மறதியின் பயன்கள்

 
 ஞானக்கூத்தன்
 
 
 பல ஆண்கள் தங்கள் திருமண நாளை இக்காலத்தில் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவது என்றால் மனைவிக்குப் புதிய புடவை வாங்கித் தருவது, முடிந்தால் கால் பவுன் அரைப் பவுனில் தங்க நகை வாங்கித் தருவது, காலையில் கோவிலுக்குப் போவது, இல்லையென்றால் மாலையில் போவது. இவற்றில் எது சாத்தியப்படுகிறதோ இல்லையோ, இரவு உணவை ஹோட்டலில் வைத்துக்கொள்வது. இப்படித் திருமண நாள் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் திருமண நாளைப் பெண்கள்தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஆண்கள் முற்றிலும் மறந்துபோய்விடுவார்கள். அப்படியே நினைவிருந்தாலும் தேதியும், மாதமும் நினைவில் இருக்குமே தவிர கல்யாணமான வருஷம் நினைவில் இராது. எத்தனையாவது வருஷம் என்று தெரியவந்தால் அவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.
 
 பாரதியாரால் தனது கல்யாணத் தேதி, வருஷம் முதலானவற்றைச் சரியாக நினைவுபடுத்திக்கொள்ள முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. பாரதியின் வரலாற்றை எழுதிய வ. ராமஸ்வாமியால் பாரதியின் திருமணத்தைப் பற்றி, அவருக்கு என்ன வயது இருக்கும் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
 
 கல்யாணத்துக்கு முன்பு 11ம் வயதில் பாரதி என்ற விருதைப் பாரதியார் பெறுகிறார். பல புலவர்கள் சொன்ன அடிகளை வைத்துக்கொண்டு அவர் பாடிய திறமையை அங்கீகரித்து இவ்விருது அவருக்குத் தரப்பட்டதாம். ஆனால் இவ்விருதுக்குக் காரணமான எந்தப் பாட்டும் கிடைக்கவில்லை. காலம் கடந்து நிற்கவில்லை. 7ம் வயதிலேயே கவிகளைக் கவனம் செய்தவர் என்கிறார் அவரது பால்யகால நண்பர் சோமசுந்தர பாரதியார். 7 வயதில் பாடகர்கள் கிடைப்பார்கள். ஆனால் புலவர்கள் கிடைக்க மாட்டார்கள். பாரதி காந்திமதி நாதன் என்பவரைக் கேலிசெய்த வெண்பா அவர் உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்தபோது பாடியதாம். இந்த வயது கவி புனையும் வயதுதான். ஆனால் பாரதியின் இளம் பருவத்துக் கவிதைகள் பல நிற்கவில்லை. 7ம் வயதில் பாரதி அருட்கவி பொழிந்தார் என்று விகடன் பதிப்பு கூறுகிறது. ‘காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்’ என்ற சமத்காரப் பாடல் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது. பாரதி 7ம் வயதில் கவி புனைந்தாரென்றால் அவருக்குக் கல்யாணம் நடக்கும் முன் எத்தனைக் கவிகள் புனைந்திருக்க வேண்டும்? அப்படிப் புனைந்திருந்தால் அவற்றில் ஒன்றிரண்டாவது நிலை பெற்றிருக்க வேண்டுமே! ஆனால் ஒரே ஒரு பாட்டு நிற்கிறது. அது அவர் தனது கல்யாணத்தின்போது புதிய மனைவியைப் பார்த்துப் பாடியது. அவருடைய மனைவிக்கு அப்போது வயது 7. உணவை ‘மம்மு’ என்றும், பருப்பைப் ‘பப்பு’ என்றும் சொல்கிற வயது. அவரைப் பார்த்துப் பாரதி பாடினாராம். எப்படி?
 
 தேடக் கிடைக்காத சொன்னமே – உயிர்ச்
 சித்திரமே மட அன்னமே
 கட்டி அணைத்தொரு முத்தமே – தந்தால்
 கை தொடுவேன் உனை நித்தமே.
 
 பாரதி இப்படி எல்லோர் எதிரிலும் பாடினாராம். பதினான்கு வயதில் இப்படிப் பாட முடியுமா? முடியும். பாரதி சிற்றிலக்கியம் வியாபகமான ஜமீன்தார் இல்லத்துச் சூழலில் துரதிர்ஷ்டவசமாகத் தனது திறமைக்குத் தீனி போட்டிருக்கிறார். பாடத்தான் முடியுமே தவிர உள்ளடக்கம் அவருடையதல்ல. உ.வே. சாமிநாத அய்யர் தான் செய்யுள் இயற்றியதைப் பற்றி எழுதியிருப்பதை இலக்கிய வாசகர்கள் இங்கே நினைவுகூரலாம். திருமணத்துக்கு முன்பே பெண்ணைப் பற்றிய, சம்போகத்தைப் பற்றிய அறிவு இப்பாடலில் வெளிப்படுகிறது. வைதிகக் கல்யாணத்தில் சிறுவர்-சிறுமியரான மணமக்கள் விளையாடும் சமயமான நலங்கில் இது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாட்டை இயற்றியவர் யார்? இந்தக் கல்யாணம் தனது பன்னிரண்டாம் வயதில் நடந்ததாகப் பாரதி சொல்கிறார்.
 
 ஈங்கொர் கன்னியைப் பன்னிரண்டு ஆண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்
 என்கிறது பாரதியின் செய்யுள்.
 பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு
 என்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்
 
 என்று இரண்டாம் முறையாகக் கல்யாணத்தின்போது தனது வயது பன்னிரண்டு என்கிறார் பாரதி. ஆனால் சோமசுந்தர பாரதியாரோ பாரதியாருக்கு அப்போது வயது 14 முடிந்து ஆறு மாதம் என்கிறார். 1897ம் வருடம் ஜூன் மாதம் பாரதியின் கல்யாணம் நடந்தது என்கிறார் சோ.சு. பாரதியார். அவர் தனது கையில் பாரதியின் கல்யாணப் பத்திரிகையே உள்ளது போல் பேசுகிறார். ஏனெனில் எட்டயபுரத்தில் பாரதியாருக்குப் பக்கத்துவீட்டுக்காரராக வளர்ந்தவர் சோ.சு. பாரதியார். இதைக் கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டு மலர் 1947). எந்தப் பாரதியார் சொல்வது சரி? பாரதியின் கல்யாணம் 1892ல் நடந்ததா அல்லது 1897ல் நடந்ததா? தன்னுடைய கல்யாணம் தனக்கொரு சோகம் என்ற குரலில் பாரதி செய்யுள் செய்கிறார். சோமசுந்தர பாரதியோ சுப்பிரமணிய பாரதி கல்யாணத்தின்போது உற்சாகமாக இருந்தார் என்கிறார். எது சரி?
 
 சமீப காலத்தில் தனது கல்யாணத் தேதி பற்றிய உறுதியற்ற நிலையைக் கூறியவர் சுந்தர ராமசாமி. ‘என் மூளை பற்றிச் சில தகவல்கள்’ என்ற கட்டுரை அமுதசுரபி நவம்பர் 2004 இதழில் வெளிவந்துள்ளது. அதில் அவர் எழுதியிருக்கிறார்:
 
 “எனது மூத்த மகனின் திருமண நாளோ அல்லது மாதமோ மட்டுமல்ல, வருடத்தைக்கூட நினைவுகூர எனக்குச் சிறிது தடுமாற்றம்தான். ஒரு முக்கியமான அலுவலகத்தில் என்னுடைய திருமண நாளைச் சரிவரத் தெரியாது போனதால் உத்தேசமாக எனது எழுபதாவது வயதில் நான் என் மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு அதற்குரிய தஸ்தாவேஜுகளைச் சமர்ப்பிக்க நேர்ந்தது.”
 
 இந்தக் கட்டுரை வெளியானது 2004ம் ஆண்டு நவம்பரில். அப்போது சுந்தர ராமசாமிக்கு வயது 73. அவர் குறிப்பிட்ட தஸ்தாவேஜ் திருமணம் நடந்தது வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். அதாவது அவருக்கு 70ஆக இருக்கும்போது. மூன்று ஆண்டுகளுக்குள் மறந்துவிட முடியுமா சில தகவல்களை? பெரும்பாலான தந்தைகள் தங்கள் மகன், மகள் திருமண வருஷம், மாதம், தேதி விவரங்களை மறந்துவிடுகிறார்கள். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளர் – இவர் சு.ரா.வுக்கு மிக நெருங்கிய நண்பர் – இறந்த நாளன்று அங்கு (அந்த வீட்டில்…) சுந்தர ராமசாமி இருந்தார் என்கிறார் வெங்கடாசலம். ஆனால் சுந்தர ராமசாமியோ ‘என் நினைவில் அது தெளிவாக இல்லை’ என்கிறார். இந்தக் கட்டுரைக்குப் பீடிகையாக ‘மனித மனம் சிக்கலானது’ என்றும் சொல்லியிருக்கிறார் சுந்தர ராமசாமி. மறுக்க முடியுமா?

வெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்……

அழகியசிங்கர் 

சமீபத்தில் நான் பங்களுர் சென்றேன்.  கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமல் இருந்து விட்டால் பங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாக தோன்றும்.
மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம். ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும்.
நான் மதிக்கும வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நான் அவரைப்  பார்க்கும்போதும் அவருடைய கோபத்தையே பார்ப்பதுபோல் தோன்றும்.  
சென்னையில் அவர் இருக்கும்போது பல தடவைகள் அவரைப் பார்ப்பதுண்டு.  தில்லியை விட்டு அவர் சென்னை வரும்போது ஒருமுறை அவர் மனைவி நகைகள் சிலவற்றை தொலைத்து விட்டார். எதைச் சொல்லும்போதும் வெ சா பதட்டத்துடன் சொல்ல மாட்டார்.  சொல்வதில் வருத்தம் இருக்கும்.  ஆனால் அவர் கோபப்படடடால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.  யார் மீதாவது அவருக்குக் கோபம் இருந்தால அதில் விடாப்படியாக இருப்பார்.
சிறு பத்திரிகைகள் மூலம் அவரைப் பற்றி கேள்விபட்டபோது, ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பதுண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு தேடி நான் டில்லிக்குச் சென்றேன்.  
நான் இருந்த இடமும் அவர் இருந்த இடமும் எங்கோ இருந்தது.  பாஷை புரியாத அவஸ்தை.  எனக்கோ எல்லார் வாயிலும் அகப்பட்டுக் கொள்கிற இந்த வெங்கட் சாமிநாதனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று தோன்றியது.  என் முதல் சந்திப்பு அப்போதுதான் நடந்தது.
என்னைப் பற்றியெல்லாம் விஜாரித்து பேசிக் கொண்டே வந்தவர் ஒரு அறையைக் காட்டினார். 
“என்ன?” என்றேன்.
“இதில் உள்ள புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த அறை முழுவதும் சுவரை ஒட்டி புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.  பின், üüஇந்த டில்லியில் பஸ்ஸில் போவது மோசமானது.  நான் உங்களை கொண்டு விடுகிறேன்  சிறிது தூரம்,ýý என்றார். 
எழுத்து மூலம் அவர் பலருடன் சண்டைப் போடுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  குறிப்பாக பிரமிள், அசோகமித்திரன், ஞானக்கூத்தன். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அதிலேயே உறுதியாக இருப்பார் என்பதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
அன்று தில்லியில் அவருடன் பஸ்ஸில் போனபோது, கண்டக்டருக்கும் ஒரு சில பயணிகளுக்கும் பெரிய கலகலப்பே ஏற்பட்டது.  என்னுடன் என்னை ஒரு இடத்திற்குக் கொண்டு வர இருந்த வெங்கட்சாமிநாதனைப் பார்க்கும்போது, ஒன்றுதான் ஞாபகம் வந்தது. இவர் போகுமிடமெல்லாம் எதாவது சண்டை ஏற்படுகிறதே என்று. வெங்கட் சாமிநாதனுக்குசுச் சிலரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி மோசமாக சொல்லாமல் இருக்க மாட்டார்.
அவர் தில்லியிலிருந்து சென்னைக்கு  குடி வந்தபோது ஒரு மாசம் காலியாக இருந்த என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.  மடிப்பாக்கத்தில் அவர் வீடு கட்டிக்கொண்டு போகும்போது, மடிப்பாக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியிருந்தார்.  
நான் அடிக்கடி அவரைச் சந்திப்பது உண்டு.  எதாவது உதவிகளும் அவருக்குச் செய்வதுண்டு.  அவர் தன் சேமிப்புகளில் சிலவற்றை சில இடங்களில் டெபாசிட் பண்ணி இருந்தார்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு.  பங்களூரில் இருந்த என் உறவினர் கூட கிட்டத்தட்ட 10 லட்சம் வரை அப்படி டெபாசிட் செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வெ சாவும் அப்படி இழந்து விட்டார்.
வெங்கட் சாமிநாதன் எப்போதும் பிடிவாதமானவர்.  அவர் சென்னைக்கு வந்தபிறகுதான் அவருடைய எழுத்துக்கள் பல புத்தகங்களாக வெளிவந்தன.  முதன் முதலில் அவர் டில்லியில் இருந்தபோது எழுதாமல் இருந்தார்.  நான் அவரிடமிருந்து கேட்டு விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  இதெல்லாம் ஆரம்பத்தில்.  அதன் பின் அவர் சென்னையில் அதிகமாகவே எழுதினார்.
அவர் யாரைப் பார்த்தாவது விமர்சனம் செய்தார் என்றால் கடூரமாக இருக்கும்.  சில சமயம் அதைக் படிக்குமபோது தாங்க முடியாத சிரிப்பையும் வரவழைத்து விடும்.  உதாரணமாக அவர் வல்லிக் கண்ணனைப் பற்றி ஒன்று சொல்வார்.  üஅவர் ஒரு டெச்பேட்ச் க்ளார்க்ý என்று.  உண்மையில் வல்லிக் கண்ணனும், திகசியும் அவர்களுக்கு அனுப்பும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்து படித்து விட்டு வாழ்த்தி ஒரு கார்டில் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  பத்திரிகை புத்தகம் போடுபவரை உற்சாகப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.  நான் என் பத்திரிகையை அனுப்பினால் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  அவர்கள் கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி மூச்சு வரும்.  ஓ நம் பத்திரிகை எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்று.
அவர் சென்னையில் இருந்தபோது அந்த நாட்கள் மறக்க முடியாதது.  பல நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போயிருக்கிறேன்.  அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் என் மற்ற எழுத்தாள நண்பர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.  ஏன் இவருக்கு இதுமாதரி எல்லார் மீதும் கோபம் என்று தோன்றும்.  
நான் அடிக்கடி எல்லோரிடமும் போன் பண்ணி பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.  எப்போதாவது போன் பண்ணி பேசும்போது மட்டும், “என்ன உன் குரு சொல்றபடி கேட்கிறியா?” என்பார். 
“நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்.  என்னை யாரும் சிஷ்யனாகவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்பேன்.
ஆனால் என்னைப் பார்த்தால் நம்ப மாட்டார்.  ந பிச்சமூர்த்திக்கு ஒரு விழா எடுத்தோம்.  நான், ஞானக்கூத்தன், ராஜகோபாலன் என்று பலருடைய முயற்சியில் நடந்தது.  அக் கூட்டத்திற்கு ஜி கே மூப்பனார் தலைமை வகித்தார். வெங்கட் சாமிநாதனும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மறக்க முடியாத கூட்டம் அது.
வெங்கட் சாமிநாதன் பங்களூர் சென்ற பிறகு நான் அவரை சந்திப்பது நின்றே போய்விட்டது.  பங்களுரிலிருந்து யாரையாவது பார்த்தால் வெ சாவைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். என் பையன் திருமணத்திற்கு பத்திரிகை அனுப்பினேன். அவர் வாழ்த்தி பதில் எழுதினார். போனில் பேசவே எனக்கு அவரிடம் நடுக்கம்.  கோபத்துடன் பேசுவாரோ என்ற பயம்தான்.
சமீபத்தில் பங்களூர் செல்லும்போது ஜøலை மாதம் அவரைப் பார்க்கச் சென்றேன்.  மகாலிங்கம் என்ற நண்பர்தான் என்னை அழைத்துக் கொண்டு போனார்.  அதே கம்பீரமான தோற்றத்துடன் வெங்கட் சாமிநாதன் இருந்தார்.  ஆனால் அதே கோபத்துடன் அவர் பேசினார்.  அவர் எதையுமே மறக்க வில்லை.  தேவை இல்லாமல் மற்ற இலக்கிய நண்பர்களைத் திட்டாமல் இல்லை.   வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல்தான்ல் என்னைப் பார்த்தார். அவரைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றியது.  அவர் வீட்டில் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  அவர் ஒன்றே ஒன்றுதான் என்னைப் பார்த்துக் கேட்டார்.  “நீ ஏன் என் புத்தகங்களைப் படித்து விட்டு ஒன்றும் எழுதுவதில்லை,” என்று.
அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர்தான் பலருடைய புத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதிக் குவிப்பவர்.  பொதுவாக நான் சிலருடைய புத்தகங்களை விமர்சிப்பதில்லை.  அதில் வெங்கட்சாமிநாதனும் ஒருவர்.  நான் எதையாவது எழுதப் போய் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சமதான் காரணம்.  
நான் பங்களூரிலிருந்து திரும்பி வந்தபோது அவர் புத்தகம் எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். 
அவருடைய, üஎன் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும்ý என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஒரு படைப்பாளியாக மாறாமல விமர்சராகவே கடைசி வரை இருந்துவிட்டாரே என்ற ஆச்சரியம் எனக்கு அவர் மீது உண்டு.  எல்லோரையும் திருப்தி செய்வதுபோல் ஒரு புத்தகத்தை பாராட்டவே முடியாது.  எத்தனைப் புத்தகங்களைப் பற்றி தன் மனதில் பட்டதை எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் உண்டு.
காலையில் அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.  
 

கிராமீயப் பாடல்கள்

       1. பிள்ளையார் பிறந்தார்                    


        வடக்கே தெற்கே ஓட்டி
        வலது புறம் மூரி வச்சு
        மூரி ஒழவிலே
        முச்சாணி புழுதி பண்ணி
        சப்பாணி பிள்ளையார்க்கு
        என்ன என்ன ஒப்பதமாம்.

        முசிறி உழவிலே
        மொளச்சாராம் பிள்ளையாரு
        ஒடு முத்தும் தேங்காயை
        ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
        குலை நிறைஞ்ச வாழைப்பழம்
        கொடுக்கறமாம் பிள்ளையாரக்கு
        இத்தனையும் ஒப்பதமாம்
        எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு

குறிப்பு : பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையார்கள்  யார் என்று சொல்லப்படவில்லை.  விநாயகர் சிவ குமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.  உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.

சேகரித்தவர் :  கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்

       
       

   

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில்  படைப்பாளிகளைப் பேட்டி எடுத்து என்னுடைய இணையதளத்திலும் முகநூலிலும் கொண்டு வருகிறேன்.
    முதல் பேட்டி அசோகமித்தரனை வைத்து எடுத்தது.  அடுத்தது எஸ் வைதீஸ்வரனின் பேட்டியை வெளியிட்டேன். 
    மூன்றாவதாக சாருநிவேதிதாவைப் பேட்டி எடுத்துள்ளேன். 
    சமீபத்தில் சாருநிவேதிதாவின் இரண்டு நாவல்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.  ஒரு நாவல் ராஸ லீலா, இன்னொரு நாவல் புதிய எக்ûஸல்.  புதிய எக்ûஸல் நாவலை இப்போதுதான் படிக்கத் தொடங்கி உள்ளேன்.  867 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  எனக்குப் படித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகுமென்பது தெரியாது.  ஏற்கனவே அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  படித்து முடித்தப்பின் என் கருத்துகளை வெளியிடுவேன்.
எழுத்தாளர் சாருநிவேதிதா

புத்தக விமர்சனம் 11

அழகியசிங்கர்

 

    துளசிங்கப் பெருமாள் கோயில் வழியாக நான் டூ வீலரில் போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு வீட்டின் முன் வாசலில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.  கொஞ்சம் நின்று பார்த்தேன். அது பாரதியார் நினைவு இல்லம்.  எனக்கு உடனே புரிந்தது.  செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் நினைவு தினம்.  அதைக் கொண்டாட விளக்கு வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


    நான் அன்று ஞானக்கூத்தன் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன ஒரு தகவல் எனக்கு சற்று திகைப்பாக இருந்தது.  கோவில் யானை என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரை ஒன்றும் செய்யவிலலை என்று.  பாரதியார் கோவில் யானை என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்,  அந்த நாடகத்தில் வஜ்ரி என்ற அரசக் குமாரனைத்தான் காளி கோயிலில் உள்ள யானை துதிக்கையால் தள்ளி விட்டது.  அதைத்தான் பாரதியாருக்கு ஏற்பட்டதாக எல்லோரும் கதை விட்டிருக்கிறார்கள் என்கிற மாதிரி சொன்னார்.  

    இது குறித்து அவர் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.  என்னால் இதை நம்ப முடியவில்லை.  உண்மையில் பாரதியாருக்கு நடந்த ஒரு சம்பவத்தை அவர் நாடகத்தில் ஒரு கதா பாத்திரத்திற்கு ஏற்பட்டதாக எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றியது.

    வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் உள்ள பாரதியார் புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டேன்.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது தூரன் அவர்கள் எழுதிய பாரதியார் கட்டுரைகள், அவருடைய வாழ்க்கை வரலாறை எல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி நூல்நிலையத்திலிருந்து நான் எடுத்துக் கொண்டு படிப்பேன்.  மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் போகும்வரை மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வருவேன்.

    பாரதியார் வரலாறை பெ தூரன் அவர்கள் எழுதியதைப் படிக்கும்போது பாரதியார் மரணம்அடைந்த விதத்தைப் படிக்கும்போது, என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல் வருத்தம் ஏற்பட்டது உண்மை. 

    சமீபத்தில் நான் டிஸ்கவரி புக் பேலஸ் சென்றபோது, பாரதியாரின் ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது.  அப் புத்தகம் üபாரதியாரின் இறுதிக் காலம்ý என்ற பெயரில் ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் புத்தகம்.  அப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  வீட்டிற்கு வந்தவுடன் அதை முதலில் எடுத்துப் படித்தேன்.  கிட்டத்தட்ட 64 பக்கம் கொண்ட அப் புத்தகத்தை உடனே படித்து முடித்து விட்டேன். என் வாழ்க்கையில் ஒரு புத்தகத்தை வாங்கிய அன்றே படித்து முடித்தப் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

    பாரதியார் எப்படி தன் இறுதிக் காலத்தில் இருந்தார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விவரித்துக் கொண்டுபோகிறது.  பல உப நூல்களை வைத்துக் கொண்டு மணிகண்டன் ஒரு ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கிறார்.  மேலும் இப் புத்தகத்தில் கோவில் யானை என்ற நாடகத்தையும் சேர்த்திருக்கிறார்.  பாரதியார் எழுதிய இந்த நாடகத்தை யாரும் இதுவரை கொண்டு வரவில்லை.  1951ல் ஜனவரி மாதத்தில் கலைமகள் இதழில் வெளிவந்த இந்த நாடகத்தை திரும்பவும் இந்தப் புத்தகத்தில் கொண்டு வருகிறார்.

    பல பக்கங்களில் பாரதியாரைப் பற்றிய பிம்பத்தை எழுத்து மூலம் கொண்டு வருகிறார்.  உண்மையில் பாரதியார் என்பவர் யார்? அவர் எப்படி வாழ்ந்தார் என்றெல்லாம் பலர் அவரைப் பற்றி எழுதியதைக் கொண்டு படிக்க படு சுவாரசியமாய் மணிகண்டன் கொண்டு வருகிறார்.  

    புதுவையிலிருந்து பாரதியார் சென்னைக்கு திரும்புகிறார்.  அதாவது அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை கடப்பதற்காக அவர் சென்னை வருகிறார்.  சென்னையில் பாரதியாரை சந்தித்த சுதேசமித்திரனின் ஸி ஆர் ஸ்ரீநிவாஸன் இறுதிக்காலப் பாரதியாரை இப்படி சித்தரிக்கிறார் .

    ‘அன்று கண்ட பாரதி இன்றளவும் என் அகக் கண் முன் நின்று கொண்டே இருக்கிறார். நடத்தர உயரம், ஒற்றை நாடி மாநிறம் படைத்த மேனி.  பிரிபிரியாய்ச் சுற்றிய வால்விட்ட தலைப்பாகை.  அகன்ற நெற்றி.அதன் மத்தியில் காலணா அளவு குங்குமப் பொட்டு….’

    அமிர்தகுண போதினியின் ஆசிரியர் எஸ் ஜி இராமாநுஜலு நாயுடு பாரதியாரைப் பற்றி இப்படி விவரிக்கிறார் :

    ‘ஸ்ரீ பாரதியார் புதுச்சேரியினின்றும் வந்த பின்பு பழைய பாரதியின் உருவமே இல்லை.  ஒரு வங்காளி போன்ற உருவுடனும் காணப்பட்டார்.  அதற்கானபடி தலைப்பாகையும் பிளவும் பொருந்தியிரந்தது.  அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின.  எல்லாமே புதுவிதமாக இருந்தது.  ஒரு பிரம்ம ஞானி போன்றும் காணப்பட்டார்.’

    இறுதிக் காலத்தின் முதற் கட்டத்தில் கானாடுகாத்தானுக்கும் காரைக்குடிக்கும் பாரதி சென்று வந்தபோது அவரைச் சந்தித்த ராய.சொக்கலிங்கம் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

    இருபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திடீரென ஓர்நாள், சிவந்த உடம்பு – மொட்டைத் தலை,  முறுக்கிய எதிர் மீசை – குறுகுறுத்த கண்கள் இவற்றோடு கையில் தடியுடன் ஒரு கம்பீர உருவம் காரைக்குடியில் தோன்றியது – பாரதி, கூட ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவரும் ஒரு அரைப் பயித்தியம் மாதிரியே காணப்பட்டார்.  பாரதியாரோ ஒரு ஞானக் கிறுக்கர்.

    இவருடைய விபரத்தைப் படிக்கும்போது பாரதியாரை மொட்டைஅடித்து விடுகிறார்.  பாரதியாருடன் வந்தவரை அரைக் கிறுக்கும் என்றும், பாரதியாரை ஞானக்கிறுக்கு என்று கூறிப்பிடுகிறார்.

    பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.உ.சி வருந்தும்படி ஒரு நிகழ்வு நேர்ந்தது.  பாரதியாரும், குள்ளச்சாமியாரும் பிரம்பூரிலிருநத வ உ சி வீடு சென்றனர்.  குள்ளச்சாமி அங்கயே எண்ணெய் தேய்த்துக் குளிக்க, இருவரும் பின்னர் அபின் தின்று களி கொண்டனர்.  பாரதியாரைச் சிதைத்த இந்தப் பழக்கத்தையும் அதற்குத் துணை நின்ற குள்ளச்சாமியையும் வ உ சி வருத்தத்தோடு எண்ணிப் பதிவு செய்திருக்கிறார்.  

    பாரதியார் சொற்பொழிவு ஆற்றும்போது பல இடங்களில் மேள தாளங்களோடு பெரிய ஜனக் கூட்டம் கூடிப் பாரதியை வரவேற்றுக் கொண்டாடியதாக பதிவு செயதிருக்கிறார் மணிகண்டன்.

    பாரதியார் அவருடைய இறுதிக் காலத்தில் பலவித தொந்தரவுகளுக்கு அளாகியிருக்கிறார்.  அவர் கருத்துக்கு மாறாக மனைவி நடந்துகொண்டதால் ஏற்பட்ட கசப்பும், வெறுப்பும் போதை வஸ்துப் பழக்கம், கடலூரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த நாள்களில் மனநலம் குன்றியமை, எழுதிக்கொடுத்துவிட்டு  விடுதலை பெற்றமைக்காக அவருடைய மைத்துனரின் கோபத்திற்கு ஆளானதால்பலவித குழப்பங்களுக்கும் பாரதியார் உள்ளாகி இருந்தார். 

    இதுமாதிரியான குழப்பங்கள் பாரதி வாழ்வில் இருந்தாலும் பல சுவையான நிகழ்ச்சிகளும் அவர் வாழ்வில் நடக்காமல் இல்லை.
கழுதைக் குட்டியைக் கட்டித் தழுவிக்கொண்ட நிகழ்ச்சி கடைய வாழ்வில் நிகழ்ந்தது.  சிங்கத்தோடு உறவாடி உரையாடிய  நிகழ்வு திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  யானையோடு உறவாடிய நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் நிகழ்ந்தது. பாரதியார் புதுவையில் இருந்தபோது கொலை செய்யப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்ட ஆடு ஒன்றினை விலை கொடுத்து வாங்கிக் காத்த நிகழ்வும் நேர்ந்தது.

    இதில் உருக்கமான ஒரு நிகழ்ச்சியாக பாரதிதாசனைப் பற்றி குறிப்பிடுகிறார்.  பாரதிதாசன் ஒரு கதை உரையாடலில் பாரதியின் இறுதிக் காட்சியில் யானை தாக்கி கீழே தள்ளி விடுவதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் எழுதி உள்ளார்.  யானையால் தாக்குண்ட பாரதியை மருத்துவமனைக்கு சுமந்து செல்கிறது வண்டி என்று எழுதி முடித்த பாரதிதாசனும் உடன் ஒரு வண்டியிலேற்றிச் சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர்ப் பாரதிதாசன் உயிரோடு திரும்பவில்லை என்று மணிகண்டன் ஒரு தகவலைக் குறிபபிடுகிறார். இதைப் படிக்க சற்று வருத்தமாகவே இருக்கிறது.

    பாரதியாரை யானைத் தாக்கிய சம்பவம் பலவாறு பொய்யும் புனைவுமாக இந்திய அளவில் ஓர் இதழில் எழுதப் பட்டதை பாரதியாரின் தம்பி சி விசுவநாதன் எடுத்துரைத்திருக்கிறார்.  மாடர்ன் ரெவ்யூ என்ற பத்திரிகையில் பாரதியார், யானை முன் பயத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியைக் காப்பாற்ற தன் உயிரையே மாய்த்துக் கொண்டதாக எழுதியிருந்ததாம்.    இப்படி தப்பான தகவல்கள் பாரதியாரைப் பற்றி பரவப்பட்டுள்ளது.  

    பாரதியார் எந்தக் காலத்தில் யானையால் தாக்கப்பட்டார் என்ற தகவலை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை.  உண்மையில் பாரதியார் யானையால் தாக்குண்ட பிறகு மூன்று மாதம் கழித்து இறந்தார் என்ற செய்தி தவறானதாக இப் புத்தகம் மூலம் தெரிகிறது. யானையால் தாக்குண்ட சம்பவம் 9 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்குமென்று தனக்கு நடந்த சம்பவத்தை வைத்துத்தான் கோவில் யானை என்ற நாடகத்தை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.  இந்த நாடகம் டிசம்பர் மாதம் 1920 ஆண்டோ ஜனவரி 1921ஆம் ஆண்டோ சுதேசமித்திரன் இதழில் பிரசுரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    மணிகண்டன் கோவில் யானை நாடகம் மூலம் பாரதியாரின் இறுதிக்கட்டத்தை இப்படிக் கூற முற்படுகிறார்.  கோவில் யானை என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் ஜனவரி மாதம் 1921ல் பிரசுரமாகி இருப்பதால், பாரதியார் இந்த நிகழ்ச்சி நடநது 9 மாதங்கள் கழித்துதான் இறந்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.  சில வரலாற்று ஆசிரியர்கள் தவறாக யானைத் தாக்கிய பிறகு மூன்று மாதங்களில் பாரதியார் இறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு என்றும் குறிப்பிடுகிறார். வயிற்றுக் கடுப்பு நோயாலதான் பாரதியார் இறந்திருக்கிறார்.

    ஆனால் என் நண்பர் ஞானக்கூத்தனோ கோவில்யானை என்ற நாடகத்தில் நடந்த கட்டுக் கதையை உண்மைச் சம்பவமாக மாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார். பாரதியாரை யானை தாக்கவிலலை என்கிறார்.

    உண்மையில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான வரலாற்றுக் கதைப் புத்தகத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது.  கோவில் யானை என்ற பெயரில பாரதியார் எழுதிய நாடகமும் பிரமாதம்.

பாரதியாரின் இறுதிக் காலம் – ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் – பக்கம் 64 – விலை : ரு,60 – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 – தொலைபேசி எண் : 04652-278525
   
   

      
   

வேறொரு கோணத்தில்…….

     

அழகியசிங்கர்

    செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உலக இதய நாள்.  பல மருத்துவர்கள், பல மருத்துவ மனைகள் பலவித அறிவுரைகள்.  ஒருவர் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படித்தால் சற்று பயம்தான் வரும்.


    ஆனாலும் இதயத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.  நோய் என்று வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியுமா?  அல்லது பணிந்துதான் போய் விட வேண்டுமா? தெரியவில்லை.  

    ஆரம்பத்தில் நான் வங்கியில் சேர்ந்தபோது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.  துள்ளும் உடலுடன் கூடிய துள்ளும் மனது.  பரபரவென்று  இருந்தேன். வங்கியிலும் சாதாரண வேலை.  பெரிய பொறுப்பெல்லாம் கிடையாது.  வங்கியும் ஆரம்பத்தில் என்னை பயமுறுத்தவில்லை.  வீடு பக்கத்தில் அலுவலகம்.  காலை பத்துமணிக்குச் சென்றால் மாலை ஓடி வந்து விடலாம்.  பத்து மணி அலுவலகத்திற்கு 9 மணிக்குக் கிளம்பினால் போதும்.  அலுவலகம் போவது ஒரு பிக்னிக் போவதுபோல் ஜாலியாக இருந்தது.

    ஆனால் போக போக ஒரே மாதிரியான வேலை போர் அடித்தது.  இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டுமென்று தோன்றியது.  வங்கியில் சட்ட திட்டங்கள் மாறின.  கிளார்க் இருந்தாலும் தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.  அந்தச் சட்டத்திற்குப் பயந்து ஒருசிலர் வங்கியை விட்டு ஓடிவிட்டார்கள்.

    நான் சுருக்கெழுத்தாளனாக இருந்ததால் எனக்கு அந்தச் சட்டம் பலிக்கவில்லை.  ஆனால் போரடிக்கும்படி தலைமை அலுவலகத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன்.  சரி என்று முடிவு பண்ணினேன்.  பதவி உயர்வு பெறுவது என்று.  என்ன முட்டாள்தனமான முடிவு.  

    நான் வீட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று.  என்னுடன் யாரும் வரவில்லை.  என்னை ஒரு கிராமத்தில் பணி செய்ய கட்டளை இட்டார்கள்.  பதறி விட்டேன்.  சென்னையைத் தவிர எங்கும் போகத் தெரியாதவன் நான்.  கிராமத்தில் போய் எப்படி இருப்பது?  இது ஒரு மன அழுத்தம்.  நான் தைரியமாக அங்கு போனேன்.  என் வங்கி இருந்த கிராமம் கும்பகோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், மையிலாடுதுறையிலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.  மயிலாடுதுறை எனக்குப் பிடித்த ஊர்.  என் உறவினர்கள் இருக்கும் ஊர்.  அங்கிருந்து ஒரு டூ வீலரைப் பிடித்துக்கொண்டு கிராமத்திற்குச் சென்றேன்.  

    காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் போவதற்கும், மாலையில் (உண்மையில் இரவு) திரும்பி வீடு வருவதற்கும் போதும் போதுமென்று ஆகிவிடும்.  நான் தலைமை ஆபிஸில் சுருக்கெழுத்தாளனாக இருந்தபோது ராஜா மாதிரி இருந்தேன்.  பெரிய அதிகாரியிலிருந்து சின்ன அதிகாரி வரை மரியாதையாக இருந்தார்கள்.  கீழ்நிலை ஊழியர்கள் சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.  

    ஆனால் கிராமத்து பிராஞ்ச் அலுவலகத்தில் எல்லாம் தலைகீழ்.  யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.  கீழ் மட்ட வேலையிலிருந்து எல்லா வேலைகளையும் என் தலையில்தான் வந்து விடியும்.  வாடிக்கையாளர்களும் மிரட்டல் தொனியுடன் பேசுவார்கள்.  நான் சேர்ந்த அடுத்த நாளே என் வட்டார அலுவலகத்திற்குப் போன் செய்தேன்.  ‘என்னை மாற்றும்படி,’ வந்தது பதில் கோபமாய்.  ‘இன்னும் தள்ளி போடட்டுமா?’ என்று.  மன அழுத்தம் தாங்க முடியாமல் இருந்தது.  லீவு கேட்டால் லீவு கிடைக்காது.  சரியான ஓட்டல் இருக்காது.  சாப்பாடு இருக்காது.  அலுவலகத்தில் வேலை கசக்கிப் பிழியும்படி இருக்கும்.  

    திரும்பவும் சுருக்கெழுத்தாளனாகப் போய்விடுகிறேன் என்றால் ‘அதெல்லாம் முடியாது.  உன்னை தூக்கி திருவண்ணாமலக்கு அடிப்போம் என்றார்கள்.’  நான் என்ன ரமண மகரிஷியா திருவண்ணாமலைக்குப் போவதற்கு.  மன அழுத்தம்.  அந்தச் சமயத்தில் ரத்தக் கொதிப்பு நோயுக்கும் சர்க்கரை நோயுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  டென்ஷன் இருந்தாலும் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.  எனக்கு அப்போதெல்லாம் உதவியது புத்தகங்கள்.  

    நான் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.  என்னுடன் பணிபுரியும் பலர், இந்த மன அழுத்தம் தாங்காமல் மருத்துவமனைகில் போய் தஞ்சம் அடைந்தார்கள்.  ஒரு சிலர் உயிரையே விட்டுவிட்டார்கள்.

    ஆனால் இதற்கெல்லாம் இரக்கப்பட்டு அலுவலகம் ஒன்றும் செய்யவில்லை.  அது கருணையே இல்லாமல் இருந்தது.  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையை விட்டு ஓடிவிட்டார்கள்.  அல்லது பொட்டு பொட்டென்று உயிரை விட்டார்கள்.

    என்னைப்போல் பதவி உயர்வுப் பெற்று மாட்டிக்கொண்ட ஒரு அதிகாரிக்கு பைல்ஸ் பிரச்சினை.  இருக்கையில் அமரவே முடியாது.  யாராவது உதவி செய்ய வேண்டும்.  அவர் மருத்துவ சான்றிதழ்களுடன் அவர் எங்கேயிருந்து வந்தாரோ அங்கு மாற்றும்படி கெஞ்சிக் கேட்டு விண்ணப்பித்தார்.  யாரும் கண்டு கொள்ளவில்லை.  அவர் வேறு வழியில்லாமல், üநான் திரும்பவும் க்ளார்க்காகப் போகிறேன்ý என்று எழுதிக் கொடுத்தார்.  அவரை அவர் விரும்பிய இடத்திற்கு மாற்றாமல் இன்னும் தூக்கி அடித்தது இரக்கமற்ற நிர்வாகம்.

    நான் இருந்த கிளை அலுவலகத்தில்தான் கும்பகோணத்திலிருந்து ஒரு தலைமை காசாளர் வந்து கொண்டிருந்தார்.  50க்கும் மேல் வயது.  ஒருநாள் அவருக்கு உடம்பு சரியில்லை.  ‘என்னமோ செய்கிறது,’ என்றார் எங்களிடம்.  ‘என்ன என்ன தெளிவாக சொல்லுங்கள்..’ என்று கேட்டேன்.  ‘தலையைச் சுற்றுவது போல் இருக்கிறது… வாந்தி எடுக்கும்படி தோன்றுகிறது,’ என்றார்.  ‘இது பித்தமாக இருக்கும்…’ என்றேன்.  ஆனாலும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு வந்து காட்டினோம்.  அந்த மருத்துவர் அவரை கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய் காட்டும்படி சொன்னார்.

    நான் அவரை அழைத்துக்கொண்டு இன்னும் இரண்டு தற்காலிக ஊழியர்களை அழைத்துக்கொண்டு காரில் கும்பகோணம் சென்றேன்.  போகும்போது அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தேன்.  ‘சில சமயம் நாம் சாப்பிடுவது ஒத்துக்காது..நீங்கள் காலையில் தக்காளி சாதம் சாப்பிட்டு வந்துள்ளீர்கள்..அதில் உள்ள எண்ணெய் கோளாறு செய்யும்..’ என்றேன்.  அவரும் நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்தார். 

    30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணம் அடைய அரைமணிக்கு மேல் ஆகிவிட்டது.  கும்பகோணத்தில் உள்ள சுகம் என்ற மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனோம்.  அங்குள்ள மருத்துவர் அவரை தனியாக அழைத்துக்கொண்டு போய் பரிசோதனை செய்தார்.  பின் அவரை அங்கயே படுத்திருக்கும்படி சொல்லிவிட்டு எங்களிடம் வந்தார்.  

    ”அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு  உடனே சொல்லிவிடுங்கள்.  அவருக்கு வந்திருப்பது மாஸிவ் ஹார்ட் அட்டாக்…24 மணி நேரத்திற்கு ஒன்றும் சொல்ல முடியாது…”என்றார்.

    அதைக்கேட்டு நான் பதறி விட்டேன்.  என் உடம்பு வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.  அவர் வீட்டில் போய் சொன்னோம்.  அவர் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து விட்டார்.  1 மாதத்திற்கு மேல் அவர் அலுவலகம் வரவில்லை.  

    ஆனால் திரும்பவும் அவர் 30 கிலோமீட்டர் உள்ள கிராம வங்கிக்கு வருவதற்கே பயப்பட்டார்.  மாற்றல் கேட்டு விண்ணப்பித்தார்.  இரக்கமற்ற நிர்வாகம் அவருக்கு மாற்றல் கொடுக்க வில்லை.  அவர் வேலை வேண்டாமென்று விடும்படி நேர்ந்தது.  இரக்கமற்ற நிர்வாகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

   
   
     
   

மனோரமா என்கிற மகத்தான நடிகை

அழகியசிங்கர்


   
    சனிக்கிழமை இரவு மனோரமா என்ற நடிகை இறந்த செய்தி கேள்விப்பட்டேன்.  அது முதல் மனோரமா என்ற நடிகையைப் பற்றி யோஜனை செய்து கொண்டு வருகிறேன்.  உலக அளவில் இவ்வளவு அதிகமான படங்களில் நடித்த நடிகை யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.  தன் நடிப்பாற்றலால் எல்லார் மனதையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா.  

    ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பெரும் பகுதியை மனோரமாவும் நாகேஷ÷ம் தங்களுடைய நடிப்பாற்றலால் கலகலக்க வைத்தவர்கள்.  தமிழ் சினிமாவில் ஒரு நடிகரோ நடிகையோ நீண்ட ஆண்டுகள் நடித்துக் கொண்டிருப்பது திறமை மட்டும் இருந்தால்தான் முடியும்.  அதுவும் ஆபாசம் எதுவும் இல்லாமல் நகைச்சுவைக்காகவும் குணச்சித்திர நடிப்புக்காகவும் பெயர் பெற்றவர் நடிகை மனோரமா.

    பொதுவாக ஒரு நடிகை நடித்துக்கொண்டிருக்கும் போது அந்த நடிகையை அப்புறப்படுத்த வேற சில நடிகைகளும் முன் வருவார்கள்.  மனோரமாவுக்கு மாற்றாக இன்னும் சில நகைச்சுவை நடிகைகள் தோன்றாமல் இல்லை.  ஆனால் மனோரமாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    எல்லா நடிகர்களின் அன்புக்கும் பாத்திரமானவர் அவர்.  நாகேஷ் போன்ற நடிகருடன் போட்டிப் போட்டுக்கொண்டு நடிப்பதில் மனோரமாவைப் போல் வல்லவர் யாருமில்லை.  ஏன் நாகேஷ் என்று குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் சினிமாவில் நாகேஷின் பங்கும் முக்கியமானது என்பதால்தான்.  

    எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் எல்லோரும் அந்தத் துறையை விட்டு விலகித்தான் போகவேண்டும்.  ஆனால் மனோரமா விஷயத்தில் நீண்ட காலம் அவர் அந்தத் துறையில் நீடித்திருப்பதற்குக்  காரணம் அவருடைய திறமை மட்டுமே.

    உலக சினிமா சரித்திரத்தில் மனோரமா மாதிரி யாராவது நடிகை இருந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை.  இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  யாராவது சினிமா வல்லுநர்கள்தான் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்.    

    சரி, மனோரமா என்ற நடிகைக்கு எதுமாதிரியான கௌரவம் நாம் அளித்திருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள நடிகைகளில் முன்மாதிரி மனோரமா என்று நான் நினைக்கிறேன்.  நான் சொல்வதில் எதாவது தவறு இருக்கிறதா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். இன்னும் கூட குழந்தைத்தனமான  அவர் முக பாவமும், அலட்சியமாக உதிர்க்கும் வாசன உச்சரிப்பும் யாராலும் மறக்க முடியாது.

    எந்த ஒருவருக்கும் அவர்கள் செய்து கொண்டு வரும் செயல் முற்றுப்பெற்றுவிட்டால், உடனே அவர்களுடைய மரணமும் தொடர்ந்து வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.  தொடர்ந்து நடித்து வந்த மனோரமாவால் நடிக்காமல் போனபின் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது.   

    நான் அறிந்தவரை அவர் ஆயிரம் படங்கள் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.  அவர் இன்று இல்லை என்றாலும் நீங்காத நினைவாக அவர் படங்கள் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.   இனி யாராலும் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது.  அவரை மாதிரி யாராலும் உருவாகவும் முடியாது என்றே தோன்றுகிறது. 

    அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
   

கோயிலுக்குள் ஒரு யானை

‘மாஸ்கோ நகரம் மிகவும் நேசித்த எழுத்தாளரான ஆண்டன் செகாவின்
சவப்பெட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பச்சை நிறத்தில் இருந்த அந்த
ரயில் பெட்டியின் கதவில் பெரிய எழுத்துகளில் ‘ஆயிஸ்டர்களுக்காக’ என்று
எழுதியிருந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த கூட்டம் சவப்பெட்டியைத்
தொடர்ந்து சென்றது. அப்போது இறுதி மரியாதைக்கான ராணுவ இசை முழங்கிற்று.
செகாவுக்கு ராணுவ மரியாதையா என்று கூட்டம் வியப்படைந்தது. ஆனால் அவர்கள்
தொடர்ந்து சென்ற ராணுவ அதிகாரியின் சவப்பெட்டி மஞ்சூரியாவிலிருந்து வந்தது.
விஷயம் தெரிந்ததும் செகாவின் இறுதி மரியாதைக்கான கூட்டம் சிரித்தது.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் இராது’ –
இப்படி எழுதியிருக்கிறார் செகாவின் சமகால எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி.

செகாவின் இறுதி ஊர்வலத்தில் நேரில் கலந்துகொண்ட கார்க்கி அந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இல்லை என்றார்.
ஆனால் அவரே தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அந்தக் கூட்டத்தில்
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரம் முதல் ஐயாயிரம் வரைக்கும் என்று
சொல்லியிருக்கிறார். கட்டுரையில் ஒன்று சொல்கிறார், கடிதத்தில் ஒன்று
சொல்கிறார் கார்க்கி. வெறுமனே துக்கம் கொண்டாடப் போனவர் மட்டுமல்ல
கார்க்கி. எத்தனைப் பேர்கள் இறுதி ஊர்வலத்தில் வந்தார்கள் என்று
மட்டுமல்லாமல் அவர்களில் சிலர் என்ன பேசினார்கள் என்று
கவனித்துக்கொண்டிருந்தவராகவும் இருக்கிறார் காரக்கி. புதிய அழகான உடை
உடுத்திய ஒருவர் புறநகரில் தான் வாங்கிய வீட்டின் வசதிகளைப் பற்றியும்,
சுற்றிலும் அமைந்த இயற்கை அழகைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தாராம்.
இன்னொருவர் வளர்ப்பு நாய்களின் அறிவுடைமை பற்றிப் பேசினாராம். அழகான குடை
பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு பெண் ஒருவரிடம் – நல் ப்ரேம்
போட்ட கண்ணாடி அணிந்தவர் – ‘ஹி இஸ் அன்பிலீவப்லி நைஸ் அண்ட் ஸோ விட்டி’
என்று சொல்லிக்கொண்டே நடந்தாராம். இவையெல்லாம் நமது சிந்தனைகளைத்
தூண்டுகின்றன. கார்க்கியிடம் எழுத்தாளர் எப்போதும் எந்தத் தருணத்திலும்
விழித்திருக்கிறார் என்பது தெளிவு. ஆனால் எவ்வளவு நம்பலாம் என்று சொல்ல
முடியாது. முதலில் நூறென்றும் பிறகு பல ஆயிரம் என்றும் நேரில் பார்த்த அவரே
சொல்வாரானால், பாரதியைக் கோவில் யானை தாக்கிய காட்சியை நேரில்
பார்த்தவர்கள் என்று நம்பப்படுபவர்கள் எதுவும் சொல்லாதிருக்க அல்லது என்ன
சொன்னார்கள் என்பது தெரியாதிருக்க யார் என்ன சொன்னாலும் நம்ப நேர்கிறது.

யானையால் பாரதி தாக்கப்பட்டாரா? அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
யார் சொன்னார்கள்? தெரியவில்லை. ஆனால் ஒரு செய்தி அக்காலத்தில்
வெளிவந்துகொண்டிருந்த சுதேசமித்திரனில் வெளியாகியிருக்கிறது. எந்தத்
தேதியில் வெளியாயிற்று அந்தச் செய்தி? பாரதியால் பூணூல்
அணிவிக்கப்பட்டதற்காகப் பெயர் பெற்ற கனகலிங்கம் ‘சுதேசமித்திரனில்
பார்த்தசாரதி கோவில் யானை பாரதியாரைத் தாக்கியது’ என்ற வாக்கியம் கண்ணில்
பட அவர் திருவல்லிக்கேணிக்குப் போய்ப் பார்த்தாராம். ஆறு சொற்களாலான
வாக்கியம் செய்தித் தாளுக்குள் இருந்ததா? அல்லது முக்கியச் செய்திகளைக்
கூறும் சுவரொட்டிதானா? அது எப்போது எந்த நாளில் வெளியாயிற்று? சாதாரணமாக
மறுநாள் வெளியாகியிருக்கக்கூடும். அல்லது தேதி குறிப்பிடாமல் ‘அண்மையில்’
என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். அந்தச் செய்தி பாரதி யானையால்
தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாளுக்கு எத்தனை நாள்கள் கழித்து வெளியாயிற்று?
தெரியாது. அந்தச் செய்தி ஆங்கில நாளேடுகளில் வெளிவந்ததா? தெரியாது. ஆனால்
சுதேசமித்திரன் பெயர் மட்டும்தான் அந்தச் சம்பவம் குறித்துக்
கூறப்படுகிறது. பாரதியின் பள்ளித் தேழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்

‘சமீபத்தில் சென்னையில் யானைக்குப் பழமருந்தப் போய் மிதியுண்டு (பாரதி) பலநாள் வருந்தியது பத்திரிகை படிக்கும் பலருக்கும் தெரியும்.’

என்று எழுதியிருக்கிறார். பலருக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம்?
பாரதியார் வண்டியில் கொண்டுபோகப்பட்டுப் புற நோயாளியாகப் பார்க்கப்பட்டு
உடனே வீடு திரும்பியிருக்கிறார். பாரதிக்கு ஏற்பட்ட காயம் பெரிய காயமாக
இருந்திராது. எனவேதான் உடனே அவர் வீடு திரும்ப முடிந்தது. யானையால் –
சோமசுந்தர பாரதி சொல்வது போல – பாரதியார் ‘மிதியுண்டிருந்தால்’ அது
சாத்தியமா?

‘இவர் (பாரதியார்) சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என்று வற்புறுத்தி வாதிக்கக் கேட்டிருக்கிறேன்.’

என்று ஒரு செய்தியைச் சேர்த்திருக்கிறார் சோமசுந்தர பாரதியார்.

சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என பாரதியார்
சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் வற்புறுத்த என்ன இருக்கிறது? இல்லை என்று
பிறர் மறுத்தபோதுதானே வற்புறுத்த நேரும்? பிறகு வாதிக்கக்
கேட்டிருப்பதாகவும் சொல்கிறார் பாரதியின் நண்பர். இங்கேயும் வாதிக்க என்ன
இருக்கிறது? நான் சர்வ ஜீவராசிகளுடனும் நேசமுடையவன் என்று ஒருவன் சொன்னால்
யார் கிடையாது என்று மறுக்கப்போகிறார்கள்? ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’,
’வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ போன்ற வரிகளை எழுதியவர் பாரதி. இந்தச்
செய்தியை வைத்துக்கொண்டு கோயில் யானையால் பாரதி தள்ளப்பட்ட சம்பவம்
புனையப்பட்டதாகக் காட்சி தரத் தொடங்குகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகச் சொல்லப்படும் குவளைக் கண்ணனோ,
அல்லது மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியரோ தாங்கள் எழுதிய கட்டுரைகளில்
இந்நிகழ்ச்சி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் இவர்களில்
ஒருவரான குவளைக் கண்ணன்தான் பாரதியாரை யானையிடமிருந்து மீட்டதாகக்
கூறப்படுகிறது. அது உண்மையென்றால் குவளைக் கண்ணன் அந்தச் செய்தியைச்
சொல்லாமல் விடுவாரா என்ன. இந்தக் கதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு
பாரதிக்கு ஒரு ஆகிருதி ஏற்படத் தொடங்கியபோது அவருடைய மனைவி செல்லம்மாவால்
மகள் தங்கம்மாளுக்கு சொல்லப்படுகிறது. அது முதல் பாரதியின் கதையில்
இச்சம்பவம் வந்து அமர்கிறது.

செல்லம்மாள் ஓரளவு செய்தியைக் கூறியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்நிகழ்ச்சி இப்படித்தான் நடந்ததென்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது.
பார்க்காதவர்கள் புனைந்த கதை இது. செல்லம்மா சொன்ன கதை அகில இந்திய அளவில்
பரவிவிட்டது. ஒரு கவிஞர் யானையால் தள்ளப்பட்டார், அதனால் விளைந்த காயத்தால்
இறந்தார் என்பது சுவாரசியமான கதையல்லவா? அதை யாரும் ஆராய்ந்தார்கள் என்று
சொல்ல முடியாது. பாரதியுடன் நேர்ப் பழக்கம் இருந்த வ. ராமஸ்வாமி, பாரதியின்
வாழ்க்கை வரலாற்றை எழுதி அளித்தவர் – இந்த நிகழ்ச்சியை அவர் மனைவி
செல்லம்மா சொன்னபடியே ஏற்றுக்கொள்கிறார். பின்பு கதையைப் பொலிவு
செய்கிறார். பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதி வாழ்ந்ததாக
வ.ரா. சொல்கிறார். பாரதி வாழ்ந்த தொல்சிங்கப் பெருமாள் கோயில் தெரு
பார்த்தசாரதி கோயிலுக்குப் பின்பக்கத்தில் உள்ளது என்பதே தெளிவானதாகும்.
பாரதி தன் வீட்டிலிருந்து பார்த்தசாரதி கோயிலுக்குப் போக வேண்டுமென்றால்
ஏறக்குறைய நூறடிக்கு மேல் நடக்க வேண்டும்.

பாரதியின் மகள் சகுந்தலா, யானை நிகழ்ச்சியை ஜாக்ரதையாக விவரிக்கிறார்.
சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்தார் பாரதி என்கிறார் இவர். சில நாளாக
இவர் கோயில் பக்கம் போகவில்லை என்பதால் யானைக்கு மதம் பிடித்திருந்ததாக
சொல்லப்பட்டது அவருக்குத் தெரியவில்லை என்பதற்காகக் கூறப்பட்டுள்ளது. அவர்
சொல்படி ‘யானைக்கு மதம் பிடித்திருந்ததாம். நான்கு கால்களையும் சங்கிலியால்
அதைக் கட்டியிருந்தார்களாம். (ஆனால்) ஜனங்கள் கம்பி வேலிக்கு வெளியே
நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களாம். யானைக்கு மதம்
பிடித்திருந்தால் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பார்களா? பார்க்க
அனுமதிக்கப்படுவார்களா? அந்த ஆண்டு 1921ம் ஆண்டாக இருந்தாலும் சரி. பாரதி
கம்பி வேலிக்கு உள்ளே போனாராம். ஆனால் ஜனங்கள் யாரும் தடுக்கவில்லையாம்!
பாரதியின் கையிலிருந்து பழத்தை வாங்கிக்கொண்ட யானை அவரைத் துதிக்கையால்
கீழே தள்ளிவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கிடையில் பாரதி
விழுந்துவிட்டார். எழுந்திருக்கவில்லை. இப்படிக் கூறும் சகுந்தலா

ஜனங்கள் அவரைத் (பாரதியை) தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்கள்

என்கிறார். கோயில் வாசல் மண்டபம் என்றால் எது? இப்போது இருக்கும் பகுதி.
அதாவது பிரதான வாசலுக்கு – கொடிமரத்துக்கு – முன்னே அமைந்துள்ள பெரிய
கதவுகள் உள்ள பகுதி. அப்படியானால் யானை எங்கே கட்டப்பட்டிருந்தது?
கோயிலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. எல்லாக்
கோயில்களிலும் யானை கோயலுக்குள்ளேயே ஓரிடத்தில் கட்டி நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும். எனவே பாரதி கோயிலுக்குள் போய்விட்டிருக்கிறார்.
அங்கு செல்லம்மா சொல்வது போல் பாரதியிடம் பழம் வாங்கிக்கொள்ளும் யானை
அவரைத் தள்ளி விட்டிருக்கிறது.

ஆனால் வ.ரா.வின் கதையில் பாரதிக்கும் யானைக்கும் உள்ள சகோதரத்வம்
முதிர்ந்துவிட்டது. பாரதி யானையிடம் போய் ‘சகோதரா’ என்று பழங்களை
நீட்டினாராம். சகோதரா என்று யானையைப் பாரதியார் அழைத்ததாக வ.ரா.வுக்குத்
தெரியவந்தது எப்படி? கற்பனைதான். வ.ரா. கதையை இன்னும் உக்கிரமாக
வர்ணிக்கிறார். பாரதி யானைக்குப் பக்கத்தில் போனபோதுதான் அது வெறி கொண்டது
போல் வ.ரா. சொல்கிறார்.

யானையோ பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கோட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டது.

யானைக்குக் கோட்டமா? கோயில் யானைக்குக் கோட்டம் கட்டியிருந்ததாகத்
தெரியவில்லை. அப்படியிருந்தால் அந்தக் கோட்டத்தை வ.ரா.தான் கட்டியிருக்க
வேண்டும். வ.ரா.வின் வர்ணனையைப் படித்தால் யானை துதிக்கையில் பாரதியாரைத்
தூக்கிக்கொண்டு தன்னுடைய இடத்துக்குப் போவது சித்திரமாவதைப் பார்க்கலாம்.

இந்தச் சித்திரப்படி பாரதி யானையின் துதிக்கையில் இருக்கும்போது
தப்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் சும்மா இருந்தது போல்
தெரிகிறது. இப்படி நடந்திருந்தால் பாரதி பெரிய காயங்களைப் பட்டிருப்பார்.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான் இராயப்பேட்டை
மருத்துவமனையில் அவரைப் புறநோயாளியாக மட்டுமே வைத்துக்கொண்டு முதல் உதவிகள்
(?) செய்து அனுப்பிவிட்டார்கள்.

ரா. கனகலிங்கம் பாரதியை யானை சம்பவத்துக்குப் பிறகு சந்திக்கிறார்.
அப்போது பாரதி அவரிடம் சொன்னதாக அவர் சொல்கிறார்: பாரதி சொன்னாராம்:

‘எப்போதும் நான் அந்த யானைக்கு வெல்லம்
கொடுப்பது வழக்கம். அன்று அது தென்னை ஓலையைத் தின்று கொண்டிருந்தது.
அச்சமயம் நான் வெல்லத்தை நீட்டினேன். அது தலைகுனிந்த வண்ணம் ஓலைப்
பட்சணத்தைப் பட்சித்துக் கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கவில்லை. என்னைப்
பாராமலேதான் தும்பிக்கையால் தள்ளிவிட்டது.’

கனகலிங்கம் எழுதியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. பாரதி தன்
வீட்டில் அன்றாடம் பேசியிருக்கக்கூடிய தமிழாக அவருடைய பேச்சு
அமைந்திருக்கிறது. பட்சணம், பட்சித்தல் என்ற சொற்கள் அக்காலத்தில்
வழங்கிவந்தவைதான். பாரதி கனகலிங்கத்தைப் பார்த்து இளம் புன்னகை செய்ததாகக்
கனகலிங்கம் குறிப்பிடுகிறார். எனவே பாரதி அப்போது மோசமான நிலையில் இல்லை
என்பது தெளிவு. பாரதி யானைக்கு வெல்லம் கொடுக்கப் போனதாகக் கூறுகிறார்.
அதுவும் அதுதான் தனது வழக்கம் என்கிறார். ஆனால் சகுந்தலாவோ பாரதி பழம்
கொடுக்கப் போனதாகக் குறிப்பிடுகிறார். யானை தென்னை ஓலை
தின்றுகொண்டிருந்ததாகப் பாரதி சொன்னதும் கவனிக்கத் தகுந்தது. தென்னை
ஓலைகள், தேங்காய்கள் இவற்றைப் பாகன்தான் கொடுப்பான். யானை நல்ல நிலைமையில்
இருந்ததையே இந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. தனக்குத் தெரிந்த ஒருவர்
தனக்கு விருப்பமான ஒரு பொருளைத் தருகிறார் என்பதை யானை கவனிக்கவில்லை
என்கிறார் கனகலிங்கம். யானை அவரைத் தள்ளியது ஒரு பிழையே தவிர மதத்தினால்
அல்ல என்றுதானே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. யானைக்கு மதம்
பிடித்திருந்தது, சங்கிலியால் கால்களைக் கட்டியிருந்தது போன்ற செய்திகள்
எதுவும் கனகலிங்கத்தின் கூற்றில் காணப்படவில்லை. பாரதி தன் நண்பர் பரலி.
சு. நெல்லையப்பர் செய்ய முன்வந்த மருத்துவ உதவியை நிராகரித்திருக்கிறார்.
பாரதி தனக்கு சிறப்பான சிகித்சை தேவைப்படவில்லை என்றுதானே அதை அவர்
நிராகரித்திருப்பார். தனக்குத் தேவைப்படும் ஒன்றைப் பிறரிடம் கேட்கத்
தயங்கும் இயல்புடையவர் இல்லை பாரதி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

யானைக் கதையில் பாரதியின் மகள் சகுந்தலா எழுதுகிறார்:

என் தந்தை எழுந்திருக்கவில்லை.
முகத்தினின்றும் ரத்தம் பெருக்கெடுத்துவிட்டது. யானை தன் நண்பனுக்குத்
தீங்கு இழைத்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல
அசையாமல் நின்றுவிட்டது.

இந்த வர்ணனை, குறிப்பாகப் பச்சாதாபம் என்ற சொல் மற்றும் பாரதிக்கு
யானையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயம் எல்லாம் பாரதி எழுதிய ‘கோயில்
யானை’ என்ற நாடகத்தை நினைவூட்டுகிறது. கோயில் யானை நாடகக் கதையில்
கதாநாயகன் வஜ்ரி கோயில் யானைக்குப் பழம் கொடுக்கும்போது யானையால் அவன்
தள்ளப்படுகிறான். யானையைப் பற்றிப் பாரதி எழுதுகிறார்:

யானை தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தி உடைத்துவிட்டுப் பின் பச்சாதாபம் எய்தும் குழந்தை விழிப்பது போல விழித்துக் கொண்டு நின்றது.

கோயிலில் ஒரு யானை, அதற்குத் தின்பண்டம் கொடுக்க ஒருவர் போவது, அவரை
யானை தள்ளிவிடுவது, இவையெல்லாம் பாரதி எழுதிய கோவில் யானை என்ற நாடகத்தில்
வருகிற நிகழ்ச்சிகள். இவையே பாரதிக்கும் நடந்ததாக சாதித்துவிட்டார்கள் போல்
தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தில் வந்து பாரதியை யானையிடமிருந்து
மீட்டதாகக் கூறப்படும் குவளைக் கண்ணனோ ஸ்ரீநிவாஸாசாரியரோ ஒன்றும்
சொல்லாதிருக்க, இடத்தில் இல்லாதவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக
சாட்சி சொல்கிறார்கள். பத்திரிகையில் பாரதி யானையால் தள்ளப்பட்ட செய்தி
வந்ததாகச் சொன்னவர்கள் அதன் விவரத்தைத் தர இயலவில்லை.
ஆராய்ச்சியாளர்களுக்கும் இதைக் கண்டுபிடித்து உண்மை நிலை என்னவென்று
தெரிவிக்க இயலவில்லை.

குறிப்பிட்ட நாளன்று பாரதிக்கு ஏதோ உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்க
வேண்டும். தனது வீட்டிலிருந்து நூறடித் தொலைவில் உள்ள பார்த்தசாரதி
கோயிலுக்குப் போகும்போது அல்லது கோயிலின் முன்வாசலை அடைந்தபோது அவருக்குத்
தற்காலிக உடல்நலக் குறைவு ஏற்பட்டு விழுந்திருக்க வேண்டும். முதல் உதவி –
சிறிய ஒட்டல்கள் – சுத்திகரிப்புகள் முதலியன தேவைப்படும் அளவுக்கு அவருடைய
காயங்கள் இருந்திருக்கலாம். அல்லது பாரதியாருக்கு வீட்டிலேயேகூட ஏதாவது
நிகழ்ந்திருக்கலாம். எது உண்மை என்று தெரிந்துகொள்ள முடியாதபடி கோயில் யானை
தள்ளிய கதை என்ற கம்பளியை அவர் மீது போர்த்திவிட்டார்கள் என்று
தோன்றுகிறது.

கோயில் யானை தள்ளிய நிகழ்ச்சி உண்மையாக நடந்த ஒன்றுதான்
என்பவர்களுக்குச் சில சிக்கல்கள் உண்டு. அது எப்போது நடந்திருக்கக்கூடும்
என்பதில் அவர்களிடம் கருத்தொற்றுமை இல்லை. அந்த நிகழ்வின் காரணமாகத்தான்
அவர் இறந்துபோனார் என்றவர்கள் பாரதி அதற்குப் பிறகு மூன்று மாதத்தில்
இறந்தார் என்றும் (வ.ரா.), நெடுநாள் உலகில் வாழவில்லை என்றும் (பெ. தூரன்),
சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்ததென்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில்
பாரதி வரலாற்றை முதலில் எழுதிய வ.ரா. ஒருவரால்தான் உண்மையை விசாரித்துத்
தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அவர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தில்
ஈடுபட்டாரே தவிர அதை ஆராயவில்லை. அது உண்மையில் பாரதி எழுதிய கோயில் யானை
என்ற நாடகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சிதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
கோயில் யானை நாடகம் கிடைத்த பிறகு அது நிகழ்ந்தது 1921 ஜனவரியா அல்லது ஜூன்
21ஆ என்று ஆராய்வது சரியல்ல. கோயில் யானை நாடகம் 1921 ஜனவரியில்
வெளியாயிற்று என்பது இப்போது உறுதியாயிருக்கிறது. யானை தள்ளிய விஷயத்தை ஏன்
பாரதி தன் எழுத்துகளில் குறிப்பிடவில்லை?

கோயில் யானையால் தள்ளப்பட்டு ஒரு தமிழ்க் கவிஞர் இறந்துபோனார் என்ற
செய்தி வடநாட்டவரைக் கவர்ந்திருக்கிறது. மாடர்ன் ரிவ்யூ என்ற
பத்திரிகைையின் 1956ம் வருட நவம்பர் இதழில் ‘தெருவில் ஓடிய ஒரு மதம்
பிடித்த யானையிடமிருந்து ஒரு சிறுமியைக் காப்பாற்றிய பாரதி தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரை ஸ்தலத்திலேயே யானை கொன்றுவிட்டது’
என்று எழுதியது. கதையின் ஒரு பகுதியை மறுத்த பாரதியின் தம்பி விஸ்வநாதன்,
பாரதியின் இறப்போடு யானைக்குள்ள தொடர்பை மறுக்கவில்லை. எனவே இந்த யானை
தாக்கிய விஷயம் பாரதியின் குடும்பத்தாரால் பேணப்பட்டது என்று சொல்லலாம்.

கோயில் யானை ஒருவனைத் தாக்கியது என்ற கற்பனை பாரதிக்குப் பார்த்தசாரதி
கோவிலிலிருந்தே கிடைத்திருக்கக்கூடும் என்று சொல்லலாம். பார்த்தசாரதி
கோயில் சிற்பங்கள் அந்தக் கோயில் அளவுக்குத் தொன்மையானவையா என்று சொல்ல
முடியாது. இருந்தாலும் கோயிலில் காணப்படும் இரண்டு சிற்பங்கள் பாரதியின்
மீது செல்வாக்குடையன என்று சொல்லலாம். ஒன்று, நரசிம்மர் சனனதியின் வலது
பக்கத்தில் ஒரு தூணில் உள்ள ஒரு சிற்பம். அதில் ஒரு மனிதன் தன் மனைவியை
இடது பக்கத்துத்தோளை அணைத்தவாறு இருக்கிறான். பாரதி தன் மனைவியுடன்
நிற்கும் ஒரு போட்டோவைப் பாரதியின் போட்டோக்களுடன் பரிச்சயமுள்ளவர்கள் உடனே
தெரிந்துகொண்டுவிடுவார்கள். மனைவியைத் தோள் பற்றி நிற்பது நவீனமல்ல
என்பதுதான் இங்கே விளங்கிக்கொள்ள வேண்டியது.

மற்றொரு சிற்பம் யானையைப் பற்றியது. இது ஒரு தொடராக அமைந்திருப்பது.
கவிதை இயலில் ஒரு கருத்தைப் பல செய்யுள்களால் அமைப்பதைக் குளகம்
என்பார்கள். இந்தச் சிற்பங்கள் எல்லாம் சேர்ந்து யானை என்னென்ன செய்யும்
என்று சொல்கிறது. இவற்றில் ஒன்று ஒரு யானை ஒரு வீரனை இடுப்பைப் பற்றித்
தூக்கிக்கொண்டு செல்கிறது. தூக்கிச் செல்லப்பட்ட வீரன் ஆபத்தில்
இருக்கிறான் என்பது தெளிவு. இப்படிக் கூறுவதன் மூலம் பழங்காலத்தில்
பார்த்தசாரதி கோயிலுக்கு வருபவர்களுக்கு யானையால் – அல்லது பிற
வனவிலங்குகளால் – ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கலை இலக்கியங்கள் தொன்றுதொட்டுச்
செய்துவருகின்றன. பாலை நிலத்தில் எத்தகைய ஆபத்துகள் உண்டு என்று பாலைத்
திணைச் செய்யுள்கள் சொல்கின்றன. பரத்தமையைப் பற்றி எச்சரிக்கும்
சிற்பங்களும் கோயில்களில் உண்டு. யானையால் எடுத்துச் செல்லப்படும்
காட்சியைக் கூறும் கோயில் சிற்பம்தான் பாரதிக்குக் ‘கோயில் யானை’ என்ற
நாடகம் எழுதத் தூண்டுதலாக இருந்திருக்கும் என்பதில் தவறில்லை. பாரதி கோயில்
யானைக்குப் பழமோ வெல்லமோ கொடுக்கப் போவார் என்பதுதான் மற்றவர்களுக்குத்
தெரிந்திருந்ததே தவிர அங்கே சிற்பங்களைத் தேடி நடந்திருக்கலாம் என்பது
தெரியவில்லை. ஏனெனில் அது அவர்கள் மனதில் பதிந்திராது. சென்னையின் வேறு
பகுதியில் சில காலம் வசித்துவிட்டுத் திருவல்லிக்கேணிக்கு வந்த புதிதில்
கோயிலை முதல் தடவையாக சுற்றிப் பார்த்து ஆராய்ந்தபோது பாரதி இந்த
சிற்பங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். இந்த யானைச் சிற்பங்கள் –
அரையடி நீளமுள்ளவை – தாயார் சன்னதிக்குள் அமைந்த மண்டபத்தில் அடிபாகத்தில்
உள்ளன. இன்றும் உள்ளவை.

கட்டுரையின் தொடக்கத்தில் ஆண்டன் செகாவின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிக்
குறிப்பிட்டேன். நூறு என்று தொடங்கி மூவாயிரம் ஐயாயிரம் என்று செகாவின்
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவவர்களின் எண்ணிக்கை பற்றி மாக்சிம் கார்க்கி
எழுதியதையும் குறிப்பிட்டேன். பாரதியார் இறுதிச் சடங்கில் பதினான்கு பேர்
கலந்துகொண்டார்கள் என்று தெரிகிறது. அவர்களது பெயர்கள்கூடத் தெரியும்.
1920களில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மயானம் வரை ஊர்வலம் போகிற பண்பாடு
கிடையாது. இறுதி நாளன்று பார்க்கப் போகிறவர்கள் பின்பற்ற வேண்டிய மரபுகள்
உண்டு. அதுவும் பாரதி பிறந்த பிராமண வகுப்பில் நிறையவே உண்டு. எல்லோரும் வர
வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஈமச் சடங்கு உரிய நேரத்தில் நடத்தப்பட
வேண்டும். தகனம் செய்ய உரிமை உடையவர் உடனே வர இயலவில்லை என்றால்
இன்னொருவருக்கு அந்த உரிமை தரப்பட்டு அவர் சடங்குகளைச் செய்துவிடுவார்.
யார் வருகிறார்கள், எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை.
பாரதியின் சடலத்தை மொய்த்த ஈக்களின் எண்ணிக்கைகூட இல்லை ஊர்வலத்தில்
கலந்துகொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை என்று சிலர் தற்காலத்தில்
சொல்கிறார்கள். ஆனால் அது அறியாமை உடைய கூற்றாகும். பாரதி வாழ்ந்த வீடு ஒரு
கோயிலின் முன்னே உள்ளது. கோயில் முன்னே அல்லது கோயிலின் பிரதான வீதிகளில்
எங்காவது ஒருவர் இறந்தால் உடனே கோயில் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
சடலம் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கோயில் நிர்வாகம் தெருவுக்குச் சாந்தி
செய்யும். பின்னரே பூசைகள் வழக்கம் போல் தொடரப்படும். எனவே பாரதி இறந்த
பின் உரிய நேரத்தில் ஈமக்கிரியைகளைச் செய்திருப்பார்கள். ஈ மொய்க்க நேரம்
இருந்திருக்காது.

பாரதி யானையால் எறியப்படவில்லை. அதனால் அவர் இறக்கவில்லை. அவர் எழுதிய
நாடகத்தின் கதையையே அவர் தலையில் சுற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல
வேண்டும்.

பாரதி இறந்த அடுத்த ஆண்டிலிருந்தே தமிழகம் அவரது நினைவு நாளைக்
கொண்டாடத் தொடங்கிவிட்டது. அவரது இறந்த நாளுக்குப் பதிலாகப் பிறந்த நாளைக்
கொண்டாட வேண்டும் என்று 1960ல் கோரிக்கை எழுப்பிய இளைஞர்களில் நானும்
ஒருவன் என்பதை நான் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.

ஞானக்கூத்தன்
10.4.2015

குறிப்புகள்

  1. “1921ல் எவ்வளவு பிரபலம் அடைய வேண்டுமோ அந்த அளவுக்கு அவருடைய கவிகள் பிரசித்தி அடையவில்லை.”
    – 17.9.21 இதழில் (சுதேசமித்திரன்) எஸ். சத்யமூர்த்தி
  2. 1930ல் எழுத வந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பாரதியைப் பிறகுதான்
    தெரிந்துகொண்டார்கள். பலர் தமிழில் எழுத முடியும் என்று பாரதியைக்
    கொண்டுதான் தெரிந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
  3. 1940ல்கூடப் பாரதியின் பெருமைகளைத் தமிழகம் உணரவில்லை என்று சொல்லியுள்ளார் வ.ரா.
  4. பாரதியார் சில காலமாக நோயாளியாக இருந்துவந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட The Hindu.
  5. ஒருவார காலமாக பாரதி தேகநோய் கண்டு திருவல்லிக்கேணியில் அசௌகரியமாக
    இருந்து திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம் மண்ணுலகை விட்டு விண்ணுலகை
    அடைந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட சுதேசமித்திரன் செய்தி. யானை
    தள்ளியதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
  6. ரா.அ. பத்மநாபன் சித்திர பாரதியில் ‘செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு
    வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதுவே ரத்தக் கடுப்பாக மாறியது’ என்று
    குறிப்பிடுகிறார். இதைப் பற்றி மித்திரன் குறிப்பிடவில்லை. திரு பத்மநாபன்
    1981ல் சென்னை கார்ப்பரேஷன் சுகாதாரத் துறையிடமிருந்து பாரதிக்கு இறப்புச்
    சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருக்கிறார். அது பாரதியாரின் வர இருந்த நூற்றாண்டு
    விழாவை ஒட்டிப் பெறப்பட்டது போலும். அந்தச் சான்றிதழில் ‘அக்யூட்
    டிசண்ட்ரி டென் டேஸ்’ என்று இங்கிலீஷிலும் 10 நாள்களாகக் கடுமையான ரத்தக்
    கடுப்பு என்று மொழிபெயர்ப்பிலும் தரப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பாரதி
    இறந்த 60 ஆண்டுகளுக்குப் பின் பெறப்பட்டுள்ளது. ஆங்கிலப் படிவத்தில்
    இறப்பின் காரணம் சொல்லப்படவில்லை. பிரதியில் இறப்புக் காரணத்தைக் கூற
    முடியாது என்றும் கார்ப்பரேஷனால் சொல்லப்பட்டுள்ளது. பாரதி வயிற்றுப்
    போக்கால் இறந்தார் என்று இறப்புச் சான்றிதழ் கூறுவதாக வாசகர் எண்ணும்படி
    இப்பகுதி அமைந்துள்ளது.

உதவிய நூல்கள்

  1. Anton Chekov and His Times, Progress Publishers, Moscow. 1990. ப. 187, 188, 247
  2. மகாகவி பாரதியார் – வ.ரா., சந்தியா பதிப்பகம், சென்னை 83. பதிப்பு 2001.
  3. பாரதியின் இறுதிக் காலம் – ய. மணிகண்டன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ். டிசம்பர் 2014
  4. சித்திரபாரதி – ரா.அ. பத்மநாபன்., காலச்சுவடு மற்றும் கடவு வெளியீடு, டிசம்பர் 2000
  5.  பாரதியார் கவிதைகள், விகடன் பிரசுரம், 2012.

கசடதபற ஜøலை 1971 – 10வது இதழ்


தெலியலேது ராமா
– ஜரதுஷ்டிரன்


‘ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து
முத்துச்சாமி செத்த எலி’
செல்லப்பா சொல்லி விட்டார்
நாப்பா போட்டு விட்டார்
IDENTITY CRISIS
ALIENATION FEELING
‘இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில்
தமிழ்ச் சரித்திர வரலாற்றில்
சோகத்துக்கிடமில்லை – இதயச் 
சோரத்துக் கிடமில்லை
ஸந்தோஷம் ஸல்லாபம்
ஸம்போகம் தார் மீகம்
சத்தான சொல்லடுக்கு
தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு
செல்லப்பா சொல்லிட்டார்
நாப்பா போட்டுட்டார்
இனி –
ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம்
(மேற்கொண்டு வர்ணனைக்கு
நாப்பாவைக் கேளுங்கள்)
சத்தான கருத்துக்கள்
நாயகன் அவிழ்த்துவிட
ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல்
திரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும்
தெரிந்த நல்நாயகி திடீரென வந்து
நிம்போமேனியாவில் நாயகனைக் காதலுற்று
லக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு
ட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய்
(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு)
நாப்பா எழுதிடுவார்
செல்லப்பா வாழ்த்திடுவார்
செத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே
ஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு இனிமேலே
ஜரதுஷ்டிரன் என்ற கவிஞர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவர் எழுதிய சில கவிதைகள் கசடதபற, பிரஞ்ஞை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட கவிதையை முதலில் படிப்பவர்கள் ஒன்றுமே புரியாமல் முழிப்பார்கள்.  கசடதபற இதழ்களை முன்பே படித்தவருக்கு 
ஓரளவு இந்தக் கவிதை எதைப் பற்றி சொல்கிறது என்பது தெரியும். இப்போது புதியதாகப் படிக்கும் வாசகர்களுக்கு தலையும் புரியாது காலும் புரியாது.  பொதுவாக தமிழில் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் கவிதையின் ஒரு அங்கம்.  
இந்தக் கவிதையில் செல்லப்பா என்று சொல்வது எழுத்து ஆசிரியர் சி சு செல்லப்பாவை குறிக்கும்.  நாப்பா என்பது நா பார்த்தசாரதியைக் குறிக்கும்.  ந முத்துசாமி எழுதிய கதையை ப்ராங்களின்  என்ற ஆங்கிலேயர் பாராட்டியதால், சி சு செல்லப்பா அந்தக் கதையைக் குறித்து நா பா நடத்திய தீபம் பத்திரிகையில் தாக்கி எழுதியதை கவிதை ஆக்கி உள்ளார் ஜரதுஷ்டிரன்.   

புத்தக விமர்சனம் 10

                 

அழகியசிங்கர்

    சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் தேவன், மனிதன், லூசிஃபர். 224 பக்கங்கள்  கொண்ட இந்த நாவலை எழுதியவர் சைலபதி.  இந்த நாவலைப் படித்து முடித்தப்பின் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.  நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது இரா முருகன் என்ற எழுத்தாளர் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டார்.  அவருடைய முகநூலில்.  வெகு நாட்கள் கழித்து ஒரு கிருத்துவ நாவலை இப்போதுதான் படிக்கிறேன்.  அதை அலுப்பில்லûôமல் எழுதி இருக்கும் சைலபதிக்கு வாழ்த்துகள்.  பொதுவாக கிருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், கிருத்துவ மதச் சம்பந்தமாக எழுதுவதில்லை. 


    இந் நாவலில் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிருத்துவ மதத்துக்கு மாறுவதாக விவரிக்கிறார். ஆனால் உண்மையில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் கிருத்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு அதில் மாறுவது என்பது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.  பொதுவாக தலித்துகள்தான் வறுமையின் பொருட்டு கிருத்துவ மதத்திற்கு மாறுவது சகஜம்.  கிருத்துவமதத்தைச் சார்ந்தவர்கள்தான் இப்படி மதத்தை பிரச்சாரம் செய்து மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை இழுப்பார்கள். 

    கிருத்துவ மதத்திற்கு மாறிய ஒரு பிராமண இளைஞனுக்கும்,  ஒரு கிருத்துவரைத் திருமணம் செய்துகொண்ட பிராமணப் பெண்ணிற்கும் உள்ள தடுமாற்றம்தான் இந்த நாவல்.  அவர்கள் இருவரும் மதம் மாறினாலும் முழுமையாக மாறமுடியவில்லை.

    ஹரி – ஸ்ரீ வித்யா, பீட்டர் – காயத்திரி, பாஸ்கரன் – ரேவதி – நாவலா என்று ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற  உறவு முறைகள்.  பிராமணன் ஆகிய ஹரி கிருத்துவனன் ஆகிவிடுகிறான்.  ஸ்ரீவித்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் திரும்பவும் பூணூல் அணிந்துகொண்டு பிராமணனாக அவன் மாற வேண்டும்.  தடுமாற்றத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிற ஹரி காதலை தொலைத்து விடுகிறான்.  அதனால் அவன் புத்தி பேதலித்துப் போய்விடுகிறது. 

    அதேபோல் பிராமணப் பெண்ணான காயத்திரி ஞானஸ்நானம் செய்துகொண்டு கிருத்துவ மதத்தைத் தழுவி பீட்டரை திருமணம் செய்து கொள்கிறாள்.  ஆனால் முழுவதுமாக அவள் கிருத்துவளாக மாற முடியவில்லை.  அந்த முரண் அவளுக்கும் பீட்டருக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது.  

    நாவலா என்ற பெண், கணவன் மனைவி ஆகிய  பாஸ்கரன் ரேவதிக்கும் உள்ள உறவை குலைக்கிறாள்.  ஒருநாள் அலுவலகத்தில் எல்லோர் முன்னும் மூவருக்கும் பெரிய ரகளையே நடக்கிறது.  ரேவதி அழுது நாவலாவை  வேலையைவிட்டு போகும்படி வற்புறுத்துகிறாள்.  நாவலா அங்கிருந்து போவதால் இரண்டு பெண்களுக்கு மகிழ்ச்சி ஒன்று ரேவதி, இன்னொன்று ஸ்ரீ வித்யா.  நாவலா அவரகள் வேலை பார்த்த இடத்தை விட்டு வேற இடத்திற்குப் போனாலும் ஸ்ரீ வித்யாவிடம் நாவலா எங்கே இருக்கிறாள் என்பதை சொல்ல ஹரி  மறுக்கிறான்.  இதையே பாஸ்கரனும் ஹரியிடம் கேட்கிறான்.  நாவலாவை மறக்க முடியாமல்  அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறான். 

    உண்மையில் பாஸ்கரன் மனம் உடைந்து போனதால் அவன் நடத்திக்கொண்டிருந்த அந்தக் கம்பெனியை ஹரி எடுத்துச் செய்வதாக இருந்தது.  ஆனால் உண்மை வேறுவிதமாகப் போய்விட்டது.  அவன் காதல் குலைந்தவுடன், எல்லாம் குலைந்துபோகிறது. 

    ஹரி பழையபடி அவன் குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறான்.  அவன் திரும்பவும் பிராமணனாக மாற வேண்டி உள்ளது.   இதைத்தான் ஸ்ரீ வித்யா அவனிடமிருந்து அப்போது எதிர்பார்த்தாள். ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ளக்கூட தயாராக இருந்தாள்.தன்னை கிருத்துவ மதத்திலிருந்து வெளியே இழுக்க முயற்சிக்கிறாள் என்று தவறாக அவன் நினைத்துவிட்டான்.   அப்போது அவன் அதுமாதிரி மாறத் தயாராக இல்லாததால் ஸ்ரீ வித்யா அவனுக்குக் கிடைக்கவில்லை.

    சாமுவேல்தான் சாத்தானின் உண்மையான பெயர். சாத்தானின் கதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது. சாத்தான் என்ற பெயர் உள்ளவன், கிருத்துவ மதத்தை நேசிப்பவனாக இருக்கிறான்.   அவனுக்கு லூசிஃபர் என்ற பெயரை வைக்கிறாள் நாவலா.  சாத்தான் யேசு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறான்.  அதைப் படித்துப் பார்த்த உற்சாகத்தில் நாவலா அந்தப் பெயரை அவனுக்குச் சூட்டுகிறாள். 

    பாஸ்கரன் மாறிவிட்டான்.  அவன் அலுவலகத்தில் பெண்களே இல்லை.  அவன் மனைவி ரேவதி தினமும் அவனுடன் அலுவலகம் வந்துவிட்டு போகிறாள். 

    இந்த நாவலில் யேசு வாழ்க்கை அற்புதமாக விவரிக்கப் படுகிறது.  சாத்தான் எழுதிக் கொண்டிருக்கிற யேசு காவியத்தைத்தான் அப்படி கொண்டு வருகிறாரோ நாவலாசிரியர் என்று தோன்றுகிறது. கிறிஸ்துவ சபையில் நடக்கும் ஊழல்களும், அதை வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும் அவலமும் விவரிக்கப்படுகிறது.  பாஸ்டர் ஜீவானந்தம் சிறந்த ஊழியர்.  எதையும் எதிர்பாராமல் விசுவாசத்துடன் ஊழியம் பார்ப்பவர்.  ஆவியானவர்தான் தன்னை வழி நடத்துவதாக சொல்கிறார்.  அவர் இருந்தால் சபை மோசமாகிப் போய்விடும் என்று அவரை நீக்கி விடுகிறார்கள்.  விசுவாசமிக்க ஒருவர் தூக்கி எறியப்படுகிறார்.  உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அடுத்ததாக இந்தச் சபையை வழி நடத்த  சரியான மேய்ப்பன் ஜீவானந்தம்.  அவர்தான் நீக்கப்படுகிறார். உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அவர் பையனைக் கொண்டு வர எண்ணம்.    நியாயமில்லை என்று தெரிந்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாஸ்டர் ஜீவானந்தம் விலகிப் போய்விடுகிறார்.  அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் என்ன  செய்யப்போகிறார் என்று கவலைப் படுகிறார்கள் விசுவாசமுள்ள சிலரை வைத்துக்கொண்டு புதிய இலட்சிய சபையை உருவாக்குகிறார். 

    காயத்திரி முற்றிலும் மாறி விடுகிறாள்.  பைபிளை கிழித்தவள், கூச்சல் போட்டவள்.  இப்போது ஞாயிற்றுகிழமைகளில் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துகிறாள்.  பீட்டருக்காக மாறி விடுகிறாள்.

    பாஸ்டர் ஜீவானந்தம்  போட்டியாக புதிய இலட்சிய சபை  ஆரம்பித்ததால் சிலரால் தாக்கப்படுகிறார்.  அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.  அவருக்கு பிறகு அந்தப் பொறுப்பை லூசிஃபர் என்கிற சாத்தான்தான் ஏற்றுக் கொள்கிறான். இதுதான் பாஸ்டர் ஜீவானந்தம் விருப்பம் கூட.  இது மாதிரி நிகழ்வு ஏற்படுமென்பதை முன்னமே அவர் தீர்மானித்துவிடுகிறார். 

     இத்தனை கதாபாத்திரங்களையும் திறமையாக கையாள்கிறார்.  எந்த இடத்திலும் கிருத்துவ மதத்தை நாவல் மூலம் போதிக்கும்படி எழுதவில்லை.  அந்தச் சமுதாயத்தில் நடக்கும் முரணை நாசூக்காகக் கொண்டு வருகிறார்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஞானஸ்நானம் பெற பயன்படும் தொட்டியைப் பற்றி விவரிக்கிறார்.  ஞானஸ்நானம் செய்த பிறகு ஒருவர் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு விடுகிறார். அதைப் பெறுவதற்கு பலர் க்யூவில் இருப்பதாக விவரிக்கிறார்.

    இந்த மதத்தைப் பற்றி தெரியாத வாசகர்களுக்கு இது புதிய தகவலாக இருக்கிறது.  மதம் மாற ஞானஸ்நானம் என்ற ஒன்று தேவை என்பதே எனக்கு இந்த நாவலைப் படித்தப் பிறகுதான் தெரிந்தது. மேலும் சில இடங்களில் சில தெறிப்புகளை வெளிப்படுத்துகிறார்.  முதுமையைப் பற்றி ஒரு இடத்தில் சொல்கிறார்.  அழுகையைப் பற்றி இன்னொரு இடத்தில் சொல்கிறார்.  திறமையாக எழுதப்பட்ட எழுத்து.
   
தேவன் மனிதன் லூசிஃபர் – நாவல் – சைலபதி – பக்கம் : 224 – விலை : 150 – இராசகுணா பதிப்பகம், 28 முதல் தளம், 36வது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 91-செல் 9444023182