எதையாவது சொல்லட்டுமா….81

எதையாவது சொல்லட்டுமா….81
அழகியசிங்கர் 
நான் மாம்பல வாசி.  மாம்பலத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குமேல் வசித்து வருகிறேன்.  நான் பார்த்த மாம்பலம் வேறு.  இப்போது பார்க்கும் மாம்பலம் வேறு. நான் வங்கியில் சேர்ந்த புதியதில் மாம்பலத்தில் குடியிருந்த என் அலுவலகப் பெண்மணிக்குத் திருமணம்.  அந்தத் திருமணத்தை மாம்பலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அந்தப் பெண் எப்பவாவது என் வீட்டிற்கு வந்து அலுவலகம் போக முடியாவிட்டால் வரமுடியவில்லை என்று கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போவார்.  
எங்களைப்போல அவர்களும் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.  அந்தப் பெண்ணின் அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.  பெண்ணின் திருமணத்தை ஒட்டி பணம் அதிகமாக தேவைப்பட்டது அவர்களுக்கு.  ஒருமுறை எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.  ஒரு காலை நேரத்தில் நானும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.  என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.  எதிர்பாராதவிதமாய் அந்தப் பெண்ணின் அம்மா என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.  “பெண் திருமணத்தை ஒட்டி கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.  நீங்கள் சொûஸட்டியில் உறுப்பினராகச் சேர்ந்து என் பெண் கடன் வாங்க சாட்சி கையெழுத்துப் போட முடியுமா?  கூடவே நீங்களும் கடன் வாங்கி என் பெண் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

“யோசித்துச் சொல்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

பின் யோசித்தப் பிறகு சொûஸட்டியில் கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தோன்றியது.  மேலும் கடன் கொடுக்க என்னிடம் பணமும் இல்லை.  சொற்ப சம்பளம். சம்பளம் வாங்குவதெல்லாம் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது.  ஒருமுறை மின்சார வண்டியில் வந்து கொண்டிருந்தபோது, கால் ஊனமான பெண்மணி பிச்சைக் கேட்டபடி வந்து கொண்டிருந்தாள்.  போர்ட் டிரஸ்டில் பணிபுரிந்த ஊழியர்கள் அங்கு இருந்தார்கள்.  அந்தக் கும்பலில் ஒருவர் சொன்னது இன்னும்கூட ஞாபகத்தில் இருக்கிறது.  பிச்சைக்காரியைப் பார்த்து அவர் சொன்னார்.  “உண்மையில் உன்னிடம்தான் பணம் இருக்கிறது.  நாங்க சம்பளம் வாங்கியவுடன் கடனுக்கு எங்கள் சம்பளம் போய்விடுகிறது.  நாங்களும் பிச்சைக்காரர்களாக மாறி விடுகிறோம்.  உன்னைவிட மோசமானது எங்கள் நிலை.  நீயாவது வெளிப்படையாக எல்லோரிடமும் பிச்சைக் கேட்கிறாய்.  நாங்கள் யாரிடம் போய்க் கேட்பது,” என்றார்.  அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
அலுவலகப் பெண்மணி என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.  நான் அதுமாதிரி கடன் வாங்கி கொடுக்க முடியாது என்று தயக்கத்துடன் சொல்லிவிட்டேன்.  இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு அந்தப் பெண் என்னை அலுவலகத்தில் பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.  அந்தப் பெண்ணிற்கு என் மீது படுகோபம்.  சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் திருமண அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுப்பதுபோல் என்னிடம் கொடுத்தார்.  அந்தத் திருமணம் மாம்பலத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில்.  நான் போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  
பணம் கொடுக்கமுடியவில்லை என்று சொன்னவுடன் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் எனக்கு சற்று வருத்தமாக இருந்தது.  அந்தப் பெண்ணின் திருமண நாளன்று திடீரென்று நான் திருமணத்திற்குப் போவது என்று முடிவு செய்தேன்.  உடனே வண்டியை எடுத்துக்கொண்டு மிதிலாபுரி திருமணம் மண்டபத்திற்குச் சென்றேன்.  அப்போது மாம்பலத்தில் தெரிந்த திருமணம் மண்டபம் அதுதான்.  
முகூர்த்த நேரத்திற்கு நான் திருமண மண்டபத்தை அடைந்தேன்.கல்யாண மண்டபத்தில் இருந்த சிலர் என்னை வரவேற்று உடனடியாக சாப்பாடு கூடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.  அலுவலகத்திற்குப் போவதற்கு 1 மணிநேரம் முன் அனுமதி கேட்டிருந்ததால், நானும் சாப்பாடு கூடத்திற்குச் சென்றேன்.  டிபன் சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன்.  வந்தவர்கள் என்னை கல்யாணம் நடக்குமிடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.  எனக்கு ஒரே அதிர்ச்சி.  அங்கே மாலையுடன் பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டு வயதான தம்பதியர்கள்.  எப்படி 80வது வயது திருமணத்திற்கு வந்தேன் என்பது புரியவில்லை.  
நான் கல்யாணமண்டபத்திற்கு மாறி வந்துவிட்டேன்.  எனக்கு கூச்சமாகப் போய்விட்டது.  பின் சமாளித்தபடி வெளியே வந்தேன்.  அங்கிருந்தவர்களைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, நாற்காலி ஒன்றில் உட்காருவதுபோல் உட்கார்ந்தேன்.  பின் நழுவி வெளியே ஓடி வந்துவிட்டேன்.  என் செய்கை எனக்கே வெட்கத்தைத் தந்தது.  பின் பத்திரிகையை எடுத்துப்பார்த்தபோதுதான் தெரிந்தது.  மிதிலாபுரி கல்யாண மண்டபம் இல்லை என்பது.  அதன்பின் பக்கத்தில் இருந்த இன்னொரு தெருவில் அந்தப் பெண்ணின் திருமணம்.  உடனே அங்கு சென்றேன்.  ஒரே கூட்டம்.  அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண் நான் வந்ததைக் கூட கவனிக்கவில்லை.  நான் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
ஏன் இப்படி நடந்தது என்று யோசித்தபோது, அந்தப் பெண் கடன் கேட்டது.  நான் கொடுக்காமல் போனது.  பின் அந்தப் பெண் என்னை அலட்சியப்படுத்தியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  மிகச் சாதாரண நிகழ்ச்சிதான் இது.  ஆனால் மனம் அளவில் ஏன் சலனமடைகிறோம் என்பது பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.  
சிலசமயம் நான் மாம்பலம் ரயில்வே நிலைய படிக்கட்டுலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்ப்பேன்.  தாங்க முடியாத கூட்டம் போய்க்கொண்டிருக்கும்.  யோசித்துப்பார்ப்பேன் இத்தனைப் பேர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களில் எத்தனைப் பேர்களை நமக்குத் தெரியும் என்று.  நாம் சந்திப்பது என்பது மிகக் குறைவான நபர்கள்.  நண்பர்கள் ஆனாலும் சரி, உறவினர்கள் ஆனாலும் சரி.   நாம் நம் உறவுமுறைகளை சரியாகப் பேணி காக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் பையன் வீட்டில் தங்கியிருந்தேன்.  காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யப்போவேன்.  பெரும்பாலும் அமெரிக்கர்கள் யாரையும் பார்க்க முடியாது.  ஆனால் ஒருசிலர் என் கண்ணில் தட்டுப்பட்டால், குட் மார்னிங் என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.  எனக்கு இது அச்சரியமாக இருந்தது. முன்னே பின்னே பேசியது கூட கிடையாது.  பார்த்தாலே போதும்.  புன்சிரிப்புடன் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.  
ஆனால் இங்கோ வேறு மாதிரி.  தெரிந்தவர்கள் நேருக்குநேர் போய்க்கொண்டிருந்தால்போதும் வேண்டுமென்றே பார்க்காமல் போய்விடுகிறோம்.  முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு போவோம்.  அல்லது வேறு எங்கோ பார்த்துக்கொண்டு போவோம். 
தலைமை அலுவலகத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு கட்டடத்திலிருந்து ஒரு கட்டடத்திற்கு தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.  நான் தெருவில் அப்படி நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, எதிரில் என் அலுவலக உயர் அதிகாரி நடந்து வந்து கொண்டிருப்பார்.  நான் அவரை நிமிர்ந்து பார்ப்பேன்.  அவரோ என்னைப் பார்க்காதவர் மாதிரி தலைகுனிந்து போய்க் கொண்டிருப்பார்.  ஏன்? அவரைப் பார்த்துதான் நான் தலை குனிந்தபடி போக வேண்டும்.  இது உல்டாவாக இருக்கிறது.  
எனக்கு இன்னும் யாருடனும் எப்படிப் பழக வேண்டுமென்பது தெரியவில்லை போலிருக்கிறது.
 (பிப்ரவரி 2013 அம்ருதா மாத இதழில் பிரசுரமான கட்டுரை)

நிழற்படங்கள்

நிழற்படங்கள்

எம்.ரிஷான்ஷெரீப்

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.
 சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.
அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.
கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.
இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.
வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.
நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.
 சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.
அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.
அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.
 இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.
 ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும் சொல்லிக்கொண்டோம்.
பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.
 நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன். ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?
உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.
இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.
இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர் தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். ‘அவள் ரொம்பக் கஷ்டப்படுறா’ எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்
அசோகமித்திரன்
ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்?”
“அவர் பிழைக்க வேண்டுமே?”
“அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்?”
“நான் பிழைக்க வேண்டுமே?”
அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும்.
எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை.
கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்கு வைத்தியம் செய்யாமல் வீடெல்லாம் வேப்பிலையைப் பரப்பி வைப்பார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான போரைத்தொடர்ந்தார். ஒரு முறை அவர் தங்கியிருந்த வீட்டருகே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் வந்து விட்டார்கள். வீட்டில் ஒரு மூதாட்டி. ஒரு கவலை வேண்டாம் என்று சொல்லி வாயிற்படியருகே கொத்து கொத்தாக வேப்பிலையை வைத்தாள். வெள்ளைக்கார்ர்கள் அந்தத் தெருப்பக்கமே வரவில்லை. அம்மை நோய்க்கு அவ்வளவு பயம். இன்று நோய்த்தடுப்பு இருக்கிறது. முன்பு நோய் கண்டு விட்டால் வீட்டில் யாரையும் வரவிடமாட்டார்கள். மிகவும் நெருங்கிய உறவினர்களைக் கூட அநுமதிக்க மாட்டார்கள். அம்மை கண்ட நோயாளி ஒருக்கால் மருத்துவ மனையில் இறந்து விட்டால் அது போன்ற சங்கடம் கிடையாது. உடலை வீட்டுக்கு எடுத்து வர முடியாது. நேராக மயானத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். அப்போது பிணத்தை எடுத்துச்செல்ல ஒரு வண்டியும் வராது. நான் வசித்த ஊரில் ஆம்புலன்ஸ் என்று நான் பார்த்தே கிடையாது.
ஊமைத்துரை வரலாற்றில் வேப்பிலை நிகழ்ச்சி பல விவரங்களைத் தெரிவிக்கிறது. இவ்வளவு பயந்து பயந்து இந்த நாட்டில் இருந்தாலும் பழைய ராணுவக் கல்லறைகளுக்குப் போனால் ஒரே கல்லறைக் கல் முப்பது நாற்பது பெயர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் போரில் உயிர் நீத்தவர்கள் அல்ல. பெருவாரி நோயில் உயிரை விட்டவர்கள்.
சிவராம கரந்த்தின் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருடைய மனைவி அவர் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மாரியம்மனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள், சாமுண்டிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்… “எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று சொல்லி டாக்டரை அழைக்கப் போனார். டாக்டர்கள் யாரும் வரவில்லை. குழந்தை போய் விட்டது. ஆனால் என் சொந்த அனுபவத்தில் எங்கள் வீட்டில்தான் எவ்வளவு வேண்டிக்கொண்டிருக்கிறோம்,எவ்வளவு காசு முடிப்புகளை சாமி படத்தடியில் வைத்திருக்கிறோம்? இந்த 82வது வயதில் என் பெற்றோர்களை நினைத்துக் கொண்டால் அவர்கள் துக்கம்தான் மனதில் முதலில் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் நாங்கள் வசித்த ஊரில் வைத்தியர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலோனோர் எல் எம் எஸ் அல்லது எல். எம் பி. அதாவது, எம் பி பி எஸ் இல்லை. வைத்தியர்கள் குறைவு என்பதால் சாவு அதிகம் என்று இல்லை. வைத்தியமும் சாவும் பெரிய பிரச்னைகள் அல்ல. பிணத்தைக் கொண்டு போனால் சுடுகாட்டில் எரித்து விட்டு வரலாம் அல்லது புதைத்து விட்டு வரலாம்.
நான் முதன் முதலில் மருத்துவர்கள் பற்றி விகடத் துணுக்கு எதிர்கொண்டது சாரணர் ‘காம்ப்ஃபய’ரில்தான். நான் இருந்த குழுவில் ஓரிருவர் தவிர மற்றெல்லோரும் தெலுங்கு அல்லது உருதுக்காரர்கள்.முன்னமேயே கூறியபடி சிறிய ஊரில் குறைவான மருத்துவர்கள் உள்ள நிலையில் இப்படியும் கேலி செய்ய முடியுமா?
கேலியும் செய்தார்கள். அதே டாக்டர்களிடமும் போனார்கள். தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டார்கள்.
                                                                                                                                    பிப்ரவரி  2013                               

விருது

விருது
முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.
இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.
எல்லோரும் கொண்டாடிய
எத்தனையோ கவிதைகளுக்கான
மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா.
புருவங்களை உயர வைத்த
அழகோவியங்கள் பலவற்றைத்
தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை.
மூதாதையர் கடிகாரத்தின்
பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச்
சொட்டுச் சொட்டாகக் கசிகிறது
பேனாவிலிருந்து மை.
பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக.
மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து
வேகமாகப் பயணிக்கிறது மனம்
படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக்
கணம் நோக்கி.
சிறிய பெரிய மீன்கள்
யானையை விடப் பெரிய
சுறாக்கள் திமிங்கலங்கள்
ஆயிரம் வயதான ஆமைகள்
ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன.
தோலின் சுருக்கங்களைத் தாண்டிப்
பிரகாசித்த முகத்திலிருந்து
வெளிப்பட்ட வெளிச்சம்
இன்னொரு கையிலிருந்த
தூரிகையைப் பிடுங்கி அவசரமாய்த்
தீட்டத் தொடங்குகிறது – மன
நிறைவு தந்த நினைவுகளின்
களிப்பையேக்
கலைஞனுக்கான விருதாக.
***
– ராமலக்ஷ்மி

ஐராவதம் பக்கங்கள்….

ஐராவதம் பக்கங்கள்….
நான்காவது சிங்கம் – செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகள் – பக்கம் 71 – விலை ரூ.60 – பிரதிகள் 600 – காலச்சுவடு பதிப்பகம்
இது கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.  முன்னரே ‘அந்தரங்கம் (2008)’, ‘இன்னபிறவும்’ (2009), ‘ஞாபகம் இல்லாது போகுமொரு நாளில்’ (2010) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாராம் ஆசிரியர்.
தமிழ்ப்பட உலகில் ஒரு படம் எடுத்துவிட்டு ஓய்ந்துபோன இயக்குநர்கள் இருநூறுக்குமேல் உள்ளனராம்.  
அதேபோலவே கைக்காசு போட்டு ஒரு புத்தகம் எழுதி ஓய்ந்துபோன கவிஞர்களும் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்.  இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் காலச்சுவடு போன்ற பிரசித்துப் பெற்ற பதிப்பகம் மூலம் நாலாவது புத்தகம் வெளியிட முடிந்திருப்பது அவருக்கு கவிதைத் துறையில் உள்ள தொடர்ந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.  ஆனால் பதிப்பாளர்களும் ஏமாந்தவர்கள் அல்ல.  அறுநூறு பிரதிகள்தான் அச்சிட்டு உள்ளார்கள்.  2009க்குப் பிறகு தமிழக நூலக துறையினர் புத்தகங்கள் எதுவும் வாங்காத சூழ்நிலையில் இதுவே அதிகம்.
‘எப்போதும்போல’ (பக்கம் 68) என்ற கவிதை 6 வரிகள் கொண்டது.  ‘இப்படியே’ (பக்கம் 65) என்ற கவிதை 7 வரிகள்.  ‘என்ன சொல்ல’ (பக்கம் 59) 5 வரி கவிதை, ‘சலனம்’ (பக்கம் 57) என்ற கவிதை இரண்டே வார்த்தைகள் கொண்டது.  படிப்பதா? ஒரு வரி. படைப்பதா? ஒரு வரி.  இந்தக் கவிதை படிக்கும்போது எனக்கு அத்தனைப் படைப்புகளையும் – ‘நாவல், சிறுகதை, கவிதை உட்பட படிக்க வேண்டும்,’ என்பான் என் காலஞ்சென்ற நண்பன் ‘இடைவெளி’ நாவலாசிரியன் சம்பத்.  ‘நீங்கள் அதிகமாக தொடர்ந்து படித்த வண்ணம் இருக்கிறீர்கள்.  படிப்பதை நிறுத்த வேண்டும். எழுத நேரம் ஒதுக்க வேண்டும்,’  என்பார் மற்றொரு காலஞ்சென்ற நண்பர் எழுத்தாளர் ஆதவன் அவர்கள்.
சாந்தி என்ற மற்றொரு கவிதை 6 வரிகள் கொண்டது (பக்கம் 48). குறுங்கவிதைகள் என்று தலைப்பிட்டு பக்கம் 34-35ல் 5 கவிதைகளைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.  இதே உறுதியை மேற்குறிப்பிட்ட கவிதைகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் புத்தகம் 50 பக்கங்களில் அடங்கியிருக்கும்.  நூலகத் துறையினர் பக்கத்திற்கு 2 வரி, 3 வரிகள் கொண்ட புதுக்கவிதைகள் அடங்கிய புத்தகங்களை  வாங்குவதற்கு சிபாரிசு செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன்.  திருக்குறள் 2 வரிகள் கொண்டதுதான்.  பத்து குறள்கள் ஒரு பக்கத்தில், அதன் அர்த்தம் எதிர் பக்கத்தில்.  இப்படி புத்தகம் வெளியிடுகிற சிக்கனப் பேர்வழிகள் நிரம்பிய தமிழகத்தில் அபு தாபியில் பணம் சம்பாதித்து பக்கத்திற்கு நாலு வரிகள் கவிதைகளாக எழுதித் தள்ளுகிற செல்வராஜ் ஜெகதீசனை தமிழக நூலகத் துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள்.
விமர்சனங்களைத் தாங்காத கலைஞன் என்ன கலைஞன் என்று கவிஞர் பக்கம் 7ல் வினவுகிறார்.
எனவே சில விமர்சனங்கள்.
  
கவி சாம்ரெட் என்ற பக்கம் 47ல் வெளியான கவிதையை உதறித் தள்ளுகிறார் கவிஞர் கலாப்பிரியா தன் முன்னுரையில்.  நான் இந்தக் கவிதையை சற்று மாற்றி எழுதி இருப்பேன்.
வெகு எளிதாகப்
போய் வருகிறான்
வெளிநாடுகளுக்கு
வெற்று எழுத்தாளன்
கடைபாக்கிற்காகக்
கணக்கு எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்
சகவை வெற்று ஆக்கியுள்ளேன். கவிதையை கணக்கு ஆக்கி உள்ளேன்.
சூடாப்பு என்ற (பக்கம் 46) என்ற கவிதையையும் ஒதுக்கித் தள்ளுகிறார் கலாப்ரியா.  இதன் கடைசி 6 வரிகள் கவித்துவமானவை.  முதல் 19 வரிகள் பூர்வாங்கம், நிலைக்களனை உருவாக்குபவை.  அவற்றை ஆசிரியர் உதறித் தள்ளியிருக்கலாம்.
சுப்ரமணியின் கேள்விகள் (பக்கம் 42) என்ற கவிதையில் 5வது வரியில் கமிட்மெண்ட் என்ற வார்த்தை விழுகிறது.  நான் இதை கட்டளைகள் என்றோ கட்டாயங்கள் என்றோ மாற்றி எழுதியிருப்பேன்.  இழைபிரிதல் (பக்கம் 43) கவிதையில் ஹெலிகாப்டர் பொம்மையை நான் ஆகாயவிமான பொம்மையாக மாற்றி இருப்பேன்.  எவ்வளவு தூரத்தையும் (பக்கம் 41) கவிதையில் அப்பாயின்ட்மெண்ட என்ற வார்த்தைக்குப் பதில் முன்பதிவு என்று மாற்றி இருப்பேன்.
பக்கம் 35 கவிதையில் முகம் வருகிறது.  பக்கம் 36 கவிதையிலும் முகம் வருகிறது.  பக்கம் 37 கவிதையிலும் மீண்டும் முகம்.  காலச்சுவடு பதிப்பகத்தில் கவிதை நூல்களுக்கு பதிப்பு ஆசிரியர் ஒருவர் இருந்திருந்தால் இந்தச் சொல்தொடர் மீண்டும் மீண்டும் வருவதை சுட்டிக்காட்டி தவிர்த்திருப்பார்.
திரும்பத் திரும்ப என்ற கவிதையில் (பக்கம் 27) சாலையைக் கடக்கக் காத்திருந்த சிறுவன் ஒற்றைச் சிறுவன் அல்ல.  ஓராயிரம் சிறுவர்கள்.  அதுதானே தலைப்பு தரும் செய்தி? அப்பொழுது கடைசி வரிகள் வேறுவிதமாக அமைந்திருக்க வேண்டும்.
காணக்கிடக்கிறான்
ஒவ்வொரு தெருமுனையிலும்
என்று வந்திருக்க வேண்டும்.  கடைசி வரிகள் சிக்னல் என்ற ஆங்கிலப்பதத்தையும் வெகு சுலபமாக அகற்றி விட்டேன் பாருங்கள்.
ஒரு தொகுப்பு என்று வருகிறபோது சில கவிதைகள் போலுள்ள கவிதையாய் இல்லாதவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று முன் பத்தியில் எழுதுகிற கலாப்பிரியா, கடைசியில் நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள் என வாழ்த்துகிறார்.  நானும் ததாஸ்து சொல்கிறேன்.  
 

ரயிலோடும் வீதிகள்..

ரயிலோடும் வீதிகள்..


                                          அமைதிச்சாரல்

கயிற்று வளையத்துள்

அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது.
பிள்ளையார் கோவில் நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான வேலம்மாள்.
“வெரசாத்தான் போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்

வலியில் அலறிக்கொண்டு..

ஐராவதம் பக்கங்கள்

ஐராவதம் பக்கங்கள்
நண்பனின் தந்தை – சிறுகதைகள், குறுநாவல்கள் – அசோகமித்திரன் – முதற் பதிப்பு-டிசம்பர் 2011 – பக்கம் 144 – விலை ரூ. 100/- நற்றிணை பதிப்பகம், சென்னை 5
தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான (பதிப்பாளர் வரிகள்) அசோகமித்திரனின் சமீபத்திய படைப்புகளை நமக்குத் தருகிறது நண்பனின் தந்தை.  முதலில் பம்பாய் 1944 என்ற குறுநாவல் கல்கியில் தொடர்கதையாக 13 வாரம் வெளிவந்தது.  தொடர்கதை, நாவல் ஆகாது என்ற க.நா.சுவின் ஆட்கொல்லி முன்னுரை வரிகள் உடனடியாக என் நினைவுக்கு வந்தது.  இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்கொல்லியே அகில இந்திய வானொலியில் வாரந்தோறும் தொடர்கதையாகப் படிக்கப்பட்டதுதான்.  தொடர்கதைக்கு உரிய லட்சணங்களை பரிபூர்ணமாகக் கொண்டது பம்பாய் 1944.  ஒவ்வொர அத்தியாயம் முடிவிலும் அந்தந்த வாரம் தொடர்ந்து கதையைப் படிக்க தூண்டும்  விதமான வரிகள்.ஆனால் அப்படி வாரப்பத்திரிகையில் வரும் தொடர்கதையை ஆவலுடன் படிக்க வாசகர் கூட்டம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குரியது.  சென்ற தலைமுறைக்காரர்கள் கல்கியை, அகிலனை, கொத்தமங்கலம் சுப்புவை அப்படி படித்தார்கள்.  இன்றைக்கோ பத்து தமிழ்  தொலைக்காட்சி காலங்களிலும் வாரம் நாற்பது நெடுங் தொடர்கள்.
பம்பாய் 1944ல் மணி, அவன் அண்ணன், மன்னி, அம்மா அடங்கிய சில குடும்பம் மராட்டிய மனிதர்களான விநாயக், அவன் அப்பா, அவன் தங்கை நிர்மலாவுடன் பழக நேருகிறது.  நிர்மலாவை கல்யாணம் செய்துகொள்ள சொல்லி மணியை வற்புறுத்துகிறாள் அவள் அம்மா.  ஆனால் அது நடைபெறவில்லை என்ற கடைசி வரிகளுடன் குறுநாவல் முடிகிறது.  பம்பாய் 1944 பாகம் 2 துவங்க இது சரியான ஆரம்பம்.  ஆனால் அசிரியர் வயதான காரணத்தால் என் கை விரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக் கொண்டு விடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.
நாங்கள் முப்பது ரூபாயில் விநாய்க்கின் அப்பாவைக் குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டோம் (பக்கம் 57).  இன்றைக்கு நாட்டை ஆளும் பொருளாதார வல்லுநர்கள் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா படிக்க வேண்டிய வரிகள் இவை.  
தமிழ் புது வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறது மணியின் குடும்பம்.  கடும் ரேஷனில் என்ன பண்டிகை கொண்டாட முடிந்தது.  பஞ்சாங்கத்துக்கு மஞ்சள் குங்குமம் தடவிப் பூஜை செய்தது.  துளி வெல்லம் போட்டு ஒரு பாயாசம் வைத்தது. (பக்கம் 45) ஏழ்மையில் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்காத பிராமணக் குடும்பம்.  இவர்கள் வீட்டுக்கு வந்த நிர்மலா.  செருப்பே போடாமல் வந்திருக்கிறாள்.  ஒருவேளை அவளுக்குச் செருப்பு இல்லையோ? (பக்கம் 73).
அம்மாவிற்கு உதவுவதற்கென்று வெளி மனிதர்கள் யாரும் வரவில்லை.  அவளுடைய அம்மா அண்ணா தம்பிகள்தான் இரு குழந்தைகளை வளர்க்க úவ்ணடியிருந்தது.  ஏன் நம் பெண்கள் ஒரு நொடிப்பொழுதில் நிராதரவாகப் போய் யார்யாரோ தயவிலோ நிற்க வேண்டி வந்து விடுகிறது.  படிப்பு இல்லை என்று சொல்லலாம்.  படித்து விட்டால் மட்டும் எல்லா வசதிகளையும் பாதுகாப்பும் பெற்று விடமுடிகிறது (பக்கம் 63-64).  
அவளுடைய நார்மடியின் கிழிசல்களை தைத்துக்கொள்ளக்கூட ஊசிநூல் கிடையாது (பக்கம் 30).  ஆனால் அப்படி ஒரு விதவையால் வளர்க்கப்பட்ட அண்ணன் சுந்தரம் கடைசி அத்தியாத்தில் டெபுடி மானேஜராகப் பதவி உயர்வு பெறுகிறாள்.  ஒரு வருடம் மேற்பயிற்சிக்காக அமெரிக்கா போகிறான்.
ஹார்மோனியம் என்று இன்னொரு கதை.  கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றது.  இந்தத் தகவல் இந்த நூலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.  இது சிறுகதைதானா?  ஆங்கில எழுத்தாளர்கள் Charles Lamb, J B Priestly, Ronald Knox, Robert Lynd, G K Chesterton  எழுதும் கட்டுரைகளைப்போல் உள்ளது.  இந்தக் கதையல்லாத கதையில் சைகல், பங்கஜ் மல்லிக், ஜ÷திகாராய், கே.சி.டே வருகிறார்கள்.  ரவீந்திரத் வருகிறார்.  அவருக்கு ஹார்மோனியம் பிடிக்காது. ஜவஹர்லால் வருகிறார்.  அவருக்கும் ஹார்மேனியம் பிடிக்காது.  அவரைப்பற்றி அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் ஆசிரியர்.  =எவ்வளவோ விஷயங்களும் தெரியவில்லை.  அவர் இலக்கியவாதி என்று பெயர்.  ஆனால் பக்கம் பக்கமாக எழுதிய அவரால் ஒரு இலக்கிய மேற்கோளைப் பளிச்சென்று கூற முடியாது.  (பக்கம் 128).  அமெரிக்கா கவிஞரின் (Robert Frost) மேற்கோளை தன் மேஜை மீது வைத்திருந்த பண்டித நேருவுக்கு இந்த இழுக்கு தேவையா?  The Woods are lively, dark and deep and I have miles to go before I sleep.  Discovery of India and Glimpses of World History  எழுதிய மேதை அவர்.  காலம் சென்ற பிரதமர் நரசிம்மராவ் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.  காலம் சென்ற தமிழ் எழுத்தாளர் ஜெயரதன் தமிழில் தந்துள்ளார்.  
ஆர்.கே நாராயணனுக்கு ஹார்மோனியம் பிடிக்காதாம்.  பாரதிக்கு ஹார்மோனியம் பிடிக்காதாம்.  கதையின் கடைசி வரிகள் கடவுள் ஹார்மோனியத்திலேயே இருக்கிறார். அத்வைதி அசோகமித்திரனுக்கு கல்கி பரிசு கொடுத்தது சரிதான்.
இன்னொரு கதை நண்பனின் கதை.  சீரும் சிறப்பும் நல்லெண்ணமும் உலகுக்கு ஒவ்வாத மனப்போக்கும் கொண்ட அவர் பஸ் ஓட்டினார்.  பெரிய வீட்டைக் கட்டினார்.  ஏராளமானோருக்கு அன்னமிட்டார்.  இப்போது இருண்ட அறையில் எங்கோ மூலையில் கிடக்கிறார். (பக்கம் 132).  பஸ் ஓட்டியவர் எங்கள் பேட்டையிலேயே மிகப்பெரிய பங்களா கட்டியவர்.  ரத்த பேதி வந்து தரையில் ஒர பழைய வேட்டி விரிப்பில் படுத்திருக்கிறார்.  ஒரு மகள்தான் இப்போது பக்கத்தில் இருக்கிறாள். (பக்கம் 37) கூறியது கூறல் என்ற குற்றச்சாட்டுக்கு அமி அளாகிறார்.  இதே கருவை ஐரோப்பிய எழுத்தாளர்கள் 300இ 400 பக்க நாவலாக்கி இருப்பார்கள். 
ஜெயமோகன் அசோகமித்திரன் பற்றி எழுதியுள்ளதை இங்கு நினைவு கூறுகிறேன்.  அசோகமித்திரனின் படைப்புலகம் ஏறத்தாழ முழுமை கொண்டது.  மன நிறைவு தருவது.  நீண்ட காலம் ஒருவர் தன் கலையின் சாத்தியங்களைப் பயன்படுத்தும்போது உருவாகும் பலவிதமான நுட்பமான வண்ண வேறுபாடுகளும் அழகுகளும் கொண்டது.  நவீனத் தமிழ் குறித்து நாம் பெருமிதம் கொள்ளச்செய்யும் படைப்பாளி அசோகமித்திரன்.  பாரதிய ஞானப்பீடப் பரிசுக்கு அவரைச் சிபாரிசு செய்ய வேண்டியது தமிழில் ஈடுபாடுக் கொண்ட அனைவரும் முயற்சி எடுக்க வேண்டியது.

சி சு செல்லப்பா…..

சி சு செல்லப்பா…..                                         
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.  இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி.  இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  
க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள்.  இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள்.  க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர்.  சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள்.  க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன்.  அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே சென்றது.   ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி சு செல்லப்பா பங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டேனே தவிர,  பங்களுரில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியும் நான் செய்ததில்லை  சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான்.   அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.  
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு.  இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.  
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றை சொல்லியிருக்கிறார். “நாமதான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  அதேபோல் படைப்பிலக்கியவாதியான நாமே புத்தகவிமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்வார்.  இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது.  ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார்.  ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது ஈழ்ர்ல்ர்ன்ற்ள் பற்றிய நாவல் என்று.  அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது.  அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார்.  இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார். 
சி.சு செல்லப்பா அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்: 
“தரமான இலக்கிய படைப்புகளை சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.  
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.  
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன்.  அக்கூட்டம் திருவல்லிக்கேணி பெரியதெருவில்தான் நடந்ததாக ஞாபகம்.  அங்கு அப்போது இருந்த எழுத்தாளர் சங்கக் கூட்டம் என்று நினைக்கிறேன்.  சி சு செல்லப்பா கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார்.  எளிமையான தோற்றத்தில் இருந்தார்.  ஒரு எழுத்தாளர் தோரணை எதுவுமில்லாமல் சாதாரணமாக இருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு பல எழுத்தாளர்கள் வருவார்கள்.  அவர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்காக வருவார் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.
சி சு செல்லப்பாவை அன்று பார்க்கும்போது அவர் சாதாரணமாகத்தான் தென்பட்டார்.  ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது.  க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்றும் நான் நினைத்துக் கொண்டேன்.  
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது கிடைத்தது.  அதை வாங்கிக்கொள்ள மறுத்தார்.  வெளி ரங்கராஜன் முயற்சியால்தான் இது நடந்தது.  அவர் பரிசுத் தொகையை வாங்க மறுத்தாலும், அந்தத் தொகையில் ஒரு புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார்.  சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர்.  பரிசு கொடுக்கும் நோக்கத்தை யும் அவர் சந்தேகப்படுவார்.  வேடிக்கையான மனிதர்.  
என் சிறுகதை பாணி என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் ரங்கராஜன் மூலமாகத்தான் உருவானது.  அப் புத்தகம் ஒட்டி ஒரு கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.  அக்கூட்டம் சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார்.  எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை 
30க்களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம் 
எழுத்து பத்திரிகை மூலமாகத்தான் உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது.  அதனால் சி சு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய இதழாக உள்ளது.  .இது சி சு செல்லப்பா அறியாமலேயே நடந்த ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்தரிகைக்கும்  ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார்.  இப்போது அது உடைந்து போய்விட்டது.  
இன்றைய நிலையோ வேறு மாதிரி.  ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது.  மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது.  ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை.  பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்ùக்னறு ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.  
இன்றைய காலக்கட்டத்தில் சி சு செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும்.  எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையை எடுத்து நடத்த முடியுமா வெற்றிகரமாக? சந்தேகம்தான்.  வாசகர்களைத் தேடி நாம்தான் ஓடிப்போகவேண்டும்.   
தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல்  இல்லை.  80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே  இல்லை.  அவருடைய புதல்வருடன் பங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.  
ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய =சுதந்திர தாகம்+ என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  யாரும் அப்புத்தகத்தைக் கொண்டு வர துணியவில்லை.  
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  அப்புத்தகம் 1000 பக்கங்களுக்கு மேல் என்பதோடல்லாமல், அப்புத்தகம் விற்பனை ஆகுமா என்றெல்லாம் பதிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.  
சி சு செல்லப்பா எழுத்து பிரசுரமாக தானாகவே அப் புத்தகத்தைக் கொண்டு வரலாமென்று முடிவெடுத்தார்.  84 வயதில் சி சு செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது.  இந்தக் கட்டத்தில் நானும் சி சு செல்லப்பாவிற்கு புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன்.  மணி ஆப்செட்காரர் சி சு செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார்.  தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என கொண்டு வந்தார்.  அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.  
அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாக பல பத்திரிகைகள் அப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன.  இந்தியா டுடே என்ற பத்திரிகை அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது. 
புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார்.  வீடு முழுவதும் பரண் மீது அப்புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது.  அவர் வீட்டில் அப் புத்தகக் கட்டைப் பார்க்கும் கதி கலங்கும்.  
ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம் =பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அப்புத்தகம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வந்து விடப் போகிறது,+ என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது.  ஆனால் அது பொய்த்து விட்டது.  3 பாகங்கள் கொண்ட அப்புத்தகம் விலை ரூ.450.  அதை ரூ.100 கிடைக்கும்படி செய்தேன்.  எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று அப் புத்தகப் பிரதி இல்லை.   க.நா.சுப்பிரமணியம் கூட அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார்.  அந் நாவல் விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி அப் புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் சி சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  என் அலுவலகம் கடற்கரை சாலையில் இருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.  
அவரை அழைத்துக் கொண்டு போய் நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்து பதிவு செய்தோம்.  ஆனால் அதற்கு நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  வருத்தம்.  இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, =எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கு, பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன் என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார்.  இன்னொன்றும் சொல்வார்.  இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று.  எனக்கு கேட்கவே பக்கென்று இருக்கும்.
அவரும் அவர் மனைவியும் அந்தத் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பேன் போடக்கூடாது.  ஆனால் அவர் மனைவிக்கு பேன் வேண்டும்.  
சி சு செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.  
ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள்.  ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள்.  அவரை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தார்.  நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன்.  
கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை. 
சி சு செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான் பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம்.  கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.  எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.  நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன்.  அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.  கேட்பதற்கு எனக்க என்னவோபோல் ஆகிவிட்டது.  அடுத்தநாள் எனக்கு அவரிடமிருந்து போன்.  ‘நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன்.  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,’ என்று.  இதுதான் செல்லப்பா.
லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுருக்கிறார்.
மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது.  மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார்.  மௌனி கதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார்.  பி எஸ் ராமையா அவருடைய குரு.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார்.  சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு.  அப் புத்தகம் பேர்.  ராமையாவின் சிறுகதைப் பாணி.  ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனம் புத்தகம் யார் படிப்பார்கள்.  
எழுத்து பத்திரிகையில் முக்கியமான விமர்சகர் பிரமிள்.  அவர் படுத்தப் படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி சு செல்லப்பா வந்திருக்கிறார்.  அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.  ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  கனகசபாபதி, ந. முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ் வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.  
சி சு செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எதாவது சுவாரசியமாகப் பேசுவார்.  ஒரு முறை க.நா.சுவைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டார்.  சி சு செல்லப்பாவின் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம்.  அந்த வீட்டின் சொந்தக்காரர்  சி சு செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்தார்.  ஒரு முறை வீடை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம்.  வீட்டில் ஒன்றுமில்லையாம்.  வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம்.  சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீடை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம்.  இதை சி சு செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாக சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும்.  எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்துப் போயிருக்க முடியும் என்று.  
சி சு செல்லப்பா மரணம் அடையும் தருவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரம் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையில் இருந்தார்.  ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம்.  ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விஜாரிப்பாராம்.
  
தகழி என்ற படைப்பாளிக்கு சமமான சி சு செல்லப்பாவிற்கு எதுவும் நடக்க வில்லை.  சி சு செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர்.  கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர்.   தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்பணித்தவர்.  அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார்.    அவருக்கு உரிய மரியாதையைக் நாம் கொடுக்க தவறி விட்டோம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 
(19.01.2013 அன்று சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்த சி சு செல்லப்பாவின் 100வது ஆண்டு குறித்து எழுதி வாசித்தக் கட்டுரை)

  

நவீன விருட்சம் 92வது இதழ்


நவீன விருட்சம் 92வது இதழ் வெளிவந்துவிட்டது.    படைப்புகள்வெளிவந்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1.கோட்டுப்பையும் குடிசைத் தொழிலும் – லாவண்யா   2
2. பிரமிடுகள் – கவிதை – லாவண்யா 3
3. க.நா.சு – கவிதை – எஸ் வைதீஸ்வரன் 4
4. கூழாங்கற்கள் – கவிதை – ராமலக்ஷ்மி 6
5. ஐராவதம் பக்கங்கள் 7
6. நதி ஈந்த எறும்பு – ந. பெரியசாமி 10
6. ஹலோ – சிறுகûú- அழகியசிங்கர் 11
7. நதியும் நானும்….- மொ.கவிதை 14
8. எனக்குப் பிடித்த முன்னுரை 15
9. கல் எறிந்தவர்கள் – ரவி உதயன் 19
10. வட்டம் – கவிதை – கணேஷ் 20
11. தோற்பாவைக் கூத்து – சின்னப்பயல் 21
12. அசோகமித்திரன் பக்கங்கள் 23
13. இரு கவிதைகள் – அழகியசிங்கர் 26
14. மரணப்படுக்கையில் வயதான பெண்மணி
                            – குமரி எஸ் நீலகண்டன் 27
15. இரவு விழித்திருக்கும் வீடு – எம் ரிஷான் ஷெரீப்  29
16. பூனைகள் உலகம் – ஐயப்பன் கிருஷ்ணன் 30
17. நகுலனைப் பற்றி சில குறிப்புகள் – அழகியசிங்கர்  33
18. காக்கைச் சிறகினிலே – செல்வராஜ் ஜெகதீசன் 40
19. மிதக்கும் பல்லி – அ. இந்திரா காந்தி 44
20. விருட்சம் புத்தக விளம்பரம் 45
21. எல்லாருக்குமான நதி – கவி 47
22. கடவுளின் குரல் – ரவி உதயன் 47
23. நதி இலை எறும்பு – செ. சுஜாதா 48

மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் நவீன விருட்சம் இதழைப் பெற முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எதையாவது சொல்லட்டுமா…80

எதையாவது சொல்லட்டுமா…80

அழகியசிங்கர்

 சி சு செல்லப்பாவை முதன் முதலாக நான் கநா.சு இரங்கல் கூட்டத்தில்தான் சந்தித்தேன்.  அக் கூட்டம் கணையாழி என்ற பத்திரிகை நடத்தியது என்பது ஞாபகம்.அவர் கொஞ்சம் சத்தமாகவும், கோபமாகவும் பேசியதாக என் நினைபபு.  யாருக்குமே ஒரு புத்தகம் படிக்கிறோமென்றால் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளரையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம்  ஏற்படுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.  புத்தகத்தில் படித்த மாதிரி அந்த எழுத்தாளர்  தெரிய மாட்டார். 
 அதேபோல் க.நா.சுவையும் மௌனி இரங்கல் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன்  மௌனியை சிதம்பரம் சென்று பார்த்துவிட்டு வந்ததை என் எழுத்தாள நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.  குறிப்பாக பிரமிள் மௌனி வீட்டிற்கு சென்று பார்த்ததை புள்ளி விபரமாக  கூறுவார்.  என்னமோ நேற்றுதான் அவரைப் போய்ப் பார்த்ததுபோல் இருக்கும் அவர் பேச்சு.
 நானும் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு எந்தவித பிரமையும் இப்போது ஏற்படுவதில்லை  அப்போதெல்லாம் எனக்குப் பிரமை இருந்தது.  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் உறவினர் கல்கண்டு என்ற பத்திரிகையைப் படிக்கச் சொல்வார்.  அந்தப் பத்திரிகையில்தான் எந்த ஆபாசமும் இருக்காது என்றும் குறிப்பிடுவார்.   அந்தப் பத்திரிகையைப் படிக்கும்போதுதான் எனக்கு தமிழ்வாணனைச் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது.  நான் இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் பேச வருகிறார் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.  நான் முதன் முதலாக மேடையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் நிகழ்ச்சி அது.  
 அன்று கூட்டம் அதிகம்.  கருப்பு கண்ணாடி அணிந்து தமிழ்வாணன் இருந்தார்.  கூட்டம் முடிந்து அவர் நடந்து வரும்போது, பலர் அவரிடம் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டு நோட்டுப் புத்தகம் எல்லாம் நீட்டினார்கள்  நானும் ஒரு தாளில் அவருடைய கையெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன்.  
 எழுத்தாளர்களை மட்டுமில்லை சினிமா நடிகர்களை, நடிகைகளைப் பார்க்க வேண்டுமென்று பலருக்குத் தோன்றும்.  அதேபோல் கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க ஒரு கூட்டம் நிற்கும்.    பிரபலமானவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது வழக்கம்.இதுமாதிரியான பிரமைகள் ஒரு கட்டத்தில் நம்மை விட்டுப் போய்விடும்.  
 நான் உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொணடிருந்தபோது, வங்கித் தலைவரிடமிருந்து  கிளை மேலாளருக்கு போன்.   உடனே எங்கள் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பிரபலமான நடிகர்  என்.டி ராமராவ்  வீட்டிற்குப் போகும்படி உத்தரவு. அப்போது என்.டி.ஆர் கட்சி என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை.  அவர் புதியதாக கணக்கு ஆரம்பித்தார். 
 கிளை மேலாளர் என்னை அழைத்துக்கொண்டு போனார்.  என்டிஆர் வீட்டிலுள்ளவர்கள் எங்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார்கள்.    அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆந்திராவிலிருந்து ரசிகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்டிஆர் பால்கனியிலிருந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.  ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள்.  இந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது.  ஆனால் பிரபலமானவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது.  அவர்கள் சாதாரணமானவர்கள் மாதிரி அவர்கள் வசிக்கும் இடத்தில் நடந்து போக முடியாது.  ரஜனிகாந்த் என்னுடன் 12 ஜி பிடித்து திருவல்லிக்கேணி வர முடியாது.  அந்த சுதந்திரம் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கிறது.
கல்லூரி நாட்களில் என் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும் நா. பாரத்தசாரதியும்.  ஒருமுறை ஜெயகாந்தன் கூட்டமொன்று ஆலந்தூர் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்தது.  வந்திருந்த ஜெயகாந்தன் தலையில் பாரதியார் மாதிரி முண்டாசு கட்டியிருந்தார்.  பின் உரத்த குரலில் கூட்டம் நடத்துபவர்களையே ஒரு சாடு சாடினார்.  அவர் உரத்த குரலில் பேசுவது எனக்கு ஒருவிதமாகப் பட்டது.  நானும் அதுமாதிரி பேசிப் பார்க்கலாமென்று நினைத்தேன்.  முயற்சி செய்து பார்த்தேன்.  என்னால் அது முடியாது என்று தோன்றியது. 
   
 இந்தச் சமயத்தில் நகுலன் என்ற எழுத்தாளர் ஞாபகம் வருகிறது.  அவரால் ஒரு கூட்டத்தில் அமர்ந்துகொண்டு உரக்கப் பேச முடியாது. யாரைப்பார்க்கிறாரோ அந்த ஒருவருடன்தான் அவர் பேச முடியும்.  அவர் பேசுவது அந்த ஒருவருக்குத்தான் கேட்கும்.  
 நா பார்த்தசாரதியை நான் இரண்டு சந்தர்ப்பத்தில் பார்த்தேன்.  முதல் சந்தர்ப்பத்தில் அவர் அகில பாரதிய வித்தியார்த்தி அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு கூட்டத்தில் தலைமை தாங்க வந்தார்.  கம்பீரமான தோற்றம் கொண்டவர்.  அவரைப பார்த்தால் சினிமாவில் ஹீரோவாக நடித்திருக்கலாமென்று தோன்றும். பெரியார் கலந்துகொண்ட கடைசிக் கூட்டம் அது. பெரியார் இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்தார்.  பெரியார் திடலிலிருந்து பெரியாரின் தொண்டர்களும், கோஷமிட்டார்கள்.  அவருக்கு எதிராக நாங்களும் நா பாவின் தலைமையில சத்தம் போட்டோம்  
 இரண்டாவது சந்தர்ப்பம் நா.பா மரணம் அடைந்தபோது.  என் உறவினர் நா.பா வின் விசிறி.  அவருடைய ஒரு கதையைக் கூட நா.பா மாதிரி என் உறவினர் எழுதியிருப்பார் என்பது என் எண்ணம்.  அவர் வற்புறுத்தலின்பேரில் நா.பா வீட்டிற்குச் சென்றோம்.  ஒரு அறையில் நா.பாவை படுக்க வைத்திருந்தார்கள்.  அந்த அறையில்  அடர்த்தியான கூந்தலுடன், நல்ல உயரமான சற்று பருமனான நா.பாவின் மரணமடைந்தத் தோற்றததைப்  பார்க்க நடுக்கமாகத்தான் இருந்தது. மாலை நேரத்தில் நாங்கள் பார்த்த சமயத்தில் யாரும் கூட அங்கு இல்லை.
 என் பிரமையை ஒழித்துக் கட்டியவர்கள் என் வேறு சில எழுத்தாள நண்பர்கள்.  பலவிதங்களில் சாதனை புரிந்தவர்கள்.  ஆனால் அவர்கள் என்னைப்போல் சாதாரணமானவர்கள்.  எந்தவித பந்தா இல்லாமல் அவர்களை எளிதில் சந்தித்து உரையாட முடிந்தது.  
 க.நா.சுவை ஒரு சிறிய வாடகை வீட்டில் மயிலாப்பூரில் சந்தித்திருக்கிறேன்.  அப்படி சந்திக்கும்போது நம் வீட்டிலுள்ள பெரியவர் ஒருவரைச் சந்திப்பதுபோல் சந்தித்து உரையாடியிருககிறேன்.  பந்தா எதுவுமில்லாத எளிமையான மனிதர்.  ஒருமுறை நான், அவர், இன்னும் சில இலக்கிய நண்பர்களெல்லோரும் சேர்நது மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றிருக்கிறோம்.
 எழுத்து பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய சி.சு செல்லப்பாவை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.  இலக்கியச் சந்திப்பு வருடாந்திர கூட்டமொன்றில் சி சு செல்லப்பா ஒவ்வொரு பதிப்பாளரையும பார்த்து, அவர் சுதந்திர தாகம் என்ற நாவலைப பிரசுரிக்க மன்றாடியதை நான் அறிவேன்.  அதன்பின் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சுதந்திரதாகம் மூன்று பாகங்களையும் சி சு செல்லப்பா கொண்டு வந்தார். அதைக் கொண்டுவர நானும் அவருக்கு பக்கப்பலமாக இருந்து உதவி செய்திருக்கிறேன்.  
 நூறாவது ஆண்டை கடந்த க.நா.சு, சி சு செல்லப்பாவை நாம் மறக்க முடியாது.  அவர்கள் பிரமையை ஏற்படுத்தாதவர்கள்.  
(Appeared in Amrudha January 2013 issue)