பஞ்சு மனசுகள் (சிறுகதை) –


செல்வராஜ் ஜெகதீசன்


கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு,
தூர எறிந்தான் பாலு.
பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நைட் ஷிப்டுக்கான அழைப்பொலி. முன்பென்றால்,
இந்நேரம் கிளம்பி வேக வேகமாக வேலைக்கு போயிருப்பான்.
இப்போது எந்த வித அவசரமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
வேலை மட்டும் போயிருக்காவிட்டால் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவைகள்  எல்லாம் 
இல்லாமல் போய் இருக்கும்.
வேலையிலேயே
இருந்திருந்தால் கலாவும் கூடவே இருந்திருப்பாள். அப்படியும் சொல்ல
முடியாது. வேலை போனதை எப்படி கலா போனதோடு ஒப்பிட முடியும்?
இத்தனை வருடங்கள் கழித்து,
எட்டு ஆறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டு ஒரு அம்மாவால் இன்னொருவனோடு எப்படிப் போக முடிந்தது?
“வா
சார் வா அஞ்சு வச்சா பத்து, பத்து வச்சா இருபது”
என்ற குரல் வந்த திசை நோக்கி அவன் கால்கள் திரும்பின.
ஸ்டாப் குவாட்டர்ஸ் ஒட்டி இருந்த மதிற்சுவர் ஓரம் மாணிக்கம் தன் கடையை விரித்து எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் முன் பெரிய அட்டைத்தாள் ஒன்று விரிக்கப்பட்டு,
ஆறு சினிமா நடிகர் நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
விளையாட விருப்பம் உள்ளவர்கள்,
தான் விரும்பும்
படத்தின் மீது காசோ பணமோ வைக்கலாம். ஏறக்குறைய எல்லாப் படத்தின் மீதும்
காசோ பணமோ வைக்கப்படும் வரை மாணிக்கம் திரும்பத் திரும்ப கூப்பிட்டுக்
கொண்டிருப்பான்.
அத்தனை படத்தின் மீதும் காசோ பணமோ வைக்கப்பட்டபின், “எடுக்கலாமா
எடுக்கலாமா எடுக்கப்போறேன்” என்று ஒன்றிருமுறை கூவுவான். 
“கூட வைக்கணும்னா இப்பவே வச்சுக்கோ,
அப்பால படம் வரச் சொல்லோ பீல் பண்ணி பிரயோஜனம் இல்ல சொல்டேன்” என்று ஓரிருமுறை சொல்லிக் கொண்டிருப்பான்.
காசை வைத்துவிட்டு காத்திருப்பவர்கள் 
கொஞ்ச கொஞ்சமாக “சரி எடுப்பா” என்று நச்சரிக்கத் தொடங்கும் போதும் எடுக்க மாட்டான்.
“கொஞ்சம் பொறு சார்,
இதோ எடுத்துடலாம்”
என்று கொஞ்ச நேரம் கடத்துவான்.
முன்பென்றால்,
பாலு இந்நேரம் யாரோ ஒருவருக்காக சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருப்பான்.
“தலைவர் மேல வை சார்,
வாரி வாரி குடுத்த கை சார்” என்பான்.
“என் கைல கண்டி காசு இருந்தா,
இந்நேரம் அப்படியே தலைவர் படத்துல வச்சிருப்பேன் சார்” என்பான்.
இதெல்லாம் போன வாரம் வரை. இன்றைக்கு?
எதுவும் சொல்லாமல்,
எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணிக்கம் கூட பாலுவைப் பார்த்து “இன்னா அண்ணாத்தே ஒரு மாரியா கீற” என்றான்.
பதில் ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றுப் பார்வையை வீசினான் பாலு.
“சரி அண்ணாத்தைக்கு ஏதோ மூடு அவுட்டு போல” என்று மாணிக்கம் அட்டைத்தாளின் வலப்புறமாக வைக்கப்பட்டிருந்த கவர்களை கையில் எடுத்தான்.
சீட்டுக்கட்டுக்களைக்   கலைத்துப் போடுவது போல் அந்தக் கவர்களை மாற்றி மாற்றி வைத்தான். 
ஒருவாறாக ஒரு கவரை எடுத்தவன், அதை இரண்டு விரல்களுக்கு
மத்தியில் வைத்தபடி “யார் வரப் போறா’னு பார்க்கலாமா,
தானைத் தலைவனா,
அபிநய சரஸ்வதியா,
நாட்டியப் பேரொளியா” என்றவாறு அந்த கவரை ரெண்டு உதறு உதறினான்.
அவன் சொன்னது எல்லாம் அங்கே ஒட்டப்பட்டிருந்த படங்களில் இருந்த எம். ஜி. யார்,
சரோஜாதேவி,
பத்மினி ஆகியோரை.
கவரை ஒருமுறை ஊதி விட்டு,
பிரித்து,
உள்ளிருந்த படங்களை வெளியே எடுத்தான். மூன்று படங்கள். ஒரு சரோஜாதேவியும் இரண்டு பத்மினியும்.
த்மினியை
கலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் சிவாஜியோடு நடிக்கும் படங்கள்
மட்டும். வேறு
எந்த நடிகரோடு பத்மினி நடித்த படம் என்றால் அவளுக்கு பிடிக்காது. நிறைய
முறை எம்.ஜி.யாரோடு நடித்த படத்திற்கு இவன் கூப்பிட்டு அவள் மறுக்க,
பெரிய சண்டையில் போய் முடிந்திருக்கிறது. அந்த சண்டையெல்லாம் கூட ஒரு காரணமாய் இருக்குமா?
இதையெல்லாம் ஒரு காரணமாய் அவனால் யோசிக்க முடியவில்லை. எது காரணமாய் இருக்கும் என்று,
யோசிக்க முடியாத அளவுக்கு குழம்பிப் போயிருந்தான். பஞ்சாலை வேலை கூட சமீபத்தில்தான் போனது.
“ஏய் என்னப்பா இங்கன நின்னிட்டிருக்கே,
ரெண்டு பொண்ணுங்களும் அங்க சாப்டாம காத்துக்கினு இருக்கு” 
என்றாவாறு இவன் தோளைத் தொட்டான் குரு.
எதிர் வீட்டுக்காரன். நைட் சிப்ட் வேலைக்கு போகிறான் போல.
“சீக்கிரம் போ,
சாப்பிட ஏதாவது வாங்கிட்டுப் போடா” என்றவாறு நடையை எட்டிப் போட்டான்.
வீட்டை
நெருங்கும்போது எதிர்வீட்டு வாசலில் குருவின் மனைவி மீனாட்சியோடு மூன்று
பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் மீனாட்சி
“என்னாச்சு போன விஷயம்” என்றாள்.
பதில் எதுவும் சொல்லாமல் பாலு வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
சித்ராக்குட்டி கூடத்தில் தரையில் ஒரு மூலையில் சுருண்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பெரியவள் நளினா இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து இவன் கையைப் பிடித்துக் கொண்டாள். பாலு “வாங்க சாப்பிடலாம்,
ஏன் சித்துக்குட்டி தூங்கிட்டா” என்றான் கையில் இருந்த பார்சலைப் பிரித்தபடி.
“இவ்ளோ நேரம் விளயாடிட்டுதான் இருந்தா. அம்மா எப்போ வருவான்னு கேட்டுக்கினே அப்படியே தூங்கிட்டா” என்றாள் நளினா.
“சரி நீ சாப்பிடு” என்றவாறே சட்டையைக் கழற்றி சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டிவிட்டு,
பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் பாலு.
வேக வேகமாய் இட்லியைப் பிட்டு சாப்பிடும் நளினாவையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பசி போல,
சீக்கிரமே சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்தாள்.
“சரி படும்மா,
நாளைக்கு ஸ்கூல் போனம்ல” என்றவாறு பாயை எடுத்து உதறிப் போட்டவன்,
ஒரு ஓரமாய்,
சித்ராவை தூக்கி கிடத்தினான். பக்கத்தில் தன் உடலைச் சாய்த்தான். ஒரே அசதியாக இருந்தது.
விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் படுத்துக்கொண்டிருந்த நளினா “அப்பா” என்றாள்.
“என்னம்மா குட்டி”
“அம்மா,
எப்போ வருவா?”

“நாளைக்கு வந்துருவாங்க,
நீ தூங்கு” என்றபடி நளினாவின் தலையை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான் பாலு.

எதையாவது சொல்லட்டுமா…..91

அழகியசிங்கர்
ரெட்ஹில்ஸ் பக்கத்தில் உள்ள பம்மாத்துக்குளம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அங்குதான் என் மாமனார் (நான் அவரைப் பார்த்ததில்லை) அறுபதுகளில் இரண்டு கிரவுண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டிருக்கிறார்.  அதைப் பற்றி அவருடைய வாரிசுகள் யாரும் கவலைப்படவில்லை.  என் மாமியார் உயிரோடு இருந்தவரை அந்த வீட்டு மனை நல்ல விலைக்குப் போகும் என்ற கற்பனையோடு இருந்தார்.  பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அந்த இடத்தைப் பார்க்க பெரிய முயற்சி செய்து பார்க்கவும் செய்தேன். அப்போது அந்த இடத்தில் மண் வாரிக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பள்ளமாக இருந்ததால் அங்கு வீட்டு மனைகள் உண்டா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அதன் பின் நான் பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டேன்.  ஆனால் சமீப காலமாக ஒரு புரோக்கர் என் மாமனார் இடத்தை 2 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லி பலமுறை போன் தொல்லை செய்து கொண்டிருந்தான்.
அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நானும் அந்த இடம் பத்து லட்சம் போகும் என்று அடித்துப் பேசினேன்.  அவன் விடவில்லை.  தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.  மேலும் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்பினான்.  நான் அவனைப் பார்க்க தவிர்த்தேன்.  கடைசியில் அவன் என்னிடம் சொன்னான். “நீங்கள் பத்து லட்சம் போகும் என்று சொல்கிறீர்கள்.  என்னிடமும் சில காலி மனைகள் உள்ளன.  நீங்கள் கூறும் விலைக்கு விற்றுத் தர முடியுமா?”என்று என்னை மடக்கினான்.  பின் எனக்கு அவன் போன் பண்ணவில்லை.
எப்படியாவது அந்த இடத்தை இன்னொரு முறை போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  முன்பு நான் டூ வீலரில் போய்ப் பார்த்தேன். ஆனால் இப்போதோ என்னால் அப்படியெல்லாம் முடியாது என்று தோன்றியது.  என் மாமனாரின் வாரிசான நான்கு பெண்களுக்கும் அந்த இடத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எப்படி ஒரு இடத்தை வாங்கிப்போட்டுவிட்டு அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.  பத்திர அலுவலகம் மூலமாக வில்லங்கம் வாங்கிப் பார்த்தேன்.  நல்லகாலம்.  என் மாமனார் பெயர்தான் இருக்கிறது.  ஆனால் புரோக்கர் சொன்ன இன்னொரு தகவலும் என் ஞாபகத்திற்கு வந்தது.  அந்த இடத்தைத் திரும்பவும் இன்னொரு லே அவுட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக.  அது உண்மையா என்பதைப் போய்ப் பார்த்துவிட நினைத்தேன். 
எந்த ஞாயிற்றுக்கிழமையும் என்னால் போக முடியாது.  ஒருநாள் அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டுப் போக வேண்டும்.  அலுவலகத்தில் யூரின் போவதற்குக்கூட நான் அனுமதி கேட்கவேண்டும்.  அந்த அளவிற்குக் கெடுபிடி.  ஏதோ பொய் சொல்லி ஒருநாள் லீவு எடுத்துக்கொண்டேன்.  மதியம் 3 மணி சுமாருக்குக் கிளம்பலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய நானோ கார் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.  நானே எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் ஓட்ட முடியாத என்ற காரணத்தால், ஒரு டிரைவரை ஒரு அமைப்பு மூலம் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். காலி மனையைப் பார்ப்பதோடல்லாமல், சில புத்தகக் கட்டுகளை ஒரிடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் சேர்த்துக் கொண்டேன். 
டிரைவர் வந்தான்.  பார்க்க இளைஞனாக இருந்தான்.  புத்தகங்களை ஒரு இடத்தில் கொண்டு போடவேண்டும் என்று குறிப்பிட்டேன்.  அவன் திடீரென்று நகுலனைத் தெரியுமா, சார்.”என்றான்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.  கார் ஓட்ட வருபவன் எப்படி நகுலனைத் தெரியுமா என்று கேட்கிறான் என்பது போல் யோசித்தேன்.
அவரைப் போல ஒரு எழுத்தாளரைப் பார்க்க முடியாது   
நகுலன். என் நண்பர்.
:அவருடைய புத்தகம் இருக்கிறதா படிக்க,,”என்று கேட்டான்.
“இல்லை..ஆனால் அவருடைய இரு நீண்ட கவிதைகள் புத்தகத்தை நான்தான் பிரசுரம் செய்தேன்..”
“சார்..அவர் நினைவுப் பாதை அற்புதம். நான் காலேஜ் படிக்கும்போது, நகுலன் புத்தகத்தைத்தான் படிப்பேன்…அற்புதமான எழுத்தாளர்.”
:நகுலன் சென்னை வந்தபோது என் வீட்டு பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில்தான் தங்குவார்..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.
 மெதுவாக ரெட்ஹில்ஸ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது கார்  பம்மாத்துக்குளம் பற்றி அங்குள்ளவர்களிடம் விஜாரித்தோம்.  அவர்கள் சொன்ன வழியில் பம்மாத்துக்குளத்தைக் கண்டுபிடித்தோம்.  ஆனால் எங்கள் மனை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  வண்டியை வெகுதூரம் ஓட்டி வந்துவிட்டோம். பின் அந்தப் பம்மாத்துக்குளம் இல்லை இன்னொரு பம்மாத்துக்குளம் என்று சொன்னார்கள்.  வெறுத்துவிட்டேன்.
டிரைவருக்கு ஒரு போன் வந்தது.  “சார் நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும்.” என்றான்.
என் திட்டமெல்லாம் வீணாகப் போய்விட்டது.  புததகங்களைக் கூட சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியவில்லை.  வண்டியை டிரைவர் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான்.  அந்த வேகத்தில் நான் வண்டியை ஓட்டி பார்க்கவில்லை.
” பி இ படித்திருக்கிறேன்.  ஆனால் ஒரு பேப்பர் கூட பாஸ் பண்ணவில்லை.. இப்ப அஸிஸ்டென்ட் டைரக்டராக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன்..”
“ஏன் டிரைவராகப் பணிபுரிகிறீர்கள்?” என்று கேட்டேன்.
:பணம் வேண்டும் சார்.  வாடகை கொடுக்கப் பணம் வேண்டும். வீட்டுக்காரர் வேற இடம் பார்க்கச் சொல்கிறார்.  வேற இடத்தைத் தேட வேண்டும்.”
பின் அவன் ஒரு கடை முன் நின்றான்.  சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான்.  
“நீங்கள் புகைப்பீரா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் சிரித்தான்.  “புகைப்பதையே விதம் விதமாக புகைக்கத் தெரிய வேண்டும். அது தெரிந்தவர்கள்தான் மாடர்ன் எழுத்தாளர்கள்.”
அவன் என்னை அவசரம் அவசரமாக வீட்டிற்குக் கொண்டு விட்டு ரூ.300 கேட்டான்.  உண்மையில் ரூ250தான் கொடுப்பார்கள். நகுலனைப் பற்றி பேசினானே என்று கொடுத்தேன்.  நகுலன் அவனைக் கெடுத்துவிட்டதாக மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
எனக்குப் பெரிய வருத்தம்.  பம்மாத்துக்குளத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  அதைவிட வருத்தம் புத்தகப் பார்சலை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.  
போகும்போது திரும்பவும் சொன்னான் : “நீங்கள் கூப்பிடுங்கள் திரும்பவும் புத்தகங்களைக் கொண்டு போக வருகிறேன்” என்றான்.
நகுலன் ஏன் இப்படி குறுக்கே வருகிறார் என்று யோசித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு என் வீட்டிற்கு நான் இல்லாதபோது வந்திருந்து என் அப்பாவைப் பார்த்து நகுலன் புத்தகம் கேட்டிருக்கிறான்.  புத்தகம் என்றவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாக அவருக்கு காது கேட்காது.  புத்தகம் என்றவுடன் இன்னும் காது கேட்காது.  
அவன் அங்கிருந்து போன் செய்தான். “சார் க.நா.சுவின் அசுரகணம் புத்தகம் படித்து விட்டேன்.  பிரமாதம்.. எப்படி எழுதியிருக்கிறார், பாருங்கள்..” என்றான்.
“க.நா.சு படிக்கறது அவ்வளவு ஈஸி இல்லை,” என்றேன்.
“சார்.  நகலனின் Non Being  ..கேட்டேனே.”
“என்னிடம் இல்லை.  வேற எங்காவது முயற்சி செய்யுங்கள்..”
என்றேன்.
“சார், வாடகைக்கு எதாவது இடம் கிடைக்குமா?”
“எனக்குத் தெரியாது.” என்றேன்.
எழுத்தாளர் அசோகமித்திரன் பொதுவாக யாராவது அவரைப் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால், படிப்பை முடித்துவிட்டு இலக்கியத்துக்கு வாருங்கள் என்பார்.  நான் அவரைப் பார்க்க போனபோது கூட என்னைப் பற்றி அவர் விஜாரித்திருக்கிறார். 
ஒருவித அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இந்தப் புத்தகம் படிக்கிறது அல்லது எழுதுவதில் நுழைய வேண்டும். எந்தவிதத்திலும் இந்த எழுத்து அடிப்படைகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் உதவி செய்யாது. அடிப்படைகளைப் பேணி காக்காத எத்தனையோ எழுத்தாள நண்பர்களை எனக்குத் தெரியும்.  ஒரு சிலருக்குத்தான் இதில் வெற்றி கிடைக்கும்.  
சில தினங்கள் கழித்து அவனிடமிருந்து போன் செய்து கட் செய்து விட்டான்.  நான் போன் பண்ணவில்லை.  அவன் திரும்பவும் போன் செய்தான்.  “சார்.. Non Being  கிடைத்ததா.”என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் திரும்பவும்,”சார்.. ஒரு உதவி..வாடகைக் கட்டணும்..பணம் கடனா தர முடியுமா?”
“முடியாது.”என்றேன்.
“சார்,  பணம் தர மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?”
“அதுமாதிரியெல்லாம் யோஜனை பண்ணவில்லை,”என்றேன்.
அவன் போனை கட் செய்துவிட்டான்.  நான் இன்னும் பம்மாத்தக்குளத்தைப் போய்ப் பார்க்கவில்லை.  யாராவது டிரைவரைக் கூப்பிடவும் பயமாக இருக்கிறது. புத்தகக் கட்டு காரிலேயே இருக்கிறது.
                      (அம்ருதா  டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

எதற்காகவும் எதையும்…

வைரமுத்து

எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்…

மயானத்திலிருந்து

பா. சிவபாதசுந்தரம்

கழற்றி எறிந்த மாலையின்

பூக்களை மேயும் ஆடுகள்

அரிசிதனை கலைத்து

காசை பொறுக்கும் சிறுவர்கள்

காலையில் போன

கதிரவன் வருகின்றான்

மாலை மரியாதையுடன்

மந்திரியும் வர

நாலு நாள் கழித்து

கருமாதி முடிவாச்சு

நான் செத்து இன்றோடு

நாட்கள் பத்தாச்சு

கதையல்ல……. நிஜம்

பா சிவபாதசுந்தரம்
நேற்று “தீராநதி” அழகியசிங்கரோட கவிதையை படித்தேன். இன்று காலையில்
அழகியசிங்கரின் நவீனவிருட்சத்தை பற்றி விநாயக முருகனின் பதிவையும்
பார்த்தேன். அழகியசிங்கர் எங்கள் கல்லூரியிலுள்ள இந்தியன் வங்கியின்
கிளையில்தான் மேலாளராக உள்ளார். இன்று மாலை கல்லூரி முடிந்தவுடன்
அழகியசிங்கரை பார்க்கலாமேன்னு கிளம்பினேன்.
பாங்க் போகும் வழில கிரவுண்ட்ல பொம்பளபிள்ளைங்க கொ-கொ வும், பசங்க
கிரிக்கெட்டும் ஆடிட்டிருந்தாங்க. கிரிக்கெட் ஆடுறத பார்த்தவுடனேயே மனசு
நமநமக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பல்லாம் பேட்டை கைல வச்சிருக்கவங்கெல்லாம்
மனசுல வீராத் கோஃலி, தவான்னு நெனச்சுக்கிட்டிருக்க மாதிரி, அந்த காலத்துல
எனக்கு கவாஸ்கர்ன்னு நெனப்பு.(ஆனா ஒரு தடவ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரில
நடந்த ஒரு மேட்ச்ல Orthodontist சந்திரசேகர் அடித்த ஷாட்ட காட்ச் பிடிக்கப்போய்
மூஞ்சி கிழிஞ்சு வந்தது தனி கதை)மன உந்துதல கட்டுப் படுத்திக்கிட்டு ஒரு
வழியா அழகியசிங்கர பார்த்திட்டு திரும்பறேன். கொ-கொ ஆடுற பெண்கள் வழிவிட,
சில மாணவிகள் விஷ் பண்றாங்க. என் பார்வை அந்த பவுலிங்க் போடற பையன் மேல.
அநேகமா ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயரா இருக்கலாம். அவன் ஓடிவந்த லாவகம்
ஏறக்குறைய ராஜாவின் Chord progression மாதிரி தான் இருந்தது. குறி தவறாத
வில்லுல இருந்து கிளம்புற அம்பைப் போல அருமையான பவுலிங். என்னால அதுக்கு
மேல பொறுக்க முடியல. பிட்ச்சை நோக்கி நான் நடந்தவாறே அழகியசிங்கர் கொடுத்த
ரெண்டு புத்தகங்களையும் ஒரு மாணவனிடம் நீட்ட, அனி்சையாக, பேட்டிங்க் செய்து கொண்டிருந்தவன் என்னிடம் பேட்டை நீட்டினான். ரெடியாயிட்டேன்.
ஆஃப் அண்ட் மிடில் எடுத்துக்கிட்டு கேள்விக்குறி போல குனிந்து செல்லமாக
தரையில் ரெண்டு தட்டு தட்டிட்டு நிமிர்றேன். ஒரு கணம் மூச்சே நின்று
விட்டது. ஏன்னா கொ-கொ ஆடிக்கி்டிருந்த மற்றும் அதை வேடிக்கை
பார்த்துக்கிட்டிருந்த சுமார் இருபது பெண்கள் மிட்விக்கெட் இடத்திலிரு்ந்து
நான் ஆடப்போவதை பார்க்க கூடிவிட்டனர். மெதுவா லெக் சைட்ல பார்க்கிறேன்.
குட்டை சுவரில் உட்கார்ந்திருந்த ஒரு எட்டு, பத்து மாணவிகள் என் பக்கமாக திரும்பி
உட்கார்ந்திருந்தனர். ஸ்டெம்பிற்கு பின்னால் ஒரு ஆறேழு பசங்க. கை லேசா
வேர்க்க ஆரம்பிக்குது. பேப்பர் மற்றும் டிவி மூலம் தினம் கிரிக்கெட்
தொடர்பு இருக்கிறத தப்பா கணக்கு போடடு்டேன் போல. கடைசியா எப்ப கிரிக்கெட்
பேட்டை தொட்டேன்னு ஒரு வினாடி யோசிச்சு பார்க்கிறேன். சனியன் ஞாபகமே வரல.
ஒரு வேளை, முதல் பந்துலேயே கில்லி எகிருடுசசுன்ன? என் கால்களும் நடுங்கிற மாதிரி ஒரு
உணர்வு. நைசா செல் ஃபோன காதுல வச்சக்கிட்டு ஹலோ ஹலோன்னு சொல்லிக்கிட்டே எஸ்
ஆயிரலமான்னு கூட தோணுச்சு. சேச்சே அது இன்னு்ம் அசிங்கமாயிரு்கும்னு தோண,
இதென்னடா வம்பாப் போ்சு. விளையாட்டுக்கு ஆரம்பி்ச்சு மானப்
பிரச்சினையாயிருச்சேன்னு எம்மேலேயே ஒரு பரிதாபம் வந்திருச்சு(பாவம்
டெண்டுல்கர் அந்த கடைசி மேட்ச்சி்ல் எவ்வளவு மன உளைச்சலடைந்திருப்பார்ன்னு தோணுச்சு).
சரி, வருவது வரட்டும்னு நேரா பார்க்கிறேன். பௌலருக்கு பதி்ல் ஒரு தண்ணீர்
லாரி கிளம்பத் தயாராவது போல இருந்தது. அதோ ஓடி வர்ரான்….. புல்லட் மாதிரி
பந்து அவன் கையிலிருந்து வெளி வருது. நல்ல வேகம். ஒரடி முன்னால் போய்
தடு்க்கப்போனேன். பந்து பேட்ல பட்ட மாதிரியே இல்ல. கண்ணுக்கும் தட்டு படல.
ஆஃப் ஸ்டெம்ப்புக்கு மூணு அடி தள்ளி எப்வோ என்னை அது கடந்திருச்சு.
அடுத்த பந்துக்கு ரெடியாகுறேன். இந்த வாட்டி என்னை சுத்தி இருக்கிறவங்க
யாரையும் பார்க்கல. பௌலர மட்டும் பார்க்கிறேன். அருமையான யார்க்கர்
முயற்சி. வேகம் கொஞ்சம் குறைச்சல்தான். ஏறி ஒரு சாத்து சாத்தலாந்தான். ஆனா
மிஸ் பண்ணா மிடில் ஸ்டெம்ப் எகிறது உறுதி. நின்ன இடத்திலிருந்தவாறே டிஃபணட்
செய்றேன். அவன் அடுத்த பால் இதே மாதிரி போடட்டும், கண்டிப்பா எனனோட
ஃபேவரைட்
 ஸ்ட்ரட் டிரைவ் தான்னு நெனச்சுக்கிட்டேன்.
ஒரு சி்ன்ன ஃப்ளாஷ் எனக்குள். ஒரு வினாடி பௌலரோட முகத்த ஞாபகப்படுத்தி
பார்க்கிறேன். நான் பேங்க்குக்கு போகும் போது போட்ட ஆக்ரோஷம் அவனிட்த்தில்
இல்லை. மாறாக ஒரு பயம்தான அவன் முகததிலிருநதது. எல்லா பௌலருக்கும்
பேட்ஸ்மேனை அவுட்டாகணும்னு ஒரு வெறி இருக்கும். ஆனா இவன பார்த்தா நான்
அவுட்டாயிரக் கூடாதேன்னு கவலை படுற மாதிரி இரு்ந்துச்சு.
ஏறக்குறைய நாம குழந்தைகளுடன் விளையாடி வேணும்னே தோப்பமே, அது மாதிரி.
அப்பத்தான் எனக்கு டக்குனு ஞாபகம் வந்துச்சு. நான் இந்த காலேஜுக்கு
பிரின்ஸ்பால், பௌலிங்க் பண்றது ஒரு ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயர்
ஸ்டூடண்ட்னு.
அடுத்த பந்த வேகமா ஓடிவந்து போடுறான்.எதிர் பார்த்த மாதிரி வேகமற்ற ஒரு
ஷார்ட் பிச்பால். மிக சுலபமாக குறைந்த மென்க்கெடலில் தரையை தொடாமல் எலலைக்
கோட்டை தாண்ட வைக்கும் பந்து. கை பரபரக்குது. அடிச்சா கண்டிப்பா நாளை
கல்லூரியில் அது பேசப்படலாம். குறைந்த பட்சம் வேடிக்கை பார்க்கும் சில
பெண்களாவது கைதட்டலாம்.
ஒரு அடி பின்னால் சென்று, அதை ரசித்து அன்புடன் பிளாக் செய்துவிட்டு,
ஸ்டெம்ப்பிற்கு பின்னால் இருந்தவனிடம், “தேங்க்ஸ்” என்றவாறு பேட்டை ஒரு
புன்னகையுடன் கொடு்த்து விட்டு, அழகியசிங்கரை பெற்றுக்கொண்டு என் காரை
நோக்கி நடந்தேன்.

TWO POEMS BY KRISHNAKUMAR

பைத்திய வாழ்க்கை..
காய்ச்சலால் உடம்பு தகிக்கிறது
வெளியில்
மழை முடிவில்லாமல் பெய்கிறது
தகிக்கும் அந்த கேவலமான உடம்போடு
மழையில் சென்று வர வேண்டிய
வாழ்க்கையை வாழ்கிறான் அந்த மனிதன்.
 
வெயில் என்றால் பாலைவன வெயில்
சே, இந்த மஞ்சள் காமாலையின்
மழுங்கிய கண்களோடு
வெயிலில் அலைந்து திரிய வேண்டிய
அற்பமான வாழ்க்கை அவனுடையது.
 
மழைக்கான தனி இடமும், வெயிலுக்கு
ஒரு பிடி நிழலும்
வாய்க்கும்போது
அனுபவிக்க தோதுபடாத பைத்திய வாழ்க்கை
அந்த மனிதனுடையது.
 
==================================================
முதல் கவிதையின் மாற்றுப்பிரதி
=========================================
முதல் கவிதை எல்லோருக்கும்
ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது.
படிமகுறியீடுகளின் பிரக்ஞையற்றது
அந்த கவிதை.
ந.பிச்சமூர்த்தி முதல் சபரிநாதன்
வரை எவர் சாயலுமற்ற மலட்டுத்தன்மை
அதனுள் ஒளிந்திருக்கும்.
“நேற்றுதானே உன்னை சந்தித்தேன்,
இன்று என் இதயத்துக்குள் எப்படி வந்தாய்?”
என்று அந்த கவிதையை ஆரம்பித்திருப்போம்.
போகட்டும், இப்போது எழுதுவது
ஒரு கவிதையா? சொந்த வரிகளா?
எதுவானாலும் இது அனைவருக்கும் பொதுவான
அம்முதல் கவிதையின் மாற்றுப்பிரதியாக
இருக்கக்கடவது.

90களின் பின் அந்தி –

-ஜெம்சித் ஸமான்

ஒரு ஊசாட்டமும் இல்லை
என் செம் மண் தெருவை
தார் ஊற்றி கொன்றது யார்

90களின் பின் அந்தியா இது

அப்போது காகங்கள் என்றாலும்
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்
ராணுவ வீரர்களின் சூ கால்கள்
தெருவின் விரை மீது
ஊன்றி ஊன்றி மிதிக்கும்

ஜீப் வண்டிகளின்
டயர் தடங்களில் நசுங்கிய
கைப் பாவைகளைக் கேட்டு
எந்தக் குழந்தை என்றாலும்
அழுது வடிந்து கொண்டிருக்கும்

முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு
தெரு நாய்கள் குரைத்து குரைத்து
அச்சம் எழுப்பி
தெருவெல்லாம் கதறி ஓடும்

90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்
உடல் கொடுகி விழி நிமிர்ந்து
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்
உரமாக விதைக்கப்பட்டவர்களின்
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்
விழுந்து கரிக்கும்

ஒரு ஊசாட்டமும் இல்லை
கைகளும் கண்களும்
கறுப்பு துணியால் கட்டபபட்டு
சும்மா கிடந்தது தெரு
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்
அழுந்தியிருக்கவில்லை

‘நீல’ வானத்தில் பறவைகளின்
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு
எங்கள் விளையாட்டு திடல்களில்
யுத்த விதை விழுந்து மண் பிளந்து
வேர் கொண்டு எழுந்த நாட்களில்
ஒன்றா இது

1999ல் பயத்தோடு விளையாடி கழித்த
முன் இரா ஒன்றில்
‘ஜஃபர் மச்சான்’ இனம் தெரியாத
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்

அவர் மெளத்தாகி கிடந்த
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்
அவர் மரணத்திற்கு சாட்சியாய்
இருந்தது

பின் அதையும் கதற கதற
சுட்டு கொன்றுவிட்டார்கள்

எதையாவது சொல்லட்டுமா..90

அழகியசிங்கர்

 சேலத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், ü400 பக்கங்களுக்கு மேல் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அதைப் புத்தகமாகக் கொண்டு வர, யாராவது பதிப்பாளரைத் தெரியுமா?ý என்று கேட்டார். ஒரு பதிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டேன்.  உடனே அவருக்குப் போன் செய்து பேசிவிட்டார்.   பதிப்பாளர் தற்போது நாவல் போடுவதில்லை என்று மறுத்துவிட்டாராம். கட்டுரைப் புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறாராம்.  திரும்பவும் எனக்கு போன் பண்ணி எழுத்தாள நண்பர் சொன்னார்.  அவர் நாவல் எப்படி இருக்கும் என்பது தெரியாது.  ஆனால் அவர் நூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நாவல்கள் சினிமாப் படங்களாக ஒரு காலத்தில் வெளி வந்திருக்கின்றன.  வெகுஜன வாசகர்களுக்கு அவர் நன்றாக அறிமுகமானவர்.  


    ஆனால் இன்று கவிதைப் புத்தகம் சிறுகதைப் புத்தகம் மாதிரி நாவல்களும் விற்பதில்லையா? விற்கிறது.  ஆனால் ஒருசில பேர்களைப் பார்த்துதான் வாங்குகிறார்கள்.  குறிப்பிட்ட பதிப்பாளர் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை சமீபத்தில் பிரசுரம் செய்திருக்கிறார்.ஆனால் சேலம் எழுத்தாளர் புத்தகத்தைப் பிரசுரம் செய்ய மாட்டார். 1000 பக்கங்கள் கொண்ட நாவல் எப்படி விற்பனை ஆகிறது?

    என் இலக்கிய நண்பர் ஒருவர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை உடனே வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார்.  அப்புத்தகம் பற்றி தினமலரில் விமர்சனம் வந்திருந்தது.  அதை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன்.  ஒரு வாரத்தில் படித்தும் விட்டார். திரும்பவும் அவரைப் பார்க்கும்போது அந்த நாவல் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.  அந்த நாவலுக்கு இணை வேறு எதுவும் இல்லை என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.  அந்த நாவலின் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும் சொல்வார். 

    ‘அந்த நாவலை எழுதியவரை நான் பார்க்க வேண்டும்.  பார்க்க நீ ஏற்பாடு செய்,” என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.  ‘உன்னிடம் கொடுக்கிறேன்… நீயும் படி,”ன்றார்.  ü’என்னால் முடியாது..” என்றேன்.  உண்மையில்  என்னால் ஒரு புத்தகத்தை இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை.  அதற்கு நேரம் கிடைப்பதில்லை.  எனக்கு சாத்தியம் இல்லாத விஷயம் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படிப்பது.  மூன்று தலைமுறை நாவலை எழுதியிருக்கிறார் என்று நாவலாசிரியர் தம்பட்டம் அடித்துக்கொண்டால், படிக்கவே வேண்டாம் என்று தோன்றும். 

    நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், சில பக்கங்களில் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பது தெரிய ஆரம்பித்து விடும்.   பின் முழுவதும் படிக்க முடிவதில்லை.  இப்படி அரைகுறையாகப் படித்த புத்தகங்கள் என்னிடம் அதிகமாக உள்ளன.  பின் எதாவது புத்தகம் படித்து முடித்துவிட்டால் உடனே அதைப் பற்றி எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் சில வாரங்கள் கழித்து அப்புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது என்பது மறந்துவிடும்.

    சமீபத்தில் நான் படித்து எழுதாமல் விட்டுவிட்ட புத்தகம் க.நாசுவின் கோதை சிரித்தாள் என்ற புத்தகம்.  ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற நாவலை நான் பாதிக்கு மேல் படிக்கவில்லை.  என்னைப் பொறுத்தவரை ஒரு நாவல் என்பது 200 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.  அப்படி எழுதப்படுகிற நாவல்களைத்தான் படிக்க முடியும்.  நேரம் இருக்கும். 

    என் பள்ளிக்கூட நாட்களில் நான் படித்த கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற மகா பெரிய நாவலை நினைத்துப் பார்க்கிறேன்.  அப்புத்தகத்தின் கடைசி பாகத்தை படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. கடைசி பாகத்தை முடித்தவுடன், நாவலை என்ன இப்படி முடித்துவிட்டாரே என்று தோன்றியது. 

    படைப்பாளி என்னதான் எழுதினாலும், படைப்பை தீர்மானிப்பவன் வாசகனே.  வாசகனின் ஆதரவு இல்லாவிட்டால் படைப்பாளி ஒன்றும் செய்ய முடியாது. 

    சமீபத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் க.நா.சு என்ற எழுத்தாளரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.  நூறாண்டுகளைக் கடந்த க.நா.சு மணிக்கொடியில் ஒன்றும் எழுதவில்லையா?  ஆனால் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி க.நா.சு அபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்.

    தமிழில் விமர்சனத்தை வளர்த்ததற்கு க.நா.சுவின் பங்கு முக்கியமானது.  என் இலக்கிய நண்பர் குறிப்பிட்ட தகவல்படி க.நா.சு முதலில் ஆங்கிலத்தில்தான் பி ஏ படித்தாராம்.  ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்று விரும்பினாராம்.  மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதைகளைப் படித்தபிறகு அவருக்கும் தமிழில் எழுதத் தோன்றியதாம்.  பின்னாளில் ஒவ்வொரு மணிக்கொடி எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி க.நா.சு எழுதியிருக்கிறார். அதனால்தான் அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக தோன்றுகிறது.

    எழுத்து பத்திரிகை ஆரம்பித்தபோது, ‘விமர்சனத்தையும் நாம்தான் ஆரம்பிக்க வேண்டும்,’ என்று க.நா.சு குறிப்பிட்டு ரசனை விமர்சனத்தை ஆரம்பித்தவர். சி சு செல்லப்பாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை, எழுத்தைக் கூறுபோடும் அலசல் விமர்சனத்தை அவர் தொடங்கினார்.  சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்று விட்டவர்.  க.நா.சு அப்படி இல்லை.  அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அது குறித்து தன் கருத்தைத் தெரிவிப்பார்.  24 மணி நேரமும் பத்திரிகை, புத்தகம் என்று படித்துக்கொண்டிருப்பார். க.நா.சுவிற்கு இசையில் ஈடுபாடு உண்டா என்பது தெரியவில்லை.  சினிமாப் படங்களைப் பார்த்து ரசிப்பாரா என்பதும் தெரியவில்லை.  புத்தகம் படிப்பது, அது குறித்து எழுதுவதுதான் அவர் விருப்பமாக இருந்தது.  ஆனால் இன்றைய படைப்பாளிகள் அப்படி அல்ல.  அவர்களுக்கு பல துறைகளில் ஆர்வம் உண்டு. 

    மணிக்கொடி எழுத்தாளர்களில் பி எஸ் ராமையா சினிமாவிற்குப் போய்விட்டவர்.  மணிக்கொடி என்றால் எனக்கு பி எஸ் ராமையாவின் மணிக்கொடியைத்தான் தெரியும் என்று கி அ சச்சிதானந்தம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.  பி எஸ் ராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர்.  சிறுகதையை இயக்கமாகப் பரப்பியவர்.  அவருடைய 300 கதைகளும் புத்தகமாக வரவில்லை.  ஒருசிறுகதையை சில மணித்துளிகளில் படித்துவிடலாம்.  200 பக்க நாவலை சில நாட்களில் முயற்சி செய்தால் படித்து விடலாம். 1000 பக்க நாவலை மாதக்கணக்கில் படித்துவிடலாம்  ஒரு சந்தோஷமான செய்தி.  முதன்முதலாக சிறுகதை உலகின் தலைசிறந்த எழுத்தாளரான கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்துக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.  முதன் முதலாக நோபல் பரிசு சிறுகதைக்காக இந்த ஆண்டுதான் கொடுத்துள்ளார்கள்.

    ராமையாவின் அத்தனைக் கதைகளைப் பற்றியும் விமர்சனத்தை சி சு செல்லப்பா எழுதி இருக்கிறார். ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகத்தில்.  ராமையாவிற்கு ஒரு வாசகனாக அவரை எழுதத் தூண்ட சி சு செல்லப்பா கிடைத்தது மாதிரி, எத்தனை எழுத்தளர்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள்.   ஆனால் வியாபார பத்திரிகைகளில் சிறுகதைகள் இல்லாமல் போய்விட்டன.  ஒரு காலத்தில் அமரர் வாசன் கேட்டுக்கொண்டபடி ராமையா ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை ஒவ்வொரு வாரமும் ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார். வாசக தயவு இல்லாமல் எத்தனையோ படைப்பாளிகள் எழுதுவதற்கு விருப்பமில்லாமல் தொலைந்து போயிருக்கிறார்கள்.  இன்று கோடிக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போய்க்கொண்டிருக்கும் கதை உலகத்தை யார் புரிந்துகொள்ள போகிறார்கள்.  மௌனியையும், புதுப்பித்தனையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

    நான் தடித்தடி புத்தகங்களைப் படிக்க வைத்துக்கொண்டு மிரண்டு போயிருப்பவன்.  அந்தத் தடிப் புத்தகங்களில் ஒன்றை 91 வயதாகிற என் அப்பாவிடம் படிக்கக் கொடுத்தேன்.  அவர் காலத்தில் எந்தப் புத்தகத்தையும் அவர் படித்த மாதிரி ஞாபகம் இல்லை.  காசு கொடுத்து புத்தகம் வாங்க மாட்டார்.  அவர் தி ஜானகிராமன் கதைகள் முழுவதையும் படித்து முடித்துவிட்டார்.  அசோகமித்திரன் சிறுகதைத் தொகுதி 2 பாகங்களையும் படித்துவிட்டார்.  எம் வி வெங்கட்ராமன் கதைகளையும் படித்துவிட்டார்.  இப்போது ஆதவன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார்.  ஆனால் நாவலையோ கவிதையையோ படிக்க விரும்புவதில்லை.  ஒரு கதையைப் படித்துவிட்டு பரவசம் அடைந்து எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தால் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

    காஞ்சிபுரத்திலிருந்து எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அவருக்கு வயது 85.  கல்யாணம் ஆகி 6 மாதங்களில் விதவை ஆகிவிட்டவர்.  எனக்கு அவரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும்.  சாதிய கட்டுப்பாட்டால் அவர் குடும்பத்தினர் அவருக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை.  அதைவிட கொடுமை என்னவென்றால் அவருக்கு மொட்டை அடித்து முக்காடு போட்டுவிட்டார்கள்.  இப்போதும் அவர் காஞ்சிபுரம் மடத்தில் தங்கி இருக்கிறார்.   அவர் எந்த வீட்டிலும் சில நாட்கள் கூட தங்கி இருக்க மாட்டார்.  ரொம்ப ஆசாரம் பார்ப்பார்.  85 வயதிலும் பார்க்க லட்சணமாக இருப்பவர்.  நான் நினைத்துப் பார்ப்பேன் சின்ன வயதில் அவர் எவ்வளவு அழகான யூவதியாக இருந்திருப்பாரென்று.  வயது ஏற ஏற முகத்தின் லட்சணம் குறைந்துகொண்டே போகும்.  ஆனால் ஒரு சிலர்தான் வயதானாலும் லட்சணமாக இருப்பார்கள். 

    அந்த உறவினர் என் வீட்டிற்கு இரண்டு நாட்கள் தங்க வந்திருந்தார்.  எப்போதும் முகத்தில் விபூதி இட்டுக்கொண்டு சுவாமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார்.  அந்தக் காலத்தில் அவர் கணவர் எப்படி காவேரியில் குளிக்கப் போய் இறந்து போனார் என்ற நிகழ்ச்சியை கண்ணீரோடு இப்போது கூட எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார். 

    என் வீட்டில் கூடத்தில் அவர் படுத்துக்கொண்டிருந்தார்.  இரவு நேரத்தில் கொஞ்சம் பால், பழம் மாத்திரம்தான் சாப்பிடுவார்.  தூக்கம் வராத இரவு நேரத்தில் லைட்டைப் போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார்.  அவர் என்ன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார் என்று பார்த்தேன்.  காசியபனின் üஅசடுý என்ற புத்தகம்.  எனக்குப் பெருமையாக இருந்தது. 

    அவர் காஞ்சிபுரம் கிளம்புவதற்கு முன் கட்டிலில் அவர் படித்த அந்தப் புத்தகம் முழுவதும் முடிக்காமல் படித்தப் பக்கத்துடன் குப்புற கிடந்தது.  ‘அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடு,’என்று கேட்பாரென்று நினைத்தேன்.  ஒன்றும் கேட்கவில்லை.  சும்மா பொழுது போகாமல் படித்திருக்கிறார்.

    புத்தகம் எழுதி விடலாம்.  ஆனால் படிப்பதற்கு வாசகர் வேண்டும். புத்தகம் படித்துவிட்டு அது குறித்து பேசுகிற வாசகர் வேண்டும்.
                             (அம்ருதா  நவம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)
   
   
   

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

 எம்.ரிஷான்
ஷெரீப்

மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப்
பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு
உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு
ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித
தேவதைகளும் வந்து செல்வரெனச்
சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப்
போல எவ்வளவு அழகாக இருந்தது

சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம்
நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற
இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற
அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட
பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு
மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த
பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர
ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது
கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

அப்பொழுதெல்லாம் எவ்
வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக்
கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும்
ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச்
சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும்
சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின்
மூச்சென்றானது

நீ இசைத்து வந்த வாத்தியக்
கருவியை
அன்றோடு எந்த தேவதை
நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த
இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த
பறவை விழுங்கிச் செரித்தது

மழைக் காலங்களில் நீர்
மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை
நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப்
பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச்
சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப்
படுத்திருந்த மலையின் ஒரு
புறம்
சமுத்திரமும் இருந்தது

வாழ்நிலங்களைக் காக்கவென
மூதாதையர்
அம் மலையைக் குடைந்து
இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப்
பாதையை
கடலுக்குத் திருப்பிய
கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு
கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து
சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி
கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள்
நான்

அந்த மன உறுதியும் நேசக்
கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை
ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி
வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும்
மீறி
‘உஷ்ணப் பிராந்தியத்தில்
வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி
மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா’
எனப் பாடும் இராப் பாடகனின்
குரல்
தினந்தோறும் இடைவிடாது
எதிரொலிக்கிறது

பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா

ரவிஉதயன்

பூவின் இதழ்களை
பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல
வரைந்திருந்தாள்.

பட்டாம் பூச்சியின் சிறகுகளை
பூவின் இதழ்களைப் போல்
வரைந்து முடித்து விட்டு
சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.

இப்பொழுது நான் காண்கிறேன்!

பட்டாம் பூச்சியின் சிறகுகள்
விரிய பூ மலர்வதையும்!

பூவின் இதழ்களோடு
பட்டாம் பூச்சி பறப்பதையும்!