வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டப்படி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக் கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது
கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்
வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்
ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல..

27.05.2011
மதியம் : 1.50

அதிர்வு தாங்கா அறைகள்

அறையை விட்டு வெளியேறுகிறேன்
விதிக்கப்பட்ட பொருட்களை
எடுத்துக்கொண்டு
வந்து நின்ற மரத்தின்
நிழலில் ஆசுவாசமடையத் தொடங்குகிறேன்

நான் வெளியேறிய
அறை
முன்னிலும் பிரகாசிக்கிறது
அடைசலாயிருந்த
புத்தக அலமாரியின் சுண்ணாம்புகள்
மீண்டும் பூசப்படுகின்றன

முட்டைகளின் நாற்றம் போக
பளிங்குக்கற்களில் சோப்புகளை
பிரயோகிக்கிறார்கள்

இவன் வெளியேற்றம்
இன்னொருவனுக்கான வழி
என யாரும்
சொல்லிவிடாதீர்கள்.
என் அறைகள்
அதிர்வுகளைத் தாங்குவதில்லை

சில நேரங்களில்

சில நேரங்களில் ஒரு கவிதையில்

சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது

நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு

ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும்

முற்றுப் பெறுகிறது – சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்

தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்…
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை

தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்

லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும

பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்

தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.

ஆடுகளம்

ராமலக்ஷ்மி

வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்

தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்

இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்

பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்

நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்

பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்

விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்

கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்

கல்லா மண்ணா..
வாழ்க்கை பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்

காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்…

எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***

அனுமானங்கள்

அனுஜன்யா

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது…
இல்லை ஒரு வேளை…
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

கை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்

கடவுள்களைப் பற்றிக் கவியெழுதும் ஃபேஷனிப்போதெனவே
வாலிப வயோதிக அன்பர்களே வரைகிறேனென் கோட்டோவியத்தை

# வடிவமும் வாழ்வும் தந்த கடவுளுள் முரண்கள் மகா ஆச்சர்யம்
நெஞ்சசகத்து அமிர்தமூட்டி நல்லவை அல்லவை சொல்லி
வாழ்வின் திசைகள் காட்டி வளர்த்த தெய்வத்துள்
வஞ்சகமும் சூதும் வந்ததெப்படி?
புகையிருக்கும் கருவறைக்குள் பகையிருக்குமோ?
தாய்த் தராசும் தடுமாறுமோ?

# கடுங்காய்ச்சலின் களைப்பில் வீடு வந்தவனின்
தலை வருடி மடிகிடத்தி உணவூட்டியப் பரிவின் உன்னதத்தில் சாந்த சொரூபியாய் உயர்வடிவம் கொள்கிறதிக் கடவுள்

# வாரிசாய் வந்த கடவுளின் குழந்தை
கொஞ்சம்(-)ம் கூடுதலாய் (+)ம் கொண்ட தேவகிருபைக்கு
என் மீதான அக்கறையும் தன் மீதான தன்னலமும் அதிகம் அதிகம்

# முரண்களில் முகிழ்த்த முடிச்சு
ஒளிவளையமாய்ப் பின்னியங்கும் இறைமையின்
நேசத்தில் நெக்குருகிப் போகிறது நெஞ்சு

# ஆண்டவம் ஆதிக்கம் செலுத்துமோ ஆடவ உலகம் மறுக்குமோ
சொர்க்கத்துள் சிறை வைக்கும் பிரயத்தனம் தாண்டி தப்பியதென் வரம்

# இச்சை மிகுந்த இறைவியின் காதல் பெரிதா காமம் பெரிதா
உக்கிர அணைப்பின் யானைப்பசிக்க்கு எம்மாத்திரம் சோளப்பொறி

# வரமளித்த தேவதை வாழ்வின் U வளைவு திரும்ப
சாபம் வீசும் எந்திரமாய் மாறியதெங்ஙனம்?
மனம் புரியத் தவமிருக்கிறேன் ஆண்டுகளாய்…

# ‘மிஸ்டுகால்’ கடவுள்களுடனான உரையாடல் சுவையானது;
சுவாரஸ்யமுங்கூட……
சமயங்களில் சலிப்பூட்டி க் களைப்பாக்குபவையுமவைதான்
# ஆண்டவங்கள் ஆறுதலாயிருப்பதோர் அம்சமெனில் கடவுள்களிமன் கண்ணீர்த் துடைத்து ஆற்றுப்படுத்துகையில் தன்யனாகிறேன்

# தான் விரும்பும் தருணங்களில் வாயட யத்தனிக்கும் இறைமைகள் தென்படுவதில்லை
நான் விரும்பும் நேரங்களில்

# கடவுள்களுக்கு செவிகள் உண்டா..
தெய்வதமே தெய்வதமே ஏனெனைக் கைவிட்டீர்?

# கடவுள்களில் ஒன்று கவியெழுத வைக்க
காமத்தால் திணறடிகுமொன்று
நா ருசிக்கு நல்லுணவாய் மற்றொன்று
நடுநிசிநாயாய் உருமும் பிறிதொன்று

# கள்புளிபில் களிக்குமொன்று வோட்கா ருசிக்கும்
பியர் தான் பிடிக்குமொன்றிற்கு
புகைத்து புகைது சாம்பலாக்கும் இன்னொன்று

# ரம்மி ஆடி ஜெயித்த கடவுள் இறந்துபோய் வருஷமாச்சு
லஞ்சம் பின்னோடி வாழ்வைத்தொலைத்துப்
புலம்பும் கடவுளின் திசையெங்கே?

# கடவுள்களைப் பற்றி எழுதும்போதெல்லாம்
ஒலிக்குமோர் விமர்சனம்:”பற்றிய சாத்தான்களையும் எழுதேன்”
அடடே..அடுத்தக் கவிதக் கருவைத் தந்துவிட்டதென் கடவுள்

# கடவுள் குறித்த கோட்டோவியங்களை வரைந்து நீட்டினேன்.
பெருங்குரலெடுத்து சிரித்து ப் பகர்ந்தது தெய்வம்:
”ஆனையைப் பார்த்த அந்தகர் கதை”
ஓயாத நகைப்போசை
எதிரொலித்த்தது இடியாய் அண்டசராசரமெங்கும்
மின்னல் வெளிச்சத்தில் அதிர்ந்தேன்.

– வெறுமையாய்க் கித்தான்

ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு

உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின்

மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில்
எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில்
மொழி மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய்

கண்கள் அறியாக் காற்றின் உணர்சித்திரங்களும்
பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று.
வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று
நெகிழும் மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க
பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய்
பூத்திருக்கும் செந்நிற பூக்களின் விகசிப்பில்
நுட்பங்களின் மென்னொளி துலங்கும் அகமொழி

இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது

வண்ண வார்த்தைகளாய்.
அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை
மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள்
மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது
ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.

கார்க்கால ஞாபகங்கள்

மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்

எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…

இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.

வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

எதையாவது சொல்லட்டுமா……..43

முன்பெல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபமாக இருந்தது. உடம்பும் ஒத்துழைப்பு கொடுத்தது. இப்போது பயணம் என்றால் சற்று அச்சமாகவே இருக்கிறது. அதுவும் பஸ்ஸில் பயணிப்பது, வெகு தூரம் செல்வது என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் சீர்காழியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் பயணம் இன்னமும் செய்து கொண்டிருப்பதால்தான் இந்த அவதியை உணர முடிந்தது. ஆனால் ரயிலில் வருவது சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம். பெரும்பாலும் டிக்கட் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமான விஷயமாகிவிடும். என் உறவினர் ஒருவர் 2 மாதத்திற்குமுன் ரிசர்வ் செய்தாலும் கடைசி நிமிடத்தில் டிக்கட் காத்திருக்கும் நிலையிலிருந்து மாறாது.

காலச்சுவடு கண்ணன் அவர்கள் சு.ரா. 80 நிகழ்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். கன்னியாகுமாரியில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு வர எனக்கும் விருப்பம். ஆனால் நான் இருக்கும் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வரைக்கும் ஒரு ரயிலைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பின் திருச்சியிலிருந்து கன்னியாகுமாரி போக வேண்டும்.

2 நாள் லீவு எனக்குக் கொடுப்பதே ஏதோ வங்கியே நின்றுவிடுவதாக நினைப்பவர் வங்கி மேலாளர். வெள்ளிக்கிழமை கூட்டம் என்றால் விழாக்கிழமை 4 மணிக்கு சுமாருக்கு அலுவலகம் விட்டு கிளம்ப வேண்டும். அதேபோல் திருச்சியில் உரிய நேரத்தில் வண்டியைப் பிடிக்க வேண்டும். பஸ்ஸில் சென்றால் கால் நிச்சயம் வீங்கி விடும். இது சரிப்படாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.

நான் இந்தக் கட்டுரையில் சுராவைப் பற்றிதான் எழுதவேண்டும். எப்போதும் தமிழில் சிறு பத்திரிகை சூழலில் எதிர் எதிர் அணிகளாக எல்லோரும் இருப்பார்கள். கு.ப.ரா, ந.பி ஒரு பக்கம் என்றால், க.நா.சு புதுமைப்பித்தன் இன்னொரு பக்கமாக இருப்பார்கள். சி சு செல்லப்பாவிற்கும், க.நா.சுவிற்கும் எப்போதும் சண்டையே நடந்து கொண்டிருக்கும். க.நா.சு இரங்கல் கூட்டத்தில் கூட சி சு செல்லப்பா அவரைப் பற்றி உயர்வாக சொன்னதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் நடந்த சண்டை ஒருவிதத்தில் நாகரிகமாக நடந்த சண்டையாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பின்னால் வந்தவர்களிடம்தான் சண்டை முற்றி விட்டது. நாகரிகத்தை மீறி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழில் தீவிரமாக எழுதுபவர்கள் எல்லோரும் தவளைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலே முன்னேற ஒரு தவளை நகர்ந்தால் கீழிருந்து ஒரு தவளை பிடித்து இழுக்கும்.

சுரா என்னை எதிர் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. நான் சிலருடன் பழக்கம் வைத்துக்கொண்டிருப்பதை அறிந்து அவர் அவ்வாறு நினைத்திருக்கலாம். நான் அவருக்குத் தொடர்ந்து விருட்சம் பத்திரிகை அனுப்பிக்கொண்டிருப்பேன். அதைப் பார்த்துவிட்டு கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார். கட்டாயம் சந்தா அனுப்பாமல் இருக்க மாட்டார். எந்தப் புத்தகம் அனுப்பினாலும் அவர் பணம் அனுப்பி விடுவார். ஒரு முறை பல ஆண்டுகளாக அவர் விருட்சம் சந்தா அனுப்பாமல் இருந்து விட்டார். நானே விருப்பப்பட்டு அவருக்கு விருட்சம் பத்திரிகையை அனுப்புவதால் எப்படி அவரிடம் கேட்பது என்பது எனக்கு சங்கடமாக இருந்தது. அந்தச் சமயத்தில் மையம் பத்திரிகை திரும்பவும் வர ஆரம்பித்தது. அதையும் நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மையம் பத்திரிகையை சுராவிற்கு அனுப்பினேன். உடனே வாழ்த்துத் தெரிவித்து கடிதம் வந்ததோடல்லாமல், சந்தாவும் உடனடியாக வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ‘நான் தொடர்ந்து தங்களுக்கு பத்திரிகை அனுப்பி வருகிறேன். ஏன் எனக்கு சந்தா அனுப்பவில்லை?’ என்று. உடனடியாக ஒரு கடிதம் அவரிடமிருந்து வந்தது. எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு சந்தா அனுப்ப வேண்டுமென்று கேட்டு. நான் ஆண்டுக் கணக்கைச் சொன்னேன். உடனே அவர் அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து பணம் அனுப்பி விட்டார். இதை ஏன் இங்கு சொல்கிறேன். சுராவிடம்தான் இதுமாதிரி உரிமையாகக் கேட்க முடியும்.

எனக்கு அவரிடம் அதிகம் பழக்கம் இல்லை. ஒரு முறை குடும்பத்தோடு நாகர்கோயில் சென்றேன். அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நினைத்து, காரை நிறுத்தினேன். என் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் அங்கு நிறுத்தினேன் என்பது தெரியாது. அவர் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அன்று சுரா வீட்டில் இல்லை. எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரைப் பற்றி சொல்லும்போது, விருந்தோம்பலில் அவர் சிறந்தவர் என்று கேள்விபட்டிருக்கிறேன். பல எழுத்தாளர்கள் அவர் வீட்டில் தங்கி விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நகுலனை திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் வந்து சந்திக்கிறேன் என்று நகுலனிடம் சொன்னேன். இதைக் கேட்டவுடன் நகுலன் சங்கடப்பட்டுவிட்டார். ‘என் வீட்டில் வசதி இல்லை.’ என்று பயத்துடன் சொன்னார். நான் சொன்னேன்: ‘நீங்கள் கவலைப் படாதீர்கள். ஒரு ஓட்டலில் போய் தங்கி உங்களைப் பார்க்க வருகிறேன்,’ என்றேன். அப்போது கூட அவர் மனது சமாதானம் ஆகவில்லை. ஆனால் என்னால் அங்கு போகவே முடியவில்லை. நகுலன் இறந்தபிறகுதான், திருவனந்தபுரம் சென்றேன். அப்போது பூட்டியிருந்த அவர் வீட்டை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்தேன்.

விருட்சம் இலக்கியக் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தி வந்தேன் (நான்தான் நடத்தினேனா என்பது இப்போது சந்தேகமாக இருக்கிறது) கூட்டத்திற்கு ஆட்கள் வரமாட்டார்கள். இந்திரன் ஒரு முறை கூட்டத்திற்குப் பேச ஒப்புக்கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்தான் கூட்டம் நடக்கும் இடம். அவர் வந்து விட்டார் பேச. பின் நான் வந்தேன். இந்திரன் சங்கடப்பட்டார். ‘நாம இருவர்தானா பேச,’ என்று. கவலைப்படாதீர்கள். மெதுவாக எல்லோரும் வருவார்கள். அப்படித்தான் மெதுவாக கூட்டம் சேர்ந்தது. நான் இலக்கியக் கூட்டம் நடத்தப் போகிறேன் என்று சொன்னபோது, பிரமிள் ஒரு கடிதம் எழுதியிருந்தார். It is dangerous. Don’t do it. பல ஆண்டுகளாக கூட்டம் நடத்தியும் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.

நான் ரொம்ப நாட்களாக சுராவை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று எண்ணினேன். ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்போது, என் பரபரப்பு தாங்க முடியாமல் போய்விடும். சுரா சென்னையில் இருந்தபோது, நான் நடத்தும் கூட்டத்திற்கு வந்து பேசுவதாக சொன்னார். வழக்கம்போல் எல்லோருக்கும் ஏற்பாடு செய்தேன். என் பக்கத்தில் சிபிச்செல்வன் உதவிக்கு இருந்தார். சிபிச்செல்வன் வீட்டிற்கு சுராவும், அவர் மனைவியும் வருவதாக இருந்தது. ‘என் வீட்டிற்கு வர முடியுமா?’ என்று சுராவைக் கேட்டேன். நான் நினைத்தது. அவர் வர விரும்ப மாட்டார் என்றுதான். ஆனால் அவர் வருகிறேன் என்று சொல்லி, என் வீட்டிற்கும் வந்துவிட்டார். எனக்குத்தான் சுரா யார் என்று தெரியும். என் வீட்டில் உள்ள யாருக்கும் அவ்வளவாய் தெரியாது. வீட்டிலுள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தியும் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு அவர் குடும்பத்தோடு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

சுரா கூட்டத்தை மயிலாப்பூரில் வைத்திருந்தேன். அந்த இடத்திற்கு அவரை அழைத்துக்கொண்டு போக அவர் காரிலும், நான் டூ வீலரிலும் சென்றேன். சிபிச்செல்வன் அவருடன் காரில் ஒட்டிக்கொண்டார். ஒரு இடத்தில் என் டூ வீலர் ஒரு பள்ளத்தில் (மழையால்) மாட்டிக்கொண்டு விட்டது. காரில் சென்று கொண்டிருந்த சுரா இதைக் கவனித்துவிட்டார். சிபியை அனுப்பி எனக்கு உதவும்படி சொன்னார். இதெல்லாம் கூட்டம் நடக்க வேண்டுமென்ற பரபரப்பால் நிகழும் நிகழ்ச்சி.

அன்று கூட்டதில் எதிர்பார்த்தபடி பலரும் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். காலச்சுவடு அலுவலகத்திலிருந்து அரவிந்தன் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. விருட்சம் கூட்டம் என்பதால் வரவில்லையா என்று நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் சுரா சிறப்பாகப் பேசினார். அவர் பேசியதை தனியாக காசெட்டில் பதிவு செய்தேன். அந்தக் காசெட்டை சீடியில் பதிவு செய்து காலச்சுவடு கண்ணனிடம் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில தினங்களாக அந்தக் காசெட்டை எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். நான் பணிபுரியும் சீகாழி கிளையில் உள்ள மேலாளருக்கும் சுரா யார் என்று தெரியவில்லை.

தண்டனை !

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர்.

வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே பொறுப்பெடுத்துச் செய்பவர்களாக இருப்பார்கள்.

அழைப்பு மணியை மூன்று முறை விட்டு விட்டு அடித்தேன். அது எனது வருகைக்கான சங்கேதமொழி. அஸ்விதாவிற்கு மட்டுமே தெரிந்த பாஷை. ‘ஆறு மாதத்திற்கு முன்னர் உன்னழகிய சங்குக்கழுத்தில் தாலி கட்டிய உன் கட்டிளம் கணவன் வந்திருக்கிறான் ‘ என அவளிடம் ஓடிப்போயுரைக்குமொலி. வழமையாக ஒரு அழைப்பிலேயே ஓடி வந்து கதவைத்திறந்து ஒதுங்கி வழிவிட்டு நிற்பவள் இன்று நான்கைந்து முறை அழைப்புமணியை அழுத்தியும் திறப்பவளாக இல்லை. எனக்கு மிகவும் எரிச்சலாக வந்தது.

ஒருவேளை தூங்கிக் கொண்டிருப்பாளோ என்றும் நினைத்தேன். ஆனால் இதுவரையில் அவளை எனக்கு முன்னதாகத் தூங்கியவளாக நான் கண்டதில்லை. இறுதிச் சனிக்கிழமை காலை வரையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது எழுதியபடியே இருந்தவள். இப்பொழுதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாளோ எனத் தோன்றிடினும் அவளுக்கு அதற்கான எந்த எழுதுகருவியையோ, காகிதத் தாள்களையோ நான் விட்டு வைக்கவில்லையே என்பதுவும் நினைவில் வந்தது.

கதவின் பக்கத்திலிருந்த ஒற்றை யன்னல் வழியே கையை நுழைத்து கதவின் உள்கொக்கியை விடுவித்துத் திறந்தேன். எனது வீட்டுக் கதவு திறக்கப்படும் போதும் , மூடப்படும் போதும் சன்னமாக ஒலியெழுப்பும். நீங்கள் கேட்டீர்களானால் அடுத்த முறை வரும் போது ஏதேனும் எண்ணெய்ப் போத்தலை எடுத்து வந்து கதவின் மூலையில் பூசிவிடுவீர்களென நினைக்கிறேன். அந்தளவுக்கு அகோரமான சப்தம் அதிலிருந்து வரும். இந்தச் சத்தத்திற்கு அவள் எங்கிருந்தாலும் வாசலுக்கு வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. மிகவும் அழுத்தக்காரி என நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் உள்கூடத்தில் சனிக்கிழமை காலையில் நான் எரித்த காகிதங்களினதும் அவை சார்ந்தவற்றினதும் கரிக்குவியல் அப்புறப்படுத்தட்டிருந்தமை எனது கோபத்தையும் எரிச்சலையும் மட்டுப்படுத்தியதோடு , தீயின் கரங்கள் கரும்புகை ஓவியங்களாய்ப் பளிங்குத்தரையில் வரைந்திருந்த எல்லாத்தடயங்களையும் அவள் கழுவிச் சுத்தம் செய்திருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது.

அவள் நல்லவள்தான். அமைதியானவள்தான். எனது முன்னைய காதலிகளைப் போல எனது பணத்தினைக் குறிவைத்து அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்துக் கேட்பவளல்ல. கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவளும் கூட. எனது பிரச்சினைகளெல்லாம் அவளது எழுத்துக்கள் சம்பந்தமானதாகவே இருந்தன. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாள். எழுத்தின் அத்தனை பரிமாணங்களும் அவளது விரல்களினூடே தாள்களில் கொட்டப்படவேண்டுமென்பது போல ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தமைதான் எனக்குப் பிடிக்கவேயில்லை.

அவளைப் பெண் பார்த்து நிச்சயிக்கும் முன்பே வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணப்பெண்ணுக்குப் பொழுதுபோக்கு எழுத்துத்தானென்று கட்டாயம் மணமகனிடம் சொல்லச் சொன்னாளாம். அதை இந்த மணமகன் மிகச் சாதாரணமாகத்தான் எண்ணியிருந்தேன். பணமும் சொத்துக்களும் நிறைந்தவளுக்கு எழுத்து ஒரு பொழுதுபோக்காக இருப்பதென்பது கல்யாணத்தை நிறுத்தும் அளவிற்குப் பெரிய பிரச்சினையாக நான் கருதாததால் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த ஒரு சுபயோக சுபதினத்தில் அஸ்விதா என் மனைவியென்றானாள். திருமணத்திற்குப் பின் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவளது ஆறாவது விரலாகப் பேனா இருப்பது புரிந்தது.

எல்லாவற்றையும் எழுதிவந்தாள். நகரும் ஒவ்வொரு கணத்தையும் ஏன் மூச்சையும் கூடத் தன் தினக்குறிப்பேட்டில் பதிந்து வருபவளாக இருந்தாள். கடந்த மாதம் இந்தத் திகதியில், இந்த மணித்தியாலத்தின் இந்த நிமிடத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென உங்களால் இப்பொழுது கூற முடியுமா? ஆனால் அவளிடம் கேட்டால் அவளால் முடியும்.

அதற்காக அவள் தனது நேரங்களனைத்தையும் எழுதியபடியேதான் செலவழிக்கிறாளென நீங்கள் எண்ணக்கூடாது. வழமையாக இந்த சமூகத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளனைத்தையும் ஒழுங்கு தவறாமல் நிறைவேற்றுவாள். ஒவ்வொருநாளும் விதம்விதமாக எனக்குப்பிடித்தமான உணவுகளாகட்டும், அலங்காரமாகட்டும், எல்லாவற்றிலும் மிகச் சிரத்தையெடுத்து அழகாகச் செய்தவள் அவள். சொல்ல மறந்துவிட்டேன். அவளது கண்கள் மிகவும் அழகியவையாக இருந்தன. அந்தக் கண்களின் மாயசக்திதான் என்னை அவள் பக்கம் ஈர்த்தனவோ என்னவோ…?

நான் சொல்லவந்ததை விட்டு எங்கெங்கோ போகிறேனென நினைக்கிறேன். இப்பொழுது என்னைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குப் பயங்கரமாகக் கோபம் வரும். எதற்கென்றில்லை. ஒருமுறை வீதியில் ஒளிச்சமிக்ஞை அனுமதிக்காக வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டுக் காத்திருக்கையில் பக்கத்து வாகனச் சாரதி மிகச்சத்தமாகவும் உல்லாசமாகவும் தனது வானொலியை முடுக்கிவிட்டு இலேசாக நடனமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கோபம் பொங்கிற்று. எனது பக்கத்திலிருந்த அஸ்விதாவின் அழகிய கரத்தினை சிகரெட்டால் சுட்டுத்தான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிந்தது.

அவள் மகா பொறுமைசாலி. எனக்கு வரும் கோபத்தையெல்லாம் நான் அவளிடம்தான் காட்டவிழைந்திருக்கிறேன். கையில் கண்டதைத் தூக்கியெறிந்திருக்கிறேன். அவள் எழுதிவைத்த காகிதங்கள் கண்ணில் பட்டால் கிழித்தெறிந்திருக்கிறேன். சில சமயங்களில் அவளைச் சிகரெட்டால் சுட்டிருக்கிறேன். சரி விடுங்கள். முகஞ்சுளிக்கிறீர்கள். அதற்கு மேல் வேண்டாம்.

எனக்கும் அஸ்விதாவிற்குமான இறுதிச்சண்டை கடந்த சனிக்கிழமை காலையில் வந்தது. சண்டையென்றும் சொல்வதற்கில்லை. இருவரும் பலசாலிகளாகவும் இறுதியில் ஒருவர் வெற்றி கொள்வதும் மட்டுமே சண்டையெனப்படுமெனில் அது சண்டையே இல்லை. எனது கரம் மட்டுமே மேலோங்கும் ஒரு கோபத்தின் ஆதிக்கம் எனக் கொள்ளலாம்.சனி, ஞாயிறு வழமை போலவே எனக்கு விடுமுறை தினங்கள். சனியன்று பகல் வரையில் நன்றாகத் தூங்கியெழுவேன். அன்றைய சனியும் வழமை போலவே தூங்கிக் கொண்டிருக்கும் போது விடிகாலையில் தூக்கத்தில் எனது கைபட்டு கட்டிலுக்கருகில் வைத்திருந்த தண்ணீர்ப்பாத்திரம் நிலத்தில் விழுந்து சிதறிய அந்தச் சத்தத்தில் நான் விழித்துக் கொள்ள வேண்டியவனானேன்.

எனது தூக்கம் கலைந்ததற்கான கோபமும் எரிச்சலும் மிதந்து பொங்கிற்று. அருகில் படுத்திருக்க வேண்டிய அவளைத் தேடினால் அங்கு அவள் இருக்கவில்லை. அவள் பெயர் சொல்லி இயன்றவரை சத்தமாகப் பலமுறை அழைத்துப் பார்த்தும் பயனற்ற காரணத்தால் மூடியிருந்த என்னறைக் கதவைத் திறந்து அவளைத் தேடினேன். அவள் மாடியின் வெளிப்புற வராந்தா ஊஞ்சலில் அமர்ந்து தன் நீண்ட ஈரக் கூந்தலை உலர்த்தியவளாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

மிதமிஞ்சிய கோபத்தோடு அவளை நெருங்கிய நான் அவளது கன்னத்தில் அறைந்ததோடு நிற்காமல் அவளது கையிலிருந்த தினக்குறிப்பேடு, மையூற்றும் பேனா, அதன் நீலக் கறை துடைக்கும் வெள்ளைத் துணி, இன்னும் அவ்வளவு காலமாக அவள் எழுதிச் சேர்த்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் சேகரித்து வீட்டின் உள்கூடத்தில் போட்டு எரித்தேன். அதனை எரிக்கும் வரையில் அவள் கண்ணீர் நிறைந்த கண்களோடும் , சிவந்த கன்னத்தோடும் எனது செய்கையைத் தடுக்க முனைந்தவாறு என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்ததுவும் நான் அவளை உதறியதில் இரு முறை வீசப்பட்டுப் போய் நிலத்தில் விழுந்ததுவும் இன்னும் நினைவிலிருக்கிறது.

உங்கள் தோளில் ஒரு எறும்பு ஊர்கிறது பாருங்கள். அதனைத் தட்டிவிடுங்கள். ஆம். இந்த எறும்பைப் போலத்தான் அன்று அவளும் தூரப்போய் விழுந்தாள். கோபத்தின் வெறியில் அன்று நான் முற்றிலுமாக என்னிலை மறந்தவனாக இருந்தேன். பாருங்கள். இப்பொழுது கூட உங்களிடம் அவள் வரையும் ஓவியங்களைப் பற்றிச் சொல்லமறந்து விட்டேன். அவள் மிகவும் அழகாக ஓவியங்களும் வரைவாள். திருமணமான இரண்டாவது நாள் ஒரு மாலை வேளையில் அவள் வரைந்த ஓவியங்களை எனக்குக் காட்டினாள். அவை மிகவும் அழகானவையாகவும், வண்ணமயமான காட்சிகளாகவுமிருந்தன. ஆனால் நான் எனக்கவை பிடிக்காதவை போன்ற பாவனையோடு முகத்தினைத் திருப்பிக் கொண்டேன். அன்றிலிருந்துதான் அவள் வரைவதை விட்டிருக்க வேண்டும்.

அன்று அந்தக் காகிதக் குவியல்கள் முற்றிலுமாக எரிந்து முடிக்கும்வரை அங்கேயே நின்றிருந்தேன். நிலத்தில் விழுந்த இடத்தில் உட்கார்ந்தவாறே எரிவதைப் பார்த்துச் சோர்ந்திருந்தாள் அவள். சிவந்த கன்னத்தினூடே கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது. அது முற்றாக எரிந்து முடிந்ததும் நான் எனது தூக்கத்தைத் தொடரப் போனேன். அறைக் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு அன்று நிம்மதியாக உறங்கினேன்.

அவள் சிறிது நேரம் அழுதுகொண்டிருந்திருப்பாள். நான் எழும்பிக் குளித்து முடிக்கையில் சாப்பாட்டு மேசையின் மீது எனக்குப் பிடித்தமான உணவு காத்திருந்தது. அவள் எழுதுவதையும், அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்துவதையும் தவிர்ந்த மற்ற எல்லாக் காரியங்களையும் வழமையைப் போலவே மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நிறைவேற்றினாள். அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்த நான் சொல்லவுமில்லை. அவளாக அப்புறப்படுத்துவாளென்றே எண்ணியிருந்தேன்.

அன்றைய மதிய உணவிற்குப் பின்னரும் வழமையான ஒவ்வொரு சனிக்கிழமையைப் போன்றே எனது பெண் சினேகிதியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போதும் அந்தக் கரிக்குவியல் அப்படியே இருந்தது. மிகுந்த களைப்புடனிருந்த நான், அஸ்விதா எனக்காகச் செய்திருந்த இரவுச் சமையலையும் புறக்கணித்தவனாகத் தூங்கி எழுகையில் எனது காலுறைகள் அகற்றப்பட்டிருப்பதையும் அலுவலகத்துக்கான ஆடை நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டேன். அன்று காலையில் வழமையாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பவேண்டியவனாக இருந்தேன். எனது கைத்தொலைபேசியை சினேகிதி வீட்டில் மறந்து விட்டுவந்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்புவதாகத் திட்டம்.

காலையில் நான் வெளியேறும் போது அகற்றப்படாமலிருந்த கரிக்குவியல் இப்பொழுது சுத்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது. வழமையாக எனது ஒவ்வொரு அசைவிற்கும் என் முன்னே வந்து நிற்பவள் அன்று முன்னாலேயே வராதது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்தது. முதன்முறையாக மெல்லிய குரலில் அவளை வீடு முழுவதும் தேடத் தொடங்கினேன். அவளுக்குப் பிடித்தமான ஊஞ்சலிலோ, சமையலறையிலோ கூட அவளிருக்கவில்லை. இந்த இடத்தில் இதனையும் நான் சொல்ல வேண்டும். என் முதல் காதலி பரிசளித்து நான் ஆசையாக வளர்த்துவந்த என் ஒற்றைக் கிளியை அஸ்விதா கூண்டை விட்டும் திறந்து பறக்கவிட்டிருந்தாள். அதனாலேயே எனக்கு அவள் மேல் மீண்டும் அளவுகடந்த கோபம் வந்தது.

மிகக் கடுமையாக வீடுமுழுதும் அவள் பெயரெதிரொலிக்கச் சத்தமெழுப்பியபடி படுக்கையறையைத் திறந்த போது அவள் அழகிய விழிகளை மூடிப் படுக்கையிலிருப்பது தெரிந்தது. நான் அவ்வளவு பலமாகச் சத்தமெழுப்பியும் எழும்பாததால் கோபம் மிதமிஞ்சி அவளை நோக்கிக் கையில் அகப்பட்ட பூச்சாடியால் வீசியடித்தேன். அது அவள் நெற்றியில் பட்டுக் கீழே விழுந்து பெருஞ்சத்தத்தோடு சிதறியது. ஆனால் அவளிடமிருந்து எந்தச் சலனமுமில்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளருகே போய் பலங்கொண்ட மட்டும் பிடித்துலுக்கினேன்.

அவள் மிகவும் குளிர்ந்து போனவளாக இருந்தாள். இதழோரமாக வெண்ணிற நுரை வழிந்து காய்ந்து போயிருந்தது. மூக்கினருகே விரல் வைத்துப் பார்த்தேன். இறுதியாக, அவள் இறந்து போயிருந்தது புரிந்தது. மனதின் மூலையில் அதிர்ச்சி தாக்க உடனே எனது பெண் சினேகிதிக்குத் தொலைபேசி, விபரத்தைச் சொன்னேன். சனியன் ஒழிந்துவிட்டதெனச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்தவள் உடனடியாக என்னைக் காவல்துறைக்கு அறிவிக்கும் படியும் இல்லாவிட்டால் பின்னால் சிக்கல் வருமென்றும் பணித்தாள். அவள் சொன்னபடியே காவல்துறைக்கு அறிவித்ததுதான் எனது தப்பாகப் போயிற்று.

அவர்கள் வந்து பல விசாரணைகள் மூலம் என்னைத் திணறடித்தனர். நான் இது தற்கொலையென உறுதிபடச் சொன்ன போதும் இறப்பிற்கான காரணம் எதையும் எழுதி வைக்காமல் இறந்துபோனதால் கொலையாக இருக்கக் கூடுமெனச் சொல்லி என்னைச் சந்தேகித்தனர். பாவி.படுபாவி.. ‘வாழப்பிடிக்கவில்லை. ஆதலால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என ஒரு வரியெழுதி வைத்துவிட்டுச் செத்தொழிந்திருந்தாலென்ன? மரணவிசாரணை அறிக்கைகளும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் எனக்கெதிராகவே இருந்தன.

நான் அவளைத் தள்ளிவிட்டு விழுந்த அன்று அவளது வலது கை விரல்களிலொன்று எலும்பு முறிவிற்காளாகியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக அவள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியிலிருந்திருக்கிறாள். விசாரணையின் போது நான் காலையில் வீட்டிலிருந்து சென்றதாகப் பொய்யாய்ச் சொன்ன நேரத்துக்குச் சற்றுமுன்னர்தான் அவள் விஷத்தினை அருந்தியிருந்திருக்கிறாள். கதவின் தாழ்ப்பாள்க் கொக்கியில் இறுதியாப் பதிந்த கைரேகை எனதாக இருந்ததோடு , இறுதியாக பிணத்தின் தலையில் பூச்சாடியால் அடித்திருந்ததும் என்னைக் கொலைகாரனெனத் தீர்ப்பெழுதப் போதுமானதாக இருக்கிறது. எனினும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதுவரையில் விசாரணைக் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.

எனது பெண் சினேகிதி சாட்சியங்களோடு எனக்கு உதவிக்கு வருவாளென நினைத்தேன். ஆனால் அவள் இதுவரை வரவில்லை. அவள் தனது கணவனுக்குப் பயந்திருக்கக் கூடும். எனது சிறைத் தோழனே… இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். என்ன குற்றத்தைச் செய்துவிட்டு நீங்கள் சிறையிலிருக்கிறீர்கள் ?

மீண்டுமொன்றை ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டேன். அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.