துளி – 88 – ஸ்டீல் ரேக்குகளை காலி செய்து கொண்டிருக்கிறேன்.

அழகியசிங்கர்

நான் மாலை என் நூலகத்திற்குச் சென்று சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைச் சாக்கு மூட்டையில் இடத்துவங்கினேன். புத்தகக் காட்சிக்கு 7 ஸ்டீல் ரேக்குகள் தயார் செய்ய வேண்டும்.  எப்போதும் என் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் ஸ்டீல் ரேக்குகளில் வைத்திருப்பேன்.  பத்து பன்னிரண்டு ரேக்குகள் இருக்கும்.  என் நூலகத்தில் நான் தயாரித்திருக்கும் புத்தகங்கள் ஒரு பக்கமும் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்கள் இன்னொரு பக்கமும் இருக்கும். 

 புத்தகக் காட்சிக்கு ஏழு ரேக்குகள் போதும்.  இந்த ரேக்குகள் புத்தகக் காட்சி முடிந்து வந்தவுடன் உருமாறிப் போய்விடும். தட்டு: பிசகி விடும்.  இரும்பு கால் வளைந்திருக்கும்.  பின் அதைச் சரிசெய்ய வேண்டும். 

மேலும் சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை எடுத்து வைத்துவிடுவேன்.  அந்தச் சாக்கு மூட்டைகளைப் புத்தகக் காட்சிமுடிந்து பிரித்து ரேக்குகளில் வைக்கும்போது மாதக் கணக்கில் ஆகிவிடும்.  அவ்வளவு லேசில் முடியாது.

ஒவ்வொரு முறையும் புத்தகங்களைத் திருப்பி அடுக்கும்போதும் சரி, சாக்கு மூட்டைகளில் வைக்கும்போதும் சரி எனக்குப் பிடித்துத்தான் செய்கிறேன். 

இன்று மாலை 6 மணிக்கே போஸ்டல் காலனி நூலகத்திற்குப் போய்விட்டேன்.  வருவதற்கு 9 ஆகுமென்று வீட்டில் சொல்லி விட்டு வந்திருந்தேன்.

புத்தகங்களைச் சாக்கில் போடும்போது ஒவ்வொரு புத்தகமாகப் பார்க்கும்போது எதாவது சிந்தனை செய்தபடி இருப்பேன்.  அப்படி ஒரு புத்தகம் கிடைத்து என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரே ஆண்டில் 1,00,000 பிரதிகள் விற்றதாக அந்தப் புத்தக முகப்பட்டையில் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனந்தவிகடன் வெளியீடாக அந்தப் புத்தகம் வந்திருந்தது.  

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்பதுதான் தலைப்பு.  சுவாமி சுகபோதானந்தா என்ற பெயரில் வந்திருந்தது. 

அது நிஜ பெயரா புனைபெயரா என்று தெரியவில்லை. இந்தப் புத்தகம் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்திருந்தது.  1998 டிசம்பர் மாதத்திற்குள் 1,00,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்து விட்டன்.

நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.  நான் வெளியிடும் கவிதைப் புத்தகங்கள் எதுவும் கொஞ்சங்கூட நகர்வதாக இல்லை.  உண்மையில் கவிதைகள் மட்டுமல்ல எல்லாப் புத்தகங்களுமே. 

உடனே நானும் மனசே ரிலாக்ஸ் மாதிரி புத்தகங்கள் எழுத முடியாது என்று தெரியும்.  என் நண்பர் ராஜேஸ் அவர்களிடம் போன் செய்தேன்.  நான் என்ன போன் செய்தாலும் அவரும் சிரித்தபடியே உள் வாங்கிக் கொள்வார்.  அவர் கருத்துக்களையும் சொல்வார்.  

“சார் அந்தப் புத்தகம் 90 இறுதியில் வந்தது…இப்ப அவர் புத்தகம் எடுபடாது..அவருக்கு மாற்றாக ஜக்கி, நித்தியானந்தா எல்லோரும் வந்து விட்டார்கள்..” என்றார்.

“அவர்கள் புத்தகங்கள் ஒரு லட்சம் விற்கட்டும்..நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள் 100 பிரதிகள் விற்பதற்கு என்ன வழி,” என்றேன்.

“ஒன்றும் செய்ய முடியாது.  ஒரு சமயம் விளம்பரம் செய்தால் விற்கலாம்,” என்றார் சிரித்தபடி. 

“இருபது வருடங்களாக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நடக்காது. விளம்பரம் செய்தாலும் போகாது,” என்றேன்.

நான் 6 ரேக்குகளை காலி செய்து மூட்டையில் புத்தகங்களை அடுக்கி விட்டேன்.  இன்னும் ஒரு ரேக்கில் உள்ள புத்தகங்களை சாக்கில் திணிக்க வேண்டும்.  அந்த ரேக்கில் இருப்பது கவிதைப் புத்தகங்கள்.

துளி – 86- எல்லாம் ஏழு மயம்

அழகியசிங்கர்

எப்போதும் புத்தகக் காட்சியில் இரட்டை அரங்கை வாடகைக்கு எடுக்கத் தைரியம் வருவதில்லை.  கூடுதலாக அரங்கை எடுத்தால் கூடுதலாக வருமானம் வரவேண்டும்.  அப்படியெல்லாம் பணம் கொட்டி விடாது என்று தோன்றும்.

புத்தகம் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்திருந்தால் பரவாயில்லை.  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  

இன்று அரங்கு குலுக்கல்.  எந்த எண் எனக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.  கடைசியில் கூப்பிட்டார்கள்.  430வது அரங்கு எண். கூட்டு எண்ணிக்கை 7.  ஏழாவது வரிசை.  நான் முடித்துக்கொண்டு வீடு வரும்போது 7 மணி. இது 43வது சென்னை புத்தகக் காட்சி. அதன் கூட்டுத் தொகை 7.

பிரமிளுடன் நட்பாகப் பழகியதால் அவருடைய எண் கணித சாஸ்திரத்தை அரைகுறையாய் தெரிந்து வைத்திருக்கிறேன்.  ஏழு நல்ல எண்.  தத்துவவாதி எண்.  எதற்கும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கக் கூடிய எண். 

எனக்கு புத்தகக் காட்சி என்றால் ஜாலியாகப் பொழுது போக்கிற இடம்.

துளி – 85- வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

அழகியசிங்கர்

புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா  பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.

இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.  சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும்.

நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன்.  ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.  

இதில் பெரும்பாலான கட்டுரைகள் எல்லாம் படித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதப்பட்டவை.  ஒருவர் இதை வாசிக்க ஆரம்பித்தால் விறு விறு என்று வாசித்து விடலாம்.

முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா என்ற கட்டுரை எழுதி அனுப்பியபோது ரொம்ப நாட்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  இது மாதிரி எழுதியது சரியா என்றுதான்.  அப்படி சில சந்தேகங்களும் வந்து விடும்.  எழுத்தாளர் நண்பர் காசியபனின் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்திருந்தேன்.  அந்தப் புத்தகம் பெயர் முடியாத யாத்திரை.   அவர கவிதைத் தொகுப்பு இன்னும் விற்றுத் தீரவில்லை.  ஆனால் அவர் யாத்திரை என்னமோ முடிந்து விட்டது என்று எழுதியிருந்தேன். 

இன்னும் சில விஷயங்களையும் வேடிக்கையாக அந்தக் கட்டுரையில் சேர்த்திருந்தேன்.

திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும் பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.

சொல்நயமும் பொருள்நயமும்

நன்றாக வந்துவிட்டால்

சித்திரப் படிமங்கள்

சீராக வீழ்ந்துவிட்டால்

மெத்த நல்ல கவிதையென்று

முரசு அடிக்கின்றீர்…

முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன்.  இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன்.  இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.  

என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.  அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன். 

1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது

2. விருட்சம் என்ற பத்திரிகை சந்தாதாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது

3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.  அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் üமுடியாத யாத்திரைý புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்

4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்

5. புத்தகம் விலை ரூ.60.  புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.

காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது.  ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. 

                                                                                               20.08.2017

உலக சினிமா சில தரிசனங்கள்


அழகியசிங்கர்

செந்தூரம் ஜெகதீஷின் புத்தக வெளியீட்டு விழா நேற்று (07.12.2019) இக்சா மையத்தில் நடந்தது.  அவர் சினிமாவைப் பற்றி இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்.  முதல் புத்தகம் உலக சினிமா சில தரிசனங்கள்.  இரண்டாவது  புத்தகம் இந்திய சினிமா சில தரிசனங்கள்.  இந்த இரண்டு புத்தகங்களையும் முழுவதும் படித்து கூட்டத்தில் பேச நினைத்தேன். ஒரு புத்தகம் 196 பக்கங்களும், இரண்டாவது புத்தகம் 92 பக்கங்களும் கொண்டவை.

நான் முதல் புத்தகத்தைத்தான் படித்தேன்.  இரண்டாவது புத்தகத்தை நுனிப்úபுல் மேய்ந்தேன். ஒருநாளில் படித்துவிட்டுப் பேச நினைத்தேன்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.  சினிமா என்பது ஒரு கலை.  அதில் பலருடைய ஈடுபாடு அவசியம்.  ஒவ்வொருவரும் அதில் எப்படி ஈடுபாடு கொள்கிறார் என்பது முக்கியம்.  

ஒரு வரியில் கதையைச் சொல்வதிலிருந்து பலர் உரையாடி கதையை உருவாக்குகிறார்கள்.  அந்தக் கதையை சினிமாவாக மாற்றுவதற்குள் கதை வடிவம் மாறிவிடும்.  பல நாட்கள் முயற்சி செய்கிறார்கள்.  இப்படி கதையாக சினிமாப்படம் உருவாகும்போது அதைத் திரையிட வேண்டுமென்றால் இன்னும் யத்தனம் வேண்டும்.

அதனால் சினிமாப்படம் தயாரிப்பதென்பது அசுரர்கள் உலகத்தைச் சார்ந்தது.  உழைப்பு, முதலீடு, எதிர்பார்ப்பு என்று வேற வழிக்குப் போய்விடும். அதிக முதலீடும் பலருடைய உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த எந்தக் கவலையுமில்லாமல் ரசனை அடிப்படையில் ஒரு சினிமாவை தியேட்டரில், டிவிடியில் பார்த்துவிட்டு அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டி உள்ளது. 

ஒரு வரியில் சொல்லப்பட்டு ஆரம்பிக்கிற கதை எல்லோருடைய உழைப்பால் சினிமாவாக மாறுகிறது.  அதைத் திரும்பவும் எழுத்துத் திறமை கொண்ட எழுத்தாளன் புத்தகத்தில் கொண்டு வரும்போது முழுத் திரைக்கதையைச் எழுதுகிறான்.  அவன் பார்வையில் அந்தக் கதை எப்படி வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறான்.

அந்த முயற்சியைத்தான் சினிமாவைப் பற்றி எழுதுகிற பலரும் செய்கிறார்கள். ‘வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்’ என்ற தலைப்பில் கோ.தனஞ்ஜெயின் எழுதியிருக்கிறார்.  அயல் சினிமா என்று எஸ் ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறார், உலக சினிமா 1,2,3  என்ற தலைப்பில் செழியன் 3 பகுதிகள் கொண்ட புத்தகங்கள் கொண்டு வந்துள்ளார். இப்படிப் பல எழுத்தாளர்கள் சினிமாவைப் பற்றி தான் ரசித்ததைப் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளார்கள்.  

இந்தப் புத்தகங்களில் ஒரு சினிமாவை எப்படிப் பார்க்கிறோம்.  தாம் ரசித்த சினிமாக்களை எப்படி சொல்லியிருக்கிறோம் என்றெல்லாம் வருகிறது.  

செந்தூரம் ஜெகதீஷ் உலச சினிமா சில தரிசனங்கள் என்ற புத்தகத்தில் 40 படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இவையெல்லாம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்.    ஒவ்வொரு முறையும் தான் பார்த்து ரசித்தப் படங்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியபோது அவர் குறிப்பிடுகிற 40 படங்களையும் நான் பார்க்கவில்லை என்பது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.  சில நிமிடங்கள் இந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யோசித்தேன்.  இந்தப் புத்தகத்தை இப்படிப் படிக்கக்கூடாது என்று தோன்றியது.  இதில் குறிப்பிடப்படுகிற படங்களை ஒவ்வொன்றாய் நாமும் பார்த்து அவர் எழுதியதை ரசிக்க வேண்டுமென்று பட்டது.  மேலும் அவர் குறிப்பிடுகிற படங்கள் எல்லாம் யூ ட்யுப்பில் எளிதாகக் கிடைக்கிறது.  அதையெல்லாம் பார்த்துவிட்டு செந்தூரம்ஜெகதீஷ் எழுதியதையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர் சொல்வது சரியா இல்லையா என்பது உள்ளே போகும். அதாவது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எழுத்தைத்தான் படிக்க முடிகிறது.  அதன் மூலம் சினிமாவை உணர முடியவில்லை.

உதாரணமாக பாப் டைலானின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் üஎதிர்ப்பே எனது பாடல்ý என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ü80களின் தொடக்கத்தில் பாப்டைலானின் பாடல் ஒன்றை கேட்க நேரிட்டது.  கேட்டதுமே அப்பாடல் மனதுக்குள் ஒரு மழைச்சாரல் போல பொழிந்து வசந்தமாக பரவசமூட்டியது.ý என்று பரவசமாக எழுதுகிறார்.  இந்தப் படத்தை 80களில் பார்த்து இதுமாதிரி எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.   ஆனால் இப்போது இந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தால் எது மாதிரியான எண்ணம் அவருக்குத் தோன்றும்? üபாப்டைலன் தற்செயலாய் கிடைத்த ஒரு வைரக்கல்.ý  இப்படி பல வரிகளை உணர்ச்சிகரமாக செந்தூரம் ஜெகதீஷ் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் எழுதி உள்ளார். 

பல கட்டுரைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கின்றன.  இன்னும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.  சினிமா என்பது பார்ப்பதற்குத்தான்.  சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் சினிமாவைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்ட வேண்டும்.  ஒவ்வொரு சினிமா படத்தைப் பற்றியும் ஒரு அகராதி மாதிரி, மிகக் குறைவான வரிகளில் தயாரிக்க வேண்டுமென்று தோன்றியது.  இது சாத்தியமா என்பது தெரியவில்லை.    

செழியனின் உலக சினிமா என்ற புத்தகத்தைப் படிக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் கதையை விவரிக்கிறார்.  படிப்பவரை அந்தச் சினிமா படத்தை எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறார்.  ஆனால் ஜெகதீஷ் தரிசனத்திற்குப் போய்விடுகிறார.  

40 படங்களை தன் புத்தகம் மூலம் அறிமுகப்படுத்திய செந்துரம் ஜெக்தீஷை நான் வரவேற்கிறேன்.  நான் இதுவரை அறிந்துகொள்ளாத 40 படங்கள் என்று அதிசயிக்கிறேன்.  இந்தப் புத்தகத்தை அவரே வெளியீட்டுள்ளார்.  புத்தகத்தின் விலை ரூ.150. தொலைபேசி எண் : 9444090037

நம்ப முடியவில்லை

அழகியசிங்கர்


இந்த முறை டபுள் டக்கர் வண்டியில் பெங்களூர் பயணம் செய்தேன். பகலில்தான் நான் பயணிக்க விரும்புவேன். புத்தகம் படிப்பது என் வழக்கம். என்ன புத்தகம் படிப்பது என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். ஒரு தடியான புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.
உடனே கண்ணில் பட்டது. பா ராகவன் எழுதிய யதி என்ற நாவல். 926 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பது சாதாரணமான விஷயமல்ல. ஆனால் இம்மாதிரியான ரயில் பயணத்தின் போதுதான் இந்த நாவலைப் படிக்க முயற்சி செய்ய வேண்டும்.
வண்டியில் அமர்ந்தவுடன் தடியான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரித்தேன். உண்மையில் என்னுடன் பயணம் செய்பவர்கள் இம்மாதிரியான புத்தகத்தை எடுத்துப் படிக்கிறானே என்று தெரியவேண்டும் என்று நினைத்தேன்.
யாராவது எதாவது கேள்வி கேட்பார்களா என்றுகூட ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஏமாந்து போய்விட்டேன். யாரும் கேட்கவில்லை. ஆனால் நான் அசரவில்லை. யதியைப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கண்ணைச் சுழட்ட ஆரம்பித்தது. சரி தூங்குவோம் என்று தூங்கினேன். ஆனால் யதியை என் மடியில் வைத்துக்கொண்டு தூக்கம் போட்டேன்.
திரும்பவும் கண் விழித்தபோது யதி. பக்கங்கள் வேகமாகப் புரண்டன. வண்டியை விட்டு இறங்கியவுடன் எனக்குத் திருப்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் தாண்டி விட்டேன். நான் உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குத்தான் பெங்களூர் வந்தேன்.
உறவினர் வீட்டுக்கு வந்தபின்னும் யதியை விடவில்லை. முதல் நாள் பூஜை. அடுத்தநாள்தான் கிரஹப்பிரவேசம். முதல் நாள் பூஜையின்போதே யதி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.
அங்கே யதி புத்தகத்தை எல்லோரும் பார்க்கும்படி பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். யாரும் என்னை அதிசயமாகப் பார்க்கவில்லை. என்னடா இவன் இத்தனை தடிப் புத்தகத்தைப் படிக்கிறானே என்ன என்று கேட்போம் என்று யாருக்கும் தோன்றவில்லை. என்னை வினோதமான மனிதனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.
அடுத்தநாள் நிறையா பேர்கள் கிரஹப் பிரவேசத்திற்கு வந்தார்கள். ம்..யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. கன்னடத்தில் பூஜை செய்யும் குருக்கள் மட்டும் என் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் கொடுத்து விட்டார். அவர் கன்னடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
மதியம் மேல் நானும் நண்பரும் ப்ளாசம்ஸ் போய் புத்தகங்களை வாங்கினோம். உண்மையில் ரூ.600 கொடுத்துத்தான் புத்தகங்கள் வாங்கினேன். இன்னும் கூட வாங்கியிருக்கலாமென்று தோன்றியது. ஹெம்மிங் வேயில்ன் கடைசி நாவல் ஐலெண்ட்ஸ் இன் த ஸ்டிரீம்) வாங்கிக்கொணடு வந்தேன். ப்ளாசம்ஸில் இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் விலையும் அதிகம்தான்.
என் நண்பர் என் பிறந்தநாளிற்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாகத் தந்தார். 84 சாரிங்க க்ராஸ் ரோடு என்ற கடிதங்களால் ஆன நாவல். நான் அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து ஆங்கில நாவல்களை முழுவதும் படித்ததில்லை.
அடுத்தநாள் நான் பாரதி மணி வீட்டிற்கு நண்பரோடு சென்றேன். அவர் சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். திரும்பவும் சென்னை. இந்தமுறை லால்பாக். லால் பாக் வண்டியில் உட்கார்ந்து வருவது சௌகரியமாக இருக்கிறது. காலை நன்றாக நீட்ட முடிகிறது. நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். என் பக்கத்திலிருந்தவர்கள் ரொம்ப பருமனாக இருந்தார்கள். அவர்களைத் தாண்டிப் போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. திரும்பவும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். படிக்க ஆரம்பித்தபிறகு நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் சென்னை வந்திறங்கியபோது 533 பக்கங்கள்தான் படிக்க முடிந்தது. இன்னும் 925 பக்கங்கள் இருக்கின்றன. இந்த நாவலைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ராகவன். யதியைப் படிக்கும்போது எனக்கு இன்னும் இரண்டு நாவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. ஒன்று: அசோகமித்திரனின் மானசரோவர். இரண்டாவது க.நா.சுவின் அவதூதர். நான் குறிப்பிடுகிற இந்த இரண்டு நாவல்களுக்கும் யதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நாவலை முடித்துவிட்டுத்தான் சொல்லவேண்டும். தமிழுக்கு இது புதிய முயற்சி என்று படுகிறது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சரளமான நடையில் எழுதியிருக்கிறார்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 127


 பாம்புகளற்ற மகுடிகள்

சௌந்தர மகாதேவன்

 

அவன் விதவிதமாய் 

மகுடிகளோடு மண்டியிட்டு

அமர்ந்திருக்கிறான். 

படமெடுக்கும் பாம்புகளை

ஆசையாய் அடக்க

அவன் முன்னால் 

அழகழகாய் மகுடிகள்.

மொழியாய் ஒரு மகுடி 

வண்ணமயமான மாயாஜால

ஜிகினாவாய் ஒரு மகுடி 

விவாதக்கூச்சல்களோடு 

ஒலிவாங்கியாய் ஒரு மகுடி 

விசும்பல் ஒலியோடு ஒரு மகுடி

ஒவ்வொரு மகுடியையும் 

அவன் எடுத்தெடுத்து ஊதினான் 

பிடாரனின் ஓசை காற்றில் கிளம்பியதைக் 

கேட்டன செவியில்லாப் பாம்புகள் அனைத்தும்

மகுடி மயக்கம் மரணத்தொடக்கமென 

ஆடுதல் விடுத்து அப்பால் நகன்றன

பாம்புகள் இல்லாப் பிடாரன்

அன்றிலிருந்து வாசித்தலை 

நிறுத்தினான் யோசித்தலுடன்

நன்றி : தண்ணீர் ஊசிகள் – சௌந்தர மகாதேவன் – மேலும் வெளியீட்டகம், 9 இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை 627002 – பக்கங்கள் : 118 – விலை : ரூ.120

கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை

அழகியசிங்கர்

இன்று காலையில் தினமணி நாளிதழை பார்த்தவுடன் நான் புதிதாகக் கொண்டு வந்த ‘காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள்’ என்ற ஸ்ரீதர்-சாமா புத்தகம் மதிப்புரை நூல் அரங்கம் பகுதியில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் தொலைபேசி எண் 044-24710610. இது நவீன விருட்சம் பெயரில் உள்ள தொலைபேசி எண்.   நான் அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் புத்தகம் குறித்து விசாரணை இருக்குமென்று நினைத்தேன்.  எதுவுமில்லை.  ஏன்எனில் கடந்த 10 நாட்களாக என் வீட்டிலுள்ள போன் சரியில்லை இதற்குப் புகாரும் கொடுத்திருந்தேன்.  ஏன் பிஎஸ்என்னில் உள்ள முகநூல் நண்பர் மந்திரமூர்த்தியும் எனக்காக புகார் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு பிரயோஜனுமில்லை. சற்றுமுன் அதாவது மதியம் 2 மணிக்கு மேல் வந்திருந்து போன் மாத்திரம் சரிசெய்துவிட்டு அவசரம் அவசரமாக போய்விட்டார்கள்.  ஆனால் நெட் சரியில்லை. 

பிஎஸ்என்லின் சேவை வருத்தமளிக்கிறது.  சீக்கிரமாக எல்லோரும் பிஎஸ்என்லைவிட்டு விருப்ப ஓய்வு போகப் போவதால் இந்தத் தொய்வா என்பது தெரியவில்லை.

ஆனால் தினமணியில் வந்த மதிப்புரைக்குக் குறைந்தது 10பேர்களாவது போன் செய்வார்கள்.  ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அதாவது கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை. 

தினமணியில் வந்த மதிப்புரை.

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள் 

       ” காஞ்சி மகா பெரியவர் ஒரு நடமாடும் தெய் வம். அவர் திருவாக்கிலி ருந்து வெளிவந்த உபதேச மொழிகள் ஏராளம் என்றாலும், அவற்றி லிருந்து முதன்மையான சில உபதேசங்களையும் நிகழ்வுகளையும் முத்துக் குளிப்பதைப் போல குளித் துத் தேடித் தொகுத்துத் தந்திருக்கிறார் ஸ்ரீதர் சாமா.

நம் பாரத தேசத்தில் இளம் வயது முதலே நம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறை வணக் கம், ஆத்ம தியானம் என்கிற நல்ல பழக்கம் இல்லா மலிருந்து வருவது குறித்து எடுத்துரைக்கும் மகா பெரியவர், “நெருப்பை வாயாலே ஊதப்படாது என்பதற்குக் கூட சாஸ்திரம் சொல்கிற காரணம், வாயால் ஊதுவதால் எச்சில் காற்று அக்கினி பகவான் மேலே பட்டு அபசாரமாகிவிடும் என்ப தால்தான்” என்கிறார்.

     மேலும், ‘சிவ’ என்கிற சொல்லில் (ஆண்பெண் பெயர்களில் உள்ள அக்ஷரங்கள்) உள்ள தத்துவத்தை உணர்த்தும் இடம் அற்புதம்.

“கல்வியின் முதல் பிரயோஜனமான விநயம் ஏற் படவேண்டும். அடக்கம் இல்லாதபடிப்புபடிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும் படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்ட வனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை. முன்பு நம் மாணவர் களிடம் குருபக்தி இருந்தது. தற்போது அடியோடு போய்விட்டது” என்று கூறுவதுடன், “குருகுலக் கல்வியும், குருபக்தியும்தான் இன்றைய மாணவர் களின் கோளாறைத்தீர்க்கின்ற பெரிய அருமருந்து என்கிறார்.

     “தரமான வாழ்க்கை வாழ்வது என்பது மன நிறைவோடு இருப்பதுதான். பூரண சந்தோஷம் பழைய தர்மங்களை நாம் பூரணமாக அநுஷ்டிக்குமாறு நம்மைச் செய்து கொள்ளும் போதுதான் உண்டாகும். மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகிற காரியங் களை விட்டுவிட்டு, நிம்மதியோடு நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு மனஸார முயற்சி செய்ய வேண்டும்” – இப்படி நூலில் கோடிட்டு வைத்துப் படிக்க வேண்டிய வைர வரிகள் ஏராளம் உள்ளன. திருமணம் மற்றும் பிறந்த நாளில் பரிசளிக்க வேண்டிய அற்புதமான அருள்மொழி நூல் இது.”

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 125

அழகியசிங்கர்  

 இரு குருவிகள்

குலசேகரன்

வழி தவறிப் புகுந்த 

ஒரு குருவி நீண்ட நேரமாக 

சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது 

நான் மையத்திலிருந்து 

பறப்பதைக் காண்கிறேன் 

அது இறகுகள் தொய்ந்து 

எதிரில் நின்றுள்ள 

கண்ணாடியின் மீது அமர்கிறது 

அருகிலிருக்கும் உருவத்தை இனம் கண்டு 

குனிந்து அலகால் கொத்துகிறது 

குருவியின் பிம்பமும் தொடுகிறது 

ஒரே புள்ளியில் 

இரு அலகுகளும் 

தொடர்ந்து சப்தித்துக் கொண்டிருக்கின்றன 

உயிரின் சலனங்கள் உண்டாகாத பீதியில் 

இடத்தை விட்டெழுந்து 

அம்பாக வானில் குருவி மறைகிறது 

நான் தேடிப் பார்க்கிறேன் 

உள்ளே சிறகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன

நன்றி : ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி – குலசேகரன் – உயிர்மை பதிப்பகம் 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – முதல் பதிப்பு :டிசம்பர் 2008 பக்கம் : 80 – விலை : 50.

துளி – 67 தீபாவளி மலரும் நானும்…2

அழகியசிங்கர்

எப்போதும் நான் தீபாவளி மலர்களை வாங்குபவன் கிடையாது.  பல ஆண்டுகளாக எனக்குத் தீபாவளி மலர் என்ற நினைப்பே இருக்காது.  ஆனால் நான் எப்போது தீபாவளி மலர்களைப் பார்க்கவும் வாங்கி வைத்துக்கொள்ளவும் நினைப்பு ஏற்பட்டது.  யார் மூலம் இது ஏற்பட்டது?  ஐராவதம் மூலம்தான்.  அவரும் தீபாவளி மலர்களை வாங்கிப் படியுங்கள் என்று சொன்னதே கிடையாது.  உண்மையில் அவர் தீபாவளி மலர்களைத் தீபாவளி அன்று வாங்குவதே கிடையாது.  அப்படியே வாங்கினாலும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் தீபாவளி மலர்களைத்தான் வாங்குவார்.

ஆனால் அவர் லென்டிங் லைப்ரரியில் தீபாவளி மலர்களைப் படித்துவிட்டுக் கொடுத்து விடுவார்.  எந்த ஆண்டு தீபாவளி மலர் என்ற கணக்கெல்லாம் கிடையாது.  அடிக்கடி அவர் வீட்டிற்குப் போவேன்.  அவர் பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதுவார்.  அதில் வெளிவந்திருக்கும் சிறுகதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருப்பார்.  என்னிடம்தான் விருட்சத்தில் பிரசுரிக்கக் கொடுப்பார்.  அப்போதுதான் எனக்கும் தீபாவளி மலர்கள் ஒன்றிரண்டு வாங்கவேண்டுமென்று தோன்றியது.  

ஐராவதம் உலக இலக்கியமெல்லாம் அறிந்தவர்.  சிறந்த சிறுகதை ஆசிரியர்.  ஏன் சம்பத் என்ற எழுத்தாளரை விட சிறந்த சிறுகதை எழுத்தாளர்.  அவரை யாரும் கொண்டாடவில்லை.  அசோகமித்திரன் அவரை மதிப்பார்.  அவரிடமிருந்து சில எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்.  

ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவருடைய படைப்புகளைக் கேட்டதே இல்லை.  அவர் கவிதை எழுதுவார், கதை எழுதித் தருவார், கட்டுரை எழுதுவார், ஏன் மொழிபெயர்த்தும் கொடுப்பார்.  ஆனால் எந்தத் தீபாவளி மலரிலும் அவர் படைப்பு வந்ததில்லை.  ஏன்?  ஒரு தீபாவளி மலரைத் தயாரிக்க பத்திரிகை ஆசிரியர் முக்கியப் பங்கு வகுக்கிறார்கள்.  யாருக்கும் அவரிடமிருந்து எழுதி வாங்கவேண்டுமென்று தோன்றவில்லை.  இதுதான் கொடுமை.

ஆனாலும் தீபாவளி மலர்களை லென்டில் லைப்பரரியிலிருந்து வாங்கி வந்து புரட்டிப் புரட்டிப் பார்க்கும் ஆவலை என்னால் நம்ப முடியவில்லை.  அவரைப் பார்த்துக்கொண்டுதான் நான் தீபாவளி மலர்களை வாங்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  தீபாவளி மலர்கள் தயாரித்த ஆசிரியர்கள் எல்லோரும் ஐராவதத்திற்குத் துரோகம் செய்து விட்டதாக நான் நினைப்பேன்.

ஆனால் ஒருபோதும் இது குறித்து அவர் பொருட்படுத்தியது இல்லை.  பல தீபாவளி மலர்களில் ஒரே எழுத்தாளரின் பல படைப்புகள் வந்திருக்கின்றன.  இதையெல்லாம் ஐராவதம் கூறக் கேட்டிருக்கிறேன்.  அசோகமித்திரன் எத்தனை தீபாவளி மலர்களில் கதைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்வார்.  அவர் தன்னுடைய படைப்புகள் வரவேண்டுமென்று லாபி பண்ணியது கிடையாது.  ஆனால் தீபாவளி மலர்களைப் பார்க்கும்போது நம் படைப்புகள் ஒரு ஓரமாவது வரவேண்டுமென்று நினைக்காமல் அவர் இருந்திருப்பாரா?  

துளி – 67 தீபாவளி மலரும் நானும்…1

அழகியசிங்கர்

தமிழில் தீபாவளி மலர்கள் எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. அது ஆரம்பமாக யார் அல்லது எந்தப் பத்திரிகை துணிந்தது என்று தெரியவில்லை.  2015ஆம் ஆண்டு நான் எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கினேன்.  பட்டாசு வாங்கி கொளுத்தி பணத்தை வீணடிக்க வேண்டாமென்றும் அதற்குப் பதில் தீபாவளி மலர்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாமென்று நினைத்தேன்.

அப்படி வாங்கிச் சேகரித்த தீபாவளி மலர்களில் ஒன்றைக் கூட எடுத்துப்படிக்கவில்லை.  புரட்டிப் பார்த்ததோடு சரி.  அதன் பின் வந்த ஆண்டுகளில் தீபாவளி மலர்கள் வாங்குவது கிடையாது.  நான்கு முறைகள்தான் தீபாவளி மலர்களில் என் படைப்புகள் இடம் பெற்றன.  கல்கி தீபாவளி மலரில்  ராகவன் ஆசிரியர் பொறுப்பிலி ருந்தபோது என் சிறுகதை ஒன்று பிரசுரமானது.  ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ச சி சிவக்குமார் முயற்சியில் சிறுபத்திரிகைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது.  மூன்றாவது முறையாக அமுதசுரபி தீபாவளி மலரில் திரூப்பூர் கிருஷணன் ஆசிரியப் பொறுப்பில் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதிய கட்டுரை வந்தது.  தற்போது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் 2019ஆம் ஆண்டில் üபயணம்ý என்ற சிறுகதை பிரசுரமானது. தேர்ந்தெடுத்தவர் கிரிஜா ராகவன். 

ஒவ்வொரு தீபாவளி மலரிலும் எனக்குப் பிடித்தது அதனுடைய வழவழப்பான வண்ண அட்டைப்படங்கள்.  என்னிடமுள்ள தீபாவளி மலர்களைக் குறித்து எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எழுதலாமென்று நினைக்கிறேன்.