பூனைகளைக் கொண்டாடுவோம்..

அழகியசிங்கர்

உலகப் பூனைகள் தினம் இந்த மாதம் 8ஆம் தேதி முடிந்து விட்டது.  
வரும் வெள்ளிக்கிழமை பூனைகளைப் பற்றி கவிதைகள் வாசிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.  இதுவரை விருட்சம் சார்பில் நடைபெற்ற கவிதைக் கூட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கவிஅரங்சத்தைக் கௌரவப்படுத்தி உள்ளார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் புதியவர்கள் சிலரும் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.  விருட்சம் கவிதை வாசிப்பு என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கியிருக்கிறேன்.  கவிதைகள் வாசித்த எல்லோருடைய பெயர்களையும் அதில் சேர்த்துள்ளேன். 
ஒரு குழுவாகச் செயல்பட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
பூனையைப் பற்றி கவிதை வாசிக்கக் குறைந்தது 60பேர்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன்.  எல்லோரும் ஒருமுறைதான் ஒரு கவிதைதான் வாசிக்க இயலுமென்று நினைக்கிறேன்.
பூனை வாழ்க.  மியாவ்.  (பாஸ்கரனின் பூனைப்படம்)

உலகப் பூனைகள் தினத்தை ஒட்டி விருட்சம் கவியரங்கம்

அழகியசிங்கர்

உலகப் பூனைகள் தினம் இன்று.  நான் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம் நடத்த ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடிவிட்டன.  அடுத்த வாரம் (14.08.2020) உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த முன் வந்துள்ளேன். 
பூனைகள் குறித்து ஏராளமானவர்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பூனை ஒரு ஆன்மிக மிருகம்.  எளிதில் யாரிடமும் பழகாது.   ஒரு பூனையைத் தூக்கி மேலே போட்டால் அது கொஞ்சமும் அடிப்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது.  அசோகமித்திரன் தாமோதர ரெட்டி வீட்டில் வசித்தபோது அவருடன் பூனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் நான்  கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு முறையும் பூனைகள் குறித்து கவியரங்கம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும்.
இதோ அடுத்த வாரம் உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த உள்ளேன்.
முதலில் பாரதியார் எழுதிய பூனைக் கவிதையுடன் துவங்க உள்ளேன்.  
பூனைகள் குறித்து கவிதைகள் எழுதி உள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்று திரட்ட விரும்புகிறேன்.
வாசிக்க வரும் ஒவ்வொரு கவிஞரும் பூனை பற்றி எழுதிய கவிதை மட்டும் வாசிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கலாம்.   வாசிக்க வருபவர்கள் அவர்கள் கேள்விப்பட்ட வாசித்த கவிதைகளைக் கூட வாசிக்கலாம்   
எல்லாரும் வாசித்த கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வருவேன்.   நான் ஏற்கனவே பூனைகள் குறித்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர முனைந்துள்ளேன்.
நீங்கள் பூனையைக் குறித்து வாசிக்க விரும்புவதாக இருந்தால் உங்கள் தொலைப் பேசி எண்ணைக் குறிப்பிடவும்.
அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை (14.08.2020) பூனையைக் கொண்டாடுவோம். 
நன்றி. மியாவ். 
பூனைக் கவிதையை ஞாபகப்படுத்தும் விதமாய் இதோ ஒரு பூனைக் கவிதை 

               இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை நாற்காலி மீது அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்தது மியாவ் என்றது..
இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில்  நாற்காலி கீழே அமர்ந்திருந்தது. என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று இரண்டு முறை கத்தியது
நான் பேசாமல் வந்து விட்டேன்.


எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு சூம் மூலம் அஞ்சலி


அழகியசிங்கர்


விருட்சத்துடன் குவிகம் இணைந்து நடத்தும் சூம் கூட்டம்.

விருட்சம் மூலமாக  அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.   கடைசியாக நடத்திய அஞ்சலிக் கூட்டம் அசோகமித்திரனுக்கு .
ஞாபகத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன் யார் யாருக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேனென்று.  1. சி சு செல்லப்பா 2. ஷண்முக சுப்பையா 3. கரிச்சான் குஞ்சு 4. வெங்கட் சாமிநாதன் 5. ஜெயகாந்தன் 6. ஞானக்கூத்தன்   7 அசோகமித்திரன் 
இவர்களில் பலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்.  சிலர் நண்பர்கள் சொல்லி கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
இந்த முறை சூம் மூலமாகக் கூட்டம் நடத்த எண்ணம்.  கலந்து கொள்ள விரும்புபவர்கள்  9444113205 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்தவும்.  
தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர்.  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று அவருடைய பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது. 
அவருடைய சாயா வனம் என்ற நாவல் புத்தகமாக வரும்போது அவருக்கு வயது 24.  திரும்பவும் அதை மூன்று முறை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
        கூட்டம் வரும் வியாழக்கிழமை – 06.08.2020 – 7 மணிக்கு நடைபெற உள்ளது.

சா.கந்தசாமிக்கு அஞ்சலியைத் தெரிவிக்க வேண்டியவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளுங்கள்.  9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். 

கந்தசாமி கந்தசாமிதான்…



அழகியசிங்கர்


இன்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.
இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார்.  “
அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் பட்டது.  அவர் மருத்துவமனையிலிருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம்.
இன்று மரணமடைந்து விட்டார்.  என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர்.  பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன்.  உற்சாகி.  தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர்.     
அவருடன் பழகினால் முதுமையே தெரியாது.  நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் உடனே படித்து விட்டு அடுத்தநாள் போன் செய்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர்.  
பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன்.   நான் நடத்திக்கொண்டு வந்த மூகாம்பிகைக் கூட்டத்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.  இதை இங்கு திரும்பவும் ஒளிபரப்ப நினைக்கிறேன்.
அவருடைய பிறந்ததினத்தை ஒட்டி அவருடைய அவருக்குப் பிடித்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகத் தயாரித்து விட்டேன்.  ந. கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன்.  ஆனால் அதற்குள் அவர் மரணம் முந்திக்கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டாவது புதல்வன் வீட்டிற்குச் செல்வர்.  திரும்பி வரும்போது ஒருபுத்தகம் எழுதிக்கொண்டு வருவார்.  
நான் அமெரிக்கா செல்லும்போது அவரிடம் சொல்லிக்கொண்டு போனேன்.  “பொழுதை வீணடிக்காதைய்ய…நிறையா புத்தகங்கள் படி…உன் பயணத்தைப் பற்றி எழுது,” என்றார்.  
ஒரு முறை சாகித்திய அக்காதெமியின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் ரவீந்திரநாத் தாகூரின் ‘சிதைந்த கூடு’  என்ற புத்தகத்தை வாங்கச் சொன்னார்.  அதில் சிதைந்த கூடு குறுநாவலைப் படிக்கும்படிச் சொன்னார்.
அதன்பின் ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும்போது சிதைந்த கூடு படித்தியா? என்று கேட்பார்.  படிக்கவில்லை என்று சொன்னால் லேசாகக் கோபித்துக்கொள்வார்.  பிறகு கேட்பதையே விட்டு விட்டார்.  இதோ இன்னும் இரண்டு மூன்று பக்கங்கள்தான் அந்தக் கதையைப் படித்துமுடிக்க  இருக்கின்றன.  படித்து முடித்தவுடன் அவரிடம் சொல்லலாமென்றிருந்தேன்.
எழுதுவதையும் படிப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தான்.  அசோகமித்திரன் கூட டைப் அடித்துப் படைப்புகளை அனுப்புவார்.  கந்தசாமி  கையாலேயே எழுதுவார்.  ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற வரிசையில் அசோகமித்திரன் பற்றி ஒரு புத்தகம் அவர் வெளிநாடு போவதற்கு முன் முடித்து விட்டுப் போயிருந்தார்.  அது தான் அவருடைய கடைசியாக எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன்.           அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.     

விருட்சம் சார்பில் சூம் மூலமாக ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம் சூமில்  ஆறாவது  கவிதை வாசிக்கும் கூட்டம்   03.07.2020  வெள்ளிக்கிழமை –  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு : 
1. கவிச்சுடர் கா.ந.கல்யாண சுந்தரம் 2. கவிஞர் செல்வா ஆறுமுகம் 3. கவிதாயினி கனகா பாலன்  4. கவிதாயினி பத்மஜா நாராயணன் 5. கவிதாயினி கனிமொழி ஜீ  6. கவிஞர் நிஷாந்தன்
– ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கவிதை வாசிக்க வேண்டும்.
– உங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்க வேண்டும்
– உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிரக் கவிதையைத் தவிர வேற எதுவும் கூட்டத்தில் சொல்லக் கூடாது.
– அரசியல் கவிதையில் வரக் கூடாது
– எந்த மதத்தையும் இழிவுபடுத்தும்படி கவிதை வாசிக்கக் கூடாது.

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Readimg 6 Time: Jul 3, 2020 07:00 PM India Join Zoom Meeting https://us04web.zoom.us/j/79593448510?pwd=UXJDaDc3SjVvOTlNcjRGd3Z6MmpoUT09Meeting ID: 795 9344 8510 Password: poem3

சூம் மூலமாக ஐந்தாவது கவிதை வாசிக்கும் கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம்  நான்காவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை  26.06.2020 (வெள்ளிக்கிழமை)  அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.  கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்கள் பின்வருமாறு :  1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன்  6. எஸ்.லக்ஷ்மணன்


azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Virutcham Poetry Reading 5
Time: Jun 26, 2020 07:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/71479569401?pwd=cmJ2SXI3OW1DVDcxYkUxd1NIcUJVUT09

Meeting ID: 714 7956 9401
Password: poem26

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..

அழகியசிங்கர்

திரும்பவும் சந்திப்பு நிகழ்கிறது.  பா ராகவன் குறித்து நாவலைப் பற்றிப் பேச.


ஜெகன் : வணக்கம்.
மோகினி : வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : யதி நாவலை நானும் முழுவதுமாகப் படித்து விட்டேன். 
மோகினி : இந்த நாவலை இலக்கியத் தரமான நாவலாகக் கருதுகிறீர்களா?
அழகியசிங்கர் : நிச்சயமாக. பரிசுக்குரிய நாவலாகவும் கருதுகிறேன்.
ஜெகன் : நம்ப முடியாத சம்பவம் இதில் நிறைய இருக்கின்றன.
அழகியசிங்கர் : நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும்.  இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம் இருக்கிறது. 
மோகினி : அடுக்கடுக்காக பல நிகழ்ச்சிகள்.  பல சம்பவங்கள். எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் எதாவது கிடைக்கும்.
ஜெகன் : உண்மைதான். ஆனால் படிக்கும்போது நம்புவது கடினம்.
அழகியசிங்கர் : இந்தப் பிரதியில் நான் ஒரு இடத்தில் படித்தேன்.  சித்ரா என்ற கதாபாத்திரம் விமல் என்ற கதாபாத்திரத்துடன் பேசுகிற மாதிரி.  உண்மையில் சித்ரா ஒரு ஆவி உலகத்தில் நடமாடும் கதாபாத்திரம்.
மோகினி : இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது.
அழகியசிங்கர் : சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்த டேவிட் என்ற படத்தைப் பார்த்தேன்.  விக்ரமுடன் அவர் அப்பா பேசுவதுபோல் பல காட்சிகள் வருகின்றன.  ஆனால் டேவிட் அப்பா உயிருடன் இல்லை.  இது ஒரு சர்ரியலிஸ படமாக இருக்கும்போது தோன்றுகிறது.  அதே போல் யதி ஒரு சர்ரியலிஸ நாவலாக இருக்கும். பல நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட நாவல்,
ஜெகன் : இதில் இடாகினிப் பேயெல்லாம் வருகிறது.  அதை இரண்டாவது பையன் வினய்தான் தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறான்.
மோகினி : சித்ராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தபின் கல்யாணத்திற்கு முதல் நாள் வினோத் காணாமல் போய்விடுகிறான்.  சித்ரா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  ஆவி ரூபத்தில் அவனைப் பழி வாங்க நினைக்கிறாள். அவன் அண்ணன் வினய் மூலமாக முயற்சி செய்து பார்க்கிறாள்.  
ஜெகன் : நாவல் முடிவில் நால்வரும் அவர்கள் அம்மாவிற்குப் பிறந்தவர்கள் இல்லை என்பதுபோல் வருகிறது.
மோகினி : எல்லாம் பூடகமாகக் கொண்டு போயிருக்கிறார்.  கடைசி வரை அவர்கள் அம்மா  தன் பிள்ளைகளிடம் நீங்கள் என் பிள்ளைகளென்று சொல்லவில்லை.  
ஜெகன் : இந்த இடத்தில் இந்தப் பிரதியில் இப்படி வருகிறது எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்?  ஏதோ ஒரு பெண் வடிவிலிருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம்.  ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம் என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான்.
மோகினி : அதேபோல் இன்னொன்றைச் சொல்லவேண்டும். அம்மாவின் அப்பா காலராவில் இறந்து போன நிகழ்ச்சியும் வருகிறது. 
அழகியசிங்கர் : இதை இன்னொரு முறை படித்தால்தான் புரியும்.  படிப்பதுகூட அங்கங்கே பக்கங்களைப் புரட்டிக்கொண்டு படிக்கலாம். எனக்கு என்னவோ எதைத் தேடிக்கொண்டு போனார்களோ அது நால்வர்களுக்கும் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. சொறி முத்து சித்தர் என்ற கதாபாத்திரம் விசித்திரமாக இருக்கிறது. அம்மாவின் மரணத்தில் பங்குகொள்ள மூத்த அண்ணன் கூட நாய் ரூபத்தில் வந்து விடுகிறான். படித்த திருப்தியை உண்டாக்கிய நாவல்.

சூம் மூலமாக நான்காவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம்  நான்காவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை 19.06.2020 அன்று  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்களை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறேன். இதுவரை கவிதை வாசித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி  2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம்  4. திருக்கூனன் கண்டராதித்தன். 
05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி   4. பானுமதி  5. உமா பாலு 6. வசந்த தீபன்  7 ஆர்.கே  8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்
12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியம் 3. ப்ரியம் 4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: virutcham poetry meeting 4 Time: Jun 19, 2020 07:00 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us04web.zoom.us/j/73802493495?pwd=TDBLay9DNEpZRUFnM1h0d3VJcWRUdz09 Meeting ID: 738 0249 3495 Password: poem

விருட்சம் சார்பாக நாளைக்கு கவிதை வாசிக்கப் போகிறவர்கள்

 

சூமில் நாளை மாலை 7 மணிக்குக் கீழே குறிப்பிடப்பட்ட கவிஞர்கள் கவிதை வாசிப்பார்கள்.


1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 3. சிபிச்செல்வன் 4. ஸிந்துஜா 5. பானுமதி 6. உமா பாலு 7. ஆர் வெங்கடேஷ் 8. ஆர்.கே 9. வேணுவேட்ராயன் 10. சுரேஷ் ராஜகோபாலன்
கலந்து கொள்பவர்கள் எல்லோரும் 1 நிமிடம் அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்திக்கொண்டு 5 நிமிடங்கள் கவிதை வாசிப்பார்கள்.
 Meeting ID: 756 8182 3543   Password: virutcham

சில வித்தியாசங்கள்

சிறுகதை :

சுஜாதா

நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு – அவனை நீங்கள் சந்திக்க வேண்டும்; அழகான பயல் – பால், விடமின் சொட்டுகள், ‘ஃபாரெக்ஸ்’ வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும் … எதற்கு உங்களுக்கு அந்தக் கணக்கெல்லாம்.

வாங்குகிற முந்நூற்று சொச்சம், இருபத்தைந்து தேதிக்குள் செலவழிந்து விடுவது சத்தியம். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து: ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி. இவளைப் பற்றி கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் பட்ஜெட்டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமார்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம். கணவன் ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக

இன்று தேதி 29, என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும். உடனே செல்ல வேண்டும்.

என் அம்மாவுக்கு இருதயத்தில் கோளாறு. ஐம்பத்தெட்டு வருஷம் அடித்து அடித்து அலுத்துப் போய் திடீரென்று நின்றுவிடலாமா என்று யோசிக்கும் இருதயம். அவளுக்கு உடம்பு பதறும்; சில்லிட்டு விடும். இந்த மாதிரி மூன்று தடவை வந்திருக்கிறது. இந்தத் தடவை தீவிரமாக இருந்திருக்க வேண்டும். என் தம்பி அடித்த தந்தியின் சுருக்கமான வாசகங்களில் தெரிகிறது; “அம்மா கவலைக்கிடம் உடனே வா.”

இதுவரை நான் மேம்போக்காகவே எழுதி வந்திருக்கிறேன். என் உள்ளத்தின் பதற்றத்தைச் சமாளிக்க – என் அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்த இப்படி எழுதிக் கொள்கிறேன். என் மனத்தின் ஆழத்தில் என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘அம்மா – அம்மா – அம்மா’ என்று அடித்துக் கொள்வதையும், என்னுள் இருக்கும் சில இனம் தெரியாத பயங்களையும், நம்பிக்கைகளையும் வார்த்தைகளில் எழுதுவது கஷ்டம். அவளை உடனே யட்சன்போலப் பறந்து சென்று பார்க்க வேண்டும் … ‘அம்மா, உன் டில்லி புத்திரன் இதோ வந்துவிட்டேன். ஏரோப்ளேனில் உன்னைப் பார்க்கப் பறந்து வந்திருக்கிறேன். இதோ உன் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். உனக்குக் குணமாகி விடும்.’ பக்கத்து வீட்டு சாரதாவிடம் ‘என் பிள்ளை பிளேனில் வந்தான்’ என்று பெருமை அடித்து கொள்வதற்காகவாவது பிழைத்துக்கொள்வாள். எனக்கு ரூபாய் முந்நூற்று இருபத்தைந்து தேவை.

என் போன்றவர்களுக்கு விமானப் பிரயாணம் இந்த மாதிரி சோக சந்தர்ப்பங்களில்தான் சாத்தியம். கடன் வாங்கி டிக்கெட் வாங்கி, கண்ணீர் மறைக்கும் கண்களுடன் ஜேம்ஸ் பாண்ட் படிக்க முடியாது. ஹோஸ்டஸ்ஸ§டன் சிரித்துப் பேச முடியாது.

எங்கே போவேன் பணத்திற்கு?… எனக்கு யார் தருவார்கள்? என் நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால், ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். என் மனைவியிடம் நகைகள் கிடையாது. என் சொத்தைப் பற்றி முன்னமேயே தெரிவித்திருக்கிறேன். அதனால்தான் ராமநாதனிடம் கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.

ராமநாதன் எனக்குக் கிட்டத்திலும் அல்லாத, தூரத்திலும் அல்லாத உறவினர். என்ன உறவு என்கிற விவரங்கள் அனாவசியம். செக்ரட்டரியாக இருக்கிறார். முக்கியமான மந்திரிக்கு. முக்கியமான மனிதர். சர்க்கார் எத்தனையோ மில்லியன் டன் கோதுமை கடன் வாங்கும்போது இவர்தான் வெள்ளைக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஜோடியாகக் கையெழுத்துப் போடுவார். போகாத தேசமில்லை. டில்லியில் நான் எட்டு வருஷங்கள் இருந்திருக்கிறேன். இரண்டு தடவை நான் இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். இரண்டு தடவையும் நடந்தது, எழுதும்படியாக இல்லை. நானும் இவரும் இருப்பது வேறு வேறு மட்டங்களில். உறவுப் பிணைப்பை வைத்துக்கொண்டு இந்த வித்தியாசத்தை இணைப்பது சாத்தியமாகாது என்று அறிந்துகொண்டு மரியாதையாக ஒதுங்கிவிட்டேன். தற்போது என் பணத்தேவை அந்த அவமானங்களை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. நான் அவரைப் பார்க்கக் கிளம்பினேன்.

ஹேஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏர் கண்டிஷனர், நாய், அம்பாஸடர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசலில் கதர் அணிந்த சேவகர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். என் பெயர் சொல்லி, நான் அவர் உறவுக்காரர் என்பதையும் சொன்னேன். வேஷ்டி கட்டின என்னை ஏதோ, நாய் கொண்டுவந்து போட்ட வஸ்துவைப் போல் பார்த்து உள்ளே போகுமாறு சொன்னார் சேவகர் (ர்’ மரியாதையைக் கவனிக்கவும்). ‘ சிண்ட்ரெல்லா’ ராஜகுமாரன் மாளிகையில் நுழைவதுபோல் உணர்ந்தேன், உள்ளே செல்லும்போது. ஒரு ஹால். தவறு, ஹால் இல்லை … ஹாரால். கீழே கம்பளம். பக்கத்தில் ‘டெலிஃபங்கன்’ கம்பெனியின் ரேடியோ கிராம் (ராமநாதன் அவர்கள் மேற்கு ஜெர்மனி சென்றிருக்கிறார்). டிரான்ஸிஸ்டர், மடங்கிப் படுக்கையாகத் தயாராக இருக்கும் ஸோபா, ரெப்ரிஜிரேட்டர் திறந்திருக்கிறது. அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட சாராய பாட்டில்கள். மேலே காந்தி படம். அறையின் திரைகளில் டிஸ்டெம்பரின் வர்ணங்கள் ஒன்றுக்கொன்று இழைந்து கண்ணை உறுத்தாத சமாச்சாரங்கள்.

ரேடியோகிராமிலிருந்து பலமாக கிதார் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் துடிப்பிற்கு ஏற்ப கால்களால் தாளம் போட்டுக்கொண்டு ஓர் இளைஞன் சோபாவில் முக்கால்வாசிப் படுத்துக்கொண்டு ‘ப்ளே பாய்’ என்கிற பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான். நான் வந்ததையோ, நின்றதையோ, கனைத்ததையோ கவனிக்கவில்லை. அருகே சென்று தாழ்வாக இருந்த நடுமேஜையில் ஒரு தட்டித் தட்டினேன். கவனித்தான். “யெஸ்?” என்றான் பையன். ராமநாதனின் ஒரே பையன். “அப்பா இருக்கிறாரா?” “ஹி இஸ் டேகிங் பாத். ப்ளிஸ் வெய்ட்” என்றான். அவனுக்கு முடிவெட்டு தேவையாயிருந்தது. அணிந்திருந்த சட்டை, பெண்கள் அணியவேண்டியது. போட்டிருந்த பேண்ட்டில் நுழைவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும். “ஐ’ம் ராஜேஷ்” என்று என்னை நோக்கிக் கையை நீட்டினான் “என் பெயர் ராஜாராமன். நான் உங்களுக்கு ஒரு விதத்தில் உறவு.” என்றேன். நான் தமிழை விடுவதாக இல்லை . “இஸ் இட்?” என்றான். “நீ அவர் பையன்தானே?”

ம் “யெஸ்” “தமிழ் தெரியுமா?” “யெஸ்” “பின் தமிழில் பேசேன்.” “ஹானஸ்ட்லி ஐ லாஸ்ட் டச்” என்று சிரித்தான். எனக்கு லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழப்போகும் கோபத்துக்கு அறிகுறி. “நீ என்ன படிக்கிறே?” “ப்ளே பாய்!” “இல்லை , எத்தனாவது படிக்கிறே?” “ஸீனியர் கேம்பிரிட்ஜ்.” ராமநாதன் உள்ளேயிருந்து வந்தார். நேராக இடப்பக்கம் இருந்த அறையை நோக்கி நடந்தார். “நமஸ்காரம், ஸார்.” தயங்கி என்னைப் பார்த்தார். கண்களில், அவர் ஞாபகத்தில் என்னைத் தேடுவது தெரிந்தது. “ஓ, ஹலோ! வாப்பா, ராமச்சந்திரன்” “ராஜாராமன் சார்.” “ஓ, எஸ்! ராஜாராமன், சௌக்கியமா? ஒரு நிமிஷம்” என்றபடி மறைந்தார்.

ஓர் அசிங்கமான தயக்கம். ராஜேஷ் என் எதிரில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். அவன் வயதில் நான் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கோல்ட்ஸ்மித் படித்துக்கொண்டிருந்தேன். இவன் ட்விஸ்ட் சங்கீதமும் ஓர் இடத்திலும் தேங்காத இந்த யுகத்தின் இந்த நிமிஷத்தின் அமைதியற்ற துடிப்புமாக என்னை மியூசியம் பிறவியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

மேஜை மேல் அவன் வைத்திருந்த பத்திரிகையைப் புரட்டினேன். வர்ணத்தில் ஒரு பெண்ணின் படம் – ஒரே ஒரு புன்னகையை மட்டும் அணிந்துகொண்டிருந்தாள் – அவசர அவசரமாக மூடினேன். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். பற்களில் நிகொடின் காவி.

ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்தபோது வெளியே கிளம்புவதற்குத் தயாராக முழுக்க உடையணிந்திருந்தார். உயரமானவர். பீர் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இளம் தொந்தி, கண்ணாடி, அலட்சியம், புன்னகை, அபார உயரம், கீழ்ஸ்தாயிப் பேச்சு – எல்லாம் வெற்றிக்கு அடையாளங்கள்.

“ஸோ?” என்றார், என்னைப் பார்த்து, மேஜை மேல் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து தேவ் ஆனந்த்போல் ஒரு தட்டுத் தட்டி வாயில் பொருத்தினார். “ஸ்மோக்” என்றார். “இல்லை” என்றேன். லைட்டரின் ‘க்ளிக்’கில் ஜோதி எம்பிப் பற்ற வைத்துவிட்டுத் தணிந்தது. ராஜேஷ், “டாட்! கேன் ஐ டேக் தி கார்?” என்றான். அவர் : “நோ, ராஜ். எனக்கு ஒரு கான்பரன்ஸ் போக வேண்டும்.” “ஐவில் ட்ராப் யூ” என்றான் கெஞ்சலாக.

“ஓ. கே. ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு . பெட் ரூமில் சாவி இருக்கிறது. அம்மாவை எழுப்பாதே. அவள் தூங்கட்டும்.”

நான் மரமண்டை இல்லை. எனக்கு ஐந்து நிமிஷம் கொடுத்திருக் கிறார். அதற்குள் வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

“எஸ். ராமச்சந்திரன் எப்படி இருக்கே? ஜானகி எப்படி இருக்கிறா?” “ராஜாராமன், சார்?” “என்ன ?” “என் பெயர் ராஜாராமன் சார்.” “எஸ்! ராஜாராமன், இல்லையென்று யார் சொன்னார்கள்! ஒருவரும் அதை மறுக்கவில்லையே!” என்று சிரித்தார். நான் பின் பாட்டாகச் சிரித்தேன். “சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?” “ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு.” “ஓ. எஸ். ஓ. எஸ். ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள் ?” “ஒரு பையன். இரண்டு வயசுப் பையன் – ” “ஆமாம்; ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

‘விண் விண்’ என்று தலைவலி தெறித்தது எனக்கு. கோபம் கலந்த தலைவலி. “நான்தான் சார், ஜானகி தம்பி” “ஸோ ஸாரி. எனக்கு ரொம்ப மோசமான மெமரி. நம்ம ரிலேஷன்ஸ்கூட டச்சே விட்டுப் போச்சு … ஏன்? தூர தேசத்திலே இருக்கோம். சௌக்கியமா இருக்கிறாயா?” “சௌக்கியம் சார்.”

“இப்ப என்ன வேணும் உனக்கு?”

அந்த நேரம் வந்துவிட்டது. திடீரென்று இரண்டடி உயர மனிதன்போல் உணரும் நேரம். இந்திரன்போல் கூச்சப்பட வேண்டிய நேரம். பணம் கேட்க வேண்டிய நேரம்.

“எனக்கு முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும், சார். எங்க அம் …” 

“நான் நினைச்சேன், எப்ப வேணும்?” 

“இப்ப சார், எங்கம்மா …” 

“என்கிட்ட பணமா இருக்கான்னு பார்க்கிறேன்.” – பர்சை எடுத்தார், எட்டிப் பார்த்தார். 

“ம்ஹ¨ம்! இல்லை. ‘செக்’ எழுதித் தருகிறேன்! ஸ்டேட் பாங்கிலே மாத்திக்கிறாயா?” 

“சரி, சார். ரொம்ப வந்தனம். எங்க அம்மாவுக்கு ….” 

“திருப்பித் தருவாயா?” 

“கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிவிடுகிறேன். சார் எங்க அ ….” 

எழுந்து போய்விட்டார். ‘செக்’ புத்தகம் கொண்டுவர. மடையனே, என்னைப் பேசவிடேன். எனக்கு இந்தப் பணம் எதற்கு என்று சொல்லவிடேன். அம்மாவின் உடல் நிலை கவலைக் கிடமாக இருப்பதால்தான் உன்னிடம் வந்து தொங்குகிறேன் என்று பேசவிடேன்…! ‘செக்’ புஸ்தகம் கொண்டுவந்தார். 

பேனாவைப் பிரித்தார். 

“உன் முழுப் பெயர் என்ன?” சொன்னேன். “ஸ்பெல்லிங்?” | சொன்னேன். ‘

‘செக்’கை எழுதிக் கையில் கொடுத்தார். கொடுக்கும்போது 

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

 “எதை சார்?” 

“இந்த மாதிரி உறவுக்காரங்களுக்கு ‘செக்’ எழுதறதை.”

 “இல்லை சார். என் கேஸிலே ரொம்ப அவசரமான தேவை. எங்க அம்மாவுக்கு சீரி ….’ – 

“தேவை எல்லாருக்கும்தான் இருக்கு. இந்த தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?” 

என் கோபம் என்னைப் பதில் சொல்லவிடவில்லை. 

“எப்போ வருகிறாய்? உனக்குப் பணம் தேவையாய் இருக்கும் போது. நான்தான் இருக்கேனே, ‘செக்’ எழுதுகிற மிஷின்! என் கழுத்தில் போர்டு போட்டுத் தொங்க விட்டிருக்கு, இல்லையா, ‘ஏமாளி’ என்று – இவரிடம் எப்போழுதும் கடன் கேட்கலாம் என்று … நம்ம ஸவுத் இண்டியன் மெண்ட்டாலிட்டியே அப்படி. நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். உன்னைத் தனியாகச் சொல்லவில்லை. நான்தான் நம் குடும்பத்துக்கு ‘செக்’ எழுதுகிற மிஷின்…!”

அவர் மேலே மேலே பேசப் பேச என் கோபம் ‘போயிங்’ விமானம் புறப்படும் சப்தம்போல் மெதுவாக ஆரம்பித்து உலகத்தையே சாப்பிடும் வேதனை எல்லைவரை உயர்ந்தது.

“அன்னிக்கு ரெண்டு பேர் வந்தாங்க… நாங்கள் இரண்டு பேரும் உங்களுக்கு உறவு ….”

பாதியில் நிறுத்திவிட்டார். ஏன்! நான் அவர் முகத்தின் முன்னால் அவர் கொடுத்த ‘செக்’கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டேன். “சார், உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்ககிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை. இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். தயவு செய்து கான்பரன் ஸ§க்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண்ணுங்க.”

அவர் முகம் மாறியது. 

“ராஜாராமன், கடன் வாங்க வந்தவனுக்கு இவ்வளவு கோபம் உதவாது. நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதற்கு உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும். மரியாதையாகப் போயிடு. கெட் லாஸ்ட் யூ பாஸ்டர்ட்!” 

“கெட் ரிச் யூ பாஸ்டர்ட்” என்றேன்; 

சிரித்தேன். ம் “மன்ஸாராம்!” என்று சேவகனைக் கூப்பிட்டார். மன்ஸாராம் வருவதற்குள் ராஜாராம் கழண்டுகொண்டேன். வெளியில் வெயிலில் வந்து நின்ற என் நிலைமையைப் பாருங்கள். கௌரவம், மானம் என்பதெல்லாம் பணம் உள்ளவர்களுக்கு உரியவை. எனக்கு ஏன்? அவர் சாதாரணமாகத்தான் பேசினார். அவர் வெறுப்பு அவருக்கு. அந்த வார்த்தைகளைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘செக்’கை வாங்கி மாற்றி டிக்கெட் வாங்கியிருக்கலாம்.

ஆனால், அந்த சமயம் நான் செய்த முற்றிலும் எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூர்ணமாக வாழ்ந்தேன் நான்.

நீங்கள் இவ்வளவு பொறுமையாக இதுவரை படித்தீர்கள். கடனாக முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவளைப் போய்ப் பார்க்க வேண்டும்.

1968