Category: Uncategorized
சின்ன தப்புகள்….
பேச்சாளராக வந்திருந்த அசோகமித்திரனுக்கும், என் பொருட்டு பேச வந்திருந்த ப்ரியாராஜ், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், உமா பாலு அவர்களுக்கும், குவியம்
சார்பில் ஏற்பாடு செய்த கிருபானந்தன், சுந்தர்ராஜனுக்கும் என் நன்றி. நன்றி. நன்றி.
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
அழகியசிங்கர்
கவிதை 3
வெள்ளம் வடிந்த அடுத்தநாள்
காலை
பால் எங்கே கிடைக்கிறது
என்று அலைந்து கொண்டிருந்தேன்
எங்கள் தெரு வீரமணி
மாடுகளை வைத்து வியாபாரம்
செய்வான்
அவனிடம் உள்ள மாடுகளை
அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு
ஓட்டிச் சென்று விட்டான்
மழைத் தூறலில்
அவனும் மாடும் நனைந்தபடி
பால் கறந்து கொண்டிருந்தான்
அவனைப் பார்த்து சிரித்தேன்
üதருகிறேன் அரை லிட்டர்
யார் கண்ணிலும் படாதீர்கள்..ý
என்றான்.
கவிதை 4
சொல்கிறேன் கேளுங்கள்
இனிமேல் மழை என்றால்
வெள்ளம் வருமென்று ஞாபகம்
வந்து
பதட்டமடைய நேர்கிறது
என்ன செய்வது?
கவிதை 5
தெருவில் வெள்ளம் புகுந்த
காலத்தில்
மொட்டை மாடியில் போய்
தஞ்சம் அடைந்தோம்
சுற்று முற்றும் பார்த்தோம்
வானத்தைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டோம்
பின்
எதிர் வீடு பக்கத்து வீடென்று
எல்லோர் வீட்டு
மொட்டை மாடிகளையும்
பார்த்தோம்
இவ்வளவு பெண்களா
எங்கள் தெருவில்…..
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
கவிதை 2
ராமன் வீடு தனியாக இருக்கும்
கீழே மேலே என்று
பள்ளத்தில் இருக்கும்
எப்பவோ கட்டிய வீடு
சாதாரண மழைக்கே வந்து விடும்
உள்ளே மழை நீர்
இது பெரும் மழை
தெருவில் உள்ள சாக்கடை
நீரெல்லாம் உள்ளே வந்து
ராமன் அதிர்ச்சி அடைந்து
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும்
வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்
மறு நாள் மாடியில் இருந்து
தெருவைப் பார்த்தார் கவலையுடன்
அவர் முகமே சரியில்லை
அடுத்தநாளுக்கு அடுத்தநாள்
தெருவில் நடந்தபோது
என்ன ஆயிற்று என்று கேட்டேன்
சீலிங் பேன் வரை சாக்கடை நீர்
நாற்றம்
வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது
இன்னும் என்னன்ன துயரமெல்லாம்
சுமக்கப் போகிறேனோ என்று
உடைந்த குரலில் கூறி
மேலும் பேசப்பிடிக்காமல்
நகர்ந்து விட்டார்
வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்
கவிதை 1
கண் முன்னே நடந்தது
நீரின் ஓட்டம்
வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்
கீழ்த் தரை வளாகத்தில்
வைத்திருந்த புத்தகங்களின்
பெருமையை யார் அறிவார்
வந்த நீர் லபக்கென்று
வாயில் இட்டுக்கொண்டது.
திரும்பவும் நீர் அரக்கன்
முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்
எங்களை மிரட்டப் போகிறதோ
என்று பயந்தவண்ணம் இருந்தோம்
ஒவ்வொரு படிக்கட்டையும்
தொட்டு தொட்டு
வந்து கொண்டிருந்த கரும் நிற
நீர் அரக்கனை
ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்
அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை
ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட
நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்
பயபபடாதே
என்று ஆறுதல் படுத்தபடியே
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து
பின்னோக்கிப் போய்விட்டான்
ஆனால்
எங்கள் மனதில் புகுந்த அச்சம்
அவ்வளவு சுலபத்தில்
எங்களை விட்டு அகலவில்லை
09.12.2015
புதன்
8.20 காலை
தனித்துவங்கள்
ராமலக்ஷ்மி
தண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா……….
இனிமேல் இரண்டாவது மாடி வீடுதான் வேண்டும்….
பிறந்தநாள் போது ஒரு குழப்பம்
அழகியசிங்கர்
இன்றுதான் என் பிறந்தநாள். 67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை. 93 வயதாகிற அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை. பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை.
பல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை. பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும். யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன். அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.
இன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது. ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர அதுவும் மற்ற நாட்களைப் போல் ஒரு நாள்தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிறந்த தினத்தை ஒட்டி என் புத்தகங்கள் கொண்டு வர வேண்டுமென்று நினைப்பதுண்டு. 2013 ஆம் ஆண்டு என் பிறந்த தினத்தை ஒட்டி என்னுடைய 4 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 3 சிறுகதைத் தொகுதியும் 1 கவிதைத் தொகுதியும்.
அதேபோல் இந்த வருட பிறந்த தினம் போது என் மொத்த சிறுகதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர நினைத்தேன். முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நான் 4 அட்டைப் படங்களை ஒன்றாக அடித்து வைத்திருந்தேன். அதில் மூன்று அட்டைப் படங்களை அப்போதே புத்தகஙகளாகக் கொண்டு வந்துவிட்டேன். நாலாவதாக ஒரு அட்டைப் படத்தில் என் கட்டுரைப் புத்தகம் கொண்டு வர நேர் பக்கம் என்ற பெயரில் அட்டைப் படம் தயாரித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு வருடமும் என் கடட்டுரைப் புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும்போது ஒரு அலட்சியம் இருந்து கொண்டே இருக்கும். என் நண்பரும் கவிஞரும் வைதீஸ்வரன் வரைந்த ஓவியத்தைக் கொண்டு அந்த அட்டைப் படத்தைத் தயாரித்திருந்தேன். அற்புதமான ஓவியம் அது. 100 பக்கங்களுக்கு மேலாக அந்தப் புத்தகம் கொண்டு வரலாமென்று நினைத்திருந்தேன்.
கடந்த 27 ஆண்டுகளாக பத்திரிகைக் கொண்டு வருவதும் புத்தகம் போடுவதும் என் வழக்கம். புத்தகம் விற்பது என்பதெல்லாம யோசித்துக் கொண்டிருக்கும்போது என் நிலை ரொம்பவும் மாறி விட்டது. முதலில் 1000 பிரதிகள் அச்சடித்தப் புத்தகமெல்லாம் பின்னால் 600 பிரதிகளாக மாறி விட்டன. அதன் பின் 500 பிரதிகள் அடிக்கத் தொடங்கினேன். இப்படி நான் அடித்த 600 பிரதிகள் 500 பிரதிகள் புத்தகங்களே இன்னும் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன. லாவண்யா என்ற கவிஞர் எழுதிய ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’ என்ற கவிதைத் தொகுதி என்னை விட்டு அகலுவதில்லை. நான் யோசிப்பேன்: அந்தக் கவிதைத் தொகுதிக்கு நத்தை என்று பெயர் வைத்ததால் நத்தை நகராமல் என்னிடமே இருக்கிறதா என்று.
முன்பு லைப்ரரி ஆர்டர் கிடைக்கும். புத்தகமும் நம்மை விட்டு நகரும். இப்போதெல்லாம் அதெல்லாம் கிடையாது. மேலும் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி புத்தக விமர்சனம் வந்தால் புத்தகம் விற்கும் என்று சொல்வார்கள். அதெல்லாம் கூட பொய். முதலில் பத்திரிகையில் விமர்சனமே வராது. ஏன் என்றால் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஏராளமான புத்தகங்கள் வந்து குவிகின்றன. யார் புத்தகத்தை விமர்சனம் செய்வது என்ற குழப்பம் அவர்களுக்கு வந்து விடும். மேலும் அப்படி விமர்சனம் வந்தப் புத்தகம் பிரமாதமாக விற்று விடாது. புத்தகக் கடைகளில் விற்கக் கொடுக்கலாம் என்றால் அவர்கள் ஏகப்பட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு விழி பிதுங்குகிறார்கள். நம் புத்தகங்களைக் கொடுத்தால் எத்தனைப் பிரதிகள் விற்கின்றன என்பதைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை. சரி புத்தகம் விற்றப் பணத்தையாவது கேட்கலாம் என்றால்…நம்மைப் பார்த்தால் சிரிக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். புததகம் விற்பதைப் பற்றி கேட்டால் அவர்கள் முகம் மாறி விடுகிறது. அப்படியென்றால் என்னதான் செய்வது? அதுதான் புரியவில்லை. அதனால் இப்போது ஒன்றே ஒன்றுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
கவிதைப் புத்தகம் என்றால் 50 பிரதிகள், கதை, கட்டுரை, நாவல் என்றால் 100 பிரதிகள் அடிக்கத் தொடங்கி இருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பக்கங்கள் அதிகமாகப் போகாமல் புத்தகம் தயாரிப்பது. இதனால் தயாரிப்புச் செலவு குறைவதோடு அல்லாமல், படிப்பவர்களும் எளிதாகப் படித்து முடித்து விடலாம். அதனால் பெரும்பாலான என் புத்தகங்கள் எல்லாம் 200 பக்கங்களுக்குள் இருக்கும். விலையும் அதிகமாக இருக்காது. பெரும்பாலும் இந்தப் புத்தகங்களைக் கூட விற்பதற்கு யாரிடமும் கொடுக்காமல் விற்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் 50 புத்தகம் 100 புத்தகம் தயாரிக்கும் போது என் செலவு 50% ஆகி விடும். அதாவது 100 பக்கம் தயாரிக்கும் ஒரு புத்தகம் விலையை நான் ரூ100 வைத்தால் எனக்கு ரூ50 செலவாகும் ஒரு புத்தகம் தயாரிக்க.
நேர் பக்கம் என்ற பெயரில் நான் அட்டைப் படத்தை 600 அடித்திருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு. அதனால் அப்புத்தகம் மட்டும் 370 பிரதிகள் இப்போது அடித்து விட்டேன். பல சந்தர்ப்பங்களில் நான் வாசித்த எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. அப் புத்தகம் முழுவதும் பல படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருக்கிறேன். அவர்களுடைய படைப்புகளைப் பற்றி. இன்னும் கூட நான் அதிகமாக எழுதியிருக்கிறேன். மிகக் குறைவாகத்தான் நான் தேர்ந்தெடுத்துப் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். அப்புத்தகம் 142 பக்கங்கள் கொண்ட புத்தகம்.
எந்தந்தப் படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.
1.சி சு செல்லப்பா 2. க.நா.சு 3. நகுலன் 4. பிச்சமூர்த்தி 5.அசோகமித்திரன் 6. தி ஜானகிராமன் 7. நீல பத்மநாபன் 8. வைதீஸ்வரன் 9. பிரமிள் 10. வெங்கட் சாமிநாதன் 11. கோபிகிருஷ்ணன் 12. ஸ்டெல்லாபுரூஸ் 13. ஐராவதம் 14. டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் 15. ஜெயகாந்தன் 16. பாரதியார்
370 பிரதிகள் என் புத்தகத்தை அடித்துவிட்டதால், ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் போகிறது. என் பிறந்த நாள் போது இதுமாதிரியான கலக்கமா எனக்கு?
2 கவிதைகள்
1 நடப்பியல்
அன்றாட வாழ்வில்
மூச்சுத் திணறவைக்கும்
ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்
நித்தம் நித்தம் நிரந்தரமாய்
குரல்வளையை
நெறித்துக்கொண்டிருக்கையில்
உலக மகா தத்துவங்கள்
வரலாற்று ஆவணங்களை
பார்த்துப் பரவசப்படச்சொன்னால்……..?!
2 வலியும் கிலியும்
வலியை சகித்துக்கொள்ள
நெடுநாள் பயின்று பயின்று
ஒரளவுக்கு பழகமுடிந்தும்
வலிகள் வரப்போகிறதென்ற
ஆரம்ப சைகைகள்
கிடைக்கத் தொடங்கையிலேயே
நெஞ்சில் வந்து உடும்பாய்
கவ்வுக்கொண்டுவிடும்
வரப்போகும் வலியை
நினைந்துள்ள கிலி…….!
அதை அப்புறப்படுத்த
எடுத்துக்கொண்ட
அப்பியாசங்களெல்லாம்
தோல்விக்குமேல் படுதோல்வி
என் செய்வேன்..,.என் செய்வேன்…,
பராபரமே…………..