ஏழு வரிக் கதை

ஏழு வரிக் கதை
நேதாஜிதாசன்

1) சிசிபஸ் 
அந்த கிராமத்திற்கு அருகே ஒரு பெரிய மலை உண்டு.அதன் அடிவாரத்தில்  அவன் வசித்து வந்தான்.அவனுக்கு திருமணம் முடிந்திருந்தது.ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இப்போது அந்த குழந்தை சுயமாக முடிவெடுக்கும் வயதில்.யாரின் உபதேசமோ தெரியவில்லை.அவன் மனதில் கடும் உக்கிரம் குடிகொண்டது.தன் ரத்தமே நீர்த்து போகும் படி பிராந்தி.தன் முகமே மறைந்து போகும்படி கஞ்சா அடைத்த சுருட்டின் புகை.ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு பெண்கள் என மாறிப்போனான்.நாள்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கிராமமே இவனால் அழியக்கூடிய நிலைக்கு வந்தது.ஆனாலும் அவனுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு நாள் கடவுள் வந்து அவனுக்கு ஒரு தண்டனை கொடுத்தார். அது தன் ஆயுள் காலம் முழுவதும் அங்கு உள்ள மலையடிவாரத்திற்கு சென்று  கீழே உள்ள பெரிய வட்டக்கல்லை மேலேயும் கீழேயும் உருட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது.அவனால் இந்த அர்த்தமில்லா தண்டனையை சில மாதங்கள் கூட செய்ய முடியவில்லை.கடவுள் அவனுக்கு பசி,தாகம்,வியாதிகள் என அனைத்திலும் இருந்து விலக்கு அளித்திருந்தார் இருப்பினும் அவன் இந்த தண்டனையை எதிர்க்க எண்ணி மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்டான்.
எம்.ரிஷான் ஷெரீப்
2. கல்லறையூர் ஒற்றைக் கிழவியின் கதை
‘சின்ன வயசுலருந்தே வீட்டைச் சுற்றி பிணங்கள் புதைக்கப்பட்டிருந்ததால எந்தப் பயமுமே இருக்கல. இந்த ஊர்ல எல்லா வீடுகள்லையுமே அப்படித்தான். அவங்கவங்க வீடுகள்ல செத்தவங்கள, அவங்கவங்க வீடுகளுக்குப் பக்கத்துலேயே புதைச்சு, பெயர் குறிச்சு, கல்லறை கட்டிடுவாங்க. அப்படிக் கட்டிக் கட்டியே, புதுசா பிணங்களைப் புதைக்க வீட்டைச் சுற்றி இடமில்லைன்னு ஆனதுக்கப்புறம், ஒவ்வொரு குடும்பமா அவங்கவங்க பரம்பரை வீடுகளை விட்டுட்டு, வேற ஊர்களுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. இத்தனை வருஷமா யாருமே திரும்பி வரல்ல. இந்த ஊர்ல, யாருமேயில்லாத பழங்கால பங்களாக்களோட இப்படியொரு கிழவி தனிச்சிருக்கா. நிலங்களைச் சுற்றி வளைச்சிடலாங்குற எண்ணத்தோட நகரத்துல இருந்து நீ வந்திருக்கிறாய். வந்ததுக்கு ஒரு உபகாரம் பண்ணிட்டுப் போ. இப்படிப் பக்கத்துல ஒரு கல்லறை தோண்டி என்னை அடக்கம் பண்ணிட்டுப் போ. செத்து ரெண்டு வருஷமாகியும் கல்லறை இல்லாம ஆன்மாவா அலைஞ்சுட்டிருக்கேன். அடக்கம் பண்ணலைன்னா உன்னை விட மாட்டேன்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *