மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 21


அழகியசிங்கர்  

தூரத்து மலைகள்

ஆனந்த்


தூரத்து மலைகள்
அருகில் நெருங்கும்போது
பக்கத்து மரங்கள்
விலகி வழிவிடுகின்றன

பெருமிதம் கொள்கின்றன
மலைகள்

ஒருநாள்
வானம் வந்து
சூழ்ந்தணைத்துக்கொண்டபோது
மரங்களும் மலைகளும்
வெட்கிப்போய்
ஓரம் புகுந்தன

வானம் அவற்றைக் கூப்பிட்டு
சேர்த்தணைத்துக்கொண்டது

வானத்தின் அணைப்பில்
சற்றும் வலிக்காமல்
மலைகளும் மரங்களும்
மிதந்து கொண்டிருக்கின்றன

நன்றி : அளவில்லாத மலர் – கவிதைகள் – ஆனந்த் – விலை ரூ.65 – பக் : 86 – முதல் பதிப்பு : டிசம்பர் 2007 காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 20

அழகியசிங்கர் 

 ஆயா

எம் டி முத்துக்குமாரசாமி 





ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை
குடும்பம் உண்டா
விலாசம் என்ன
வயது என்ன
சொந்த ஊர் எது
தினசரி எங்கிருந்து வருகிறாள்
எங்கே போகிறாள்
நோயுண்டா நொடியுண்டா
எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள்
யாரும் கேட்பதில்லை
சம்பளப்பணம் பேசியதோடு சரி

இந்த ஆயா இல்லாவிட்டால்
இன்னொரு ஆயா
பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா
போனோமா
என்றிருக்க வேண்டும்
அவ்வளவுதான்

என்றாலும்
ஆயாவின் அரதவணைப்பை
ஒளியை அறிவது போல
நன்கு அறியும்
உங்கள் குழந்தைகள்

நன்றி : நீர் அளைதல் – கவிதைகள் – எம் டி முத்துக்குமாரசாமி – பக்கம் : 112 – விலை : ரூ.90 – முதற் பதிப்பு அக்டோபர் 2012 – வெளியீடு : நற்றிணை பதிப்பகம், ப எண் : 123 எ புதிய எண் 243 எ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5
தொலைபேசி : 9486177208 – 044 43587070

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 19

அழகியசிங்கர் 


 பற்று          

ந ஜயபாஸ்கரன்




குலுக்க நீட்டிய கையைப்
பின்னால்
இழுத்துக் கொள்ள
மறந்து
போயிற்று.

சிறிது கண்ணீர்
(கண்ணீர் என்பதே
அசங்கிய வார்த்தை)
நிறைய சொல்
செலவான பின்
தெரிந்தது
நீட்டிய கையைப்
பற்றிக் கொள்ள
எதிரே கை ஒன்றும்
இல்லை
என்று.

நீட்டிய கையை
நட்டு விட்டுப்
பயணப் பட்டேன்
எதிர்த் திசையில்
ஈரம் அற்ற
இன்னொரு கையை
எடுத்துக்
கொண்டு

நன்றி : அர்த்தநாரி அவன் அவள் – கவிதைகள் – ந ஜயபாஸ்கரன் – பக்கங்கள் : 143 – விலை ரூ.100 – முதல் பதிப்பு : டிசம்பர் 2011 உயிர் எழுத்து பதிப்பகம், 9 முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி – 1 – தொலைபேசி : 0431 – 6523099 – 

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 6

பத்து கேள்விகள் பத்து பதில்கள் – 6    
                                                                                                                                           15.09.2016

அழகியசிங்கர்

மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற கௌரி கிருபானந்தனை பேட்டி எடுத்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பகுதியில் சேர்த்து உள்ளேன்.  கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். தமிழில் கு அழகிரிசாமி சிறுகதைத் தொகுதியை சாகித்திய அக்காதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அதே போல் பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற நாவலையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.  அவருடைய சிறிய வீடியோ பேட்டி இதோ.

https://www.youtube.com/watch?v=5KQL8IunxKU

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 18

அழகியசிங்கர் 

  எங்கள் ஜாதி

கிருஷாங்கினி 




        மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்,
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.

நன்றி : கவிதைகள் கையெழுத்தில் – கவிதைகள் – கிருஷாங்கினி – விலை : ரூ.150 – பதிப்பாண்டு 2007 – பக்கம் : 143 – அளவு கால் கிரவுன் – வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 – தொலைபேசி : 044 – 22231879 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 17

அழகியசிங்கர் 

முனியமரம்

பாலா






அந்த புளியமரத்தைக் கடந்துதான்
எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள்

உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம்
ஒட்டுமொத்த ஊருக்கான
பயத்தையும் உள்வைத்திருந்தது

ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை
முனி இருப்பதாய் சொல்லும்
அந்தப் புளியமரத்தை

வாந்தி பேதி முதல்
நல்லது கெட்டது வரை
முனியோட வேலைதான் என நம்பிய ஊர்
இரவு எட்டுமணிக்கும்
சாமியாடியின் பேச்சுக்கும்
அடங்கிபோகும்

முனி விரட்டுதலும்
மூலிகை வைத்தயமும்
மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது
சாமியாடியின் சந்ததியை

வாக்கு கேட்டு வருவோரின்
வசதியை பொருத்து வசூலிக்கப்படும்
வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என
எல்லாவகை வஸ்த்துக்களும்

ஒரு நாள்
அடித்த அசுரக் காற்றில்
அடியோடு சாய்ந்த முனியமரம்
பெருந்திரள் கூட்ட பூசையோடு
அகற்றப்பட்டது

பிழைப்புப்போன விசனத்தில்
ஒடுங்கிப்போன சாமியாடிக்கு
பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம்

“அட கூறுகெட்ட மனுசா
ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம
ஊருக்குள்ள போயி சொல்லு!
புளியமரத்துல இருந்த முனி
நேத்து வைச்ச புங்க செடியில்
குடியேறிச்சுனு”

அடுத்த பூசை ஆரம்பமானது…….

நன்றி : முனியமரம் – கவிதைகள் – பாலா – விலை : ரூ.80 – பதிப்பாண்டு 2015 – பக்கம் : 80 – புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11 அப்துல்ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015
தொலை பேசி எண் : 044 – 42147828

பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11


தொலைந்துபோன பாரதியார்



அழகியசிங்கர்





நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்

போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
‘நன்று நன்று’ என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
கேட்டவுடன்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டிப்
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி

நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையைக்
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை

அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்.
வழிதெரியாமல்
திகைத்த
எங்களுக்கு
வரங்கொடுத்து
வரி தந்த மேதையவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாட பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை

நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 16

அழகியசிங்கர் 

  வேஷம்

க. நா. சு



நான் அறிவாளி என்று வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னை சோம்பேறி என்றார்கள்.
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் மாதிரி வேஷம்                         போட்டபோது
நான் எதையும் லக்ஷியம் பண்ணாதவன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் போல வேஷம் போடுகிறேன் என்றார்கள்

நன்றி : க நா சு கவிதைகள் – கவிதைகள் –  பக்கம் : 176 – விலை ரூ.65 – சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83    

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 15



அழகியசிங்கர் 

எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு….

விக்ரமாதித்யன்




எப்பொழுதும்போல
இருக்கிறேன்

எப்பொழுதும்போல
என்றால்?

எப்பொழுதும்
போலத்தான்

அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்

தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்

காசு கிடைக்கையில்
குடிக்கிறேன்

வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்

ஏதாவது படிக்கத் தோன்றினால்
படிக்கிறேன்

எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்

நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய்ப் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமேயெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்

ஊர்சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்

கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
கோயில் கோயிலாகப் போய் வருகிறேன்

இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே

வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்