மழை 1, 2, 3…..

மழை பெய்தால் சென்னை நகரம் போல் ஒரு வேதனை தரும் இடத்தைப் பார்க்க முடியாது. நான் வசிக்கும் மேற்கு மாம்பலம் இன்னும் மோசம். கடந்த 2 நாட்களாக முட்டி கால்வரை தண்ணீர். அலுவலகம் போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. கூடவே அங்கங்கே பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்துகொண்டு சாக்கடை மல ஜலம், மழை நீர் என்று நாசம் செய்து விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம். இந்த மழையால் 15 பேர்களுக்குமேல் இறந்துவிட்டார்களாம். இத் தருணத்தில் மழையைப் பற்றி எழுதிய மூன்று கவிதைகளை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.

மழை 1

மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க…………

மழை 2

மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்
மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்
மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்
வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்.

மழை 3

மழை தூறி முடிந்தது
சம்பவங்கள் நடக்காமலில்லை
ஸ்தம்பித்துப் போன தோற்றம்
விடைபெறும் நண்பர்
எல்லோருடனும் புன்னகை செய்தார்
எப்போதும் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்
தெருவைக் கடக்கும்போது
ஈரம் சதக்கென்று காலில் ஒட்டி
வெறுப்பாய் மாறுகிறது பாவனை
விடைபெறும் நண்பர்
புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்
தனியாகப் பயணம்
பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்
புதிய இடம்
புதிய முகங்கள்
வேறு மொழி
இங்கு ஈரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது
நண்பர் மனதிலும்
சதக்கென்று காலில் ஒட்டாத ஈரம்
நினைவுப் பறவைகள் மிதந்த வண்ணம்
புதிய இடம்
வரவேற்க காத்திருக்கலாம்.

நான் வெல்ல வேண்டிய விளையாட்டு

இன்று காலை வெய்யிலில்லை
குளிர்ந்த அழுக்கான நாளின்று
விடைபெற கையசைக்கிறேன்
சன்னல் கம்பிகள் வழியே
நீ நடந்து போவதைப் பார்த்தவாறே.
உன்னுடலின் மணம்
என்னுடலின் மீது நீங்காதிருக்கிறது.
திகைப்புடனிருக்கிறேன்
உன் காதலை
நான் வெல்ல வேண்டிய விளையாட்டாக
ஏன் விளையாடினேனென்று.
தெருவில் நீ மிகவும் தனிமைப்பட்டுத் தெரிகிறாய்
நேரம் செல்லச் செல்ல உன் உருவம் சிறியதாகிறது
உன் கையசைவுக்காக உன் புன்னகைக்காக
ஏங்குகிறேன்.
எப்போதும் விசுவாசமான காதலனாக நானிருப்பேன்
உன்னை உரக்க அழைத்துச் சொல்ல ஒரு ஆசையை
உணர்கிறேன்
ஆனால் சன்னல் கம்பிகளின் மீதென் மூச்சு
மெளனமாய் உறைந்து போனதைக் காண்கிறேன்.
தமிழாக்கம் : லாவண்யா

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்



நவீன விருட்சம்

அழகியசிங்கர் 17।10।2008
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு மேற்கு மாம்பலம் சென்னை 600 033

அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்।
நவீன விருட்சம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக காலாண்டு இலக்கியச் சிற்றேடு நடத்தி வருகிறேன்। கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் பிரதிகள் தமிழ் புத்தகங்கள் வாங்க உத்தரவு இட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்। பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர, இன்று தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு। மேலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் மோசமானது। அவர்கள் எழுதும் எழுத்தால் சாதாரண நிலையைக் கூட அவர்களால் எட்ட முடியாது.

நான் கல்லூரியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடல்லாமல், தமிழ் வகுப்புகளே கிண்டலுக்குரிய இடமாகக் காட்சி அளிக்கும்।அதுமாதிரியான தருணத்தில் தமிழில் ஆர்வம் கொண்டு எழுதுவது என்பது சிரமமானது। எழுதும் எழுத்து புத்தகமாக வருவதும், பத்திரிகைகளில் பிரசுரமாவதும் அவ்வளவு சுலபமானதில்லை.
நவீன விருட்சம் என்ற என் பத்திரிகையில் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக கவிதைகளையே பெரும்பாலும் வெளியிட்டு வருகிறேன்। கவிதைகள் வெளியிட்டு வந்தாலும், கவிதையைப் போல கிண்டலுக்குரிய ஒன்று தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் கவிதை எழுதுபவர்களிடையே பல பிரிவுகள். இப் பிரிவுகள் ஒன்றை ஒன்று சாடுவதோடல்லாம், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.
என் பத்திரிகையை ஆயிரம் பேர்களுக்கு மேல் படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்। இது தமிழ் ஜனத்தொகையை எடுத்துக்கொள்ளும்போது, ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகம் கொண்டு வர வேண்டியுள்ளது.
புத்தகம் கொண்டு வந்தாலும், விற்பது என்பது அசாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. அசாதாரண விஷயம் மட்டுமல்ல, விற்கவே முடியாத நிலைதான் உருவாகி உள்ளது. கவிதைப் புத்தகம் விற்க வாய்ப்பே இல்லை. என்னைப் போன்றவர்கள் நூலகத்தையே சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓராண்டில் நான் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களுக்கு மேல் கொண்டு வர மாட்டேன். 2006 ஆம் ஆண்டில் மட்டும் 6 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 6 புத்தகங்களில் 4 புத்தகங்கள் மட்டும் கவிதைப் புத்தகங்கள். இந்த முறை எனக்கு நூல்கள் வாங்க வந்த உத்தரவில் கவிதைப் புத்தகங்களுக்கு மட்டும் ஆதரவு கிட்டவில்லை. இது எனக்குப் பெரிய ஏமாற்றம். கவிதை எழுதுவதில் திறமைப் படைத்த முதல்வர் ஆட்சியில், கவிதைப் புத்தகங்களுக்கு நூலக ஆதரவு இல்லை. என் வருத்தம் கவிதைகள் எப்படியானாலும் விற்கவும் போவதில்லை. நூலக ஆதரவை ஒட்டியே கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும். அதற்கு நூலக ஆதரவு இல்லை என்றால், புத்தகங்களைக் கட்டுக் கட்டாக வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விற்காமல் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை. நான் இப்படிப் பல புத்தகங்களை வைத்துக்கொண்டு வீட்டில் திட்டும் வாங்கிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவன். முழுநேரமும் எழுத்தையே நம்பி இல்லாமலிருப்பதால் தப்பித்தேன்.

முதல்வர் அவர்களே, நான் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் அண்ணாவைக் குறித்து எழுதிய கவிதையை உங்கள் குரலிலேயே வானொலியில் ஒலி பரப்பினார்கள். அதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் கவிதையைப் பொருத்தவரை நீங்கள் எழுதுவது வேறு விதம், நாங்கள் எழுதுவது வேறு விதம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான கவிதை மனம் என்ற ஒன்று இருக்கும். ஏன் தங்கள் புதல்வி கனிமொழி அவர்கள் எழுதும் கவிதைகள் நீங்கள் எழுதும் கவிதைகளைவிட முற்றிலும் வேறுவிதமானவை. கவிதையை ஆதரிக்கிற, எழுதுகிற ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு ஆட்சி செய்யும்போது, கவிதைக்கும் அவருக்கும் வெகுதூரம் என்ற கருத்தில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. சுபோத் சர்கார் எழுதிய அக் கவிதையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.சிறிய கவிதையான அதை தங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.

பூதமும் கவிதைப் புத்தகம் வாங்குபவரும்

மீன் பிடிப்பவர் கவிதை வாசிப்பதில்லை
தேன் விற்பவர் கவிதை வாசிப்பதில்லை
நோயாளியான இளைஞனும்,

சகோதரனும் கவிதை வாசிப்பதில்லை
மிஸ்டர் ஜோதிபாசு கவிதை வாசிப்பதில்லை
கவிதைப் புத்தகம் வெளயிடுபவர்
கவிதை வாசிப்பதில்லை
கல்லூரி ஆசிரியர் கவிதை வாசிப்பதில்லை
பின் எந்தப் பூதம் கவிதைகளை வாசிக்கும்?
யார்தான் கவிதைப் புத்தகங்களை வாங்குவார்கள்?

கவிதையின் இன்றைய அவலநிலையைக் குறித்துதான் இக் கவிதை।

2006 ஆம் ஆண்டு நூலக ஆதரவு கிட்டாத 4 கவிதைத் தொகுதிகள் குறித்து சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்।

விருட்சம் கவிதைகள் தொகுதி 1 – இப் புத்தகம் 94 கவிஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட நூல். இப் புத்தகத்தில் வெளியான கவிதைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளில் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி நூல். தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பல முக்கிய கவிஞர்களின் கவிதைகள் உள்ள நூல் இது. ஒரு பல்கலைக் கழகம் கூட இப்படி ஒரு தொகுதியைத் தயாரிக்க முடியாது.

2. அழகியசிங்கர் கவிதைகள் : 183 கவிதைகள் கொண்ட என் தொகுதி நூல். 1975 ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறேன். என் கவிதைகள் சில ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இந் நூலுக்கும் ஆதரவு கிட்டவில்லை. வல்லிக்கண்ணன், சுஜாதா, தமிழவன், வெங்கட் சாமிநாதன் முதலியவர்கள் என் கவிதை நூலிற்கு விமர்சனம் எழுதி உள்ளார்கள்.

3. ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் : என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸனின் தொகுப்பு இது। ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு இந் நூல் வெளி வந்துள்ளது. ரா ஸ்ரீனிவாஸனின் கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

4. நீல பத்மநாபன் எழுதிய ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் என்ற புத்தகம் மலையாளப் படைப்பாளியான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. நீல பத்மநாபன் அவருடைய தோழரான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகள்.கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்।।
கவிதை சம்பந்தப்பட்ட இந்த நான்கு புத்தகங்களுக்கும் நூலக ஆதரவு கிட்டவில்லை. தங்கள் பார்வைக்கு இந்த நான்கு புத்தகங்களையும் அனுப்பி உள்ளேன். உங்களுக்கு இக் கடிதத்தைப் படிக்க நேரம் இருக்குமா என்பது தெரியாது. மேலும் நான் அனுப்புகிற இப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரம் இருக்குமா என்பதும் தெரியாது. உங்கள் பார்வைக்கு இக் கடிதம் வருமா என்பதும் தெரியாது. உங்களுக்கு அனுப்பும் இக் கடிதத்தை navinavirutcham.blogspot.comசேர்த்துள்ளேன்.

அன்புடன்
அழகியசிங்கர்

இனம்


சிறுகதை
தேனீர் கடையில் வழக்கம் போல் நான்கைந்து பேர் கண்ணாடி தம்ளரில் டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தார்கள்। பக்கத்திலேயே நன்றாக வளர்ந்திருந்த புங்கை மரம் தாராளமாகவே நிழல் பரப்பியிருந்தது। அதன் கீழே இருந்த பங்க் கடையை ஒட்டி அடுப்பில் பெரிய வாணலியில் வடை, பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார்கள்। அந்த வாசனை நாசியைத் தூண்டிக் கொண்டிருந்தது . கணேசன் டீ மாஸ்டரிடம் ஒரு தேனீருக்கு சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். அவனுடைய அலுவலகம் எதிரில்தான் இருந்தது. காலை பதினொரு மணி ஆகிவிட்டது.
அலுவலக வேலை இனிமேல்தான் சூடு பிடிக்கும். அப்புறம் சிகரெட் பிடிக்க நேரமிருக்காது. டீக்கடைப் பையன் கணேசனிடம் டீயைக் கொடுத்து விட்டு மூலையில் சாத்தியிருந்த மூங்கில் கம்பை கையிலெடுத்தான்। கம்பை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான் என்று கணேசன் யோசித்துக் கொண்டே டீயை உறிஞ்சினான்। பையன் மரத்தின் அடித்தண்டின் மீது ஏறி மூங்கில் கம்பை மேலே உயர்த்தி எதையோ தொட முயற்சி செய்தான்.
“தம்பி அங்க என்னப்பா பண்ற?” என்றான் கணேசன். பையன் பதிலே பேசாமல் காரியமே கண்ணாக மரத்தின் கிளைகளுக்கிடையில் துழாவிக் கொண்டிருந்தான்.
“கேக்கறாங்க இல்ல?….” – பக்கத்தில் நின்றிருந்த ஆள்…
“அங்க பொந்துல கிளியொண்ணு இருக்குதில்ல, அத்தைப் பிடிக்கணுமின்னு பாக்குறான் பய.” தேனீர் மாஸ்டர் பதில் சொன்னார்। “ஏன், வேற வேல ஏதும் இல்லியா உனக்கு? அதைப்பிடிச்சி வெச்சிக்கிட்டு என்ன பண்ணப்போற ?” பையனிடம் கணேசன் கேட்டான்। பையன் கணேசன் சொன்னதைக் காதில் வாங்காதவன் போல கம்பை மரக்கிளைகளுக்கிடையில் செலுத்திக் கொண்டிருந்தான்। கணேசன் காலி கண்ணாடி தம்ளரை பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்து போய் நின்று பார்த்தான்। மேலே தவழ்ந்த கிளையில் பெரிய பொந்து ஒன்று இருண்ட வட்டமாகத் தெரிந்ததே தவிர வேறொன்றும் புலப்படவில்லை। பையனால் கம்பை பொந்துக்குள் நுழைக்க முடியாமல், முயற்சியில் தளர்வடைந்தவனாக இறங்கி வந்தான்।।”அப்பாடா, தப்பித்தது பொந்தி லிருக்கிற அந்த, அது கிளியோ குருவியோ…” என்று கணேசன் அவசரப்பட்டு நினைத்தது தப்பாகப் போனது। பையன் எங்கிருந்தோ வளைவான இரும்புக் கொக்கியை எடுத்து வந்து மூங்கில் கம்பில் பிணைத்துக் கட்டி மறுபடியும் மரத்தில் விடுவிடுவென்று ஏறினான்। “சொல்றதக் காதுல வாங்கறானா பாரேன் – ” என்றார் பக்கத்திலிருந்தவர்। தேனீர் சாப்பிட்டபடி, புகைத்தபடி நின்றவர்கள் எல்லோரும் பையன் செய்வதைத் தலை நிமிர்த்தி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். பையன் ஆவேசமாக கம்பின் நுனியில் பொருத்தியிருந்த கத்தி வளைவை பொந்துக்குள் விட்டுத் துருவ ஆரம்பித்தான். அவ்வப்போது கீச்கீச் என்று சப்தம் கேட்டாலும் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை।
“டேய் அதையேண்டா நோண்டிக் கிட்டிருக்க, எறங்கு கீழ…” கணேசன் பையனை அதட்டினான்।
பையன் தலையைத் திருப்பி, “ஒன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ,” என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு இன்னும் தீவிரமாகத் துழாவ ஆரம்பித்தான்।
“யோவ் அவன எறங்கச் சொல்லுய்யா, வேற வேல இல்ல அவனுக்கு ॥?” என்றான் கணேசன் கடைக்காரனிடம்। எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்த கடைக்காரன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு “த்ச” என்றுவிட்டு கணக்கைத் தொடர ஆரம்பித்தான்। தேனீர் குடித்துக் கொண்டி ருந்தவர்கள் சாலையின் நடுவில் போய் நின்றுகொண்டு மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். வேறொன்றும் செய்ய முடியாமல் சிகரெட்டை இறுதித் திருப்தியாக ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டுதேனீருக்கான காசையும் கொடுத்து விட்டு கணேசன் நகர்ந்தான். அப்போது அவனைக் கடந்து சென்ற சிறிய மோட்டார் சைக்கிள் திடீரென்று க்றீச்சிட்டு நின்ற சப்தம் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. மரத்தின் கீழே மோட்டார் வாகனத்தில் இரண்டு கைகளும் மேலே உயர்ந்து தலைக் கவசத்தை விலக்க கல்லூரி மாணவி போல இளம் பெண்ணொருத்தியின் முகம் பளிச்சென்று வெளிப்பட்டது. “அந்தப் பையன் மரத்துல என்ன செஞ்சுக் கிட்டிருக்கான்…?” என்று பக்கத்தில் இருந்த ஆளிடம் வண்டியிலிருந்து இறங்கி விசாரித்தாள் அந்தப் பெண். “பொந்துல கிளியோ குருவியோ இருக்குது. அதப் புடிக்கப் பாக்குறான் பய.” “எதுக்கு அதைப் பிடிக்கணும். பிடிச்சு என்ன பண்ணப் போறான் “என்றாள் அவள்। “சும்மா புடிச்சு வளக்கத்தான்।” “நோ நோ,” என்று தலையை வேகமாக அசைத்தாள் அந்தப் பெண்। நிமிர்ந்து விடாமுயற்சியுடன் கழியால் பொந்தைத் துளைத்துக் கொண்டிருந்த பையனை நோக்கி, “தம்பி அதெல்லாம் பண்ணக் கூடாது, கீழே இறங்கு,” என்றாள் கண்டிப்பான குரலில்। பையன் பெண் குரல் கேட்டு முதல் முறையாகக் கொஞ்சம் தயங்கினான்। தலையைத் திருப்பிக்கொண்டு கம்பை மறுபடியும் உயர்த்தி பொந்தை நோக்கிக் கொண்டு போனான். “இப்ப எறங்கப் போறியா இல்லையா நீ?” என்று அவள் குரலை உயர்த்தி பையனைப் பார்த்து சத்தம் போட்டாள் அவள். “நீ எறங்கற வரைக்கும் நான் போகமாட்டேன்,” என்றாள் அவள். “டேய் எறங்குடா,” இப்போது பக்கத்திலிருந்த ஆள் குரல்கொடுத்தான். “புடிச்சு வெச்சுக்கிட்டு என்னத்தைப் பண்ணப் போறே? றக்கையைப் பிச்சிப் புடுங்கி சித்ரவதை பண்ணவா?” என்றார் தேநீரைப் பருகி முடித்த இன்னொருவர். அதுவரை சும்மா இருந்த கடைக்காரன், “கஸ்டமர் வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்க, அங்க என்னத்தைப் புடுங்கிக்கிட்ருக்க? கிளாச வந்து கழுவுடா டேய்,” என்று அதட்டினான். பையன் தலையைச் சொறிந்தபடி இறங்கி வந்தான். அந்தப் பெண் அவன் கம்பை வைத்துவிட்டு வரும் வரை காத்திருந்தாள். பையன் தலையைக் கவிழ்த்தபடி அவளைக் கடந்து போனான். அவன் திரும்பி வரும்வரை காத்திருந்து, “ரொம்ப தேங்ஸ்,” என்று அவள் சிரித்தவாறு சொன்னாள். பையன் நிமிராமல் வேலையைக் கவனிக்கப் போனான். அவள் தன்னுடைய மோபெடை கிளப்பிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தாள். அப்போது சிவப்பு மூக்கு தெரிய, பொந்திலிருந்து மெல்ல ஒரு கிளி தலை நீட்டிக் கீழே நின்ற அவளைப் பார்த்தது. அவள் சிரித்துக்கொண்டே ஹெல் மெட்டை அணிந்து, வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு கணேசனைக் கடந்து போனாள்। அவள் அணிந்திருந்த சல்வார் கமீஸ் கிளிப் பச்சை வண்ணத்திலும், துப்பட்டா, காதணி, தலைக் கவசம் எல்லாம் சிவப்பாகவும் இருப்பதை கணேசன் அப்போதுதான் கவனித்தான்.
(ஜுலை – டிசம்பர் 2003 நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கதை)

இன்ன பிற

காலச்சுவடு கதைகள் 1994-2000 படிக்கக் கிடைத்தது। மனுஷ்ய புத்திரன் தொகுத்திருக்கிறார்। 5 நெடுங்கதைகள், 18 சிறுகதைகள் உள்ளன। ஜி நாகராஜனின் ‘ஆண்மை’என்ற கதைதான் என்னை முதல் வாசிப்பிலேயே அசாத்தியமாக தாக்கியது। ஒரு வேசியின் பின்னால் போகிற ஆண்மகன் ஒருவன் சொல்வதாக கதை அமைந்துள்ளது। இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான்। ‘கடவுளை மன்னித்துவிட வேண்டியதுதான்। எத்தனை விகாரமான உருவங்களுக்கிடையே இப்படியும் அழகான ஒரு உருவத்தைப் படைத்திருக்கிறாரே! அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,’ரொமாண்டிக்கான வர்ணனைதான்। எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார்। தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான்। அப்பா அவனைச் சமாதனப்படுத்தி அழைத்துப் போகிறார்। பேரம் பேசப்படுகிறது। பணத்தைப் பெறுவதில் அவள் குறியாக இருக்கிறாள்। ஆண்மகன் நினைக்கிறான்। ‘எதற்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும்। கொடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை। மனைவி மட்டும் என்ன? அவளுக்கும் கொடுத்தாக வேண்டும்। அங்கு எல்லாம் நாகரிகமாக நடக்கிறது। இங்கு விலை; அங்கு கடமை। கதைகளில் வரும் எல்லா வேசிகளைப் போலவே இவளும் ஒரு சோகக்கதையைக்கூறுகிறாள்। குடும்பக்கதை। ‘நாங்க ரொம்ப கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க। வேண்டாதவங்க செய்வினை செஞ்சு எங்காம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சதனால்தான் மெட்ராசுக்கு வந்தோம்। ‘ஹøம…உங்கப்பாவுக்குஎன்ன தொழில்?’ ‘அவர் செய்யாத பிசனஸ் இல்லை। நூறு பேருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சவரு। கூட்டாளிங்க ஏமாத்தி அவரெ ஓட்டாண்டியாக்கிட்டாங்க।’ ‘எங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சதிலிருந்து அவர் எந்தப் பிசினெஸ் எடுத்தாலும் நஷ்டம்தான்। ஆனாலும் பிடிவாதக்காரரு। எங்கம்மாவை குணப்படுத்தவ்ணும்; இதே மெட்ராசிலே பெரிய பிசினெஸ் நடத்தி வீடும் காரும் வாங்கணும்பாரு।’ ‘நீதான் மூலதனமா?’என்கிறான் ஆண்மகன்। இந்தக் கேள்வியை நக்கல் செய்யும் விதமாக ஆண்மகன் கேட்பதுபோல முதல் பார்வைக்குத் தோன்றினாலும் கேள்வியின் பின்னால் பச்சாதாபம் தொனிக்கிறது। ஐம்பது வயது அப்பா எட்டு வயது சிறுவனோடு பஸ் ஸ்டாப் வந்து இருபது வயது நிரம்பிய அவர் மகளை வேசித் தொழிலுக்குப் பணம் பண்ண அனுப்புகிறார்। அந்தப் பெண் இந்த நாடகத்தில் தன் பங்கை அட்சரம் பிசகாமல் நடத்தித் தருகிறாள்। தம்பியை, அப்பாவைக் காப்பாற்றுகிறாள்। அம்மாவை குணப்படுத்த பணம். ‘என்னெப் பார்த்தா காசுக்கு வரவ மாதிரி தெரியுதா?’ ‘அதுதான் உம் முகத்திலே எழுதி ஒட்டியிருக்கே,’என்கிறான் ஆண்மகன்। ‘அப்ப, இனிமே அப்பாவையும் தம்பியையும் பஸ் ஸ்டாப்புக்கு வரவேண்டாண்டிற வேண் டியதுதான்।’ ‘எனக்குக் கூட அவெரப் பார்த்தா என்னவோ மாதிரி இருந்திச்சு. என்னவோ மகளை மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறமாதிரி பஸ் ஸ்டாப்புக்கு ந்திருட்டாரு।’ மீண்டும் நக்கல்போல தொனித்தாலும் தன் மகளை சோரம் போக அனுப்புகிற கையாலாகாத அப்பா மீது கதை சொல்லிக்குக் கோபம்। ஒன்றும் அறியாத எட்டு வயது சிறுவன் மீதும் சினம்। அக்காவிற்கு நேருகிற அவலம், சீரழிவு அவன் சின்ன மூளைக்குப் புரிபடவில்லை। நாளை அவன் பெரியவன் ஆனதும் தன் சிறுவயதில் இப்படி விவரம் புரியாமல் இருந்ததற்கு அவன் வருத்தப்படக்கூடும்;வேதனையடையக்கூடும்। அப்பா மீது வெறுப்பு தோன்றக்கூடும்। ஆண்மகன் அந்த அறையைவிட்டு வெளியேறுகிறான்। ‘எனக்கு ஆண்மை கிடையாது। என்னாலே எதுவும் செய்ய முடியாது। நான் பேடி,’என்கிறான்। அவன் அவளிடம் கோபித்துக்கொண்டு போவதாக எண்ணி அந்தப் பெண் பரதவிக்கிறாள்। ‘சந்தோஷமா இருக்கணும்னு வந்தீங்க। நான் அழுமூஞ்சி மாதிரி இருந்திட்டேன்,’என்று கூறி வலிய தன்னை மகிழ்ச்சி நிரம்பியவளாக மாற்றிக்கொள்கிறாள்। கண்ணீர்த்துளி வர உள்ளுருக்கும் கலை ஜி.நாகராஜனுக்கு அநாயசமாக கை வருகிறது. ‘உனக்கு நான் கொடுத்தது எவ்வளவு?’ ‘முப்பது।’ ‘அந்த முப்பதா உன்னை இங்கே நிறுத்தியிருக்கு।’ ‘நீங்க சொல்றது எனக்குப் புரியலையே?’ உம்। உங்கம்மாவுக்கு பைத்தியம் பிடிக்காட்டி, உங்கப்பாவுக்கு பிசினெஸ்லே நஷ்டம் வராட்டி, நீ இப்ப இங்கே இருக்கமாட்டே இல்லை। இல்லையா?’ மெய்மறக்கச் செய்யும் ஜ÷கல்பந்தி நிகழ்ச்சியில் ஆலாபனை அலை அலையாக நம்மைத் தாக்குமே அந்த பிரமிப்பு இந்த வசனங்களைப் படிக்கும்போது. அந்தப் பெண் எவ்வளவு பேதை। குடும்பத்திற்காக நோய் வாய்ப்பட்ட அம்மாவுக்காக, சம்பாதிக்க இயலாத அப்பாவுக்காக, எட்டு வயது தம்பிக்காக சிலுவை சுமக்கிறாள்। சென்னையில் பெரியதொரு பிசினெஸ் நடத்தி, வீடும் காரும் வாங்கிப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளத்தைக் குடைக்க, மகனை கையில் பிடித்துக்கொண்டு, மகளை பஸ்ஸில் ஏற்றிவிட வந்த அவரின் முகம் ஒரு கண நேரம் என் கண்களின் முன்பு தோன்றி மறைந்தது। அவளுடைய முகத்தை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை। கதையின் தலைப்பு, ‘ஆண்மை’। அந்த அப்பாதான் பேடி. ஆண்மை இல்லாதவர். இந்தக் கருத்து நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கதையின் அடிநாதம் இதுதான். பத்துப் பக்கங்களில் ஒரு பேரிலக்கியத்தை படைத்துவிட்டார் ஜி.நாகராஜன். இந்தக் கதையைப் பிரசுரித்ததற்காக காலச்சுவடு பதிப்பகத்தை நாம் பாராட்டலாம். நவீன விருட்சம் செப்டம்பர் 2005 ஆண்டு இதழில் வெளிவந்த ஐராவதம் கட்டுரை

மூன்று கவிதைகள்

01
இசைபட…!

அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல்விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்வெறுமனே இருக்க நேர்கிறது।
யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.
முன்பைவிட விரைவாய் நகரும்இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைபட ஒன்றும் நேர்கிறது இவளது வருகையைப் போல।

உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்கவிதை…அச்சில் வந்த
கவிதைகளைப் பற்றிஅதிகமாய்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
காதல் தவிர்த்து
எழுதலாமே என்கிறீர்கள்। கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள்.

இத்தனை கவிதைகளா
இதற்குள் என்கிறீர்கள்.
இத்தனைக்கும் எப்படி
நேரம் என்கிறீர்கள்.

இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம்
எது என்கிறீர்கள்?உணர்வுதளம் தாண்டி
ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்। அச்சுநேர்த்தி பற்றியும்
அதிகம் சொல்கிறீர்கள்। அடர்த்தி இன்னமும்
வேண்டும் என்கிறீர்கள்.

செய்த கவிதைகளே
நிறைய என்கிறீர்கள். அதிகமும் படித்தல்
ஆகச் சிறந்தது என்கிறீர்கள். எதையும் வாய்மொழியாய்
சொல்வதற்கில்லை நான்.

என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்
கவிதை ஒன்றை
எழுதிவிட்டு வந்து உங்களை
எதிர்கொள்ளவே ஆசை।
குழந்தைக் கேள்விகள்..!

ஏன்வீடு திரும்ப வேண்டும்?

ஏன்சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்அம்மா வேலைக்கு போவதில்லை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்எல்லோரும் இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின் தான்வேலைக்கு போகணுமா?

சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லைஎப்போதும் குழந்தைகளின் கேள்விகள்। அறிவிப்பு
நண்பர்களே,
நவீன விருட்சம் 81-வது இதழ் இன்னும் சில தினங்களில் வெளிவந்துவிடும். நவீன விருட்சத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி உரித்தாகும்.
இனிவரும் படைப்புகள் நவீன விருட்சம் 82வது இதழிற்காக தேர்ந்தெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்தக்கொள்கிறேன்.
அன்புடன் அழகியசிங்கர்

பால்ய வீடு – மழலை உலகம்

பால்ய வீடு

பாடப்புத்தகங்கள் கலைந்து கிடந்த மாடம் அன்றென் கைகளுக்கு எட்டியது முக்காலியின் உயரத்தினால்தான்… சுவர் மேல் கால்வைத்தேறிதண்ணீர் மோந்த பெரிய தொட்டியும்இன்றேனோ சின்னதாய் தெரிகிறது… அதே பழைய படிக்கட்டுகளும் தெருக்களும் கூடஅளவில் சிறுத்துப் போயிருக்கிறது…அன்றென் கைகளுக்கு எட்டாமல் போன பலவும்
இன்றென் கைகளுக்கு எட்டினாலும்
கை நழுவிப் போனதாயிருக்கிறது
என் பால்யத்தின் தலைகோதிய வீடு…கோலப்பொடி டப்பா வைத்திருந்த
மாடமிருந்த சுவரை இடித்து
கருமான் பட்டறை போட்டிருக்கிறீர்கள்பற்றி எரிகிறதுஉலைக் கூடமும்…!
உலைக் கூடமும்…!

மழலை உலகம்

மழலைக்குரலில்நட்பு வளர்க்கும்குழந்தைகளுக்குதேவையற்றதாகவும்தெரியாததாகவும் இருக்கிறது…தத்தம் தாய்மொழிவெவ்வேறானது என்பது…
२.
கிழமைகள் பற்றியெல்லாம் அதற்குள் அவனுக்குதெரிந்திருக்க வாய்ப்பில்லைஎன்றே நம்பினாலும்ஒரு ஞாயிற்றுக்கிழமையில்சும்மா கேட்டு வைத்தேன்’இன்னிக்கி என்ன கிழம?”சனிக்கிழம கிழம’

இறுதிப் பாடல் (கொங்கினி)

(தமிழில் – விஜயராகவன்) என்னுடைய இந்தப் பாடல்இறுதிப் பாடலாக இருக்கலாம் சொல்லிப் பெருமூச்சு விட்டது பறவை।
அடுத்த வசந்தத்தை வரவேற்க யாரிருப்பர், யாருக்குத் தெரியும்?
மூடத்தனமாய் அமங்கலச் சொல் பேசாதே அச்சானியமாய்ப் பிதற்றாதே என்றது பூக்கத் தொடங்கியிருந்த விருட்சம்.போன வருடமும் இப்படித்தான் பேசினாய் ஆனால் இன்று வந்துதான் இருக்கிறாய், இல்லையா? பல வசந்தங்கள் வந்து விட்டன ஒன்றன் பின் ஒன்றாய், நானும் அலுக்காது பூத்துக் குலுங்கியுள்ளேன் பல முறை। இதயத்தில் தீவிர வேட்டை இருந்தால் வளர்ந்து நீள்கிறது வாழும் காலமும்

ஒரு வழிப் பாதை

சிறுகதை

அண்ணாசாலை விபத்து ஒன்றில் தாயார் இறந்துபடவும், மகன் அடுத்தாற்போல், செஞ்சிக்கோட்டை உச்சியில் நின்று கைகளை உயர்த்திப் பாடுவதாக வருகிறது காட்சி. இயக்குநர் அதை விவரித்துக் உதவி இயக்குநர்களில் ஒருவனாகப் பணியில் சேர்ந்திருப்பவன் அவன். சில சமயங்களில் இயக்குநருக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தும் பணியாற்றுவதுண்டு. ஆனாலும் அந்தத் துணை இயக்குநர் கூட்டத்தில் அவனே அதிகம் படித்து பட்டங்கள் வாங்கியவனாக அறியப்பட்டிருந்தான். எப்போதும் எதிலோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சொல்கிறார்கள். கறுப்பன் என்ற இயற்பெயரை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளான். மேற்படி உதவி இயக்குநரான அவன் பின் வருமாறு எண்ணிக்கொண்டிருக்கிறான். “செஞ்சிக்கோட்டை உச்சியில் சாவு பற்றிய தத்துவ கருத்துகளை உதிர்த்துவிட்டு கீழே இறங்கி வருவதற்குள் தாயார் இறந்த துக்கம் போய்விட, அங்கே ஆற்றங்கரையில், பெண்ணிடம் வம்பு செய்ய முயன்ற மூன்றுபேரை கொரிய நாட்டு அகி ஹிடோ பாணி சண்டையிட்டு வெற்றிகொள்கிறான். அநேகமாக அந்த இடத்திலும் ஒரு பாட்டு இருக்கும்.

இந்தப் படத்தில் பணியாற்ற நான் இத்தனை மைல் கடந்து இங்கே வந்திருக்கிறேன்………. ஆகா। முருகா. ” இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தவன், அன்று மாலை தன்னுடன் அறையில் வசிப்பவரும் தன்னைவிட மூத்தவருமான முத்து என்ற நண்பரிடம் இதைப் பற்றியெல்லாம் கூறுகிறான். அவர் ஆதுரத்துடன் கேட்டுக்கொள்கிறார். இவன் எம்.ஏ ஆங்கிலம் என்றால், அவர் எம்.ஏ தமிழ். அத்துடன் சோதிடம்வரை எல்லாப் புத்தகங்களையும் ஒரு கை பார்த்தவர். திருமணங்கள் பலவற்றை சாதகம் பார்த்து பரிந்துரைத்தவர். சில திருமணங்கள் பெற்றோரால் வாழ்த்தப்பட்டன. பல தம்பதிகள் பிரிந்து விட்டனர். சோதிடம் பற்றி எளிய முறையில் நூல் எழுதலாமா என்ற யோசனை உண்டு. ‘எம்மே’ தமிழ் சோறு போடவில்லை : சோதிடம் உதவிற்று. அன்றிரவு உணவு உட்கொள்ளு முன்னரே அந்த விவாதம் தொடங்கியிருந்தது. அன்றிரவே முற்றுப் பெற்றும் விட்டது. ஒரு பயணத்தின் தோற்றுவாய் அது. பின்னர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உடுத்தியிருந்த துணி தவிர வேட்டி ஒன்றை கூடுதலாக எடுத்துக்கொண்டனர். அறைக் கதவை பூட்டாது சென்றனர். அண்ணாசாலையில் ஒரு பிச்சைக்காரனிடம் கைவசமிருந்த ஒன்றிரண்டு நோட்டுகளையும் சில்லறையையும் கொடுத்தனர். அங்கிருந்து நடந்தது திருவான்மியூர் நோக்கி.
** ***** ***** ***** ***

அன்றிரவு

வான்மீகநாதர் கோவில் அருகேயே சாலை செல்கிறது. மறுபுறம் ஒரு வெளியிடம். கல்ஒன்றில் இருவரும் உட்கார்ந்திருக்க, பின்வருமாறு உரையாடல் இருந்தது.
“இந்த சாலை எங்கே சென்று முடிகிறது. “
“எங்கே செல்லும் என்று தெரிந்து விட்டால், அது பயணமாகாது।”
“ஆமாம்.”
“நட்சத்திரங்களைக் கொண்டே வருட, மாத, நாளைக் கணித்து விட முடியுமா?” “பொதுவா இந்தப் பக்கத்திலே அதாவது தென் பகுதியிலே கையாண்ட சோதிடத்திலே ஒரு விசேஷம் : பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திரங்களை மாத்திரம் கையாண்டே எல்லாவற்றையும் : நேரம் உட்பட : சொல்லிவிடலாம்.”
“அதிசயம்தான். இது எந்த சோதிட சாத்திரங்களிலும் உலக அளவில் இல்லை.”
“பசிகூட ஒரு நினைவுதானோ?”
முத்து தலையசைத்தார். கையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டைக் காண்பித்தார்.
“பசி ஒரு நிகழ்காலம்,” என்றார்।
“உனக்குத் தெரியுமா இந்தப் பத்து ரூபாயைத் தந்தது பூச நட்சத்திரம். அந்தப் புத்தக் கடையிலே பேசிக்கிட்டிருந்தான் பாரு : அவனுக்குப் பலன் சொன்னேன். காலில் விழாத குறைதான். பலன் சொன்னால் ஏதாவது தட்சிணை தந்துதான் ஆகணுமாம் : தந்தான். இது போதும்। ராத்திரி ஆளுக்கு அஞ்சு இட்டிலி.”
“நாளைக்கு.”
“திட்டம் நாளைக்கும் சேர்த்துப் போட்டால், அது பயணமாகாது।தெரிந்தவற்றை பரிமாறிக்கொள்ளலாம்। மாமல்லபுரத்திற்கு நாளை மாலை போய் விடுவோம் என்று வைத்துக்கொள். நான் அங்கே மூட்டைத் தூக்குவேன். சோதிடமும் : வெளிநாட்டவர்க்கும் சேர்த்து சொல்லலாம். வெளிநாட்டவர்க்கு என்றால் நீ மொழி பெயர்ப்பு வேலை : சரி :வா.”
***** ***** ***** **
சாப்பிடுதல் என்ற செய்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால் அது, அந்த செய்கை மட்டுமே முழுதாக நின்று நிலவ வேண்டும். நான் நினைக்கிறேன் என்பதுகூட தவறாம். நான் நினைக்கப்படுகிறேன் என்பதுதான் சரியாம். கறுப்பன் ஏதோ பேச முற்பட்டபோது, முத்து சொன்னது இது.
***** ***** ***** *** *****
“தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்,” என்பது வான்மீகச் சித்தர் வாக்கு। அவர் பெயரில் இந்த ஊரா என்று தெரியவில்லை। “அவர் நிச்சயமா ராமாயண வான்மீகி இல்லை.” திருவான்மீயூர் எல்லையைக் கடந்தபோது அவர்களது பேச்சு ஊரைப் பற்றியிருந்தது.
மாமல்லபுரம் சேர்வதற்கு முன்னரே

தலையிலே ஒரு கட்டு சுள்ளி விறகு. இடுப்பிலே கைக்குழந்தை மீதமிருந்த ஒரு கையில் சாமான்கள் அடங்கிய பை. வேகத்தோடு லாகவமாகவும் அந்தச் சாலையைக் கடந்து கடையருகே வந்து நின்றாள், அந்தப் பெண். கைகளின் உதவியில்லாமலேயே, கழுத்தைப் பின்னால் லேசாகச் சாய்த்து தலைப் பாரத்தைக் கீழே தள்ளினாள். தடை என்று சொல்லப்பட்டாலும், அந்தப் பிரதேசம் இருபது குடில்களையும் இரண்டு ஓட்டு வீடுகளையும் கொண்ட இடமே. சாலையின் பக்கமாகவே கட்டப்பட்டிருந்தது குடிசை. சில பேருந்துகள் அங்கே நிற்கும் போலும். பக்கத்திலே கடல். இரவில் அலைகளின் சப்தம். பூட்டப்பட வேண்டிய அவசியமே இல்லாத கடை. உள்ளே மண்அடுப்பு ஒன்றுதான். ஆனாலும் திறந்திருந்தால் இதோ இப்போது உட்கார்ந்திருக்கானே, இவனைப் போன்ற வழிப்போக்கன் உள்ளே வந்து ஆக்ரமித்துக் கொள்ளக்கூடும். கடையைத் திறந்தவள் குழந்தையை முதலில் கீழே படுக்க வைத்தாள். ஏற்கனவே தூக்கக் கலக்கத்திலிருந்தது அது. துடைப்பம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். “யாரு : தள்ளிக்குந்து.” அவன் தள்ளி உட்கார, அவள், “பாண்டி பஸ் போயாச்சா,” என்று கேட்டவாறே பெருக்கத் தொடங்கினாள். கறுப்பன் பதில் சொல்லவில்லை. அந்தக் குடிசையின் பின்புறம் சிறிது தூரத்தில் தெரிந்த கடலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாகச் சென்ற முத்து இன்னும் திரும்பவில்லை.
“டீ ஏதாச்சியும் வேணுமா?”
“டீயும் வேணும்।ஏதாவது வேலையும் வேணும்।”
“என்னா வேலை। இதுதான் இருக்குது,” என்று துடைப்பத்தைக் காட்டினாள், அந்தப் பெண் . சிரிப்பும் வந்தது.
“எதுவாயிருந்தாலும், சரி,” என்று எழுந்தான் கறுப்பன்.
கடற்கரைப் பக்கமிருந்து முத்துவும் வர, அந்தப் பெண் அதிசயித்தாள்.’
‘ஒரு துடைப்பம்தானே இருக்கிறது,’ என்றாள். மீதமுள்ள வேலைகளையும் செய்தால் டீயும், மசால் வடையும் தரமுடியும் என்று உறுதி கூறினாள். பக்கத்து ஓட்டு வீட்டிற்குச் சென்று தண்ணீர் மொண்டு வரச்செய்தாள். பேருந்துகள் நின்றால், டிப்பன்-காப்பி என்று கூவ வேண்டும், டீ என்று சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாள். தன் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லையென்றும், இதெல்லாம் அவர்தான் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் வரும்வரை இம் மாதிரி பிறர் உதவி தேவை என்றும் விளக்கமளித்தாள்.
இரண்டு திசைகளிலும் இருந்து வந்து போய்க்கொண்டிருந்த பேருந்துகளில் மூன்று அங்கே நின்று சென்றன. அது ஒரு நல்ல மாலைநேரம் என்று சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் வியாபாரம். அந்தப் பெண்ணிற்கு மிக மகிழ்ச்சி. கைமுறுக்கும் கூடுதலாக இருக்குமானால் இன்னும் இருபது ரூபாய் அதிகம் விற்றிருக்கும் என்று முத்து சொன்னது அவளை யோசிக்க வைத்தது. இடையே குழந்தை விழித்துக்கொண்டு அழுதபோது, முத்து அதைத் தூக்கிக்கொண்டு உலாவினார்.கறுப்பன் திரும்பவும் அந்தக் கடை முன்பக்கம் முழுவதும் பெருக்கித் தள்ளினான். அந்தப் பெண்ணிற்கு கூடுதல் மகிழ்ச்சி. மீதமிருந்த பலகாரம் தேனீர் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன. சாமான்கள் அனைத்தையும் பையில் திணித்துக்கொண்டு அவள் புறப்பட தயாரானாள். அடுத்தநாள் காலை பத்துமணிக்குத்தான் திரும்பவும் கடை திறக்க வேண்டுமாம். தாத்தாவின் உடல் நிலை காரணமாயிருக்கும். புறப்பட்டவள் சிறிது நின்று கையிலிருந்த ஓர் ஐந்து ரூபாய் நோட்டை அவர்களிடம் தந்தாள். “ஒங்களாலேதான் இவ்வளவு முடிஞ்சுது. : நான் வாரேன்.” சாலையைக் கடந்து அவள் நடந்தாள்.
****** ****** ****** ******
இருட்டுவதற்குள் மாமல்லபுரம் போய்விட முடியும் என்றார் முத்து.வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தயாரானார். சாலை நன்றாகவே இருக்கிறது.நடப்பது சௌகர்யம்.குரலெடுத்து பாடிக்கொண்டே நடக்கலாம் என்றும் சொன்னார்.ஆனால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது அவர் மட்டுமே. கறுப்பன் அவருடன் செல்லவில்லை. அப்போது நடந்த உரையாடல் வருமாறு. கறுப்பன் சொன்னது:
“சாயந்திரம் நீங்க குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிகிட்டிருந்தீங்க இல்லையா : அப்போது நான் அந்தக் கடையைச் சுத்திப் பெருக்கி கொண்டிருந்தேன்.பாருங்க திரும்பத் திரும்ப அலையோட சப்தம் : தெளிவாக கேட்டது.நிம்மதியாயிருந்து.அதைப்பற்றி கொஞ்சம் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.ஏனோ சொல்லணும்னு தோணிச்சு. அதுக்கு அவ சொன்ன பதில். “ஆமா : சத்தம் ரொம்ப நல்லாயிருக்கும் : ஒரு சத்தம் மாதிரி இன்னொண்ணு இருக்காது : அலையைப் பாத்தாலும் அப்படித்தான் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு”- பரமார்த்தமா இதைச் சொன்னா. அப்ப தோணிச்சு எனக்கு : இந்தக் கடலும் அலையும் இந்த மண்ணும் மரமும் ஏற்பட்ட காரணமும் பயணத்திற்காகத்தானே : இல்லே நமக்காகவா இதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்திலே பயணத்தை ஆரம்பிச்சிருக்கு : நிச்சயமா இல்லே : அந்தப் பயணத்தைப் பார்க்க முடியாத வரை : எல்லாவற்றின் பயணத்தையும் பார்க்க முடியாதவரை : நாம் பயணிகளாகி விட முடியுமா : சொல்லிக் கொள்ளத்தான் முடியுமா : யாரோ சொன்னதை நீங்க அடிக்கடி குறிப்பிடுவீங்க : “சென்று அடைவதற்காக பயணம் இல்லை : அது பயணத்திற்காகவே.” அது உண்மை : சரியாகத்தான் சொல்லியிருக்கு : யாரு சொன்னது அது : ஆனாலும் அந்தப் பயணம் நம்ம காலாலோ அல்லது இந்த உடம்பாலோதான் நடத்தி ஆகணும். அப்படின்னு யாராவது சொல்ல முடியுமா : அம் மாதிரிப்பட்ட பயணம்கூட ஓர் இறந்த காலம்தான். வேறு எப்படி இதைக்கொண்டு செல்ல வேண்டும் எனக்குத் தெரியவில்லை. நான் இங்கேயே இருக்கிறேன். ஒருவேளை ஸ்டியோவிற்கே திரும்பிப் போகவும் தோன்றலாம் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு.”
முத்து சொன்னது: “தம்பி , உனக்கு இப்படித் தோன்றியதில் சந்தோஷம்। தானாகத் தோன்றுவதில் ஒரு சௌகர்யம். அதிலே பொய் எதுவும் இருக்காது. எனக்கும் தோன்றலாம். நான் அதுவரை பயணிக்கிறேன். உனது முடிவை சரியென்றோ தவறு என்றோ எண்ணாது போகிறேன். நாம எப்பவாவது சந்திக்கலாம்.” முத்து ஏக, கறுப்பன் நிலை கொள்கிறான்.

சந்தி

70-களில் சில தீவிர வாசகர்கள், அவரது எழுத்துக்களை மனனம் செய்ததுபோல் ஒப்புவித்து மகிழ்ந்தார்கள், சக்தியையும், அதன் ஆதாரமாகப் பெண்மையையும், அது ஒளிவீசும் தாய்மையையும் தன் வாழ்க்கையின் அடிநாதமாக உபாசித்து, எழுத்தை ஒரு தவமாகக் கொண்டவர். அண்மையில் மறைந்த லா.ச.ர அவருக்கு நமது அஞ்சலி. **********தமிழில் கவிதை நாளுக்குநாள், பெருகி, உயர்ந்து வருகின்றது வார, மாத இதழ்கள், கவிதைக்கு இடத்தை உற்சாகமாகவே தருகின்றன। சில இதழ்கள், இலக்கிய தீபாவளி கொண்டாடின. ‘குமுதம்’ இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் வேகமாக எழுதுவதையும், திரைப்படங்களை அவர் ஊன்றி பார்பதில்லையென்றும், இயக்குனர் சேரன் சிகரெட் அதிகமாகப் பிடிப்பதையும் கூறி தன் இலக்கியப் பணியை முடித்துக் கொண்டது. ஆனந்தவிகடனில், கவிஞர் விக்கிரமாதித்யன், பீடி சுற்றும் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட வியாசத்தை கவிதையாக எழுதியிருந்தார், சுவைபட, ஆனால் கவிதைக்கு இறுக்கமும், சுருக்கமும்தானே அழகு. என்னை மிகவும் ஈர்த்தது, கவிதையின் மொழி, பேச்சு மொழியாக மாறும்போது கிடைக்கும் மழலையின் அழகு. அது கு. உமாதேவியின் ‘அன்னாடங்காச்சி’ என்ற கவிதையில் ‘ஆனா। சின்ன கொடிகுத்திஎங்கொழந்த கிட்ட ஆரஞ்சுமிட்டாய் கொடுக்கும்போது வுழுந்து வுழுந்து சிரிப்போம்’என்கிறபோது உண்மையை நேரில் காணும் ஒரு வெள்ளந்திப் பார்வையின் ஏகத்தாளம் வெளியிடப்பட்டாலும், மழலைச் சொல்லாகவே இருப்பதால், இதன் கனமும் குறைந்து விடுகின்றதே। நேரில் காணும் உண்மையை, உள்ளபடி, ஒரு பயமும் இல்லாது கூறும் நேர்மைக்கு அருகாமையில் வருகின்றது தமிழ்க்கவிதை. ஆனால் இன்னும் நீண்டதூரம் நாம் போக வேண்டும்।. தமிழர்கள் நல்ல கற்பனையுள்ளவர்கள், ஆகவே தீக்குள் விரலை விட்டாலும், பெரும்பான்மையானபோது உண்மை இதமாக தண்ணித்துப் போகின்றது. உர்து மொழி இதற்கு சற்று மாறான நிலையை எடுக்கின்றது. குர்ஷித் அஃப்சார் பிஸ்ரானி, தான் எழுதும் உர்தூமொழி பற்றி,”அப் உர்தூ க்யா ஹை ஏக் கோத்தே கீதவாய்ஃப் ஹை மஜா ஹர்ஏக் லேத்தாஹை மொகயத் கோன்கர்த்தாஹை”
மொழி பெயர்த்தால் (ஆங்கிலம் வழியாக) இப்போது ஊர்தூ என்ன, விபாசர விடுதியில் ஒரு வேசியாக யார் வேண்டுமானாலும் அவளுடன் உல்லாசம் காணலாம், யாரோ அவளை காதலிக்கின்றார்।’ ********** பேச்சில், எழுத்தில் வரும் பிழைகள், பேசுபவரின், எழுதுபவரின் ஆழ்ந்த உள்ளக்கிடைக்கைகளென்றும், அவையே உண்மையான எண்ணங்கள் என்றும் ஒரு உளவியல் கோட்பாடு உண்டு. எழுதியவை அச்சில் வரும்போது ஏற்படும் பிழைகளுக்கு யார் பொறுப்பு? என்னைக் கேட்டால் எழுதியவர்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எழுதுபவர் சற்று கூடிய கவனத்துடன் தான் எழுதுவது, எழுதியது அச்சில் வெளிவரும்போது பிழைகள் நேரக்கூடும் என்ற பொறுப்புடன் எழுத வேண்டும். சென்ற ‘சந்தி’யில் நேர்ந்த பிழைகளுக்கு கொம்பன் பொறுப்பேற்று வாசகர்களின் மன்னிப்பை யாசிக்கிறான் புத்தி. புத்தி. புத்தி.
சிரிக்க : பள்ளிப் பிள்ளைகளாக நாம் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் சர்கஸ் வருவதுபோல குத்துச் சண்டை, மற்போர்கள் வரும்। முன் மாலைகளில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு, வண்ண வண்ண மலிவான காகிதத்தில் கருப்புப் பையில் அச்சிட்டுப் புகைப் படங்களுடன், அன்றைய ”ரோஃமான்” குத்துச் சண்டையை பற்றி விளம்பரம் செய்துகொண்டு போவார்கள். எந்தச் சண்டையிலும் தோற்காத இந்தியத் தாராசிங், உச்சக்கட்ட போராக, கிங்காங்வுடன் முகமூடி அணிந்த ‘வாங் பக்லி’ மோதுவதாக இருக்கும். ஒவ்வொருநாள், தனித்தனி ஊர்திகளில் ‘கிங்காங்’ ஒரு வண்டியிலும், பின்னோ முன்னோ இன்னொரு வண்டியில் கருப்பு முகமூடியணிந்து வாங் பக்லியும் வீதி உலா வருவார்கள். வாரம் ஒரு தடவையாவது கிங் காங் வாங் பக்லியின் முகமூடியை கிழிக்கப் போவதாக சவால் விடுவார். ஆனால் போட்டி அமைப்பாளர்கள் தவிர வேறு யாராலும் ‘வாங் பக்லி’ யார் என்று அறிய முடியாது. சென்ற இதழ் நவீன விருட்சம் படித்தபோது திரு தி.க.சி யின் கடிதம் என்னைக் கவர்ந்தது. ‘வாங் பக்லி’யின் முகமூடியை திரு.தி.க.சி கிழிக்கப் போவதில்லை போலும். (நவீன விருட்சம் 2008ல் பிரசுரமான சந்தி)