரண்டையும் அதேபோல் படிக்க எடுத்து வந்தேன்.  முராகாமி புத்தகத்தைப் படிக்கிற வேகத்தில் இன்னொருவருடைய புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.  

முராகாமி நாவலில் காணப்படுகிற வேகம் மற்ற நாவல்களைப படிக்கும்போது ஏற்படவில்லை.  ஸ்டீவ் எரிக்ஷன் என்பவர் நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.  

“More than anyone, Haruki Murakami invented twenty-first-century fiction…He is the novelist of our mash-up epoch and the subversive who, by intent or not, lit the fuse to whatever ‘canon” of the previous century anybody still takes seriously…Murakami’s atomic sensibility characterises world literature.”

இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகிற எழுத்தாளராக முராகாமி இருக்கிறார்.  மேலே குறிப்பிடப்பட்ட இந்த நாவல் ஜப்பான் நாட்டில் வெளிவந்த முதல்  வாரத்தில்  மில்லியன் பிரதிகள் விற்றதாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் கடைகளில் நள்ளிரவில் இப்புத்தகத்தை வெளியீட்டாளர்களாம்.  வரிசையில் நின்று புத்தகத்தை வாங்கிக்கொண்டு போனார்களாம். ஆனால் நம் தமிழ்நாட்டில் வெளியாகும் நாவல் ஒன்றின் 100 பிரதிகள் விற்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது.

முதலில் இந் நாவலைப் பற்றி என்னால எதாவது சொல்ல முடியுமாவென்று பார்க்கிறேன்.  

கோயா என்ற ஊரில் வசித்து வந்த ஷøக்ரு டஸôகி, மேல் படிப்புக்காக டோக்கியா வந்து விடுகிறான். அவனுடனேயே படித்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் நகோயா என்ற ஊரிலேயே மேலும் படிக்கிறார்கள்.  இந்த ஐந்து நண்பர்களும் முக்கியமானவர்கள்.  

இந்த ஐந்து நண்பர்களையும் பொறாமை கண்கொண்டு மற்றவர்கள் பார்ப்பார்கள்.  எல்லா இடங்களுக்கும் இவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.  பல சமூக நலத் திட்டங்களில் பங்கு கொள்வார்கள்.  இவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் ஐவரும் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் வேறு வேறு பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள்.  விடுமுறை தினங்களில் ஐவரும் சேர்ந்து மலை ஏறுவார்கள்.  தேர்வு சமயத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஐவரும் ஒன்றாகக் கூடி படிப்பார்கள்.  அல்லது ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

டோக்கியாவிற்கு மேல்படிப்புக்குச் சென்றவுடன், ஷøக்ரு டஸôகியுடன் இந்த நால்வரும் சந்திப்பதையும் பேசுவதையும் திடீரென்று நிறுத்திக் கொண்டார்கள்.  ஏன்?  அதற்கு முன்பு வரை ஷøக்ரு டஸôகி டோக்கியாவில் படித்துக்கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்த ஊரான கோயாவிற்கு அடிக்கடி வருவான்.  அப்போதெல்லாம் நண்பர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பான்.

ஷøக்ரு டஸôகியை மற்ற நால்வர்களும் தவிர்த்ததுடன் அல்லாமல் அதற்கான காரணத்தையும் கூற விரும்பவில்லை என்பதோடு சந்திக்கவும் இல்லை.   ஷøக்ரு டஸôகியின் வாழ்க்கையில் இது ஒரு பெரும் அதிர்ச்சியாகப் படுகிறது.  அவன் தற்கொலை செய்துகொள்ளத் தயாராகிறான். தன் பெயருக்கு ஏற்ப தன் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று நினைக்கிறான்.  டோக்கியாவில் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு யாரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை.  அவன் படுகிற அவதியை நாவலின் முன்பகுதியில் முரகாமி எடுத்துக்கொண்டு போகிறார்.  நான் இங்கு வந்து இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.  முரகாமியின் நடை ஒரு வசீகரமான நடை.  வாசகனைப் பிடித்து இழுக்கும் நடை. டோக்கியாவில் உயர் கல்வி படிக்க வரும்போது அங்குப் படித்துக்கொண்டு வரும் மாணவன் ஹய்டாவைச் சந்திக்கிறான்.

ஷøக்ரு டஸôகிக்கு நான்கு நண்பர்கள் கைவிட்டபிறகு ஹய்டாதான் நண்பனாக இருக்கிறான்.  அதுவும் தற்காலிகமாகத்தான்.  

ஹய்டா நன்றாக சமையல் செய்பவன் நீச்சல் அடிப்பவன். ஒரு வித்தியாசமான நண்பனாக இருக்கிறான்.   அவன் அப்பாவின் ஏற்பட்ட மரணத்தைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறான். அவன் அப்பா ஒரு பியோனா வாசிப்பவரைச் சந்திக்கிறார்.  அவர் தன் மரணத்தைப் பற்றி முன்னதாகவே குறிப்பிடுகிறார். தனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மரணம் ஏற்படும் என்று.  ஹய்டாவின்  அப்பா அதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார். ஏனென்றால் அவர் நண்பர் உடல் நலத்துடன் நன்றாகக் காணப்படுகிறார்.  முன்னதாகவே மரணம் பற்றிய தகவல் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.    கதைக்குள் கதையாக அது போய்க்கொண்டிருக்கிறது.  

இந்த நாவல் ஆன்மிக உணர்வுக்குள் நம்மை ஹராகாமி இழுத்துக்கொண்டு வருகிறாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு பெயருடன் வர்ணத்தைத் தொடர்புகொண்டு எழுதி உள்ளார். ஷøக்ரு டஸôகி மட்டும் நிறமற்றவன். ஹய்டா எப்படி அறிமுகம் ஆகிறானோ அதேபோல் ஷøக்ரு டஸôகியை விட்டும் போய்விடுகிறான்.  திரும்பவும் தனிமையாகிறான்  ஷøக்ரு டஸôகி.

அவனுக்கு ரயில் தண்டவாளங்கள் தயாரிக்கிற இடத்தில் வேலை கிடைக்கிறது.  அவனுக்குப் பிடித்த வேலை.  

சாரா கிமோட்டோ  சுற்றுலாத் துறையில் பணிபுரிபவள்.  அதாவது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது அவளுடைய பணி.  ஷøக்ரு டஸôகியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறாள்.  சாரா ஷøக்ரு டஸôகியை விட இரண்டு வயது மூத்தவள்.  இந்த நட்புதான் அவனுக்கு ஆறுதல் தரக்கூடிய நட்பாக அவனுக்கு இருக்கிறது.   அவன் சாராவைச் சந்திக்கும் தருணத்தில் அவனுக்கு 35 வயதாகிவிடுகிறது.  சாராவிற்கு 37 வயது. அவனை விட்டு அவனுடைய 4 நண்பர்களும் ஏன் பிரிந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறாள். அவனை ஏன் அவர்கள் வெறுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர்களைச் சந்திக்கிறான். அவனுக்குத் தெரிந்து விடுகிறது.  இந்தப் பிரிவினைக்குக் காரணம்,  ஊழு என்கிற இன்னொரு பெண் நண்பர்தான் என்று.  அவளை யாரோ கற்பழித்துவிடுகிறார்கள்.  அந்தப் பழியை ஷøக்ரு டஸôகி மீது சுமத்தி விடுகிறாள்.  மற்ற 3 நண்பர்களும் அவள் சொன்னதை நம்பி ஷøக்ரு டஸôகியைச் சந்திக்காமலும்  பேசாமலும் இருந்து விடுகிறார்கள்.  இதைக் கேள்விப்பட்டபோது ஷøக்ரு டஸôகிக்கு சொல்ல முடியாத வருத்தம் ஏற்படுகிறது.

ஊழு அந்தப் பழியை ஷøக்ரு டஸôகியின் மீது சுமத்துவதோடல்லாமல் அவனால்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் சொல்லி எல்லோரையும் நம்ப வைக்கிறாள்.  அவளுடைய இன்னொரு பெண் தோழி ஷøக்ரு டஸôகியால் இது ஆகவில்லை என்று தெரிந்தும், ஊழு சொல்லும் பொய்யிற்கு ஆதரவும் தருகிறாள்.  இறுதியில் ஊழு பொறாமைப்படும்படியான அழகியாக இருந்தாலும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறி கொல்லவும்படுகிறாள். ஊழுவைப்பற்றி முழுத் தகவலையும் எரி என்கிற அவர்களுடைய குழுவில் உள்ள இன்னொரு பெண்ணால்தான் தெரியவருகிறது.

இதையெல்லாம் தெரிந்த பிறகு ஷøக்ரு டஸôகி தனிமைப்படுத்தப்படுகிறான்.  திரும்பவும் டோக்கியா வந்து தன் வாழ்க்கைத் துணையாக சாராவாவது கிடைப்பாளா என்று எதிர்ப்பார்க்கிறான்.  அவனுக்கு அவளும் கிடைக்கவில்லை.  அவன் வாழ்க்கை வெறுமையாகப் போவதுபோல் கதை முடிகிறது. 

இந்த நாவலில் அப்பட்டமாக செக்ûஸ விவரித்திருப்பார். அதைப் படித்துக்கொண்டிருந்தபோது சாருநிவேதிதாவின் ராசலீலா என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது.    ஆனால் முராகாமி இன்னும் வெளிப்படையாக அப்பட்டமாக விவரித்திருக்கிறார். மேலும் இந்த நாவலில் இசையைப் பற்றியும், விதம்விதமான கார்களைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுகின்றன. அதைத் தவிர ஆன்மிகம், அமானுஷ்யத் தன்மைகள், கனவுகள் என்று விரிவாகச்  சொல்லிக்கொண்டு போகிறது.   நான் இந்த நாவலை ஒருமுறைதான் படித்தேன்.  ஆனால் எப்போதுமே இதில் எதாவது ஒரு பகுதியைப் படித்துக்கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது.  இது ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாவல்.  ஜப்பான் மொழியில் இது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

துளி : 42 – நான்கு மதிப்பெண்களுக்கு மேல்..

அழகியசிங்கர்

அமெரிக்கா போகிறேன் என்று எழுத்தாளர் கந்தசாமியிடம் சொன்னபோது, ‘நிறையா பொழுது கிடைக்கும்யா புத்தகங்கள் படிக்கலாம், எழுதலாம்,’ என்றார்.  அவர் ஒவ்வொரு முறை அயல்நாடு செல்லும்போது ஒரு புத்தகம் எழுதாமல் வர மாட்டார்.  அவர் சொன்னதில் எழுதுவதில் முன்னே பின்னே இருந்தாலும், புத்தகங்களைப் படிக்கிறேன்.  இதே சென்னையில் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டேன்.  

அதேபோல் அதிகமாக தமிழ் சினிமாக்களைப் பார்க்கிறேன்.  பொதுவாக சென்னையில் இருக்கும்போது யாராவது சொன்னால்மட்டும் தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பேன்.  தியேட்டரில் படம் பார்ப்பது அவதியாக இருக்கும். இங்கு  நெட்டில் சுலபமாக (பணம் கட்டியிருப்பதால் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்) படங்களைப் பார்க்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் இருக்க மாட்டேன்.  

இன்தூசம் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களில் நான்கு மதிப்பெண்கள்  மேல் வாங்கும் படங்கள் எல்லாம், எல்லாவிதங்களில் பார்க்க சிறப்பாக இருக்கிறது.  ஐந்து கட்டங்களாகப் பிரித்து மதிப்பெண்கள் தருகிறார்கள். 1. நடிப்பு 2. சிரிப்பு 3. காதல் 4. கதை 5. படத்தின் உருவாக்கம் என்று.

நான்கு மதிப்பெண்கள் வாங்கும் படங்கள் மட்டுமல்ல 3லிருந்து 4க்குள் வாங்கும் படங்களும் சிறப்பாக உள்ளன.  நான் முதலில் புத்தகங்கள் படிப்பதில் தீவிரமாக இருந்தவன், சினிமா பார்ப்பதில் தீவிரமாக மாறிவிட்டேன். தினமும் ஒரு படமாவது பார்த்துவிடுவேன்.  

முழுவதும் தமிழ் சினிமாப்படங்கள்தான் பார்க்கிறேன். பார்க்கப் பார்க்க எதாவது தோன்றினால் எழுதலாம் என்று  தோன்றியது.  பாலா இயக்கிய நாச்சியார் என்ற படத்திற்கு 4 மதிப்பெண்கள் மேல் குறிப்பிட்டிருந்தார்கள்.  எனக்குப் பொதுவாக பாலா படங்களைப் பார்ப்பதற்குத் தயக்கம் ஏற்பட்டு விடும்.  ஆனால் 4 மதிப்பெண்களுக்கு மேல் என்பதால் நாச்சியார் படத்தைப் பார்த்தேன்.  பாலா இயக்கிய இப்படத்தின் மீது அளவுகடந்த மதிப்பு கூடி விட்டது.  

அதேபோல் யூ டர்ன் என்ற படம் பார்த்தேன்.  என்னடா இருக்கப்போகிறது இந்தப் படத்தில் என்றுதான் பார்த்தேன்.  படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார்களே என்று தோன்றியது.  ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது.  ஆனால் பல புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.  அவர்கள் பெயர்கள்  அவ்வளவாய் தெரியவில்லை.

இப் படங்கள் எல்லாவற்றையும் சப்டைட்டிலுடன் காட்டுகிறார்கள். உலகம் முழுவதும் எல்லா மொழிபேசுபவர்களும் இப்படங்களைப் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது.  தமிழ் படங்களைப் பார்ப்பதுபோல் மற்ற மொழிப்படங்களையும் பார்க்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் தமிழிலிலேயே அதிகமாகப் படங்கள் பார்க்க வேண்டியிருப்பதால், மற்ற மொழிப் படங்களை முயற்சி செய்யவில்லை.

சென்னையில் உலகத் திரைப்பட விழாக்கள் நடக்கும்போது கட்டாயம் பல படங்களைப் பார்த்துவிடுவேன்.  இந்த ஆண்டு அவற்றைப் பார்த்தபோது  கொஞ்சம் வெறுப்புதான் தோன்றியது.  ஆனால் இப்போது பார்க்கும் தமிழ் படங்கள் மீது எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை.  ஒரு படம் பார்த்தவுடன் இன்னொரு படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.  

மம்மூட்டி நடித்த பேரன்பு

அழகியசிங்கர்

இந்தப படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது படத்தில் என்ன பெரிதாகச் சொல்லமுடியப்போகிறது இயக்குநர் ராமால் என்ற எண்ணம் ஏற்பாடாமல் இல்லை. ஆனால் படம் பார்த்தப்பின்தான் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சாதனா மீது அளவு கடந்த பச்சாதாப உணர்வு ஏற்படுகிறது.  அப்படி ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை.  அந்தப் பெண்ணுடன் போராடும் அப்பாவாக நடிக்கும் மம்மூட்டியும் நம் கண்களை விட்டு அகலவில்லை. 

ஆனால் இதையெல்லாம் கொஞ்சங்கூட போரடிக்காமல் படமாக எடுத்துக்கொண்டு போகிறார் ராம்.

இந்த முடக்குவாதப் பெண்ணைப் பார்த்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணின் அம்மா வேறு ஒருவருடன் வாழ ஓடிப்போய் விடுகிறாள்.

அவளுடைய செயல் அவள் கணவன் அமுதவன் துபாயிலிருந்து வருவதற்குக் காத்துக்கொண்டிருநததுபோல் இருந்தது.   அமுதவனுக்கு கூட இருந்தவர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை.  இந்தப் பெண்ணை எப்படியாவது தொலைத்துவிடு என்பதுபோல் அவன் அம்மாவே சொல்கிறாள்.  

குடியிருக்கும் வீட்டிலும் அவனால் இருக்க முடியவில்லை.  அதனால் தனியாக ஒரு மலையடிவாரத்தில் உள்ள வீட்டை பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.  யாரும் மனிதர்கள் இல்லாத இடமாகவும், குருவிகள் அழியாத இடமாக அவன் வசிக்குமிடம் இருக்கிறது.  அங்கும் அவனுக்குச் சோதனை.  வெள்ளைக்காரியிடமிருந்து பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை அவனிடமிருந்து அபகரித்துக்கொள்ள முயற்சி நடக்கிறது.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டை விற்க மறுக்கிறான் அமுதவன்.

கதை முழுவதும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்துக்கொள்வதுதான் இந்தக் கதை.   இதை ஒரு கதைச் சொல்லியின் பாணியில் படத்தை இயக்கி உள்ளார் ராம்.  அத்தியாயம் அத்தியாயமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார். 

அந்தத் தனிமையான இடத்திற்கு உதவி செய்ய வரும் ஒரு பெண்மணி ஒருநாள் மட்டும் உதவி செய்ய வந்துவிட்டுப் போய்விடுகிறாள். அமுதவன் தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறேன்.  

அப்போதுதான் தன்னை விஜயலட்சுமி என்று அறிமுகம் செய்துகொண்டு ஒரு பெண் வருகிறாள்.  சாப்பாட்டுக்கு வழியில்லை அங்கயே இருக்கிறேன்.  எந்த வேலையும் செய்கிறேன் என்கிறாள்.   அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவள்.  அவனை ஏமாற்ற வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளுடன் ஏற்பட்ட காதலால் அமுதவன் அவளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.  இதெல்லாம் ஒரு நாடகம் என்பதும் அவனிடமிருந்து அவன் இடத்தை அபகரிக்கும் திட்டம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.  

அமுதவன் அந்த இடத்தை அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும்போது, விஜயலட்சுமியும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட கணவனும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதைக் கேட்கும்படி சொல்கிறார்கள்.  அந்த இடத்தில் அமுதவன் சொல்வதைக் கேட்கும்போது படம் பார்ப்பவர்கள் மனம் நெகிழ வைக்கும்.  கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு இந்த இயற்கைதான் சொல்லிக் கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சொல்கிறான்.  இப்படி வசனங்களை அங்கங்கே தெறிக்க விடுகிறார் ராம்.  பல நெகிழ்ச்சியான காட்சிகளை மிகவும் நுணுக்கமாக எடுத்துக்கொண்டு போகிறார்.

தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தொடர்ந்து அமுதவன் படும்பாடுதான் இந்தக் கதை.  சென்னை நகரத்தில் அவர்கள் ஓட்டல் அறைகளில் தங்குகிறாரகள்.  தன் பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டு அமுதவன் கார் ஓட்டச் செல்கிறான்.  அந்தப் பெண் ஜன்னல் வழியாக அவள் அப்பா செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஏக்கத்துடன்.  இன்னொரு இடத்தில் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் தெரிகிறது.  பள்ளிக்கூட யூனிபாரம் மீது அவள் கவனம் செல்லுகிறது.  அதுமாதிரி ஒரு யூனிபாரம் வாங்கிக் கொடுக்கிறார் அப்பா. குவா

தனியாக ஓட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்வது அமுதவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.  அதனால் தன் பெண்ணை காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறான்.  அங்கும் அந்தப் பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை.  அத்துடன் இல்லாமல் அடித்துக் கொடுமைப் படுத்துகிறார்கள்.  அமுதவன் தனியாக ஒரு வீடு பார்த்து அழைத்துப் போகிறான்.   ஆனால் அவன் இல்லாத நேரத்தில் பெண்ணைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.  இந்தத் தருணத்தில்தான் அறவாளி மீரா என்பவருடன் அவனுக்கு அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை உதவிக்குக் கூப்பிட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அமுதவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான்.  பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்று.  கடற்கரைக்குப் பெண்ணை அழைத்துச் செல்கிறான். யூனிபார்முடன் பெண்ணும் வருகிறாள்.   தற்கொலைக்கு கடலை நோக்கிப் போகப் போக பெண்ணிற்குப் புரிந்து பெரிதாக சத்தம் போடுகிறாள்.  அந்தத் தருணத்தில்தான் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மீரா வருகிறாள்.

தன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள மீராவைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத் தொடருகிறான் அமுதவன்.

உலகச் சினிமா அளவிற்கு தமிழ் சினிமாவும் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு பேரன்பு என்ற படம் ஒரு உதாரணம்.  அதை இயக்கிய ராமை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இதேபோல் பல தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டுமென்று தோன்றுகிறது.

ஜானகிராமனின் ‘குழந்தைக்கு சுரம்’ என்ற கதை

அழகியசிங்கர்

அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் ‘குழந்தைக்கு சுரம்’ என்ற கதை. 

எழுத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை எழுத்தாளனின் கதை என்று இதைக் குறிப்பிடலாம்.  அந்த எழுத்தாளனின் குழந்தை சுரம் வந்து அவதிப்படுகிறது.  ஜானகிராமன் கதையை இப்படி ஆரம்பிக்கிறார்:

‘மனைவி சொன்னதைக் கேட்டார்.  குழந்தையைப் பார்த்தார். மணிபர்ûஸப் பார்த்தார்.  புத்தகம்போடும் பஞ்சாபகேசனை நினைத்தார்.  வாத்தியார் நெஞ்சு புகைத்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது.’

இந்த ஒரு பாராவிலேயே கதையின் முழு வடிவத்தைக் கொண்டு வந்து விடுகிறார்.

குழந்தைக்கு சுரம்.  டாக்டரைப் பார்க்க வேண்டும்.  கையில் பணம் இல்லை. அந்தத் தருணத்தில் கடவுளைத் திட்டுகிறார்.  ஏன் இது மாதிரி வியாதியை குழந்தைக்குக் கொடுத்தாய் என்று. 

பஞ்சபகேசன் இவருடைய புத்தகங்களை அச்சிட்டு விற்பவர்.  அவனை பாவி என்று குறிப்பிடுகிறாள்  மனைவி.  அவனிடம் போய் நின்றாலும் பணம் கிடைக்காது என்பது இவருடைய எண்ணம்.  உண்மைதான்.   பள்ளிக்கூட மாணவர்களுக்கு எழுதிக்கொடுக்கும் புத்தகங்கள் எல்லாம் சின்னராஜா என்ற பெயரில் வெளிவருகிறது.  சரவணா வாத்தியார் என்கிற இவர் எழுதிக் கொடுக்கிற புத்தகங்கள்தான்.  4 வருடங்களாக இது தொடர்ந்து நடந்து வருகிறது.  ஒரு புத்தகத்திற்கு ரூ.50 விதம் 20 புத்தகங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.400 வரை தர வேண்டும்.

400 ரூபாய் தர வேண்டும் என்கிறார் சரவணன் வாத்தியார். பஞ்சபகேசனோ 300 ரூபாய்தான் தர வேண்டும் என்கிறான்.  இரண்டு பேருக்கும் வாக்குவாதம்.  இப்போது பணம் இல்லை கொடுத்து அனுப்புகிறேன் என்கிறான்.  இருவருக்கும் பேச்சு தடித்து விடுகிறது.  இந்தப் பேச்சில் கடுப்பாகி விடுகிறார் சரவண வாத்தியார்.  பின் ஒரு கடுதாசியைக் கேட்டு வாங்கி எல்லாப் புத்தகங்களுக்கும் உரிய தொகையான ரூ.1000 வாங்கிக் கொண்டதாக எழுதி பஞ்சுவிடம் கொடுக்கிறார்.  இதைப் பார்த்துத் திகைக்கிறார் பஞ்சு. 

இனிமேல் இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவேனா என்று முறைத்துவிட்டு வந்து விட்டார் சரவணா வாத்தியார்.  

இப்போது குழந்தைக்கு சுரம்.  பாவி பஞ்சாபகேசனைப் பார்த்து வரச் சொல்கிறாள் மனைவி.  அவனிடம் அச்சடிக்க இன்னொரு புத்தகம் எழுதிக்கொடுத்திருக்கிறார் சரவண வாத்தியார்.  அதை வாங்கி வருவதற்குப் போய் கொடுக்க வேண்டிய பணத்தையும் வாங்கி வரச்சொல்கிறாள்.  குழந்தைக்குச் சுரம்.  வேற வழியில்லை மனைவியின் தொந்தரவால் பஞ்சுவை  திரும்பவும் பார்க்கப் போகிறார்.  கையில் 1 ருபாய் 40 காசுக்கள் எடுத்துக்கொண்டு போகிறார்.  பஸ் டிக்கட் பத்து பைசாக்கு வாங்கிக்கொண்டு போகிறார்.

இக் கதையைப் படிக்கும்போது பணம் கிடைக்குமா குழந்தையின் சுரம் சரியாகி விடுமா என்ற எண்ணமெல்லாம் ஏற்படுகிறது.  ஆனால் ஜானகிராமன் வேறு விதமாகக் கதையைத் திருப்புகிறார்.  இதுதான் அவருடைய கற்பனைத் திறன்.  ஆற்றல். 

சரவண வாத்தியார் பஞ்சபகேசன் வீட்டிற்குப் போனபோது, பஞ்சபகேசன் மனைவி உடல் நிலை சரியில்லாமல் படுத்துக கிடக்கிறாள்.  அன்று மாலை 5 மணியிலிருந்து ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.  பிரஞ்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கிறாள்.  தத்ரூபமாக இந்த நிகழ்ச்சியை ஜானகிராமன் அசால்டாக விவரித்துக்கொண்டு போகிறார். ஒருவர் கட்டாயமாக இந்தக் கதையைப் படிக்க வேண்டும்.

சரவணா வாத்தியார் பஞ்சு மனைவி உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடப்பதைப் பார்த்து பதட்டம் அடைகிறார். 

ஒரு டாக்டரை அழைத்து வர ஓட்டமாய் ஓடுகிறார்.  எப்படியோ ஒரு டாக்டரை அழைத்து வந்து பஞ்சுவின் மனைவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்கிறார்கள்.  சரவணா வாத்தியார் இதற்கு உதவியாக இருக்கிறார்.  இந்தத் தருணத்தில் தன் குழந்தை சுரத்தில் அவதிப்படுவது மறந்து விடுகிறது அவருக்கு.  

எல்லாம் முடிந்து அவர் தன் வீட்டுக்கு நடந்தே போகிறார். 

ஜானகிராமன் கடைசியாக இப்படி எழுதுகிறார் : ‘நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக் கொண்டிருந்தன.’

இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன், என்னடா இது இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.

நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள் – 2

அக்பர் சாஸ்திரி என்ற சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1963ல் ஐந்திணை பதிப்பகம் மூலம் வந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. ஆறாம் பதிப்பு 1990ல் வந்துள்ளது.  அதன்பின் எத்தனைப் பதிப்புகள் வந்துள்ளன என்பது தெரியாது.

11 கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் கதை அக்பர் சாஸ்திரி.  அவநம்பிக்கையுடன் முன்னுரை எழுதி இருந்தாலும் ஜானகிராமன் எழுத்துக்கு வாசகரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மறுப்பதிற்கில்லை.  இந்தப் புத்தகத்தின் 6வது பதிப்பைததான் வாங்கியிருக்கிறேன்.  புததகம் வாங்கிய ஆண்டு 1990.   தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் பார்க்கலாம்.  பொதுவாக கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.  ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஒரே மையம் இல்லை. அதாவது ஒன்றின் தொடர்ச்சி இன்னொன்றில் இல்லை.

முதல் கதை அக்பர் சாஸ்திரி என்றால் இரண்டாவது கதை

‘துணை’  இப்படி விதம் விதமாய் கதைகள் அமைத்ததால் வாசகர்கள் கதைகளை வாசிக்கும்போது போரடிக்காது.  இதோ üதுணைý கதையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்

ஐந்து தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தில் எல்லோரும் பென்சன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் பென்சன் மாஸ்டர் டே க்கு அந்த வீட்டிலுள்ள வயதானவர்கள் கையெழுத்துப் போட போவார்கள். வீட்டில் உள்ள புதல்வர் அவர்களை அழைத்துப்போவார். அவரும் பென்சன்காரர்.  தாத்தா கொள்ளுத்தாத்தா என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு  போவார்.  ஆனால் இந்த முறை காசிக்குச் சென்று விட்டதால், அவரால் வரமுடியாது. வயதானவர்களை கஜானாவிற்கு அழைத்துக்கொண்டு போகப் பக்கத்து வீட்டில் இருக்கும் சப்ரெஜிஸ்டார் பையன் கிருஷ்ணமூர்த்தி வருகிறான். உண்மையில் நான் இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும்போது வயதானவர்களுக்கு எதாவது நடக்கப் போகிறது என்று நினைத்துக்கொண்டு படித்தேன்.   ஆனால் கதை முடிவு வேறு மாதிரியாக இருந்தது.  

மாட்டு வண்டியில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் கிழவர்களை அழைத்துக்கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு அடி. எலும்பு முறிவு. இதுதான் இந்தக் கதையின் வேடிக்கை.  கிழவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. 

இன்னொரு கதை.  ‘மரமும் செடியும்’ என்ற பெயர்.  மூங்கில்காரர், ஈயக்காரர் பற்றிய கதை.  இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதில்லை.  பேசினாலும் அவ்வளவாய் நெருக்கமாகப் பேசுவதில்லை.  கீழைச்சேத்தி நாட்டாண்மைக்காரரால் மூங்கில் காரரும் ஈயக்காரரும் பிரசிடென்ட் தேர்தலில் நிற்கிறார்கள்.  வந்தது வினை.  மூங்கில் காரரின் தேர்தல் சின்னமாக மரம் கிடைக்கிறது.  ஈயக்காரரின் சின்னமாக செடி.   மரத்திற்கும் செடிக்கும் போட்டி.  இந்தத் தேர்தலால் பாதிக்கப்படுவது மூங்கில்காரர்.  அவர் தேர்தலில் வெற்றிபெற அதிகமாகப் பணம் செலவு செய்கிறார்.  ஆனால் எப்படியோ ஈயக்காரர்தான் வெற்றி அடைகிறார். 

தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்கிறார் மூங்கில் காரரைத் தூண்டியவர்.  மரமும் செடிக்கும் ஓட்டுச் சீட்டில் பார்க்க வித்தியாசமாகத் தெரியாது.   அதனால் மூங்கில்காரரின் மரச் சின்னத்திற்குப் பதிலாக ஈயக் காரருக்கு ஓட்டு விழுந்து  விடுகிறது.  குமைந்து குமைந்து போகிறார் மூங்கில்காரர்.  மூங்கில்காரர் கீழைச் சேத்தியில் எலுமிச்சைக் கொல்லை ஒன்று வைத்திருக்கிறார்.  மிகவும் பிரயாசைபட்டு 400 எலுமிச்சைக் கன்றுகள் தோண்டி இறைத்தும்,  பலன் மூக்கழுகை.  எலுமிச்சை வெம்பி விழுந்து கொண்டிருந்தது.  அந்தக்  கொல்லையை ஈயக்காரர்  மகன் வாங்கிக்கொண்டான்.  அவனுக்கு 3  மடங்கு அதிகமாக விலைக்கும் விற்று விட்டார் மூங்கில் காரர். அவர் ஏமாற்றி விற்றதாகத்தான் நினைக்கிறார்.  ஆனால் வேறு எதோ  நடக்கிறது.  இதுதான் கதை. 

“நல்லகாலம் எலெக்ஷன் வந்தது. கொலலையும் கிடைத்தது,” என்று சந்தோஷப்படுகிறான் ஈயக்காரர் பையன். அதனால்தான் வசதி கிடைக்கிறது.  மூங்கில்காரர் ஏமாந்து கொல்லையை விற்று விடுகிறார்.  அதுவும் 3 மடங்கு விலை ஏற்றி விற்றதாக அவருக்கு எண்ணம்.  எலெக்ஷன் ஒரு தில்லுமுல்லு என்று புலப்படுத்துகிறார் ஜானகிராமன். 

இன்னொரு கதையான ‘காட்டு வாசம்’ இப்படிச் செல்கிறது.  சுந்தரரரஜன் என்பவன் அவன் நண்பன் ராமசாமியைப் பார்க்க கிராமத்திற்கு வருகிறான்.  ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு.  இருவரும் பேசுகிற பேச்சுதான் இந்தக் கதை.  சுந்தரராஜன் ஒரே பையன்.  சாகும்வரை அவன் அப்பா செய்த கொடுமையைப் பற்றி சொல்கிறான்.  ராமசாமி அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று புகழ்கிறான்.  என் அப்பாவும் கோபக்காரர் வெளியே பார்க்கத்தான் சாதுவாக இருப்பார் என்கிறான் ராமசாமி.  ராமசாமி அப்பாவுக்கு அவனைத் தவிர ஒரு அண்ணன் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.  எல்லார் வீட்டிற்கும் அவன் அப்பாவும் அம்மாவும் சென்று விடுவார்கள்.  இந்த முறை கோபத்தில் ஒன்றும சொல்லாமல் இன்னொருவர் வீட்டிற்குப் போய்விடுகிறார். 

இந்த இடத்திலிருந்து கதை வேறு பாதைக்குச் சென்று விடுகிறது.   ஆசிரமம் கட்டிக்கொண்டு தனியாக வசிக்கும் சக்கரபாணியிடம் போய்விடுகிறது கதை.  பரதேசி கோலம் போட்டுக்கொண்டு வானப்பிரஸ்தம் எடுத்துக்கொண்டு மனைவியுடன் வந்து விடுகிறார் சக்கரபாணி.  அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும். எல்லார் மீதும் உள்ள கோபத்தால்.  இப்படித் தனியாக வந்தும் அவரால் காப்பி சாப்பிடுவதையும் புகையிலை போடுவதையும் விட்டுவிட முடியவிலலை. 

உள்ளூரிலே இப்படி ஒரு ஆள் இருக்கும்போது அவருடன் பழகாமல் நையாண்டி செய்கிறாயே என்று நண்பனை கிண்டல் செய்கிறான் சுந்தரராஜன்.

பேச்சுவாக்கில் கதை சொல்வது போல் நகர்ந்தாலும் பிள்ளைகளுடன் பெற்றவர்கள் சேர்ந்து வாழ முடியவில்லை என்பதைச் சொல்வதுபோல் உள்ளது கதை.

                                                                               (இன்னும் வரும்) 

நீங்களும் படிக்கலாம் – 49

அழகியசிங்கர்

படிக்க வேண்டிய கதைகள்

சென்னையிலிருந்து அமெரிக்கா வரும்போது 4 தமிழ்ப் புத்தகங்களும் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன்.  

கிட்டத்தட்ட 30 புத்தகங்களுக்கு மேல் எடுத்துவர தீர்மானித்திருந்தேன்.  இங்கே பொழுது போவது கடினமாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் கடைசி நிமிடத்தில் என் மனைவியின் அதைரியத்தால் புத்தகங்களை எடுத்துவரும் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.  முக்கியமாக ஜோல்னாப் பையையும் எடுத்து வரவில்லை.

ஆனால் அதற்குப்பதில் 2011ல் வாங்கிய கின்டல்  இருந்தது.  இதில் ஏகப்பட்ட புத்தகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.  அதைப் படிக்கலாம் என்று  தோன்றியது. மேலும் பிடிஎப் ஆக சில புத்தகங்களை டௌன் லோட் செய்து லாப்டாப்பில். 

ஆனால் இங்கே வந்தபிறகு அமெரிக்கன் நூலகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வரலாமென்று தெரிந்தத.  அதிலிருந்து 10 புத்தகங்களை எடுத்து வந்திருப்பேன்.  

புத்தகம் படிப்பதும் அது குறித்து எதாவது எழுத முடியுமா என்று பார்ப்பதும்தான் என் பொழுதுபோக்கு.  அந்த வகையில் தி ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி என்ற இப்புத்தகத்தைப் பற்றி எழுதலாமென்று தோன்றியது.

இந்தச் சிறுகதைத் தொகுதியை ஐந்திணைப் பதிப்பகத்திலிருந்து ரூ.13.50 க்கு 1990 ஆண்டில் வாங்கியிருக்கிறேன் என்று நினைககிறேன் பொதுவாக ஒரு புத்தகத்தை வாங்குவதாக இருந்தால் அந்தப் புத்தகத்தில் எந்தத் தேதியில் எந்த ஆண்டு வாங்கியிருக்கிறேன் என்று குறித்து வைத்திருப்பேன்.   ஏனோ இந்தப் புத்தகத்தில் அதைக் குறித்து வைக்கவில்லை.  நம் வாழ்க்கை கடந்து போகிறது.  நம் கையில் உள்ள இந்தப் புத்தகமும் கடந்து போய்விடும்

தி ஜானகிராமன் கதைத் தொகுதியான அக்பர் சாஸ்திரியில் 11 கதைகள் உள்ளன.  

இங்கு தி ஜானகிராமன் தொகுதியில் எழுதி உள்ள முன்னுரையைக் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.  

“இத் தொகுதியில் வெளியாகியுள்ள கதைகள் வெவ்வேறு ஆண்டுகளில் மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன், கல்கி, ஆனந்தவிகடன், உமா, காதல் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை.    

இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான்.  சிறுகதைகள் என்றுகூடச் சொல்லவில்லை.

அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள் உலக இலக்கியத்திலேயே பத்துப் பேருக்குள் இருந்தால் அதிகம்.  எனவே சாட்சிகள், அல்லது வேறு எதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்., ” என்கிறார் தி ஜானகிராமன்.

ஏன் இப்படி எழுதி உள்ளார் ஜானகிராமன் என்பது எனக்குப் புரியவில்லை.  இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட் 1963.  அப்போது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தாம் எழுதுவது சிறுகதை இல்லை என்ற குழப்பம் இருந்திருக்கும்.  ஜானகிராமனுக்கும் இது மாதிரியான குழப்பம் இருந்திருக்கிறது.  இந்த 11 கதைகளை ஒரு முறை இல்லை 2 முறை 3 முறைகள் படித்துக்கொண்டே இருக்கலாம்.  ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாய் கட்டமைத்து உள்ளார். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக எடுத்துப் பேச வேண்டும்.

முதல் கதையான அக்பர் சாஸ்திரி எனற கதையை எடுத்துக்கொள்வோம். 

அந்தக் கதையை இரண்டு மூன்று முறைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.  அப்படி ஒரு கதையை எழுதுவதற்குப் பெரிய திறமை வேண்டும்.  அது ஜானகிராமன் போன்ற மேதையால்தான் முடியும்.  

கதை நடக்குமிடம்  ஓடும் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்டில்.  அதில் கூடியிருக்கிற மனிதர்களிடையே நடக்கிற உரையாடல்தான் இக் கதை.  கதையில் தென்படுகிற கோவிந்த சாஸ்திரி ஒரு அலட்டலான நபராகக் காட்சிப்படுத்தப் படுகிறார்.  அவரைப் பற்றி தி ஜானகிராமன் இப்படி விவரிக்கிறார்.  

‘சாட்டை மாதிரி முறுக்கு  ஏறிய உடம்பு.  நேரான உடம்பு. உட்கார்ந்திருந்தபோது கூட வளையா நேர் முதுகு.’  இப்படிப் போகிறது இந்தக் கதை. எக்ûஸஸ் இலாக்காவில் சூப்பிரண்டாக இருக்கும்  நபருக்கு இரண்டு பிள்ளைகள்.  நோயாளி மனைவி.   கோவிந்த சாஸதிரி என்று அறியப்படுகிற அக்பர் சாஸ்திரி எதிர் சீடடில இருக்கிறார்.  அக்பர் சாஸ்திரக்குப் பதில் சொல்லிக்கொண்டு வருகிறார சூப்பிரண்டு பயபக்தியுடன்.  அக்பர் சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகிறார்.  உடம்பை எப்படிப் பேண வேண்டுமென்று.  அக்பர் சாôஸ்திரி, அவருடைய வாழ்நாளில் ஒரு முறைகூட மருத்துவரைப் பார்த்ததில்லை என்று பெருமை அடித்துக்கொள்கிறார். உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திக்கொண்டவன் அக்பர்.  அதனால் கோவிந்த சாஸ்திரி யைப் பார்த்து அக்பர் சாஸ்திரி என்ற பெயரை வைத்தவர் அவருடைய சம்பந்தி.  

சூப்பிரண்டின் இரண்டு புதல்வர்களைப் பார்த்து இப்படிச் சொல்கிறார் அக்பர் சாஸ்திரி என்கிற கோவிந்த சாஸ்திரி :

‘மலேரியா அடிச்சுக் கிடந்தாப்ல இருக்கே ரண்டும்.’ என்று.  பின் பையன்கள் உடம்பைப் பற்றி விஜாரிக்கிறார்.  குதிரைக்கு வைக்கிற கொள்ளை கொடுக்கச் சொல்கிறார். அவர் பாட்டி வைத்தியம் செய்து கொள்வதைப் பற்றி பெரிதாகத் தற்பெருமை அடித்துக்கொள்கிறார்.  அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சூப்பிரண்டு வருத்தத்துடன் சொல்கிறார் : üநான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ டாக்டர் வராத நாளே கிடையாது,ý என்று. தன் மனைவியைப் பற்றி மனம் வருத்தத்துடன் பேசிக்கொண்டு போகிறார். 

இந்த இடத்தில் சூப்பிரண்டு மனைவியைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  ‘வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை. வாயில் குழறல். அழகாகக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறி விட்டிருந்தாள்.’

இப்படி தத்ரூபமாகப் படிப்பவர் கவனத்திற்கு ஒரு கதாபாத்திரத்தை ஜானகிராமன் எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார்.  அந்த அம்மாளின் தீராத தலைவலியைத் தீர்க்க இயற்கை மருத்துவத்தை அக்பர் சாஸ்திரி சொல்ல,  அதை ஒரு நோட்டில் குறித்துக்கொள்கிறார் சூப்பிரண்டு.  

இந்தக் கதையில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபர் ஒருவர் ஜன்னல் பக்கத்தில் உள்ள இருக்கையை விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருப்பவர் வேறு யாருமில்லை ஜானகிராமன்தான்.

68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிளக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவம் சொல்லிக்கொண்டு போகிறார். உற்சாகமாக. சத்தமாக.   

இப்படிப் பேசிக்கொண்டு வந்தவர் இறங்கும் இடமான கும்பகோணம் வரும்போது எதிர்பாராதவிதமாய் மார்பைப் பிடித்துக்கொண்டு இறந்தும் விடுகிறார்.  

கதையின் முடிவில் ஜானகிராமன் இப்படி முடிக்கிறார்.

‘டாக்டர் உதவியில்லாமல் அக்பர் சாஸ்திரி மனிதன் செய்கிற கடைசி காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.’

இனி இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளையும் புரட்டிப் பார்க்கலாம்.

                                                                                     (இன்னும் வரும்)

தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன்..

அழகியசிங்கர்

2011ஆம் ஆண்டு இதே அமெரிக்காவிற்கு வந்திருந்தோம்.  ப்ளோரிடா என்ற இடத்தில் தங்கியிருந்தோம்.  ஒரு ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றான்.   இதே ஒரு பெரிய கட்டடத்தில் ஏகப்பட்ட திரை அரங்குகள்.  ஒரு ஆங்கிலப்படம் பார்த்தோம்.  இரவு நேரத்தில்.  வழக்கம்போல் அந்தப் படம் பார்க்க நாலைந்து பேர்கள்தான் தென்பட்டார்கள்.  படம் என்னவென்று புரியவில்லை.  படம் பார்க்காமல் தூங்கி வழிந்தேன்.  

8 ஆண்டுகள் கழித்து இப்போது பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன்.  போனவாரம்  ஹார்க்கின்ஸ் திரையரங்கத்தில் தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன். அது குறித்து எழுத உள்ளேன்.  திரை அரங்கத்தில் முதியவர்களுக்கு டிக்கட் விலை 8 டாலர்கள்.  மற்றவர்களுக்கு  எட்டரை டாலர்கள்.  

 தடம் தமிழ்ப் படத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்  மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம்.  பொதுவாக திரை அரங்கில் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது  சிறிது நேரத்தில் நெளியாமல் இருக்க மாட்டேன்.  ரொம்ப தாங்க முடியாவிட்டால் எழுந்து போய்விடுவேன்.  ஆனால் தடம் படத்தை முழுவதும் ரசித்தேன். கடைசி வரை பார்த்தேன்.  வித்தியாசமான கதை அம்சம்.

ஆனால் இந்தப் படத்தில் தென்பட்ட பிரச்சினையும் புரிந்து விட்டது. இரட்டை வேடத்தை எடுத்து முக்கியமான பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் அதைச் சரிவர செய்யவில்லை என்று எனக்குத்  தோன்றுகிறது.  

இரட்டை வேடத்தில்  நடிக்கும்போது ஒரு வேடத்திற்கும் இன்னொரு வேடத்திற்கும் நடிப்பால் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.  உதாரணமாக  üஎங்கள் வீட்டுப் பிள்ளைý என்ற படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் வேறு படுத்திக் காட்டி நடித்துள்ளார்

இதில் நடித்த நடிகருக்கு அது சரியாக வரவில்லை.  ஆரம்பத்தில் இப் படத்தைப் பார்க்கும்போது எனக்குக் குழப்பமாக இருந்தது.  ஆனால் போகப்போகத்தான் புரிந்தது.

இப்படி ஒரு நல்ல படத்தை இந்த நடிகர் ஓரளவு நடிப்பு மூலம் மட்டுப்படுத்தி விட்டாரா என்று தோன்றுகிறது.

பொதுவாக இரட்டை வேடம் என்றால் ஒரு கதாநாயகன் வீரனாகவும் இன்னொருவன் கோழையாகவும் காட்டுவார்கள்.  அல்லது ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் கெட்டவனாகவும் காட்டுவார்கள்.  பிறகு அதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி அந்தச் சிக்கல் அவிழ்ப்பதுபோல் கதை போகும்.

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.  படத்தில் முக்கியமாக நான் கருதுவது போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்.   போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் வித்யா ஸ்மிருதி சிறப்பாக நடித்துள்ளார். 

அப்பாவுடன் இருக்கும் எழில் நன்றாகப் படித்து சிறப்பாக வளர்கிறான்.   அடுக்குமாடி கட்டடம் கட்டுபவராக மாறுகிறான். ஆனால் அம்மாவால் வளர்க்கப்படும் கவின்  சரியாக வளர்க்கப் படாமல் கிட்டத்தட்ட ரௌடி மாதிரி திரிகிறான்.

படத்தில் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.  சோனியா அகர்வால் நடித்திருக்கும் அம்மா பாத்திரம். 

இப் படத்தில் காணப்படும் காதல் காட்சிகள் நம்பும்படி இல்லை.  காதல் என்றாலே நெருக்கத்தை உண்டாகப்பட வேண்டும். உணர்வு மூலம் ஏற்பட வேண்டிய ஒன்று.   அந்த நெருக்கம் ஏனோ இதில் உணர முடியவில்லை.  இரும்புத்திரை என்ற படத்தில் சிவாஜியும் வைஜெயந்திமாலாவும் நடித்திருப்பார்கள்.  ஒருவரை ஒருவர் தொட்டுக்கூட நடித்திருக்க மாட்டார்கள். அதில் வெளிப்படும் காதல் நம்பும்படி இருக்கும். ஆனால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்றாக இருக்கும்.  அவர்கள் ஒரு பாடல் பாடுவார்கள்.  கானா இன்பம் என்று ஆரம்பமாகும் பாடல்.  இன்னும் அந்தக் காட்சியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கலாம்.  ஆனால் இந்தப் படத்தில்  காதல் விரசமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டு வரும்போது குளோபல் படம் ஒன்றைப் பார்த்தேன்.  அதில் ஒரு காதல் படம்.  படம் பெயரெல்லாம் குறித்து வைத்துக்கொள்ளவில்லை.  ஒரு பெரிய பஸ் மாதிரி ஒன்றை ஒருத்தி ஓட்டிக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.  வழியில்; ஒரு வாலிபனைச் சந்திக்கிறாள். அவளுடன் அவனும் பயணம் செய்கிறான்.  . பயணத்தின்போது அவர்களிடையே காதல் ஏற்படுகிறது.   அவனுடன் சேர்ந்து செல்வதுதான் கதை. நிகழ்ச்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.  

தடம் படத்தில் முக்கியமாக நான் கருதுவது கதைக்களம்.  அது சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.  போலீஸ் வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப் பார்வையாலேயே எல்லோரையும் வசியப்படுத்துபவராகத் தென்படுகிறார். 

எழில் செய்யும் கொலையை மறைக்க கவினும் போலீசில் மாட்டிக்கொள்கிறான்.  அப்போதுதான் எனக்குப் புரிகிறது.  இரண்டு வேடஙகளில் நடிக்கப்படுகிற படம் என்று.  அதுவரை ஒன்றும் புரியவில்லை.  யாரைக் குற்றவாளி என்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது.  கடைசியில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு பார்த்தேன்.  ஆனால் கதை வேறு விதமாகப் போபய் விடுகிறது. 

இப்போதெல்லாம் சிறப்பான முறையில் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன.  நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வரும்போது செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தைப் பார்க்க நினைத்தேன்.  முடியாமல் போய்விட்டது. 

மகிழ் திருமேனி பாடலே இல்லாமல் 2 மணி நேரத்திற்குப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.  இதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  

நீங்களும் படிக்கலாம் – 47 – நாபிக் கமலம் – 3

அழகியசிங்கர்

பிப்ரவரி மாதம் வண்ணதாசனின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு நான் குறிப்புகள் எழுதினாலும் திரும்பவும் கதைகள் எல்லாவற்றையும் இப்போதும் படித்தேன்.  

நீங்களும் படிக்கலாம் தொகுதி 1 புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தபோது அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  சிலசமயம் என்ன எழுத வேண்டுமென்று தோன்றாமல் போய்விடும்.ý  அவர் சொன்னது உண்மை என்பதை வண்ணதாசனின் சில கதைகளைப் படிக்கும்போது என்னால் உணர முடிந்தது.  அவர் கதைகள் சொல்லாமல் ஏதோ சொல்ல வருகிறார்.  வாசகன்தான் கவனமாகப் படிக்க வேண்டும். கதைகள் மூலம் மறைமுகமான அனுபவத்தைத்தான் உணர முடியும்.     

7. அகஸ்தியம் 

மனித உறவுகளுக்குள் நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.  நடேச கம்பர் மகன் தனுஷ்கோடிக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் இடையில் நடந்தது என்ன?  

8.  மகா மாயீ

உணர்வு முழுவதையும் வெளிப்படையாகக் கூறாமல் எதிரொலிக்கும் கதை.  குடும்பத்திற்கு எதிராக திலகா தனக்குப் பிடித்த ஆணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள்.  அதற்கு முழு சம்மதத்தை மாமு ஆச்சி வெளிப்படுத்துகிறாள். üஒப்படைசாச்சுý என்ற ஒற்றை வரியில் கதையின் போக்கு முடிவுக்கு வருகிறது.  

9. சல்லாத் துணிகளின் ஊடாக மலைகள்

முதல் முறையாக இந்தக் கதையைப் படித்துக் குறிப்புகள் எழுதினாலும், இப்போது இன்னும் இரண்டு மூன்று முறைகள் இக் கதையைப் படித்துப் பார்த்தேன்.  கதை மூலம் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.  சொல்லாமல் சொல்லும் கதை வண்ணதாசனுக்கு அமைந்திருக்கிறது.  பாண்டியம்மாளைப் பார்த்த இளம்பிறைக்கு அண்ணன் செழியன் ஞாபகம் வருகிறது. முறிந்துபோன உறவு.  ஒரு வார்த்தை கூட அண்ணன் செழியனைப் பற்றி பாண்டியம்மாள் விஜாரிக்கவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். 

10. இக்கரைக்கும் அக்கரைக்கும்

எப்படி பாட்டு எல்லோருடைய உணர்வுகளையும் ஒருங்கிணைக்கிறது என்பதுதான் இக் கதை. 

11. ஸ்படிகம்

இந்தக் கதையில் காதல் என்கிற அனுபவம் நுணுக்கமாகச் செயல்படுகிறது.  செல்வக்குமாரிடமிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.  பல பெண்களிடம் அவன் காட்டும் அன்புதான் 

அவனை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது. மனம் ஒரு வித்தியாசமானது. அதைப் பிடித்து வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.  

12..  இனிமேல் என்பது, இதில் இருந்து

எதிர்பார்த்தபடி அம்மா இறந்து விடுகிறாள்.  அவளுடன் கொண்ட பாசப்பிணைப்புதான் இக் கதை.  ஒரு புதல்வனின் உணர்வுகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன.  

13. கருப்பும் வெள்ளையும்

ஒரு புகைப்படம் எடுப்பவரின் கதை. சர்க்கரைப் பாண்டி.  üஇப்படியான முகங்கள் புகைப்படக்காரர்களின் பரவசம்.  அது அவனை வேட்டையாட வைத்து விடுகிறது,ý என்கிறார் சர்க்கரைப் பாண்டி ஆனந்தவல்லியைப் பார்த்து.  அவள் கணவன் பாப்புராஜ்  அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறானா என்பதைக் கதையின் கடைசி வரியில் தெரியவரும்.  

நாபிக் கமலம் – வண்ணதாசன் – சிறுகதைகள் – வெளியீடு : சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044-24896979 – பக் : 160 -விலை : 140