லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து



அழகியசிங்கர்


எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது.  ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன்.  அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல வந்தது அவரைப் பற்றி அல்ல.
சேதுராமன் என்ற நண்பர்.  பாரத வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.  அவரைப் பார்க்க விருட்சம் இதழை எடுத்துக் கொண்டு போவேன்.  வா என்று வரவேற்பார்.  பல நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார். விருட்சம் இதழுக்காக சந்தாத் தொகையைக் கொடுப்பதோடல்லாமல், இன்னும் சிலரிடம் சொல்லி வாங்கிக் கொடுப்பார்.  அவர் ஒரு புத்தக நண்பர்.  எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நண்பர்.  அவரைப் பார்க்கப் போவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஒருமுறை அவர் கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தினார்.

“சார், இவர் சத்தியநாதன்.  லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்,” என்றார் அவர்.

வந்தது ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  லாவண்யா என்ற பெயரில் எழுதும் சத்தியநாதன், வேடிக்கையாகப் பேசக் கூடியவர்.  அந்தக் காலத்துப் பிரஞ்ஞை இதழில் ஒரு குறிப்பிடும்படியான சிறுகதை எழுதி உள்ளார்.  அவருடன் பழக பழக விருட்சத்திற்கு ஆபத்தில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விருட்சத்தில் கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  மடமடவென்று கவிதைகள் எழுதிக் குவித்து விடுவார்.  பின் மொழிபெயர்ப்பு செய்து சில கவிதைகளை அனுப்பி விடுவார். நானும் சளைக்காமல் அவர் எழுத்தைப் பிரசுரம் செய்வேன்.

அவருக்கு ஒரு ஆசை.  தான் எழுதுகிற கவிதைகளை எல்லாம் புத்தகமாகப் போட வேண்டுமென்ற ஆசை.  உண்மையில் அது விபரீத ஆசை. அதேசமயத்தில் கவிதை எழுதுகிற எல்லோருக்கும் நியாயமாய் ஏற்படும் ஆசைதான்.

முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக ஒன்றை கொண்டு வந்தார். அந்தக் கவிதைத் தொகுதியின் பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’  நான் முதன் முதலாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தது கவிதைத் தொகுதிதான்.  தொடர்ந்து பல கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன்.  அதில் ஒரு பெரிய தப்பு செய்து விடுவேன். கவிதைத் தொகுதியை 500 பிரதிகள் அச்சடித்து விடுவேன்.  ஆரம்பத்தில் இந்தத் தப்பை செய்திருக்கிறேன்.  பெரும்பாலும் என்னிடமே என்னை விட்டு அகலாமல் இருப்பது நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள்தான். ஆனால் உண்மையில் அத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துப் பார்த்தால், அத் தொகுதிக்கு ஒரு நியாயமற்ற தண்டனை தந்துவிட்டதாகத்தான் நினைப்பேன்.
லாவண்யாவின் முதல் தொகுதி பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்,’  அதென்னவோ தலைப்பில் ஒரு தப்பு செய்து விட்டோம். நத்தை என்ற பெயரைக் கொண்டு வந்து விட்டோம்.  அப்படி கொண்டு வந்து விட்டதாலோ என்னவோ கவிதைப் புத்தகம் என்னை விட்டு அகலாமல் நத்தை மாதிரி ஒட்டிக் கொண்டு விட்டது.

லாவண்யா கொஞ்சம் உணர்ச்சிகரமான மனிதர்.  ‘கவிதைப் புத்தகம் எதாவது விற்றதா?ý என்று அப்பாவித்தனமாகக் கேட்பார்.

“அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்,” என்று அவரைத் தேற்றுவேன்.  
ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் அவருடைய கவிதைத் தொகுதியை எடுத்துக்கொண்டு போவேன்.  என்னுடையதையும் இன்னும் பலருடையதும் சேர்த்துதான்.

அவர் அடிக்கடி ஒன்று சொல்வார். “இலவசமாகக் கொடுத்து விடுங்களேன்,” என்று.

“அது மட்டும் செய்யக் கூடாது,” என்பேன் நான்.

“முதலில் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தால் யாரும் அதைத் தொடக் கூட மாட்டார்கள்.”என்பேன்.

“அப்படி என்றால் என்ன செய்வது,” என்று கேட்பார்.

“கவலைப் படாதீர்கள், ஒன்றிரண்டு விற்கும். இன்னொரு விதத்தில் உங்கள் புத்தகம் உதவியாக இருக்கிறது,” என்பேன்.

“எப்படி?”

“நானே கொஞ்சமாகத்தான் புத்தகமே கொண்டு வருகிறேன்.  ஏதோ கவிதைப் புத்தகங்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகாமல் இருக்கிறதாலே, நாம் நிறையாப் புத்தகங்கள் கொண்டு வந்ததுபோல் பிரமையை ஏற்படுத்துகிறது,”என்று சொல்வேன்.

அவர் சிரித்துக் கொள்வார்.  ஆனால் உண்மையில் திறமையாக கவிதை எழுதக் கூடியவர் லாவண்யா.  அவர் கவிதைகளில் ஒரு வித கிண்டல் தன்மை பளீரிடும்.

2009 ஆம் ஆண்டில் அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளோம்.  கவிதைத் தொகுதியின் பெயர் கடலின் மீது ஒரு கையெழுத்து. முன்பெல்லாம் நான் செய்த பெரிய தப்பு 500 பிரதிகள் அச்சடிப்பது.  பின் அந்தத் தப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 300 பிரதிகள் ஆயிற்று.  இப்போது அதுமாதிரி தப்பே செய்வதில்லை.  ஏன்எனில் 5டி பிரதிகள்தான் கவிதைத் தொகுதியே அடிக்கிறேன்.  கைக்கு அடக்கமாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போகலாம்.

லாவண்யாவை அறிமுகப் படுத்தியவர் சேதுராமன் என்ற நண்பர்தான்.  அவர் ஒரு வாசகர்.  எழுத்தாளர் அல்ல.  ஆனால் எழுத்தாளர் நண்பர்.  சுந்தர ராமசாமி மீது அவருக்கு அலாதியான பிரியம் உண்டு.

சுந்தர ராமசாமிக்கு ஒரு விழா நடந்தது (மணி விழா என்று நினைக்கிறேன்) நாகர்கோவிலில்.  சேதுராமன் குடும்பத்தோடு அதாவது மனைவி, மகள், பேரன் பேத்தி என்று நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.  அந்தச் சமயத்தில் சுனாமி வந்து எல்லோரும் இறந்து விட்டார்கள்.  நானும் லாவண்யாவும் சந்திக்கும்போது சேதுராமனைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம்.

லாவண்யாவின் கவிதை ஒன்றை  படியுங்களேன்.
கடல்

ஒரு தாயைப்போல கடல்
எனக்கு
மீன்களை உணவாய் தந்தது
ஒரு தந்தையைப்போல் கடல்
கட்டுமரத்தில் 
பயணிக்க கற்றுத்தந்தது
ஒரு நண்பனைப் போல கடல்
கார்முகிலிருளிலும்
திசைகளறியச் செய்தது
ஒரு கயவனைப்போல கடல்
என் மனைவி மக்களை
மூசசுத்திணறக் கொன்றது.
லாவண்யாவின் üகடலின் மீது ஒரு கையெழுத்துý என்ற இக் கவிதைத் தொகுதியின் விலை ரூ.30 தான்.  உங்களுக்கு வாங்க வேண்டுமென்று தோன்றினால், ரூ30 ஐ விருட்சம் கணக்கில் அனுப்புங்கள்.  நான் புத்தகத்தை உடனே அனுப்பி வைக்கிறேன்.
ACCOUNT NUMBER No. 462584636
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOK NAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031


 

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.

அழகியசிங்கர்

ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன்.  பொதுவாக எதாவது புத்தகம் அல்லது பத்திரிகை படித்துக்கொண்டு வருவது வழக்கம்.  என் பக்கத்தில் பேசுவதற்கு நண்பர்கள் கிடைத்தால் பேசிக்கொண்டே வருவேன். நான் படிக்கிற பத்திரிகை அந்த மின்சார வண்டியில் வந்து கொண்டிருக்கும் சக பயணிகளுக்கு என்னவென்று தெரியாது. கவனம் என்ற சிற்றேட்டின் முதல் இதழைப் படித்துக்கொண்டு வந்தேன்.  சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் பத்திரிகையை திருவல்லிக்கேணியில் உள்ள ஆர் ராஜகோபாலன் என்பவரிடமிருந்து வாங்கி வந்திருந்தேன்.
மாம்பலம் வரை என் மின்சார வண்டிப் பயணம் முடிந்து விடும். பின் அங்கிருந்து நடந்து வீட்டிற்குப் போய்விடுவேன்.  பின் அடுத்தநாள் மின்சார வண்டியில் அந்தப் பத்திரிகை அல்லது எதாவது புத்தகம் படிப்பது தொடரும். அப்படி அன்று கவனம் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது எதிரில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தார்.  
“உங்கள் கையில் உள்ள பத்திரிகையைத் தர முடியுமா?” என்று கேட்டார்.
நான் கவனம் பத்திரிகையை அவரிடம் கொபடுத்தேன்.  அந்தப் பத்திரிகையைப் பார்த்த அவர், “ஞானக்கூத்தனை உங்களுக்குத் தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்…ஆனால் இன்னும் பார்த்ததில்லை,” என்றேன்.
“இந்தப் பத்திரிகை எங்கிருந்து வருகிறது?”
“திருவல்லிக்கேணியில்.  கணையாழியில் இந்தப் பத்திரிகைப் பற்றிய செய்தி வந்திருந்தது.  அதை அறிந்து அங்கே போய் வாங்கினேன்,” என்றேன்.
“பிரமிளைப் பற்றி தெரியுமா?”
“போன வாரம் பிரஞ்ஞை என்ற சிற்றேடை எங்கள் மாம்பலத்தில் சாரதா ஸ்டோரில் வாங்கினேன்.  மாம்பலத்தில் உள்ள யாரோதான் அந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள்.  அதில் வெங்கட்சாமிநாதன் என்பவர், பிரமிளுக்குப் பதில் சொல்வதுபோல் பக்கம் பக்கமாக ஏதோ கட்டுரை எழுதி இருக்கிறார்….எனக்கு ஒன்றும் புரியவில்லை..”
“பிரமிள் என்னை அடிக்கடி பார்க்க வருவார்…உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்,” என்றார்.
அவர் அதன்பின் நான் பணி புரியும் வங்கி முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார்.  அவர் பெயர் ஷங்கரலிங்கம் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.  அவர் கஸ்டம்ஸில் பணிபுரிவதாகவும் சொன்னார்.
சிலதினங்களில் பிரமிளுடன் ஷங்கரலிங்கம் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.  
அப்படித்தான் எனக்கு பிரமிள் அறிமுகம்.  அதன்பின் அடிக்கடி பிரமிளைச் சந்திப்பேன்.  என் வங்கி ஒரு சொளகரியமான இடத்தில் வீற்றிருந்தது. மின்சார வண்டியைப் பிடித்தால் எளிதாக வங்கிக்கு வந்து விடலாம். பிரமிளைத்தான் நான் அடிக்கடி சந்தித்தேன்.  ஷங்கரலிங்கத்தை நான் பிறகு பார்க்கவே இல்லை. 
பிரமிள்தான் எனக்கு டேவிட் சந்திரசேகர் என்பவரை அறிமுகப்படுத்தினார்.  அவர் பாரிஸில் உள்ள சின்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  அவர் அடிக்கடி எங்கள் வங்கிக்கு வருவார்.  என்னைப் பார்த்துப் பேசாமல் போக மாட்டார்.  
ஒரு முறை அவரிடம், “பிரமிள் எப்படி சமாளிக்கிறார்..எங்கும் வேலைககுப் போகாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்,” என்று கேட்டேன்.
“என்னைப் போல் சில நண்பர்கள் உதவி செய்வார்கள்,” என்றார் அவர்.
அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சிறுபத்திரிகையே புரியவில்லை.  அதிலும் சண்டைப் போடும் சிறுபத்திரிகைகளை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.  வெங்கட்சாமிநாதன் கட்டுரையைப் புரிந்து கொள்வதற்கு முன் பிரஞ்ஞை பத்திரிகை நின்று விட்டது. யாருக்கும் பணம் கொடுக்க முடியாத சிறு பத்திரிகையில் மட்டும் எழுதும் பிரமிளை யார் அறிவார்?
“எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் மாதிரி ஆரம்பித்து மாதச் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்து பிரமிளுக்கு உதவி செய்யலாமே,”என்றேன்.
“அதெல்லாம் சாத்தியமில்லை… யாரையும் திரட்ட முடியாது..அவரவருக்கு தோன்றியதை உதவி செய்யலாம்…நான் அவர் தங்குவதற்கு இடத்திற்கான வாடகையைக் கொடுக்கிறேன்,” என்றார்.
இப்படியும் ஒருவரா என்று வியந்தேன்.  எனக்கு அவர் மீது அலாதியான மரியாதை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.  ஆனால் அவர் பிரமிளைப் பார்த்தால், பிரமிள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார்.  அவரை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச மாட்டார்.
பிரமிள் கண்சிமிட்டியபடி என்னிடம் ஒரு விபரம் சொன்னார்.  “ஏன் டேவிட் உங்க வங்கிக்கு அடிக்கடி வருகிறார் என்பது தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியாது,” என்றேன்.
“ஒரு பெண்ணைப் பார்க்கத்தான் இங்கு வருகிறார்.”
நான் டேவிட்டிடம் இதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஒருநாள் பிரமிள் என்னிடம் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்தார்.  நான் உடனே அதற்குப் பணம் கொடுத்து வாங்கினேன்.  பின் நாங்கள் இருவரும் டிபன் சாப்பிடப் போனோம்.
“யார் இந்தக் கவிதைப புத்தகம் அடித்தார்கள்,” என்று பிரமிளிடம் கேட்டேன்.
“ஈரோடில் உள்ள நண்பர்தான் அடித்துக் கொடுத்தார்..எல்லாப் புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து விட்டார்…நான் விற்றாலும அவரிடம் பணம் கொடுக்க வேண்டாம்.”
பிரமிளின் அந்தக் கவிதைத் தொகுதியை அவ்வளவு சுலபமாக விற்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.  
அடுத்த முறை பிரமிள் வந்தபோது கவிதைப் புத்தகத்தைப் படித்தீரா என்று கேட்டார்.
“படித்தேன்…நீளமான கவிதையான மேல் நோககிய பயணம் புரியவில்ல.  என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“அப்படின்னா வேற எதாவது கவிதைப் புரிந்ததா?” என்று கேட்டார்.
“வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதைதான் புரிந்தது,” என்றேன்.  பிரமிளுக்கு ஆச்சரியம்.  என்னை நம்ப முடியாமல் பார்த்தார்.  அவர் எதாவது கேள்வி கேட்டால் நான் மாட்டிக்கொண்டு விடுவேன் என்று தோன்றியது. 
“டேவிட்டிற்கு நீங்க புரியறதுன்னு சொன்ன கவிதைதான் புரியவில்லை.. அந்த நீண்ட கவிதை அவருக்குப் புரிகிறது,” என்றார் பிரமிள்.  
சில ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் இறந்து விட்டார்.  டேவிட் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.  என்ன சாதாரண நாளில் வீட்டிற்கு வந்திருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன் எனில் எப்போதும் சனி அல்லது ஞாயிறில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம்.  எப்போதும் இல்லை.  பல மாதங்கள் சந்திக்காமல் கூட இருப்போம். 
வீட்டிற்கு வந்தவர், “இன்றைக்கு முக்கியமான நாள்,” என்றார்.
“ஏன்?”என்று கேட்டேன்
“என் பிறந்தநாள்,” என்றார் பிரமிள்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவர் கையைக் குலுக்கினேன்.  பின் சரவணாபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய் டிபன் வாங்கிக் கொடுத்தேன்.
அவர் வீட்டிற்கு வந்து பிறந்தத் தினத்தைச் சொன்னது வேடிக்கையாக இருந்தது.  பொதுவாக நான் யாருடைய பிறந்தத் தினத்தையும் என் பிறந்த தினம் உள்பட ஞாபகத்தில் வைத்துக்கொள்வது கிடையாது. பெரும்பாலும் மறந்து விடும்.  ஆனால் அதன்பின் அவர் பிறந்த தினத்தன்று வீட்டிற்கு வந்ததை இன்னும் கூட ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். 
பிரமிளுக்கு நான் புரிந்தது என்று சொன்ன கவிதை இதோ:
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின் 
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்

அழகியசிங்கர்
இந்த முறை ஞாயிற்றுக்கிழமை ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்களான வேடியப்பன், விஜய் மகேநதிரன், வினாயக முருகன், சுந்திர புத்திரன், ஈழவாணி, கீதாஞ்சலி, கவிஞர் ஆரோ இன்னும் பலருக்கும் என் நன்றி.  இந்தக் கூட்டத்தில் கவிதைகளை சிலவற்றைப் படித்தோம்.  கதைகளை படிக்காமல் சொல்ல வருகிறதா என்று பார்த்தோம். அதில் ஓரளவு வெற்றிதான். வேடியப்பனை எனக்குக் கதை எழுதுபவராகத் தெரியாது.  அவர் சினிமா எடுக்க விருப்பப் படுபவராகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  அவருடைய இரண்டு கதைகளையும் படிக்காமல் சொல்லும்போது எல்லோராலும்  நன்றாக ரசிக்க முடிந்தது.  ஈழவாணி முதலில் மஞ்சப்பு  முக்கூத்தி என்ற கவிதையைப் படித்தார்.  அவர் படித்த விதம் நன்றாக இருந்தது.  கூட்டம் கலகலக்கத் தொடங்கியது.
வினாயக முருகன் லக்க்ஷ்மி சரவணகுமாரின் வள்ளி திருமணம் கதையை சொன்னார்.  இக்கூட்டத்தின் முக்கிய விஷயம்.  சொல்பவர் கதையை நன்றாகச் சொல்ல வேண்டும்.  அதேபோல் கேட்பவர் கவனத்துடன் கேட்க வேண்டும்.  அப்போதுதான் முழுமையாக கதையையோ கவிதையையோ உள்வாங்கிக் கொள்ள முடியும்.
சுந்தரபுத்திரன் பாட்டி கதை ஒன்றை சொன்னார்.  பாவண்ணன் கதையை ஒருத்தர் சொன்னார்.  ஈழவாணி என்பவர் இலங்கையில் நடந்த கதை ஒன்றை குறிப்பிட்டார்.  அந்தக் கதையைக் கேட்பதற்கே உருக்கமாக இருந்தது.  
புதிதாக வந்திருக்கிற தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற புத்தகத்திலிருந்து ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற கதையையும், ‘ஹர்ஷவர்த்தனர் அறிவு’ என்ற கதைகளையும் படித்தோம்.  புது எழுத்து வெளியீடாக இப் புத்தகம் வெளிவந்துள்ளது. பிரமிள் எழுதிய கவிதைகள் இரண்டைப் படித்தோம்.  அவர் பிறந்த தேதி இருபதாம் தேதி ஏப்ரல் மாதம்.  ஒரு கவிதையின் பெயர்  வொட லொட.. இன்னொரு கவிதையின் பெயர் எந்துண்டி வஸ்தி?
கதை சொல்வது என்பது எப்படி ஒரு கலையோ அதைப் போல் கதையைக் கேட்பதும் ஒரு கலை.  இதற்கெல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  
பள்ளிக்கூடங்களில் கதை கவிதை சொல்வது மாதத்திற்கு ஒரு முறையாவது யாராவது அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.  ஆனால் இதெல்லாம் சாத்தியம இல்லை.  பூனைக்கு யார் மணி கட்டுவது?  எலிதான் மணியைக் கட்ட வேண்டும். அதேபோல் கல்யாணம் போன்ற மகிழச்சிகரமான இடங்களில் கதையோ கவிதையோ வாசிக்கும் கூட்டம் நடத்தலாம்.  ஆனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஓடிப் போகாமல் இருக்க வேண்டும்….
மூன்று கூட்டங்களில் நாங்கள் வாசித்த கவிதைகள் கதைகளை நான் பதிவு செய்திருக்கிறேன்.  அதைக் கேட்டாலே சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் கேட்க வேண்டும்.  முடியுமா?
நேற்று இரவு இதை type அடித்துக்கொண்டிருந்தபோது வாசலில் பயங்கர வெடி சப்தம்.  எங்கள் தெருவிற்கே அரசியல் வாதிகள் தேர்வில் நிற்கப் போவதை அறிவிக்க வந்து விட்டார்களா என்ற கிலிதான் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அது இல்லை.  தொடர்ந்த வெடி சப்தமும், ஒரு குழந்தையின் அலறலும் கேட்டது.  பதறிப் போய் பால்கனியிலிருந்து கீழே  பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில் உள்ள டிரான்ஸ்பார்மர்தான் வெடித்துக்கொண்டு தீபாவளி புஸ்வானம் மாதிரி எரிந்து கொண்டிருந்தது.  தெருவே கூடி விட்டது. மண்ணைப் போட்டு எல்லோரும் அணைத்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் துண்டிக்கப் பட்டது.  மின் ஊழியர்கள் உடனே வந்து விட்டார்கள். டிரான்ஸ்பார்மரில் எரிந்து கருகிப்போன ஒயர்களை எல்லாம் துண்டாக வெட்டி வெளியே எறிந்தார்கள். உடனே மின்சரம் எடுக்கும்படி சரி செய்து கொண்டிருந்தார்கள்.  அந்த ராத்திரியில் அப்பாவை அறையில் விட்டுவிட்டு வந்து விட்டேன்.  அவரோ அறையில் இருட்டில் பேன் இல்லாத புழுக்கத்தில் என் பெரைச் சொல்லி பெரிசாக கத்த ஆரம்பித்து விட்டார்.  பின்னர் அவர் அறைக்குச் சென்று அவரைச் சமாதானம் செய்தேன்.
இன்று நானும் அப்பாவும்தான் வீட்டில் இருந்தோம்.  நான் கதை சொல்றேன் என்றேன்.  அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார்.  பின் நான் தொந்தரவு செய்தேன்.  வேறு வழி இல்லாமல் சரி சொல்லு என்றார்.  நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்…ஒரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது.  பையனுக்கு 62 வயது.  பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை புரியுதா…. ஒன்றும் சொல்லவில்லை….நான் திரும்பவும் ஆரம்பித்தேன்..பையனுக்கு ஒரு நாள் என்னமோ ஆகிவிட்டது…அவனுக்கு அவன் யார் என்று தெரியவில்லை….எங்கே இருக்கிறோம்னு தெரியலை….அப்பா சொன்னார்…’என்னைப் படுக்க விடேன்…ஏன் இதெல்லாம் சொல்றே..’  ‘சரியப்பா நான் விட்டுடறேன்..ஆனா இதுவரை சொன்ன கதையைச் சொல்லேன்.’ என்றேன். அப்பா கதையைத் திருப்பி சொல்லவில்லை.  அவர் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார்….

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 3 அழகியசிங்கர்

அழகியசிங்கர்








வழக்கம்போல் இந்த ஞாயிற்றுக்கிழமை (17.04.2016) கூட்டம் 4.30 மணிக்கு. 
விஜய் மகேந்திரன், வினாயக முருகன்  வேடியப்பன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கதை வாசிப்பதாக கூறி உள்ளார்கள்.  நீங்களும் வரலாம்.  தூரம் ஒரு பொருட்டல்ல என்றால் வரலாம்.
புதிய முறையாக கதையைப் படிக்காமல் சொல்லிப் பார்க்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
போன ஞாயிற்றுக்கிழமை கவிதையே வாசிக்கவில்லை.  இந்த முறை முதலில் கவிதையுடன் தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.இந்த முயற்சியை இன்னும் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல தோன்றுகிறது. 
தி நகரில் உள்ள வெங்கட நாராயணன் தெருவில் உள்ள நடேசன் பூங்காவில் நடைபெற உள்ளது.
உங்களுடைய ஆதரவு தேவை.

என்னுடைய கதை….

அழகியசிங்கர்


இந்த மாதம் கலைமகள் இதழில் விருட்சத்தில் வெளியான டீ என்ற என் சிறுகதை திரும்பவும் பிரசுரமானது.  என்னால் நம்ப முடியவில்லை.   கலைமகள் ஆசிரியருக்கு என் நன்றி. நீங்களும் படிக்க அந்தக் கதையை இங்கு அளிக்கிறேன்.
..
டீ………
அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள்.  தினமும் அவர்கள் சந்திக்கும் இடம்.  அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான்.  என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை.  அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக இருக்குமாதலால்,  அவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு உலக விசாரணை வீட்டு விசாரணையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் அவர்கள் இருவரையும் அடிக்கடிப் பார்ப்பேன்.  பென்சன் பணம் வாங்க எங்கள் வஙகிக் கிளைக்குத்தான் வருவார்கள்.  சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து மாட்டிக்கொண்ட என்னைப் பார்த்து பச்சாதாபப்படுவார்.  
“இந்த இடத்திலேயே இருக்கீங்களே இந்த இடம் போரடிக்கவில்லையா?” என்று ஒரு நாள் கலியமூர்த்தி என்ற பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.
:”போரடிக்கவில்லை.  ஆனா எனக்கு மெட்ராஸில இருந்தாதான் போரடிக்கும்,” என்றார் அவர்.
“நீங்க மெட்ராஸ் வந்திருக்கீங்களா?”
“ஒரே தடவைதான் வந்திருக்கிறேன்.  மயிலாப்பூர் என்ற இடம்.  என் தம்பிக்கு கல்யாணம் ஆன சமயத்தில,”
“நான் ஒருமுறை கூட மெட்ராஸ் போனதில்ல.. திருச்சிக்குப் போயிருக்கேன்,” என்றார் அப்துல்லா என்ற கலியமூர்த்தியின் நண்பர்.
இருவரும் அந்தக் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிலே இருந்தார்கள். மிக சிறிய வீடு.  ஒரு வரண்டா ஒரு அறை ஒரு சமையல் அறை. கழிவறையும், குளிக்கும் இடமும் தனித்தனியாக பின்னால் இருந்தன.  இரண்டு வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டியிருந்தார்கள்.
“நாங்கள் இருவரும் சகோதரர்கள் மாறி.. எங்கள் வாரிசுகள் எல்லாம் எங்கக் கூட இல்லை.” என்றார் அப்துல்லா.
“எனக்கு ஒரே ஒரு பையன்.  அவன் அமெரிக்காவில இருக்கான்.  வருஷத்துல ஒரே ஒருமுறை வந்திருந்து சில நாட்கள் இங்கே தங்கிவிட்டுப் போவான்,”என்றார் கலியமூர்த்தி.
“எனக்கு ஒரே ஒரு பெண்தான்.  அதைக் கட்டிக் கொடுத்துட்டேன்.  அது துபாயில இருக்கு.  ‘அப்பா, எப்படி இருக்கேன்னு’ விஜாரிக்கும்,  அவ்வளவுதான்.” என்றார் அப்துல்லா.
அவர்கள் குரல்களில் இதையெல்லாம் சொல்லும்போது எந்த வருத்தமும் இல்லை.  வருமானம் என்று பெரிதாக இல்லாவிட்டாலும, அவர்கள் இருவரையும் பாதுகாத்துக்கொள்வதற்கான பணம் கிடைக்காமல் இல்லை. மேலும் அவர்கள் தேவை ரொம்பவும் குறைவு. 
முதலில் அப்துல்லா மனைவிதான் இறந்து போனாள்.  அதன்பின் அப்துல்லா கலியமூர்த்தி வீட்டில்தான் சாப்பிடுவார்.  அதற்காக அவர் பணம் கொடுத்தாலும் கலியமூர்த்தியும் அவர் மனைவியும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர்.
“என் சகோதரன் மாதிரி நீங்கள்,” என்று கலியமூர்த்தியின் மனைவி அப்துல்லாவை கவனித்துக் கொள்வாள்.  அதுமாதிரி சமயங்களில் அப்துல்லா உண்மையில் நெகிழ்ந்து போயிருக்கிறார். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இவர்கள் இருவர் குடும்பங்களையும் தெரியும்.  கிராமத்தில் எதாவது பிரச்சினை என்றால் இவர்களுடைய அறிவுரையைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.  
ஒருமுறை கிராமத்தில் காலரா நோய் தொற்றிக்கொண்டபோது எப்படி மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பது என்பது பற்றி மருத்துவ ரீதியில் தெரிந்துகொண்டு பலரிடம் அறிவுரை கூறி பிரச்சாரம் செய்தார்கள் இருவரும்.  
ஒரு வருடம் முன்புதான் கலியமூர்த்தியின் மனைவியும் இறந்து விட்டாள்.  கண்கலங்கி அவள் கணவரையும், அப்துல்லாவைப் பார்த்தும் கையசைத்து விட்டுப் போய்விட்டாள். அது ஒரு பெரிய துக்கமாக கலியமூர்த்தியை வாட்டியது உண்மைதான்.  அந்தத் தருணத்தில் அப்துல்லாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது.  
இப்படி அதிசயமாக இரண்டு பேரகள் இருப்பதை நினைத்து அந்த ஊரே பெருமைப் பட்டது.  அவர்களுக்குள் எந்தச் சண்டையும் நிகழ்ந்ததில்லை. ஹிந்து கோயிலுக்குள் அப்துல்லாவும், மசூதிக்கு கலியமூர்த்தியும் போய் வருவார்கள்.  
அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் இருவர் மீது ஒரு சந்தேகம் எப்போதும் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகம்.  அவர்கள் வீட்டில் அவர்கள் எந்தச் சமையலையும் அடுப்பை மூட்டி சமைப்பதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் உணவு வழங்கினாலும, அது ஒரு தொடர்கதை கிடையாது.  சில நாட்கள் யாருமே அவர்களுக்கு உணவு வழங்கமாட்டார்கள்.  
அதேபோல் உணவு இல்லை என்று அவர்கள் கவலைப் படுவதுமில்லை.  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? அவர்களுடைய எளிமையான வாழ்க்கை அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கிறது.
யார் வேண்டுமானாலும் காலையில் அவர்கள் இருவரையும் டீக் கடையில் பார்க்கலாம்.  டீக்கடையில் வாங்கும் தினசரிகளை வைத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நேரம் நடப்பார்கள்.  கிராமத்தில் உள்ள பாதையில்.  பின் டீக்கடையில் டீயைச் சாப்பிட்டபடி கிட்டத்தட்ட காலை 11 மணி வரை பொழுதைக் கழிப்பார்கள்.  பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து திரும்பவும் டீக் கடைக்கு வந்து விடுவார்கள்.
எனக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கேட்டவுடன் ரொம்ப ஆச்சரியம்.  எப்படி சமையல் பண்ணாமல் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதான் சந்தேகம்.
என் அலுவலக நண்பரை நான் கிண்டல் செய்வேன்.  அலுவலகம் நடந்து கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக அவன் வெளியே ஓடுவான்.  என்ன காரணம் என்றால் சுடச்சுட டீக் கடையில் போடும் போன்டாவைச் சாப்பிடத்தான் அவன் அப்படி ஓடுவான்.  அதனால் அவன் பெயரை போன்டா ஸ்ரீனிவாசன் என்று அலுவலகத்தில் கூப்பிடுவோம்.
அவனைப் பார்த்துதான் ஒரு முறை கூறினேன் : “நீ இப்படி போன்டாவுக்காக தினமும் ஓடுகிறாயே,,,அவர்களைப் பார்த்தாயா? எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள்.”
“யாருக்கு என்ன தெரியும்.  அவர்கள் இருவரும் டீக் கடையில் இருப்பதால் எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் என்று.”
எனக்கும் அந்தச் சந்தேகம் எழுந்ததால், டீக் கடைக்காரரிடம் ஒரு நாள் அவர்களைப் பற்றி விஜாரித்தேன். 
“அவர்கள் இருவரும் இந்தக் கடைக்கு வருவதால்தான் இந்தக் கடையில் லட்சுமி கடாச்சாம் தவழ்கிறது.  டீயைத் தவிர அவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.”
“ஒரு நாளைக்கு எத்தனை டீ சாப்பிடுவார்கள்.”
“பத்து பதினைந்து சாப்பிடுவார்கள்.  சில சமயம் 20 டீக் கூட சாப்பிடுவார்கள்.”
“நிஜமாகவா?”
“உண்மைதான் சார்.  நல்ல மனுஷங்க சார் இரண்டு பேரும்.”
அன்றிலிருந்துதான் என் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி இவர்கள் இருவரும் டீ மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று,
அவர்கள் இருவரும் ஒருமுறை வங்கிக் கிளைக்கு வந்தவுடன், விஜாரித்தேன்.  “இது உண்மையா?”
“எது?”
“நீங்க இருவரும் டீ மாத்திரம் சாப்பிட்டு இருப்பது.”
“ஆமாம்.” என்றார் அப்துல்லா.
“எப்படி அது மாதிரி இருக்க முடியும்?”
“எங்கள் தேவை மிகக் குறைவானது.  ஒரு நாள் அப்படி இருக்க முடிவு செய்தோம்.  வெறும் டீ மாத்திரம் அன்று குடித்தோம்.  பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.  எங்களால் அப்படி இருக்க முடிந்தது.”
“நானும் அப்படி இருக்க முடியுமா?”
“நீங்க ஏன் தம்பி அப்படி இருக்கணும்.  நாங்க வயசானவங்க.  எந்த வேலையும் எங்களுக்குக் கிடையாது.  இன்னும் எத்தனை வருஷம் உயிரோடு இருப்போனுன்னு தெரியாது. அதனால் டீயைக் குடிச்சிட்டு காத்திருக்கிறோம்.”
நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
  ஆனால் அந்தக் கிராமத்தில் இருக்கிற அந்தப் பெரியவர்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.
ஒருநாள் தினமலர் பத்திரிகையைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தி, அவர்கள் இருவர் புகைப்படங்களைப் பிரசுரம் செய்து.  ’75 வயதிலும் டீ மாத்திரம் குடித்து உயிர் வாழ்கிறார்கள்,’ என்று.
  
.

முதல் இதழ் நவீன விருட்சம்

அழகியசிங்கர்


மொத்தம் 16 பக்கங்கள்.  ஜøலை – செப்டம்பர் 1988 ஆண்டு வெளிவந்தது.  மயிலாப்பூரில் உள்ள ஒரு அச்சக உரிமையாளரிடம் தயார் செய்யக் கொடுத்திருந்தேன்.  500 பிரதிகள் அடித்தேன் என்று ஞாபகம்.  எல்லாப் பக்கங்களும் கவிதைகள்.  அதை அச்சடித்துவிட்டு எடுத்துக்கொண்டு வரும்போது, அச்சக உரிமையாளரைப் பார்த்தேன்.  அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.  ஆனால் அவர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இருந்தது. அவர் அச்சக உரிமையாளர் மட்டுமல்ல, ஆனால் ஒரு இலக்கியவாதியும் கூட.  
‘இதில் உள்ள கவிதைகளைக குறித்து என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன்.
அவர் சொன்னார் : ‘ இதெல்லாம் கவிதை இல்லை.’
அடுத்த இதழ் அங்கு அடிக்கப் போகவே இல்லை.  ஏன் மையிலாப்பூர் பக்கமே தலையை வைத்துப் படுக்கவில்லை.  எங்காவது பார்த்தாலும் தள்ளிப் போய் நிற்பேன்.  தப்பி தவறி பார்த்துவிட்டால் போதும் அவருடைய ஏளனப் பார்வை என் முன்னால் தவழ்ந்தபடி வரும். 
16 பக்கங்களில் கவிதைகள் எழுதியவர்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ரா ஸ்ரீனிவாஸன் 2. கோபி கிருஷ்ணன் 3. தேவதேவன் 4. ஆர்.ராஜகோபாலன் 5. துரியன் கோஷ் ப்ரீதி 6. சுரேசன் 7. ஆனந்த் 8. ஞானக்கூத்தன் 9. கண்ணன் எம் 10. ஜெயதேவன் 11. ஆ இளம்பரிதி 12. எஸ் வைத்தியநாதன் 13. கி சீனிவாசன் 14. நாரணோ ஜெயராமன் 15. அழகியசிங்கர் 
முதல் பக்கத்தில் அலங்கரித்த ஸ்ரீனிவாஸன் கவிதையை இங்கு அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்
சூரியனைத் தவிர
சூரியனே, நீ உதயமாகும் பொழுது 
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

நீ மறைகின்றாய்
மலைகளுக்கும்
கட்டிடங்களுக்கும்
ஒவ்வொன்றிற்கும் அப்பால்
நீ எழுதிய ஓவியமும்
மெல்ல அழிகின்றது
இருள் சூழ்ந்து
பின்பு அதிகாலையினில்
நீ உதிக்கின்றாய்
உன்னுடன் நானும் 
மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத.

குழந்தையின் தோழர்

தம்பி சீனிவாசன்

அம்மா அப்பா என் மேலே
அன்பைக் காட்டும் தோழர்கள் – நான்
கும்பிடும் சாமி நீயும் என்
கூட ஆடும் ஒரு தோழன்

ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…

அழகியசிங்கர்


கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும்.  மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு.  அதன் எதிரில்தான் ராகவன் காலனி.  ஆனால் யாரிடமாவது முகவரியைக் கேட்டால் கட்டாயம அசோக் நகரில் உள்ள ராகவ காலனிக்கு வழி சொல்வார்கள். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு மாம்பலத்தில் உள்ள ராகவன் காலனி தெரிவதில்லை.  
என் கடிதங்கள் எல்லாம் அப்படித்தான் சென்று விட்டு வரும்.  யாராவது வீடு தேடி வந்தால் குழம்பி விடுவார்கள். சரி ராகவன் காலனியில் என்ன அப்படி முக்கியத்துவம் இருக்கிறது?  ஒன்றுமில்லை.  ஆனால் அங்கு ஒரு முதியோர் இல்லம் ஒன்றுள்ளது.  ஏழாம் நெம்பர் வீட்டில்தான் அந்த முதியோர் இல்லம் உள்ளது.  
அந்த முதியோர் இல்லத்தில் மூன்று பேர்கள் மட்டும் உள்ளார்கள்.  வேற யாரும் கிடையாது.  சேர்க்கவும் மாட்டோம்.  முதல் முதியவர் வயது 93.  என் அப்பா.  இரண்டாவது முதியவர் நான்.  வயது 62.  மூன்றாவதாக ஒரு முதியவர் சேர்ந்துள்ளார்.  அவர் வேற யாருமில்லை என் மனைவி.  சமீபத்தில் 93 வயதான முதியவரான என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை.  எப்போதும் தானவே எல்லாக் காரியங்களையும் செய்து கொள்பவர்.  யாரையும் எதிர்பார்க்க மாட்டார். காலையில் எழுந்தவுடன் தானே ஷேவ் செய்து கொள்வார்.  பின் குளிப்பார்.  கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிப்பார்.  தானே தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிடுவார்.  
சமீப காலத்தில் அந்த முதியவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.   வலி வலி என்று வலது கையைப் பிடித்துக்கொண்டு தினமும் புலம்புகிறார்.  எழுந்து நிற்கவே முடியவில்லை.  படுத்தபடியே இருக்கிறார்.  கொஞ்சம் எழுந்து உட்கார சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார்.  முன்பெல்லாம் யூரின் போக பாத் ரூம் போவார்.  இப்போதெல்லாம் முடிவதில்லை.
ராகவன் காலனியில் வீற்றிருக்கும் இந்த முதியோர் இல்லத்தில் வெளியில் உள்ள முதியோரை சேர்க்க முடியாது.  அப்பாவாகிய மூத்த முதியவருக்காக அவருடைய பையனாகிய நடுத்தரமான முதியவனான நான்தான் எல்லா உதவிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைக் குளிக்க அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். நானே பாத்ரூமிற்குப் போய் அவருக்குக் குளிப்பாட்டலாமென்றால் அவர் விடுவதில்லை.  அவர் பாத்ரூமிற்குப் போனால் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டுவேன்.  பாத்ரூம் கதவை தாழ்ப்பாள் போடக் கூடாது என்று வேண்டி கேட்டுக்கொள்வேன்.  சில நாட்கள் அவர் குளிக்க மாட்டார்.  பிழிந்தத் தூண்டால் உடம்பை துடைத்துக் கொள்வார்.  சிலதினங்களாகத்தான் அப்பா இப்படி இருக்கிறார்.
தனியாகப் படுத்துக்கொள்ள பயப்படுகிறார்.  என் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிடுகிறார். 
முன்பெல்லாம் மாடிப்படி வழியாக எங்கள் வீட்டு கீழே நடந்து வருவார்.  படிக்கட்டுகள் வழியாக அவர் நடப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  வீட்டிற்குள்ளேயே கீழே உள்ள இடத்தில் நடப்பார்.  தெருவில் யாரும் அவர் முன்னால் நடந்து போகக் கூடாது.  உடனே காட் ப்ளஸ் யூ, குட் மார்னிங் என்று சொல்வார்.  
அப்பாவின் எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை.  புதிதாக எந்தச் சட்டையும் அவர் அணிய மாட்டார்.  என் சகோதரன் பயன்படுத்திய சட்டைகளைதான் அணிவார்.  என் சட்டை அவருக்கு சரியாக வராது.   வீட்டில் செய்யும் உணவுகளையே சாப்பிடுவார்.  அவர் அடிக்கடி விருப்பப்பட்டு சாப்பிடுவது மோர்கழி என்ற டிபன். 
முன்பெல்லாம் அப்பாதான் எனக்கு காப்பி போட்டுக் கொடுப்பார்.  என்னைப் பார்க்க வருபவர்களுக்கு டீ போட்டுத் தருவார்.  இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது.  அதன்பின் நான் காப்பிப் போட்டு அப்பாவுக்குக் கொடுப்பேன்.   அப்போதெல்லாம் மூன்றாவது முதியவர் எங்கள் குழுவில் சேரவில்லை.  
போன மாதத்தில் இருந்து மூன்றாவது நபரும் முதியவர் குழுவில் சேர்ந்ததால், முதியோர் இல்லம் களை கட்டிவிட்டது.  ஆனால் ரொம்ப மூத்தவரான என் அப்பாதான் முடியாதவர் ஆகிவிட்டார்.  வீட்டிக்குள் நடந்து கொண்டிருப்பவரால் அதுவும் முடியாமல் போய்விட்டது.  எப்போதும் ஒரே தூக்கமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.  சாப்பிடுவதிலும் முன்பு போல் ஆர்வம் காட்டுவதில்லை.   எல்லாம் கொஞ்சம்தான் எடுத்துக்கொள்கிறார். 
பின் அவர் ஒரு அறையில் படுத்துக்கொண்டே இருப்பார்.  கொஞ்ச நேரம் கழித்து வேற அறைக்குப் போய்விடுவார்.   முன்பெல்லாம் அவர் குளித்துவிட்டு நெற்றியில் விபூதியுடன், சாமி ஸ்லோகம் சொல்லிவிட்டுத்தான் சாப்பிட அமர்வார்.  எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.  பால்கனியில் நின்றுகொண்டு தெருவில் போவோர் பெயர்களை எல்லாம் கூப்பிட்டு வாழ்த்துவார்.  இப்போது முடிவதில்லை.  பாத்ரூம் எழுந்து போக முடியாததால், பிளாஸ்டிக் குவளையில் அவர் போகும் யூரினை நான் எடுத்துக் கொட்டி பினாயில் மூலம் சுத்தப் படுத்துகிறேன்.  இதுமாதிரி ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டி உள்ளது.   யாராவது வீட்டிற்கு வந்தால் பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்.  அல்லது கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் படுத்திற பாட்டில் யாராவது பார்க்க வருபவர்கள் எழுந்து ஓடியே போய்விடுவார்கள்.
நேற்று மனைவியிடமிருந்து போன் வந்தது.  காலையில் நான் நடை பயிற்சியில் இருந்தேன்.    அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தேன்.  அப்பா வெஸ்டர்ன் டாய்லட்டின் பக்கத்தில் கீழே தரையில் உட்கார்ந்து இருந்தார்.  எழுந்திருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் நான் கால் முட்டிகளில் தைலம் தடவுவேன்.  அவர் என்னை ஆசிர்வாதம் செய்வார்.  
அடுத்த முதியவனான நான், காலையில் காப்பியைக் குடித்து விட்டு கிரவுண்டிற்கு நானோ காரிலோ டூ வீலரிலோ சென்று நடக்கிறேன்.  இப்போது ஒரு அற்புதமான பூங்காவில் நடக்கிறேன்.  எட்டுப் போட்டு நடந்தால் உடலுக்கு நல்லதாமே அதனால் எட்டுப் போட்டு நடக்கிறேன்.  பின் கைக்கும் காலுக்கும் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன்.
வீட்டிற்கு வந்தவுடன், செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.  தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவன்.    முன்பெல்லாம் ஒரு பக்கம் முழுவதும் டைரி எழுதுவேன்.  இப்போதெல்லாம் கால் பக்கம் அரைப் பக்கம்.   
என் முன்னால் மூன்று பைகள் நிறைய புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எதாவது எழுத முயற்சி செய்கிறேன்.  குறைந்தது ஆர்யக்கவுடர் தெருவில் நாலைந்து முறைகள் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது என் வழக்கம்.  வங்கிக் கிளைகளில் கூட்டத்தில் நின்று கொண்டு பாஸ் புக்கைப் பதிவு செய்வேன்.  பின் நண்பர்களைப் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போவது என்று பொழுதைக் கழிக்கிறேன்.  தினமும் புத்தகம் படிக்கும் நேரத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டுமென்றும் நினைக்கிறேன்.  ஆனால் முடிவதில்லை.  அப்பாவைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வீட்டைவிட்டு வெளியூருக்கெல்லாம் செல்வதில்லை.  மகாமகத்திற்கு என் மனைவிதான் சென்றாள். நான் போகவில்லை.  இன்னும் ஒன்று சொல்லவேண்டும், நான் சாப்பிட்டப் பின் சில மாத்திரைகளைப் போட்டுக்கொள்கிறேன்.  அது நல்ல தூக்கத்தைக் கொடுத்துவிடும்.  நாற்காலியில் உட்கார்ந்த உடன் தூங்க ஆரம்பித்து விடுவேன்.  ஒரு நாள் காலையில் நான் தூங்கவில்லை என்றால் மாலை நேரம் தூக்கம் வந்துவிடும்.
சில மாதங்களுக்கு முன் நான் முன்பு எழுதிய ஒரு நோட்புக்கைப் பார்த்தேன்.  அதில் நான் படித்தப் புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருந்தேன்.  எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  எனக்கு திரும்பவும் அந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.  என்ன படித்தோம் என்று ஞாபகத்திற்கும் வரவில்லை.  நான் எழுதியதைப் படித்தப்பின் நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேனா என்று தோன்றியது. என் பிரச்சினை நான் ஒரு புத்தகத்தைப் படித்தவுடன், அடுத்தப் புத்தகத்திற்குப் போனால் முதல் புத்தகம் மறந்து விடும்.  அதனால் எழுதி ஒரு கட்டுரை மாதிரி இப்போதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இக் கட்டுரைகளைத் தொகுத்துதான் நீங்களும் படியுங்கள் என்ற புத்தகம் தயாரித்து உள்ளேன். இலக்கியக் கூட்டங்களில் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்கிறேன்.  இது ஒரு பொழுதுபோக்குதான் வேற ஒன்றுமில்லை.
எங்கள் முதியோர் இல்லத்தில் மூன்றாவதாக இருப்பவர் என் மனைவி.  ஜனவரி மாதம் முதல் அவர் முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார்.  அவர் வங்கியில் பணி புரிந்து ஜனவரி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.  அதனால் முன்பு இருந்ததைவிட முதியோர் இல்லத்தில் இன்னொருவர் கூடி விட்டார்.  முன்பெல்லாம் என் மனைவி காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்றவுடன், நான் மாம்பலத்தில் உள்ள சின்ன ஓட்டலில் இட்லி வடை சாப்பிடுவேன்.  இப்போது அதெல்லாம் கிடையாது.  வேளா வேளைக்கு உணவு கிடைத்துவிடுகிறது.  முதியோர் இல்லம் பார்க்க கொஞ்சம் சுத்தமாக இருக்கிறது.  
ஆனால் மூன்றாவது முதியவர் ஆன மனைவியிடம் ஒரு கெட்ட குணம்.  காலையில் சாப்பிட்ட உடன், டிவி முன் உட்கார்ந்து விடுகிறார்.  பின் எழுந்து கொள்வதில்û.  ஒரு நாள் முழுவதும் டிவியில் வருகிற சீரியல்களைப் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.  எனக்கு டிவியோ பிடிப்பதில்லை.  மனைவிக்கு நான் எப்போதும் புத்தகம், கம்ப்யூட்டர் என்று இருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்வது? மூத்த உறுப்பினரான அப்பாவிற்கு கட்டாயமாக குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு கிடைத்து விடுகிறது.  
மூவருக்கும் பென்சன் வருகிறது.  மூத்தவர் அப்பாவின் பென்சனைத் தொடுவதில்லை.  அது அவருடைய பணம்.  என் பென்சன் பணமும், மனைவியின் பென்சன் பணமும்தான் முதியோர் இல்லத்தை நடத்த போதுமானதாக இருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்குவது என் இயல்பு.   அது என் மனைவிக்கும் அப்பாவிற்கும் பிடிப்பதில்லை.  என் பிரச்சினை புத்தகங்களை எங்கே வைப்பது என்று. அதேபோல் நல்ல சினிமா எதாவது இருந்தால் தியேட்டரில் போய் பார்த்து விடுவேன்.  
மூத்தக் குடிமக்களாகிய எங்களை யாரும் பார்க்க வருவதில்லை.  என் மகள் அவள் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் இருக்கிறாள்.  அவளால் வர இயலாது.  புதல்வன் வெளி நாட்டில் இருக்கிறான். அவனாலும் வர இயலாது.
என் வீடு உண்மையிலேயே ஒரு முதியோர் இல்லம் தானே?
 

கதையை எப்படி வாசிக்கலாம்?

அழகியசிங்கர்

நேற்று நடந்த கூட்டத்தில் இரா முருகன் அவருடைய நாவலான  ‘அச்சுதம் கேசவம்’ என்ற நாவலிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாசிக்க கூட்டம் 5.30 மணிக்குத் தொடங்கியது.  
கங்கையைப் பற்றி விவரிக்கும் பகுதியை எடுத்துப் படித்தார் :
‘தினசரி கூடும் கூட்டம்தான்.  தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள்.  கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள்.  ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தத் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீல் மல்கப் பார்கிகறார்கள…’
ஆனால் மிகக் குறைவான நேரம்தான் படித்தார்.  கோவிந்தராஜன் பச்கைச் கிளிகள் என்ற பாவண்ணனின் கதையை எடுத்துப் படித்தார்.  கிருபானந்தம் அவர்கள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற சுப்ர பாரதி மணியன் கதையைப் படித்தார். நான் பேயோன் என்பவர் எழுதிய அகலிகைப் படலம் என்ற கதையை எடுத்துப் படித்தேன்.  அதன்பின் கோவிந்தராஜன் அந்திமழை என்ற பத்திரிகையில் வெளிவந்த பண்டிகை நாள் என்ற விநாயக முருகன் எழுதிய கதையைப் படித்தார்.  5 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7 மணிக்கு முடிந்தது.  எங்களால் ஒரு கவிதையும் படிக்க முடியவில்லை.  பா வெங்கடேசனின் ஆலா என்ற கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்தேன்.  முடியாமல் போனதற்கு சிறிது வருத்தம்தான்.
இதன் மூலம் சிலவற்றை அலச முடிந்தது.  கூட்டம் பார்க்கில் நடப்பதால் சுற்றிலும் கூச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  அதைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மேலும் ஒரு கதையைப் படிக்கும்போது சத்தமாகப் படிக்க வேண்டும்.  ரொம்பவும் நிதானமாகவும் படிக்க வேண்டும்.  கவிதையை நாம கட்டாயம் படிகத்தான் வேண்டும்.  கதையை வேண்டுமானால் படிக்கலாம், அல்லது சொல்லலாம்.
நீண்ட கதைகளைப் படிக்கும்போது கேட்பவர்களுக்கு கவனம் முழுவதும் இருந்துகொண்டு இருக்க வேண்டும்.  கதை வாசிப்பவர்கள் எல்லோரும் கதையைக் கேட்பதுபோல் அமர்ந்துகொண்டு கதையை வாசிக்க வேண்டும். 
 பேயோன் கதையை நான் சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவிற்கு வந்தவர்கள் கேட்க வந்து விட்டார்கள்.  அவர்களும் ரசித்தார்கள்.  அவர்களை அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறேன்.  வழக்கம் போல் நேற்று வாசித்ததை சோனி ரிக்கார்டில் பதிவு செய்திருக்கிறேன்.  
விநாயக முருகன் கதை எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதும் பாணியில் இருப்பதாக என் நண்பர் குறிப்பிட்டார்.  எனக்கு கேட்கும்போது அது மாதிரி தோன்றவில்லை.  போயோன் கதையை முழுவதும் படிக்கும்போது அகலிகைக்கு திரும்பவும் தண்டனை கொடுத்து விட்டாரோ என்று தோன்றியது.  சுப்ர பாரதி மணியன் கதையில் மாமிச உணவு புசிப்பதை முழுக்க முழுக்க வர்ணிப்பதுபோல் இருந்தது.  என்னையும் வலுகட்டாயமாக சாப்பிட வைத்துவிடுவாரோ என்று மனதில் பட்டது.  பாவண்ணன் கிளிகளைப் பற்றிய கதை ஏற்கனவே பேப்பரில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டது. நாம் படிக்கும் செய்தியை எப்படி கதையாக மாற்றுவது என்பது ஒரு கலைதான்.
இன்னும் எடுத்துக்கொண்டு வந்த கதைகளை படிக்காமல் திரும்ப வேண்டியிருந்தது.
முக்கியமாக கதை வாசிப்பர்களுக்கு கேட்பவர்கள் போராடிக்காமல் கதையை எப்படி கேட்க வைக்கலாம் என்பதில் பயிற்சி யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.  மேலும் கதையைப் படிக்காமல் சொல்வது சாத்தியமா என்றும் சோகித்துப் பார்க்க வேண்டும்.  
நாங்கள் சத்தமாக கதைகளை வாசித்ததால் பூங்காவில் சுற்றிக்கொண்டிருப்பவர்களையும் எங்கள் பக்கம் இழுக்க முடிந்தது.  இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 2

அழகியசிங்கர்

வாரம் ஒரு முறை சந்தித்து கதையோ கவிதையோ படிப்பது என்பதும் கேட்பது என்பதும் யோசித்தால் சற்று சிரமமான விஷயமாகக் கூட தோன்றலாம்.  அதனால்தான் எல்லோரும் நடமாடும் பூங்காவில் இக் கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்திற்கு 2 பேர்கள் போதும்.  பூங்கா ஒரு அற்புதமான விஷயம்.  எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருப்பார்கள்.  கலகலவென்று இருக்கும்.  நாம் ஒரு இடத்தில் கூடி கதையையோ கவிதையையோ படிக்கலாம்.  இதை அவரவர் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில உள்ள பூங்காவிலும் வைத்துக் கொள்ளலாம். கட்டாயம் வீட்டில் வேண்டாம்.  அது வீட்டில் உள்ளவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும்.
1. கூட்டத்திற்கு வருபவர்கள் ஒரு கதையோ கவிதையோ வாசிக்கலாம்; யாரும் படிக்க இல்லையென்றால் இன்னும் கதைகளோ கவிதைகளோ வாசிக்கலாம்.
2. கூட்டம் சரியாக 5.00 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் முடித்து விடலாம்;
3.  கூட்டத்திற்கு வருபவர்கள் முதல் முறையாக அவர்கள் எழுதிய கதையோ கவிதையோ வாசிப்பதாக இருந்தால் முதலில் அதை வாசிக்கவும்.
4. நீங்கள் விருப்பப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும வாசிக்கலாம்.
5. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.கதையைப் படிப்பதற்குப் பதில் கதையைச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்று.  ஆனால் எழுத்தில் எழுதப்படுகிற நயத்தை படித்தால்தான் வெளிப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
6.  தயபுசெய்து தி நகர் பக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  எளிதில் தி நகரிலிருந்து ஒருவர் வீட்டுக்குப் போகும் தூரத்தில் இருக்கும்படி வரவும்.
7. படிக்க விரும்புவர்கள் அவரவர் புத்தகமோ பத்திரிகையோ எடுத்து வந்து வாசிக்கவும்.
நடேசன் பூங்காவில் வருகிற ஞாயிறு அதாவது 10 ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது. 5.00 மணிக்கு வரவும்.  பூங்கா முகப்பில் தென்படும் மேடைக்கு வரவும்.  அங்கு அமர்ந்துகொண்டு வாசிக்கலாம்.