அகிலாண்டேஸ்வரி

ஒருவரைப் பார்க்கப் புறப்படத் தெருவில் வந்தேன்
எதிரே தென்பட்ட அஞ்சல் ஊழியர்
அஞ்சல் அட்டை ஒன்றைத் தந்தார்.
அட்டையின் மூலையில் மஞ்சள் தடவி
இருந்ததால் நல்ல சகுனம் என்றதைப் பார்த்தேன்.

அஞ்சல் அட்டையைப் படித்துப் பார்தேன்.
கைகால் எல்லாம் உதறத் தொடங்கின.

‘அகிலாண்ட கோடி ஆனந்த மாரியின்
அடியவன் எழுதும் பக்தி லிகிதம்.
அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக
என்று பத்துத் தடவை
இதுபோல் எழுதி இன்றே
5 பேருக்கு அனுப்பி வையுங்கள்
இந்தியன் போஸ்டல் செர்வீசைவிடக்
கூரியர் செர்வீஸ் நல்லது.
அனுப்பினால் உங்களுக்கு லாட்டரி சீட்டில்
5 லட்சம் பரிசு விழும். அல்லது
நீண்ட காலமாய் வசூலாகாத
பெரிய கடன் உடனே திரும்பும்
பதவி உயர்வு ட்ரான்ஸ்பரும் கிடைக்கும்.
சொன்னதுபோல செய்யத் தவறினால்
சொந்தக்காரர் செத்துப் போவார்.
பெண்டாட்டிக்கு மாதக் கடைசியில்
ஆஸ்த்துமா தொந்தரவு கூடும்.
தெருவிலே கல்யாணமாகாத ஒரு பெண்
கர்ப்பமானதற்கு நீதான் காரணம்
இப்படி வதந்திகள் கிளம்பும்.
தாமதம் செய்யாமல் எழுதுங்கள்
ஐந்தே ஐந்து பக்தி லிகிதங்கள்
அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக.

சொந்தக்காரர் சாவைக் காட்டிலும்
தெருப்பெண் கர்ப்பம் பற்றிய செய்தியால்
எனக்குப் பயத்தில் வேர்த்துக் கொட்டியது.
ஐந்து அஞ்சல் அட்டைகளில் எழுதினேன்.
பக்கத்து வீட்டு எழுத்தாளரிடம் தந்தேன்
ஐந்து பேர்களின் முகவரி கேட்டேன்.
மளமள மளமளவென்று எழுதிக் கொடுத்தார்
முதலாவது மனிதர் :
சாகித்திய அகாடமி தலைவர், டெல்லி
இரண்டு :
தமிழக முன்னாள் முதல்வர்
மூன்று :
கோமதி பிரசுரம். திருக்கண்ணரசு
சென்னை 1
நான்கு :
இரா. கதைப்பித்தன், மதுரை
ஐந்தாம் அட்டையை பார்க்கவில்லை நான்.
ஆசிரியர், தினமணி என்றிருக்குமோ?
பெட்டியில் அட்டைகளைப் போட்டுவிட்டுத்
திரும்பி நடந்தேன்
எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காமல்.

தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளி ஞானக்கூத்தன் அவர்கள். அவருடைய இரு புத்தகங்களான ஞானக்கூத்தன் கவிதைகள், பென்சில் படங்கள் என்ற கவிதைத் தொகுதிகள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. மேலே குறிப்பிட்ட கவிதை பென்சில் படங்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானக்கூத்தன் கவிதைகளில் பெரும்பாலும் அங்கத உணர்வுடன் கூடிய கவிதைகளைக் காணலாம். அங்கத உணர்வுடன் கூடிய ஆழமான உணர்வுகள்தான் அவர் கவிதைகள். தொடர்ந்து இக் கவிதைகளில் சிலவற்றை இங்கு பிரசுரம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.

ஜானகிராமன் படைப்புகள் ஒரு பார்வை

எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதில் இருந்தார். கிட்டத்தட்ட தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ நாவல்களையும் படித்தேன். பின்பு ‘மோகமுள்’ என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாடை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் ‘அடல்டிரி’ விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. ‘அம்மா வந்தாள்’ நாவலில் பூடகமாகவும், ‘மரப்பசுவில்’ பகிங்கரமாகவும் வெளிப்படுகிறது. பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது. ஆண் þ பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார். நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைசள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்ப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு குபாராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்þபெண் உறவின் அதீதப் போக்கைஙுமுரண்பாட்டை குபாரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை. அதே பாணியை ஜானகிரமான் ஸ்வகரித்துக் கொண்டவர். குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார். அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன். ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது.
அவர் நாவல்களை மட்டும் படித்து பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை. அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
1956ல் எழுதிய ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையிலிருந்து 70 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்கும்போது, எனக்கு மலைப்பே ஏற்பட்டது. முழு தொகுப்பை என்னால் படித்து முடிக்க முடியவில்லை. ஆனால் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 200 பக்கங்களைத்தான் படிக்க முடிந்தது. அத்தனை கதைகளிலும் அடிநாதமாக ஒரே ஒரு விஷயத்தைத் திரும்ப, திரும்ப ஜானகிராமன் சொல்லிக்கொண்டே போகிறார். மனித உறவுகளிடையில் உண்டாகும் ‘துரோகம்’தான் அவர் சிந்தனையில் பெரும் பங்கு வகித்துள்ளது. அத் துரோகத்தை விதம்விதமாக விவரிப்பதில், பெரிய சாதனையாளராக உள்ளார்.
துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கதைகள்எழுதினாலும், ஏமாற்றுபவர்/ஏமாற்றப்பட்டவர் என்ற இரண்டு முனைகளில் ஏமாற்றப்பட்டவர் சாத்விகமான முறையில், துரோகத்தை/ஏமாற்றத்தை எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக்கொள்வது இவர் கதையின் உத்தி. ஆனால் விதிவிலக்காக சில கதைகளில், ஏமாந்தவர், வேறுவிதமாகவும், ஆனால் பழி தீர்க்கப்பட்டது என்ற உணர்வு வெளியே தெரியவராமல், செயல்படவும் செய்கிறார்.
உதாரணமாக, 1956 ஆம் ஆண்டு எழுதிய ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையில், துரைய்யாவை சின்னசாமி கங்கையில் சந்திக்கிறார். இதில் சின்னசாமி துரைய்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர். உண்மையில் சந்திப்பு நடக்கவில்லை. துரைய்யா தங்கியிருக்கும் இடம் தெரிந்து, சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாதென்ற பதைப்பு சின்னசாமியிடம் ஏற்படுகிறது. சின்னசாமி திருப்பித்தர வேண்டிய பணத்தைக் கொடுத்தும், கொடுக்கவில்லை என்று சாதித்தவர் துரையப்பா. மேலும், பணத்தைப் பெற சின்னசாமி மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பணத்தை வலுகட்டாயமாக பெற்று விடுகிறார். இது சின்னசாமி மனதில் ஏற்பட்டுள்ள மாறாத வடு. அவமானம். இந்த ‘துரைய்யப்பா’வை சந்திக்காமல், அவர்கள் இருந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. இக் கதையில் வெளிப்படுகிற துரோகத்திற்கு தீர்வாக, சின்னசாமி மனைவி அளிக்கிறாள் தீர்ப்பு.
“அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ,” என்பதுதான் தீர்ப்பு.இக் கதையில் முரண்பாடாகத் தெரிவது துரைய்யாவின் பாத்திர அமைப்பு. கதையில் முன் பகுதியில் துரையப்பாவைப் பற்றி பேசும்போது, இப்படி எழுதப்படுகிறது. ‘துரையப்பா பெரிய மனுஷன். பெரிய மனுஷ்யன்தான் எவ்வளவு மரியாதை….விட்டுக் கொடுக்கிற தன்மை. சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது துரைய்யாவின் அன்னதானத்தைப் பற்றிதான் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். யார் எப்போதும் போனாலும் துரைய்யா வீட்டில் சாப்பாடு கிடைக்கும். ‘அன்னதாதா, அன்னதாதா’ என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும் சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கும். எப்போது ரயிலில் போனாலும் அதைப் பற்றிப் பேசுகிற ஒரு பிரயாணியாவது பார்க்க முடியும் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற துரைய்யா, இறுதியில் சின்னசாமியை ஏமாற்றுகிறார். இது மாதிரி பல ‘கதா பாத்திர முரணை’ கதைகளில் வெளிப்படுத்துகிறார் தி ஜானகிராமன். ‘வீடு’ என்ற ஒரு கதை. இது சற்று நீளமான கதை. குறுநாவல் என்று சொல்லலாம். ஜானகிராமன் நாவல்களைப் படித்த அனுபவத்தில், இக் கதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறாரென்பது தெரிந்து விடுகிறது. வாசகனை முதலில் அவர் வீடு விற்க தயாராக இருப்பதுபோல் காட்டுகிறார். ஆனால் கதை வீடு விற்பது பற்றியல்ல. மகாதேவன் என்பவன் நயமாகப் பேசி டாக்டரின் கம்பவுண்டராகச் சேர்கிறான். காம்பவுண்டராக மட்டுமல்லாமல், அவர் வீட்டிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். அவன் உதவிகளைக் கொண்டு புளாங்கிதம் அடைகிறார் டாக்டர். ஆனால் அவர் மனைவியிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறான். இதை அறிந்த டாக்டர், அவனை நையப் புடைத்து, உதைத்து அனுப்புவதற்குப் பதிலாக பூடகமாக துரத்தி விடுகிறார். அவர்களுடைய கள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும்படி வருகிறது. டாக்டரின் மனைவி அவரை விட்டுப் போக விரும்புகிறாள். டாக்டரிடம், வீட்டையும், சாப்பிட எதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்கிறாள். டாக்டர் மறுத்து விடுகிறார். அவர் இருக்கும்வரை இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்கிறார். வீடை விற்றுவிடுவதாக சொல்பவர், கடைசி வரை வீட்டை விற்காமலிருக்கிறார். இறுதியில் மகாதேவனுடைய சாவுடன் கதை முடிவடைகிறது. இக் கதையில் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கப் படுவதாகப் படுகிறது. துரோகத்திற்கு எதிராக துரோகம் செயல்படுகிறது. சங்கிலி தொடர் மாதிரி துரோகம் எல்லோரையும் பிணைத்து விடுகிறது. வெளிப்படையாக இல்லாமல், பூடகத்தன்மையுடன் கதையை எடுத்துச் செல்வதில் ஜானகிராமன் வெற்றி பெறுகிறார்.
ஜானகிராமன் எழுத்து நடை கு ப ராஜகோபாலனிடமிருந்து ஸ்வகரித்த நடை. கதை பாணியும் கு ப ராவைப் போல் பூடகத்தன்மை வாய்ந்தது. ஜானகிராமன் குபாராவிற்குப் பிறகு வளர்ந்த ஒரு பெரிய எழுத்தாளர். பலவிதங்களில் சாதனைப் புரிந்தவர். இன்றைய படைப்பாளிகளுக்கு அவர் எழுத்து நடையின் மிடுக்கு 2001þல் படிக்கும்போது கூட ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அவர் கதைகளில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுத்துப் போடுவதல்ல. மனித உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அவருடைய ஆராய்ச்சி. அதாவது, மனிதனின் ‘உள்முரணை’ வெளிப்படுத்துவதுதான் கதையின் வெற்றியாகக் கொண்டு வருகிறார்.
இன்று ஜானகிராமனின் வாசகராக இன்றும் பல எழுத்தாளர்கள் தோன்றி உள்ளார்கள். உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். ஜானகிராமனைப் படிக்கும்போது, ஒருவித உற்சாகம் ஏற்படுகிறது. ‘இவ்வளவு எழுதி இருக்கிறாரே’ என்ற உற்சாகம்தான் அது.

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்
கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்
ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா
உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா
காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு
கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு
துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும்
தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம்

அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும்
ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும்
கண்ணு போன பெரியாத்தா
ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா
பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு
பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு

வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம
சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக
ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன
தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன
சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல
நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல

மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்)
என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன.
பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன்
பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன்
கூத்துக் கேலி கும்மாளத்தோட
காதலும் வந்து சேந்துக்கிட
வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு
கேட்டுப்புட்டான் கேள்விய பட்டுன்னு
வீட்டுச் சம்மதம் வாங்கியாரேன்
கெடைக்காட்டி உங்கூட ஓடிவாரேன்ன்னு
சொல்லிப்புட்டு அழுது வடிச்சேன்
கண்ணீரோடு ஐயா பாசம் கொஞ்சம் கரைச்சேன்
படிச்சு முடிச்சு ஊரு வந்தே(ன்)
பாசம் கொஞ்சம் மறந்து வந்தே(ன்)

எப்படித்தான் புரிஞ்சுதோ பாவிமக நெனப்பு
கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச எனக்கு
பொண்ணு பார்க்க வருவாகன்ன
சீக்கிரமே கல்யாணம்ன்ன
மொத மொதலா என் மனசு முழுசா
அம்மாவத் தேடி அழுதுச்சுப் புதுசா
சீவி முடிச்சு சேல உடுத்தி சிங்காரமா
வந்து நின்னேன் ஒரு பொணமா

காப்பி கொடுக்க குனிஞ்சு நின்னேன்
மாப்பிள்ள கைபடவும் துடிச்சுப் போனேன்
பதட்டத்துல மாப்பிள்ள மொகம் பார்த்தேன்
பாவிப்பய நான் காதலிச்ச பையதேன்
ஓடிவந்து உன்னைக் கட்டிப்புடிச்சு நானழ
ஆத்தா நீ அழாதடான்னு சொல்லி நீயழ
ஆத்தா நியாபகம் அழிஞ்சுடுச்சு எம்மனசுல
அப்பனாத்தா நீதான்னு கண்ணீர்விட்டேன் நிக்கல

ரொட்டியும் மீன்களும்

கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்

(81வது நவீன விருட்சம் இதழ் செப்டம்பர் மாதம் தயாராகப் போகிறது. இதழுக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். படைப்புகளை navina.virutcham@gmail.com மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். படைப்புகள் navinavirutcham.blogspot ல் பிரசுரமாவதுடன், பத்திரிகையிலும் பிரசுரமாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இன்னும் நண்பர்களை நவீன விருட்சத்திற்கு துணை சேர்க்கலாம் – ஆசிரியர்)

பச்சை விளக்கு சிவப்பு வெளிச்சம் !

இரண்டு பகலில்
ஒன்று இருண்டு போனது
இரண்டு சுடரில் ஒன்று
உருண்டு போனது
இரண்டு வாழ்வில் ஒன்று
துவண்டு போனது
இரண்டு வழியில் ஒன்று
புரண்டு போனது
விரும்பா வாழ்வில்
திரும்பாப் பயணம்
உருகித் திரும்ப
திரளும் மரணம்
தொலைந்த சாவி
நுழையும் பிரதிகள்
பூட்டுப் பழுதாகும்
நாளை நோக்கி
கதவின் தியானம்

வாயைக் கட்டி
வயிற்றைக் கழுவி
ஆடை மறைத்து
மானம் துறந்து
கற்பின் மேல் பக்தி
நெருங்க மனமில்லை
அதை விட்டே
ஓடிப் போகிறேன்
ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்
ஒருவர் தான்
நன்றி கடவுளே
வாழ்வு ஒன்று தான்
சாவும் ஒன்று தான்
நீயும் ஒன்று தான்…

சில குறிப்புகள் — 1

ஒரு புத்தகத்தை ஆழமாகப் படிப்பது என்பது இல்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் நேரம் கிடைக்காமல் போவது. தற்போது புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரமே கிடைக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி சிலவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. மேலும் புத்தகம் படிக்கும்போது இன்னார் எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், புத்தகத்தை விட புத்தகம் எழுதியவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி ஆகிவிடும். தமிழைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை உபதேசிப்பவர்களாக மாற்றி விடுகிறோம். பின் அவர்கள் எழுதுவது, பேசுவதெல்லாம் பிரமிப்பு கலந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். இந்த பிரமிப்பை முதலில் உடைக்க வேண்டும்.
ஒரு புத்தகக் கண்காட்சியின்போது, சமீபத்தில் அதிகமாக எழுதி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் பின்னால் ஒருவர் வால் மாதிரி தொடர்ந்து சென்றதைப் பார்த்தேன். என் பக்கத்தில் இருந்தவர், அது அவருடைய வாசகர் என்றார். என்னைப் பொறுத்தவரை ஒரு வாசகன் என்பவன் எழுத்தாளனை விட மேலானவன். அல்லது அவனுக்குச் சமமானவன். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களெல்லாம் அபிமானிகள். எனக்குத் தெரிந்து இந்த அபிமானிகள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் சினிமாவை மட்டும் பார்த்து சிலாகிப்பார்கள். அதேபோல் அரசியல் தலைவர்களுக்கும் இதுமாதிரி அபிமானிகள் உண்டு. இந்த அபிமானிகள் சினிமாவில் அதிகமாக இருந்தால், சினிமா கெட்டுப்போய்விடும். அரசியலில் அதிகமாக இருந்தால், அரசியல் கெட்டுப்போய்விடும்.
ஆனால் ஒரு வாசகன் என்பவன் அபிமானியாக மாறக்கூடாது. ஒரு எழுத்தைப் படிக்கும்போது அந்த எழுத்துமீது அபிமானம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் அதுவே அந்த எழுத்தாளன் மீது அன்பு செலுத்தும் வெறியாக மாறிவிடக்கூடாது. அந்த எழுத்தாளன் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு, மற்ற எழுத்தாளர்களை புறம் தள்ளுவது, அல்லது கேவலமாகப் பார்ப்பது போன்ற விஷயங்களை நாம் ஒதுக்க வேண்டும்.
ஒரு வாசகனாக இருப்பவன் எல்லாவற்றையும் சமஅளவில் பார்ப்பதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆர்.வி சுப்பிரமணியன் என்கிற என் நண்பர் ஒருவர், பி எப் அலுவலகத்தில் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாதவர். புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். 1979 வாக்கில் சில கவிதைகளை எழுதியவர். ஆனால் தான் எழுதிய கவிதைகளை அவர் எப்போதும் சிலாகித்துப் பேசாதவர்.
ஆதிநாதன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிப்ரவரி – மே 1979 ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்று என்ற சிற்றேட்டில் பிரசுரம் ஆனது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.
தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்
மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்டது போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.

மரணத்தின் பிரதிபலிப்பு

சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!
என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்
மணமான பின்னும் தொடர்ந்த காதலில்
இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது –
இருவருக்கும்தான்.
வாழ்க்கையின் சுவையும் ரசமும்
போயே விட்டதாக உணர்ந்தோம்.
தனியே ஒரு நாள் சந்தித்தோம்
நிறைய பேசினோம்
தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை
என்றெல்லாம் சொல்லியபோது
பெரிதாய் சட்டை செய்யவில்லை
தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்.

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய கவிதைகள் சில ழ வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன். ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன். என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார். கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து ‘ழ’ வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன். ழ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன. உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன. அதில் ஒரு புத்தகம், ‘கோட் ஸ்டான்ட் கவிதைகள்’. அதை எழுதியவர் நகுலன். அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன். ‘காகிதத்தில் கோடு’ என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார். அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன். ‘க்ரியா’ என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் ‘நினைவுப் பாதை’ என்ற நாவலை வாங்கினேன்.
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள். என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை. ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார். ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார். ‘படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,’ என்று. நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன். உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார். கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும். சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
நில் போ வா
வா போ நில்
போ வா நில்
நில் போ வா?

என்பதுதான் அக் கவிதை. விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன். இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன். நகுலன் எழுதியிருக்கிறார். அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன. ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர். அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர். கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்). எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்? அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.
நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார். அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள். நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்? இது கவிதையா என்ற கேட்டார். ‘விருட்சம்’ இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது. வந்தால் என்ன?’ என்றேன். ‘ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்றார் பிரமிள்.
பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.
அதில், ‘எந்துண்டி வஸ்தி?’ என்ற கவிதையில்,
‘நில் போ வா’
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி
இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன் இலையிலே ‘மரம்’
‘இதையே எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம் என்றால்
‘மர’ இலையில் வருமா இது?” என்றேன்.
பதில் இல்லை இன்னும்.
இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.
நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார். அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம். ஏன் தினமும்?
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக வர முடியாது. கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.
யாராவது அவருக்குத் துணை வேண்டும். அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார். ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.
நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன். என்னைப் பார்த்து, “நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை,” என்பார்.
‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன். அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார். வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.
ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன். நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன். பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.
நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது. அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார். கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார். ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார். அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார். அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்தும் பேசாமல் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன். நடந்துதான் போவோம். அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை ‘இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,’ என்று கேட்காமல் இருக்க மாட்டார். ‘ஆமாம்,’ என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.
ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார். ‘அவரைப் போய்ப் பார்க்கலாமா?’ என்று கேட்டேன். காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார்.
“என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்,” என்றேன்.
நகுலன் மறுத்து விட்டார். “பஸ்ஸில் போகலாம் வாருங்கள்,” என்றேன். அதற்கும் மறுத்துவிட்டார்.
“ஆட்டோவில் போகலாம்,” என்றேன்.
“அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது. வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்,” என்று கூறி விட்டார்.
கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன். ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது. நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம். பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம். பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும். புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல் கவிதைப் புத்தகம் விற்கவில்லை. பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது. ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். நான் அவர் பணத்தை ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..
இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது. விலை ரூ.12/-தான். நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைப்பேன். ‘நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,’ என்று ஒருமுறை குறிப்பிட்டேன். உடனே, நகுலன்,”நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது,” என்று குறிப்பிட்டார்.
அவருக்கு ஏனோ புரியவில்லை. நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது. ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
நண்பருக்கு,
வணக்கம். எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது. எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது. நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன். இனி எனக்கு மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம். உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன். அதுவும் என் கையில் இல்லை. இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது. வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை. உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
உங்களுக்கு நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும். என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
“நகுலன்”

மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும். நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

உயிரோவியம்..

ஓவியம் வரைந்துகொண்டிருந்த
அந்தக் கிழவனின்
கைகளில் சிறிதேனும்
நடுக்கத்திற்கான அறிகுறி
தென்படவில்லை.

புகை கக்கி இரைச்சலுடன்
செல்கின்ற வாகனத்தினாலும்
தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற
காக்கையினாலும் கலைத்துவிட
முடியவில்லை
ஓவியத்துள் கரைந்துவிட்ட
கிழமனதை.

பசித்தழும் குழந்தையின்
கண்ணீர்த்துளியில்
தெரிந்தது ஓவியத்தின்
நேர்த்தியும் கிழவனின்
ரசனையும்…

ஓவியத்தின் மீது
ஒற்றை ரூபாய் எறிகையில்
கரம் நடுங்கியதைக் கண்டு
அழுகை நிறுத்தி
ஏளனப் புன்னகை சிந்தியது
அக்குழந்தை.

வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது கை மோதிர விரலில் வைர மோதிரமொன்றை அணிந்திருந்தாள். தாங்க முடியாத ஜ்வலிப்புடன் அது காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
வைரமோதிரத்தின் ஜ்வலிப்பு அவள் நிறத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அவளுக்குப் போனவாரம்தான், திருமணம் நிச்சயம் ஆனது. அந்தச் சந்தோஷத்தை அவளுடைய வகுப்புத் தோழி ஒருவளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரைச் செல்லும் வண்டியில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். தி நகரில் இருக்கும் அவளுடைய நெருங்கிய தோழி என்ன காரணத்தாலோ அவள் திருமணம் நிச்சயம் செய்த நாளன்று வர முடியவில்லை.
பையில் கல்யாண நிச்சயம் ஆன புகைப்பட ஆல்பமும், ஒரு சீடியும் வைத்திருக்கிறாள். புறப்படும்போது அம்மாவிடம் அடுத்தநாள் வருவதாகச் சொல்லியிருந்தாள்.
பல மாதங்கள் முயற்சி செய்து இந்த வரன் கிடைத்ததால், அவள் அம்மாவிற்கும் மகிழ்ச்சி. அவளைப் போகும்படி சொன்னாள்.
பஸ்ஸில் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அவள் இருந்த இருக்கையில் அவள் மட்டும்தான் அமர்ந்திருந்தாள். பஸ் நேராகப் பல்லாவரத்திற்குப் போய் நின்றது.
வயதான மூதாட்டி ஒருவள் ஏறி இவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
மூதாட்டியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 75 வயதுக்கு மேலிருக்கும். இந்த வண்டியில் கிளம்பி எங்கே சென்று கொண்டிருக்கிறாளோ?
“உன் பேரென்னம்மா?” என்றாள் மூதாட்டி, அவளைப் பார்த்து.
“சுமதி.”
“புதுப்பெண் மாதிரி இருக்கியே?”
“ஆமாம்.”
“அப்படியா..நல்ல விஷயம். வாழ்த்துகள். எப்பக் கல்யாணம்?”
“செப்டம்பர் மாதம்.”
“மாப்பிள்ளை என்ன செய்யறார்?”
“சாஃப்ட்வேர் கம்பெனியில இருக்காரு?”
“நல்ல சம்பளமா?”
“உம்….உம்…”
“நீ என்னப் படிச்சிருக்கே?”
“பிசினஸ் மேனேஜ்மென்ட்.”
“வேலைக்கு எதுவும் போகலையா?”
“வேண்டாம்னு சொல்லிட்டார்.”
“ஏன்? இரண்டு பேர் சம்பாதிச்சா நல்லதுதானே?”
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு சொல்லிட்டார். காலையில போனா ராத்திரிதான் அவர் வருவார். அப்ப வீட்டில மனைவின்னு யாராவது இருக்கணும்.”
“டெய்லி நீ அவரோடு பேசறியா?”
“தினம் இரண்டு மணி நேரம் பேசறோம்.”
“யார் செலவு?”
“அவர் செலவுதான்.”
“பரவாயில்லை. அந்தக் காலத்துல நாங்களெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கூடப் பாத்துக்க முடியாது.”
“கையில என்ன? வைர மோதிரமா?”
“ஆமாம். அவர் வீட்டில போட்டது. போன புதன்கிழமைதான் எங்க பெட்ரோத்தல் நடந்தது. அன்னிக்குப் போட்டது?”
“பணக்காரர்களா?”
“மிடில் க்ளாஸ்.”
வண்டி மெதுவாக இன்னும் சில இடங்களில் நின்று நின்று போய்க்கொண்டிருந்தது. சுமதி தன் கற்பனையில் மூழ்கத் துவங்கிவிட்டாள். மூதாட்டியுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, ஷ்யாமுடன் இன்று என்ன பேசலாமென்ற யோசனைக்குச் சென்று விட்டாள். வயது அதிகம் காரணமாக மூதாட்டியும் சற்றுக் கண் அயர ஆரம்பித்தாள்.
கற்பனை வேகத்தில் சுமதி தன் நினைவே இல்லாமல்தான் இருந்துகொண்டிருந்தாள். ஷ்யாம் தன்னைப் பெண் பார்க்க வந்ததும், பிறகு இருவரும் தனி அறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் ஒரு கனவுபோல் அவளுக்குத் தோன்றியது. ஷ்யாம் வீட்டில் விருப்பம் தெரிவித்துப் போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல. அம்மாவிற்கும். ஷ்யாமைப் போனில் கூப்பிட்டு “தாங்ஸ்+ சொன்னாள்.
யாரோ அவசரம் அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்குவது போலத் தோன்றியது. அப்போது லேசாகத் தன்னை இடித்துக்கொண்டு யாரோ சென்றதுபோல் தோன்றியது.
“ஷ்யாம் உண்மையிலேயே ஒரு லட்சணமான பையன்.”
மூதாட்டி திடீரென்று விழித்துக்கொண்டாள். சுமதியைப் பார்த்து, “ஒரு கெட்ட சொப்பனம்,” என்று கூறியவள், “ஹோ,” என்று அலற ஆரம்பித்தாள்.
சுமதி பதட்டத்துடன்,”என்ன?” என்று கேட்டாள்.
“உன் வைர மோதிரம்,” என்றாள் மூதாட்டி சத்தத்துடன்.
சுமதி தன் விரலைப் பார்த்து, மூர்ச்சை ஆகி விழுந்து விட்டாள். அவள் விரல் அறுந்து சீட்டுக்குக் கீழே கிடந்தது. அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை. துண்டுப்பட்ட விரலிலிருந்து ரத்தப் பெருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
(‘ராம் காலனி’ என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கதை. விருட்சம் வெளியீடாக வந்துள்ள அப்புத்தகத்தின் விலை ரூ.60)