ஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை?

அழகியசிங்கர்


சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் எனக்கு போன் செய்தார்.  “ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.  “நிச்சயமாக,” என்றேன்.  “ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும்,” என்றார்.
நான் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  என் வீடு பக்கத்திலேயே அவர் வீடு இருந்தது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.  
சிலசமயம் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார். அவர் எதிர்பார்க்கும் ஞாயிற்றுக்கிழமையில் நான் போயிருக்க மாட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.  அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இன்னொரு ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, “உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்,” என்று அவர் மனைவிதான் குறிப்பிடுவார்.
அவரால் நடக்கவே முடியாது.  ஆர்யக்கவுடர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் அவரால் நடந்தே போக முடியாது.  நான் டூ வீலரில் அவரை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போவேன்.  அப்போது டூ வீலரை ஜாக்கிரதயாக ஓட்டுவேன்.  ஏன் எனில் அவர் குள்ளமாக குண்டாக இருப்பார்.  எனக்கு டூ வீலர் ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்படுமோ என்று தோன்றும்.
ஏடிஎம் இருக்கும் இடத்திற்குப் போவோம்.  பின் மெதுவாக படி ஏறுவார். சில படிகள் என்றாலும் அவருக்கு ஏறுவதில் தடுமாற்றம் இருக்கும்.  நான் அவருக்கு உதவி செய்வேன்.  என் தோள்பட்டையைப் பிடித்தபடி படிக்கட்டு ஏறுவார்.
ஏடிஎம் அறையில் அவரிடம் உள்ள கார்டை என்னிடம் கொடுத்து விடுவார். ஏடிஎம் பெட்டியில் கார்டை செலுத்தி அவரால் பணம் எடுக்க முடியாது.  ரொம்ப மெதுவாக சீக்ரெட் எண்களைச் சொல்வார்.  
அவருக்கு என் மீதே சநதேகம் வந்து விடுமோ என்று தோனறும்.  அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன்.  அந்தத் தொகையை அவர் 15 நாட்கள் அல்லது 30 நாட்கள் வைத்துக் கொண்டு செலவு செய்வார்.  ஏன் அவரால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்று பலமாக யோசிப்பேன்.  அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கும். 
பின் அங்கிருந்து நாங்கள் ஜேபி டிபன் சென்டருக்குப் போவோம்.  எனக்கும் அவருக்கும் பொங்கல் என்றால் பிரியம்.  மேலும் ஜேபி டிபன் சென்டரில் டிபன் செலவு குறைவாக இருக்கும்.  அவர் சரவணா ஓட்டலுக்குப் போவதை விரும்ப மாட்டார்.
வாரத்திற்கு ஒரு முறை அவர் இப்படி வெளியில் வருவதுண்டு.  மற்றபடி வீட்டிலேயே இருப்பார்.  எங்கும் போக முடியாது.  போகவும் மாட்டார்.  அவர் வீட்டில் வைத்திருக்கும் புத்தகங்கள் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருப்பார். அவற்றைப் படித்து எழுதுவார். அவர் வீட்டில் கணனி கிடையாது.  அவருக்கு உபயோகப் படுத்தவும் தெரியாது.
மின்சாரக் கட்டணத்தை அவருக்காக இன்டர்நெட் மூலம் நான் கட்டுவேன். நான் கட்டிக் கொடுத்தாலும் அதை அவர் நம்ப மாட்டார்.  அதைக் கட்டுவதற்காக ஒருத்தரை உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.  உதவி செய்பவ் நேரில் போய் மின்சாரத் தொகையை கட்டினால்தான் நம்புவார்.
“கொஞ்சமாவது நடக்க முயற்சி செய்யுங்கள்,”என்பேன்.  அதைக் கேட்கவே அவர் விரும்ப மாட்டார்.
ஒரு முறை ஒரு கல்யாணத்திற்கு என்னை அழைத்துப் போகச் சொன்னார். “நீயும் வா..தெரிந்தவர்கள் கல்யாணம்தான்,” என்றார்.  “நான் எப்படி வருவது. என்னை யாருக்கும் தெரியாதே?,” என்றேன்.  “பரவாயில்லை…வா..யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.  நான் உன்னைக் கூப்பிடுகிறேன்,” என்றார்
நான் வேறு வழி இல்லாமல் என்னுடைய நானோ காரில் அவரை அழைத்துக் கொண்டு போனேன்.  என் காரில் அவர் உட்கார்ந்தாலும் அவர் முகத்தில் நான் சரியாக ஓட்டுகிறேனா என்ற பயம் இருந்துகொண்டு இருக்கும்.
நாங்கள் இருவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றோம்.  முதல் மாடியில் கல்யாணம்.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  சாபபிட்டுவிட்டு மாடிப்படிக்கட்டுகள் வழியாக இறங்கினோம்.  அவரால் இறங்க முடியவில்லை.  மூச்சு வாங்கியது.  எனக்கு திகைப்பாக இருந்தது.  ஒருவர் ஏறுவதற்குத்தானே திணறுவார்.  இவர் இறங்கவே தடுமாறுகிறாரே என்று நினைத்தேன்.   அவரை வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
பின் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப் போய் பொங்கல் வாங்கினேன். அவரும் வந்திருந்தார்.  திடீரென்று உட்கார்ந்து விட்டார்.  ஒரு மாத்திரை பெயரைச் சொல்லி உடனே வாங்கி வரச் சொன்னார். எதிரில் அப்போலோ பார்மஸியில் வாங்கி வந்தேன்.  மாத்திரையை விழுங்கியபிறகு அவருக்கு சரியாகிவிட்டது.  வீட்டில் கொண்டு வந்து விட்டேன்.  இனிமேல் அவரைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.  அப்படிப் பார்த்தாலும் வெளியே அழைத்துப் போகக் கூடாது என்று நினைத்தேன்.  ஒரு நாள் மதியம் அவர் மனைவி மடியில் இறந்து விட்டார்.  அன்று அவர் விபூதிப் பூசிக்கொண்டு பளிச்சென்று இருந்தார்.
ஒவ்வொரு முறை நான் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, 68 வயதில் ஏன் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்று யோசிப்பேன்.

ஏழு வரிகளில் கதை….


செல்வராஜ் ஜெகதீசன் 
நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?”



“மொத்தமா உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல எத்தனை பேர் தேறும்” என்றான் ரமேஷ்.
ரமேஷ் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இப்படி எதையாவது கேட்பான். அப்போது சரவணன் பேசிக்கொண்டிருந்தான். வெளியூரில் வேலை. ஏதோ விடுமுறையில் வந்திருந்தான்.
“உன்னையும் (என்னைக்காட்டி) இவனையும் விட்டா இன்னும் ஒரு ரெண்டு பேர் தேறும்…நான் அதிகமா யார் கிட்டயும் அவ்வளவா வச்சிக்கிறதில்ல..”என்றான் சரவணன்.
“நல்லா யோசிச்சுப் பாரு.. அது மட்டும்தான் காரணமா…” என்ற ரமேஷிடம்
“இப்போ என்ன சொல்ல வர?”…என்றான் சரவணன்.
“கடந்த அரைமணி நேரமா நீதான் பேசிக்கிட்டிருக்க…நாங்க வெறுமனே கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்…இதுவே உன் பிரண்ட்ஸ் சர்க்கிள் கம்மியா இருக்கக் காரணமா இருக்கலாம். நீ கொஞ்சம் அதிகமா பேசற..”
நன்றாக யோசித்திருப்பான் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பேசும்போது இடையிடையே “நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?” என்பதை சேர்த்திருந்தான்.
பேச்சு என்னவோ அதே அளவுதான்.
o

ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்

அழகியசிங்கர்
ஆத்மாநாமின் பிரச்சினை உடனடியாக புகழ் வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று அவர் நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் அதுமாதிரியான பிரச்சினை இருக்குமென்று தோன்றுகிறது. குறிப்பாக எழுதுபவர்களுககு.   எப்போதும் நம்முடைய எழுத்தை யாராவது படிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.  பத்திரிகைகளில் தினசரி தாள்களில் எதாவது படைப்புகள் வெளிவந்தால் அதை உடனடியாக தெரிந்தவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள். பின் அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.
இப்போதாவது முகநூல் என்ற ஒன்று இருக்கிறது.  அதன் மூலம் நாம் தெரிவிக்கிற கருத்துகளை உடனுக்குடன் மற்றவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இப்போது ஒருவருக்குக் கிடைக்கிற இந்த அங்கீகரிப்பு அன்று மட்டும் இருந்திருந்தால், ஆத்மாநாம் போன்றவர்கள் தற்கொலையே செய்திருக்க மாட்டார்கள்.  
அவர் எழுதி வைத்த அத்தனை கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வழி இல்லாமல் தவித்தார்.  அந்தச் சமயத்தில் அவர் எழுதிய வேகத்தில் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று தெரியவில்லை.  
நம் முன்னே விரிந்து கிடக்கும் இந்த உலகம் கொடூரமானது. அதை நாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேற வழி இல்லை.
ஆத்மாநாமிற்கு இதெல்லாம் தெரியாது.  கட்டாயம் தெரிந்திருக்கும்.  திறமையாக கவிதை எழுதத் தெரிந்த ஒருவருக்கு இதெல்லாம் ஏன் தெரியாது.  அப்படி தெரிந்தாலும ஒரு கேள்வி உள்ளே உழன்று கொண்டே இருக்கும்.  
üஏன் எல்லோருடைய கவனத்திற்கு எழுத்து போகவில்லை என்ற கவலை.ý அதைப் பற்றி யோசிக்க யோசிக்க பூதம் போல் அது வளர்ந்து கொண்டே அவரையே விழுங்கக் காத்திருக்கும்.
விடுதலை என்ற கவதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்: 
கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக் கண்ணாடிச் சிறைக்குள்
நான்
அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்
திறக்கும் வழியே இல்லை.
இதுதான் பிரச்சினை.  ஆத்மாநாமின் பிரச்சினை.  அவருக்குத் தெரியவில்லை நம்மைச் சுற்றிலும் எந்தக் கண்ணாடிச் சிறையும் இல்லை என்பது.  நாமே கற்பித்துக் கொள்வதுதான் இந்தக் கண்ணாடிச் சிறை என்று. இப்படி வேறு விதமாக அவர் யோசித்திருந்தாலும் எதைக் குறித்து அவர் கவலைப் பட்டிருக்க மாட்டார்.
   நம்முடைய சராசரி நிலையை உணர்ந்து சாதாரணமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  அப்படி இருந்தால் உடனடியாக புகழ் வேண்டும் என்ற வேதாளத்தைப் பிடித்துத் தொங்கியிருக்க வேண்டாம்.
ரொம்ப ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்.  இப்போதென்றால் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, ஷ்ரூதி டிவியைக் கூப்பிட்டு படம் எடுக்க வைத்து நாலு பேர்களைப் பேசக் கூப்பிட்டிருக்கலாம்.  ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் தெரியவில்லை. 
    கவிதை நூலை கொண்டு வந்தவர் அதை எப்படி விற்பது என்பது கூட தெரியவில்லை.  அவருக்குத் தெரிந்த இன்னொரு கவிஞருக்கு அந்தப் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து, படித்து அபிப்பிராயம் சொல்ல சொன்னார்.  ஏன் இது மாதிரி பெரிய தப்பை செய்தார் என்று தெரியவில்லை.  அந்த இன்னொரு கவிஞரும் அந்தப் புத்தகத்தை வாங்கியவர், அக் கவிதைப் புத்தகம் குறித்து எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை.  கவிதை எழுதியவரும் விடாமல் அவரைப் பார்த்துக் கேட்க, வேற வழி இல்லாமல் அவர் சொன்ன கருத்து, கவிதைகள் பிடிக்கவில்லை என்பதுதான். 
என்ன பெரிய அடி கவிதை எழுதியவருக்கு..இதற்கு அடிப்படையான காரணம்.  ஆத்மாநாமின் சின்டரம்தான்.  உடனடியாக புகழ் வேண்டும்..ஆனால் சுஜாதா என்ற எழுத்தாளர் ஒரு இடத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன்.  உலகத்தில் எல்லோரும் சில நிமிடங்களாவது புகழ் அடைந்து விடுவார்கள் என்பது.  இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
ஆனால் ஆத்மாநாமைப் பொறுத்தவரை அது தற்கொலை வரை போய் கொண்டு விட்டது.  சரி, நாம் வசித்துக் கொண்டிருக்கும் வீடு நம்மைவரவேற்குமா?  நிச்சயமாக இருக்காது…ஆத்மநாமிற்கு வீடு கண்டு கொள்ளவே இல்லை.  அவர் அன்புக்காக ஏங்கினார்.  
அவருடைய வெளியேற்றம் என்ற கவிதையைப் படித்துப் பார்க்கலாம்.
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான் 
சிகரெட்டிலேயே 
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை 
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாம் எதிர்பார்த்தது ஒரு புன்னகைதான், ஒரு கை அசைப்புதான் 
ஆனால் அது கூட கிடைக்கவில்லை.  என் கேள்வி ஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார் என்பதுதான். ஆத்மாநாம் போல் இன்றும் பலர் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிழல் ஆத்மாநாமன்களாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்







அழகியசிங்கர்



ஏழு வரிக் கதைக்கு முக்கிய காரணம் நகுலன்தான்.  அவர் ஞானரதம் அக்டோபர் 1972ல் மூன்று நொடிக் கதைகள் எழுதி உள்ளார்.  அதைப்படித்துப் பார்த்தப் பிறகு அதே மாதிரியான முயற்சியை ஏன் எற்படுத்துக் கூடாது என்று தோன்றியது. இதோ நகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

கதை ஒன்று

ஆஸ்பத்திரி.

அறையில் அவன்.

ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்

நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.

யாரும் இல்லை.  மறுபடியும் தூங்கி விட்டான்.

அவ்விருவரும் வெளியில் வந்தனர்.

முதல்வன் : ஏன்?

மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை.

கதை இரண்டு

அவளுக்கு ஐந்து வயது.

தாயிடம் விரைந்து சென்றாள்.

“அம்மா உன்னை யாரோ பார்க்க வந்திருக்கார்.”

“üயாருடி?”

“தெரியல்லே, அம்மா, கேட்டதுக்கு உனக்குத் தெரியும்கிறார்.”

அவள் வெளியே வந்ததும், அவனைப் பார்த்தாள்.

அவள், “குழந்தை வருவதற்கு முன் போய் விடுங்கள்.  உங்களுடன் இனியும் என்னால் அவஸ்தைப்பட முடியாது,”

அவன்,”அலமு, நான் சொல்வதைக் கேள்….”

அவள் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவன் சிறிது நேரம் நின்றுவிட்டுப் பிறகு ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலில் ஏறினான்.

கதை மூன்று

கடைத் தெரு.

பகவட 12 மணி.

நல்ல வெயில்.

அவள் பார்க்க மிக அழகாக இருந்தாள்.

பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.

üüஐயா, யாருக்குமே என் மீது இரக்கமில்லையா?  ஒத்தராவது எனக்குத் தாலிப் பிச்சை தர மாட்டீங்களா?ýý

கூட்டத்தில் ஒரு கூட்டச் சிரிப்பு.

üüபைத்தியண்டா,ýý என்ற கூக்குரல்

அப்பொழுது அவள் விழித்துக் கொண்டாள்.

நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்தது

அழகியசிங்கர்




ஒரு கவிதை ஒரு கதை கூட்டம் நேற்று (08.05.2016) வழக்கம்போல் நடேசன் பூங்காவில் நடைபெற்றது.  மௌனி கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிப்பதாக முடிவு செய்திருந்தோம்.  ஒவ்வொரு வாரமும் கூட்டம் என்பது இப்படித்தான் நடக்குமென்று எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு யார் தலைவர்?  யாரும் தலைவர் இல்லை.  வருபவர்கள் எல்லோரும்தான் தலைவர்கள்.  முதலில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஆத்மாநாம் கவிதைகள் ஒவ்வொன்றாக வாசித்தோம்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகளை வாசித்துவிட்டோம்.  ரவீந்திரன், கீதா ரவீந்திரன், திருமலை, நாகேந்திர பாரதி, நான், கிருபா எல்லோரும் வாசித்தோம். ஆனால் இப்போது தோன்றுகிறது ஒவ்வொரு கவிதையைக் குறித்தும் எல்லோரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ என்று. 
என் நண்பர் நாகேந்திர பாரதி அவருடைய கவிதை ஒன்றை வாசித்தார்.  அது குறித்து முடிந்த அளவு கருத்து தெரிவித்திருக்கலாம். அடுத்த முறை இது மாதிரி செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.
மௌனி கதைகளை வாசிக்கத் தொடங்கினோம்.  பூங்காவில் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து இன்னும் உள்ளே நிழல் அதிகமாக தரக்கூடிய இடமாக போய் உட்கார்ந்தோம்.  அந்த இடம் இன்னும் அற்புதமாக இருந்தது. குடும்பத்தேர் என்ற மௌனியின் கதையை திருமலை என்ற நண்பர் வாசித்தார்.  ஒரு முழு கதையை முழுவதுமாக ஒருவரே வாசிப்பதற்குப் பதில் விட்டுவிட்டு இன்னொருவரும் வாசிக்க சொல்லலாம் என்று தோன்றியது. அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போது ராகவன் காலனி முதியோர் இல்லத்திலிருந்து ஒரு அலறல்.  என் மனைவி அவசர அழைப்பு.  94 வயது தந்தையை கவனிக்கச் சொல்லி.  நடுவில் நான் போகும்படி ஆகிவிட்டது.  ஆனால் கூட்டத்தைத் தொடரும்படி கிருபாவிடம் கூறினேன்.  ‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் வாருங்கள்,’  என்று கூறினார்.
நான் உடனே வந்து விட்டேன்.  இன்னும் சிறிது நேரத்தில் முடியவேண்டிய கூட்டத்தில் முழுமையாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.   
வீட்டிற்கு வந்து மௌனியின் பிரபஞ்ச கானம் என்ற கதையை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை நான் வீட்டில்தான் முடித்தேன். ஒரு கதையை சத்தமாக வாசிக்கும்போது சில இடங்களில் வரிகள் தடுமாறுகின்றன.  தப்பாக படிப்பது போல் தோன்றுகிறது.  மௌனமாக வாசிக்கும்போதும் இது மாதிரியான பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.    ஆனால் நாம் வரிகளை மௌனமாக முழுங்கி முழுங்கி விடுவோம்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது.  இநதக் கூட்டம் நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்து விட்டது என்று.  
     கூட்டத்தில் நாங்கள் படித்ததை ஆடியோவில் பதித்து உள்ளோம்.  நீங்களும் கேட்டு ரசிக்கவும்.

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5

அழகியசிங்கர்


மேற்படி ஐந்தாவது கூட்டமானது வரும் ஞாயிறு (08.05.2016) மாலை 5 மணிக்கு நடேசன் பூங்காவில் அரங்கேற்றம் நடாத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.நமது நண்பர் ஒருவர் அடிக்கிற கூத்தை யாராலும் தடுக்க முடியாது போல் இருக்கிறது. நாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கூட்டத்தைப் பார்த்து, பூங்காவிற்கு வரும் மக்கள் தொகை குறைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இப்படியே போனால் பூங்காவிற்கு யாரும் வராமல் போகலாம் என்று பயமுறுத்துகிறார்.
நடேசன் பூங்காவில்தான் கூட்டம் நடத்த வேண்டுமா வேற எங்காவது போகலாமா என்று அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவைப் பார்த்தேன். மெட்ரோ ரயில் ஓடும் பக்கத்தில் அந்தப் பூங்கா வீற்றிருக்கிறது. தினமும் நான் நடை பயிற்சி செய்யும் இடம். ஆனால் அந்தப் பூங்காவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்சினை. சேனல் மியூசிக் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது சரிப்பட்டு வராது. நாம் படிக்கும் கதைக்குப் பதிலாக மியூசிக் கேட்கும்படி நேர்ந்தால்..அதனால் அதை விட்டுவிட்டேன். திரும்பவும் இந்த முறை நடேசன் பூங்கா. அடுத்த முறை வேற எதாவது பூங்கா கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களுக்கு எதாவது பூங்கா தென்பட்டால் தெரிவிக்கவும்.
யாராவது கூட்டத்திற்கு வந்திருந்து கலந்து கொள்ள ஆசைப் பட்டால் அவர்களுக்கு மின்சார வண்டி அல்லது பஸ்ஸில் வர வசதியாக ஒரு இடம் வேண்டும். அதற்கு நடேசன் பூங்காதான் சரி.
இந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு மெனனியின் கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிக்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.
யாராவது புதிதாக எழுதி உள்ள கதையோ கவிதையோ வாசிக்கலாம்.
படிப்பவர் வேறு கேட்பவர் வேறு. படிப்பவர் படிக்கும்போது, கேட்பவர் கூட்டத்தை நெறிப் படுத்துபவராகவும், அதேசமயத்தில் கதையையோ கவிதையையோ உற்று கவனிப்பவராக இருக்க வேண்டும். யாரும் அதிகப் பக்கங்கள் கொண்ட கதையைப் படிக்கக் கூடாது. தண்ணீர் தாகம் எடுப்பவர் கையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவும். வாசிப்பவர் நிதானமாக வாசிக்கவும். கணீரென்று பூங்கா முழுவதும் உள்ளவர்கள் கேட்பது போல் வாசிக்க வேண்டும். படிக்கும்போது எங்காவது தடுமாறினால், இன்னொரு முறை வாசிக்கலாம். வாசித்துக்கொண்டிருக்கும்போது காதைத் துளைப்பதுபோல் சத்தம் வந்தால் ஒரு வினாடி நிறுத்தி விட்டு பின் தொடரலாம்.
வாசிப்பவர் யார் வாசிக்கிறார்கள் என்றும், யாருடைய கதையை வாசிக்கிறோம் என்றும் சொல்ல வேண்டும். எல்லாம் ஆடியோவில் பதிவாகி உலகமெங்கும் ஒலிபரப்பாக உள்ளது.
கூட்டம் நடக்குமிடம் : நடேசன் பூங்கா
வெங்கடரங்கன் தெரு, தி நகர்,
சென்னை 17
கிழமை ஞாயிறு (08.05.2016)
நேரம் : மாலை ஐந்து மணி
வாசிப்புக்கு தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1. மௌனி கதைகள்
2. ஆத்மாநாம் கவிதைகள்
ஒரு வேண்டுகோள் :
ரொம்ப தூரத்தில் இருந்து யாரும் இக் கூட்டத்திற்கு வரவேண்டாம். போகலாமா வேண்டாமா என்று தோன்றினால் போக வேண்டாமென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளூங்கள்.
இப்போது முதல் கூட்டத்தில் நாங்கள் வாசித்த கதையை ஆடியோவில் க்ளிக் பண்ணிக் கேட்கவும். சுவாரசியமாக இருக்கும்.

கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று

அழகியசிங்கர்
கவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று. இந் நாளில் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
புதிதாக வர உள்ள ‘அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்’ என்ற அவரது கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்கு அளிக்கிறேன்.
??
உடம்பெல்லாம்
கால் முளைத்த
ஒரு புள்ளிப் பூச்சி
எப்படி உறவு கொள்ளும் என்பது
என் வினோதமான கேள்வி.
ஆனால்
நிலத்தில் எங்கு பார்த்தாலும்
புள்ளிப் பூச்சிகள்
கேள்விக்கே இடமில்லாமல்…………..

ஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்

ஒரு தமிழ் அறிஞர்:
சுவாமி சித்பவானந்தர்
பிரபு மயிலாடுதுறை


சில ஆண்டுகளுக்கு
முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்
கொண்டிருந்தேன்.கடற்காற்றின் உப்பு முகத்தில் வீசும் மதியப் பொழுதில் கோயக்கரை நோக்கி
செல்லும் சாலையில் ஒரு உப்பளத்தில் நின்றிருந்தோம்.உப்பு படிகமாகி குவித்து வைக்கப்பட்டிருந்தது.அக்குவியல்
கதிரொளியில் ஒளிர்ந்து ஒளியை பிரதிபலித்து அடர் வெண்நிறம் கொண்டிருந்தது.வாகனத்தை நிறுத்தி
விட்டு உப்பளத்துக்குள் சென்றோம்.கரங்களில் உப்பை ஏந்தினோம்.மெல்லிய எடை கொண்டு கரத்துக்கு
குளிர் ஸ்பரிசத்தை அளித்தது பிடி உப்பு.அதன் கரடுமுரடான மேற்புறம் அழுத்தினால் அமுங்கித்
தூளாகியது.லூயி ஃபிஷரின் காந்தி வாழ்க்கை நூலின் உப்பு சத்தியாக்கிரகம் குறித்த அத்தியாயம்
பற்றி சொன்னேன்.உப்பளப் பணியாளர்களான பெண்கள் நாங்கள் ஆர்வத்துடன் உப்பளச் செயல்பாடுகளை
கவனிப்பதைப் பார்த்து விட்டு உப்பு பாக்கெட்டுகளை கொண்டு வந்து கொடுத்து வீட்டுக்கு
எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினர்.உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதில் சாரம் இருக்கும்
என்பது விவிலிய வாக்கியம்.
அப்போது ஓர் ஐரோப்பிய
தம்பதி சைக்கிளில் வந்தனர்.ஃபிரான்ஸ் நாட்டுக் குடிமக்கள் அவர்கள்.பாரிஸில் புறப்பட்டு
துருக்கி,அரேபியா,ஈராக்,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தேசங்களில் சைக்கிளிலேயே
பயணித்து வாகா எல்லைச் சாவடி வழியே இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.அமிர்தசரஸிலிருந்து
மும்பை.அங்கிருந்து சென்னை.புதுச்சேரி,காரைக்கால் வழியே கோடிக்கரை.சரளமாக ஆங்கிலம்
பேசினர்.உலகெங்கும் உலவும் நீங்கள் இப்போது பயணிக்கும் நிலம் தமிழ் என்ற உயர்தனிச்செம்மொழியை
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உச்சரிக்கும் பெருமை கொண்டது என தமிழையும் தமிழ் நிலத்தையும்
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.உலகின் மிகச் சில நிலப்பகுதிகளுக்கு மட்டுமே
உரிய பெருமை இது.
நாம் நமது மொழி
பெருமை மிக்கது;சிறப்பு மிக்கது என்பதையே திரும்பத் திரும்ப கூறுகிறோம்.ஆனால் ஒரு செம்மொழியை
உடையவர்களாய் நமது செயல்பாடுகள் அமையவில்லை.தமிழ் நூல்கள் 2000 பிரதி விற்பனையாவது
என்பதே மாபெரும் சாதனையாக பேசப்படுகிறது.உலகெங்கும் 7 கோடி தமிழ் பேசும் மக்கள் இருக்கும்
நிலையில் இவ்வளவு குறைவான நூல் விற்பனை என்பதே சூழலை உணர்த்தும் உரைகல்.தமிழ்நாட்டின்,பத்தாம்
வகுப்பு மாணவனின் பாடப்புத்தகத்தையும் விடைத்தாளையும் பார்த்தால் நம் மொழி எவ்வளவு
மழுங்கடிக்கப்பட்டுள்ளது என அறிய முடியும்.நம்மில் எத்தனை பேர் வாழ்வில் ஒரு முறையாவது
1330 குறளையும் வாசித்திருப்போம்?சிலப்பதிகாரத்தை கதையாக அல்லாமல் இளங்கோ அடிகளின்
பிரதியாக படித்திருப்போம்?கம்ப ராமாயணம் எத்தனை பேர் வீட்டில் உள்ளது?
செய்யுள் இயற்றும்
பண்டிதர்களுக்கு உரியதாயிருந்த மொழியை உரைநடைக்கு கொண்டு வந்த முதன்மையான பணியை ஆற்றியவர்களில்
முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர்.ஆன்மீகத் துறையிலும் சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும்
அவர் பங்களிப்பு எவ்வளவு பெரியதோ அதை விடப் பெரியது தமிழ் உரைநடையில் அவரது பங்களிப்பு.தமிழ்நாட்டில்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அத்வைதமும் சுவாமி விவேகானந்தரின் வேதாந்தமும் மக்களைச்
சென்றடைந்த போது விவேகானந்த இலக்கியத்தை தமிழுக்கு கொண்டு வந்தவர்களில் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவர் சுவாமி சித்பவானந்தர்.மொழியில் நீண்ட காலம் செயல்பட்ட வரலாற்றினை உடையவர்.இதழியல்,சிறுவர்
நூல்,அபுனைவு,சரிதம்,புனைவு,நாடகம் மற்றும் உரைநூல் ஆகியவற்றில் படைப்பூக்கத்துடன்
ஈடுபட்டவர் சுவாமி சித்பவானந்தர்.
நான் ஐந்தாம் வகுப்பு
மாணவனாயிருந்த போது, சுவாமி சித்பவானந்தரின் ‘ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’ என்ற நூலை
எனது தந்தை வாங்கித் தந்தார்.வீட்டுக்கு வந்தவுடனே வாசிக்கத் தொடங்கினேன்.அன்று இரவுக்குள்
பாதி புத்தகத்தை வாசித்தேன்.மீதியை மறுநாள் காலை வாசித்து முடித்தேன்.சுவாமி விவேகானந்தரை
மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் தமிழ் நூல் அது.அன்று வாசித்த பல பகுதிகள் இன்னும்
நினைவில் உள்ளன.’ஆளுடைய அண்ணலை அடைதல்’,’தேச சஞ்சாரம்’,’பாரதத் தாயின் திருவடியில்’,’அலைகடல்
தாண்டுதல்’,’நானாவித அலுவல்கள்’ ஆகிய அந்நூலின் அத்தியாயத் தலைப்புகளே கவித்துவமாக
இருக்கும்.
பகவான் புத்தரைப்
பற்றி அவர் எழுதிய நூல் ‘உலகை உய்வித்த உத்தமன்’.சித்தார்த்தன் ஒரு கடைவீதியை காணும்
காட்சியை சித்பவானந்தர் கீழ்க்கண்டவாறு சித்தரித்திருப்பார்:
‘’வழக்கமான வீதிகளில்
நிகழ்ந்துவந்த நடமாட்டங்களை அரசகுமாரன் காண்கின்றான்.ஆடம்பரமான ஆடைஆபரணங்கள் உலகில்
உள்ள எல்லா மக்களிடத்தும் கிடையாது.எளிய வாழ்க்கைவாழ்கின்றவர்களே உலகில் பெரும்பான்மையோர்
ஆகின்றனர்.கடைவீதியில் பண்டங்களை விற்பதும் வாங்குவதும் விரைவாக நடைபெறுகிறது.விற்பவன்
விலையைச் சிறிது கூட்டிச் சொல்வதும் வாங்குபவன் அதைச் சிறிது குறைத்துக் கேட்பதும்
யாண்டும் நிகழ்கிற காட்சியாகும்.கன்னான் பாத்திரங்களைத் தட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.கொல்லன்
இரும்பைக் காய்ச்சி அடித்துக்கொண்டிருக்கிறான்.மளிகைக்கடைக்காரன் தானியங்களை அளந்து
கொட்டி பணத்தை வாங்கிச் சுண்டிப்பார்த்துப் பையில்போடுகிறான்.பழவகைகளைக் கூடையில் வைத்து
விற்றுக்கொண்டு வருகிறான் ஒருவன்.நன்றாகத் துலக்கி மினுக்கெடுத்த நீர்க்குடங்களைத்
தலையில் வைத்துக்கொண்டு உல்லாசமாகப் போகின்றனர் பெண்பாலர் பலர்.ஒட்டகத்தின் மீது உட்கார்ந்துகொண்டு
ஒய்யாரமாக அசைந்து அசைந்து போகிறான் ஒரு வழிப்போக்கன்.வீதியில் தூசைக் கிளப்பும் வண்ணம்
வண்டியோட்டுகிறான் வண்டிக்காரன்.வண்டிக்கு முன்னே நடப்பவர்களை வழிவிடும்படி இடையிடையே
அவன் கத்துகிறான்.பள்ளியில் பிள்ளைகளில் சிலர் உற்சாகத்துடன் படிக்கின்றனர்.இன்னும்
சிலர் அரைமனதுடன் படிக்கின்றனர்.நெற்றி வியர்வை நிலத்தில் விழ மூட்டை சுமைக்கிறான்
ஒருவன்.உழைக்க மறுதலித்துக் கொண்டு மற்றொருவன் வெறுமனே சோம்பேறியாக உட்கார்ந்திருக்கிறான்.மாறுவேடம்
பூண்டு வந்துள்ள சித்தார்த்தனுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகள் விளங்குகின்றன.வாழ்க்கையில்
ஊக்கம் படைத்தவர்கள் இருக்கிறார்கள்;சலிப்படைந்தவர்கள் இருக்கிறார்கள்.இன்பப்படுபவர்கள்
உலகில் இருக்கிறார்கள்;துன்பப்படுபவர்களும் இருக்கிறார்கள்.வாழ்வில் வெற்றியடைபவர்களும்
இருக்கிறார்கள்;தோல்வியடைபவர்களும் இருக்கிறார்கள்.”
படைப்பூக்கம் கொண்ட
மொழியில் இச்சித்தரிப்பு உள்ளதைக் காணலாம்.
திருவாசகத்துக்கு
சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள உரை சிறப்பானது.இந்து ஞான மரபை விளக்கி ஒரு விரிவான
குறிப்பை அதன் முன்னுரையில் எழுதியிருப்பார்.ஷண்மதங்கள் எவை?ஆறு தரிசனங்களைப் பற்றிய
விளக்கம்.புராணங்களின் உருவாக்கம்.இதிகாசங்கள்.அவற்றின் மேன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய
குறிப்பை வழங்கியிருப்பார்.பகவத் கீதைக்கு அவர் எழுதிய உரை மிகப் பிரபலமானது.சுவாமிகள்
வாழ்ந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக,பகவத் கீதை மீது முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு
நிதானமான அறிவார்ந்த முறையில் சுவாமிகள் அளித்துள்ள விளக்கமாக அம்முன்னுரை அமைந்துள்ளது.கீதை
கொலை நூலா?என்ற வினாவை எதிர்கொண்டு அவர் அளித்துள்ள விடை கீதையைப் புரிந்து கொள்ள மிகவும்
முக்கியமானது.
கல்வி என்றொரு
சிறுநூலை சுவாமிகள் இயற்றியுள்ளனர்.பள்ளிக்கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என தன் அபிப்ராயங்களை
அதில் தெரிவித்திருப்பார்.மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவை கல்வி நிலையம் அமைந்துள்ள
ஊரின் செல்வந்தர்களும் பொதுமக்களுமே ஏற்க வேண்டும்.மாணாக்கருக்கு உணவு தயாரித்து வழங்கும்
பணியை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும்.ஆண்டுக்கொரு முறை பத்து நாட்கள் கடற்பயணம் மேற்கொள்ளும்
வாய்ப்பு மாணாக்கருக்கு வழங்கப்பட வேண்டும்,இது போன்ற பல விஷயங்களை அந்நூலில் பேசியிருப்பார்.
சுவாமி சித்பவானந்தர்
தேசத்துக்காகவும் தர்மத்துக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.குருதேவர் ராமகிருஷ்ணர்,சுவாமி
விவேகானந்தர் மரபில் வந்தவர்.ராமகிருஷ்ணரின் செய்தியை தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும்
கொண்டு செல்வதை தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர்.அவர் உருவாக்கிய கல்வி அமைப்புகள்
சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.தனது பல்வேறு விதமான அலுவல்களைத் தாண்டி துடிப்பான
மொழி கொண்ட படைப்பாளியாகவும் அறிஞராகவும் அவர் இருந்துள்ளார்.ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம்,ஸ்ரீ
ராமகிருஷ்ண சரிதம்,ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்,விவேகானந்த உபநிஷதம்,இராமாயணம்,மகாபாரதம்,திருவாசகம்
உரை,பகவத் கீதை உரை ஆகிய அவரது ஆக்கங்கள் முக்கியமானவை.

ஒரு தமிழ் அறிஞரான
சுவாமி சித்பவானந்தரிடமிருந்து தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. 

ஏழு வரிக் கதை

ஏழு வரிக் கதை
நேதாஜிதாசன்

1) சிசிபஸ் 
அந்த கிராமத்திற்கு அருகே ஒரு பெரிய மலை உண்டு.அதன் அடிவாரத்தில்  அவன் வசித்து வந்தான்.அவனுக்கு திருமணம் முடிந்திருந்தது.ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இப்போது அந்த குழந்தை சுயமாக முடிவெடுக்கும் வயதில்.யாரின் உபதேசமோ தெரியவில்லை.அவன் மனதில் கடும் உக்கிரம் குடிகொண்டது.தன் ரத்தமே நீர்த்து போகும் படி பிராந்தி.தன் முகமே மறைந்து போகும்படி கஞ்சா அடைத்த சுருட்டின் புகை.ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு பெண்கள் என மாறிப்போனான்.நாள்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கிராமமே இவனால் அழியக்கூடிய நிலைக்கு வந்தது.ஆனாலும் அவனுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு நாள் கடவுள் வந்து அவனுக்கு ஒரு தண்டனை கொடுத்தார். அது தன் ஆயுள் காலம் முழுவதும் அங்கு உள்ள மலையடிவாரத்திற்கு சென்று  கீழே உள்ள பெரிய வட்டக்கல்லை மேலேயும் கீழேயும் உருட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது.அவனால் இந்த அர்த்தமில்லா தண்டனையை சில மாதங்கள் கூட செய்ய முடியவில்லை.கடவுள் அவனுக்கு பசி,தாகம்,வியாதிகள் என அனைத்திலும் இருந்து விலக்கு அளித்திருந்தார் இருப்பினும் அவன் இந்த தண்டனையை எதிர்க்க எண்ணி மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்டான்.
எம்.ரிஷான் ஷெரீப்
2. கல்லறையூர் ஒற்றைக் கிழவியின் கதை
‘சின்ன வயசுலருந்தே வீட்டைச் சுற்றி பிணங்கள் புதைக்கப்பட்டிருந்ததால எந்தப் பயமுமே இருக்கல. இந்த ஊர்ல எல்லா வீடுகள்லையுமே அப்படித்தான். அவங்கவங்க வீடுகள்ல செத்தவங்கள, அவங்கவங்க வீடுகளுக்குப் பக்கத்துலேயே புதைச்சு, பெயர் குறிச்சு, கல்லறை கட்டிடுவாங்க. அப்படிக் கட்டிக் கட்டியே, புதுசா பிணங்களைப் புதைக்க வீட்டைச் சுற்றி இடமில்லைன்னு ஆனதுக்கப்புறம், ஒவ்வொரு குடும்பமா அவங்கவங்க பரம்பரை வீடுகளை விட்டுட்டு, வேற ஊர்களுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. இத்தனை வருஷமா யாருமே திரும்பி வரல்ல. இந்த ஊர்ல, யாருமேயில்லாத பழங்கால பங்களாக்களோட இப்படியொரு கிழவி தனிச்சிருக்கா. நிலங்களைச் சுற்றி வளைச்சிடலாங்குற எண்ணத்தோட நகரத்துல இருந்து நீ வந்திருக்கிறாய். வந்ததுக்கு ஒரு உபகாரம் பண்ணிட்டுப் போ. இப்படிப் பக்கத்துல ஒரு கல்லறை தோண்டி என்னை அடக்கம் பண்ணிட்டுப் போ. செத்து ரெண்டு வருஷமாகியும் கல்லறை இல்லாம ஆன்மாவா அலைஞ்சுட்டிருக்கேன். அடக்கம் பண்ணலைன்னா உன்னை விட மாட்டேன்.’

தினமணி மருத்துவமலர் 2016

அழகியசிங்கர்

தினமும் நானும் ஒரு இலக்கிய நண்பரும் அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோம். அவருடன் பேசிக்கொண்டே செல்வதால் என் அறிவு விருத்தி ஆவதாக நினைத்துக்கொள்வேன். நான் அவரை ஒரு அறிவாளியாகவே கருதுகிறேன். நாங்கள் நடந்தபிறகு சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பார் வடை ஒரு காப்பி வாங்கி இருவரும் பகிர்ந்து உண்போம்.  சரவணபவன் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் எதாவது ஒரு பத்திரிகை வாங்குவதற்கு பார்த்துக் கொண்டிருப்பேன்.
அன்று என் கண்ணில் பட்டது தினமணியின் மருத்துவ மலர் 2016 என்ற புத்தகம்.  அதன் விலை ரூ.30 தான்.  192 பக்கங்கள் கொண்ட மலர்.  தொடர்ந்து 19 வருடங்களாக இந்த மலர் வந்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையும் வெளிவரும் இந்த மருத்துவ மலரைப் பார்க்கும்போதெல்லாம் வாங்கி விடுவேன்.  வாங்குவதோடல்லாம் சேகரித்தும் வைத்திருப்பேன்.  
இந்த மலர் சிரத்தையுடன் சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.  ஒரு முறை இந்த மலர் வாங்க தவறி விட்டால் பின்னால் வாங்கவே முடியாது.  விற்று தீர்ந்து விடும்.   இந்த முறை இந்த மலரை வழவழப்பான தாளில் சிறப்பான முறையில் அச்சடித்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறையும் இந்த மலர் எதாவது ஒன்றில் கவனம் செலுத்துவார்கள்.  கண்பொறையால் நான் ஒரு முறை அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு தினமணி மலர் முழுவதிலும் கண்பொறையைப் பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது.  
இந்த மருத்துவ மலர்களை ஏன் படிக்க வேண்டும்?  ஒரு சாதாரண மனிதன் நோய்களைப் பற்றி எளிய தமிழ் மொழியில் அறிந்து கொள்ள இந்த மருத்துவ மலர்கள் வாய்ப்பளிக்கின்றன.
நான் இந்த மலர்களை எல்லாம் சேகரித்துக் கொள்வதற்குக் காரணம் இதை ஒரு கெயிட் புத்தகமாக நான் கருதுகிறேன்.  இன்றைய சூழ்நிலையில் ஒரு மருத்துவரைப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.  மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.   சர்வசாதாரணமாக பல நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அமரும் வரிசையில் நாமும் அமர்ந்தால், நம்ம நோய் அவர்களுக்குப் போவதற்குப் பதிலாக அவர்களுடைய நோய் நமக்கு தொற்றிக் கொண்டு விடும் என்ற பயம் வரும். 
மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது.  அதிகமாக வரும் நோயாளிகளைப் பார்த்து பார்த்து அவர்களும் சோர்வு அடைந்து விடுவார்கள். நம் நாட்டு மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்போல் தோன்றுகிறது.
மருத்துவமலரைத் தவிர பல பத்திரிகைகள் மருத்துவ பத்திரிகைகள் கொண்டு வருகின்றன.  மாதம் இருமுறை குங்குமம் என்ற பத்திரிகை டாக்டர் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறது. அதேபோல் ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகளும் கொண்டு வரகின்றன.  ஆனால் அதிகப் பக்கங்கள் கொண்ட தினமணி மருத்துவ மலர் நாம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.  ஆண்டுக்கு ஒரு முறை வரும் மருத்துவ மலரை வாங்கினால் போதும், மற்றப் பத்திரிகைகள் தேவை இல்லை. 
நாம் எப்படி ஒரு அகராதியை அடிக்கடி படிப்பதில்லையோ அதேபோல் மருத்துவ மலர்களையும் அடிக்கடி படிக்க மாட்டோம்.  ஆனால் நமக்கு எதாவது பிரச்சினை என்றால், எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதை இதுமாதிரியான மருத்துவ மலர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த மருத்துவ மலர்களில் எழுதுபவர்களும், அனுபவமிக்க டாக்டர்களே எழுதுகிறார்கள்.  மூட்டு அழற்சியைப் பற்றி இந்த மருத்துவ மலர் அதிகமாக கவனம் செலுத்தி எழுதியிருக்கிறது.   
இந்த மலரில் பல உபயோகமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.  இறுதி நாள்களின் வேதனையை நீக்கும் அரவணைப்பு மருத்துவம் பற்றி ஒரு கட்டுரை விவரிக்கிறது.  அந்திம காலத்தில் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவர்களை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதை அக் கட்டுரை தெரிவிக்கிறது.  குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி இம் மலரில் பல கட்டுரைகள் அலசுகின்றன.  புற்று நோய் பற்றியும், சர்க்கரை நோய் பற்றியும் பல கட்டுரைகள் அலசுகின்றன.   
இந்த மருத்துவமலர் என்னதான் நோய்களைப் பற்றி சொன்னாலும், இன்னும் சில நோய்களின் தன்மைகளைப் பற்றி தீவிரமாக அலச வேண்டுமென்று தோன்றுகிறது.  குறிப்பாக முதியோர்கள் நலனைப் பற்றி எந்தக் கட்டுரையும் இல்லை.  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிலிருந்து மீள என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாக ஆராயவில்லை.
சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் இன்றைய உலகத்தில் பலரை ஆட்டிப் படைக்கின்றன.  அவற்றைப் பற்றி இன்னும் நீண்ட கட்டுரைகள் அவசியம்.  ஆனால் 19 வருடங்களாகக் கொண்டு வரப்படும் தினமணி மருத்துவ மலரில் பழைய இதழ்களில் இவற்றைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.  
முதியோரைப் பாதுகாபபது எப்படி?  ஏன் முதியோர்களை அலட்சியப் படுத்துகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும்.  
94 வயதாகும் என் அப்பா இதுவரை பெரிய அளவில் எந்த மருத்துவரையும் பார்த்ததில்லை.  இப்போது முதுமையின் பிடிப்பில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். அறையை விட்டு வெளியே வர முடியவில்லை.  படுக்கையில் படுத்தபடி இருக்கிறார் அவரை நினைத்தால் எனக்கு இரவெல்லாம் தூக்கம் வருவதில்லை.
அவர் வாழ்நாள் முழுவதும் ஹோமியோபதி மருந்துகளே உட்கொண்டிருக்கிறார்.  கடந்த ஓராண்டாக ஹோமியோபதி மருந்துகளையும் அவர் சாப்பிடவில்லை. இப்போது கூட  என் கை நாடியைப் பிடித்து ஏன் படபடப்பாய் இருக்கிறது என்பார்.
தினமணி மருத்துவ மலரி 2016 – ஆசிரியர் : வைத்தியநாதன் – பக்கம் 192 – விலை ரூ.30